Monday, November 18, 2019

சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).

 நாவல் (e-book) குறித்து:

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்கிறது, அடர்ந்த வனத்தினூடாக 8000 அடி உயர மலைப்பாதையில் இரவு முழுக்க நடக்க வைக்கிறது, எத்தனையோ அலைச்சல்களில் செத்துப் பிழைத்து வந்தாலும் மீண்டும் சாகசம் செய்யத் துணியும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?

மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.

ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
------

எனது புதிய நாவல் “சிவப்புப் பணம்” #Amazon #pentopublish2019 போட்டியில் இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பான புனைவு நாவலான இது உங்களுக்கு சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் என நம்புகிறேன்.
இந்த நாவலை (e-book) கீழ்க்காணும் இணைப்பில் வாங்கி ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நாவலை வாசித்து Amazonல் ”5 Star Rating” மற்றும் positive review (preferrably in english) எழுதவும். உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.
 
நன்றி
பாலகுமார் விஜயராமன்


Thursday, October 17, 2019

தெக்கூரானின் கதை - அசுரன் திரைப்படம் குறித்த பார்வை



'வெக்கை' நாவல் ரொம்ப முன்னாடி வாசித்தது. கதைக்கரு மற்றும் கதையோட்டம் தவிர காட்சிவாரியான நிகழ்வுகள் கிட்டத்தட்ட மறந்துவிட்ட்டது. 'அசுரன்' அந்நாவலைத் தழுவியது என்றதும் நாவலை மறுபடி வாசிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தி ஒரு புதிய படமாகப் பார்க்க வேண்டுமென்று காத்திருந்தேன். எனவே இது அசுரன் - வெக்கை பற்றிய ஒப்பீடு அல்ல.

படத்தின் முதல் பாதி காட்சிகள் முழுக்க லகானின் பிடி எங்குமே நழுவாமல், கச்சிதமாகக் கோர்க்கப்ப்பட்டிருக்கின்றன. தனுஷ் சிவசாமியின் குணவார்ப்புக்கு நிச்சயம் நியாயம் சேர்த்திருக்கிறார் அல்லது அவரது தனித்தன்மையால் மெருகேற்றி இருக்கிறார். அவரது மூத்த மகனாக வரும் டிஜேய். அருணாசலமும் துடிப்பான ஓர் இளைஞனை இயல்பாகக் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இடைவெளிக்குப் பிரகான முன்னிகழ்வு காட்சிகள், இளமையான தனுஷ், அதில் ஒரு சிறிய காதல், ஒரு பாடல் என்ற வட்டத்திற்குள் நின்றுதான் ஆட முடியும் என்ற நிலையில், மூல நாவலின் ஆன்மாவை சிதைக்காமல், வணிக எல்லை துருத்திக் கொண்டு தெரியாத வண்ணம் அழகாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் வெற்றிமாறன்.

முதல் பாதியில் இயல்பாய் வந்திருந்த “மாஸ்” காட்சிகள், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கனமற்று செயற்கையாக இருந்தன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். திரைக்கதைக்கான முதல் வரைவில் (first draft) இருந்திருக்கக் கூடிய முதல் பாதிக் காட்சிகளைக் காட்டியிலும் பின்பு சேர்த்திருக்க வாய்ப்புள்ள இரண்டாம் பாதி காட்சிகள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது போலத் தோன்றியன.

இன்றைய இணைய உலகில், ஒரு படம் வருவதற்கு முன்பே, படத்தின் தொழில்நுட்பம், கதையின் அவுட்லைன் மற்றும் படத்தில் பணிபுரிபவர்களின் மனவோட்டம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு பார்வையாளனுக்கு இருக்கின்றன. வெற்றிமாறன் போன்ற நுண்கலைஞனின் படம் எனும் போது, படம் குறித்த தேடல் இன்னும் விரிவடையவே செய்யும். அப்படி ஏற்றிக்கொண்ட தகவல்கள், படத்தைப் பார்க்கும் போது குறுக்கிடுவதை தவிர்க்க முடிவதில்லை. அசுரன் வெளி வருவதற்கு முன்பான பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் தான், முதன்முறையாக இரண்டாம் குழுவை (second unit) வைத்து சில காட்சிகளை எடுத்திருப்பதாகவும், தான் மிகக் குறுகிய காலத்தில் எடுத்த படம் இது எனவும் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார்.

படத்தில் பெயர் போடும் போது, இரண்டாம் குழுவின் இயக்குநர், படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராகிய மணிமாறன் என்று கண்ணில்பட்டது. படம் முடிகையில் மணிமாறன் பெயர் நினைவிலாட, இது இரண்டு இயக்குநர்கள் இயக்கிய படங்களின் கலவையோ என்ற எண்ணம் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு குறிப்பிட்ட காலத்தில் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிடும் வழக்கம் கொண்ட தயாரிப்பாளர் தாணுவின் சிக்கன நடவடிக்கைகளால், நுணுக்கங்களுக்குள் (detailing) செல்லாமல், குறிப்பிட்ட கால அளவிற்குள் எடுக்க முடிந்த காட்சிகளை வைத்து, விடுபட்ட இடங்களை தூரக்காட்சி மற்றும் பின்னணி வசனங்கள் மூலமாகக் கதையை நகர்த்த வேண்டிய கட்டாயம் இருந்திருக்குமோ என்றும் தோன்றியது. அதும்போக, நடிகர்களின் வாயசைவிற்கும், பின்னணி குரலுக்கும் ஏகப்பட்ட வசன மாற்றங்கள்.

எப்போதும் தேர்வுகளில் 98சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவன், ஏதேதோ நெருக்கடியினால் முழுதாய்ப் படிக்க நேரமில்லாமல் 80சதவீத மதிப்பெண் எடுத்தது போல இருந்தது ‘அசுரன்’. 80சதவீதம் என்பதும் மிகச் சிறந்த மதிப்பெண் என்ற எண்ணத்திலேயே இதைப் பதிவு செய்கிறேன். யோசித்துப் பார்த்தால், தயாரிப்பின் கால அளவு நீட்டம், அதற்குண்டான செலவுகள், கச்சிதத்தை நோக்கி மீண்டும் மீண்டும் மெனக்கெடுதல் ஆகியவற்றால், படம் நன்றாக இருந்தும் அதிகமாகும் தயாரிப்புச் செலவுகளால், வணிக ரீதியாக வெற்றியடைய முடியாமல் போவதைக் காட்டிலும், குறுகிய காலத்தில் நல்ல கதைகளை சீக்கிரமாக படமெடுத்து ஒரு ஸ்பார்க் தெறிக்கவிட்டு வணிகரீதியாகவும் வெற்றிப் படமாக ஆக்குவதே இன்றைக்குத் தேவை என்று தோன்றுகிறது. இத்தகைய படங்களின் வணிக வெற்றி மட்டுமே, தொடர்ந்து இது போன்ற படங்களைத் தயாரிக்க முன்வருவதற்கான உந்துசக்தி.

இந்த சிறு மனக்குறை கூட, வெற்றிமாறன் ஏற்கனவே நின்றிருக்கும் உயரம் காரணமாகவே. இதைத் தாண்டியும், ‘அசுரன்’ சிறந்த படம் தான். தனுஷ் இறுதிக் காட்சியில் சொல்லும், “படிப்பை மட்டும் தான் நம்மகிட்ட இருந்து புடுங்கிக்க முடியாது சிதம்பரம்” என்னும் வசனம் இக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே கருதுகிறேன். சமூக அடுக்கில் கீழே உள்ளவன், படித்து வந்தாலும் அந்தப் படிப்பு பயனற்றுப் போகிறது எனும் போது, அந்த வசனம் காலாவதியான ஒன்று என்ற கருத்தை இணையத்தில் பார்த்தேன். பாதாளத்தில் கிடக்கிறவன் கல்வி என்ற ஒற்றைக் கொம்பைப் பிடித்துத் தான் மேலேறி வர வேண்டியிருக்கிறது. இதற்கு முன் கல்வியின் மூலம் மேலேறி வந்தவர்களுக்கு அதன் போதாமைகள் தெரியலாம். ஆனால் இன்னும் கீழே கிடப்பவனுக்கு அதுதான் ஒற்றை வழி எனும் போது, அது குறித்து அவநம்பிக்கைகளை விதைக்கலாகாது. எனவே அசுரன் சொல்லும் “படிச்சு அதிகாரத்திற்கு வா சிதம்பரம். வந்து உனக்கு செஞ்ச கொடுமைய நீ யாருக்கும் செய்ய நினைக்காதே!” என்னும் செய்தி இன்றைக்கும் முக்கியமானது தான். 


******

Wednesday, October 9, 2019

குருவிகள் திரும்பும் காலம்


அழியும் ஊரின் சாட்சியங்களாய் வெற்றுத் திண்ணையைக் காத்துக்கிடந்த முடமான வயசாளிகளும், வாழ்ந்துகெட்ட ஞாபகத்தின் பாரத்தை சுமந்தபடி எந்தவித எதிர்பார்ப்புகளின் தளிரும் துளிர்விடாதபடியான கட்டந்தரை மனதோடு நடைபிணமாய்த் திரியும் சம்சாரிகளும், அத்துவானக்காட்டிற்குள் மைல்க்கணக்கில் நடந்துபோய் தும்பிக்கை நீள அகப்பை போட்டு உச்சிப்பகல் வரை அடைகாத்து காற்குடம் நிறைந்த கலங்கிய நீரைப் பொக்கிஷமாகப் பொதிந்துவரும் பெண்களும், கொடுக்காப்புளி ஞாபகத்தில் கருவேல நெற்றுகளைப் பறித்துத் தின்ற கசப்பை அடிவயிற்றிலிருந்து குமட்டி ஓங்கரிக்கும் சவலைப்பிள்ளைகளும் தவிர உயிர்ப்பின் நடமாட்டம் என எதுவும் எஞ்சியிருக்காத அந்த ஊரின் சித்திரம் இரண்டு வாரங்களாய் வளர்மதியின் கனவில் அலைக்கழித்தபடியே இருந்தது.

தலைப்பிள்ளையைப் பாதிக் கருவில் பறிகொடுத்த பிறகு, மூன்று வருட போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் அடுத்ததை வயிறு சரியத் தாங்கியிருந்தாள். தனக்கு நடுக்காட்டம் தந்த கெட்ட கனவுகளை விரட்டும் பொருட்டு, கால்மாட்டில் போட்டு வைத்திருந்த விளக்குமாறு சர்ப்பமாகத் தோற்றம் கொண்டு அவள் காலை உரசியபடி இருந்தது. அதனை லேசாக விலக்கித் தள்ளிவிட்டவள்,  தூக்கமும் பிடிக்காமல் திரும்பிப்படுக்கவும் முடியாமல் ஒருக்களித்தபடி, சுண்ணாம்புக் காரை பொக்குவிட்டு பெயர்ந்துபோயிருந்த சுவரை மெல்லிய விளக்கொளியில் வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தாள். அவளின் முதுகுக்குப் பின்னே குப்புறப் படுத்திருந்த தனசேகர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நள்ளிரவைத் தாண்டி, அதிகாலை வேளையில் தன்னையும் அறியாமல் அவளது கண்கள் செருகிய அடுத்த அரைநொடி, பாழ்பட்ட எச்சங்களைச் சுமந்து திரியும் அந்த ஊர் கனவில் வந்ததை அவளால் தவிர்க்கமுடியவில்லை.

ஒரே கட்டிடத்தில், பக்கவாட்டில் கீழே நான்கும் மேலே நான்குமாக இருந்த கூட்டு வீடுகளின் கீழ்த்தளத்தில் கடைசி வீட்டில் அவர்கள் வசித்தனர். பத்துக்கு பனிரெண்டில் ஒற்றை படுக்கையறை, ஒரு ஆள் நின்று சமைக்கும் அளவிற்கான அடுப்படி, நான்கு பேர் உட்காரும் அளவுக்கான ஹால் என்று சிக்கனமாகக் கட்டப்பட்ட தொகுப்பு. அதில் தெருவைப் பார்த்திருக்கும் தலைவாசலை இந்த வாரம் கூட்டிப்பெருக்கிக் கோலமிடவேண்டிய முறை வளர்மதியுடையது. சரியாகத் தூங்காததால், எழும்போதே தலை வெடித்துவிடுவது போன்ற பெருத்த வலி எடுப்பது இந்த இரண்டு வாரங்களில் அவளுக்கு அன்றாட நிகழ்வாகியிருந்தது. தனசேகரை வேலைக்கு அனுப்பிவிட்டு காலை உணவுக்குப் பின் சற்று நேரம் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்து இருந்தால் தலைவலி சரியாகிவிடும் என்று நினைத்தவளாய் தண்ணீர் வாளியையும் கோலப்பொடி டப்பாவையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க, ரோட்டுக் குழாயில் வரிசை போட்டு நான்கு மணி நேரம் காத்திருந்து அடித்து வர வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒருநாள் வாசல் தெளிக்காவிட்டாலும் ஓனரம்மா வேலை மெனக்கெட்டு வீட்டுக்குள் வந்து அரைமணி நேரம் வகுப்பெடுக்கும். வளர்மதி திருமணம் முடிந்த கையோடு இந்த வீட்டில் குடியேறி மூன்று வருடங்களுக்கு மேலாகவிட்டது. வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இல்லை. வாசலில் இருக்கும் குழாயில் தான் எட்டு வீட்டுக்காரர்களும் முறை வைத்து நல்ல தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் போக புழங்குவதற்கான உப்புத் தண்ணீரை தெருமுக்கில் இருக்கும் அடி குழாயிலிருந்து பிடித்துவர வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை தவிர வேறு பெரிய குறைகளும் இல்லாத சிறிய வீடு. அவர்கள் இருவருக்கு அது போதுமானதாகவே இருந்தது. மற்ற வீடுகளிலும் என்ன வாழ்கிறது. இந்த கோடையில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குப் போன பிறகு, தெருவில் இருக்கும் எல்லா வீடுகளிலும் மோட்டர் போட்டால் காற்றுதான் வருகிறது. வாரத்துக்கு இரண்டு நாள் வரும் காப்பரேஷன் நல்ல தண்ணீர் போக, புழக்கத்துக்கு எல்லோரும் தெருமுக்கில் இருக்கும் அடிகுழாயைத் தான் நம்பி இருக்கிறார்கள்.

முன்வீட்டு அக்கா வளர்மதியின் முகம் வீங்கிப்போய் இருந்ததைப் பார்த்து, நன்றாக நீர் போகவதற்கு பார்லித் தண்ணீர் வைத்துக் குடிக்கச் சொன்னாள். சரியென்று தலையாட்டிவிட்டு, வாசலைப் பெருக்கி பேருக்கு நான்கு கை நீரள்ளித் தெளித்துவிட்டுக் குனிந்து கோலமிடுகையில் சுருக்கென இடுப்பு வலிப்பது போலிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் வேலையை முடித்து வீட்டிற்குள் வந்து, தனசேகருக்கு மதியத்துக்குக் கட்டிகொடுத்துவிட வேண்டியவற்றையும், காலைக்கானதையும் தனித்தனியாய் சமைத்து எடுத்துவைத்துவிட்டு நிமிர்ந்தாள். தனசேகர் குளித்து முடித்துவந்து சாப்பிட உட்காருகையில் வளர்மதி வழக்கத்தைவிட அதிகம் சோர்ந்துபோயிருப்பதைக் கவனித்தான். மருத்துவமனைக்குச் செல்லலாமா என்றதற்கு வேண்டாமென்றவள், முந்தைய இரவு தனக்கு வந்த கனவினைக் கூறினாள். அதேபோன்று, சென்றவாரம் முழுவதும் அவள் அந்த ஊர் பற்றிய துர்கனவுகளைச் சொன்னபோது உதாசீனப்படுத்தி எரிச்சலடைந்தவன், இந்த முறை ஏதோ ஆழ்ந்த யோசனைக்குச் சென்றான். வெகுநேரமாய் தட்டு காலியாகாமல் இருந்ததைப் பார்த்தவள், அவனைச் சாப்பிட நினைவுபடுத்திவிட்டு, தன் கனவின் தீவிரத்தன்மையை அவன் உணர்ந்ததை எண்ணி பெருமூச்சுவிட்டாள்.

வளர்மதியின் கனவில் வந்த அந்த ஊர் தனசேகரின் பூர்வீக ஊரான பெரியகுட்டம். அவனது பால்யத்தில் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு மதுரைக்கு வந்தவர்கள், வந்த இடத்தில் வேறூன்றிவிட்டனர். அவனது சிறுவயதில் எப்போதேனும் முளைப்பாரித் திருவிழாவிற்குச் சென்றுவந்தது, அவனது பெற்றோர்கள் இறந்தபின் ஊருக்குச் செல்வது அடியோடு நின்றுவிட்டது. வானம் பார்த்த பூமியில் பசுமை மறைந்து, கரட்டுக்காடாய் மாறிய ஊரிலிருந்து ஒவ்வொரு குடும்பமாய் அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்தபின் ஊரே தரிசாகிப்போனது. அவன் மகிழ்வாய் இருக்கும் அரிய தருணங்களில் அவன் தந்தை அவனுக்குச் சொன்ன, ஊரோடுத் தன்னைப் பிணைத்திருக்கும் சில பால்யக் கதைகளை அவளிடம் உற்சாகம் பொங்கச் சொல்வான். அன்றாடங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து செக்கு மாட்டு வாழ்க்கையாய் நூற்பாலையில் சுற்றிக்கொண்டிருப்பவனுக்குள் ஒளிந்திருக்கும் சிறுவன் எட்டிப்பார்க்கும் அத்தகைய தருணங்களை அவள் தவறவிட்டதே இல்லை. 

பெரியகுட்டம் கிராமத்தை வளர்மதி ஒரு முறைகூட நேரில் பார்த்ததில்லை. ஆனால் தனசேகர் சொன்ன கதைகள் மூலமாக ஒரு அழகிய சித்திரத்தையே மனதிற்குள் வரைந்து வைத்திருந்தாள். அதற்கு மாறாக, முதல் முறை நாள் தள்ளிப்போய் தான் கருவுற்றிருப்பதாய் அவள் நம்பத் துவங்கிய அன்று இரவு அந்த ஊரைப் பற்றிய மங்கலதானதொரு சித்திரம் அவள் கனவில் வந்தது. அக்கனவின் தன்மை இன்னதென்று பிரித்தறிய முடியாமல் பதறிப்போய் வியர்த்து விறுவிறுத்து எழுந்து அமர்ந்தாள். பின் நான்காவது மாதத்தில் மீண்டும் அத்தகைய துர்கனவினவினூடாகவே அடிவயிற்று வலியோடு பாவாடை முழுதும் உதிரம் கசிய கரு கலைந்து நழுவுவதை உணர்ந்தாள். அதன் பின் அத்தகைய கனவுகள் வராமல் இருந்தாலும் கூட, ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள், இருபது நாட்கள் தள்ளிப்போவதும், சோதித்துப் பார்க்கும்போது கர்ப்பமில்லை என்பதும் தொடர்கதையாகியது. பின், பிசிஓடிக்காக மாத்திரைகள் எடுக்கத் துவங்கியதும், ஒவ்வொரு மாதமும் சரியான நாளில் தீட்டானது. ஆனால், மாத்திரையின் விளைவா அல்லது அவளின் மனப்பதற்றமா தெரியவில்லை, தீட்டாவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வயிற்று வலியின் அறிகுறிகள் தெரியும் போதே, எரிச்சலும் தூக்கமின்மையும் அவளை ஆட்டிப் படைக்கத் துவங்கின. அப்படியும் பின்னிரவில் சோர்வினால் கண்ணயர்ந்ததும், அந்த ஊர் பற்றிய துர்கனவுகள் அவளைச் சூழந்துகொள்ளும். அந்த மனப்போராட்டத்திலிருந்து வெளிவரவும் முடியாமல், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போன்ற மனநிலையிலிருந்து தப்பிக்க எண்ணி ஒரு முறை டாக்டரிடம் கேட்டபோது, பீரியட்ஸை சீராக்க, பக்கவிளைவுகளாய் வரும் அத்தகைய வேதனைகளைக் கடந்துதான் ஆக வேண்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

ஒரு வருடம் மாத்திரை சாப்பிட்ட பின், டாக்டரின் அறிவுரைப்படி மாத்திரையை நிறுத்திய அடுத்த மாதமே மீண்டும் கரு உண்டானது. மாத்திரைகளின் பக்கவிளைவுகளில் இருந்து விடுதலை, அதோடு கரு உருவாகியிருந்தது என்ற இரட்டை மகிழ்ச்சியில் அவள் மனம் அமைதியடைந்தது. அதிலிர்ந்து கடந்த எட்டரை மாதங்களும் முகத்தெளிச்சியும், அமைதியும் கூட, கெட்ட கனவுகளின் அறிகுறிகள் எதுவுமின்றி நிம்மதியாகத் தூங்கி எழுந்தாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிரசவத்திற்கான நாள் நெருங்க நெருங்க மீண்டும் ஊர் பற்றிய கொடுங்கனவுகள் தினமும் வந்து அவள் தூக்கத்தையும் மனநிம்மதியையும் கெடுத்தது.

மாலை வேலை முடிந்து தனசேகர் வீட்டிற்கு வரும்போது, வளர்மதியின் நெற்றி நிறைய மஞ்சள் காப்பும், குங்குமமும் இருந்ததைப் பார்த்து, ’எங்கெயாவது கோவிலுக்கு போய்ட்டு வந்தியா?’ என்றான். ’சாயங்காலமா ஓனரம்மா வந்தாங்க. நான் சோர்ந்து போயிருக்கதைப் பார்த்து, என்ன ஏதுன்னு கேட்டாங்க. நான் கண்ட கனவாப் பத்தி சொன்னேன். குலதெய்வத்துக்கு ஏதாச்சும் குறையிருக்கும். அதான் பூர்வீக ஊரை அடையாளம் காட்டுதுனு சொன்னாங்க’  என்றாள். அதை கவனித்தும் கவனியாதவன் போல, காக்கி சட்டையைக் கழட்டி கொடியில் போட்டுவிட்டு, கைலிக்கு மாறியபடி, ‘காபி போடு” என்றான். அமர்ந்திருந்தவள் வலது கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தாள். அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த பொட்டலத்தில் இருந்து ஒரு தேய்ங்காய் போளியையும், தூள் வெங்காய பஜ்ஜியையும் ஒரு தட்டில் வைத்து, வாசலில் முகம் கழுவிவிட்டு வந்தவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கியபடி, அடுத்து என்ன என்பது போல லேசாகச் செருமினான். அதற்காகவே காத்திருந்தவள் போல, ’ஏங்க, ஒரு தாட்டி நம்ம குலசாமி கோயிலுக்கு போய்ட்டு வருவோமா?’ என்று மெதுவாகக் கேட்டாள். அவன் என்ன நினைத்தான் என்று அவனது முகக்குறிப்பில் அவளால் உணர முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தபடி நின்றாள். அவன் இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு, ‘பார்ப்போம்” என்று மட்டும் கூறினான்.

தன் ஆயுள் முழுதும் செக்கில் சுற்றி மொளி தேய்ந்து இறந்துபோன காளையின் காற்குளம்பு எலும்பில் ஏற்றி வைத்த பந்தம் அணையப் போவது போல மாடத்தில் படபடத்து எரிந்தபடி இருந்தது. வாசல் திண்ணையில் புரண்டு படுத்திருந்த பிறழ்மனம் கொண்ட பதின்ம வயதினன் ஒருவன், இருளைக் கக்க வரும் வலுசர்ப்பங்களை தன் கால்களைப் பிணைத்திருக்கும் சங்கிலியால் விரட்டியடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் முன்முற்றத்தின் நடுவே வாழை இலையில் குவித்து வைத்திருந்த அவித்த மொச்சைப் பயிறு படையலைச் சுற்றி ஒப்பாரிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படையலுக்கு உரியவனான மூப்பன் வீட்டுக்கு வெளியே முச்சந்தியில், குத்துக்காலிட்டு அமர்ந்து கன்னத்தில் கைவைத்தபடி, மையிருட்டில் தனக்கு முன்னிருக்கும் கொட்டாங்குச்சி நீரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். பளிங்கைக் கண்களாய்க் கொண்ட ஊர்க்காவல் நாய்கள் மூப்பனுக்குச் சற்றி தள்ளி நின்றபடி, இடைவிடாமல் ஊளையிட்டபடி இருந்தன. அந்த நாய்களின் ஓலம் வளர்மதியின் செவிப்பறைகளுக்குள் விடாமல் ஒலித்தபடி அவளை எங்கோ துரத்திக்கொண்டே இருந்தது.

பதறியடித்து எழுந்தவளின் அலறல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகரையும் அச்சம்கொண்டு எழச் செய்தது. வேகமாக எழுந்தவன், அவள் தலைமாட்டில் வைத்திருந்த தண்ணீர் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒரு மடக்கு குடித்தவள், மீண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவளுக்குப் பின்புறம் அமர்ந்திருந்தவன் மெதுவாக அவளது முதுகைத் தடவிக் கொடுத்தான். அவள் உடல் படபடத்து நடுங்கியதை அவனால் உணர முடிந்தது. அவள் பயம் போக்க, ஊருக்குச் சென்று குலசாமியைக் கும்பிட்டு வர வேண்டும் என்று தீர்மானித்தான்.

மதுரையிலிருந்து கமுதி செல்லும் பேருந்தில் நல்லூர் விலக்கில் இருங்கி அங்கிருந்து மூன்று மைல்தூரம் ஓடைப்பாதையில் நடந்து தனது பெரியகுட்டம் கிராமத்திற்குச் சென்றது அவனக்கு நினைவிருந்தது. இப்போது கமுதி வரை சென்று அங்கிருந்து ஏதேனும் ஆட்டோ பிடிக்கலாம் என்று எண்ணியவனுக்கு, பேருந்து நடத்துநர் நல்லூர் விலக்கிலிருந்தே பெரியகுட்டத்திற்கு ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன என்ற கூறிய தகவல் வியப்பாக இருந்தது. ஆளரவமற்று அழிந்த ஊரில் யாருக்காக ஆட்டோக்கள் ஓடுகின்றன என்ற கேள்வியும் அவனது குழப்பத்தை அதிகரித்தன.

முன்னொரு காலத்தில், விதையில்லா பயிர்களை விளைவிக்கத் துவங்கிய நாளில்தான் அந்த ஊரின் அழிவுக்கான விதை விழுந்தது என்று சொன்ன குருவிக்காரனை குடியானவர்கள் எல்லாம் சேர்ந்து கல்லால் அடித்துத் துரத்தியதாகவும், இரத்தக் காயங்களுடன் அவன் அந்த ஊரை விட்டுச் செல்லும் பொழுது அந்த ஊரிலிருந்த குருவிகள் உட்பட அனைத்து பறவைகளும் அவனுடன் சென்று விட்டதாகவும், அப்போது அவன் காகங்களை மட்டும் ஊரிலிருக்கச் சொல்லி கட்டளையிட்டதால், கோபத்தில் அவை தினமும் விடிகாலையில் ஊரிலுள்ள குடியானவர்களை சபித்துக் கொண்டிருப்பதாகவும் தனசேகரின் தந்தை சொன்ன கதை ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஊர் பற்றிய தந்தையின் கதைகளோடு அவனும், அவன் அருகில் பதற்றமும் கவலையும் சூழ்ந்தவளாக வளர்மதியும் பேருந்தில் பயணித்தனர்.

தற்காலிக பஞ்சத்தைத் தீர்க்க, உலங்கூர்தியில் மூலம் ஊரெங்கும் கருவேல விதைகளைத் தூவ அரசாங்கம் உத்தரவிட்ட நாளில் தாங்கள் பருத்தி போட்ட காடெல்லாம் பாழாய்ப்போனது என்ற தனது தந்தையின் ஓலம் தனசேகரின் மனதில் இப்போது ஒலித்தது. கருவேலமரங்கள் காற்றெங்குமிருந்த ஈரப்பதத்தை உறிஞ்சி வளர்ந்து, பின் தமது தண்டையும், தூரையும் கரிமூட்டமாகி ஊர் முழுவதையும் சுடுகாடாக்கிவிட்டு மூட்டை மூட்டையாய் சுமையூர்திகளில் சவ ஊர்வலம் போன கதைகளையும், இனி அங்கு நமக்கு வேலையில்லை என்று பதறித் திசைமாறிச் சென்ற கருமேகங்களை சமாதானம் செய்து அழைத்துவந்து மழை பெறவைக்கவும், தரிசாகிப் போன நிலங்கள மீட்கவும் வழியில்லாமல், அருகிலும் தூரத்திலுமாக புலம்பெயர்ந்து பசியாற்றப் பழகியிருந்த தனது தலைமுறைக் கதைகளை நினைத்தபடியே அமர்ந்திருந்தவனின் தோளில் சாய்ந்து கண்ணயர்ந்தபடி வந்தாள் வளர்மதி.

நல்லூர் விலக்கில் அவர்கள் இறங்கும்போது அநேகமாக பேருந்தில் பாதி காலியாகி அவர்களுடன் இறங்கியது. தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களைப் போல இருந்தவர்கள் அங்கிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஏறினர். தனசேகர் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் சந்தேகத்தோடு, பெரியகுட்டம் என்று இழுக்க, அவர் ‘ஏறுங்க, எல்லாரும் அங்க தான். ஆளுக்கு பத்து ரூபாய்’ என்று வண்டியைக் கிளப்பினார். பிள்ளைத்தாச்சிக்கு கொஞ்சம் இடம்விட்டு மற்ற பெண்கள் ஆட்டோவை நிறைத்தனர். ஓட்டுநருக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த தனசேகர், ‘பெரியகுட்டத்துல ஏதேனும் வேலை நடக்குதா?’ என்பது போல ஓட்டுநரிடம் மெதுவாய்க் கேட்டான்.
‘என்ன தம்பி வேலைனு சாதாரணமா கேட்டுப்புட்டீங்க. சுத்துவட்டாரமே எவ்ளோ பரபரப்பா ஓடிட்டு இருக்கு. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க’
‘இல்லண்ணே, நமக்கு சொந்த ஊர் பெரியகுட்டம் தான். ஊருப்பக்கம் வந்து வருஷக்கணக்காச்சு. குலசாமியக் கும்பிட்டுப் போகலாம்னு இப்போதான் வாறோம்’.
‘பெரியகுட்டம் ஊருல மக்க நடமாட்டம் இல்லாம இருந்தது உண்மைதான். ஒரு ஆறுமாசம் முந்தி வடநாட்டு சேட்டு ஆளுங்க ஏக்கர் கணக்குல சுத்துவட்டாரத்து நிலங்களை விலை பேசி வாங்குனாங்க. அத்துவானக் காட்டுக்குள்ள, மானம் பார்த்த பூமியா கிடக்குற தரிசு நிலத்தை ஆயிரக்கணக்குல காசு போட்டு வாங்குறானுக கிறுக்குப் பயலுகன்னு, ஊரக் காலி பண்ணிட்டு எங்கெங்கோ போய் செட்டிலானவுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா வந்து பத்திரம் முடிச்சுக் கொடுத்தாங்களே. ஊரக் கெட்டிப் புடிச்சுட்டுக் கெடுக்குற கொஞ்சம் குடியானவங்க தான் பாக்கி. உங்களுக்கு அது பத்தி எதுவும் தெரியாதா?”
“இல்லண்ணே, நாங்க ஊரை விட்டுப் போனதும், நிலம் நீச்சு எல்லாத்தையும் பங்காளிங்க பராமரிப்புல விட்டுவிட்டு வந்துட்டார் அப்பா. அதுக்கப்புறம் நான் வந்து போய் இருக்கல. ஊர்க்காரவுங்க யாரு கூடயும் அவ்ளோ நெருக்கத்துல இல்லை. சரி, வடக்கத்தி சேட்டுக எதும் தொழிற்சாலை கட்றானுகளா… பரவால்ல, ஊரு முன்னேறுனா நல்லதுதான்.”
“மயித்துல முன்னேத்துவானுக. எரநூறு வருஷத்துக்கு முந்தி இந்த பகுதி முழுக்க பாம்பாறுன்னு ஒரு பெரிய ஆறு ஓடுன படுகை தம்பி. சுமார் நூறு அடிக்குக் கீழே பெரியகுட்டம் முழுக்க நஞ்சை, புஞ்சை, கரட்டுக்காடு, கருவக்காடு எல்லா இடத்துலயும் சுத்தமா சலிச்ச தங்கம் போல ஆத்து மணல் அடுக்கடுக்கா கொட்டிக் கிடந்திருக்கு. இன்னிக்கு நெலமைக்கு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சொத்து. அதை வடக்கத்தியானுக எப்படியோ மோப்பம் பிடிச்சு உள்ள வர்றானுக. நம்ம ஆளுகளும் வெவரம் தெரியாம, தண்ணி இல்லாத காட்டை வச்சு என்ன பண்ணன்னு வந்த வெலைக்கு வித்துட்டுப் போறாங்க.”

பேசிக் கொண்டே ஆட்டோ ஓட்டி வந்தவர், பெரியகுட்டம் கிராமத்தின் எச்சமாய் இருந்த சிதிலமடைந்த வீடுகளைக் கடந்து, கிழக்குப் பக்கம் வரண்டு போயிருந்த ஊரணியைத் தாண்டி ஆட்டோவை நிறுத்தினார். முன்னும் பின்னுமாக பத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வந்து நின்றன. ஆண்களும் பெண்களுமாக அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கிழக்குப் பக்கமாக நடக்கத் துவங்கினர். ஊரணியைத் தாண்டி ரெண்டு பர்லாங்கு பருத்திக் காடுகளின் வழியே சென்றால் தென்திசை ஓரத்தில் பாம்பாளம்மாள் கோவில் வரும் என்று தனசேகருக்கு நினைவிருந்தது. ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியுமாண்ணே. போய் சாமி கும்பிட்டுட்டு இதே ஆட்டோல விலக்கு வரை வந்துருவோம்’ என்றான். அவர் ’சரி காத்திருக்கிறேன்’ என்றதும் தனசேகரைத் தொடர்ந்து, வளர்மதியும் மெதுவாக ஆட்டோவில் இருந்து இறங்கினாள். சாமி கும்பிட இங்கே எதுவும் கிடைக்காது என்பதால் மதுரையிலிருந்தே தேங்காய், பழம், சூடம் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள். அவளிடமிருந்த கட்டைப் பையை வாங்கியவன், சற்று தூரம் நடந்தனர். கோவில் திசையை உத்தேசித்துத் திரும்பியவன் விநோதமான காட்சிகள் தெரிந்தன.

அங்கே பருத்திக் காடுகள் இருந்த எந்த அடையாளமும் இன்றி, ஏக்கர் கணக்கில் சுமார் நூற்றைம்பது அடிக்குக் குறைவில்லாத ராட்சச பள்ளத்தாக்குகளும், அவற்றைச் சுற்றி நீண்ட ஓடுபாதைகளின் மீது லாரிகள் செல்லும் பாதைகளுமாக மிகப் பெரிய மணல் குவாரியைப் போல அந்த சுற்றுவட்டாரமே காட்சியளித்தன. பத்துப் பதினைந்து ராட்சச கிரேன்களும், ஜே.சி.பி கனரக ஊர்திகளும் நடுவில் அலைந்தபடி இருக்க, சுற்றி நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நின்றிருந்தன. மிகப்பெரிய இயந்திரக் கைகள் பள்ளத்தாக்குகளில் பொதிந்து பரவிக் கிடக்கும் பொன்னிற ஆற்று மணலை அள்ளி அள்ளி, வரிசையாக நின்றிருந்த லாரிகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன. 

பருத்திக் காடுகளின் இடையே தென்திசையோரமாய் இருந்த ஒற்றைக் குத்துக்கல் தான் தனசேகரின் குலதெய்வமான பாம்பாளம்பாள் கோவில். இப்போது திசைகெட்டு திணை கெட்டுக் கிடக்கும் அந்தப் பள்ளத்தாக்குகளையும் ஓடுபாதைகளையும் பார்க்க, தனசேகருக்குத் தன் ஈரல்குலையை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போலிருந்தது. அவன் அப்படியே பிரமை பிடித்தவனைப் போல நிற்க, அந்நிலக் காட்சிகளைப் பார்த்த வளர்மதியின் கண்களில் இன்னெதென்று தெரியாமல் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவள் கேவியழும் தேம்பலை உணர்ந்த தனசேகர் சுயநினைவுக்கு வந்தவனாய் அவளைத் தேற்றுவது போலத் தோளோடு அணைத்தான். அவனது இடக்கையில் இருந்த கட்டைப்பையின் பாரம் இன்னும் இன்னும் அழுத்தத் துவங்கியது. மணல் குவாரிக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவர்களைக் கடந்து நடந்துகொண்டிருந்தார்கள். தான் வாழ வந்த குடும்பத்தின் மூதாதையர்களின் உடல் பொருள் அனைத்துமாக அவர்களுக்குப் பசியாற்றிய விளைநிலங்களின் அடிமடியை அறுத்து அவை குடல் சரியக் கிடக்கும் இந்நிலையைக் காணத்தான் இத்தனை வருடங்கள் கழித்து பாம்பாளம்பாள் தன்னை இங்கே அழைத்தாளா என்றூ விசும்பியபடி இருந்தாள் வளர்மதி. 

குனிந்த தலை நிமிராமல், திரும்பிய இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள வார்த்தைகள் அனைத்தும் தூர்ந்துபோனதாய்த் தோன்றியது. செல்லும் முன், குலசாமிக்கென தாங்கள் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அரூபமாய் பாம்பாளம்பாள் அங்கே தான் எங்கேயோ குடிகொண்டிருக்க வேண்டும் என்று தனது மனதை ஆற்றுப்படுத்திய வளர்மதி, தென்கிழக்கு திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு, நின்ற இடத்திலேயே தேங்காயை உடைத்து, வழிந்த நீரை நிலத்துக்கு விளாவி, குனிந்து சூடம் பாக்கெட் மொத்தத்தையும் அங்கேயே குவித்துப் பொருத்தி கண்களின் ஒற்றிவிட்டு, அந்த மண்ணை எடுத்து நிலக்காப்பாய் நெற்றியிலும், கழுத்திலும், வயிற்றிலும் பூசிக்கொண்டாள். நிலக்காப்பை அடி வயிற்றில் பூசுகையில் பனிக்குடம் நிறைந்து தளும்புவதை, அது உடைந்து ஒரு புதிய உயிர் ஜனிக்கும் தருணம் சமீபிப்பதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவளைத் தொடர்ந்து தனசேகரும் சூடத்தைத் தொட்டு கும்பிட, இருவரும் சற்று தூரத்தில் காத்திருக்கும் ஆட்டோவை நோக்கி நடக்கத் துவங்கினர்.

ஆட்டோவை நெருங்கும் போது, குவாரி பக்கமிருந்து கூச்சலும் குழப்பமுமாய் பெருங்குரலெடுத்தபடி ஆண்களும் பெண்களும் வேகமாக ஓடி வந்தனர். இவர்களைக் கடந்து செல்பவர்களை என்ன என்பது போல இவர்கள் பார்க்க, அடுத்து வந்த ஒரு நடுத்தர வயது பெண், “நிலமும் பொம்பளதானே. அவ அடிமடி வரை குதறி எடுத்தா சும்மா இருப்பாளா. மொத்தமா பொங்கிட்டா. நூறு அடிக்கு மேல தோண்டுன அத்தனை பள்ளத்துலயும் ஆயிரக்கணக்குல ஊத்துக்கண் ஒரே நேரத்துல திறந்து நாலு, எட்டு, பதினாறு திசைகள்லயும் மடை வெள்ளமா பீச்சி அடிக்குறா. உள்ள நின்னு மண்ண அள்ளுன ஆளு, அம்பு, சேனை, மெசினு, வண்டி, லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் முக்கி ஏப்பம் விட்டுட்டா. குவாரி முழுக்க வெள்ளக்காடு. சீக்கிரம் வண்டியைக் கிளப்பிட்டு நீங்களும் வெளியேறுங்க.” என்றபடி ஆவேசமாகக் கத்தியபடி அந்தப் பெண் ஓடினாள். இவர்கள் அவள் சொல்வது இன்னதென்று புரிந்து விளங்கிக் கொள்வதற்குள் கிழக்குப் பக்கமிருந்து குவாரித் தடுப்புகளைப் ஊடாக முதலில் ஊர்ந்தும், சற்று நேரத்திற்கெல்லாம் பெருகி ஓடிவந்த ஊற்றுத் தண்ணீர் கீழே பூஜை செய்துவிட்டு மண்ணில் வைத்திருந்த தேய்ங்காய் முடிகளை சுழற்றி அடித்து அள்ளிக்கொண்டு, இவர்களின் கால்களைத் தழுவியபடி ஊரணியை நோக்கி பெருக்கெடுத்து ஓடியது.

****** 
நன்றி: கனலி http://kanali.in/kurivakal-thirumbum-kaalam/

Friday, September 20, 2019

பாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்.

“உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன்”
-பாலகுமார் விஜயராமன் - வாசகசாலை நேர்காணல்
 நேர்கண்டவர் : க. விக்னேஷ்வரன்

எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மதுரையை சார்ந்தவர். பொறியாளர். தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார். தற்போது தனது பணியின் காரணமாக ஒசூரில் வசிக்கிறார். இதுவரை புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு), சார்லஸ் புக்கோவ்ஸ்கி வின் அஞ்சல் நிலையம் (நாவல்), ஆலன் கின்ஸ்பெர்க் யின் Howl மற்றும் கவிதைகள் (கவிதை தொகுப்பு) ஆகிய படைப்புகள் எழுதி தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க இளம் படைப்பாளி.! தனது மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்காக வாசகசாலை விருதும் பெற்றவர். வாசகசாலை இணையதளத்திற்காக அவரை நேர்காணல் கண்டது மகிழ்ச்சியான அனுபவம்.


விக்னேஷ்: வணக்கம் சார், பொதுவான கேள்வியில் இருந்தே தொடங்குவோம். நீங்கள் வாசிப்புக்குள் வந்த பின்புலத்தையும் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உங்கள் சுய படைப்புகளை எழுத ஆரம்பித்ததைப் பற்றியும், அதிலும் குறிப்பாக மொழிபெயர்ப்புக்குள் வந்தது பற்றியும் எங்களுக்கு சொல்ல முடியுமா?

பாலகுமார்: வணக்கம் விக்னேஷ். பள்ளிப்பருவத்தில் ஆண்டுதோறும் கோடைக்கால விடுமுறைக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் என் அம்மாயி (அம்மாவின் அம்மா) ஊருக்குப் பேரப்பிள்ளைகள் செல்வோம். அங்கு எங்கள் மாமா படித்துவிட்டு மூட்டை மூட்டையாகப் போட்டுவைத்திருந்த கிரைம் நாவல்கள் எனக்குப் பொக்கிஷம். திகட்டத் திகட்ட ஒரு மாதம் உட்கார்ந்து வாசித்துவிட்டு ஊர் திரும்புவேன். “உனக்கு சேனை வைத்தபோது, சக்கரைத் தண்ணீருக்குப் பதில், பேனா மையைத்தான் தொட்டுவைத்தோம். அதனால் எப்போதும் பேப்பரில் மை கொட்டியிருந்தால் கூட அதையும் வாசித்துக்கொண்டிருக்கிறாய்” என்று சிறுவயதில் என் அம்மா விளையாட்டாய்க் கூறியது நினைவிலிருக்கிறது. அதில் பெருமைகொள்ள ஒன்றுமில்லை. இயல்பாகவே வாசிப்பு எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக அமைந்தது. ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ.. கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்கே அருகிலிருந்த வாத்தியார் வீட்டிலிருந்து எடுத்துவந்து படித்த புத்தகம், அதுவரையான வாசிப்பிலிருந்து முற்றிலும் புதியதோர் உலகைக் காட்டியது. மின்சாரம் நின்றுபோன ஓர் இரவில், காடாவிளக்கின் வெளிச்சத்தில், சுவர்க்கோழிகளின் கீச்சொலிகளுனூடே நான் வாசித்த முதல் இலக்கியப் புத்தகம், ரத்தமும் சதையுமான வேளான்குடிகளின் வாழ்வைப் பேசிய கி.ரா.வின் “கோபல்லபுரத்து மக்கள்“. அப்போது கி.ரா. மட்டுமல்ல இராஜேஷ் குமாரைத் தவிர ஒருவரையும் தெரியாது. ஆனால் பெயர் தெரியாமல் வாசித்த இந்த முதல் படைப்பின் வாசிப்பனுபவம் இன்னும் மனதில் ஈரமாய் நிழலாடுகிறது. பின்பு கல்லூரிக் காலங்களில் நிறைய வாசிக்கத் துவங்கினாலும் அது குறித்து நண்பர்களுடன் உரையாடியதில்லை. வாசிப்பு என்பது எனக்கு மட்டுமான அந்தரங்கமான செயல்பாடாகவே இருந்தது. 22வயதில் பணி நிமித்தம் கொடைக்கானலில் வாழ்ந்த மூன்று வருடங்கள், வாசிப்பைத் தாண்டி எனக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதை எனக்கு உணர்த்தியது. பல தயக்கங்களுக்கும், எழுதிக் கிழித்துப்போட்ட காகிதங்களுக்கும் பிறகு எனக்கான வலைப்பூவைத் துவங்கி தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். வலைப்பூ மூலம் அறிமுகமான நண்பர்கள் அண்ணன் நேசமித்ரன் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் வழியாக ” வலசை” இதழுக்காக எனது மொழிபெயர்ப்புப் பணி துவங்கியது.

விக்னேஷ்: உங்கள் முதல் சிறுகதை தொகுப்பு “புறாக்காரர் வீடு“. மொத்தம் 14 சிறுகதைகள். அதிலும் புறாக்காரர் வீடு, மணமுறிவு நாள், முதல் தாயம் மூன்றும் மனதிற்கு நெருக்கமான சிறுகதைகள். நேர்கோட்டு கதைகளான இவை எளிய மனிதர்களைப் பற்றி பேசுகிறது, மனித மனதின் அக நெருக்கடிகளையும் , அதிகமாக அன்பையும் பேசுகிறது. இதை சார்ந்து நான்கு கேள்விகள எனக்கு தோன்றுகிறது. நல்ல சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்த நீங்கள் இவற்றை விட்டு மொழிபெயர்ப்புகளுக்குப் போனது ஏன்? இரண்டாவது மொழிபெயர்ப்பாளரான நீங்கள் உங்கள் சிறுகதைகளில் ஏன் புதிய வடிவங்களை முயற்சி செய்யவில்லை? மூன்றாவது வட்டார வழக்கு பயன்படுத்தி அதிகம் (நீங்கள் மதுரை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்) எழுத தயங்குவது ஏன்? (ஒருவேளை பொது வாசகரை சென்றடையவது கடினம் என்பதாலா). நான்காவது புதிய சிறுகதை தொகுப்பு எப்போதும் வரும்?

பாலகுமார்: நன்றி விக்னேஷ். வலைப்பூவில் தொடர்ச்சியாக பதிவுகள் எழுதிவந்த போது, ”பண்புடன்” குழுமத்திற்காக எழுதிய முதல் சிறுகதை “புறாக்காரர் வீடு”. முதலில், அது புறா வளர்ப்பு பற்றியதான தரவுகள் நிறைந்த ஒரு கட்டுரையாகவே இருந்தது. அதில் ஒளிந்திருந்த சிறுகதையை இனம்கண்டு சுட்டிக்காட்டியவர் கவிஞர் நேசமித்ரன் அண்ணன். ஒருவகையில் அவரது உள்ளீடுகள் எனது புனைவுலகின் திறவுகோல் என்றுகூட சொல்லலாம். நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு வருவோம். நல்ல சிறுகதைகளா என்று தெரியாது இன்றும் சிறுகதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். மொழிபெயர்ப்பு செய்வதால் சிறுகதை எழுதுவது குறைந்துவிட்டது என்று சொல்லமுடியாது. ஆனால் நாவல் எழுதத் துவங்கியபிறகு ஒரு சிறுகதைக்கான கருவை நாவலின் ஒரு அத்தியாயமாக யோசிக்கத் தோன்றுகிறது. சிறுகதையில் புதிய வடிவங்களை வலிந்து முயற்சி செய்வதில்லை. ஒரு படைப்பு தனக்குண்டான சொல்முறையையும், வடிவத்தையும் தானே தேர்ந்துகொள்ளும் என நம்புகிறேன். அடுத்து வட்டார வழக்குப் பயன்பாடு குறித்து… நான் மதுரையைச் சார்ந்தவனாக இருந்தாலும் மதுரையின் மைய நகர்ப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன். மதுரையைச் சுற்றியுள்ள அசல் கிராமத்துமொழியின் சரளத்தன்மை எனக்குக் குறைவே. அப்படியும் சிறுகதை, நாவல்களில் உரையாடல் பகுதியில், அனிச்சையாக மதுரை வட்டார மொழியின் சாயல் வரத்தான் செய்கிறது. அடுத்த சிறுகதைத் தொகுப்பு அடுத்த ஆண்டுவாக்கில் வெளியாகலாம். அதற்கு முன் ஒரு ஒரு மொழிபெயர்ப்பும், ஒரு நாவலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

விக்னேஷ்: எழுதிக்கொண்டிருக்கும் நாவல்பற்றி கூறுங்களேன்.
பாலகுமார்: முந்தைய நாவல் முழுக்க நேர்மறை மனிதர்களைப் பற்றியதாக இருந்தது. இதில் மனிதர்களின் அந்தந்த நேரத்து நியாயங்களைப் பற்றியதாகவும், மனதின் சிறந்த மற்றும் தாழ்ந்த தருணங்களின் செய்கைகள் மற்றும் அவற்றிற்கான எதிர்வினை என்பதாக நினைத்திருக்கிறேன். எப்படி வருகிறதோ, பார்க்கலாம்.

விக்னேஷ்: சார்லஸ் புக்கோவ்ஸ்கி யை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது காரணம் இன்னும் அவர் இங்கு சரியாக உள்வாங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அதிலும் ‘அஞ்சல்நிலையம்‘ நாவலை தேர்ந்தெடுத்ததற்கு குறிபிட்ட காரணங்கள் எதாவது இருக்கிறதா?

பாலகுமார்: உண்மையில், பெரும்பான்மையான எனது மொழிபெயர்ப்புகள் நான் தேடிக் கண்டடைந்தவை அல்ல. என் வழியில் சில படைப்புகள் எதிர்ப்படும் போது, அவற்றில் மனதுக்கு நெருக்கமானவற்றை விரும்பி மொழிபெயர்ப்பேன். ”அஞ்சல் நிலையம்” நாவலைப் பொறுத்தவரை, நான் தொலைத்தொடர்புத் துறையில் வேலை பார்ப்பதால், நாவலில் அஞ்சல் துறை சார்பாக வரும் நடைமுறைகள் மற்றும் சொற்பிரயோகங்கள் ஆகியவற்றை என்னால் சிறப்பாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கையில், நண்பர்கள் “எதிர் வெளியீடு” அனுஷ் மற்றும் காத்திகைப்பாண்டியன் இருவரும் என்னை அனுகினார்கள். சார்லஸ் புக்கோவ்ஸ்கியைக் கவிஞராக அறிந்திருந்தவனுக்கு, அநேகமாக அவரது வாழ்க்கை வரலாறு போன்றதான “அஞ்சல் நிலையம்” நாவல் மனதிற்கு நெருக்கமானதாகவும், ஓர் அரசுப்பணியில் என்னென்ன வகையாசலிப்புகள் இருக்கும் என்பதை உள்வாங்கிக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. அப்படைப்பு மொழிபெயர்ப்புக்கான அந்நியத்தன்மையின்றி இயல்பான படைப்பாக வந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

விக்னேஷ்: ஆலன் கின்ஸ்பெர்க் ”ஹெளல்” கவிதை தொகுப்பை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்பட்ட மனநெருக்கடிகளை பற்றி உங்கள் முன்னுரையில் படித்த ஞாபகம். பொதுவாகவே சில அயல் இலக்கியங்களை வாசிக்கும் போதே மனநெருக்கடிகள் சாதரணமாக வந்து போகிறது. இன்னும் மொழிபெயர்ப்பு செய்வது என்பது மனதிற்கு அதிகமான நெருக்கடிகளை நிச்சயமாக தரும். அப்போது எல்லாம் எப்படி அதிலிருந்து வெளி வருகிறீர்கள்?

 பாலகுமார்: ”ஹௌல்” கவிதையை மொழிபெயர்த்த அனுபவம் வாழ்நாளிற்கானது. அதை மொழிபெயர்க்கும்போது, எப்போதும் அந்த வாதையில் இருந்து வெளியே வந்து விழ வேண்டும் என்றே விரும்பினேன். பித்தநிலை, பாலின விடுதலை, எதிர்க் கலாச்சாரம் எல்லாம் நம் சமூக அமைப்பில் நேரடியாகக் கண்டிராதவை. பின், ஒரு தலைமுறை அமெரிக்க இளைஞர்களின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றிய கவிதை, காலங்கடந்தும் அத்தகைய தாக்கத்தைக் கூட கொடுக்கவில்லை என்றால் எப்படி என்று மீண்டும் கவிதைக்குள் செல்வேன். இக்கவிதை மொழிபெயர்ப்பில், நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் கவிஞர் ஸ்ரீசங்கர் ஆகியோரின் உள்ளீடும் முக்கியமானது. கவிதையின் ஒரு பகுதியை மொழிபெயர்த்ததும், அந்த அழுத்தத்திலிருந்து வெளியேற சில வாரங்கள் வேறு எளிய புத்தகங்களை வாசிப்பேன். எவ்வளவு இடைவெளி விட்டு மீண்டும் மொழிபெயர்ப்பிற்குள் நுழைந்தாலும், பிரதியை வாசிக்கும்போதே அந்த அக அலைச்சல் சூழ்ந்துகொள்ளும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கவிதை இதுவரை மொழிபெயர்க்கப்படவில்லை என்ற சவால்தான் அப்பணியை முடிக்கத் தூண்டுகோலாக இருந்தது. ஒருவழியாக, மொழிபெயர்ப்பை முடித்து, திருத்தங்கள் பார்த்து அச்சுக்குச் சென்றபிறகு ஏற்பட்ட விடுபடல் உணர்வு வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.

விக்னேஷ்: கடவுளை போல தன்னை உணர்ந்து கொண்டு தனது படைப்புகளை எழுதுவதாக கின்ஸ்பெர்க் தனது நேர்காணலில் சொல்கிறார். தொடர்ந்து கின்ஸ்பெர்க் கவிதைகள் பற்றிய உரையாடல் இங்கு இலக்கிய உலகில் இருக்கிறது. ஆனால் வாசகர்கள் மத்தியில் இவற்றிற்கு எத்தகைய வரவேற்புகள் இருக்கிறது? இன்னும் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமாக வாசகப் பரப்பில் கவிதைகள் பற்றி சரியான புரிதலும், உரையாடலும் இல்லை என்பதால் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.

பாலகுமார்: ”ஹௌல்” மொழிபெயர்க்கும் போதே, அது பெரிய வாசகப்பரப்பை அடையாது என்பது தெரிந்ததுதான். அப்படைப்பின் தீவிரத்தன்மை தமிழில் பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காகவே, “பாதரசம்” பதிப்பகம் சார்பாக நண்பர் சரோலாமா அதனைப் பதிப்பிக்க விரும்பினார். இத்தகைய படைப்புகளைத் தேடித் தேடி வாசிக்கும் தீவிர வாசகர்களிடமும், படைப்பாளிகளிடமும் “ஹௌல்” ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. பொதுவாக இன்றைய தமிழ்ச் சூழலில் கவிதைகள் குறித்த உரையாடல்கள் குறைந்துபோயிருப்பதற்கு, நீர்த்துப்போனவையே கவிதையாக அடையாளம் கொள்ளப்பட்டு, படிமங்கள் நிறைந்த அசல் கவிதைகளை வாசகர்களுக்கு அடையாளம் காட்டத் தவறும் விமர்சகர்களின் குறையாகத்தான் இதனைப் பார்க்கிறேன்.

விக்னேஷ்: கடவுளின் பறவைகள் (உலக சிறுகதைகள் தொகுப்பு) பற்றி சொல்லுங்க (வாசகசாலை மொழிபெயர்ப்பு சிறுகதை பிரிவில் அது விருது பெற்ற நூல் ) முக்கியமாக அதில் வெவ்வேறு நிலங்கள் வருகிறது, வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியல் வருகிறது… அதில் வரும் சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்யும்போது மனதிற்கு எவ்வளவு நெருக்கமாக உணர்ந்தீர்கள்? அந்த தொகுப்புக்கு அர்ஷியா எழுதிய சிறப்பான முன்னுரை ஒன்று இருக்கிறது அதை பற்றியும் சொல்ல முடியுமா?

பாலகுமார்: ”கடவுளின் பறவைகள்” தொகுப்பில் உள்ள சிறுகதைகள், ஒரு சிட்டுக்குருவி பறந்து பறந்து, தன் இரைப்பையில் தானியங்களை நிறைப்பதைப் போல நான் தேடித் தேடி சேகரித்தவை. பிறந்ததிலிருந்தே நகர்ப்புற நெருக்கடி வாழ்வையே எதிர்கொண்டிருந்தாலும், எனது மரபணுவில் எங்கோ ஒரு மூலையில், கடிகாரத்தின் ஒன்பது முதல் ஐந்து மணி வரையான வேலை சுழற்சிக்குக் கவலைப்படாத ஒரு வாழ்க்கை முறையைக் கொண்ட சிறுவிவசாயியோ, கடலோடியோ, மந்தைகள் மேய்ப்பவனோ, குகைவாசியோ, சிறுபறவைகளுக்கு தானியம் வீசி வேடிக்கை பார்த்தபடி மணிக்கணக்கான வெறுமனே அமர்ந்திருப்பவனோ ஒளிந்திருக்கிறேன். அப்படி நிகழ்வாழ்வில் நான் வாழாத வாழ்வை எழுத்தின் வழியாக அடைய முற்படுகிறேன். ”கடவுளின் பறவைகள்” தொகுப்பிலுள்ள கதைகளின் மொழிபெயர்ப்பு என்பது, அவற்றில் வரும் எளிய மனிதர்களின் வாழ்வை நான் வாழ்ந்துபார்த்தற்கான ஒரு வாய்ப்பாகவே இருந்தது. “புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட வகையில், சகோதரர் “நூல்வனம்” மணிகண்டன் அவர்களோடு நல்ல அறிமுகமிருந்தது. அவர் கொடுத்த உற்சாகமும், நேரக்கெடுவும் தொகுப்பை குறித்த நேரத்தில் கொண்டுவர உதவியாய் இருந்தது. எழுத்தாளரை ஒருமுறைகூட நேரில் பார்க்காமல், இரண்டு புத்தகங்களைப் பதிப்பித்த பெருந்தகையாளர் அவர். அத்தொகுப்பு எனக்கு மனதிற்கு மிகப் பிடித்த தொகுப்பும் கூட. எந்தவித வெளிப் பரிந்துரைகளுமின்றி, அதற்கு “வாசகசாலை” விருது கிடைத்ததும் மகிழ்வான நிகழ்வு. அத்தொகுப்பிற்கு முன்னுரை எழுதியது மட்டுமன்றி, மெய்ப்பும் பார்த்து உதவியிருந்தார் எழுத்தாளர் அர்ஷியா அவர்கள். எந்தவித தற்பெருமையும், அகந்தையும் இல்லாமல் மிகச்சிறந்த வழிகாட்டியாகவும், குடும்பத்தின் மூத்த சகோதரர் போன்ற வாஞ்சையுடனும் பழக்கக் கூடியவர் அர்ஷியா சார். அவரை இவ்வளவு விரைவில் இழந்தது, தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு.

விக்னேஷ்: ”சேவல்களம்” நாவல் தமிழகத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டையைப் பற்றி பேசுகிறது! இதைப் பற்றி நாவல் எழுத வேண்டும் எப்படி தோன்றியது? அப்படி முடிவு செய்த பின்பு அதற்கு எப்படி உங்களை தயார் செய்து கொண்டீர்கள்? . முக்கியமாக சேவல் சண்டை பற்றி கள ஆய்வுகள், அதை நடந்தும் மனிதர்களிடம் உரையாடுவது இப்படி?

பாலகுமார்: உண்மையில், நான் மிக எளிதாக எழுதியப் படைப்பு “சேவல்களம்”. என் அப்பா சண்டை சேவல்கள் வளர்ப்பவர். எனவே பிறந்ததில் இருந்தே, சேவல்களுடனே வளர்ந்து வந்திருக்கிறேன். சேவல் வளர்ப்பு முறைகளும், சண்டைப் பயிற்சிக்கான சூட்சமங்களும் தாமாகவே மனதில் பதிந்திருந்தன. சண்டை குறித்த கள ஆய்வும், அப்பாவின் நண்பர்களிடம் அது குறித்து பேசுவதும்கூட, தரவுகள் சேகரித்தல் என்ற நிலையில் இல்லாமல், இயல்பான உரையாடல்களாகவே அமைந்தன. அவை படைப்பை ஆவணத்தன்மையின் சாயல் பதியாமல், புனைவு வடிவத்திற்கு மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்தது. “ஆடுகளம்” திரைப்படம் வெளிவந்தபோது, நான் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் ஒருசேர உணர்ந்தேன். சேவல் சண்டை பற்றிய அசலான சித்திரத்தை படம் காட்சிப்படுத்தியது என்ற வகையில் மகிழ்ச்சி என்றால், நான் சொல்லவேண்டியவற்றை வெற்றிமாறன் இவ்வளவு தத்ரூபமாகக் காட்சிப்படுத்திவிட்டாரே என்ற துக்கமும் எழுந்தது. “சேவல்களம்” நாவல் எழுதும்போது அதுவே எனக்கு முன்பிருந்த சவாலாகவும் அமைந்தது. சேவல் சண்டை குறித்து ஆடுகளம் திரைப்படத்தில் இல்லாத வேறொரு பரிமாணத்தை எழுதவேண்டும் என்று நினைத்தேன். அதில் வெற்றி பெற்றிருப்பதாகவே நம்புகிறேன்.

விக்னேஷ்: சேவல்களம் வெளிவந்த போது நிறைய நல்ல விமர்சனங்கள் வந்தன. நிறைய பேர் அதைப் பற்றி எழுதினார்கள். அதே மாதிரி அதைப் பற்றி சில எதிர்மறை விமர்சனங்களும் இருப்பதாக தோன்றுகிறது. முக்கியமாக கதாபாத்திரங்களின் அணுகுமுறைகள், குறிப்பிட்ட வட்டார வழக்குகளை தவிர்த்து எழுந்திருப்பது… இவையெல்லாம் உங்களுக்கு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவை சில பேரின் கருத்துக்கள் மட்டுமே இவற்றை எப்படி எடுத்துக் கொள்வது என்று நினைக்கிறீர்கள்? பாலகுமார்: ஒரு படைப்பு வெளிவந்த பிறகு, அதுபற்றிய விமர்சனங்களுக்கு உடன்படுகிறோமோ இல்லையோ அவற்றை வரவேற்கத்தான் வேண்டும். ”சேவல்களம்” நாவலைப் பொறுத்தவரை, அது பரவலாகப் பேசப்பட்டதற்கு “காலச்சுவடு” பதிப்பகத்தின் சந்தை அணுகுமுறை முக்கியமான ஒன்று. அவர்கள் சரியான நேரத்தில் படைப்பை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தினார்கள். நாவலில் கதாபாத்திரங்களின் நேர்மறைத்தன்மை என்பது விரும்பிச் செய்த ஒன்றுதான். சங்ககாலாம் தொட்டு தமிழகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு கலையைப் பற்றி பேசும் போது, அதிலுள்ள நேர்மறை விஷயங்களையும், மனிதர்களின் நேர்மையான பக்கங்களையும் மட்டும் சொல்வோம் என்ற நிலைப்பாட்டில் எழுதப்பட்டது அது. ஒரு படைப்பு வெளிவந்த சுவடே தெரியாமல் காணாமல் போகக் கூடிய சூழலில், எத்தன்மையதாயினும் விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே. என்னவொன்று, உங்கள் அடுத்த படைப்பில் அந்த விமர்சனத்தின் தாக்கம் இல்லாமல் இயல்பான தன்மையுடன் எழுதவேண்டும், அவ்வளவுதான்.

விக்னேஷ்: சிறுகதைகள், நாவல், மொழிபெயர்ப்பில் (சிறுகதை, நாவல், கவிதை தொகுப்பு) கிட்டத்தட்ட வட்டத்தின் கடைசி இணைப்பாக உங்கள் கவிதை தொகுப்பு இருக்குமா! காரணம் உலக கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்யும் உங்கள் ஆர்வத்தில் தெரிகிறது உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கிறான் என்று? உங்கள் சொந்த கவிதை தொகுப்பு கொண்டு வர ஆர்வம் எதாவது உண்டா?

பாலகுமார்: உண்மையில், தமிழில் எழுத வரும் முக்காலேயரைக்கால்வீசம் படைப்பாளிகளைப் போல, நானும் கவிதையில் இருந்துதான் துவங்கினேன். இப்போது ஒரு கவிதைக்கான கரு தோன்றியதும், அதை எப்படி ஒரு சிறுகதையாக்கலாம் என்று மனம் கணக்குப்போடத் துவங்கிவிடுகிறது. அப்படி சிறுகதையாக அது ஆகாவிட்டால், தானாகவே கருகிவிடுகிறது. நீங்கள் கேட்டதற்காகச் சொல்கிறேன், நானும் ஒரு கவிதைத் தொகுப்பை, மின்னூலாக வெளியிட்டிருக்கிறேன். “நதியின் பெயர் கொண்டோடும் ரயில்” என்ற தலைப்பில் அமேசானில் கிடைக்கிறது.

விக்னேஷ்: எப்போதும் இதை படிப்பேன்: “சமரசமற்ற மொழிபெயர்ப்பு” என்று. உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பை சமரசம் இல்லமால் தரமுடியுமா? மொழிபெயர்ப்பில் இருக்கும் பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்? தமிழ் இலக்கிய சூழலில் மொழிபெயர்ப்புத் துறை இன்று எப்படி இருக்கிறது?

பாலகுமார்: எந்தவொரு படைப்பையும் நூறு சதவீதம் உண்மையாக மொழிபெயர்க்க முடியாது என்றுதான் நம்புகிறேன். ஆனால், எடுத்துக்கொண்ட பணிக்கு உண்மையாய் இருத்தல், நேரடிப் படைப்புகளுக்கு மட்டுமல்ல, மொழிபெயர்ப்புகளுக்கும் பொருந்தும். மூலப்படைப்பின் சூழல், கலாச்சாரம், பேசும்தொனி, படைப்பாளியின் அரசியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் தாம் தட்டையாக வந்துவிடுகின்றன. எந்தவொரு மொழிபெயர்ப்பாளனும், ஒரு படைப்பை மொழிபெயர்க்குமுன் படைப்பிலிருந்து பின்னோக்கிச் சென்று மேற்கூறிய காரணிகளை ரிவர்ஸ் இன்ஞினியரிங் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் படைப்பிற்கு நெருக்கமாக வரமுடியும். இன்று தமிழ்ச் சூழலில், மொழிபெயர்ப்பு குறிப்பிட்ட ஏதோ நான்கு பேர்களின் கைகளில் மட்டுமே இல்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. பல துறையைச் சேர்ந்த கலைத்தொழிலர் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்திருப்பதால், ஒரு பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல துவக்கம் என்றே கருதுகிறேன். ஆனால் இலக்கிய மொழிபெயர்ப்பு வல்லுநர்கள், பொதுசமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும்போதுதான் அது உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படும். இப்போது இலக்கிய மொழிபெயர்ப்புக்கும், வணிக மொழிபெயர்ப்புக்கும் இடையே பெரிய பாதாளம் அளவு இடைவெளி இருக்கிறது. ““ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி”என்பதுதான் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் என்று உலகம் நம்புகிறது. அது அப்படியில்லை என்பது, இலக்கிய மொழிபெயர்ப்பில் திறம்பெற்றோர் வணிக வாய்ப்புகளைப் பெறும்போது மட்டுமே நிரூபிக்கப்படும். இலக்கியத்தில் இயங்குபவர்களும் வணிக வாய்ப்புகளைத் தீண்டத் தகாததாக எண்ண வேண்டியதில்லை. சமீபத்தில், கோத்தகிரியில் டிஸ்கவரி புக் பேலஸ் முன்னெடுப்பில் நான்கு நாள் மொழிபெயர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மொழிபெயர்ப்புத் துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை விதைக்கின்றன.

விக்னேஷ்: தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கு நண்பர்கள் ஆதரவும், எதிர்ப்புகளும் வேண்டும். இதில் உங்களுக்கு எப்போதும் ஆதரவு தரும் இலக்கிய நண்பர்களைப் ற்றி சொல்ல முடியுமா?

பாலகுமார்: இலக்கிய உலகைப் பொறுத்தவரை, நான் ஒரு வீட்டுப்பறவை. மதுரையில் இருக்கும் வரை வாரயிறுதி இலக்கிய நிகழ்வுகளிலாவது பார்வையாளனாகக் கலந்துகொள்வது உண்டு. ஓசூருக்கு பணிமாறுதலில் வந்தபிறகு அலுவலகப் பணிச்சுமை காரணமாக, பெரும்பான்மையான இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் நம்மை உற்சாகம் குறையாமல் மெருகேற்றுவதற்கு, எழுத்தின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு என்று எப்போதும் நண்பர்கள் இலக்கிய உலகின் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறார்கள். ”வலசை” எனது மொழிபெயர்ப்பு வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம். வலசை இதழுக்காக மொழிபெயர்க்கையில் ஒரு பிரதியைத் தொடர்ந்து, பத்து முறை பதினைந்து முறை திருத்தி எழுதுவதெல்லாம் உண்டு. ஒவ்வொரு முறை மொழிபெயர்ப்பை அனுப்பும் போதும், நேசமித்ரன் அண்ணன் சளைக்காமல், “ரீவொர்க் பண்ணுங்க” என்று திருப்பி அனுப்புவார். அவை ஒரு படைப்புக்கு எவ்வளவு தூரம் அணுக்கமாக நாம் செல்லமுடியும் என்ற அனுபவத்தைத் தந்தன. முன்பு வலைப்பூ, பின்பு வலசை இதழின் பொருட்டு, பிறகு எங்களது எந்தப்படைப்பாயினும், நேசமித்ரன் அண்ணனோடு கார்த்திகைப்பாண்டியன், ஸ்ரீதர்ரங்கராஜ் மற்றும் நான் ஒருவருக்கொருவர் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்வது ஆக்கப்பூர்வ விமர்சனமாகவும், ஒரு படைப்பு செழுமையடைந்து வெளியாவதற்கான காரணியாகவும் இருக்கின்றன. இதுபோல பல நண்பர்கள், பெயர்கள் சொன்னால் பட்டியல் பெரிதாகிவிடும், இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். அதுபோக, நேரடியாக நம் பெயர் சொல்லி எதிர்க்கின்ற அளவுக்கான எதிர்ப்புகளைச் சம்பாரிக்க, இன்னும் அதிகமாக உழைக்கவும், வளரவும் வேண்டுமென்று நினைக்கிறேன்.

விக்னேஷ்: தொடர்ந்து இலக்கியச் சூழலில் இயங்குவது என்பது தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சவால்கள் நிறைந்தாகவே இருக்கிறதா? இந்த இலக்கியச் சூழலுக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

பாலகுமார்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய சமூக அன்றாடங்களில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ளவும், புத்துணர்ச்சியடையவுமே நான் இலக்கியத்தில் இயங்குகிறேன். வாசிப்பும், எழுத்துமே அடுத்தநாளை உற்சாகமாக எதிர்கொள்ள வைக்கின்றன. நான் வலைப்பூ எழுதத் துவங்கிய காலத்தில், என் கல்லூரி வாழ்வை மையமாக வைத்து “கிருக்கனிஸம்”என்று ஒரு தொடர் எழுதினேன். பரவலான வாசிப்புப் பழக்கமும், எழுத்துத் திறனும் உள்ள என் மனைவிக்கு மிகப் பிடித்த தொடர் அது. தீவிர இலக்கியம் எனது அந்த களங்கமின்மையைக் கொன்றுவிட்டதாக அடிக்கடி கூறுகிறார். அவருக்காக தீவிர இலக்கிய சாயல் இல்லாத ஒரு ஜாலி நாவல் எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். களங்கமின்மையை மீட்டெடுக்கமுடியுமா, தெரியவில்லை.

விக்னேஷ்: புதியதாக எழுத வரும் அல்லது மொழிபெயர்ப்பு செய்ய வரும் நண்பர்களுக்கு அறிவுரைகள் என்று எதையெல்லாம் சொல்வீர்கள்?

பாலகுமார்: கட்டாயம் கூறியே ஆகவேண்டும் என்று சொல்வீர்களானால், யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள் என்பதுதான் என் ஆலோசனையாக இருக்கும். நிறைய வாசித்தல், உங்கள் எழுத்துமுறையை கூர்த்தீட்ட உதவும். ஆனால் நல்ல வாசிப்பாளர் நிச்சயம் நல்ல எழுத்தாளராக முடியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். எந்தவொரு கலைக்கும் நுண்ணுணர்வு மிக முக்கியம். எழுத்துக்கும் அது பொருந்தும்.

விக்னேஷ்: இலக்கியம் அறத்தை விதைக்கும் என்பது எந்தளவுக்கு உண்மை? இரண்டாவது, வாசிப்பு சூழ்நிலை ஒரு பொது வாசகராக இங்கு எப்படி இருப்பதாக பார்க்கிறீர்கள்?

பாலகுமார்: இலக்கியம் வாசிப்பவரிடத்தில் அறத்தை விதைக்கலாம். ஒரு திறமையான எழுத்தாளனால் அறம் விதைக்கும் நல்மனிதரின் இயல்புகளைக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அறிந்துவந்து, தன் எழுத்தில் பிரமாதமாகப் பிரதிபலித்துவிட முடியும். எழுத்தாளனின் பண்புகள் அவனது எழுத்தில் காணக்கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. எழுத்துக்கு வெளியே சமூகச் செயல்பாடுகளில், பொதுமக்களிடையேயான அன்றாட நடவடிக்கைகளில் அவன் எந்தத் திசையில் பயணிக்கிறான் என்பதே அவனது உண்மையான முகம். ஆயிரம் பேர் செல்லும், பயணிகள் ரயிலில் தினமும் பயணிக்கிறேன். ஒரு மணிநேரப் பயணித்தில், மடியில் புத்தகம் வைத்திருக்கும் இன்னொருவரை மிக அரிதாகவேப் பார்க்க முடிகிறது. ஒருவேளை இரண்டொருவர் அலைபேசியில் வாசித்துக் கொண்டிருக்கலாம். இதுதான் இன்றைய நிலை. இதற்காகப் பெரிதாக விசனம் கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே வாசிப்போரின் விகிதம் குறைவாகவே இருந்திருக்கிறது, இப்போது அது இன்னும் குறைந்திருக்கிறது. ஆனால் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களிடம்கூட இலக்கியக் கதைகள் கேட்கும் போக்கு பரவலாக அதிகரித்திருக்கிறது. ஒரு சமுதாயம் தனக்குத் தகுதியுடையதை மட்டும் எப்படியேனும் அடைந்தே தீரும்.

விக்னேஷ்: எழுத வந்த போது நிறைய கனவுகள் உங்களுக்கு இருந்திருக்கும். இப்போதும் அப்படிபட்ட கனவுகள் இருக்கிறதா? எதிர்கால திட்டங்கள் என்னென்ன மொழிபெயர்ப்பிலும் சேர்த்து?

பாலகுமார்: நான் கனவுகளோடு எழுதவரவில்லை. உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன். வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரங்களுக்காகவும் எப்போதும் ஏங்கியதில்லை. இயல்வாழ்வில் தான் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டியிருக்கிறது. எழுத்துலகிலேனும்,எழுத்துலகிலேனும், நதி வழி செல்லும் ஒரு தக்கையின் இயல்புடன் இயங்க விரும்புகிறேன். அதே சமயம், நீர்ப்பாதைவழி மிதந்து செல்கையில், கரையோர மலர்களின் மெல்லிய சுகந்தத்தைத் தவறவிடுவதுமில்லை. எதிர்காலத்திற்கான பெரிய திட்டங்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. மொழிபெயர்ப்பு சார்ந்து, இலக்கியத்துக்கும் வணிக வாய்ப்புக்குமான இடைவெளியைக் குறைக்க என்னாலான முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறேன். அதனை இன்னும் தீவிரப்படுத்தவேண்டுமென்று விரும்புகிறேன். எந்தப் பரிவட்டங்களையும் சுமக்காத ஒருவனைத் தேடிக் கண்டடைந்து, நேர்காணல் செய்த வாசகசாலை நண்பர்களுக்கும், நேர்காணலுக்கு முன் எனது படைப்புகள் அனைத்தையும் வாசித்து, நுண்ணுணர்வுடனான கேள்விகளை வடிவமைத்த நண்பர் க.விக்னேஷ்வரன் அவர்களுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

நன்றி: வாசகசாலை http://www.vasagasalai.com/balakumar-vijayaraman-interview/