அமெரிக்காவில், கல்லூரி மாணவர் வகுப்பறைக்குள் புகுந்து சராமாரியாக சுட்டதில் இத்தனை பேர் பலி என்பது போன்ற செய்திகளை தொலைக்காட்சியில் காட்டும் போது, ஒரு நிமிடம் அதிர்ந்து பின் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு, அளவுக்கு மீறிய எக்ஸ்போசர், மது மற்றும் போதைப் பொருட்களின் பாதிப்பினால் ஏற்படும் மனப்பிறழ்வினால் தான் மேலை நாடுகளில் இத்தகைய கொடுஞ்செயல்கள் சாதாரணமாகி விட்டன, நமது கல்வி முறையும், குழந்தைகள் வளர்ப்பு முறையும் அவ்வளவு மோசமில்லை என்று சிறு சமாதானங்கள் தோன்றி மனதை அமைதிப்படுத்தும். ஆனால் சமீபமாக கேளவிப்படும் நமது ஊர் செய்திகள் மனதை பதைபதைக்கச் செய்வதுடன், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற நீங்கா அச்சத்தையும் தருகின்றது.
சென்றவாரம் நடந்த ஒரு படுகொலை. கல்லூரியில் தவறு செய்ததற்காக தண்டனை கொடுத்ததால், கல்லூரி முதல்வரை அவரது அலுவலக அறைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இது நடந்தது ஒரு “பொறியியல்” கல்லூரியில், கொலை செய்தவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது. மாணவப்பருவத்தில் இருக்கும் ஒருவனுக்கு எப்படி இப்படி ஒரு நினைப்பும் துணிச்சலும் வருகிறது என்றே புரியவில்லை. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று அவன் யூகித்திருப்பானா, இல்லை எதற்கும் துணிந்து தனது பேராசிரியரை கொலை செய்யும் அளவிற்கு அதுவும் துடிக்கத்துடிக்க வெட்டிக் கொள்ளும் அளவிற்கு அவனது மனநிலை மிருகத்தனமாக மாறியிருந்ததா.. என்ன பதில் அவனிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.
பெருத்துப் போயிருக்கும் இன்றைய பொறியியல் கல்லூரி சந்தையில் ஒரு வழக்கமிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை சுயநிதிக் கல்லூரியின் காலி இடங்களை நிரப்ப ”ஆள் பிடிப்பது”. எந்த அடிப்படை தகுதியும் ஆர்வமும் இல்லாமல் இருந்தால் கூட ஒருவன் சில இலட்சங்கள் செலவில் ஏன் சில ஆயிரங்களில் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விடலாம். அதற்கென ஏஜண்டுகள், கமிஷன் என்று பெரிய வலையமைப்பே செய்ல்படுகிறது. ஏகப்பட்ட கல்லூரியில் ஒரு மாணவன் கூட சேராத துறைகள் இன்று இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் காளான்களைப் போல் முளைவிட்டிருக்கும் காலகட்டத்தில், குறிப்பிட்ட கல்லூரியில் தகுந்த மாணவர்களும் கிடைக்காத வேளையில், நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவனும் நான்கு வருடங்களுக்கு படியளக்கும் கடவுள். திறமையும் ஆர்வமும் இன்றி வகுப்பில் வந்து உட்காரும் ஒருவனுக்கு கொஞ்சம் விஷமத்தனமும், ஏற்றிவிட அவனைப் போன்ற சக மாணவர்களும், இளமைத்திமிரும் கூட்டு சேரும் போது முதல் வேலையாக பாடமெடுக்க வரும் விரிவுரையாளரை கிண்டல் செய்வான். அவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தால், அவனை ஒழுக்க நெறிமுறைகளின் கீழ் கொண்டு வர முற்பட்டு அவனுக்குக் கடுமையான தண்டனைகள் விதித்தாலோ அல்லது அவனை கல்லூரியிலிரிந்து நீக்கினாலோ, அவனிடமிருந்து அடுத்த ஆண்டுகளில் வரும் வருமானம் நின்று போகும். இதனை நிர்வாகம் எப்ப்டி ஏற்கும். எனவே புகார் கொடுக்க வந்த ஆசிரியரையே கடிந்து, அவர் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்தால் மாணவன் ஏன் கவனச்சிதறல் அடைகிறான். எனவே அவர் தான் பொறுப்புடன் பாடம் நடத்த வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டுச் செல்லலாம் என அறிவுரைகள் கிடைக்கும். பிற்கெப்படி அந்த ஆசிரியரால் மாணவர்களைக் கண்டிக்க முடியும். படிக்க வருபவனுக்கு ஒன்று படித்து பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். நான்கு வருடம் இஷ்டம் போல் பொழுது போக்கிக் கொள்ளலாம் என்று வருபவனை எந்த ஆசிரியர் தான் திருத்த முடியும். அதற்கும் மீறி சில கல்லூரிகள் தவறு செய்யும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை - சில ஆயிரம் ரூபாய் அபராதம். அது அவனுக்கு இன்னும் வசதி. பணத்தை கட்டி விட்டு முகத்தில் காறி உமிழாத குறையாக ஆசிரியர்களை ஏளனப்பார்வை பார்க்கத்தான் செய்வான். அதனையும் மீறி கண்டிக்கும் ஆசிரியர்களை வெட்டிகொலை செய்யும் அளவு குரூர புத்தி வளர்கிறது.
இது ஏதோ விதிவிலக்கான ஒரு சம்பவமாக தோன்றவில்லை. சில மாதங்கள் முன்பு, இதே போன்று பள்ளி மாணவன் ஒருவன் தன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவமும் நிகழந்துள்ளது. அதே போன்று, சமீப காலங்களில் பெருநகர வழிப்பறிகளிலும், திருட்டு, கொலை கொள்ளை சம்பவங்களிலும் பெரும்பாலும் பதின்ம வயது கல்லூரி, பள்ளி மாணவர்களே ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கன்றன. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு ”ஒழுக்கவியல்” வகுப்புகள் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் அவர்களை நல்வழிப்படுத்த உதவுகின்றன என்று தான் தெரியவில்லை. வீடு தொடங்கி, சமுதாயம், அரசியல், ஊடகம், திரைப்படம், இணையம், விளையாட்டு என தன்னைச் சுற்றிய அனைத்து சாளரங்களும் நன்னடத்தை, சமூக ஒழுக்கம், சுயமரியாதை இப்படி அனைத்தையும் எள்ளி நகையாடுகையில் பாடங்கள் ஏட்டுச்சுரைக்காயாகத் தானே பார்க்கப்படும்.
சரி, இனி கொலை செய்த மாணவனின் எதிர்காலம் என்னாகும்? ஒன்றும் பயப்படத்தேவையில்லை. அது அவனது பணபலத்தையும், அவனுக்காக வாதாடப்போகிற வழக்கறிஞரின் வாய்பலத்தையும் பொறுத்தது. யார் கண்டது, பிற்காலத்தில் அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவும் செய்யலாம். அதற்கு என்ன முன்னுதாரணங்களா இல்லை. சமூக விழுமியங்கள் செத்துக்கொண்டிருக்கும் காலத்தில் ஆசிரியராவது, மாணவனாவது, மண்ணாங்கட்டியாவது?
-----------
//அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவும் செய்யலாம். அதற்கு என்ன முன்னுதாரணங்களா இல்லை.//
ReplyDeleteஅம்மாடி!
""இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது." ???
ReplyDelete"இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது. "??
ReplyDeleteதோழர் பாலா! மிகப் பெரிய உளவியல் பகுதியை தொட்டிருக்கிறீர்கள் . இந்த சமூகப் பிரச்சனைகளில் சரியான வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் நாம் போகவேண்டிய தூரம் மிகத் தொலைவில் உள்ளது.
ReplyDeleteசரி! இத்தகையச் சிக்கலுக்கு யார் காரணம்?
இரண்டாம் வகுப்பில் எனக்கு எழுத பழக்கப் படுத்திய திரு. செல்வராஜ் அவர்களையும், நான்காம் வகுப்பில் வரலாறு சொல்லிக்கொடுத்த திரு.முத்துசாமி அவர்களையும், 6 ஆம் வகுப்பில் பொறுப்பினை சொல்லிகொடுத்த திரு வேலுச்சாமி அவர்களையும் , 9 ஆம் வகுப்பாசிரியர் திரு கணபதி அவர்களையும் , 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் திரு.பத்ராசலம், கிருஷ்ணன், முத்துக்குரும்பன் , சுப்பையா மற்றும் எனது அரசினர் உயர்நிலைப் பள்ளி தலை ஆசிரியர் உழைப்பின் சிகரம் C.V.S. ஆசீர்வாதம் அவர்களையும் நான் இன்றும் வணங்குகிறேன்!. 70 மற்றும் 80 களில் தரமான ஆசிரியர்கள் இருந்தார்கள். எனக்கு சிறப்பான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். பணம் அவர்களுக்கு தூசு. அப்போது மாணவர்களின் ஒழுக்கமும், கல்வியுமே பிரதானமாக இருந்தது.
ஆனால் இன்று!
பள்ளி , கல்லூரி, மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிலும் , வட்டம் மற்றும் மாவட்டங்களிலும் சாதீயம் சொல்லிக் கொடுக்கப்ப் படுகிறது. மாணவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்று தான் பெற்றோரும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆளும் அரசு, அவர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் மட்டும் தான் வளர்ச்சித் திட்டங்களை செய்வார்கள். நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தர வேண்டிய பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் எப்படி சீரழிவது என்பதை செய்முறை விளக்கங்களோடு வெளியிடுவார்கள். தொலைகாட்சி கதைகள், எப்படி மற்றவர்களை ஏமாற்றுவது என்பதயும் , முறையற்ற பாலியல் நடைமுறைகளையும் தெளிவாக விளக்குவார்கள். இதையெல்லாம் பார்க்கும் மாணவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும். அப்படித்தானே பாலா?
அவர்களை நல்லவர்களாக மாற்றுவது/வளர்ப்பது யார் கையில் உள்ளது. அரசு , பெற்றோர் , ஆசிரியர் மற்றும் இந்த சமூகத்தின் கையில் உள்ளது. அப்படியா நம் சமூகம் இப்போது உள்ளது. இல்லையே! நாம் கலாசாரம் செழுமையடையாத பழைய கற்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு மோசமாகத்தான் இருக்கும்.
தேவை, நேர்பாதை மற்றும் நேர்மறை எண்ணங்களே! அனைவரிடத்திலும்.
(இதை உங்கள் வலைப்பூவில் வெளிடாவிட்டால் நான் வருந்தப் போவதில்லை)