Thursday, July 30, 2009

என் மகனின் முதல் ஆசிரியருக்கு!



ஐயா ,

இவன் எங்கள் வீட்டின் செல்ல இளவரசன் -இங்கே
இவன் வைத்தது தான் சட்டம் . இவனுக்கு
உலகில் அனைவரும் சமமானவர்கள் என்பதை
உங்கள் பாரபட்சமற்ற போக்கால் புரிய வையுங்கள்.

இவனுக்கு அ,ஆவோடு சேர்த்து வாழ்வின்
அரிச்சுவடியையும் சொல்லி கொடுங்கள்.
இவன் வீட்டை தாண்டிய உலகத்தை
முதன்முறையாக எட்டி பார்க்கிறான்,
இவனுக்கு பாடத்தோடு பூக்களையும் ,
பட்டாம்பூச்சிகளையும் ,பறவைகளையும்
ரசிக்க சொல்லி கொடுங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் அத்தியாயங்களை இவன்,
உங்கள் கண் கொண்டு வாசிக்க போகிறான்.
இவனை சிறு,சிறு அதிசயங்களிலும் வியக்க வையுங்கள்.

இவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,
எங்கள் உள்ளங்கைகளில் தான்.ஆனால்
வாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்
என்று சொல்லி கொடுங்கள்.

இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.

இவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.
இனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.

நட்பை போற்றச் சொல்லுங்கள்,
நல்லதை பாராட்டச் சொல்லுங்கள்,
திறந்த மனம் கொண்டிருக்கச் சொல்லுங்கள்,
திறம்பட செயலாற்றச் சொல்லுங்கள்.......
ஐயா,

இவன் வல்லவனாகவும்,
நிச்சயம் நல்லவனாகவும் வளர,
உங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.
நன்றி!

(சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !)



(Inspired from Abraham Lincoln Letters)



நட்புடன்,

பாலகுமார்.

Tuesday, July 28, 2009

தொலைந்து நிற்கிறேன் !



பால்சங்கும் ,"ஐடக்ஸ்" கண்மையும்
அப்படியேதான் இருக்கின்றன ‍நான் தான்
நடக்கப் பழகி தொலைந்து போனேன் !
அம்மா கை பருப்பு சாதமும்,
"ஹார்லிக்ஸ்" பாட்டிலும் ,
அப்படியே தான் இருக்கின்றன ‍ நான் தான்
ஐந்தாம் வகுப்பு முடிந்து போய் தொலைந்து போனேன்!
பல்லாங்குழியும், பக்கத்து வீட்டு அக்கா ஸ்பரிசமும்
அப்படியே தான் இருக்கின்றன -நான் தான்
அரும்பிய மீசையில் தொலைந்து போனேன்!
ஊர்த்திருவிழாவும்,கூட்டாஞ்சோறும்
அப்படியே தான் இருகின்றன -நான் தான்
விடுதியில் விழுந்து தொலைந்து போனேன்!
பிடித்த பாடமும், வகுப்பறை வாசமும்
அப்படியே தான் இருகின்றன - நான் தான்
பச்சை சுடிதாரின் ஒற்றை சிரிப்பில் தொலைந்து போனேன்!
முதல் கவிதை தொகுப்பும்,முடித்த பட்டமும்
அப்படியே தான் இருகின்றன -நான் தான்
மூளை விற்று வாங்கிய வேலையில் தொலைந்து போனேன்!
என் வாழ்கையும்,
கொஞ்சம் போராட்டமும்,
நிறைய கற்பனையும்!
என் சிறகுகளும்,
கொஞ்சம் ஆசையும்,
நிறைய வானமும்!
என் தேவதைகளும்,
கொஞ்சம் வரமும்,
நிறைய ஆசிர்வாதமும்!
அப்படியே ,அப்படியே தான் இருகின்றன -நான் தான்
சராசரியாய் மாறி முழுதாய் ...முழுதாய் தொலைந்து நிற்கிறேன்!!!!
(20/09/2004 அன்று எழுதியது)

Saturday, July 18, 2009

இன்று நல்ல நாள் தான் !



வாரந்தோறும் போவேன் தான்...
இன்று மட்டும் ஏனோ,
பதினாறு கைகளும், கைகளில்
பதினாறு திவ்ய ஆயுதங்களுமுடைய‌
சக்க‌ரத்தாழ்வார்
நல்ல மூடில் இருந்திருப்பார் போல...
நான் அர்ச்சனைத் தட்டில் காசு போடாத போதும்,
கையாயுதத்தைக் கீழே வைத்துவிட்டு
கழுத்திலிருந்து ஒரு மாலையைக் கழற்றி
என் கையினில் திணித்தார்
தலைகுணிந்து பெற்றுக் கொண்டு
மெல்ல நகர்ந்து விட்டேன்...

பிரகாரத்தை சுற்றும் போது
மாலை பாரம் மனதை அழுத்த,
திரும்பவும் வந்து உண்டியலில்
காசைப் போட்டு வெளியே வந்தேன்.
அப்பாடா, இன்று நல்ல நாள் தான்...
என்றும் இல்லாத திருநாளாய்
துளசி மாலை பெற்ற யோகம் எனக்கு,
நான்கு ரூபாய் மாலையை
ஐந்து ரூபாய்க்கு விற்ற யோகம்
சக்க‌ரத்தாழ்வார்க்கு!