Saturday, February 28, 2009

பாத யாத்திரையில் புல்லரிக்க வைத்த எட்டாவது வள்ளல் !

டிசம்பர் 31 ம்ம் தேதி இரவு ... பசங்க எல்லாம் விடுதி மொட்டை மாடில , புது வருடத்தை வரவேற்க்குறதுல ரொம்ப பிஸி யா இருந்தோம் ... அது கல்லூரியோட கடைசி வருடம், அதனால மனசுக்குள்ள எதிர்காலத்தை பத்தின பயம், லேசா எட்டிப் பார்த்துட்டு இருந்த சமயம். ( எங்களோட எதிர்காலம் இல்லீங்க, எங்க சேவைகளையும், கண்டுபிடிப்புகளையும், புரட்சியையும் எதிர்பார்த்துட்டு இருந்த இந்த சமுதாயத்தோட எதிர்காலத்த பத்திய கவலை தான் ).

So, புது வருடத்த, எந்த வித சேட்டையும் இல்லாம, பக்திகரமா ஆரம்பிக்கிறதா ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றினோம். 

மறுநாள் காலைல, வருடப் பிறப்பு அன்னைக்கு, திருச்செந்தூர் போய், முருகனுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாம்னு முடிவு பண்ணோம். காலைல 5 மணிக்கு எல்லோரும் தயார் ஆகனும்னு சொல்லிட்டு , இந்த வருடத்த குறையில்லாம முடிக்கனுமேன்னு கொஞ்சமே கொஞ்சமா ஆட்டம் போட ஆரம்பிச்சோம். எல்லோருக்கும் மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு,
"என்னடா, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, எல்லோரும் ஒரேடியா ஒத்துக்குற அளவு நாம ஒத்துமையா ஆகிட்டோமா ?" ன்னு காந்தி வாய் விட்டு கேட்கவே செஞ்சுட்டான்.

அப்போ தான், கிருக்கனுக்குள்ள இருக்குற உண்மையான கிறுக்கனுக்கு நிதானம்(?) வந்துச்சு போல ....
"ஆமாம் ல, நீங்க எல்லோரும் நல்லவனா மாறும் போது, நானும் வெறும் நல்லவனாமட்டும் இருந்தா எப்படி? என் கிட்ட மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்ப்பாங்களே !!! " ன்னு எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டான். 
உடனே காடு உள்ளே புகுந்து, " டேய், டேய், கிறுக்கன யோசிக்க விடாதீங்க டா , குட்டையை குழப்பிருவான் " ன்னு பதறிட்டு இருக்கும் போதே கிறுக்கனுக்கு ஞானஒளி பிறந்திருச்சு .

" மக்களே, திருச்செந்தூர் முருகன், என்னை இப்பவே கூப்பிடுறார். கோவில் இங்க இருந்து ஒரு 80 கி.மீ. தானே இருக்கும், நான் இப்பவே பாத யாத்திரை கிளம்புறேன். காலைல உங்கள கோவில்ல சந்திக்கிறேன்" ன்னு சொல்லி பீதிய கிளப்புனான். 

பசங்க எல்லாம் எவ்வளவு சொல்லியும் கிறுக்கன நிறுத்த முடியல. அதுவும் இல்லாம, இவன் அடிச்ச உடுக்கைல வாய்க்காவுக்கும் சாமி வந்திருச்சு. 
"நானும் வரேன்டா கிறுக்கா, பாத யாத்திரை போய் இவனுங்களுக்கு முன்னாடி, முருகனை நமக்கு வரம் தர வச்சிருவோம் டா !" ன்னு தெளிவா ஏதோ ப்ளான் எல்லாம் போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சுட்டான். (நாயி, இந்த Logical Reasoning ஐ எல்லாம், Interview ல காட்டி இருந்தா, எங்கயோ போயிருக்கும் )

பசங்க ஒரு முடிவுக்கு வந்தோம். அதான் விதி வழிய வந்து வம்பிழுத்து பாத யாத்திரைக்கு வா, வா ன்னு இழுக்கும் போது, இவனுங்க என்ன பண்ணுவானுக? 
"சரி, நல்ல படியா போய் சேருங்க. நாங்க காலைல சரியா 9 மணிக்கு கோவில் நுழைவாயில் கிட்ட வந்துர்றோம், நீங்களும் அங்கேயே Wait பண்ணுங்க" ன்னு ரெண்டு பேருக்கும் ஆளாளுக்கு தெரிஞ்ச Advice, Tips ன்னு அள்ளி விட ஆரம்பிச்சோம். 

கிறுக்கன், " எல்லாம் எங்களுக்கு தெரியும், நீங்க எல்லாம் கொஞ்சம் அடங்குங்க " ன்னு சொல்லிட்டு வாய்க்காவை இழுத்துட்டு பாத யாத்திரை கிளம்பிட்டான்.

மறுநாள் அதிகாலை நாங்க எல்லோரும், விடுதியில இருந்து கிளம்பி, சரியா 9 மணிக்கு கோவில் நுழைவாயில் கிட்ட போய்ட்டோம். சுமார் ஒரு மணி நேரம் அங்க காத்திருந்தும் இந்த ரெண்டு பேரையும் காணோம். சரி, சீக்கிரம் வந்து சாமி கும்பிட்டுட்டு போய்ருப்பாங்கன்னு நினைச்சு, நாங்க போய் கடல்ல குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு, திரும்பி நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு போய்க் கிட்டு இருந்தோம்.

போற வழில, மட்டை தூரமா எதையோ பார்த்துட்டு " டேய், அங்க பாருங்க டா, அந்த சத்திரத்துல படுத்துருக்கானே, அந்த பிச்சைக்காரனுக்கும், நம்ம காடு க்கும் ஒரே ரசனை டா ... போன மாசம் சூப்பரா இருக்குன்னு சொல்லி, காடு ஒரு புது T-Shirt வாங்கிட்டு வந்து, ஒரே அலப்பறை கொடுத்துட்டு இருந்தானே, அதே மாதிரி T-Shirt ஐ இங்க ஒரு பிச்சைக்காரன் போட்ட்ருக்கான் டா " ன்னு சொல்லி சிரிச்சான். 
காந்தி மெதுவா, "டேய் நில்லுங்கடா, அது அதே மாதிரி T-Shirt இல்ல, அதே T-Shirt தான். நம்ம கிறுக்கன் அந்த T-Shirt ஐ தான்டா போட்டுட்டு நேத்து பாத யாத்திரை கிளம்பினான். 

மட்டை உடனே அறிவுப் பூர்வமா, " ஏன்டா, கிறுக்கன் பாத யாத்திரை தானே வந்தான். வந்த எடத்துல, போட்டுருக்க T-Shirt ஐ கழற்றி ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுக்குற அளவுக்கு வள்ளல் ஆகிட்டானா? " ன்னு பக்கத்துல போனா .... 

...... கிறுக்க்கனும், வாய்க்காவும் அந்த பிச்சைக்காரனுக்கு கொஞ்சம் தள்ளி, ஆழ்ந்த நித்திரைல இருக்காய்ங்க. அவிங்க படுத்து இருக்குற கோலத்தைப் பார்த்து பதறிப்போய் பசங்க தட்டி எழுப்பினா ... 

கிறுக்கன் எழுந்து உக்கார்ந்து , கூலா... 
"டேய், நாயிங்களா ... நேத்து கிளம்பும் போது ஆளாளுக்கு Advice பண்ணீங்களே டா, பணம் எடுத்தியான்னு கேட்டீங்களா டா, வாய்க்கா வச்சிருப்பான்னு தான், நானே இவன இழுத்துட்டு வந்தேன். இந்த பரதேசி என்னை நம்பி வந்திருக்கு. 
சரி, ஆனது ஆகிபோச்சு. நடந்து வந்தது வேற பயங்கர களைப்பா இருந்ததா, சரி நீங்க எப்படியும் இந்த பக்கமா தான் வருவீங்கன்னு, இங்கயே Rest எடுத்துட்டு இருக்கோம். நீங்க போறப்ப எங்களைப் பார்க்காம போய்ட்டீங்க போல, பரவால்ல, இப்பவாது பார்த்தீங்களே, இல்லாட்டி திரும்பி வரும் போதும், பாத யாத்திரையாத்தான் வந்து சேர்ந்திருப்போம்." ன்னு ரொம்ப அசால்ட்டா சொல்லிட்டு , வாய்க்காவை கிட்டத்தட்ட தூக்கிட்டு எழுந்தான். ஏன் ன்னா வாய்க்கா அந்த நிலைமையில தான் படுத்து இருந்தான்.

"எல்லாம், சரி தான் டா, ஏன் போட்டுருந்த T-Shirt ஐ கழற்றி பிச்சைக்கரன்ட்ட கொடுத்துட்டு பனியனோட நிக்குற ?"

" ஓ அதுவா , விடிய காலையா இங்க வந்தோமா, பாவம் இவர் குளிர் ல ரொம்ப கஷ்டப் பட்டுட்டு இருந்தார், அதான் கொடுத்துட்டேன் டா, சரி விடுங்க டா , இதுக்குப் போய் கண் கலங்கிட்டு, வாங்க வந்து திங்கிறத்துக்கு எதாவது வாங்கிக் கொடுங்க, பசி உயிர் போகுது !"

பசங்க அப்படியே உருகிப் போய், bag ல இருந்து ஒரு சட்டையை கிறுக்கனுக்கு கொடுத்துட்டு , மயக்கத்துல இருந்த வாய்க்காவை தூக்கிட்டு சாப்பிட போனோம். 

போற வழில, "நீங்கல்லாம் என்னடா சாமி கும்பிட்டீங்க, என்னை பாருங்க டா, இந்த மாதிரி இல்லாதவங்களுக்கு தேவை யான சமயத்துல, எதையும் எதிர் பார்க்காம உதவுறது தான் டா, உண்மையான புண்ணியம்" ன்னு கிறுக்கன் சொல்லிட்டு வந்ததை எலலாம், பசங்க ரொம்ப பய பக்தியோட கேட்டுட்டே நடந்தோம்.... 
மட்டை feel பண்ணிக்கிட்டே சொன்னான், " ச்சே, இந்த கிறுக்குப்பய மனசுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன் !"

எல்லோரும் Background ல் பொருத்தமா ... "அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவரே ......." பாட்ட நினைச்சுப் பார்த்துக்கோங்க.

எச்சரிக்கை:
இந்த தொடரை படித்து, இந்நேரம் கிறுக்கனின் ரசிகையாக ( கிறுக்கனுக்கு எப்பவும் ரசிகைங்க மட்டும் தான் ) ஆகி இருப்பவர்கள், தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் )

தேவையில்லாத பின் குறிப்பு : 
சாப்பிட்டு முடித்து, மயக்கம் தெளிந்த பின், கிறுக்கன் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் கேட்காமல், வாய்க்கா கொடுத்த வாக்கு மூலம் :
"டேய், எப்படியோ கஷ்டப் பட்டு நடந்து வந்து சேர்ந்துட்டோம் டா, சரி நீங்க வர்ற வரை அந்த சத்திரத்துல தூங்கலாம்னு படுக்கும் போது, ரொம்ப கச கச ன்னு இருக்குன்னு, T-Shirt ஐ கழற்றி பக்கத்துல வச்சிருந்தான். கொஞ்சம் அசந்த சமயத்துல, அந்த பிச்சைக்காரன் அதை சுட்டுட்டான். நம்ம கிறுக்கன், அவன் கிட்ட எவ்வளவோ சண்டை போட்டு அதை பிடுங்க பார்த்தான், அவன் இவன மாதிரி கிறுக்கன் இல்ல, ரொம்ப தெளிவா எடுத்து மாட்டிட்டு, எங்க முன்னாடியே படம் காட்டிட்டு இருந்தான். கொஞ்ச நேரம், சண்டை போட்டு, போராடி, அப்பறம் கெஞ்சி, கூத்தாடி, அப்பறம் பேரம் பேசி, ஐஸ் வச்சு எதுவும் படியாம, கடைசில வள்ளல் பட்டம் எடுத்துக்கிட்டான். 
ஆனா பிச்சைக்காரன் கூட தாங்க முடியாத குளிர, நம்ம கிறுக்கன் தாங்கினானே, ச்சே, இவன் கிரேட் டா !" ன்னு சிரிக்காம சொல்லி முடிச்சான்.