Tuesday, June 26, 2012

உக்கிரம் தணியும் வனப்பேச்சி !


பிராகாரம் சுற்றி
அங்கப்பிரதட்சணம் செய்து
வயிற்றில் மாவிளக்கேற்றி
பிள்ளைவரம் கேட்கும் தம்பதிக்கெல்லாம் 
தவறாமல் அருள் பாலிக்கும்
அங்கயற்கண்ணியாக
ஆண்டு முழுதும் இருப்பவள்...
பெண்கள், குழந்தைகளுக்கு
அனுமதியில்லாத
மாசி களரியின்
அமாவாசை நடுநிசியில்
பிரசவிக்காத ஆட்டுக்குட்டியை
பனிக்குடம் கிழித்தெடுத்து
தொட்டிலில் போட்டு 
தாலாட்டும் சத்தம் கேட்டு
உக்கிரம் தணியும் வனப்பேச்சியாகிறாள்.

அத்துவானக் காட்டில்
ஆடு மேய்க்கும்
நிறைவயிற்றுக்காரி
தண்டட்டிக்கான வழிப்பறியில்
கழுத்தறுபட்டு இரத்தம் கொட்ட,மூர்ச்சையடையுமுன்
தன் வயிறு கிழித்து
பிள்ளையை வெளியேற்றி
வாயால் கடித்து 
தொப்புள்கொடியறுக்கையில்
பிள்ளையின் அழுகைச் சத்தம்
கேட்குமுன்னே செத்த கதை
யாருக்கும் தெரியாது.


--- வி.பாலகுமார்

---நன்றி உயிரோசை இணைய இதழ்

5 comments:

  1. என் அருகில் இப்படி ஒரு படைப்பாளர் இருப்பது இத்தனை நாட்களாய் தெரியாமல் போனதே. பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், விட்ட்ல்ராவ் என நவீன் தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளில் பலர் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றுபவர்கள், அவ்ர்களில் இன்னும் ஒரு இணைப்பாய் தோழர் பாலகுமார்- தொடர்ந்து எழுதுங்கள், பாலா. வாழ்த்துக்கள்.
    வா. நேரு

    ReplyDelete
  2. காட்டில் தனியே இறந்த அந்தப் பெண்ணே வனப்பேச்சியாய் வாழ்வதாய் எண்ணுகிறேன். அருமையான கவிதை.

    ReplyDelete
  3. ஆட்டுக்காரி வயிற்றைப் பிசைந்து விட்டாள்.

    நல்ல வார்த்தைகள் ... தொடும் கவிதை.

    ReplyDelete
  4. மனத்தைத் தொட்டு விட்டது!

    ReplyDelete