Wednesday, October 30, 2013

நான் எழுதலாமா?

இணையத்தில் எழுதுகிறேன் என்று தெரிந்தவர்கள் கேள்விப்படும் பொழுது, பெரும்பான்மையினர் சுற்றி வளைத்துக் கேட்கும் கேள்வி “எதுக்காக எழுதுறீங்க?”. இதற்கு நேரடியாக என்னால் பதில் சொல்ல முடிந்ததில்லை. மையமாக சிரித்து விட்டு “சும்மா தான்” என்று  கூறுவேன். 

நேரம் ஒதுக்கி, உழைப்பை செலுத்தும் பொழுதுபோக்கு தேவையா?
நீயெல்லாம் எழுதி என்ன “ஆஸ்காரா” வாங்க போற?
லீவு நாள்ல ரெஸ்ட் எடுக்காம என்னத்த லேப்டாப்லயே உக்கார்ந்திருக்க?
ஆஃபிஸ் டென்சன் பத்தாதுன்னு இதுல வேற ஏங்க முட்டி மோதிட்டு இருக்கீங்க?
ஹாபி’யைக் கூட கர்மசிரத்தையா செய்ற ஆளாடா நீ?
பாரு, பொழுதன்னக்கும் எதையாவது யோசிட்டு, மூளை குழம்ப தான் போகுது?
இண்டர்நெட்ல எழுதுறதெல்லாம் குப்பைங்க. வேலைவெட்டி இல்லாதவனுக என்னத்தையாவது கிறுக்குவானுக.
எழுதுறதெல்லாம் வேஸ்ட் சார். சினிமா, டி.வி.னு போனா தான் சார் ஒரு கெத்து.
காலம் எங்கேயோ போய்ட்டு இருக்கு. இப்பல்லாம் வாசிக்கிற பழக்கம் எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.
பக்கம் பக்கமா எழுதுறவங்களை பார்த்தாலே எனக்கு அவெர்சன். 
ஜிப்பா, தாடி, ஜோல்னாபை ஸ்டேடஸுக்கு எப்போ மாறுவீங்க?

இப்படி எத்தனை கேள்விகள் வந்தாலும், எதையும் பொருட்படுத்தியதே இல்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். நான் ஒன்றும் உலக எழுத்தை எழுதிவிடப்போவதில்லை தான்.  ஒளிவட்டம் கூடும், சிலபல லைக்ஸ், கமெண்ட்ஸ் வரும், ஓவர்நைட் பிரபலம் ஆகிடுவோம் என்ற நப்பாசைகள் எல்லாம் கூட இல்லை. ஆனாலும் என்ன எழுதினாலும், அது அசட்டு நகைச்சுவையோ அல்லது சுயசொறிதலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானதை, உண்மையானதை மட்டும் தான் எழுத வேண்டும். அதை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், எனக்கான இலக்கு தூரத்தில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி தினம் ஒரு அடி எடுத்து வைக்கிறேன் என்ற நம்பிக்கையுடனேயே எழுதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கில் மிகப்பெரிய இளைப்பாறுதல் கிடைக்கிறது. கடிவாளம் கட்டிவிட்டு ஓடும் குதிரை போன்ற வாழ்க்கை முறையில், “எதையாவது” எழுதுவது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. அவ்வளவுதான்.

இணைப்பில் உள்ளது, அதிசயமாக நான் முழுவதும் ஏற்கும் ஒரு கட்டுரை. இவர் சொல்லி இருக்கும் கருத்தை தான் நானும் நம்புகிறேன், என்னால் ஆனதை எழுதுக் கொண்டிருக்கிறேன்
http://www.jeyamohan.in/?p=338

விடுதலை

சோதனைக்குழாய் சரிந்து
மேஜை நடுவில் 
சமுத்திரமாய் விரிகிறது
ஒற்றை பாதரசம்

அள்ளியெடுக்கும்
வடிகுழலுக்கு அடங்காமல்
உடைகிறது சமுத்திரம்

ஒவ்வொரு துளியும்
தனித்தனி வாழ்க்கை...
தனித்தனி உலகம்...
தனித்தனி சமுத்திரம்...


Friday, October 18, 2013

எங்கே செல்கிறோம்?

அமெரிக்காவில், கல்லூரி மாணவர் வகுப்பறைக்குள் புகுந்து சராமாரியாக சுட்டதில் இத்தனை பேர் பலி என்பது போன்ற செய்திகளை தொலைக்காட்சியில் காட்டும் போது, ஒரு நிமிடம் அதிர்ந்து பின் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு, அளவுக்கு மீறிய எக்ஸ்போசர், மது மற்றும் போதைப் பொருட்களின் பாதிப்பினால் ஏற்படும் மனப்பிறழ்வினால் தான் மேலை நாடுகளில் இத்தகைய கொடுஞ்செயல்கள்  சாதாரணமாகி விட்டன, நமது கல்வி முறையும், குழந்தைகள் வளர்ப்பு முறையும் அவ்வளவு மோசமில்லை என்று சிறு சமாதானங்கள் தோன்றி மனதை அமைதிப்படுத்தும். ஆனால் சமீபமாக கேளவிப்படும் நமது ஊர் செய்திகள் மனதை பதைபதைக்கச் செய்வதுடன், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற நீங்கா அச்சத்தையும் தருகின்றது.

சென்றவாரம் நடந்த ஒரு படுகொலை. கல்லூரியில் தவறு செய்ததற்காக தண்டனை கொடுத்ததால், கல்லூரி முதல்வரை அவரது அலுவலக அறைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இது நடந்தது ஒரு “பொறியியல்” கல்லூரியில், கொலை செய்தவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது. மாணவப்பருவத்தில் இருக்கும் ஒருவனுக்கு எப்படி இப்படி ஒரு நினைப்பும் துணிச்சலும் வருகிறது என்றே புரியவில்லை. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று அவன் யூகித்திருப்பானா, இல்லை எதற்கும் துணிந்து தனது பேராசிரியரை கொலை செய்யும் அளவிற்கு அதுவும் துடிக்கத்துடிக்க வெட்டிக் கொள்ளும் அளவிற்கு அவனது மனநிலை மிருகத்தனமாக மாறியிருந்ததா.. என்ன பதில் அவனிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.

பெருத்துப் போயிருக்கும் இன்றைய பொறியியல் கல்லூரி சந்தையில் ஒரு வழக்கமிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை சுயநிதிக் கல்லூரியின் காலி இடங்களை நிரப்ப ”ஆள் பிடிப்பது”. எந்த அடிப்படை தகுதியும் ஆர்வமும் இல்லாமல் இருந்தால் கூட ஒருவன் சில இலட்சங்கள் செலவில் ஏன் சில ஆயிரங்களில் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விடலாம். அதற்கென ஏஜண்டுகள், கமிஷன் என்று பெரிய வலையமைப்பே செய்ல்படுகிறது. ஏகப்பட்ட கல்லூரியில் ஒரு மாணவன் கூட சேராத துறைகள் இன்று இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் காளான்களைப் போல் முளைவிட்டிருக்கும் காலகட்டத்தில், குறிப்பிட்ட கல்லூரியில் தகுந்த மாணவர்களும் கிடைக்காத வேளையில், நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவனும் நான்கு வருடங்களுக்கு படியளக்கும் கடவுள். திறமையும் ஆர்வமும் இன்றி வகுப்பில் வந்து உட்காரும் ஒருவனுக்கு கொஞ்சம் விஷமத்தனமும், ஏற்றிவிட அவனைப் போன்ற சக மாணவர்களும், இளமைத்திமிரும் கூட்டு சேரும் போது முதல் வேலையாக பாடமெடுக்க வரும் விரிவுரையாளரை கிண்டல் செய்வான். அவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தால்,  அவனை ஒழுக்க நெறிமுறைகளின் கீழ் கொண்டு வர முற்பட்டு அவனுக்குக் கடுமையான தண்டனைகள் விதித்தாலோ அல்லது அவனை கல்லூரியிலிரிந்து நீக்கினாலோ, அவனிடமிருந்து அடுத்த ஆண்டுகளில் வரும் வருமானம் நின்று போகும். இதனை நிர்வாகம் எப்ப்டி ஏற்கும். எனவே புகார் கொடுக்க வந்த ஆசிரியரையே கடிந்து, அவர் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்தால் மாணவன் ஏன் கவனச்சிதறல் அடைகிறான். எனவே அவர் தான் பொறுப்புடன் பாடம் நடத்த வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டுச் செல்லலாம் என அறிவுரைகள் கிடைக்கும். பிற்கெப்படி அந்த ஆசிரியரால் மாணவர்களைக் கண்டிக்க முடியும். படிக்க வருபவனுக்கு ஒன்று படித்து பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். நான்கு வருடம் இஷ்டம் போல்  பொழுது போக்கிக் கொள்ளலாம் என்று வருபவனை எந்த ஆசிரியர் தான் திருத்த முடியும். அதற்கும் மீறி சில கல்லூரிகள் தவறு செய்யும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை - சில ஆயிரம் ரூபாய் அபராதம். அது அவனுக்கு இன்னும் வசதி. பணத்தை கட்டி விட்டு முகத்தில் காறி உமிழாத குறையாக ஆசிரியர்களை ஏளனப்பார்வை பார்க்கத்தான் செய்வான். அதனையும் மீறி கண்டிக்கும் ஆசிரியர்களை வெட்டிகொலை செய்யும் அளவு குரூர புத்தி வளர்கிறது.

இது ஏதோ விதிவிலக்கான ஒரு சம்பவமாக தோன்றவில்லை. சில மாதங்கள் முன்பு, இதே போன்று பள்ளி மாணவன் ஒருவன் தன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவமும் நிகழந்துள்ளது. அதே போன்று, சமீப காலங்களில் பெருநகர வழிப்பறிகளிலும், திருட்டு, கொலை கொள்ளை சம்பவங்களிலும் பெரும்பாலும் பதின்ம வயது கல்லூரி, பள்ளி மாணவர்களே ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கன்றன. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு ”ஒழுக்கவியல்” வகுப்புகள் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் அவர்களை நல்வழிப்படுத்த உதவுகின்றன என்று தான் தெரியவில்லை. வீடு தொடங்கி, சமுதாயம், அரசியல், ஊடகம், திரைப்படம், இணையம், விளையாட்டு என தன்னைச் சுற்றிய அனைத்து சாளரங்களும் நன்னடத்தை, சமூக ஒழுக்கம், சுயமரியாதை இப்படி அனைத்தையும் எள்ளி நகையாடுகையில்  பாடங்கள் ஏட்டுச்சுரைக்காயாகத் தானே பார்க்கப்படும்.

சரி, இனி கொலை செய்த மாணவனின் எதிர்காலம் என்னாகும்? ஒன்றும் பயப்படத்தேவையில்லை. அது அவனது பணபலத்தையும், அவனுக்காக வாதாடப்போகிற வழக்கறிஞரின் வாய்பலத்தையும் பொறுத்தது. யார் கண்டது, பிற்காலத்தில் அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவும் செய்யலாம். அதற்கு என்ன முன்னுதாரணங்களா இல்லை. சமூக விழுமியங்கள் செத்துக்கொண்டிருக்கும் காலத்தில் ஆசிரியராவது, மாணவனாவது, மண்ணாங்கட்டியாவது?

-----------

Monday, October 14, 2013

விழியனின் சிறுவர் உலகம்

விழியனின் சிறுவர் உலகம்

வி. பாலகுமார்
Vizhiyan1
வீடியோ கேம்ஸோடும், கார்ட்டூன் சேனல்களோடும் ஒன்றிப் போயிருக்கும் இன்றைய குழந்தைகளை புத்தகங்களின் பக்கம் இழுப்பது ஒரு பெரிய சவாலான வேலை. அதுவும் புத்தகம் என்று நினைக்கும் போதே மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் என்று மனரீதியாக சோர்ந்து விடும் குழந்தைகள் பலர். அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்காக, உற்சாகம் தரும் விளையாட்டாக “சிறுவர் புத்தகங்களை” அறிமுகம் செய்வது பெற்றோரின் கடமை. சிறுவர் கதை புத்தகங்கள் இன்றைய குழந்தைகளின் இயந்திரமயமான நடைமுறைகளுக்கிடையில் ஒரு கற்பனை உலகை வடிக்க வல்லவை. அவை குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், கற்பனைவளத்தையும், ஆக்கத்திறனையும் தரக்கூடியவை.
ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பான்மையான சிறுவர் புத்தகங்கள் நீதி சொல்லக்கூடியவை தாம். சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான். காரணம், அந்தப் பாத்திரங்களின் சுட்டித்தனங்களை, சாகசங்களை, விளையாட்டுக்களை தானே நிகழ்த்துவதாக நம்புகிறான். எனவே அந்த தொடர்களுடன் ஒன்றிப் போகிறான். அதுபோலவே சிறுவர் கதை புத்தகங்களை வாசிக்கும் ஒரு சிறுவர் சிறுமியர் அதிலுள்ள பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து உற்சாகம் அடையும் வண்ணம் இருந்தால் அத்தகைய புத்தகங்கள் நிச்சயம் அவர்களை ஈர்க்கும்.
vizhiyan2
இணையம் மூலம் அறிமுகமான நண்பர் உமாநாத், விழியன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது புதிய புத்தகமான “மாகடிகாரம்” சமீபத்தில் வெளிவந்துள்ளது. உலக சுழற்சிக்கு முதுகெலும்பாய் விளங்கும் ஒரு பெரிய கடிகாரத்தைப் பற்றிய கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான “மாகடிகாரம்” மூலமாகவே இந்த உலக இயக்கம் நடைபெறுகிறது. அதனை சாவி கொடுத்து தொடர்ந்து இயக்கவைக்கும் பணிக்காக “தீமன்” என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். மலைப்பிரதேசத்துள் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த கடிகாரம், அதனைக் காவல் காக்கும் வீரர்கள், கடிகாரத்தை தொடர்ந்து இயக்க வைப்பதற்கான சாவியை எடுக்கப் போகும் வழிமுறைகள் என்று கதை முழுவதும் தீமனின் பயண அனுபவம் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் சிறுவன் தீமனின் புத்தி கூர்மை மற்றும் துணிச்சலினால் ஒரு மிகப்பெரிய உண்மையும் வெளிப்பட இனிதாய் முடிகிறது கதை. புத்தகத்தின் கடைசியில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சாதனங்கள் பற்றிய அறிவியல் குறிப்பும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
அது போலவே விழியனின் இன்னொரு புத்த்கமான “பென்சில்களின் அட்டகாசம்” சுவாரஸ்யமான கதை. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பென்சில்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா செலவது தான் கதை. அவை எவ்வாறு ஒன்று கூடி திட்டம் போட்டு, ரகசியமாக குழந்தைகளின் டப்பாக்களில் இருந்து வெளிவந்து, எல்.கே.ஜி அறையில் இருக்கும் பொம்மை பஸ்ஸை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு குட்டி அருவிக்கு சுற்றுலா செல்கின்றன என இயல்பான நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். அதிலும் பென்சில்களைத் துரத்தி வரும் எதிரிகளான ஷார்ப்னர்களிடமிருந்து அவை எப்படி தப்பிக்கின்றன, பிறகு எப்படி அவை குழந்தைகளிடம் மீண்டும் சேர்ந்தன என்பதெல்லாம் செம இண்ட்ரஸ்டிங். தொலைந்த போன பொருட்கள் எல்லாம் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் “கறுப்புப் பெட்டி” என்றால் பென்சில்களுக்கு மிகவும் பயம். அந்தப் பெட்டிக்குள் சென்று விட்டால் திரும்பி வருவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். சுற்றுலா சென்று திரும்பி வரும் பென்சில்கள் அந்த பெட்டிக்குள் அகப்படுவதிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கின்றன என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.
vizhiyan3
“டாலும் ழீயும்” என்னும் விழியனின் மற்றுமொரு புத்தகம் கடல் நண்பர்களான டால் என்ற டால்பினும், ழீ என்ற தங்கமீனும் கடலுக்கு அடியில் கோட்டை கட்டும் சுவையான கதை. “அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை” நிலவில் சிறுவர்கள் நடத்தும் சாகசங்கள் பற்றிய கற்பனைக்கதை. விழியனின் கதைகள் அனைத்தும் சிறுவர் உலகத்துக்குள் சென்று அவர்கள் மொழியில் பேசி, அவர்களுடன் விளையாடி, அவர்களுடன் ஒன்றுபட்ட அலைவரிசையில் பயணிக்கும் உணர்வினை தரவல்லவை.
vizhiyan4
“ஃபேஸ்புக்கில்” அவர் அவ்வப்பொழுது பகிர்ந்து கொள்ளும் அவரது வாழ்க்கை அனுபவங்கள் பெரும்பாலும் குழந்தைகளை மையப்படுத்தியதாகவும், அவரது மகள் “குழலி”யுடனான சுவாரஸ்ய கதையாடல்களாகவும் இருக்கின்றன. மென்பொருள் துறையில் பணியாற்றும் விழியன் பயணம் செய்வதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுடையவர். விழியனின் புத்தகங்களை பாரதி புத்தக நிலையம் “BOOKS FOR CHILDREN” என்ற தொகுப்பின் கீழ் மிகக்குறைந்த விலையில் (ரூ 20 அளவில்) தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அடுத்த முறை உங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கும் பொழுது, நூலாசிரியர் “விழியன்” என்று இருந்தால் கண்களை மூடிக்கொண்டு அவற்றை வாங்கலாம், அவற்றை வாசிக்கையில் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்குமே ஒரு மகிழ்வான, நேர்மறை சிந்தனை தோற்றுவிக்கும், ஆரோக்கியமான பொழுதுபோக்கம் அம்சமுடைய ஒரு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
----
நன்றி: சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=29015