Saturday, January 30, 2010

இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.


மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது.
பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து.

தலைமையாசிரியர் ஜெரி ஈசானந்தா,  ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.
அவர் குறிப்பிட்ட தடுப்புமுகாம் கவிதைகளிலிருந்து சில வரிகள்...

புதைகுழி மறந்த 
சதைபிண்டங்களிநூடே 
ஊர்ந்து ...நெளியுது 
மானுடம்.

வலைச்சரம் சீனா ஐயா குழுப்பதிவுகள் பற்றிக் கூறினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் பொதுவான தளத்தில் புகுந்து விளையாட முடியும் என்றும், உதாரணமாக, வருத்தபடாத வாலிபர் சங்கம், பயமறியா பாவைகள் சங்கம், வலைச்சரம், பேரண்ட்ஸ் க்ளப் இன்னும் பல குழுப்பதிவுகள் பற்றியும், அவற்றை உருவாக்குவது பற்றியும், நண்பர்களை உறுப்பினர்களாக இணைப்பது பற்றியும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். 

ஐயா பதிவுலகை கலக்கும் "எதிர் கவிதைகள்" பற்றி சொல்லிக் கொண்டிருக்க, கணினியை இயக்கிக் கொண்டிருந்த கார்த்திகைப் பாண்டியன், ஒரு கவிதையையும், அதற்கான எதிர்கவிதையையும் திரையில் காட்ட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனா ஐயாவை இரு கவிதைகளையும் மைக்கில் வாசிக்குமாறு பணிக்க, அவர் கவிதைகளை வாசிக்க, ஐயோ கவிதையா, கலவரம் எதும் வெடிக்கப் போகுதோ என் நான் நினைக்கும் போதே.... நல்ல வேளை, மாணவர்கள் சிரித்துக் கொண்டே கவுஜைகளை கடந்து விட்டனர்.


நண்பர் ஸ்ரீ புதிதாக வலைப்பதிவு ஆரம்பிப்பது எப்படி என செயல்முறை விளக்கங்களுடன் செய்து காட்டினார். ஜிமெயில் ஐ.டி. உருவாக்குவதிலிருந்து, ப்ளாகருக்குள் நுழைவது, கெஜ்செட் சேர்ப்பது, இன்னும் பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாக விளக்கினார். மாணவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை, கலந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா குறிப்பு எடுத்துட்டு இருந்தாங்க. அமெரிக்கன் கல்லூரி, விஷ்வல் கம்யூனிகேசன்(தமிழில் என்ன?) துறைக்காக http://viscom-ac.blogspot.com/ என்ற வலைப்பூவும் துவங்கப்பட்டது. 


நண்பர் கார்த்திகைப் பாண்டியன் நிகழ்ச்சி முழுமைக்கும் தேவையான, பொருத்தமான ஸ்லைடுகளை கணினியில் இயக்கினார். மேலும் பதிவுலகில் இலக்கியம், நட்பு (தனிதனியா தான், ரெண்டும் சேராதுன்னு பெரியவங்க சொல்லிக்கிறாங்க) பற்றி பேசினார். இலக்கிய மும்மூர்த்திகள் (என்று யாரோ மூன்று பேர் பெயர்கள் சொனார், எனக்கு மனதில் பதியவில்லை) பதிவுலகில் சுறுசுறுப்பாக எழுதுவதாக பேசினார். பதிவுலகில் நீங்கள் காட்டும் உழைப்பு (அதாவது, எழுதுவதில் காட்டும் உழைப்பு) உங்களுக்கு நன்மதிப்பையும், நல்லவேலையும் கூட பெற்றுத்தரும் என்றும் சொன்னார்.  எழுத்து என்பதையும் தாண்டி பதிவுலகம் மூலம் நடைபெறும் ஆக்கப்பூர்வமான  நிகழ்வுகள் பற்றி அருமையாக பேசினார். 

வெறும் ஒத்த கருத்துடைய நன்பர்களுக்குள் நடக்கும் அரட்டை மட்டுமல்ல, இந்த நட்பு மூலமாக சமுதாயத்தில் ஒரு சிறு மாற்றமாவது கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வைக்க முடியாது, உள்ளிருந்து தான் வர வேண்டுமென்றாலும் ஏற்கனவே ஆர்வமுள்ளவர்களுக்கு கார்த்தியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும். முக்கியமாக ஒரு வாத்தியார்த்தனம் இல்லாமல், நண்பர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே பேசினார்.


நான், என்னென்ன வகையில் பதிவுகள் இருக்கின்றன் என்றும், என்னென்ன வகையிலும் பதிவுகள் இருக்கலாம் என்றும், பதிவில் என்னென்ன செய்யலாம் என்றும், பதிவில் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், யாராரெல்லாம் பதிவு எழுதுகிறார்கள் என்றும், யாரார் வேண்டுமானாலும் பதிவு எழுதலாம் என்றும் எளிமையாக (????) சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தருமி ஐயா பதிவுலகம் பற்றி விரிவான விளக்கமும், துவக்கவுரையும் (பவர் பாயிண்ட் ப்ரசண்டேசன் வயிலாக) தந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், நான் அவரின் உரையைத் தவற விட்டு விட்டேன். 

இறுதியாக, காட்சி ஊடகத்துறையின் தலைவர், பேரசிரியர் ப்ரபாகர் பேசும் போது, பதிவுலகம் மிகச்சிறந்த மாற்று ஊடகமாக இருக்கும் என்றும், வந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். 


மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள். 

நண்பர்களின் இடுகைகள்:


******

Wednesday, January 27, 2010

புதுக்குறள் - அதிகாரம் - டைடல்பார்க்

புதுக்குறள் - அதிகாரம் - டைடல் பார்க் - என் இனிய ஐ.டி. தமிழனுக்காக

ரெசியூமில் பொய்சொல்லி சேர்ந்தநல் வேலை
ரெசிசன்வந் தால்போய் விடும்.


எண்ணிமுடிடா அர்யர்செல் லாமில்லை - இல்லையே
மன்னார்அன் கோவிலும் வாய்ப்பு.


ஆப்டியூட் தாண்டிவந் துட்டியா மாப்ளஇரு
ஆங்கில ஜீடிதரும் ஆப்பு.


ராவெல்லாம் போன்பேச்சு ஏசியறை வேண்டாம்போ
கால்செண்டர் ஜோலிகாணல் நீர்.


ஆப்படிக்கும் டீம்லீட் அலறட்டும் சைக்ளோடும்
கேப்பில் தனிஆட்டோ ஓட்டு.


கோக்குடித்து தீர்த்திருப்பாய் கைக்காசை போடாடேய்
கேக்-பர்கர் எல்லாம் வேஸ்ட்.


சோப்போட்டே சாதிப்பார் மற்றெல்லாம் - கம்ப்யூட்டர்
கோடடித்தே செத்தொழி வார்.


அப்ரை சலதுனக்கே ஆப்படித்தால்  டாட்டாபை
தப்பில்லை நீ-கம்பி நீட்டு.


ஆன்சைட்போய் ஆர்குட்டில் போட்டோ-போ டாவாழ்க்கை
பென்ச்சை தேய்த்தே கெடும்.


கல்விதூங்கா மற்கற்ற நற்பயன் கேம்பசில் 
நல்லா-ப்ளே சாகிபென்ச்சில் தூங்கு.


(குறள் வெண்பா முயற்சி...  தளைதட்டினால் சொல்லுங்க. உங்க கருத்தையும் தவறாமல் சொல்லுங்க)
உதவி :
http://ta.wikipedia.org/wiki/வெண்பா
http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

***

Monday, January 25, 2010

இளம் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு - மதுரையில்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


வருகிற 31.01.2010  (ஞாயிறு ) அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.


நிகழ்ச்சி:    குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை: மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் :        மாலை 3 மணி முதல் 6 மணி வரை.


நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு:
கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993

பிற்சேர்க்கை:
***

Wednesday, January 20, 2010

பெயரில்லாதவை - 20/01/2010சென்ற வாரம் எழுதிய இந்த கவிதைக்கு நிறைய்ய்ய புதிய நண்பர்களிடமிருந்து (நிறைய என்றால் நான்கு, ஐந்து எனக் கொள்க) வாழ்த்துகள் வந்தன. அதில் ஒரு நண்பர் ("பிரபல", "பிராபள" போன்ற அடைமொழிகளில் பெரிய ஈடுபாடு இல்லாததால், அவற்றை தவிர்க்கிறேன்) எனக்கு அவர் எழுத்தில் இருக்கும் நெருக்கம் போலவே, தனக்கும் என்னிடம் இருக்கிறது என்று எண்ணும்படியாக (?) ஒரு மறுமொழி இட்டிருந்தார். ஆனால் அவர் இடுகை ஒன்றில் வாசித்த "நகைமுரண்" என்ற வார்த்தை தான் அந்த கவிதைக்கான விதை என சொல்ல நினைத்து, சொல்லவில்லை, இங்கே சொல்கிறேன். அவர்..... அட போங்கப்பா, சூரியனுக்கே டார்ச்சா !  "நகைமுரண்" என நீங்களே கூகுளிட்டுப் பாருங்கள், அவர் பெயர் தான் முதலில் வருகிறது.


*********************************************************


ரொம்ப நாளா ஒரு சந்தேகம். பல பதிவுகளை வாசிக்கும் போது, "சுவற்றில்"  என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டு வருவதை கவனிக்கிறேன். உதாரணமா, "சுவற்றில் படங்களை மாட்டினார்", "சுவற்றில் வெள்ளை அடித்தார்" - இந்த மாதிரி. ஆனா போன ஜென்மத்துல பள்ளிக்கூடத்துல படிக்கும் போது, "சுவற்றில்" என்ற பதம் தவறு, "சுவரில்" என்பது தான் சரி என்று சொல்லிக் கொடுத்ததா ஞாபகம். எந்த பதம் சரி, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


*********************************************************


சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையின் தமிழாக்கம் " சுட்டி-குட்டி".


டீச்சர் : வெப்பம் அதிகமானதும், திடப்பொருளாகும் ஒரு திரவத்தை சொல்லு?
சுட்டி : "தோசை மாவு".


டீச்சர் : Al2O3 னா அலுமினா. சரி சுட்டி, Fe2O3 னா என்ன சொல்லு?
சுட்டி : "ஃபிலோமினா"


டீச்சர் :  இல்பொருள்உவமைஅணி என்றால் என்ன?
சுட்டி :  ஜம்பலக்கடி பிம்பா !
டீச்சர் :  சுட்டி, நீ சொல்றது ஒரு எழவும் புரியல.
சுட்டி :  சேம் டு யூ, மிஸ்.*********************************************************

இந்த வாரம் எனது "ட்விட்டில் ஹிட்"


"பட்டுப் பாரம்பர்யத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு எடுத்தாலும், வீட்டுக்கு வந்து விட்டுட்டு வந்த புடவையைப் பற்றியே புலம்புவது மனைவியர் மரபு."

*********************************************************


இனிவரும் நாட்களில் "பெயரில்லாதவை"கள் அடிக்கடி வர இருப்பதால் (ஒரு நம்பிக்கை தான்), இந்த இடுகை முதல் பெயரில்லாதவை "தேதியிட்டு" வருகிறது. 

தங்கள் கருத்துக்களை தவறாது தெரிவியுங்கள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

*********************************************************

ஏதும் கேட்கவில்லையாதலால் ஒன்றும் சொல்லவில்லை.

நடுநிசியில் ஜன்னல் வழியே
மழைத்துளியை
எண்ணிக் கொண்டிருந்தேன்......


தூக்கத்திலிருந்த அப்பா,
சன்னமாய் இருமி விட்டு
ஒருசாய்த்து படுத்துக் கொண்டார்.......


என்ன செய்கிறாய் என கேட்டாலாவது
மழையைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம்.

தகப்பனின் தவிப்பும்,
தனையனின் தயக்கமும் தெரியாமல்
வீசுகிறது குளிர்காற்று.

**********

Friday, January 15, 2010

அகமும் புறமும்


ஜன்னலோர இருக்கை,
சில்லென்ற காற்று,
கையில் பிடித்தமானதொரு 
கவிதைத்தொகுப்பு...
அகமும் புறமும் குளிர
பயணத்தில் லயித்திருப்பேன்,
கம்பார்ட்மெண்டைக் கூட்டி விட்டு
கால் சுரண்டி 
காசு கேட்கும் சிறுமியை
கவனமாய் தவிர்த்துவிட்டு.Wednesday, January 13, 2010

இந்த பொங்கலுக்கு......இந்த பொங்கலுக்கு,

ஃப்ளாஷ் ப்ளேயரில் விர்சுவல் விநாயகருக்கு,
எலியை சுட்டி தேங்காய் உடைப்போம்.

குக்கரின் மூன்றாம் விசிலை
குலவையென நினைத்து
பொங்கலிட்டு கொண்டாடுவோம்.

இலவச எஸ்.எம்.எஸ் தீரும்வரை
வாழ்த்துகளை பெருந்தன்மையுடன்
ஃபார்வேர்டு செய்வோம்.

உலகத் தொலைக்காட்சியில்
முதன்முறையாக
மசாலா படம் ரெண்டோ, மூன்றோ
தவறாமல் பார்த்து ரசிப்போம்.

கடைசியாக......

அல்காரிதம் எழுதி,
அரிசி செய்யும் நாள் 
வரும் வரையில்.
இன்னும்...
சுழன்றும் ஏர் பின்னி
உழன்று கொண்டிருக்கும்
எம் உழவர்க்கு
கொஞ்சம் 
மனதோரம் நன்றி சொல்வோம்.Monday, January 11, 2010

கோபல்ல கிராமம் - சாமான்யன் பார்வை.


என் பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், ஆண்டு விடுமுறைக்கு கிராமத்திற்கு எங்கள் அய்யா (அம்மா வழி தாத்தா) வீட்டுக்கு செல்வது வழக்கம். எங்கள் ஊருக்கு செல்வதென்றால் எனக்கு மிக விருப்பம், இரண்டு காரணங்கள், ஒன்று எங்கள் அம்மாயியின் (அம்மா வழி பாட்டி) அருகாமை. மற்றொன்று எங்கள் மாமா படித்து விட்டு கட்டுக் கட்டாக பரணில் போட்டிருக்கும் ராஜேஷ் குமார் நாவல்கள். அப்படி இருந்த எல்லா புத்தகங்களையும் வாசித்து விட்டு, வேறு புத்தகங்கள் அகப்படாமல் துலாவிக் கொண்டிருந்த ஒரு கோடை விடுமுறையில், ஊரில் பக்கத்து வீட்டு ஆசிரியர், நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. தலைப்பும், எழுத்து நடையும் அது வரை படித்திருந்த கிரைம் நாவல்களில் இருந்து வேறுபட்டு தானாகவே உள்ளிழுத்துச் சென்றது. 

வெக்கை படர்ந்த கிராமத்து முன் இரவில், சுவர்கோழிகளின் சத்ததினூடே நான் வாசித்த முதல் படைப்பு,  தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான கி.ராஜநாராயணனின் "கோபல்லபுரத்து மக்கள்". அந்த பதினோரு, பணிரெண்டு வயதில் எனக்கு கி.ரா வும் தெரியாது, எதுவும் தெரியாது (இப்போதும் நிறைய பேரைத் தெரியாது என்பது வேறு கதை). ஆனால் அந்த வாசிப்பு ஏதோ, நான் அந்த கோபல்ல கிராமத்திற்குள் தான் இருப்பது போலவும், அவர்களுடனே விவசாயம் செய்வது போலவும், கால்நடை வள்ர்ப்பது போலவும் ஒரு தோற்றமயக்கத்தை கொடுத்து, "கோபல்லபுரத்து மக்கள்" என் நினைவின் அடுக்கில் ஆழப்பதிந்து விட்டது. 

இணையத்தின் பரிச்சயம் ஏற்பட்ட சமீபத்திய ஆண்டுகளில், கோபல்லபுரத்தை தேடி, கி.ரா. வைத் தேடி இறுதியில் நீண்ட காத்திருப்புக்குப் பின் வாங்கிப் படித்த இரட்டை நாவல்கள், "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்லபுரத்து மக்கள்". இதில் பதின்ம வயதில் வாசித்து, பின் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து இப்போது வாசித்த "கோபல்லபுரத்து மக்கள்" பற்றிப் பின்னொரு நாளில் பகிர்கிறேன். இப்போது அதன் முன்கதையாக வரும் "கோபல்ல கிராமம்" நாவல் பற்றிய எனது வாசிப்பனுபவம். 

முன்னுரையில் சொல்லி இருப்பது போல இது நாவலா, இல்லை சம்பவங்களின் கோர்வையா, இல்லை கோட்டையார் என்று அழைக்கப்பட்டவர்களின் குடும்பக் கதையா, இல்லை அந்த கோப்பல்ல கிராமம் உருவான கதையா, இல்லை அந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரின் இயல்புகள் பற்றிய ஆவனமா, இல்லை இது எல்லாமுமா என்றெல்லாம் பிரிக்க முடியவில்லை. ஆனால் சும்மா புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பவனை (வாசகன் என்று சொல்லும் அளவுக்கெல்லாம் நான் இன்னும் வளரவில்லை) கதையின் போக்கினூடே கைபிடித்துக் கூடவே கூட்டிச் சென்று, கோபல்ல கிராமத்தையும், அந்த ஊர் மனிதர்களையும் அறிமுகம் செய்து வைக்கிறார் கி.ரா தாத்தா. 

நிகழ்காலத்தில், வாழ்ந்து நொடித்துப்போன கோட்டையார் குடும்பத்தினர் மற்றும் சிதிலமடைந்த அவர்களின் வீட்டைப் பற்றி விவரித்து விட்டு, அவர்கள் செழிப்போடு வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த ஒரு ஊர்வழக்கை விசாரிப்பதில் துவங்குகிறது கதை. இடையிடையே கோட்டையார் வீட்டின் "பூட்டி" வாயிலாக, அந்த இடத்திற்கு அவர்கள் வர நேர்ந்த காரணங்களும், அந்த கிராமத்தை அவர்கள் உருவாக்கிய விதமும் கதையாகவே சொல்லப்படுகிறது.

கோபல்ல கிராமம் வழியாக, தனியாக செல்லும் ஒரு பெண். அவள் காது பம்படத்தை அபகரிக்க வரும் வழிப்பறி திருடன். அவள் எதிர்க்கவே அவளை நீரில் அமிழ்த்தி கொன்று விடுகிறான். இதை பார்க்கும் கோட்டையாரின் தம்பி அவனை ஊர் பஞ்சாயத்துக்கு இழுத்து வர, ஊர் கூடி அவனை கழுவில் ஏற்ற முடிவு செய்கிறது.  அவன் கழுவில் ஏற்றபட்டிருக்கும் பொழுது, அங்கே வேப்பமுத்து சேகரிக்க வரும் சிறு பெண்களை, தன்னைச் சுற்றி கும்மி அடித்து பாட்டுப்பாடச் சொல்கிறான்.  

அந்த பாடல் இப்படி தொடர்கிறது,

"....செங்கல் அறுத்த கிடங்குக்குள்ளே - நாங்க
சீரகச் சம்பா விளைய வச்சோம் - இப்பெ
பச்சைக்கிளிவந்து கெச்சட்டம் போடுது
பறந்தடிங்கடீ தோழிப்பொண்ணே."

கழுவில் ஏற்றப்பட்டு மூன்று நாட்களாக சாவுக்காக காத்துக் கொண்டிருப்பவனுக்கு இந்த பாட்டை கேட்ட மாத்திரத்தில் தன்னுடைய பிறந்த ஊர் நினைவுக்கு வருகிறது. அங்கே தான் செய்த தான்தோன்றித்தனங்கள் பற்றி நினைத்து கண்ணீர் விடுகிறான். ஒரு பிரகாசமான தெளிச்சியுடன் செத்தும் போகிறான்.

இதனூடே கதையாக சொல்லப் படும் கோபல்லத்தின் வரலாறு. ஒரு காலத்தில், ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒரு வனப்பகுதியை அடைகிறார்கள்.

கோபல்ல கிராமத்தை உருவாக்க அந்த மக்கள் ஒன்று கூடி பாடுபடுவதும், கரட்டுக் காடாக இருந்த வனப்பகுதியை அழித்து, விவசாய நிலங்களை உருவக்குவதும் அழகு. ஒரு பெரிய வனத்திடம் இருந்து சிறு பகுதியைப் பிரித்து அதை தனிமைப்படுத்தி,  காற்று பரவும் காலம் வரை காத்திருந்து அந்த சிறு பகுதியை தீ வைத்து, பண்படுத்தி, விவசாய நிலமாக மாற்றுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து இராப்பகலாக உழைக்கிறார்கள். அதுவும் வெளி மக்களின் தொடர்பு இல்லாத சூழ்நிலையில், அந்த மக்களின் விடாமுயற்சியும், உழைப்பும் வியக்க வைக்கிறது. நமது ஊர்களை ஒட்டி, இன்று சர்வ சாதாரணமாக பிளாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு நிற்கும் விவசாய நிலங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இப்படி வனங்களில் இருந்து அரும்பாடுபட்டு பிரித்து பண்படுத்தப்பட்ட வளங்கள் என நினைத்துப் பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது.

கிராமத்தை உருவாக்கும் சமயத்தில், காட்டுக்குள்ளிருந்து வழி தவறிய சினைப்பசு ஒன்று பெரும்சகதியில் மாட்டி அவதிப்படுவதை காண்கிறார்கள். பெரும் முயற்சிக்குப்பின் அந்த காட்டுப்பசுவை மீட்டு கொட்டிலில் பராமரிக்கிறார்கள். அதுவரை கால்நடை செல்வம் இல்லாத கோபல்லத்திற்கு, அந்த காட்டுப்பசுவின் மூலமாக, எல்லா செழிப்பும் வந்ததாக நம்புகிறார்கள். ("கோப்பல்லபுரத்து மக்கள்" நாவலில் "காரி" எனும் கோவில் காளையின் சரித்திரத்தை அழகாக சொல்லியிருப்பார் கி.ரா.) . மாடுகளோடு அந்த மக்கள் கொண்ட நேசத்தையும், அவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் கால்நடை பராமரிப்பு பற்றியும் நாவல் முழுவதும் காணலாம்.

இறுதியாக,  ஒரு நாள் அந்த ஊருக்குள் இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் முற்றுகையிட்டு பயிர் பச்சை அனைத்தையும் கண் இமைக்கும் நேரத்தில் அழித்துச் செல்கிறது. மக்கள் இன்னது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறார்கள். பின் சொல்லாத காரண்ம் போல ஆங்கிலேயர் அந்த கிராமத்துக்கு அடியெடுத்து வைப்பதோடு முடிகிறது நாவல்.

ஆசிரியர் மேலே அமர்ந்து கொண்டு, வாசிப்பவனை அண்ணாந்து பார்த்து கதை கேட்க வைக்கும் உணர்வே எனக்கு வழக்கமாக தோன்றும். (இது எனது குறைந்த வாசிப்பனுவம் காரணமாகவும் இருக்கும்). ஆனால் கி.ரா. தாத்தாவின் எழுத்துக்கள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு கதை சொல்லுவது போல ஒரு உணர்வு. அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. சொல்லித் தெரியப் படுத்த முடியாது, நண்பர்களே ! நீங்களும் கி.ரா வை வாசிக்கும் போது அதையே உளமாற உணர்வீர்கள் என்று மட்டும் நிச்சயமாக நம்புகிறேன்.

நாவல்: கோபல்ல கிராமம்.
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்.
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.100

******************************