Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Monday, May 19, 2014

வாழ்த்துகள் திரு.பிரதமர் அவர்களே !

இலாபமோ, நஷ்டமோ இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள் இவர்கள் தாம். வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவோம் என்று பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். மாற்றுக்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கும் சேர்த்து தான் “மோடி” பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொறுப்பில் இருந்தவர்களிடம் அதிகாரம் இல்லை, அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் நேரடியாக எந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்கவில்லை என்ற நிலையிலேயே கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. தன்முனைப்பின்றியும், வேண்டாவெறுப்பாகவும் சூழ்நிலைக்கைதியாக தலைமைப் பொறுப்பை வைத்திருந்தவரிடமிருந்து, “எனக்கு 60 மாதங்கள் மட்டும் தாருங்கள், நான் வளமான எதிர்காலத்தைத் தருகிறேன்” என்று சூளுரைத்தவரிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது பதவியும், அதிகாரமும். அவர் அதனை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார், நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும், முக்கியமாக சிறுபான்மையினர், ஏழை எளியவர்கள் என நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்வாறு அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கைமுறையை வழங்கப்போகிறார் என்று உலகமே உற்று நோக்குகிறது. மோடி அவர்களுக்கு மக்கள் அளித்திருப்பது வெற்றி அல்ல, மிகப்பெரிய வாய்ப்பு. 

பலமான எதிர்க்கட்சிகள் இல்லாமல், மிகப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருப்பவர்கள், தங்களுக்கான எல்லைக்கோட்டை தாங்களே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் சவாலான பணி. தங்களை நம்பி அருதிப் பெரும்பான்மை வழங்கியிருக்கும் மக்களுக்கு நேர்மைக்கேடு செய்யாமல் இருப்பதே நல்லது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருக்கும் நிலையில், ஊடகத்துறை எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லாட்சி வழங்க ஏதுவாயிருக்கும்.  வெற்று பிம்பங்களை ஊதிப் பெரிதாக்காமல் அரசின் தவறுகளை சரியாக சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்” - இது அனைவருக்கும் தெரிந்தது தான். குற்றங்களை எடுத்து உணர்த்துபவர்கள் இல்லையென்றால, அந்த அரசு தானே கெடும். அதே சமயம், எதிர்க்கட்சிகளும் வெறுப்பரசியலைக் கையிலெடுத்துக் கொண்டு, சாமான்ய மக்களை பயமுறுத்தும் வேலையை செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காகவும், அமைதிக்காகவும் பிரதமருடன் கைகோர்க்க வேண்டியது அவசியம். நல்ல திட்டங்கள் வரும் பொழுது, அரசியல் நிலை காரணமாக வாழ்த்த முடியாவிட்டாலும் மௌனமாக இருப்பது கூட சிறந்ததாக இருக்கும். அதை விடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகை செய்யாமல் இருக்க வேண்டும். ஊழல் கறை படிந்து புரையோடிப்போயிருக்கும் அரசுத்துறை வழிமுறைகளையும், அதள பாதாளத்தில் இருக்கும் நிதிநிலைமையையும் சீர்செய்ய ஆளும்கட்சிக்கு சில காலம் தேவைப்படலாம். அரசியல் விமர்சகர்களும், நடுநிலையாளர்களும் அதற்கான நியாயமான் அவகாசத்தை அவர்களுக்கு வழங்குவதே சிறந்தது. 

முறையான சந்தைப்படுத்துதலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஒரு பொருளை நல்ல விலைக்கு விற்க உதவும். ஆனால் முறையான வாடிக்கையாளர் சேவையும், பராமரிப்பும் இருந்தால் மட்டுமே அந்த பொருள் சந்தையில் நிலைத்து நிற்கும். தனது தேர்ந்த அனுகுமுறையால் தெளிவான விளம்பர யுக்தி கொண்டு, இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி காஷ்மீர் முதல் கடைக்கோடி கன்னியாகுமரி வரை தனது பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைத்து, தான் வந்தால் மட்டுமே நாட்டுக்கு சுபிட்சம் பிறக்கும் என்று நம்ப வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மோடி. அரசியலை ”சேவை” என்பதைத் தாண்டி ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்டாலும் கூட, தனக்குக் கிடைக்கும் நியாமான ஊதியத்தைக் கொண்டு, அதன் வாடிக்கையாளர்களான மக்களுக்கு சிறப்பானை வசதிகளை செய்து கொடுக்க முடியும். இந்தத் தொழிலில் பரிவர்த்தனை அரசுக்கும், மக்களுக்கும் இடையே மட்டும் தான். இடைத்தரகர்களான பெருமுதலாளிகளுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டால் நலம். 

மக்கள் காத்திருக்கிறார்கள், கவனிக்கிறார்கள் ...!

வாழ்த்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் அவர்களே !

******

Monday, December 31, 2012

நாளை நமதே !



2012 - ஸ்ஸ்ஸ்ஸப்பா... மூச்சு முட்ட வைத்து விட்டது இந்த ஆண்டு. கவலை, கலக்கம், கண்ணீர், கலகம் என்று ஏகப்பட்ட சூறாவளிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றையெல்லாம் அப்படியே மூட்டையாய் கட்டி இந்த ஆண்டோடு சேர்த்து அனுப்பி விட்டு, புத்தாண்டு புதிதாய் பிறக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

”சார்புத் தத்துவம்” தான் உலகத்தை வழிநடத்துகிறது என்பார்கள். உலகத்தை விடுங்கள், தனி மனிதனுக்குள்ளும் ஒரு நிகழ்வில் ஏற்படும் அயற்சி, ஒழுங்காய் சென்று கொண்டிருக்கும் மற்ற நிகழ்வுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஏதோவொரு இணைப்பு நூல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றன் உற்சாகம் மற்றொன்றில் பாய்வது போலவே தொய்வும் தானாகவே மற்றொன்றைத் தொற்றிக் கொள்கிறது.

இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை எல்லாம் தரை தட்டி மேல் எழும்பியிருக்கிறது. எப்போதும் நான் எடுத்த முடிவுகள் சரியோ, தவறோ அதற்காக பின்நாட்களில் வருத்தம் கொண்டது இல்லை. ”இது இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது. நம் மூலமாக இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவு தான்” என்று சென்று விடுவேன். ஆனால் இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்பு நான் எடுத்திருந்த முடிவு சரியான தேர்வு இல்லையோ என மன சஞ்சலம் சொள்ளும் அளவு ஆகிவிட்டது. பின்பு வழக்கம் போல் “ஆல் இஸ் வெல்” ஜெபம் சொல்லிக் கொண்டபின் தெளிவாயிற்று... ”எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்தது தான். நான் தான் அந்தந்த காலத்திற்குச் சென்று அவற்றைக் காண வேண்டும்” என்று உள்ளுணர்வு எப்போதும் போல் சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு முறையும் மீண்டு வர முடிந்திருக்கிறது.

எந்தவொரு சிறு வேலையாக இருந்தாலும் அதற்கான முக்கியத்துவமும், முயற்சியும் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் மூலம் வரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் நாம் உடையவர்களாக ஆவோம் என்ற எண்ணம் உடையவன் நான். அவ்வாறு உரிய முக்கியத்துவம் தராததால், கைமேல் பலனாக அலுவலக ரீதியான ஒரு தோல்வியையும் இந்த ஆண்டு சந்தித்திருக்கிறேன். வெற்று சமாதானங்கள் ஆயிரம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சிரத்தை இல்லாமல் ஒரு தேர்வை எதிர் கொண்டது தவறு என்ற புத்தி கொள்முதல் கிடைத்திருக்கிறது. ”ஆல் இஸ் வெல்”.

நினைவில் கொள்ளத்தக்க நேர்மறை நிகழ்வுகளும் நடக்கத்தான் நடந்திருக்கின்றன. எனது மேடைப் பேச்சு இந்த ஆண்டு ஏகத்துக்கும் வளர்ந்திருக்கிறது. அலுவலக சங்க கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேச வேண்டிய நிலையிலும் தெளிவாக எனது கருத்துக்களை கூறியது எனக்கே மன நிறைவைத் தந்தது. அலுவலகத்தில் சிறிய அளவில் “வாசிப்போர் களம்” என்ற அமைப்பையும் துவங்கியிருக்கிறோம். வேலை, வீடு என்றில்லாமல் ஒத்த கருத்துள்ள தோழர்களுடன் சேர்ந்து ஒரு மாற்றுக் களத்தையும் அமைத்து, ஆரோக்யமான ஒரு சூழலுக்கான முதல் படியைத் தாண்டியிருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி. 

அப்புறம்... நல்லாள் ஒருத்தியை இல்லாளாய் கொண்ட வரத்தையும், மழலை பேசும் மகளின் அழகையும், இன்னும் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் பெற்றோரையும், பக்கபலமாய் நிற்கும் உடன்பிறப்புகளையும் பற்றியெல்லாம் எழுத்தில் அடக்கி விட முடியாது, வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை நமது நாளாகவே பிறக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே !

******

Wednesday, February 29, 2012

"என் விகடன்- வலையோசை"யில் எனது வலைப்பதிவு

29/02/2012 தேதியிட்ட ஆனந்த விகடனின் இணைப்பான “என் விகடன் - தெக்கத்திப் பதிப்பு” வலையோசை பகுதியில் எனது வலைப்பூவான ”சோலைஅழகுபுரம்” பற்றிய அறிமுகம் வெளியாகியுள்ளது. நண்பர்கள் யாரேனும் பரிந்துரை செய்தார்களா, இல்லை விகடனின் பார்வை நேரடியாகவே பட்டதா தெரியவில்லை. அச்சில் பார்க்கும் போது பயங்கர மகிழ்ச்சி. 

தொடர்ந்து ஊக்கமளிக்கும், விமர்சிக்கும், வாழ்த்தும் மற்றும் மௌனமாக பார்வையிடும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

நெடுவழிப் பயணம் மீதமுண்டு :)




******

Saturday, December 31, 2011

நாளை மற்றொரு நாளே !


"டிமாண்ட்" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்படியே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.

ஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் "கோட்டிக்காரத்தனம்"  செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது. 

பெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட "மலையேற" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.

அப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011. 

சென்று வா என் நண்பனே! 

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)

******

Monday, December 12, 2011

"ரஜினி எனும் யானை"



இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில் அப்பா “மாவீரன்” படத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். படம் பார்த்துவிட்டு வந்து என் தம்பி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கையில் “மாவீரன்” எனறு எழுதத் துவங்கிவிட்டான். அம்மா நடுவில் தடுத்து நிறுத்தி, கத்தியை பிடுங்கி விட்டு, முதுகில் நாலு சாத்து சாத்தினார். கையில் வழியும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டே, “நான் ரஜினி. அப்படித்தான் பண்ணுவேன்” என்றான். அப்போது அவன் சிறுவன் கூட இல்லை, வெறும் நான்கு வயது குழந்தை. அதிலிருந்து நாங்கள் சினிமா பார்ப்பதற்கே கூட தடை உத்தரவெல்லாம் கூட சில வருடங்கள் அமலில் இருந்தது. எனக்கும், என் தம்பிகளுக்கும் முதன்முதலில் ரஜினியிடம் ஈர்ப்பு வந்தது அந்த படத்தில் தான். இது போன்ற விஷயங்கள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ரஜினியின் பெயரால் ‘கோட்டித்தனம்’ செய்யும் குழந்தைகள் எல்லா வீட்டிலும் நிறையவே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். எல்லோரும் சொல்வது போல ரஜினி என்பது ஒரு மந்திரச்சொல். தமிழ்நாட்டின் குடும்பங்களில் இந்த நாற்பது வருடங்களில் அவரது ஆளுமையோ, செய்கையோ, பாதிப்போ இல்லாமல் எந்தவொரு குழந்தையும் வளர்ந்திருக்காது. சிலர் பதின்ம வயதைத் தாண்டிய பிறகு ரஜினி ரசிப்பை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்களது “ப்ரஸ்டீஜ் சிம்பலாக” ரஜினி ரசிகன் என்ற விசிட்டிங் கார்டை உபயோகிக்கிறார்கள்.

ரஜினி என்ற கலைஞனை ரசிப்பது, ஏன் விமர்சிப்பது என்பது கூட ஒரு வகையில் சரி தான். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளிலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. இதெல்லாம் அவரவர் தம் மனநிலைக்கேற்ப ரஜினி என்ற நடிகனை, ரஜினி என்ற தனிமனிதனின் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னொரு வகை இருக்கிறது. ரஜினி என்ற பிம்பத்தை சந்தைப்பொருளாக்கி கூவிக்கூவி விற்பது. 

சமீப காலமாக ரஜினியின் ரீச் இந்தியா முழுமைக்கும், உலகின் மற்ற சில பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் ரஜினி பிம்பத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நோக்கம் ரஜினியைப் பாராட்டுவதாகவோ, விமர்சிப்பதாகவோ கூட இருப்பதில்லை. ரஜினியை வைத்து முடிந்தமட்டும் கல்லா கட்டுவது. இவர்களின் வியாபாரத்திற்கு ரஜினி இல்லையென்றால் நாளை புகழின் உச்சத்திலிருக்கும் இன்னொரு பிம்பம். அவ்வளவுதான். முன்பு ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரஜினியை தாழ்த்தி பேசி பேட்டி கொடுத்தால் பிரபலமடையலாம் என்று. இன்று அடுத்த நிலையாக , யார் அதிகமாக ரஜினியைப் பற்றி பேசுகிறார்களோ அவரே அன்றைய பிரபலம். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் ஊத்துக்கு இவர்கள் ரஜினி ரசிகர்களை ஊறுகாய் ஆக்கிக் கொள்வது தான். 

முன்பு ரஜினி உயிருக்குப் போராடி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடைநிலை ரசிகர் ஒவ்வொருவரும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க, இந்த வியாபாரிகளோ, “ரஜினி நிச்சயம் குணமடைவார், குணமடைந்து ‘ராணா’ படத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பார்” என்று அறிக்கை விடும் சாக்கில் அடுத்த படத்துக்கான டெம்ப்போ குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். அட, பதர்களே! அவர் இனி படமே நடிக்காவிட்டாலும் சரி, நல்ல ஆரோக்யத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவரின் விருப்பமாக இருக்க முடியும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் அந்த கொண்டாட்டங்களை நமது ஊடகங்கள் பன்மடங்கு ஊதிப் பெருக்கி ப்ரைம் டைமில் ஒன்றுக்கு பத்து முறை ஒளிபரப்பி ரஜினி பாசம் காட்டுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று மட்டுமல்ல, ரஜினி சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும், ஏன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருத்துவமனை காட்சிகள் கிடைத்தால் கூட பாசமுடன் ஒளிபரப்பி, நடுவில் நிறைய விளம்பர இடைவேளை வைத்து ரஜினி என்னும் பிம்பத்தை துண்டு துண்டாக்கி விற்றுக் கொண்டிருப்பார்கள்

இவர்களுக்கு, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனால் ஒரு வேளை, யானை இ’ர’க்க வேண்டிய நிலை வந்தால், கால் காசு போட இந்த வியாபாரிகள் வரப்போவதில்லை என்பது தான் உண்மை.


ரஜினி என்னும் நடிகரின் உண்மை ரசிகனாக, அவருக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்". அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நிம்மதியும் நிலைத்திருக்கட்டும்.

******

Wednesday, September 21, 2011

வேரும் விழுதும்

எனது தோழி ஒருவர் நடத்தும் மழலையர் பள்ளிக்கூடத்தில் நடந்த "Grand parents Day" விழாவில் வாசிப்பதற்காக, "தாத்தா தன் பேரனுக்கு எழுதுவது போல"  ஒன்றைக் கேட்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தும் வழக்கம் போல் சும்மா இருந்து விட்டு, விழாவிற்கு முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தேன். நன்றாக இருந்ததாக அவர் சொன்னார். எப்படி இருக்கிறதென உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

*********************************************************************************
தன் செல்லப் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா எழுதும் கடிதம்.

எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வந்த தலைமுறை இடைவெளியெல்லாம்
பேரக் குழந்தைகளிடம் வருவதில்லையே என நினைத்ததுண்டு!

"எல்லாப் பிடிவாதமும் அப்படியே தாத்தா போல" என்று பாட்டி
செல்லமாய் கோபிக்கும் போது தான் புரிந்தது,
என் செல்லமே, நீ தான் நான் என்பது!
உன்னுடன் இருக்கும் போது தான் 
என்னையும் நீ மழலையாக்கி விடுகிறாயே,
பின்பு எங்கிருந்து வரும் இடைவெளி.

நேற்று என் வேர் ஆழப்பதிந்து செழித்து வளர்ந்த 
கிளையைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்தேன் - ஆனால்
இன்றோ என் நிழலில் வேறூன்றும் விழுதைப் பார்த்து
மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.
என் இள விழுதே, இந்த முதுமரத்தை 
நீ முழுதாய் தாங்கும் நன்னாளும் 
வரும் தானே!
அதைப் பார்த்து பூரித்து நிற்கும் நிலையை
கடவுள் தந்தால் நல்வரம் தானே!

உன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி
வேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருந்தேன்.
இன்றோ உன் மழலை சொல்லில், செய்யும் குறும்பில்
என் பால்யத்தையே மீண்டும் முழுதாய் உணர்கிறேன்.

என் கைப்பிடித்து நீ நடைபயின்று வரும் போது, 
உன் தத்துப்பித்து மழலை மொழியில்
உன் தந்தை பெருமையை எனக்கு சொல்வாய்
உலகத்தில் சிறந்த மனிதன் எல்லாம்
உன் தந்தை தான் என்ற நம்பிக்கை உனக்கு
அதை உன் வார்த்தைகளில் கேட்கையில் 
மென்சிரிப்பு பூக்கும் எனக்கு!
ஏழேழு பிறவிக்கும் நான் செய்த தவத்திற்குப் பலனாய்த் தான்
நான் வாழும் நாளிலேயே இறைவன் உன்னைத் தந்தானோ!

நீ நல்லதைச் செய்ய, நட்பைப் பாராட்ட
நாளை உலகை வெல்ல,
கல்வி, கலை, கருணை
மனித நேயம் , மக்கட்பண்பு
அனைத்தும் பெற்று
வளமாய் வாழ 
என்றும் உன் நிழலாய் இருப்போம்
நலமே வாழ இனிதான வாழ்த்துகள் !
மண்ணோடு வேர் கொண்டிருக்கும் ஆழமான அன்புடன்,
வானமெங்கும் கிளைப் பரப்பி பூத்துக் குலுங்கும் விருட்சமாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க !

********************************************************************** 

Wednesday, August 10, 2011

'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்

நண்பர்கள் நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன் இருவரும் இணைந்து 'வலசை' எனும் புதிய காலாண்டு இதழைத் துவக்கியிருக்கிறார்கள்.

'வலசை' என்பதற்கு பறவைகளின் இடப்பெயர்ச்சி என்று பொருள் சொல்லப்படுகிறது. நண்பர்கள் என்ன பொருளில் இப்பெயரை சூட்டியுள்ளனர் என்றும், இதழின் உள்ளடக்கம் குறித்தும் அறிய ஆவல். 

இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.




***

Sunday, April 3, 2011

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !


கிரிக்கெட்டை தேசப்பற்றோடு முடிந்து பார்க்கும் மூடத்தனத்தையெல்லாம் தாண்டி வந்து ஆண்டுகளாகி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்பது, இந்திய நாட்டின் சார்பாக விளையாடும் அணியல்ல, பி.சி.சி.ஐ என்ற அரசு சாராத, ஒரு தனியார் அமைப்பின் சார்பாக விளையாடும் அணி என்று எத்தனையோ விவாதங்கள் செய்தாயிற்று. அவ்வப்பொழுது கிரிக்கெட்டில் நடக்கும் சில‌ நிகழ்வுகளைப் பார்க்கும் போது, சூதாட்டத்திற்கான வாய்ப்புகள் பெருமளவு இருப்பது போலவும் தோன்றத்தான் செய்தது. இந்த விளையாட்டின் பெயரில் நடக்கும் மிகப்பெரிய வணிகமும், வீண் விளம்பரமும் அயற்சியை தரத்தான் செய்திருக்கிறது. உயிரைக் கொடுத்து ஆதரிப்பது போல் கேமிராவிற்கு முகம் காட்டும், ஆனால் விளையாட்டின் அரிச்சுவடியும் தெரியாத தொழிலதிபர்களும், நடிக நடிகைகளும் பல சமயங்களில் எரிச்சலடைய செய்யவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இது அனைத்தையும் தாண்டி குழுவிளையாட்டு என்ற அளவில் 'கிரிக்கெட்'டின் சுவாரஸ்யங்களுக்கு எப்போதும் குறையிருந்ததேயில்லை. சமயங்களில் மந்தமாகத் தோன்றினாலும், சதுரங்க விளையாட்டைப் போலவே 'கிரிக்கெட்'டும் மனதால் ஆடப்படும் ஆட்டம் தான்.

பதினான்கு அணிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு 'உலகக் கோப்பை' என்று பெயர், இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதால் கிடைக்கப்பெறும் சந்தை லாபங்கள், 'ஐபிஎல்' க்கு கூடும் வரவேற்பு இன்னபிற அரசியலுக்குள் போக விரும்பாமல் ஒரு கிரிக்கெட் பார்வையாளனாய், ரசிகனாய் மிக மகிழ்வாய் உணரும் தருணம் இந்த 'உலகக் கோப்பை' வெற்றி.







எங்களை நீங்கள் மகிழ்வுறச்செய்திருக்கிறீர்கள், தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எங்களை ஒருமைப்படுத்தியிருக்கிறீர்கள். எம் போன்ற சாமான்யர்களுக்கும் 'உலகை வெற்றி கொண்டது' போன்ற உணர்வை சிறு பொழுதேனும், நீங்கள் உங்கள் உழைப்பின் மூலமும் வியர்வையின் மூலமும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !

***pictures courtesy espnstar.com***

Wednesday, March 24, 2010

மணற்கேணி போட்டி - வாழ்த்துக்கள் நண்பர்களே !



சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் இணைந்து நடத்திய கருத்தாய்வு போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் நமது தருமி ஐயா வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்டுரை   சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் 


 இலக்கியப் பிரிவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு.பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது படைப்பு தமிழர் இசை

அறிவியல் பிரிவில் திரு. இரா.இரஞ்சித் அவர்களின் படைப்பு நவீனகால நுண்ணோக்கிகள் மற்றும்,
நமது டாக்டர்.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) வெற்றி பெற்றுள்ளன. 

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தியிருக்கும் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். 

வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மதுரைக் காரர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


Wednesday, January 13, 2010

இந்த பொங்கலுக்கு......



இந்த பொங்கலுக்கு,

ஃப்ளாஷ் ப்ளேயரில் விர்சுவல் விநாயகருக்கு,
எலியை சுட்டி தேங்காய் உடைப்போம்.

குக்கரின் மூன்றாம் விசிலை
குலவையென நினைத்து
பொங்கலிட்டு கொண்டாடுவோம்.

இலவச எஸ்.எம்.எஸ் தீரும்வரை
வாழ்த்துகளை பெருந்தன்மையுடன்
ஃபார்வேர்டு செய்வோம்.

உலகத் தொலைக்காட்சியில்
முதன்முறையாக
மசாலா படம் ரெண்டோ, மூன்றோ
தவறாமல் பார்த்து ரசிப்போம்.

கடைசியாக......

அல்காரிதம் எழுதி,
அரிசி செய்யும் நாள் 
வரும் வரையில்.
இன்னும்...
சுழன்றும் ஏர் பின்னி
உழன்று கொண்டிருக்கும்
எம் உழவர்க்கு
கொஞ்சம் 
மனதோரம் நன்றி சொல்வோம்.



Wednesday, June 24, 2009

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!


ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காக, பணிக்கு, அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறு இல்லாத செயலாகத் தான் இதை நினைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பார்க்காத போது, நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட‌ பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான். நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற உற்சாகம் தரும் உந்துசக்தி இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயமாக‌ உதவும்.

போதும், ஓவர் பில்டப் ..... என்னோட வலைப்பதிவு பத்தி இந்த வாரம் "கல்கி" இதழ்ல (28/06/2009 இதழ், 72ம் பக்கம்) நாலு வரி பாராட்டி எழுதி, வலைப்பதிவு பெயரை வாசகர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. கல்கிக்கு நன்றிகள் பல.
எப்போதும் உடன்வரும், உற்சாகமளிக்கும், கிண்டலடிக்கும், ஓட்டும், குட்டும், படித்துவிட்டு எஸ்கேப் ஆகும், படிக்காமலே பாராட்டும் நண்பர்கள் அனைவரும் நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி அவர்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை. :)


விரைவில் சந்திப்போம்....

நட்புடன்,
வி.பாலகுமார்.


Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்துகள் - 2009 !


வளம் கொழிக்கட்டும்வாழ்க்கை இனிக்கட்டும்,

மகிழ்ச்சி பொங்கட்டும்மனம் நிறையட்டும்,

அமைதி நிலவட்டும்அன்பு மலரட்டும்,

நிம்மதி நம் வாழ்வில் நிரந்தமாய் தங்கட்டும்,

மேல்நாட்டு வணிகம் பெருகட்டும்மோகம் குறையட்டும்,

 

வாய்ப்புகளும்வெற்றிகளும் நிரம்பப் பெற்று,

பூத்துக் குலுங்கட்டும் இந்த புத்தாண்டு !


நட்புடன்,  

பாலகுமார்.