Thursday, September 17, 2009

பெயரில்லாதவை !இதே மாதிரி பிட், பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு போன முறை (சில பல மாதங்களுக்கு முன்ன்ன்னாடி) கேட்டிருந்தேன் . நண்பர்களும் நிறைய பெயர்களை சொல்லி இருந்தீங்க. அனைவருக்கும் நன்றி, ஆனா "பெயரில்லாதவை" ங்கிற பெயரே நல்லா இருப்பது போல தோணுச்சா, அதையே தலைப்பா வச்சிட்டேன்.
**************************************


சமீபத்துல எனக்கும், மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும் நடந்த உரையாடல். 

நான் : குட்டி, உன் பனியன்ல உள்ள "யானை" பொம்மை சூப்பரா இருக்குடா.  
குட்டி : இது "யானை" இல்ல. குனிஞ்சு, குனிஞ்சு நடக்கும்ல அது, "ஒட்டகம்".  
நான் : இல்லடா, இது யானை மாதிரி தானே இருக்கு.  
குட்டி : ஒன்னுமில்ல, யானைனா வாய் பெருசா கீழ வரை தொங்கும் !
நான் : (வேறு வழியில்லாமல்) அப்போ, இது ஒட்டகம் தான்டா ! :):) :) 
**************************************

அப்புறம் சின்னதா ஒரு "பெயரில்லாதது" (கவிதைன்னு சொன்னாத்தான் அப்படியே "எஸ்கேப்" ஆகி ஓடிறீங்களே !


வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !
**************************************
ஒரு தடவை மேலோகத்துல நாரதர், மழைக் கடவுளான வருண பகவான்ட்ட போய்,
"சாமி, பூமில மனுசப்பயலுக எல்லாம், செழிப்பா சந்தோசமா இருக்கானுங்க. அதனால ஒரு பயலும் நம்ம நினைக்க மாட்றாய்ங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு மழைய நிப்பாட்டி வையுங்க, அப்ப தான் அவய்ங்களுக்கு நம்ம அருமை தெரியும்!" ன்னு சொன்னாராம்.  
அதுக்கு மழைக் கடவுளும், 
"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " அப்படின்னு சொல்லி மழைய நிப்பாட்டிட்டாரு. 
பூமில, வறட்சி வர ஆரம்பிச்சிருச்சு. விவசாயம் படுத்திருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, சரி, மக்கள் எல்லாம் நம்ம நினைக்கிறாய்ங்களான்னு பார்க்க மழைக் கடவுள் மாறுவேசத்துல பூமிக்கு வந்தாரு.  
பார்த்தா, ஒரு குடியானவன் பாளம், பாளமா வெடிச்சு காஞ்சு போய் கிடக்குற நிலத்துல, ரெட்ட மாட்டு ஏர் பூட்டி உழுதுட்டு இருக்கான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவனென்ன சரியான முட்டாப்பயலாவுல்ல இருக்கான்னு நினைச்சுட்டு,
"ஏய், இங்க பாருய்யா, உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க ?" 
அதுக்கு அந்த குடியானவன் பொறுமையா, 
"இல்லைங்கையா, எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அவன் என்னைக்கும் எங்களை கைவிட மாட்டான். சீக்கிரம் மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு " ன்னு சொல்லி கடவுள் மனசை குளிர்விச்சு, மழை பொழிய வச்சான்னு சொல்லி கதைய முடிக்கிறத விட.....  
அந்த குடியானவன், 
"நானாய்யா கிறுக்குப்பய? மழை பெய்ய வைக்க வேண்டியது மேல இருக்க கடவுளோட வேலை. அதை அவன் செய்ய மறந்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. அதுக்காக நானும் எஞ்சிவனேன்னு உக்கார்ந்து இருந்தேன்னா, ஏர் பூட்டுற என் வேலை எனக்கு மறந்துறும், ஒழுங்கா ஏர் இழுத்தோட்டுற வேலைய என் மாடுகளும் மறந்துறும். மழை பெய்யுறப்ப பெய்யட்டும், நாங்களாவது எங்க வேலைய மறக்காம செஞ்சுட்டு இருக்கோம்." ன்னு தொடர்ந்து ஏர் ஓட்டுனானாம். அதைக் கேட்டு மாறுவேசத்துல இருந்த கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்ன்னு சொல்லி கதையை முடிச்சா யதார்த்தமா இருக்கும் தானே..... நீங்க என்ன சொல்றீங்க!
**************************************

வரும் ஞாயிறு (செப்டம்பர் 20, 2009) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு இருப்பதாக, நண்பர் கார்த்தி தொலைபேசி சொன்னார். அதோடு இது வழக்கமான "சும்மா, வந்தோம், பேசினோம், பவண்டோ சாப்பிட்டோம், போனோம்" சந்திப்பல்ல, முக்கியமான விசயம் இருக்கு, பிறகு சொல்றேன்" ன்னு பெரிய பிட்டா போட்டிருக்கார். கலந்து கொண்டு கைகோர்க்க ஆர்வமாக இருக்கிறேன். ("ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!)
**************************************

இப்போதைக்கு இவ்வளவு தான். உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க !
நட்புடன்,
பாலகுமார்.

Monday, September 7, 2009

நான்மாடக்கூடல் ‍ புகைப்படங்கள் !

மதுரையில் ஆகஸ்ட் 29, 2009 முதல் செப்டம்பர் 8, 2009 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக "நான்மாடக்கூடல்" ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.

"மதுரையில் ஓவியங்கள் - ஓவியங்களில் மதுரை" எனும் தலைப்பில் இடம்பெற்ற ஓவியங்களில் சில.


நுழைவாயில்
மதுரை தெப்பக்குளம்
மதுரை தெப்பக்குளம்
நாணயங்கள்
மன்னர் திருமலை நாயக்கரின் தம்பி


மதுரை தெப்பக்குளம்
மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்
முகப்பு
திருக்கல்யாணம்


முதுமக்கள்தாழி

மதுரை கோட்டை

மீனாட்சியம்மன் கோவில்

குதிரை வீரன் ஓவியம்

சமண‌ர் குகை
படங்கள் பற்றி விளக்கமளித்த, மதுரை அருங்காட்சியக அலுவலர் திரு.முத்துசாமி அவர்கள்.புகைப்படக் கண்காட்சி பற்றி

படங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களையும், தெரிந்த தகவல்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
மக்கள் விரும்பினால், காணொளி காட்சிகளையும் பதிவிடுகிறேன்.


நட்புடன்,


பாலகுமார்.