Monday, December 31, 2012

நாளை நமதே !



2012 - ஸ்ஸ்ஸ்ஸப்பா... மூச்சு முட்ட வைத்து விட்டது இந்த ஆண்டு. கவலை, கலக்கம், கண்ணீர், கலகம் என்று ஏகப்பட்ட சூறாவளிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றையெல்லாம் அப்படியே மூட்டையாய் கட்டி இந்த ஆண்டோடு சேர்த்து அனுப்பி விட்டு, புத்தாண்டு புதிதாய் பிறக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

”சார்புத் தத்துவம்” தான் உலகத்தை வழிநடத்துகிறது என்பார்கள். உலகத்தை விடுங்கள், தனி மனிதனுக்குள்ளும் ஒரு நிகழ்வில் ஏற்படும் அயற்சி, ஒழுங்காய் சென்று கொண்டிருக்கும் மற்ற நிகழ்வுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஏதோவொரு இணைப்பு நூல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றன் உற்சாகம் மற்றொன்றில் பாய்வது போலவே தொய்வும் தானாகவே மற்றொன்றைத் தொற்றிக் கொள்கிறது.

இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை எல்லாம் தரை தட்டி மேல் எழும்பியிருக்கிறது. எப்போதும் நான் எடுத்த முடிவுகள் சரியோ, தவறோ அதற்காக பின்நாட்களில் வருத்தம் கொண்டது இல்லை. ”இது இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது. நம் மூலமாக இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவு தான்” என்று சென்று விடுவேன். ஆனால் இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்பு நான் எடுத்திருந்த முடிவு சரியான தேர்வு இல்லையோ என மன சஞ்சலம் சொள்ளும் அளவு ஆகிவிட்டது. பின்பு வழக்கம் போல் “ஆல் இஸ் வெல்” ஜெபம் சொல்லிக் கொண்டபின் தெளிவாயிற்று... ”எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்தது தான். நான் தான் அந்தந்த காலத்திற்குச் சென்று அவற்றைக் காண வேண்டும்” என்று உள்ளுணர்வு எப்போதும் போல் சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு முறையும் மீண்டு வர முடிந்திருக்கிறது.

எந்தவொரு சிறு வேலையாக இருந்தாலும் அதற்கான முக்கியத்துவமும், முயற்சியும் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் மூலம் வரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் நாம் உடையவர்களாக ஆவோம் என்ற எண்ணம் உடையவன் நான். அவ்வாறு உரிய முக்கியத்துவம் தராததால், கைமேல் பலனாக அலுவலக ரீதியான ஒரு தோல்வியையும் இந்த ஆண்டு சந்தித்திருக்கிறேன். வெற்று சமாதானங்கள் ஆயிரம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சிரத்தை இல்லாமல் ஒரு தேர்வை எதிர் கொண்டது தவறு என்ற புத்தி கொள்முதல் கிடைத்திருக்கிறது. ”ஆல் இஸ் வெல்”.

நினைவில் கொள்ளத்தக்க நேர்மறை நிகழ்வுகளும் நடக்கத்தான் நடந்திருக்கின்றன. எனது மேடைப் பேச்சு இந்த ஆண்டு ஏகத்துக்கும் வளர்ந்திருக்கிறது. அலுவலக சங்க கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேச வேண்டிய நிலையிலும் தெளிவாக எனது கருத்துக்களை கூறியது எனக்கே மன நிறைவைத் தந்தது. அலுவலகத்தில் சிறிய அளவில் “வாசிப்போர் களம்” என்ற அமைப்பையும் துவங்கியிருக்கிறோம். வேலை, வீடு என்றில்லாமல் ஒத்த கருத்துள்ள தோழர்களுடன் சேர்ந்து ஒரு மாற்றுக் களத்தையும் அமைத்து, ஆரோக்யமான ஒரு சூழலுக்கான முதல் படியைத் தாண்டியிருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி. 

அப்புறம்... நல்லாள் ஒருத்தியை இல்லாளாய் கொண்ட வரத்தையும், மழலை பேசும் மகளின் அழகையும், இன்னும் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் பெற்றோரையும், பக்கபலமாய் நிற்கும் உடன்பிறப்புகளையும் பற்றியெல்லாம் எழுத்தில் அடக்கி விட முடியாது, வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை நமது நாளாகவே பிறக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே !

******

Friday, December 28, 2012

செவியிடை மனிதர்கள் - 5


ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

******

Wednesday, December 19, 2012

கும்கி - வெற்றிகொண்டான் !



கொடியவன் ஒருவனிடமிருந்து ஊரைக் காப்பதற்காக வெளியூரிலிருந்து அழைத்து வரப்படும் காவல் வீரன். அவனை தெய்வமாக மதிக்கும் ஊர்மக்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உண்மையான காவல் வீரனுக்கு பதிலாக ஒப்புக்கு வரும் ஒரு கோழை. அவனை வைத்து சில நகைச்சுவை. இறுதியில் தன் உயிர்த்தோழனின் உயிருக்கு ஆபத்து வரும் பொழுது வீராவேசம் கொண்டு எதிரியை வீழ்த்தி தானும் மடியும் வழக்கமான “திரை”க்கதை தான். ஆனால் இயக்குநர் பிரபு சாலமன் எடுத்து ஆண்டிருக்கும் களமும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவும், துணை நின்றிருக்கும் இமானின் இசையும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் நிச்சயம் “கும்கி”யை மறக்க முடியாதவனாக உருவாக்கியிருக்கிறது.

எந்தவொரு அறிமுக நாயகணும் எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் “பாத்திரம்” நாயகனுக்கு. “யானையின் பலம் பாகனின் தைரியம் தான்” என்று படத்தில் ஒரு வசனம் வரும். இவரின் நடிப்பும் அப்படித் தான். யானையுடன் நடித்த எந்த காட்சியிலும் சிறு மிரட்சி கூட காட்டாமல் திறம்படவே நடித்திருந்தார். குரலின் ஏற்ற இறக்கத்திலும் குறையொன்றுமில்லை. இவர் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், அல்லது ஹீரோயிஸம், காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இறங்கியிருந்தாலும் மொத்த படமும் படுத்திருக்கும். நல்ல வேளை அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. நாயகன் யானையின் தந்தங்களைப் பிடித்து எழும்பி நெற்றியில் முத்தமிடும் அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அவ்வளவு கவித்துவமான, அழகான காட்சியமைப்பு. திரையில் காணும் போது ஏனோ மனம் நிறைய சிலிர்ப்பு. பொம்மனுக்கு “நல்வரவு”.

உண்மையில் இந்தப்படம தான் நாயகிக்கும் அறிமுகப்படமாக வந்திருக்க வேண்டும். வடு பதிந்த முகத்தாலும், மருளும் விழியாலும் அல்லியாகவே மாறிவிட்டார். 

படம் முழுவதும் எவ்வளவு அபத்தங்கள் இருந்தாலும் இறுதியில் நாயகன் நாயகியின் கரம் பிடித்துத் தொடுவானை நோக்கிப் பயணிக்கும் காட்சிகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் கண்களுக்கு இப்படத்தின் முடிவு ஒரு போதாமையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக இல்லாமல், ஒருவன் தன் சுயநலனிற்காக தன்னை அண்டியிருந்த மூன்று உயிர்களையும் காவு கொடுத்து விட்டு, ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்து தன் வாழ்வை துவங்கவும் துணிவுமின்றி நிர்கதியாய் நிற்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட முடிவு. அதை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்வது தான் சரியாக இருக்குமென தோன்றுகிறது.

இப்படம் பழங்குடியினரின் வாழ்வை உண்மையாக பிரதிபலிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இயக்குநர் தான் வரைந்து கொண்ட வட்டத்திற்குள் நின்று கச்சிதமாகவே விளையாடி இருக்கிறார். வணிக ரீதியான சில சமாதானங்களை செய்து கொண்டிருந்தாலும் அவை மிகவும் உறுத்தாத அளவிலேயே இருந்தன. உதாரணமாக பழங்குடியினரின் அறுவடைப்பாடலை குத்துப் பாட்டாக மாற்றி விட்டார் என்று சொல்வார்கள் என்பதற்காகவே இரண்டு மூன்று இடங்களில் “வெளியூர் ஆட்டக்காரர்களை வரச்சொல்லிட்டியா?” என்று கொஞ்சம் அழுத்தமாகவே கூறும் படி செய்திருந்தார் :)

படத்தில் கொஞ்சம் ஒட்டாமல் உறுத்திக் கொண்டிருந்தது நாயகனின் தாய்மாமனின் ஓயாத தொணதொணப்பான உரையாடல்களும், புலம்பலும் தான். இறுக்கமாக இருக்க வேண்டாமே என நினைத்து படம் முழுவதும் அவரைப் பேசவிட்டு இடநிரப்பியாக பயன்படுத்த நினைத்திருப்பார்கள் போல. ஆனால் அவரது ஆங்கில சொல்லாடல்கள் பல இடங்களில் அந்நியத்தனத்தையே தந்தன. சில இடங்களில் சிரிக்கவும் வைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 

எப்படியிருந்தாலும், படைப்பின் மீது இயக்குநருக்கு இருந்த ஆளுமை படம் முழுவதும் நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்வார்களே, அது போல காணக் காண கண் நிறைந்த காட்சிகள். மொத்த படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதொரு திரையனுபவத்தைத் தந்தீர்கள், நன்றி !

Monday, November 19, 2012

"உருவெளித்தோற்றம்” - சிறுகதை


அக்டோபர் 2012 - “கதவு” சிற்றிதழில் எனது சிறுகதை “உருவெளித்தோற்றம்” பிரசுரமாகியுள்ளது. 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.



(தெளிவாக படிக்க, படத்தின் மேல் சுட்டவும்)

Add caption
நன்றி : இதழ் ஆசிரியர் திரு.மதி கண்ணன் ( maveepaka@gmail.com )

Tuesday, November 6, 2012

துறவுரை



துறவுரை
-----------------------

காற்றிலிட்ட கற்பூரம் போல
மெல்லமாய், மௌனமாய்
கரைந்து காணாமல் போகவே விரும்புவேன்,
என் தலைப்பாடுகளின் கடவுச்சொல்லை
மூடி வைத்திருக்கும் பெட்டகம்
முளைவிடுமா, முடநாற்றம் வீசுமா
என்ற அச்சம் மட்டும் இல்லாதிருந்தால்

துறவுரை எழுதிச் செல்லும்
நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில்
கைவிரல் ரேகை பதிக்கும் போது,
புத்தர் இறந்தார்,
சித்தார்த்தன் சிரித்து விட்டு வீடு திரும்பினான்.


- வி.பாலகுமார்

( 05/11/2012 தேதியிட்ட “உயிரோசை” இணைய இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை.
நன்றி : http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6062 )

Monday, October 22, 2012

மாற்றான் - போட்டுத் தாக்குறான்


சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக வாழ்ந்திருக்கும் “மாற்றானைக்” காணும் வாய்ப்பு கிட்டியது. சரி, “கழுத, நாமும் ஒரு விமர்சனத்தைப் போடுவோமேனு பார்த்தா” ஒரு விஷயமும் தோணல. சரி ஏன் மாற்றான் என்ற பெயர் எனறு யோசித்துப் பார்த்தேன். அதிலேயே ஒரு நுட்பமான செய்தி ஒளிந்திருப்பது கண்டு வியந்தேன். மரபணுவில் மாற்றம் செய்து பிறந்ததால் வந்த பெயர்க்காரணம் தான் மாற்றான். அப்படியும் “மாற்றான்கள்” என்று வந்திருக்க வேண்டுமே என்றால் சூர்யாவின் விஞ்ஞானி அப்பா எதிர்பார்த்தது ஒரு சூர்யாவைத் தான். இயக்குநனரும் அதை நம்பி “மாற்றான்” என்று பெயர் ரிஜிஸ்டர் செய்து விட்டார். ஆனால் இரட்டையராய் பிறந்து “ஃபிளாப்” ஆக்கிவிட்டனர், படத்தையா என்று தெரியவில்லை, ஆனால் இயக்குநர் சொன்னது அப்பா சயிண்டிஸ்டின் திட்டத்தை மட்டும் தான் என நம்புகிறேன். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சூர்யா அப்பாவிற்கே தான் ஒரு விஞ்ஞானி என்று இடைவேளி வரை தெரியவில்லை. பிறகு ஒருவாறு வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு ஆராய்ச்சி செய்து சமாளித்து விடுகிறார்.

படம் முழுக்க டிவிஸ்ட்டோ, டிவிஸ்ட்டு தான். ஆனால் முதல் ரீலில் டெரர் லுக்குடன் வில்லி போன்று ஒரு வெள்ளைக்கார ஆண்ட்டியை டைட் கிளோசப்பில் காட்டும் போதே நான் பக்கத்து சீட்டைப் பிராண்டிக் கொண்டிருந்தவரிடம் சொல்லி விட்டேன். “இந்த ஆண்ட்டி நல்லவஙகளாத்தான் இருப்பாங்க, பாருங்களேன்”. பின்னர் நான் சொன்னது பலித்தவுடன் அவர் என்னை ஆச்சர்யமாய் பார்க்க, ”அந்த ஆண்ட்டியைப் பார்த்தால் ”டபிள்யூ.டபிள்யூ.எஃப்” டீவி ஷோவில் வரும் ஆயா போலவே இருந்தாங்க. அவுங்க நல்லவங்கன்னா, இவங்களும் நல்லவங்களாத்தான் இருக்கனும்” என்று லாஜிக்காக மடக்கினேன். சரி படத்தில் லாஜிக் இல்லை என்பதற்காக நானும் லாஜிக் இல்லாமல் பேச முடியுமா என்ன!

ஒரு காட்சியில் சும்மா ஒரு கிரிப்புக்காக காஜலின் இடுப்பைப் பிடிக்கும் சூர்யா, அவர் வழக்கமாய் படம் முழுதும் காட்டும் ஒரே ரியாக்‌ஷனனான “சாணியை மிதித்தது போன்ற கண்களின் அகலவிரிப்பையும், உதடு நெளிப்பையும்”  வெளிப்படுத்தவும், சரி இது வேலைக்காகாது என்று தன் சகோதரனை அணைப்பது போன்று சீன் போடுகிறார்.  செண்டிமெண்டுக்கு மடங்காத தமிழ் ஹீரோயின் எந்த படத்திலும் இல்லை என்ற விதிக்கேற்ப காஜலும் லைட்டா வழிக்கு வருகிறார். ஆனால் அப்போது கூட முழு சம்மதம் தெரிவிக்காதவர், சூர்யா ஒரு ரஷ்ய ஆண்ட்டியுடன் டான்ஸ் ஆடும் போது, “ஜெலசி” அதிகமாகி “ஜாயின்” ஆகிவிடுகிறார். ஆயிரந்தான் பல நூறு மொழிகள் பயின்று சுவிஷேச கூட்டங்களில் பிரசங்கம் செய்தாலும் அவளும் ஒரு பெண் தானே !

பிறகு, புது பாஸ்போர்ட் கிடைத்த உற்சாகத்தில் சூர்யா வெளிநாடு சுற்றுப் பயணம் கிளம்ப, கூடவே காஜலும் கைடாக கிளம்புகிறார். அங்கே புரட்சியாளர் லெனினின் ஒன்று விட்ட வகையறாவைச் சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிள் கோல்ட் மெடல் வாங்கிய விளையாட்டு வீரர்களை எல்லாம் டாய்லெட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஹாலில் அடைத்து வைத்திருக்கிறார். அங்கு உள்ள அனைவரும் சேது பார்ட் 2 வில் நடிக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டாய்லட் செல்ல வரும் சூர்யா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, அவர்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார். பின்னர் ஈஸ்ட்மென் கலர் மாதிரியான சித்திரத்தில் அவர்களின் சாதனைகளை நினைத்துப் பார்க்கிறார். அதே எஃபெக்டில் பின்னர் தன் அப்பாவிடம் “அத்த்த்த்தனையும் நடிப்ப்ப்ப்ப்பா?” என்று கேட்டு கண்கலங்குகிறார். இதைத்தான் விமர்சகர்கள் “உலக நடிப்புடா சாமி” என்று கூறுகிறார்கள்.

ஆனால் சூர்யாவுக்கு அநியாயத்துக்கு “மாஸ் மர்டரை” தடுத்து நிறுத்தும் அஸைன்மெண்டாக தான் வந்து வாய்க்கிறது. அவரும் ரஷ்யாவுக்குப் பக்கத்திலுள்ள உஸ்கா புஸ்கா என்று ஏதோவொரு நாட்டுக்குப் போய் பெல்லி டான்ஸ் எல்லாம் ஆடி, ராக்கெட் லான்ச்சருக்கெல்லாம் தப்பி, கடைசியில் குஜராத்தில் லேண்டாகி, “போதி தர்மர்” தவம் செய்த குகைக்குள் வசிக்கும் பெருச்சாளிகளுக்கு தீனி வைத்து விட்டு ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்குகிறார். ஆனால் அப்போது கூட அவர் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு கனவிலும் களங்கம் விளைவிக்க முற்படாதவராக இருக்கிறார். அதற்கு காரணம் இயக்குநர் ஆனந்த் சாரிடம் இருக்கும் கம்யூனிச சிந்தனை தான். நாடி நரம்பெல்லாம் கம்யூனிச வெறி ஊறிக் கிடக்கும் ஒருவரால் மட்டிமே இப்படி ஒரு திரைக்காவியத்தை எடுக்க முடியும் என்று நான் முழுமனதாக நம்புகிறேன். முதலில் கே.எஃப்.சி மூலம் உழைப்பாளர்களின் பசிப்பிணியைப் போக்குவதாகட்டும், பின்னர் “ரஷ்யர்கள் எல்லாம் பேசிக்கலி வெரி குட், பட் எங்களுக்கு திருட்டுத்தனம் சொல்லித்தந்தது எல்லாம் உங்க தமிழ்நாட்டு மாட்டு டாக்டர் தான்” என்று தாத்தா விஞ்ஞானி அப்ரூவர் ஆகி சூர்யாவுக்கு ஆராய்ச்சிக்கூடத்தின் கொல்லைப்புற ரகசிய வழியைக் காட்டி அனுப்பி வைப்பதாகட்டும் இயக்குநரின் சோஷியலிச வெறி கண்ணாபின்னாவென தலைவிரித்தாடுகிறது.

அப்புறம் இயக்குநரிடம் இருக்கும் கெமிஸ்ட்ரி செமயாக படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. “அயன்” படத்தில் கூகிள் செய்தே போதை மருந்தைக் கண்டுபிடித்து, டெல்லி கனேஷ் போன்ற உயர் அதிகாரியை வியக்க வைத்த ஆனந்த் சார் தான், இந்த படத்தில் தாத்தா விஞ்ஞானியின் உருவத்தில் நடித்திருக்கிறார் போல. ”எனர்ஜியான்” பாலை ஆராய்ச்சி செய்ய கம்ப்யூட்டருக்கு ஊசி போட்டு, “மேட்லாப்” அவுட்புட் கிராப் எல்லாம் பார்த்து ஒருவழியாய் பிரச்சனையைக் கண்டுபிடித்து, மாற்று மருந்துக்கான “பிராஜக்ட் ரிபோர்டையும்” கையோடு கொடுத்த்து விட்டு படம் கிளைமாக்ஸை நோக்கி நகருவதற்கு பெரும்பாடு பட்டிருக்கிறார் தாத்தா விஞ்ஞானி.

அப்புறம் சூர்யாவுக்கு பத்து அப்பா என்றொரு புத்தம் புதிய கான்செப்ட். அதிலும் உலக அறிவாளிகளாக தேர்ந்தெடுத்து கலந்து செய்த கலவை. எல்லாருமே பெயர் தெரியாத அப்பாட்டக்கர்களாக இருந்தால் ரசிகர்களுக்குப் புரியாது என்ற காரணத்தால், ரசிகக்கண்மணிகள் அறிந்த உலக விஞ்ஞானிகளான ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களின் பெயர்களை வைத்து வகுப்பெடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர்.

படக்குழுவுக்கு கடைசி வரை படத்தை சன் டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா, ஜெயா டீவிக்குக் கொடுக்கப் போகிறோமா என்று தெளிவில்லாமலே இருந்திருப்பார்கள் போல. போனால் போகுது என்று பொதுவாக டி.டி.பொதிகை சேனலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சபாஷ் பெரும் இடங்களில் இதுவும் ஒன்று. 

கே.வி.ஆனந்த் சார் ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய முந்தைய படங்களையே ஸ்பூஃப் செய்வார். இந்த முறை அவருக்கு எந்த கவலையுமில்லை. மாற்றானை ஸ்பூஃப் செய்தே இன்னும் ஒரு நான்கைந்து படங்கள் செய்யலாம். அப்படி செய்யும் போது இந்த பதிவிலுள்ள பாயிண்ட்டுகளையும் நோட் செய்ய வேண்டும். பதிவுக்கு கிரடிட் கொடுக்காவிட்டாலும் செக் மட்டுமாவது கரெக்ட்டாக அனுப்பி வைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடைசி வரி பன்ச் டயலாக்கிற்கு தலைப்பை பார்த்துக் கொள்ளவும்.

Friday, October 19, 2012

இது தான் சார் வாழ்க்கை!

அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல மையத்தில் ஒரு கருத்தரங்கு. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசாக தமிழ் புத்தகங்களை வழங்கினார்கள். “அட!” என்று ஆச்சர்யத்துடன் என்ன புத்தகங்கள் என்று எட்டிப்பார்த்தால்... புத்தங்களை தேர்வு செய்தவர் “நீயா நானா” கோபிநாத்தின் வெறித்தனமாக ரசிகர் போல. எல்லாமே அவர் எழுதிய புத்தகங்கள் தாம். அவர் இவர் இலக்குக்குப் போதுமான புத்தங்கள் இன்னும் எழுதவில்லை போல. ஓரிரண்டு புத்தகங்களை நான்கைந்து பிரதி வாங்கி வந்து அடுக்கி விட்டார். ”அட, அடடடடா!!!!”வாகிவிட்டது.

# வாழ்க ப்ராண்ட் செல்லிங்.
**************************************

சென்ற வாரத்தில் ஒருநாள், அலுவலகத்தில் ஒருவர் விடாமல அனைவரும் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி: “நீங்க தி.மு.க வா?, இத்தனை நாளா தெரியாதே !”

அவர்களுக்கு நான் சொன்ன பதில், “நிச்சயமா நான் தி.மு.க இல்ல, அவங்களோட எனக்கும் நிறைய வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு. ஆனா, சர்க்கஸ் கூடாரம் மாதிரி கூத்தடிச்சிட்டு இருக்குற, நிர்வாகம் சீரழிஞ்சு போய் கிடக்குற, சாதாரண மக்களோட அன்றாட பிரச்சனைகளை மறந்தும் கண்டுகொள்ளாத, ஒரு அமைச்சர் தன் துறையைப் பற்றி கள ஆய்வு செய்யிற அளவுக்குக் கூட நேர அவசாகம் கொடுக்காமல் பதவிகளை சுழற்றி அடிக்கிற, தொலைநோக்குத் திட்டங்களோ, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகளை சரி செய்வதற்கோ ஏதேனும் போர்க்கால நடவடிக்கைகள் பற்றி யோசிக்கக் கூட முடியாத, கூடங்குளம் போல தீப்பற்றி எரியும் நிகழ்வுகளில் எண்ணெய் ஊற்றும் ஒரு செயல்படாத இருண்ட அரசு நிர்வாகத்துக்கு எதிரா போராட்டம் நடத்தும் மாநிலத்தின் “பெரிய” எதிர்க்கட்சிக்கு நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்குறேன். அதுக்குத் தான் கருப்பு சட்டை.”

#இவ்ளோ லென்த்தா தம் கட்டி பேச முடியல, சார்ட்டா தான் சொன்னேன் :)

**************************************

பதினாலு மணி நேரம் கரண்ட் இல்லாம தொழில் முடங்கிப் போய் அவனவன் சாக மாட்டாம கெடக்குறாய்ங்க... பொழப்பத்த பத்திரிக்கைக்காரனுவ “மின்சாரத்தடையால் பொதுமக்கள் மெகாசீரியல் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்”னு முதல் பக்க செய்தி போடுறான். ”செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தால் கரண்ட் இல்லாட்டியும் பார்க்கலாம்”னு சந்துல சிந்து வேற.... என்ன பொழப்பு இதெல்லாம்?

**************************************


பணிநிமித்தமாக ஒரு மத்திய அரசு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அரசு நிறுவனம் தானா என வியக்க வைக்கும் வண்ணம் அவ்வளவு தூய்மை. எதிரில் வருபவர்கள் எல்லோரும் “சயிண்டிஸ்ட்” என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். “பாதுகாக்கப்பட்ட பகுதி” என அறிவிக்கப்பட்டு, சிறப்புத் தூய்மையுடன் சில அறைகளும் இருந்தன. குளிரூட்டப்பட்ட அந்த அறைகளில் ஒன்றினுள் எட்டிப்பார்த்தால், சீராக அமைக்கப்பட்ட தடுப்புகளில் எல்லாம் ஏதேதோ போட்டு வைத்து ரகம் ரகமாக ’கொசு’ வளர்க்கிறார்கள். என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை என்று விவரம் கேட்டால், புதிய வகை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்காக கொசுவை வளர்த்து ஆராய்ச்சி செய்கிறார்களாம். 

“கொசுவுக்கெல்லாம் விஞ்ஞானியா” என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.

#”இது தான் சார் வாழ்க்கை!” என்று ’டேக்’ மட்டும் போட்டு அமைகிறேன், நன்றி வணக்கம்.
**************************************

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.

அனுஷ்கா முத்தலாக இருக்கிறார் என்று நாக்கின் மீது பல்லைப் போட்டு பேசும் நயவஞ்சகர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன், “அவர் பிஞ்சாக வந்த போது ஆதரவளிக்காமல் துரத்தி விட்ட பாவிகள் தான் நாமெல்லாம் என்பதை மறந்து விடக் கூடாது”.

**************************************

Thursday, October 18, 2012

போஸ்ட்பெய்ட் மார்டனிஸம்

ஃபேஸ்புக் “வாலில்” அவ்வப்போது கிறுக்கியவற்றை வரலாற்றில் செதுக்கும் முயற்சியாக இங்கேயும் பதிந்து வைக்கிறேன்.

**************************************

”செம்பதிப்பு” என்பது கெட்டி அட்டை போட்டு இரண்டு மடங்கு விலை வைத்து விற்பது. 
#புத்தகச்சந்தை  

**************************************
முத்லல ‘பிரதி’யின் மரணம்னு ஆரம்பிச்சாங்க. அப்புறம் ஆசிரியரை சாகடிச்சாங்க. அந்த வரிசைல இப்போ நாம புதுசா ஒன்னு ஆரம்பிக்கிறோம் “வாசகனின் மரணம்” னு.  பாதி படிக்கும் போதே கிழிச்சுத்தூர எறியனும்னு நினைக்கிறவனெல்லாம் ரத்தம் கக்கி சாவான்னு முன்னுரைலயே சொல்லீறோம்.
#போஸ்ட்மார்ட்டமிசம்

**************************************

நம்பிக்கை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பாராமல் பெய்யும் ஒரு பெருமழையும், பருவமழை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பார்ப்புடன் செய்யும் கடவுளுக்கான ஒரு பலியும் எங்களை நகர்த்திக் கொண்டு செல்கின்றன.
**************************************

சொல்லிவிட்டு செய்தால் மொழிபெயர்ப்பு, சொல்லாமல் செய்தால் படைப்பு.

#இதுதானாய்யா இன்றைய இலக்கியம் ?
**************************************

கொஞ்சம் வயது முதிர்ந்த முற்போக்குவாதிகளிடம் எனக்கு எப்போதும் கொஞ்சம் பிரச்சனை. “சார்” என்று அழைத்தால், ஆங்கில ஏகாதிபத்யத்தில் ஆரம்பித்து வட அமெரிக்கா, கியூபா வழியாக ரஷ்யா, சீனா வரை செல்கிறார்கள். 

ஒருவரை வாய் தவறி ஒருமுறை “தலைவரே!” என்று அழைத்து விட்டேன். அவ்வளவு தான் சினம் கொண்டு சீறி எழுந்து, தமிழனின் அடிமை குணம் என்றுமே மாறாது என கழுவிக் கழுவி ஊற்றிவிட்டார்.

சரி, பெயர் சொல்லி அழைக்கலாம் என்றால் வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது அழகா என்று மடக்குகின்றனர். ”அண்ணா” என்று அழைக்கலாம் என்றால் ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் சமத்துவ லெக்சர் அடிக்கிறார்கள். 

ம்ம்ம்... வேறு வழியில்லை, அப்படி கூப்பிட வேண்டுமென்று தான் அவர்கள் விரும்புகிறார் போலும். எனக்குத்தான் ஒரே கூச்சமாக இருக்கிறது, இருந்தாலும் தம் பிடித்து சிரிக்காமல் சொல்லி விட வேண்டியது தான், “வணக்கம் தோழர்!”
**************************************

மதுரை - இந்த நகரம், தோளில் கை போட்டு அழைத்துச் செல்லும் ஆத்ம நண்பனைப்போன்ற அருகாமையைத் தருகின்றது. இந்த ஈர்ப்பினால் தானோ என்னவோ எந்த வெளியூர் பயணத்தின் போதும் ஒரு அந்நியத்தன்மையும், பாதுகாப்பின்மையும் தானே குடிகொண்டு விடுகிறது.
#மதுரையைச் சுற்றிய கழுதை வேறெங்கும் செல்லாது.
**************************************

கற்காலத்தின் ஒரு பிரதேசத்தில் அரை மணி நேரம் மின்சாரம் வருகிறது, அடுத்த ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்தால் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் இருக்கிறது என்று கணக்கிடவும்?
#பொதுஅறிவுகேள்வி
**************************************

Tuesday, October 16, 2012

தற்கொலை - மொழிபெயர்ப்பு கவிதை

தற்கொலை
- ஜோர்ஜ் ஃபிரான்சிஸ்கோ இசிடொரொ லூயி போர்ஹே.

இரவில் ஒரு விண்மீனும் எஞ்சியிருக்காது
ஏன் இரவே கூட எஞ்சியிருக்காது.
நான் இறப்பேன், என்னுடன்
சகிக்கவியலாத இந்த மொத்த
பிரபஞ்சமும் இறக்கும்.
நான் பிரமிடுகளையும், நாணயங்களையும்
கண்டங்களையும், 

அனைத்து முகத்தோற்றங்களையும் அழிப்பேன்.
நான் வரலாற்றினை தூசியாக்குவேன்,
தூசியிலும் தூசியாக.
நான் இப்பொழுது
கடைசி சூரியமறைவை உற்று நோக்குகிறேன்.
கடைசிப்பறவையின் குரலைக் கேட்கிறேன்.
நான் எனது வெறுமையை ஒருவரிடமும்
விட்டுவிட்டுச் செல்லவில்லை.

(தமிழில் - வி.பாலகுமார்)

The Suicide
- Jorge Francisco Isidoro Luis Borges

Not a star will remain in the night.
The night itself will not remain.
I will die and with me the sum
Of the intolerable universe.
I’ll erase the pyramids, the coins,
The continents and all the faces.
I’ll erase the accumulated past.
I’ll make dust of history, dust of dust.
Now I gaze at the last sunset.
I am listening to the last bird.
I bequeath nothingness to no-one.

Wednesday, September 26, 2012

செவியிடை மனிதர்கள் - 4


ஹலோ...

ஹலோ....

ஏய் பாலா, குமார் பேசுறேன்டா. எப்படிடா இருக்க?

டேய்... நல்லா இருக்கேன்டா. இப்ப எங்கடா இருக்க?

இங்க வந்து ஒரு வருசம் ஆச்சு. கேக்ரான் மேக்ரான்னு ஒரு கம்பெனி. அங்க தான் வேலை பார்க்குறேன்.

ஓ கேக்ரான் மேக்ரானா. அங்க என் ஃபிரண்டு ஒருத்தர் வொர்க் பண்றார் டா

அட, இங்க இருக்குறதே ஒரு இருபது பேர் தான். யாருடா அது ?

அவர் பெயர் ...................................................

ஓ அவனா, சரியான வெளங்காவெட்டிடா.. எப்பப்பாரு எதெயாவது தமிழ்ல டைப் பண்ணீட்டே கெடப்பான்டா

டேய், அவர் ஒரு பிரபல பதிவர் தெரியுமுல்ல

என்ன எழவோ, ஆமா ஒனக்கு எப்படிடா பழக்கம்

இல்ல நானும் பதிவெல்லாம் எழுதுவேன், அப்போ அறிமுகம்.

டேய், நீயும் வெளங்காவெட்டி கோஷ்ட்டியாடா, உங்களையெல்லாம் ^^@&^@#$@(&$@@)$@&@)_$@^@$%%@*@#_

ஹலோ, ஹலோ... டேய் இங்க சிக்னல் சரியா கெடைக்கல. நான் அப்புறமா கூப்பிட்றேன், பை.

******

#எத்தகையதொரு கொடுமையான சமூகச்சூழலில் எழுத்துப்பணியாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள் !!!

#புனைவுன்னு சொன்னா எதிர்கேள்வி கேட்கக்கூடாது.

Friday, September 7, 2012

மதுரை புத்தகச்சந்தை - 2012



மதுரை தமுக்க மைதானத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு தனியார் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாய். ஆனாலும் விடுமுறை நாட்கள் மற்றுமின்றி வார நாட்களிலும் சரியான கூட்டம். உள்ளே சென்று வாங்ககூடிய விலையில் ஒரு பொருளுமில்லை. இருந்தும் கண்காட்சிக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் மக்களை சித்திரத்திருவிழாவுக்கு செல்வது போல் அழைத்து வந்து விட்டன. அதே மைதானத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். ஆனாலும் அவ்வளவு கூட்டமில்லை. காரணம் இப்பொழுது புத்தக் கண்காட்சி நடப்பதே பலருக்குத் தெரியவில்லை. புத்தகங்கள் மனிதர்களை மேன்மையாக்கும், எனவே அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும், புத்தகச்சந்தைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை. ஆனாலும் மீடியாக்களில் இன்னும் கொஞ்சம் விளம்பரம் செய்திருந்தால் சந்தைக்கான வரவேற்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

போகட்டும், இந்த முறை எந்த வித முன்முடிவுகளும், குறிப்புகளும் இல்லாமல் கண்ணில் “பளிச்” என்று படும் புத்தகங்களை மட்டும் வாங்குவது என்ற உறுதியுடன் சென்றிருந்தேன். தேர்ந்தது ஆறு புத்தகங்கள்.

தமழிச்செல்வன் சிறுகதைகள் / ச.தமிழ்ச்செல்வன்
ஏழிலைக் கிழங்கின் மாமிசம் / இரா.சின்னசாமி
வெட்டுப்புலி / தமிழ்மகன்
நித்யகன்னி / எம்.வி.வெங்கட்ராம்
யாக்கை / லக்‌ஷ்மி சரவணக்குமார்
காமத்திப்பூ / சுகிர்தராணி

ஒரு ஸ்டாலில் மட்டும் கூட்டம் அலை மோதியது. என்னவென்று எட்டிப்பார்த்தால், ”ஒரு புத்தகம் பத்து ரூபாய், மொத்தமாய் நூறு ரூபாய்க்கு வாங்கினால் மேலும் மூன்று புத்தகங்கள் இலவசம்” என்று செம ஆஃபரில் கல்லா கட்டிக் கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக எனது ரசனை சார்ந்த புத்தகங்கள் எதுவும் இல்லை. வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. பொதுவாக, நமது ஊர்களில் புத்தகங்களுக்கு ஒரு புனிதத் தன்மை கொடுத்து, சாமானியர்கள் வாங்க முடியாதபடி யானை விலை குதிரை விலை தான் விற்கிறார்கள். குறைந்த விலை நிறைய சர்குலேசன் ஃபார்முலா ஏன் இன்னும் சூடு பிடிக்கவில்லை என தெரியவில்லை. நான் இலக்கியவாதியாக இருந்தாலாவது ஏதாவது புரட்சி செய்யலாம், காமன் மேன் ஆகிவிட்ட படியால வெறும் கருத்து மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இணைய பரிச்சயம் வந்த பிறகு எல்லா படைப்பாளிகளும் ஏதோ நமக்குத் தெரிந்தவர்கள் போலத்தான். அவர்களது அன்றாட நிகழ்வுகள் எல்லாம் நம் விரல்நுனியில். இந்த முறை புத்தகச்சந்தையிலும் நிறைய பிரபல முகங்கள் காணக்கிடைத்தன. உடன் வந்த இல்லாளிடம் “இவர் ஃபேஸ்புக்குல இருக்கார், அவர் ப்ளாக்ல கலக்குறார், இந்த குரூப்புக்கும் அந்த குரூப்புக்கும் தான் பிரச்சனை” என்று எதையாவது அள்ளி விட்டுக் கொண்டே வந்தேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தவர் இறுதியாக வெளியேறும் போது கேட்டார். “இவ்வளவு பேரைத் தெரியுங்கிறீங்க, பிறகேன் ஒருத்தர் கூட உங்கட்ட பேசல?” அதற்கு நான் சொன்னேன். “எனக்குத் தான் அவுங்களைத் தெரியும், அவுங்களுக்கு நான் யாருண்ணே தெரியாதே!”. அதற்கு அவர் பதில் “ம்க்கூம்...”

இதுக்காகவாவது முதல்ல பிரபலம் ஆகனும்.

பிறகு முக்கியமான ஒரு பின்குறிப்பு: அறிவுசார் மக்கள் கூடும் புத்தகச்சந்தையிலும் ஒரு பிளேட் மிளகாய் பஜ்ஜி இருபது ரூபாய் என்று தான் கொள்ளையடிக்கிறார்கள், தண்ணீர் தருவதே இல்லை :(

******

Tuesday, September 4, 2012

முகமூடி - நாங்களும் இருக்கோம்


உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று அவ்வப்போது சீன மொழிமாற்றப் படங்களை தமிழ் அலைவரிசைகளில் ஒளிபரப்புவார்கள். மிக சாதாரண வேலை செய்து கொண்டு ஒரு பெரியவர் இருப்பார். அவர் தான் உலகின் மிகச்சிறந்த தற்காப்புக்கலை நிபுணர். அவரிடம் வித்தை கற்ற சீடர்களில் ஒரு ’கெட்ட’ சீடர் தீயவழியில் சென்று, கற்ற தற்காப்புக் கலைகளை சமூகத்தை சீரழிப்பதற்காகவும், பொதுமக்களை கொல்வதற்காகவும், குறுக்கு வழியில் பெரும்பொருள் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவார். அதை தட்டிக்கேட்கும் குருவையும் கொன்று விடுவார். குரு இறப்பதற்கு முன்பாக தன்னிடம் உள்ள அரிய வித்தை ஒன்றை மற்றொரு ’நல்ல’ சீடருக்கு கற்றுக் கொடுத்து விட்டு இறந்து விடுவார். அந்த ’நல்ல’ சீடர் இறுதிக் காட்சியில் ‘கெட்ட’ சீடரை அந்த பிரத்யேக வித்தை மூலமாக வீழ்த்துவார். இடையில் நேர நிரப்பியாக சில கோமாளித்தனங்கள் செய்வார். நாயகியை கவர முயற்சிப்பார். அப்பாவுக்கு கெட்ட பிள்ளையாகவும், தாத்தாவுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொள்வார். முடிவில் நாயகியை கைகோர்ப்பார், சுபம்.

வழக்கமாக, நான் பார்க்க நினைக்கும் படங்களுக்கான விமர்சனங்களை முன்னரே படிப்பதில்லை. “முகமூடி”யை பார்க்க எந்த முன்முடிவும் இல்லாததால் இணையத்தில் கிழித்துத் தொங்க விட்டிருந்த அனைத்து தோரணங்களையும் கண்ணாரக் கண்டிருந்தேன். படம் வெளியாகிய முதல் வாரயிறுதியிலேயே பார்க்க வாய்க்கும் என நினைக்கவும் இல்லை. குடும்ப விழாவிற்கான முதல் நாள் இரவு, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் புதுப்படம் செலவது மரபு. கண்ணில் தெரிந்தது “முகமூடி” தான். 

பசங்களாக சேர்ந்து ஒரு பத்து பேர் சென்றோம். போகும் போதே “நான் அப்பவே சொன்னேன்ல” விருது பெறும் பொருட்டு படத்தின் சூப்பர் ஹீரோ தன்மையை லைட்டா சொல்லி மக்களை திடப்படுத்தப் பார்த்தேன். ”ப்ளாக்ன்னு ஒன்னு கிடக்கு, பொழுதன்னைக்கும் அதப் படிச்சிட்டு இப்படித்தான் அண்ணன் எதையாவது உளறும்” என்று தம்பிமார்கள் அண்ணனுக்கு மதிப்பளித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாகினர். நான் எங்கே என்ன குறியீடு இருக்கிறது என்று அலர்ட்டானேன். முதல் காட்சியிலேயே ஒரு பூனையைக் காட்டினார் தமிழகத்தின் ஒரே உலக இயக்குநர். அப்புறம் ஒரு நாய், பிறகு அந்த நாயின் குரைப்பு. பிறகு சிறிது நேரம் கழித்து, “பாருக்குள்” செல்வதற்கு முன் ஹிட்லராக இருந்தவர், வெளியே வரும் போது சாப்ளினாக மாறினார். அப்புறம் கொஞ்ச நேரத்தில் லேசா தலைவலி.  சரி, நிறுத்திக்குவோம், இதுக்குமேல் உற்றுப் பார்த்தால் உலக சினிமா தாங்காது என்று முடிவு செய்து உலகக் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு சும்மா படம் பார்ககத் துவங்கினேன். படம் முடியும் போது மேலே சொன்ன சீன டப்பிங் மாதிரி ஒருவழியாக “சுபம்” சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கும் என்ன சந்தேகம்னா... சூப்பர் ஹீரோ, சூப்பர் ஹீரோ என்று பயங்கரமாக விளம்பரப்’படுத்தி எடுத்தார்களே, அந்த சூப்பர் ஹீரோவை கடைசி வரை கண்ணிலேயே காட்டவில்லையே. ஒரு வேளை இரண்டாம் பாகம் எதும் வருகிறதா என்று தெரியவில்லை. அப்புறம் அந்த ரோபோ செய்யும் தாத்தா கேரக்டரில் ரஜினியையும், குறுந்தாடி தாத்தா கேரக்டரில் கமலையும் ஏன் உலக இயக்குநர் கிண்டல் அடித்திருக்கிறார் என்று புரியவில்லை.

ஒருவேளை இவர்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் சும்மா இருந்திருந்தாலே, இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்காதோ என்று தோன்றுகிறது. தங்களை அறிவாளிகளாக கற்பிதம் செய்து கொள்ளும் சாமானியர்கள் பாவம், இந்தப்பக்கமும் செல்ல முடியாமல் அந்தப்பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் போலும்.

இணையத்தின் எதிர்மறை விமர்சனங்களை முழுதும் சுமந்து கொண்டு படம் பார்த்த எனக்கு, அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று தான் தோன்றியது. ஆனால் இணையம் சாராத பார்வையாளனுக்கு படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்திருக்கும். உலக இயக்குநரின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. 

சுபம் !
******

Tuesday, August 28, 2012

நெகிழ்த்தல் தேற்றம்


அன்று காலையிலிருந்து ஒரே மன அலைச்சல். செய்து முடிக்கவேண்டிய வேலை அடுக்கடுக்காய் சேர்ந்து கொண்டே வந்தது. மலை போல் வேலை குவியும் போது, அதை வகை வாரியாக பிரித்து ஒன்றொன்றாக செய்யத் துவங்குவதற்கு முதல் நாள் வரக்கூடிய நெருக்கடி. அப்படிப்பட்ட நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய முடியாது என்பது முன்னனுபவம். எதைத் துவங்குவது என்ற குழப்பத்திலேயே எதையும் தொட மனம் வராது. கெடு நெருங்கக்கூடிய வேலையை துவங்கலாம் என்றால் அது கொஞ்சம் கடுப்படிக்ககூடியதாக இருக்கும், சரி விருப்பமானதை முதலில் துவங்கலாமென்றால் முக்கியமில்லாததற்கு முன்னுரிமை கொடுக்கிறோமே என்று நமக்குள்ளேயே ஒரு குற்றவுணர்ச்சி தோன்றி அதிலுள்ள ஈடுபாட்டையும் குறைத்து விடும். அப்போதெல்லாம் ஒரே வழி, கனினியை முறைத்துப் பார்த்துக் கொண்டு நாள் முழுவதும் கடுப்பாக அமர்ந்திருப்பது தான். 

செய்யக்கூடிய வேலைகளில் பெரும்பான்மை கணினி சார்ந்தவைகள் தாம். ஆனாலும் மூடி வைத்த மஞ்சள் பெட்டிகள் பக்கம் எலிக்குட்டியின் சுட்டி தவறியும் செல்ல மனம் இடம் தராது. இலக்கற்று எங்கெங்கோ செல்லும் இணைய மேச்சல். அதிலும் சலிப்புற்று ஃபேஸ்புக், ட்விட்டர், ஜி.பிளஸ் என்று மாறி மாறி சுழன்று கொண்டிருக்கும். அலுவல உபயோகம், சொந்தக் கணக்கு,  கருத்து சொல்லக்கூடிய முற்றொருமை ஒன்று, சும்மா வேடிக்கை பார்ப்பதற்கான கணக்கு ஒன்று என்று சுற்றி, சுற்றி, மாற்றி மாற்றி ஒன்றில் வெளியேறி இன்னொன்றில் நுழைந்து மீண்டும் மீண்டும் சுழன்று தலைக்குள் பூச்சி பறக்கத் துவங்கி விடும். முடிவில் பார்த்தால் மொத்தமே ஒரு பத்துக்குள்ளான தளங்களைத் தான் நாள் முழுவதும் திரும்பித் திரும்பி பார்த்திருக்கிறோம் என்ற நினைவு வந்து அதுவே பெரிய அயற்சியை உருவாக்கி விடும். 

பிறகு ஒருவழியாக அன்றைய தினத்து ஏய்ப்புகள் போதுமென்று அட்டையைத் தேய்த்து வெளியேறினால் மாநகரம் ஆவென்று வாயைப் பிளந்து காத்திருந்தது. அலுவலக குகைக்குள் சென்று விட்டால் நேரம், காலம் மட்டுமல்ல வெளியிலுள்ள சீதோசன நிலை கூட தெரியாது. பகலில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையோரமெங்கும் தண்ணீர் தேய்ங்கி இருந்தது. ஆனாலும் புழுக்கம் அதிகமாகவே இருந்தது. இருள் முழுதும் கவிந்திருந்தது. பகல் முழுவதும் குளிரூட்டப்பட்ட சிறைக்குள் இருந்து விட்டு வெளியே வந்ததால் உடம்பு உடனடியாக தன்னை நெகிழ்த்திக் கொள்ள முயற்சி செய்தது.  முதுகு, கைகள், மார்பு என எங்கும் வியர்வை சுரபி அடைபட்ட தோலின் துவாரங்களை திறக்க முயற்சிக்க உடம்பெங்கும் சுள்ளென்று குத்தியது. செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் மலைப்பாக இருந்தது.

ஒருவழியாய் இரண்டு பேருந்துகள் மாறி கசக்கித்துப்பிய சக்கையாக அறைக்குள் வந்து விழுந்த பிறகு தான் இரவு உணவுக்கு எதையும் வாங்கி வரவில்லை என உறைத்தது.  இனி மீண்டும் நான்கு அடுக்கு இறங்கிப் போய் சாப்பிட்டு விட்டு வர உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை என்று தோன்றியது. காலை ஏழு மணிக்குக் கிளம்பினால தான் ஒன்பதரை மணி அலுவலகத்திற்கு சிறிது தாமதத்துடனாவது செல்ல முடியும். காலை உணவு என்பது எப்போதும் நிகழ்ச்சி நிரலில் வரவே வராது. மதிய உணவு அலுவலகத்தில் கிடைத்து விடும், எனவே அதற்கான தேடலில்லை. இரவுக்குத்தான் நித்தம் ஒரு வழிவகை யோசிக்க வேண்டியிருக்கிறது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வருகிற நாப்பத்தேழு கிலோமீட்டர் தூரத்தில் எந்த கையேந்திபவன் இட்லிக்கு அரைத்த மாவிற்கான அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அங்கே தான் அன்றைக்கான பார்சல் கட்டப்படும். இன்று அதையும் தவரவிட்டு வந்தாகி விட்டது. அலமாரியைத் துலாவியதில் இரண்டு பாக்கெட் மில்க் பிக்கீஸ் கண்ணில்பட்டது. நினைவடுக்கினில் சென்ற ஜென்மத்தில் ஊரிலிருந்து கொண்டு வந்த ஊறுகாய் பாட்டிலும் நிழலாடியது. பெருமுயற்சிக்குப் பின் அதையும் தேடி எடுத்தால் முதலுக்கு மோசமில்லை. மேலுள்ள ஒரே ஒரு அடுக்கு தான் பூசனம் பிடித்திருந்தது. அதை நீக்கிவிட்டு பிஸ்கட்டுக்கு ஊறுகாய் தொட்டு அன்றைய இரவு உணவுக்கான கடமையை முடித்து விட்டேன்.

மறுநாள் செய்யவேண்டிய வேலைக்குக் குறிப்பெடுக்கலாம் என்று நினைத்து மடிக்கணினியைத் திறந்தேன். சாத்தான் மீண்டும் முழித்துக் கொண்டு விட்டது. டேட்டா கார்டை சொருகியது தான் தாமதம். சாத்தான் மேய்ச்சலுக்கு என்னையும் இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் சாத்தனைக் கட்டுப்படுத்தி வேலைக்குத் திருப்பி விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் சொல் பேச்சு கேளாமல் அது நேரத்தை விழுங்கிக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து மடிக்கணினியை மூடிய அடுத்த நிமிடம் மின்சாரம் நின்று விட்டது. வேகமாக அலைபேசியைத் தேடி எடுத்து மணி பார்த்தால் பத்து நாற்பத்தி மூன்று. வழக்கமாக சரியாக பதினோரு மணிக்குத் தான் மின்சாரம் நிற்கும். மீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு வரும் என்ற சமாதானத்தில் நானும் வியர்வை மழையில் தூங்கி விடுவேன். பிறகு மூன்று மணிக்கு நிற்கும் போதும்,  ஐந்து மணிக்கு வரும் போதும் முழிப்பு தட்டும். அதற்கொரு முக்கியத்துவம் தராமல் நான் தூங்கிக் கொண்டிருப்பேன். காலை ஏழு மணிக்கு மீண்டும் மின்சாரம் நிற்கும் போது நான் வாசல் கதவை சாத்திக் கொண்டிருப்பேன். இந்த ஒழுங்குமுறைக்கு பழகி தான் நாட்கள் சென்று கொண்டிருந்தது. என்றேனும், நிகழ்வில் எதிர்பாரா ஒழுங்கின்மை நேரும் போது ஒரு பதட்டம் வந்து விடுகிறது.  

அலைபேசியை தலைமாட்டுக்கு அருகில் வைத்துவிட்டு படுத்தால் தூக்கம் பிடிபடவே இல்லை. ஏதேதோ சிந்தனைகள். எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி செய்தி, ஒரே மாதிரி சண்டை, ஒரே மாதிரி ஊழல், ஒரே மாதிரி போராட்டம், நம்மை சுற்றி நடப்பவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்தது போலவும், ஆனாலும் அது நிகழ்வதையே எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவும் ஏதேதோ நம்மை சுற்றி சுற்றி மாய வலைப்பின்னல். எண்மயமாக்கப்பட்ட பின்னல். சுழியமாகவும், ஒன்றாகவும் மட்டுமே நிரம்பி நிற்கின்ற உலகம். உலகம் முழுக்க எண்கள், எண்கள், எண்கள் மட்டுமே. அர்த்தமில்லாத சுழியங்கள், அர்த்தமில்லாத ஒன்றுகள் இவற்றால் தழும்பித் தழும்பி சுழலும் உலகம்.

விழித்துப் பார்த்தால் எப்போது தூங்கினேன் என்று நினைவே வரவில்லை. பயங்கர தலைவலி. ஆனாலும் அந்த இரவு ஏதோ ஒரு பாடத்தை எனக்கு நடத்திச் சென்றது போலவே தோன்றியது. என்ன பாடம் என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் துவங்கினேன். உலகத்தை சுருக்கி உள்ளங்கைக்குள் வைக்கிறேன் என்ற நினைப்பில், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறேன் என புரிய இரண்டு மூன்று நாட்கள் ஆகியது. அறையில் இணையத்துக்கு மூடுவிழா நடத்தினேன். மறுநாள் அலுவகலத்திலிருந்து அறைக்கு வரும் போது, நான் தங்கியிருக்கும் அடுக்ககத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு மாணவர் விடுதியிலிருந்து வரும் சிறுவர்களில் சத்தம் என்னை ஈர்த்தது. இத்தனை நாட்களும் இங்கு ஒரு விடுதி இருந்ததை எப்படி கவனிக்காமல் சென்றேன் என எனக்கே வியப்பாய் இருந்தது. வசதியில்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அரசு நடத்தும் உண்டு உறைவிடப் பள்ளி அது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள சிறுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கிப் படித்தனர். அடுத்து வந்த வார இறுதி நாள், பொழுதைக் கழிக்க நினைத்து அந்த விடுதியின் அருகில் சென்று எட்டிப்பார்த்தேன். உள்ளே சிறுவர்கள் பலவித விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். நானும் அப்படியே அவர்களை ரசித்துக் கொண்டே நின்று விட்டேன். 

சில நாட்களில் இது எனது வழக்கமான பழக்கமாகி விட, நாளடைவில் சிறுவர்களுடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, விருப்பமுள்ள தன்னார்வலர்கள் சிலர் தங்களது விடுமுறை நாட்களில் விடுதிக்கு வந்து மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதாகத் தெரிவித்தனர். எனக்கும் ஆர்வம் வரவே, விடுதிக் காப்பாளரிடம் சென்று நானும் மாணவர்களுக்கு டியூசன் எடுக்க விரும்புவதாகக் கூறினேன். அவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டு, நான் கணினி நிறுவனத்தில் வேலை செய்வதால் மாணவர்களுக்கு கணினி சொல்லித் தர வேண்டுமென விரும்பினார். நான் அதை மறுத்து, மாணவர்களுக்கு கணக்கு சொல்லித் தர விரும்புவதாகக் கூறினேன். அவரும் சரியென்று சொல்லி விட்டார்.

வாரயிறுதி நாட்களில் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சி முழுவீச்சில் சென்று கொண்டிருக்கிறது. நான் என்றோ உருப்போட்ட ஆர்.எஸ்.அகர்வாலும், சகுந்தலா தேவியும் இவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களாய் மாறியிருக்கின்றன. இப்போதும் என் கனவில் அவ்வப்போது எண்கள் வரத்தான் செய்கிறது. ஆனால் இவை வெற்று சுழியமும், ஒன்றுமாக இருப்பதில்லை. அடர்த்தியாக, பொருள் உள்ளதாக, தகைநேர்த்தி மிகுந்ததாக நிறைந்து இருக்கின்றது. உடலைப் போல தான் மனமும்,  தன் இயல்பிலிருந்து மாறினாலும், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர தன்னைத் தானே நெகிழ்த்திக் கொள்ளவும் செய்கிறது.

************

Friday, August 24, 2012

வாசிப்போர் களம் - சில புத்தகங்கள்

எங்கள் அலுவலக ”வாசிப்போர் களம்”  அமைப்பிற்காக எழுதியது.
http://vasipporkalam.blogspot.in/2012/08/blog-post_23.html

*******************************************
எதிர்வரும் 30/08/2012 முதல் 09/09/2012 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் நண்பர்கள் புத்தகங்களை தேர்வு செய்ய ஏதுவாக சில புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு  ”வாசிப்போர் களம்” சார்பாக கேட்டனர்.
தரவரிசை என்றெல்லாம் பிரிக்காமல், மனதுக்கு சட்டென தோன்றிய சில புத்தகங்களைப் பற்றி சிறுகுறிப்புடன் அளித்திருக்கிறேன். வேறுபட்ட வாசிப்புத்தளத்தில் உள்ள பல நண்பர்களைக் கொண்டது ”வாசிப்போர் களம்”. அனைவருக்குமே இனிய வாசிப்பனுவம் தரக்கூடிய நூல்கள் இவை என்ற வகையில் இவற்றைத் தொகுத்திருக்கிறேன்.

வாடிவாசல் / சிசு செல்லப்பா / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.40

மாடணைதல் என்ற தமிழர் வீரவிளையாட்டின் சூட்சமங்களை சொல்லும் நாவல். இரண்டு துடிப்பான மாடுபிடி வீரர்கள் வேற்றூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்குச் செல்கிறார்கள். அதில் ஒருவன் தன் தந்தையை குத்திச் சாய்த்த ஒரு ”காரி” காளையை அடக்கி, இழந்த பெருமையை நிலைநாட்ட எடுக்கும் முயற்சி தான் நாவலின் கரு. நாவல் படிக்கும் போதே, களத்தில் மாடு பிடிக்க நாமும் நிற்பதைப் போன்ற உணர்வு எழும் அளவு தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. 

கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

இது ஒரு இனக்குழுவின் கதை. ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மேலும் பயணிக்க முடியாத நிலையில், அங்குள்ள வனப்பகுதியை சீர்திருத்தி விவசாயம் செய்து அந்தப் பகுதியிலேயே தங்கள் வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் நாவல்.

துணையெழுத்து / எஸ்.ராமகிருஷ்ணன் / விகடன் பிரசுரம் / ரூ.110

நம்மில் பெரும்பான்மையோருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகம் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்த “துணையெழுத்து” மூலமாகவே நிகழ்ந்திருக்கும். அன்றாடம் நாம் கடந்து செல்லும் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களை சகபயணியாக உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு. தெள்ளிய நீரோடையில் மிதந்து செல்லும் தக்கை போல எளிய மனிதர்களின் மேன்மை பற்றி எதார்த்தமாக பேசும் தொகுப்பு. நாளிதழ்களில் நாம் காணும் “உயிர்காக்க உதவுங்கள்”அறிவிப்பு கொடுப்பவர்கள், நெடுஞ்சாலை உணவகத்தில் எடுபிடி வேலை செய்பவர், தெருக்கூத்து நடிகர்கள் என பல நிலை மனிதர்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்பு. 

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் / நேசமித்ரன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.50

தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. சொற்களை பகடைகளாக்கி பரமபதம் ஆட வைக்கும் வித்தையை கற்றுத் தரும் இந்தத் தொகுப்பு. நாம் இதுவரை வாசித்த கவிதைத் தொகுப்புகளிலிருந்து இது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். தொடர் வாசிப்பில் சொற்களாலான புதையல் வேட்டையில் புதுப்புது திறப்புகளும், சுடோகு புதிர் அவிழ்க்கும் உற்சாகமும் பிறக்கும்.

சேவல்கட்டு / ம.தவசி / புதுமைப் பித்தன் பதிப்பகம் / ரூ.70


சேவல் சண்டையை மையமாக வைத்து புனைவும், யதார்த்தமும் கலந்து எழுதப்பட்ட நாவல். கொண்ட வைராக்கியத்திற்காக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து அவமானப்பட்டாலும், தான் அடிபட்ட களத்திற்குள்ளேயே சுழன்று தன் வாழ்வையே தொலைக்கிறான் ஒருவன். அவன் விட்ட இடத்திலிருந்து அவனது மகனும் அதே பாதையிலேயே அலைந்து திரிகிறான். போத்தையா என்னும் அறுபது வயது நபரும் அவரது தந்தை சேவுகப்பாண்டியனும் சேவற்கட்டில் தங்கள் வாழ்வை இழந்த கதை, மாயா யதார்த்த நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. கத்திக்கட்டு சேவல் சண்டையின் நுனுக்கங்களும், பண்டைய காலத்தில் பெண்களில் இந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

விழித்திருப்பவனின் இரவு / எஸ்.ராமகிருஷ்ணன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.110 

உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய அருமையான அறிமுகம் தரும் கட்டுரைத் தொகுப்பு. தற்கொலையை தவம் போல செய்யும் சாமுராயாகட்டும், வண்னத்துப் பூச்சியை கனவில் காண்பதோ, இல்லை ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவிற்குள் தான் வாழ்வதாக உருவகம் செய்பவராகட்டும், ஒரு வெற்றுக் காகிதத்தை உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக மதிப்பவராகட்டும், காளைச் சண்டையின் நுணுக்கங்களை தேர்ந்த நடனம் போல் ரசிப்பவராகட்டும் அவரவர் வாழ்வை அவரவர் வலிகளோடும், சிலிர்ப்புகளோடும், போதாமைகளோடும், சுக துக்கங்களோடும் நேர்மையாக பதிவு செய்திருக்கும் தொகுப்பு. வெறும் தரவுகளாக இல்லாமல், உலக இலக்கிய ஆளுமைகளின் வாழ்வை கதை போல சொல்லியிருக்கும் கட்டுரைத் தொகுப்பு.

******
வாசிப்பனுபவம் இனிதாகட்டும் நண்பர்களே !

Tuesday, August 21, 2012

தென்திசைப்பயணம்


நான் பிறந்தது முதலே புழங்கியது எல்லாம் மதுரையில் “சோலைஅழகுபுரம்” எனும் ஒரே ஏரியா தான். ஆரம்பப்பள்ளி “பாலகுருகுலம்” வீட்டிற்கு அருகிலேயே அமைந்து இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது ”டி.வி.எஸ்” பள்ளியில். அதுவும் வீட்டிலிருந்து மிஞ்சிப் போனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்குள் தான் இருக்கும். தினமும் சைக்கிள் பயணம். வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு என்று தான் இருப்பேன். பள்ளிப்பருவம் வரை பெரிதாக வெளியூர் எல்லாம் சென்று தங்கியதுமில்லை. வீட்டை விட்டு தனியாகக் கிளம்பிய முதல் பயணம், தெற்கு நோக்கியது. 

பள்ளிப் படிப்பு முடிந்து, பொறியியல் கலந்தாய்வு மூலம் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அப்போது கல்லூரியில் விடுதி வசதி இல்லை. எனவே கல்லூரிக்கு அருகில் இருந்த தனியார் விடுதியில் சேர்ந்து கொண்டோம். முதன்முறையாக விடுதி வாசம். கல்லூரி சேர்ந்த பரபரப்பு, ஆச்சர்யம், புது நண்பர்கள், ரேகிங் பயம் என பகலெல்லாம் ஓடி விடும். இரவு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்தால் போதும், இன்னதென்று தெரியாமல் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விடும். முதல் ஒரு மாதம் முழுதும் இதே கதை தான். பிறகு மண் பிடித்து, வேர் பிடித்து, நீர் பிடித்து, கிளை விரித்து, பூத்துக் குலுங்கிய வசந்தம் எல்லாம் வந்தது தனிக்கதை.

திருநெல்வேலியில் இருந்த பொழுது தான், நாம் பேசுவது மதுரை வட்டார மொழி,  நெல்லை வழக்கு மொழி நம் பேச்சு வழக்கு மொழியிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கும். நெல்லை நண்பர்கள் ராகம் போட்டு பேசுவதை விருப்பத்துடன் ரசித்துக் கொண்டிருப்பேன். அங்கிருக்கும் வரை முடிந்த மட்டும் நண்பர்களுடன் நெல்லை மொழியிலேயே உரையாடவும் முயற்சிப்பேன். கல்லூரி சமயங்களில் மதுரை வரும் போது, இங்கும் அதே பேச்சுவழக்கு வர, இங்கு அனைவரும் சிரித்திருக்கிறார்கள். சிறுவனாக இருந்த என்னை இளைஞனாக மாற்றியது நெல்லை தான். தாமிரபரணியும், குற்றாலமும், திருப்பரப்பு அருவியும் எப்போதும் நினைவில் நிற்கக் கூடிய அளவில் கல்லூரிக் காலங்களில் நீக்கமற கலந்திருந்தது. மதுரையில் இருந்து வெளியூர் கிளம்பும் போது, சென்னை நோக்கிய பயணமென்றால் ஒருவிதமான புழுக்கமும், தெற்கு நோக்கிய பயணமென்றால் குளிர்ச்சியான மனநிலையும் தன்னிச்சையாக அமைந்து விடுகிறது.

நிற்க ! பதிவுலகம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் சும்மா “பராக்கு” மட்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஒரு சுபயோக சுபதினத்தில் ”சோலைஅழகுபுரம்” என்று வசித்து வந்த ஏரியாவின் பெயரில் வலைப்பூவை துவங்கி இத்தோடு சேர்த்து 100 இடுகைகள் எழுதி இருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் என் அளவில், மொழிக்கு மரியாதை தந்து என் சிற்றறிவுக்கு எட்டியவரை முழுமனதோடு தான் ஒவ்வொரு இடுகையையும் அளித்திருக்கிறேன். அந்த வகையில் எழுதிய ஒரு இடுகையும், அது நகைச்சுவையோ, அங்கதமோ, மொக்கையோ அல்லது கருத்தார்ந்ததாக (?) நம்பப்பட்டு எழுதப்பட்டதோ அனைத்தும் எனக்கு சிறிதளவேனும் மனநிறைவைத் தந்திருக்கின்றது. அன்றாட வாழ்வியலில் இணையம் அதிக நேரத்தை விழுங்கிக் கொள்வதும் உணமை தான். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதற்கான காரணம், இங்கே நான் இழப்பதை விட கற்றுக் கொள்வது அதிகம் என்றே நம்புகிறேன். தொடரும் இந்த பயணத்தில் உடன் பயணிக்கும், தொடர்ந்து உற்சாகமூட்டும், குறைகளை தயங்காமல் சுட்டிக்காட்டும், மௌனமாய் பார்வையிடும், எதிர்பாராத தருணங்களில் எப்போதோ எழுதிய ஒரு இடுகையைக் குறித்துப் பேசி கிளர்ச்சியடையச் செய்யும், என்னில் நம்பிக்கை வைத்து கேட்காமலே புதிய களங்களையும், வாய்ப்புகளையும் வழங்கும் நண்பர்கள் அனைவருக்கும் சிநேகங்கள் பூத்துக் குலுங்கும் அன்பும், பொறுப்புணர்வுடன் கூடிய நன்றியும்.

”தென்திசை” என்பதை உள்ளுக்குள் சென்று பகுத்தாயக் கூடிய , வேர்களை நோக்கிய பயணம் என்பதாய் எண்ணி, “சோலைஅழகுபுரம்” என்ற இந்த வலைப்பூவை “தென்திசை” (ThenDhisai.blogspot.in) என்று மாற்றம் செய்திருக்கிறேன். தென்திசை நோக்கிய பயணம் இங்கிருந்து துவங்குகிறது. என்னோடு சேர்ந்து நீங்களும் பயணிக்க வாருங்கள் நண்பர்களே !


************

Thursday, August 16, 2012

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்

சில ”முத்துவ தத்துக்கள்”

ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தானுக்கு எத்தனை பதக்கம் என்றான் தம்பி. ஒன்றுமில்லை என்றவுடன், “அப்போ சரி, பாரத் மாதா கீ ஜே!” என்கிறான்.

******
பெண்களின் ஷாப்பிங் உலகில் வேண்டாத பொருள் என்றொரு கேட்டகிரியே கிடையாது.

******
தம்மை அறியாத தயிர்சாதங்கள், அதிகமாய் பேசுகையில் சட்னியாக்கப்படுகின்றன.
#சும்மாவொருகருத்து

******
காற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கும் வித்தையை ‘லேஸ்’ சிப்ஸ் தயாரிப்பவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்

******
முதன்முறையாக ‘கோட்’ அணிபவன் பத்து நாளானாலும் அதைக் கழட்ட மாட்டான் என்பது தான் ‘சகுனி’ படம் நமக்குச் சொல்லும் செய்தி

******
"சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் ஆடுகளம்” என்பது தானே படத்தின் பெயர். அதை விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏன் எப்போதும் சுருக்கி வெறும் ‘ஆடுகளம்’ என்றே சொல்கின்றனர்?
#அப்பாவி கோயிந்து

******
எஸ்.ரா புத்தகம் எதையாவது வாசிக்க ஆரம்பித்த உடனேயே, மாமல்லன் தான் வந்து மனசுல உட்கார்ந்துட்டு ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கார்.
#இந்த இணையம் ரொம்ப மோசம்ப்பா.

******
அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டம் பிரமிக்க வைக்கிறது. மதுரைக்குள் கிடைக்காத ஸ்பெஷல் சரக்கெல்லாம் வைகை டேம் செல்லும் வழியில் கருமாத்தூர், ஆண்டிப்பட்டி ஊர் டாஸ்மாக்’களில் எப்போதும் கிடைக்கிறது.

******
ஆயிரம் தான் விமர்சனங்கள் இருந்தாலும், லாப நோக்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் என்றாலும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மூலம் விஜய் டீவியின் சமுதாய் பொறுப்புணர்வு பாராட்டுதற்குரியது. 
கடைசி வாரம் கூத்தாடிகள் செய்த அலப்பறைகள் சகிக்கவில்லை, மோசமான அனுபவத்துடன் முடிக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தது. இன்று மிக அருமையான நிறைவு விழா கொடுத்தார்கள். வெல்டன் டீம், வாழ்த்துகள் சூர்யா !

#ஆனாலும் வாய்ல மாவாட்டி ஆட்டி பேசுறத கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.  :)

******
இணைய நடுநிலையாளர்களின் ”அரிய சிந்தனைகளை” எல்லாம் மதித்து இந்த உடன்பிறப்புகள் ஏன் விலாவாரியாக பதில் அளிக்கிறார்கள் என எண்ணுவதுண்டு.

”ஆனால் இந்த கேனைத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் சமூதாயத்தில், மேடைகளில், செய்தித்தாள் டீவி பேட்டிகளில், டீக்கடைகளில் , அலுவலகத்தில், கல்லூரிகளில், இணையம் சாராத பெரும்பான்மையினரிடம் (மொத்தமாகவென்றால் பொது மக்களிடம்) திமுக பற்றி எடுத்துச் சொல்ல (சமாளிக்கவும்) நிறைய பயிற்சி கிடைக்கிறது” என்றார் உடன்பிறப்பு நண்பரொருவர்.

நான் யோசிச்சேன், இங்க கேக்குற மாதிரி அறிவுப்பூர்வமான கேள்விகளை நடுநிலையாளர்கள் சமுதாயத்தில் கேட்டால் என்னவாகும்?

# ஒன்னு வாயிலயே குத்துவான், இல்ல கல்லால அடிப்பான்.
# என்னமோபோங்க !
******

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்.



******************* 

Tuesday, July 17, 2012

நட்பு!



நட்பைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகளும் தத்துவங்களும் ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்டுவிட்டன. காதலா, நட்பா என ரெக்கார்டு தேயும் வரை பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்தப்பட்டுவிட்டன. இளமைக்கால நட்பு, பிறகு காதல் இவற்றைத் தாண்டி திருமணம், குடும்பம் என்று வந்த பிறகு நாம் போட்டு வைத்திருக்கும் முன்னுரிமைப் பட்டியல்களில் மாற்றங்களும் இருக்கலாம். ஆனால் பரஸ்பர சார்புகள் கொண்ட குடும்ப உறவுகள் தாண்டி சற்று விலகி நின்று, ஆனால் உளப்பூர்வமாக உணரக்கூடிய உறவு நண்பர்கள் தாம். எப்படியென்றால் இப்போது நம்மால் தவிர்க்க முடியாத உறவு யாரென்று கேட்டால், மனைவியையோ குழந்தைகளையோ, பெற்றோரையோ தான் முதலில் சொல்வோம். ஆனாலும் நம் நலனில் அக்கறையுள்ள, தூரத்திலிருந்தாலும் நம் வளர்ச்சியில் மகிழ்ந்திருக்கும், இன்னும் சொல்லப்போனால் தமது வரிசைமுறை  பற்றியெல்லாம் கூட அலட்டிக்கொள்ளாத நண்பர்கள் அனைவருக்குமே இருப்பார்கள் தானே.

கல்லூரி விடுதிகளில் நடக்கும் அரட்டைக்கச்சேரியில் இரவு முழுவதும் இன்னதென்று இல்லாமல் உலகத்திலுள்ள சகல நிகழ்வுகளையும் கிண்டலடித்துக் கொண்டிருப்போம். அதே நண்பர்கள் இன்று, எப்போதும் ஃபேஸ்புக்கில் பச்சை விளக்கில் தான் இருக்கிறார்கள். ஒரு “ஹாய்” சொல்லக் கூட தோன்றுவதில்லை. அதே நினைப்பு தான் அவர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவர்களின் அண்மை எப்போதும் உணரப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இது எல்லாம் சேர்த்து என்றாவது நேரில் சந்திக்க வாய்ப்பு வரும் போது பழைய நினைவுகளை அசைபோட்டு “பார்ட்டியாய்” பொங்கி வழிந்து விடுகிறது. :)

தன் வீட்டில் வீம்பு பிடிப்பவர்கள் கூட நண்பர்கள் வீட்டில் விழுந்து விழுந்து வேலை செய்வார்கள். நண்பனின் அக்கா, அண்ணன் திருமணங்களில் சாம்பார் வாளி தூக்காத ஒருவனாவது இருக்க முடியுமா என்ன?. அதே போல ஏதாவது அவசர உதவி என்றாலும் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள் நண்பர்கள் தாம். சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு ஓ-நெகடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. சொந்தங்கள் சிலருக்கு அந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏதேதோ காரணம் சொல்லி, யாரும் தானம் தர முன்வரவில்லை. பிறகு நண்பர் ஒருவர் வந்து இரத்த தானம் செய்தார். அதே நாளன்று வேறு ஒரு நண்பருக்கு ஏ1-பாசிடிவ் இரத்தம் தேவைப்பட என் தம்பி சென்று இரத்த தானம் செய்து வந்தான். அவர்களின் சொந்தங்களிலும் யாருக்கேனும் அந்த வகை இருந்து தர மனமில்லாமல் இருந்திருக்கலாம். நான் பார்த்தவரையில் பெரும்பாலும், யாருக்கேனும் சிகிச்சை என இரத்தம் தேவைப்படும் பொழுதெல்லாம் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்களோ தான் வந்து உதவி இருக்கிறார்கள். சொந்தங்களுக்கு இல்லாத பிணைப்பு நண்பர்கள் எனும் போது தானாகவே வந்துவிடுவது தான் நிதர்சனம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு என் தம்பியின் நண்பன் வீட்டுக்கு அருகில் ஒரு சம்பவம். பதின்ம வயது பையன் ஒருவனை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று கடித்திருக்கின்றது. அவனும் சரியாக மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டான். எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் வாலிபம். வீட்டிலும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனது நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். நாய் கடித்து மருத்துவம் எடுத்துக் கொள்ளாததால் “ரேபிஸ்” முற்றிவிட்டதாகவும், இனி பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட அவனது பக்கத்து வீட்டு நண்பன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறான். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மருத்துவமனையில் தன் நண்பன் இருந்த கோலம் கண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இவனும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டான். இப்பொழுது இருவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது.  ரேபிஸ் நோய் வந்த இளைஞனை நினைக்கும் போது மனம் பதறுகிறது. அதே நேரம் அவனுக்காக தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த அவனது நண்பனை நினைக்கும் போது வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இருவரும் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற முனுமுனுப்பு இரண்டு நாட்களாக தலைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

******

அன்பென்னும் சித்திரவதை!



என் பரிகாசம், துரோகம்
அலட்சியம், மறுதலிப்பு 
அனைத்தையும் புறந்தள்ளி
ஆத்மார்த்தமாய் ஏற்றுக் கொண்டாய் !

உன் கருணை மலர்கள் 
மொட்டவிழுக்கும் சிலிர்ப்புகள்
என்னைக் குற்றவாளியாக்கி
கூசச் செய்கின்றன.

எதிர்பார்ப்புகளற்ற உன் அரவணைப்பில்
புழுங்கித் தவிக்கிறேன்.
ஒரு சுடுசொல், சுளிப்பு, அழுகை, வெறுப்பு
ஏதேனும் செய்தாவது
என் ரணங்களைக் கீறி சுத்தப்படுத்து.
அறுவை சிகிச்சை தேவைப்படும்
புரையோடிப்போன புண்ணுக்கு
ஒத்தடங்கள் போதாது.

பொரித்து வெளிவருவேன் என்று
பொறுமையாய் அடைகாக்கிறாய்.
உள்ளே அழுகிப்போயிருக்கையில்,
நிபந்தனைகளற்ற உன் பேரன்பின் 
வெப்பம் தாளாமல்
வெடித்துச் சிதறிவிடுவேனோ என்ற
எனது பயம் உனக்குப் புரியவில்லையா? 

*************
படம்: இணையம்  http://www.mymodernmet.com/profiles/blogs/the-beauty-and-pain-of-love

Tuesday, July 10, 2012

செல்ல மகள் வருகை !


காய்க்கவில்லை என்று கல்லடி பட்டு
தூரதேசம் போனவர்கள் திரும்பி வந்தார்கள்
இளந்தளிரை சுமந்து கொண்டு.
பத்து மாத புதினத்தை
அத்தியாயங்களாக்கி அடுக்கினார்கள்
ஆசிரமம் ஆசிரமமாய் அலைந்த வலி மறைத்து.

குமட்டலை, தலைசுற்றலை
மேடிட்ட வயிற்றின் ஊரலை
சோகையில் வெளிறிய முகத்தை
நீர்வைத்து வீங்கிய காலை
இளக்கம் கொடுக்க இடுப்பில் ஊற்றிய சுடுநீரை
குடம் உடைந்து மருத்துவமனை விரைந்ததை
தலைதிருப்ப பட்ட பிரயத்தனத்தை
சுகப்பிரசவத்தில் பெண்மகவு பிறந்ததை என

கற்பனை செய்து வைத்த கதையனைத்தையும்
உண்மை போலவே கோர்த்துக் கோர்த்து 
புனைந்தார்கள் கணவனும் மனைவியும்.

சொன்ன பொய்களின் பாரம் தாங்காது
மூச்சழுத்த மார்பு விம்ம
மூர்ச்சையாகி கீழே சரிந்தாள் மனைவி.......

பாதுகாப்பின்மை உணர்ந்து
பரிதவிக்கிறது புதுவரவு.
மயங்கிய நிலையிலும்
குழந்தையின் அழுகைச்சத்தம்
கேட்கக் கேட்க புதிதாய்
பொங்கிக் கசிகிறது மார்பூறும் பால்.

காய்க்காமலே கனிந்து போகிறாள் தாயாக.

******

Thursday, July 5, 2012

செவியிடை மனிதர்கள் - 3


வணக்கம், மன்னார் அன் கம்பெனிங்களா?

ஆமா, நீங்க?

நான் கவிஞர் காத்துவாயன் பேசுறேன். நம்ம பதிப்பகத்திலிருந்து ஒரு கவிதைத்தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.

தாராளமா பண்ணலாமே

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்க்கு குறைஞ்சது 300 லைக்ஸ் விழும், டிவிட்டர்ல மட்டும் 3452 ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நான் ஒன்னும் எழுதாட்டியும் அதை ரீட்வீட் பண்ணீட்டே இருப்பாங்க. பதிவுன்னா 2587 ஹிட்ஸ் வரும், பின்னூட்டம் சராசரியா 432 வரும், அலெஸ்கா ரேட்டிங்கல........

சரி சார், இதெல்லாம் எதுக்கு சொல்றீங்க?

இல்லை நான் ஒரு ‘பிரபல பதிவர்’ன்னு சொல்ல வந்தேன். எனக்கு புத்தகம் போடனும்னெல்லாம் விருப்பம் இல்ல, என் வாசகர் வட்டத்துல தீர்மானம் எடுத்துட்டாங்க. என்னால மீற முடியல.

வாசகர்கள் கேட்டா கண்டிப்பா பண்ணித் தான் சார் ஆகனும்.

சந்தோசம், தொகுப்புக்கு தலைப்பு “அகவெளியெங்கும் அலைந்து திரியும் கொடுநடை கதகளி”. சரி தானே?

சார், ரொம்ப கிளாசிக்கலா இருக்கே. கொஞ்சம் கமர்சியலைஸ் பண்ண முடியுமா?

இல்ல நண்பரே, எல்லாக் கவிதையிலயும் உள்ளொளி பொங்கும் ஞான அலை இருக்கும். அதான் வைப்ரேடிங்கா தலைப்பு வச்சேன், இல்லாட்டியும் பரவால்ல. “உள்ளே வெளியே விளையாட்டும், அஞ்சு காசு கமர்கட்டும்” ஓகே வா?

சூப்பர் சார். 

அதிருக்கட்டும் கவிதைத் தொகுப்புன்னா எவ்ளோ வரும்?

பக்காவா பண்ணுவோம் சார். ஒரு முப்பதாயிரம் வரும்.

சரி, நீங்க என்ன பண்றீங்க, என் பிளாக்ல இருக்க கவிதையெல்லாம் எடுத்து புக்கா போடுங்க. நீங்க ஒரு பதினஞ்சாயிரம் எடுத்துக்கங்க. மீதி பதினஞ்சாயிரம் எனக்கு எப்ப அனுப்பி வைக்கிறீங்க?

என்னது, அனுப்பி வைக்கவா ? சார், முப்பதாயிரம் நீங்க தந்தா கவிதைத்தொகுப்பு வரும்.

இல்லாட்டி...

வாய்ல நல்லா கெட்ட வார்த்தையா வரும். மொத்ல்ல வைய்யா ஃபோனை.

டொக்.


******

Monday, July 2, 2012

நீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்


நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



மதுரையில் பிறந்து வளர்ந்த எவருக்கும் சௌராஸ்ட்ரா சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு நிறையவே அமைந்திருக்கும். வீதியில், டீக்கடையில் என எங்கு பேசிக்கொண்டாலும் அவர்கள் சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து விட்டால் போதும், சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலையின்றி அவர்களுக்குள் சௌராஸ்ட்ரா மொழியில் பேசத்துவங்கிவிடுவார்கள். நாம் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியது தான். அவர்களுக்கென தனி வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி என மாநகர சந்தடியிலும் தனித்துத் தெரியும் இம்மக்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து தெற்கில் குடிகொண்டனர். இயற்கையாகவே பயந்த சுபவாமுடைய இந்த மக்கள் நெசவுத் தொழிலையே பெரிதும் நம்பியிருந்தனர். என்பதுகளின் இறுதி வரை சிறப்பான கல்வியறிவு பெற்ற சமூகம் என்று சொல்ல முடியாத நிலையே இருந்தது. பிறகு காலமாற்றத்தில் இந்த சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் பற்பல கல்விநிலையங்கள் துவங்கியதன் விளைவாக இன்று அநேக மக்கள் கல்வியறிவு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாதிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் குழுவுணர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியது. எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகள் செய்து கொள்வர்.

இந்த சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராம். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ”” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க”” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ””யில் உள்ள தீ.

இல்லற வாழ்வை துவங்கி, அதிலும் புரிந்து நடக்கும் நல்ல மனைவியும், அழகிய பெண் குழந்தையும் அமையப்பெற்ற, தொழிலில் ஏறுமுகம் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்... சொந்த வீடும், சொந்தத் தறியும் அடைந்த பிறகு தான் திருமணம் என்று வைராக்யத்துடன் இருந்து சாதித்த இளைஞன்... தொழில் நொடிக்கும் நிலையிலும் தன்னை ஆளாக்கிய, அங்கீகரித்த முதலாளியை விட்டுப்பிரியாது அவருக்கே மனதைரியம் அளித்த இளைஞன்... சங்கக்கூட்டங்களில் தலைவரின் நம்பிக்கைக்கும் உடனிருக்கும் தொழிலாளர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான சொல்வன்மை நிறைந்த துடிப்புமிக்க இளைஞன்... தான் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மொய்த்து எடுக்கும் சொந்தபந்தகங்களின் சுயநலம் தெரிந்தும் “உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கு, எப்படியும் உழைத்து நிமிர்ந்து நிற்கலாம்” என பெருந்தன்மை கொண்ட இளைஞன்... உடன் தம்பி போல் பழகி வந்த உதவியாளன் துரோகம் இழைக்கிறான் எனத் தெரிந்தும் மனமுடையாமல், அவனை விலக்கி தன்முனைப்புடன் செயல்படும் இளைஞன்... இப்படி எத்தனையோ ஆதர்சன குணங்கள் கொண்ட ஒருவன் வேற்றுப் பெண்ணின் ஒரு குழைவுக்கு, ஒரு சிறு தனிமைக்கு பலியாகி அந்த சுவையை விட முடியாமல் அலைக்கழிக்கப்படுவது தான் கதை. அதற்கு அவனுக்குக் கிடைக்கும் தண்டனையின் ரணம் ஆறுவதற்குள் அடுத்த வாழ்வைத் துவங்குகிறான் என்று முடிகிறது. அதற்கு என்ன சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் புதினம் முடிந்தவுன் இருக்கும் படபடப்பும், மனவுலைச்சலும் நீங்க இன்னும் நெடுநாளாகும்.

பொதுவாக, புதினங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நம்மைப் பொருத்தி வாசிக்கும் போது வாசிப்பனுபவம் நெருக்கமாகவும், உளப்பூர்வமாகமும் அமையும் என்று சொல்வார்கள். “வேள்வித்தீ”யின் கண்ணன் ஒருமைத் தன்மையுடையவனாக, தனக்குக்கீழ் உள்ளவர்களுக்கு உதவுபவனாக, சமஅந்தஸ்து உடையவர்களின் உற்ற தோழனாக, வசதிபடைத்தவர்களிடம் ஒதுங்கியிருப்பவனாக, தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக, இல்வாழ்வில் குறையேதுமின்றி நிறைவாழ்வும் நல்காமமும் தருகின்ற துணையைப் பெற்ற பின்பும் சபலத்திற்காட்படும் சாதரணனாக,  தன் தவறை உணராத, உணர்ந்தாலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ”மனைவியை தன்னை முழுமையாக நம்ப வைக்க என்ன செய்யவேண்டும்” என்று மட்டுமே சிந்திக்கும், தன்முனைப்பு நிரம்பிக்கிடக்கும் ஒரு “மாதிரியுரு” மத்தியவர்க்க  இளைஞனாக” சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். புதினத்துடன் பயணம் செய்த ஒரு சக பயணியாக முடிவில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தான் என் மனம் விரும்பியது. ஆனால் சித்தரக்கப்பட்டிருக்கும் ”கண்ணனாக” இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் ஒரு ஆணாக “அவன் அழ ஒரு மடி இல்லையென்றால் இன்னொன்று. தன் மனைவியின் தற்கொலைக்குத் தானே காரணமாக இருந்தாலும் அடுத்தவள் அரவணைப்பும் அவனுக்கு வேண்டும்” என்ற நிலையில் தான் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.

இன்னொருத்தி இருக்கிறாள். 1975ம் ஆண்டின் இளம்விதவை. பணம், வசதி, செல்வாக்கிற்குக் குறைவில்லாத, ஊர் உறவு பற்றிக் கவலைப்படாத, முகப்பூச்சு, அலங்காரத்திற்குக் குறைவில்லாத, வாசக ஆண்கள் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் படிப்பார்களோ அப்படியே இருக்கிறாள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறாள் இல்லையென்றால் உருவாக்குகிறாள். துர்மரணம் நிகழும் போது, அது தன்னால் இல்லை என்று நம்புகிறாள். பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அரவணைத்துக் கொள்கிறாள். இனி அவனுக்கு தான் தான் எல்லாம் என்று நம்ப வைக்கிறாள். வேற்றூருக்கு சென்று புதிய வாழ்வை துவங்கலாம் என்று அவனை குற்றவுணர்விலிருந்து வெளிக்கொண்ர்கிறார். அவளளவில் அவள் நியாயம் அவளுக்கு.

இவை அனைத்தையும் விட, புதினத்தில் நெஞ்சையறுக்கும் படிமத்தில் ஒரு ”பிஞ்சு” உயிர் இருக்கிறது, இல்லை.. இருந்தது. பசி எடுத்தால் மட்டும் உணர்ச்சிகளைக் காட்டும், மற்ற நேரங்களில் பிண்டமாகக் கிடக்கும் சின்ன உயிர். துயரமான நேரத்தில் அது “ம்... ம்...ம்மா”, “ப்... ப்... ப்பா” என்று முதல் மழலை பேசத் துவங்குகிறது. பிறகு தாயின் மார்போடு கட்டி அணைக்கப்பெற்று நீரில் மூழ்கி மூச்சு முட்ட முட்ட இறந்து போகின்றது. 

ஒரு கணவனாக, பெண் குழந்தையின் தந்தையாக என்னால் இந்த புதினத்தை ஜீரணிக்க முடியவில்லை.

நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



--- வி.பாலகுமார்
http://solaiazhagupuram.blogspot.in/
******

Tuesday, June 26, 2012

உக்கிரம் தணியும் வனப்பேச்சி !


பிராகாரம் சுற்றி
அங்கப்பிரதட்சணம் செய்து
வயிற்றில் மாவிளக்கேற்றி
பிள்ளைவரம் கேட்கும் தம்பதிக்கெல்லாம் 
தவறாமல் அருள் பாலிக்கும்
அங்கயற்கண்ணியாக
ஆண்டு முழுதும் இருப்பவள்...
பெண்கள், குழந்தைகளுக்கு
அனுமதியில்லாத
மாசி களரியின்
அமாவாசை நடுநிசியில்
பிரசவிக்காத ஆட்டுக்குட்டியை
பனிக்குடம் கிழித்தெடுத்து
தொட்டிலில் போட்டு 
தாலாட்டும் சத்தம் கேட்டு
உக்கிரம் தணியும் வனப்பேச்சியாகிறாள்.

அத்துவானக் காட்டில்
ஆடு மேய்க்கும்
நிறைவயிற்றுக்காரி
தண்டட்டிக்கான வழிப்பறியில்
கழுத்தறுபட்டு இரத்தம் கொட்ட,மூர்ச்சையடையுமுன்
தன் வயிறு கிழித்து
பிள்ளையை வெளியேற்றி
வாயால் கடித்து 
தொப்புள்கொடியறுக்கையில்
பிள்ளையின் அழுகைச் சத்தம்
கேட்குமுன்னே செத்த கதை
யாருக்கும் தெரியாது.


--- வி.பாலகுமார்

---நன்றி உயிரோசை இணைய இதழ்

Monday, June 25, 2012

ஆண்ட்ராய்டு - ஓர் எளிய அறிமுகம்



இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இணையத்தின் தேவை இன்றியமையாதது. டயல்-அப் இணைப்பில் இருந்து பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி மூலம் இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்று இணைய வேகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கணினியையும், அலைபேசியையும் இணைத்த புதிய தொழில்நுட்பம் இன்று சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ”வில்லைக் கணினி”(tablet pc) என்று சொல்லக்கூடிய இந்த கையகல கணினியில் அலைபேசிக்கான வசதிகள் மட்டுமின்றி சிறிய அளவில் ஒரு கணினி செயல்படுவதற்கான தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது.

தற்பொழுது பரவலாகிக் கொண்டிருக்கும்  மூன்றாம் தலைமுறை (3ஜி)  அலைபேசி இணைப்பு மூலம் அதிவேக இணைய வசதி (சராசரி 2 Mbps) கிடைத்தாலும், அதை அலைபேசி மூலமாக இயக்குவது சற்று சிரமமான ஒன்று தான். ஏனெனில் தற்பொழுதுள்ள அலைபேசிகளில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டவை, அவற்றில் இணையத்தில் உலாவுவதற்கான வசதிகள் சிறிதளவே உள்ளன. எனவே பெருகி வரும் இணைய பயனீட்டாளர்களின் தேவையைக் கருதி, தற்பொழுது புதிதாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த வில்லைக் கணினிகள் பேசும் வசதி மற்றுமின்றி டேட்டா பறிமாற்றத்திற்கும் இலகுவானதாய் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கணினியின் சீரிய செயல்பாட்டிற்கு அதில் நிறுவியிருக்கும் இயக்குதளம் (operating system) முக்கிய பங்கு வகிக்கிறது. அது போலவே இந்த  வில்லைக் கணினி இயங்குவதற்கும் இதில் நிறுவப்பட்டிருக்கும் இயக்குதளம் இன்றியமையாதது. இந்த இயக்குதளம் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்குத் தேவையான நிரல்களை இயக்குவதற்கு தோதானதாகவும் இருத்தல் அவசியம். நாம் இப்பொழுது சாதாரண அலைபேசியில் கூட அலாரம், கேல்குலேட்டர், பன்பலை வானொலி என ஏகப்பட்ட வசதிகளை உபயோக்கிறோம். இவையனைத்தும் இணையம் சாராத பயன்பாடுகள் (applications). ஆனால் இதே அடிப்படையில் வில்லைக் கணினி மூலமாக இணையம் சார்ந்தும், சாராமலும் இன்று இலட்சக்கணக்கான பயன்பாடுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று நவீன வடிவமைப்பில் வெளிவரும் வில்லைக் கணினியை பார்த்தவுடன் நாம் முதலில் கேட்கும் கேள்வி, “இது ஆண்ட்ராய்டு ஃபோனா?” என்பது தான். ஆண்ட்ராய்டு என்பது புதியரக அலைபேசி, ஸ்மார்ட்ஃபோன் மற்றும் வில்லைக் கணினியை இயக்கப் பயன்படும் ஒரு இயக்குதளம் தான். இது, கூகுள் மற்றும் சில நிறுவனங்களின் கூட்டமைப்பான ”ஓபன் ஃஹேண்ட்செட் அலையன்ஸ்” (open handset alliance) மூலம் வெளிவரும் ஒரு இலவச மென்பொருள் (open source). இது லினக்ஸ் (linux) இயக்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் வெற்றியின் இரகசியம் என்னவென்றால், ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தம் என்றில்லாமல் பலதரப்பட்ட அலைபேசி நிறுவனங்களும் இந்த இயக்குதளத்தை தங்கள் அலைபேசியில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதே போல ஆண்ட்ராய்டு நிறுவப்பட்டுள்ள ஒரு அலைபேசியிலோ, வில்லைக் கணினியிலோ எந்தவிதமான ஒரு மூன்றாம் நபர் (third party) வடிவமைத்த பயன்பாட்டினையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஷேர் மார்க்கெட் குறித்த ஒரு பயன்பாடு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள், ஆனால் அது உங்கள் அலைபேசியில் இல்லை. இப்பொழுது உங்கள் அலைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்குதளம் இருந்தால், இணையத்திலிருந்து ஷேர் மார்க்கெட் தொடர்பான தகுந்த பயன்பாட்டை (apps) தரவிறக்கம்  செய்து அதை உங்கள் அலைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். இப்படி, உலகம் முழுவதுமாக இலட்சக்கணக்கான பயன்பாடுகள் இணையம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. அந்த பயன்பாடுகள் இலவசமாகவோ இல்லை குறிப்பிட்ட விலையிலோ இருக்கலாம்.

நிற்க நேரமின்றி ஓடுகின்ற வாழ்க்கை முறை பரவலாகிக் கொண்டிருக்கும் சமூகத்தில், உலகத்து நிகழ்வுகள் அனைத்தையும் தரவுகளாக்கி விரல் நுனியில் தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தின் தேவை இன்றியமையாததாகிறது. மக்களின் தேவைக்குத் தீனி போட புதிய புதிய நுட்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய உலகில் அலைபேசியின் வருகை மூலமும், அதன் மூலம் இணையத்தை எளிதாக இயக்கும் வசதியும் அதற்கொரு சிறப்பான மற்றும் எளிய கருவியாக உருவாகி இருக்கும் ஆண்ட்ராய்டு இயக்குதளத்தின் வளர்ச்சியும் பயன்பாடும் பிரமிக்க வைக்கிறது.  

******