Tuesday, June 26, 2012

உக்கிரம் தணியும் வனப்பேச்சி !


பிராகாரம் சுற்றி
அங்கப்பிரதட்சணம் செய்து
வயிற்றில் மாவிளக்கேற்றி
பிள்ளைவரம் கேட்கும் தம்பதிக்கெல்லாம் 
தவறாமல் அருள் பாலிக்கும்
அங்கயற்கண்ணியாக
ஆண்டு முழுதும் இருப்பவள்...
பெண்கள், குழந்தைகளுக்கு
அனுமதியில்லாத
மாசி களரியின்
அமாவாசை நடுநிசியில்
பிரசவிக்காத ஆட்டுக்குட்டியை
பனிக்குடம் கிழித்தெடுத்து
தொட்டிலில் போட்டு 
தாலாட்டும் சத்தம் கேட்டு
உக்கிரம் தணியும் வனப்பேச்சியாகிறாள்.

அத்துவானக் காட்டில்
ஆடு மேய்க்கும்
நிறைவயிற்றுக்காரி
தண்டட்டிக்கான வழிப்பறியில்
கழுத்தறுபட்டு இரத்தம் கொட்ட,மூர்ச்சையடையுமுன்
தன் வயிறு கிழித்து
பிள்ளையை வெளியேற்றி
வாயால் கடித்து 
தொப்புள்கொடியறுக்கையில்
பிள்ளையின் அழுகைச் சத்தம்
கேட்குமுன்னே செத்த கதை
யாருக்கும் தெரியாது.


--- வி.பாலகுமார்

---நன்றி உயிரோசை இணைய இதழ்

Monday, June 25, 2012

ஆண்ட்ராய்டு - ஓர் எளிய அறிமுகம்இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இணையத்தின் தேவை இன்றியமையாதது. டயல்-அப் இணைப்பில் இருந்து பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி மூலம் இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்று இணைய வேகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கணினியையும், அலைபேசியையும் இணைத்த புதிய தொழில்நுட்பம் இன்று சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ”வில்லைக் கணினி”(tablet pc) என்று சொல்லக்கூடிய இந்த கையகல கணினியில் அலைபேசிக்கான வசதிகள் மட்டுமின்றி சிறிய அளவில் ஒரு கணினி செயல்படுவதற்கான தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது.

தற்பொழுது பரவலாகிக் கொண்டிருக்கும்  மூன்றாம் தலைமுறை (3ஜி)  அலைபேசி இணைப்பு மூலம் அதிவேக இணைய வசதி (சராசரி 2 Mbps) கிடைத்தாலும், அதை அலைபேசி மூலமாக இயக்குவது சற்று சிரமமான ஒன்று தான். ஏனெனில் தற்பொழுதுள்ள அலைபேசிகளில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டவை, அவற்றில் இணையத்தில் உலாவுவதற்கான வசதிகள் சிறிதளவே உள்ளன. எனவே பெருகி வரும் இணைய பயனீட்டாளர்களின் தேவையைக் கருதி, தற்பொழுது புதிதாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கும் இந்த வில்லைக் கணினிகள் பேசும் வசதி மற்றுமின்றி டேட்டா பறிமாற்றத்திற்கும் இலகுவானதாய் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒரு கணினியின் சீரிய செயல்பாட்டிற்கு அதில் நிறுவியிருக்கும் இயக்குதளம் (operating system) முக்கிய பங்கு வகிக்கிறது. அது போலவே இந்த  வில்லைக் கணினி இயங்குவதற்கும் இதில் நிறுவப்பட்டிருக்கும் இயக்குதளம் இன்றியமையாதது. இந்த இயக்குதளம் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்குத் தேவையான நிரல்களை இயக்குவதற்கு தோதானதாகவும் இருத்தல் அவசியம். நாம் இப்பொழுது சாதாரண அலைபேசியில் கூட அலாரம், கேல்குலேட்டர், பன்பலை வானொலி என ஏகப்பட்ட வசதிகளை உபயோக்கிறோம். இவையனைத்தும் இணையம் சாராத பயன்பாடுகள் (applications). ஆனால் இதே அடிப்படையில் வில்லைக் கணினி மூலமாக இணையம் சார்ந்தும், சாராமலும் இன்று இலட்சக்கணக்கான பயன்பாடுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று நவீன வடிவமைப்பில் வெளிவரும் வில்லைக் கணினியை பார்த்தவுடன் நாம் முதலில் கேட்கும் கேள்வி, “இது ஆண்ட்ராய்டு ஃபோனா?” என்பது தான். ஆண்ட்ராய்டு என்பது புதியரக அலைபேசி, ஸ்மார்ட்ஃபோன் மற்றும் வில்லைக் கணினியை இயக்கப் பயன்படும் ஒரு இயக்குதளம் தான். இது, கூகுள் மற்றும் சில நிறுவனங்களின் கூட்டமைப்பான ”ஓபன் ஃஹேண்ட்செட் அலையன்ஸ்” (open handset alliance) மூலம் வெளிவரும் ஒரு இலவச மென்பொருள் (open source). இது லினக்ஸ் (linux) இயக்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் வெற்றியின் இரகசியம் என்னவென்றால், ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தம் என்றில்லாமல் பலதரப்பட்ட அலைபேசி நிறுவனங்களும் இந்த இயக்குதளத்தை தங்கள் அலைபேசியில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதே போல ஆண்ட்ராய்டு நிறுவப்பட்டுள்ள ஒரு அலைபேசியிலோ, வில்லைக் கணினியிலோ எந்தவிதமான ஒரு மூன்றாம் நபர் (third party) வடிவமைத்த பயன்பாட்டினையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஷேர் மார்க்கெட் குறித்த ஒரு பயன்பாடு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள், ஆனால் அது உங்கள் அலைபேசியில் இல்லை. இப்பொழுது உங்கள் அலைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்குதளம் இருந்தால், இணையத்திலிருந்து ஷேர் மார்க்கெட் தொடர்பான தகுந்த பயன்பாட்டை (apps) தரவிறக்கம்  செய்து அதை உங்கள் அலைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். இப்படி, உலகம் முழுவதுமாக இலட்சக்கணக்கான பயன்பாடுகள் இணையம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. அந்த பயன்பாடுகள் இலவசமாகவோ இல்லை குறிப்பிட்ட விலையிலோ இருக்கலாம்.

நிற்க நேரமின்றி ஓடுகின்ற வாழ்க்கை முறை பரவலாகிக் கொண்டிருக்கும் சமூகத்தில், உலகத்து நிகழ்வுகள் அனைத்தையும் தரவுகளாக்கி விரல் நுனியில் தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தின் தேவை இன்றியமையாததாகிறது. மக்களின் தேவைக்குத் தீனி போட புதிய புதிய நுட்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய உலகில் அலைபேசியின் வருகை மூலமும், அதன் மூலம் இணையத்தை எளிதாக இயக்கும் வசதியும் அதற்கொரு சிறப்பான மற்றும் எளிய கருவியாக உருவாகி இருக்கும் ஆண்ட்ராய்டு இயக்குதளத்தின் வளர்ச்சியும் பயன்பாடும் பிரமிக்க வைக்கிறது.  

******

Wednesday, June 6, 2012

உலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை!

அப்போதைக்கப்போது தோன்றும் கோட்டிக்கார சிந்தனைகளை குறிப்புகளாக்கி "தகவல்பிழை” என்று வால் ஒட்டி கூகிள் பிளசில் பதிந்து வருகிறேன். அவற்றுள் சில இங்கேயும்...
******************************************

வயிற்றில் பரிபூரணமடைந்து நெஞ்சை மறைத்து கழுத்திலும் வளர ஆரம்பிக்கும் போது தான், தொப்பை பற்றிய கவலை மறைந்து நாம் ’அங்கிள்’ ஆகிக்கொண்டிருக்கிறோம் என்ற நிதர்சனம் உறைக்கிறது

#டூலேட்
******************************************

அவனுக விலைய ஏத்துறது கூட கடுப்பாகல, இவனுக அதுக்குள்ள பங்க் ல க்யூ கட்டி நிக்கிறது தான் செம காண்டாகுது. மிஸ்டர் பொதுஜனம், உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல !!!

#பெட்ரோல்விலையேற்றம்
******************************************

வண்ணதாசன் கதைகளை வாசிக்கும் போது, இயக்குநர் (ராபர்ட்) ராஜசேகரின் குரல் தான் கேட்கிறது, கல்யாண்ஜிக்கு இந்த பிரச்சனை இல்லை.
******************************************

உலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை எல்லாத்தயும் கரைச்சு குடிக்கிறோம். சூர்யாவை மீட் பண்றோம். அசால்டா பதினஞ்சு கேள்விக்கு பதில் சொல்றோம். ஒரு கோடியை அள்ளுறோம்.

ஒரு கோடியை வச்சு என்னன்ணே செய்றோம்?

கேக்குறாம் பாரு கேள்வி. நம்ம பேரு சரித்திரத்துல நிக்கனும்டா. ஒரு வட்டம் ஆரம்பிக்கிறோம். இப்ப எழுதிட்டு இருக்க எல்லா பயலுகளுக்கும் நம்ம பேரப் போட்டு ஆளுக்கொரு விருது கொடுக்குறோம், விழா எடுக்குறோம், போட்டோ பிடிக்கிறோம். நம்மள பாராட்ட நாலு பேரு, ரொம்பக் கேவலமா திட்ட நாலு பேரு செட் பண்றோம். லைம்லடலயே நனையுறோம். மொத்தத்துல உலக் இலக்கியத்தை வளக்குறோம்டா !!!

#அப்ரண்டீஸ் ஆசைகள்

#ரிகர்ஸிவ்புனைவு 
******************************************

"பார்க்கிங் லேனில்” வண்டிகளை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தும் நம் மக்கள், ”நோ பார்க்கிங்கில்” மட்டும் கர்மசிரத்தையாக வரிசையில் நிறுத்துகின்றனர்.
******************************************

ஓசி பாஸில் படம் பார்ப்பவர்கள் தாம், திருட்டு டிவிடிக்கு எதிராய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
******************************************

பல குறுநில மன்னர்களைக் கொண்ட ராஜாங்கத்துக்கு ஆபத்து வந்து திகார் செல்ல நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ள சிற்றரசர்கள் இருக்கிறார்கள். அடிமைகளை வைத்திருக்கும் பிரைவேட் கம்பெனி ஓனர்கள் பாவம், பெங்களூருக்குக் கூட தாமே தான் செல்ல வேண்டியிருக்கிறது !

#பகுத்துண்டு வாழுங்கள்!
******************************************

ஆடாத ஆட்டம் ஆடுபவர்களை எல்லாம், ஒரே ஒரு நாள் முழுதும் அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் ”சும்மா” உட்கார வைத்தாலே போதும். சர்வமும் அடங்கி விடும்

#அரசாங்க ”இளம்”மருத்துவர்கள் தெய்வங்கள்
******************************************

மாற்றுப் பெயரில் புனைவு எழுதுவதெல்லாம் சரி தான். ஆனால் அதை பிரபலப்படுத்த சொந்த பெயரில் விளம்பரம் செய்யும் போது தான் கொண்டை தெரிந்து விடுகிறது.

# “இவன் தான் மாப்ள, எங்கயோ செமத்தியா வாங்கி இருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விட்றான்” :)
******************************************

போட்டி முன்னாடியே, என்ன முடிவு பெட்டிங்ல இருக்குன்னு நமக்கும் சொல்லிட்டா நாமும் சேர்ந்து கிரிக்கெட்டை என்ஜாய் பண்ணலாம். 

#overacting boys:(

#IPL
******************************************

ஆன்லைன்ல புக் பண்ணா தான் கேஸ் சிலிண்டர் சீக்கிரம் கிடைக்குதாம் என்றதற்கு "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் மட்டும் வாழ்ந்தா போதும், மத்தவனெல்லாம் உத்தரத்துல தொங்கிட்டு போய்ச் சேரவேண்டியது தான்" என்கிறார் ஒரு நண்பர்.

:( என்னசொல்ல?
******************************************

பிரபலங்களுக்கழகு சாமானியர்களுடன் சேராதிருத்தல் !

# பேசிட்டு இருக்கும் போதே திடுதிப்புன்னு டவுசரை அவுத்து விட்டுருதுக பயபுள்ளய்க
******************************************

இணைய பிரபலங்கள் பிராய்லர் கோழி போல... செழிப்பாக இருக்கிறார்கள், ஆரோக்யமாக அல்ல!
******************************************

அப்பாவின் பேண்ட்டை ஆல்டர் செய்து அணிய நினைக்கும் அண்ணன் தம்பிகளுக்கு கடைசியில் அண்டர்வேர் தான் மிஞ்சுகிறது 

#நோ அரசியல், ஒன்லி ஃபைவ் ஸ்டார்
******************************************

இந்த இணைய அப்ரசண்டீஸ் ”அதிமுக” நடுநிலையாளர்கள் செய்கின்ற அறிவுப்பூர்வமான விவாதங்களை எல்லாம் பார்க்கும் எனக்கு ஒரே ஒரு பயம் தான்... “இவனுக நம்ம திமுக காரன் ஆக்காம விட மாட்டனுக் போலயே!”
******************************************

அலுவலகத்தில் ஒரு கதையை சொல்லி லன்ச் டைமோட சேர்த்து ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டுட்டு, மெதுவாக மதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் ஒரு 40 கி.மி தூரம் பைக்கில் ஜாலியா ஒரு ரைடு போய்ட்டு வந்து, அகமும் புறமும் குளிரக்குளிர ஈரக்கையோட டைப்பிங்.

#மாமழை போற்றுதும் !!!
******************************************