Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, April 24, 2026

ஏன் தொடர வேண்டும் திமுக அரசு?

இந்தத் தேர்தலில் என் வாக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே. அதற்கான காரணங்கள்:

1. ஒன்றிய அரசின் அசுரப் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காத்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற்றிச் செல்ல திமுக அரசு தொடர வேண்டும்.

2. கல்விக்கும், மாணவர்கள் நலனுக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் (நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், காலைச் சிற்றுண்டி)என  இந்த திமுக அரசு செய்திருப்பவை ஏராளம். அவை யாவும் தங்குதடையின்றி தொடர திமுக அரசு தொடர வேண்டும்.

3. மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை - இவை பெண்களுக்கு சிறகுகளையும், பொருளாதார விடுதலையையும்  கொடுத்த புரட்சிகரத் திட்டங்கள். 

4. திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை போன்று பக்தி சார்ந்த விஷயங்களில் பாஜக மதக் கலவரங்கள் செய்ய முனைந்த போது, அதனை தீரமான ஒற்றைக் குரலில் ஒடுக்கியது, தமிழ்நாட்டில் மத அரசியலுக்கு இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாடு.

5. திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த போது, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. நிதி கிடைக்காது, கைது அச்சுறுத்தல்கள் இருக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்கள்/விலைபேசப் படுவார்கள் என்று பல பிரச்ச்னைகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே எல்லாப் பிரச்சனைகளும் வந்தன. ஆனால் திமுக இவை எதற்கும் அஞ்சாமல் மதவாத/சனாதன/வலதுசாரி ஃபாசிச எதிர்ப்பு அரசியலை இன்னும் தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக வை வைத்துப் பார்த்தாலே போதும், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திமுக ஏன் தேவை என்று புரிந்துவிடும்.

 6. சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில நலன் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக வே ஒரே தேர்வு.

7. தொழில் வளர்ச்சி, பெருநிறுவன முதலீடுகள் ஆகியவற்றை ஈர்க்க தொலைநோக்குடன் கூடிய  நிலையான, தன்னிச்சையான முடிவுகள் எடுக்கக் கூடிய அரசு வேண்டும். 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநில நலன்கள் அனைத்தும் அடகுவைக்கப் பட்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

8. "பாஜக உள்ளே புகுந்துவிடும்" என்பது என்று கேலிச் சொல் ஆகிவிட்டது. அதன் உண்மையான பதற்றத்தை தமிழக மக்களை அண்ட விடாமல் திமுக அரசு இந்த ஐந்து வருடங்களில் உண்மையில் அரணாகக் காத்து இருக்கிறது. இந்தக் கோட்டையில் விரிசல் விட வழிவகுக்கக் கூடாது.

9. கலை, இலக்கியம், வாசிப்பு தொடர்பான அறிவுசார் நிகழ்வுகளுக்கு ஓர் அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே ஆட்சியின் செழிப்புக்கான அளவுகோல். அவ்வகையில் பல்நோக்கு நூலகங்கள், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள், கலை இலக்கியத் திருவிழாக்கள், நூலகங்களுக்கான வெளிப்படையான நூல் கொள்முதல்கள் என்று நிறைய செய்திருக்கிறது, இன்னும் செய்யும்.

10. திராவிட மாடல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. திராவிடத்தின் பயனாளியாக, நம் அடுத்த தலைமுறைகளுக்கும் அத்தகைய தொடர் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது தேர்வு திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!

சரி 2021-2026 குறைகளே இல்லாத பொற்கால ஆட்சியா என்றால், குறைகளும் இருந்தன. அவை திமுக அரசின் தோல்வி என்ற பொய்ப் பரப்புரைகளைப் புறந்தள்ளி இந்தக் காலத்தின் பெருகி வரும் ஆபத்துகள் என்ற வகையில் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிக கவனம் செலுத்தத் தேவையான சில விஷயங்களும் உள்ளன.

1. அதிகாரிகளின் ஆட்சியாக இல்லாமல், உண்மையான பொருளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியாக இருப்பது.

2. போதைக் கலாச்சாரம் - வயது வித்தியாசமின்றி காலத்தின் சீரழிவாகப் பெருகிக் கொண்டிருக்கும் போதை அதன் தொடர்ச்சியான குற்றச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் பட வேண்டும்.

3. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு - இன்னும் தீவிரமாக எல்லா மட்டங்களிலும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

4. குடிநோய் மறுவாழ்வு - சமுதாயத்தின் பெரும்பகுதியை அழித்துக் கொண்டிருக்கும் அரசு மதுக்கடைகள் முறைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இவை அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 தீவிரமாகச் செயல்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்...

ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!

Saturday, March 9, 2024

கமல் - அரசியல்

உண்மையில் இதுதான் கமலுக்கான இடம். கட்சி ஆரம்பிக்காமல் அப்படியே பொதுவாக நான்கு கருத்துக்களைச் சொன்னோமா, அறிவுஜீவிப் பிம்பத்துடன் கெத்தாக அலைந்தோமா என்றே இருந்திருக்கலாம். 

ரஜினி எப்படியும் கட்சி ஆரம்பிப்பார், எதிர்முனையில் நாம் நின்றால் அவருக்கு மாற்று நாம் என்று மக்கள் மனதில் பதிந்து  அரசியல் பாதை எளிதாக இருக்குமென நினைத்துவிட்டார். 

அதோடு சுற்றியிருந்தவர்கள் வெற்றிடம் சுற்றிடம் என்று ஆசைகாட்டிவிட ஏமாந்துவிட்டார்.  கட்சி ஆரம்பித்து அவர் முன்னெடுத்தது எல்லாம் என்.ஜி.ஓ வேலைகள் தாம். அதோடு இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு என்று பஞ்ச் டயலாக் என்று நினைத்துக்கொண்டு விட்டவை வெற்றுச் சத்தங்களே. தமிழ்நாட்டு மக்கள் அவருக்கான சரியான இடத்தை அவரது முதல் தேர்தலில் காட்டியதும்  அடுத்த தேர்தலுக்கு முன்பே அவர் அதனைப் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. வருங்கால ராஜ்ய சபா எம்.பி.க்கு வாழ்த்துகள்.

ஆனால் உலகத்தின் ஆகச் சிறந்த இந்த முடிவைத் தான் எடுத்ததற்கென்று காரணங்களை தன் வழக்கமான ஜாங்கிரி சுற்றல் மொழியில் பிழிவாரே, அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது.

Monday, November 18, 2019

சிவப்புப் பணம் - அமேசான் #pentopublish2019 போட்டிக்கான புதிய நாவல் (e-book).

 நாவல் (e-book) குறித்து:

சிவப்புப் பணத்தின் மீதான ஆசை, மிகச் சாதாரணமான மூன்று இளைஞர்களை ஒரு சாகசப் பயணத்தை நோக்கி நகர்த்துகிறது. அது அவர்களை நடு இரவில் ஏ.டி.எம். மெஷினைத் தூக்கிச் செல்ல வைக்கிறது, அடர்ந்த வனத்தினூடாக 8000 அடி உயர மலைப்பாதையில் இரவு முழுக்க நடக்க வைக்கிறது, எத்தனையோ அலைச்சல்களில் செத்துப் பிழைத்து வந்தாலும் மீண்டும் சாகசம் செய்யத் துணியும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறது.

கறுப்புப் பணம் தெரியும், அது என்ன சிவப்புப் பணம்?

மிக வேகமாக மதிப்பு மாறிக்கொண்டிருக்கும் பணம், வியாபார ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தப் பயன்படும் ரொக்கப் பணம், எதிர்பார்காதபோது கிடைக்கும் அதிர்ஷ்டப் பணம், சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதிக்கப்படும் பணம் என்று பல விளக்கங்களை உள்ளடக்கி இருக்கிறது. அத்தகைய சிவப்புப் பணத்துடனான சாகசப் பயணம் இந்த நாவல்.

ஒரு தேசத்தில் திடீரென பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இனி செல்லாது என்ற அறிவிப்பு வரும்போது நிகழும் அசாதாரண சம்பவங்கள் விறுவிறுப்பான புனைவாக – “சிவப்புப் பணம்” நாவல், உங்கள் பார்வைக்கு.
------

எனது புதிய நாவல் “சிவப்புப் பணம்” #Amazon #pentopublish2019 போட்டியில் இடம்பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு தொடர்பான புனைவு நாவலான இது உங்களுக்கு சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் என நம்புகிறேன்.
இந்த நாவலை (e-book) கீழ்க்காணும் இணைப்பில் வாங்கி ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
நாவலை வாசித்து Amazonல் ”5 Star Rating” மற்றும் positive review (preferrably in english) எழுதவும். உங்கள் நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.
 
நன்றி
பாலகுமார் விஜயராமன்


Monday, October 1, 2018

அரசியல் பகடையாட்டம்




ஷான் எழுதிய “வெட்டாட்டம்” நாவல் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவை நாட்டை ஆட்கொண்டபின், பிறந்த இளைஞர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர், அறவிழுமியங்களுக்கும், எளிய வாழ்வுமுறைக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பு என்ன? எதையும் மேம்போக்காக பார்த்து, உணர்ந்து, பழகி, அனுபவித்து வாழும் இன்றைய தலைமுறை இளைஞன் ஒருவனுக்கு, எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் அரசியல் பதவியும், அதில் வேண்டாவெறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவனது செயல்பாடுகள், பின் பிழைத்திருத்தல் பொருட்டு அவன் மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள், சதிகளுக்கு எதிரான அவனது பதில் தாக்குதல் என்று ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலை, இரண்டே அமர்வுகளில் வாசித்து முடிக்க முடிந்தது. சுவாரஸ்யத்திற்கும், விறுவிறுப்பிற்கும் குறைவில்லாத படைப்பு. சென்னை பெருவெள்ளம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, தலைவர் கைதுக்காக மாணவிகளோடு சென்ற பேருந்து எரிப்பு, மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் முன்னாள் முதல்வர், வெளியே காட்டப்படும் பழைய சிசிடிவி ஃபுட்டேஜ் என்று சமகால அரசியல் நிகழ்வுகளோடு, பனாமா பேப்பர்ஸ், ஹவாலா, பிட்காயின், ப்ரூட்ஃபோர்ஸ் அட்டாக், ஃபிஷ்ஷிங் என்ற உலகலாவிய தொழில்நுட்பம் சார்ந்த சைஃபர் கிரைம் தகிடுதத்தங்களை புனைவில் கலந்து, ஒரு கச்சிதமான அரசியல் திரில்லரைக் கொடுத்திருக்கிறார்.
அசாதாரணமான சூழ்நிலையில், திடீரென முதல்வர் பதவியில் அமர நேரும் இன்றைய தலைமுறையின் பிரதிநிதி இளைஞன், தனது சம்யோசித புத்தி, தொழில்நுட்பத் திறன், தனக்குப் பழக்கமான நெர்வொர்க் ஆகியவற்றின் மூலமாக எப்படி தனது பதவியைத் தக்க வைக்கிறான் என்பதை பரபரப்புடன் சொல்கிறது “வெட்டாட்டம்”. அரசியல் காய்நகர்த்தல்கள், படிநிலை அரசியல் போன்ற வழமையான அரசியல் விளையாட்டுகள் தெரியாததே அவனது பலம். தன் மனதுக்கு சரியென்று பட்டதை, துரிதமாக முடிவெடுக்கிறான், அதனைத் துணிந்து செயல்படுத்தவும் செய்கிறான். பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், தைரியமான காரியங்களை யாருக்கும் பயப்படாமல் செய்கிறான். விளைவு, குறுகிய காலத்தில் மக்களிடம் நன்மதிப்பைப் பெறுகிறான். அவனது தந்தை மூலமாகவே தனது பதவிக்கு ஆபத்து வரும் போது, தன் தொழில்நுட்ப அறிவு கொண்டு, வழக்கமான அரசியல் காய்நகர்த்தல்களையும் அவன் செய்யத் தவறுவதில்லை.
நாவல் முழுக்க, பெரிதாக லாஜிக் மீறல்கள் முதல் வாசிப்பில் தென்படவில்லை. தொழில்நுட்ப விஷயங்களை கண்கட்டு வித்தையாக சொல்லாமல், எளிமையான வார்த்தைகளில் விவரித்திருப்பது சிறப்பு. வேகமான வாசிப்பு அனுபவத்திற்கேற்ற பரபரப்பான எழுத்து நடை, சமகாலத்தில் நாம் அறிந்த அரசியல் நிகழ்வுகளை உறுத்தலின்றி புனைவுக்குள் செருகியது ஆகியவை நன்றாக வந்திருக்கின்றன.
வருணின், ரெயின்போ ரிசார்ட் வீடியோவை, விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான விளம்பரம் என்று மாற்றுவது, ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரத்தை ஜி.பி.எஸ் மூலம் ஒரு வாகனத்தோடு இணைத்து பறக்க வைப்பது, ப்ளூடூத் மூல்மாக விர்சுவல் லாகின் ஆவது, சென்சார்கள் பயன்பாடு, ப்ராக்ஸி என்று புதிய உத்திகள் மூலமாக கதையை முன்னகர்த்திச் சென்றது சுவாரஸ்யம் என்றால், மகேந்திரனின் எபிஸோட் முழுமையுமே அதரப் பழசான கிளிஷே. அதுவும் அவரின் முன்னாள் காதலி, சுப்ரமணியின் மனைவியாவது, சுப்ரமணி வினோதனாவது எல்லாம் மிக எளிதாக யூகிக்க முடிந்த கதை. அதே போல, வருண் – அருண், கயல்விழி – பூங்கொடி, அனந்தராமன் – சந்தானராமன் என்ற பெயர்க்குழப்பங்கள் நாவல் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இவை எல்லாம் சிறு பிழைகள் தான். நல்ல வாசிப்பனுபவத்திற்கு இவை பெரிய தடையாக இருக்கவில்லை என்றாலும், கொஞ்சம் கவனித்திருந்தால், இவற்றை தவிர்த்து இருந்திருக்கலாம்.
செய்திகளாக நாம் கடந்து வந்த பல நிகழ்வுகளை, நினைவில் வைத்து அதை புனைவின் தளத்தில், சரியான இடத்தில் பொருத்துவது என்பது ஒரு கலை. அதை ஷான் தனது ஒருமுகச் சிந்தனையின் மூலமாக, கச்சிதமானதொரு படைப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். கலை, வாசிப்பவனை கிளர்த்தெழச் செய்து, சமுதாயத்தின் இழிநிலைகளை கேள்வி கேட்கச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் சரி தான். ஆனால் சமகாலத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்கின்ற ஆவணமாக இருக்கின்ற படைப்புகளும் காலத்தின் குரலைப் பேசவே செய்கின்றன. அந்தவகையில், எடுத்துக் கொண்ட சட்டவரைவுக்குள், புனைவையும், அரசியல் நிகழ்வுகளையும் (விமர்சனங்களை அல்ல), தொழில்நுட்பத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கட்டி விளையாடியிருக்கிறார். உணர்வெழுச்சியின் வழியாக, நுட்பமான விவரணைகளோடு, வாசிப்பவனை குற்றவுணர்ச்சிக்கோ அல்லது மிகை உணர்வுக்கோ ஆளாக்காமல், சுவாரஸ்யமாக வாசித்துச் செல்லக்கூடிய வகையில், “செய்யப்பட்ட” நாவல் தான் வெட்டாட்டம். ஆனால் அந்த செய்முறையில் நேர்த்தியும், ஒழுங்கும், அபத்தமின்மையும் நிறைந்திருக்கிறது.
ஒரு வேளை, சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தில் தீட்டு என்ற தூய்மைவாதத்தைப் பாதுகாக்கப் போராட்டம் நடக்குமென்ன்றால், “வெட்டாட்டம்” இலக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டுப் போகட்டும். என்ன கெட்டு விடப்போகிறது?
நல்ல பொழுதுபோக்குத் தரத்துடன் கூடிய சுவாரஸ்யமான நாவல். வாழ்த்துக்கள், ஷான் மற்றும் யாவரும் பதிப்பகம்.
******
வெட்டாட்டம் – நாவல்
ஷான்
யாவரும்.காம் வெளியீடு
விலை: ரூ. 240
******

Monday, January 1, 2018

ரஜினியின் அரசியல்

இப்பொழுதும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாக நான் நம்பவில்லை. 
1. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
2. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியில்லை
3. 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி, சின்னத்தில் போட்டி.

இது தான் அவரது அறிவிப்பின் சாராம்சம். முதலில், இது விஜயகாந்த் வந்தது போன்ற தன்னெழுச்சியான அரசியல் பிரவேசம் அல்ல. 1996ல் இருந்து ஒவ்வொரு முறையும் இழுஇழுவென இழுத்து, புதுப்பட வெளியீட்டின் போதெல்லாம் ரசிக மன்றத்தினரின் டெம்ப்போவை இழக்க விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருந்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகளும், இவ்வளவு காலம் இருந்து விட்டோம், ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால், தங்களுக்குக் கிடைக்கப் போகும் மிகப்பெரிய ஓபனிங்கை மனதில் வைத்து, இலவு காத்த கிளியாக காத்திருந்தனர்.
இப்பொழுது, ரஜினிக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் அழுத்தம்.
1. பாஜகவின் காவி அரசியலுக்கு ஒரு தமிழக முகம் தேவை. பாஜக பேனரில் நின்றால் ஒன்றும் தேறாது என்ற நிலையில், ரஜினியைத் தனிக்கட்சி துவங்க அவர்கள் தரும் நிர்பந்தம் (ஒருவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர, எந்த அளவுக்கும் செல்லும் அவர்களின் செயல் நாம் அறிந்ததே)
2. தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். அன்பாகவோ, மிரட்டியோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் /அரசியல் அல்லாத வழிகளிலிலோ அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுக்கும் தலைமை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இப்பொழுது இல்லை.
3. மனைவி மற்றும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் சமூகம் வழி, ரஜினியை முகமாக வைத்து, அரசியல் அதிகாரத்த்தை சுவைத்துப் பார்க்கத் துடிக்கும் ஆவல்.

சோ.ராமசாமி இல்லாத குறையை தான் உணர்வதாக ரஜினி கூறியிருப்பது முக்கியமானது. சோ இருந்திருந்தால், நிச்சயம் பாஜகவின் பிடியில் இருந்து காக்கும் குஷனாக செயல்பட்டிருப்பார் என்பது உண்மை தான். இவரும், வழக்கம் போல வாயில் பாயசம் காய்ச்சிக் கொண்டு, காலத்தையும் ஓட்டியிருப்பார். இப்பொழுது பாவம், எக்ஸ்போஸ் ஆகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் குணம், தன்முனைப்போடு ஒரு விஷயத்தில் இறங்கி அடிக்கும் அதிரடி சுபாவம் அல்ல மாறாக, பிரச்சனைகளை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் இயல்புடையவர். இப்பொழுதைய அவரது பேச்சும் அதையே தான் உணர்த்துகிறது. பாஜகவிடமோ, குடும்பத்திடமோ, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமோ அவரால், தன் மனதில் ஏங்கிக் கொண்டிருக்கும் சந்நியாசி வாழ்க்கை முறையில் அமைதியாக இருப்பது பற்றி திடமாகச் சொல்லவே முடியாது. திரையில் ஆபத்பாந்தவனாகத் தோன்றும் சூப்பர் கதாநாயகன், உண்மையில் எடுப்பார் கைப்பிள்ளை.

தமிழகத்தில் உள்ள எந்த ஒருவரையும் விடவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பவர் ரஜினியாகத் தான் இருக்கும். களம் இறங்குவதற்காக அல்ல, பாஜக ஆட்சி இழந்தால், தனது 2021 திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு, 2.0வுக்கு அடுத்து 3.0 வுக்கோ, அல்லது காலாவுக்கு அடுத்து, பாலாவுக்கோ கம்பு சுற்றத் துவங்கலாம். அதைத் தான் அவரது மனமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவரது தற்பொழுதைய அறிவிப்பும் அதைத் தான் உணர்த்துகிறது.
தான் நினைப்பது போல திரை வெளிச்சத்தில் இருந்து கம்பீரமாக ஓய்வு பெற்று அமைதியாக வாழவும் முடியாமல், சரி, என்ன தான் நடக்கிறது ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிவாக முடிவெடுக்கவும் முடியாமல், மைக்கின் முன்னால் வீரவசனம் பேசி விட்டு, தனிமையில் தூக்கமின்றித் தவிக்கும் அந்த முதியவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
******

Wednesday, December 13, 2017

கோரிப்பாளயத்தின் கதை

கோரிப்பாளயத்தின் கதை

எழுத்தாளர் எஸ்.அர்ஷ்யா எழுதிய ”சொட்டாங்கல்” புதினம் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்


அடர்வாய் புதர் மன்றிப்போயிருந்த வனம், பண்படுத்தப்பட்டு விளை நிலமாய் மனிதப்பயன்பாட்டுக்கு வந்த போது, வனத்தின் மையமாய் அப்பொழுது தான் தளிர் விட்டிருந்த ஆலங்கன்று ஒன்று தன்னியல்பாய் தப்பிப் பிழைத்தது. விவசாயம் தழைத்து விளை நிலமாய் வனம் செழித்த போது, அந்தக் கன்று வலுவாய் வேறூன்றி ஆகாயம் நோக்கி கிளை பரப்பியது. நகரம் தன் நாகரீகத்தின் கரம் கொண்டு விளை நிலங்களை விழுங்கி கான்கிரீட் காடுகளாக உருமாற்றம் செய்த போது, அக்கன்று மிகப்பெரிய ஆல விருட்சமாய் வளர்ந்து, தன் விழுதுகளை தூண்களாக்கி தன் இருப்பை, தன் பசியத்தை, தன் உயிர்ப்பை தக்க வைத்துக் கொண்டே இருந்தது. நாகரீக மனிதர்கள் வஞ்சத்தை அறமாய் ஏற்று, பொதுப்பணியை சுயலாபத்திற்காய் சுருக்கி, ஒருவரை ஒருவர் புசிக்கத் துவங்கிய போதும், அந்த முதிய மரம், தன் கிளைகளில் இன்னும் இன்னும் புதிய இலைகளை தளிர்க்கச் செய்வதை, தன்னில் வந்து தங்கும் எத்தனையோ பெயர் தெரியாத பறவைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நிழற்குடையாக இருப்பதை நிறுத்தவே இல்லை.

மதுரை மாநகரின் மையத்தில், தன்னை நாடி வரும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக, அவர்களின்  பிணிகளைப் போக்கி ஆறுதல் அளிக்கும் ரட்சகனாக, எண்ணற்ற தனது கருணைக் கரங்கள் மூலமாக நிழல்பரப்பி அரவணைக்கும் ஆல விருட்சமாய் இருப்பது, “சையத் சுல்தான் அலாவுதீன் பாதுஷா – சையத் சம்சுதீன் அவுலியா தர்ஹா” அல்லது எளிமையாக “கோரிப்பாளையம் தர்ஹா”. தர்ஹாவோடும், தர்ஹாவைச் சுற்றியும் வளரும் நகரத்தின், அதன் மனிதர்களின் கதையைப் பேசுகிறது எஸ்.அர்ஷியா எழுதிய “சொட்டாங்கல்” என்னும் புதினம். சொட்டாங்கல் விளையாட்டில் ஒரு கல்லைத் தவற விட்டாலும் தோற்றதாகத் தான் அர்த்தம். அது போலவே மேலும் கீழுமாய் தூக்கியடிக்கப்படும் வாழ்க்கையில், தவறவிட்ட கற்களாய் தோற்றுப் போய் கீழே விழுந்தவர்களாயும், பெருங்கருணையின் பிடியில் ஆட்பட்டு கரைந்து போனவர்களாயும் உலவும் மனிதர்களையும் பற்றியது இப்புதினம்.

வாழ்க்கையின் அதன் போக்கில், மகிழ்வாக வாழ நினைக்கும் இளைஞன் காட்டுவா. நண்பர்களின் தூண்டுதலினால் “செய்கை” செய்து ஏரியாவுக்குள் ”பெரிய கையாக” தலையெடுக்க முனைகிறான். அது கைகூடாமல், போலீஸில் மாட்டிக் கொள்ளும் நிலை வரும் போது, தப்பித்து ஊரை விட்டு ஓடுகிறான். ஆண்டுகள் பல சென்ற பின், கனிந்த பழமாகி ஊர் திரும்புகிறான். தான் வாழ்ந்த வீட்டை, தன் நண்பர்களை, உறவினர்களை என்று தேடி அலைகிறான். அத்தனை ஆண்டுகளில் ஊர் அடைந்த மாற்றங்களை, அரசியல் மற்றும் சமூக நோக்கில் அவனது பார்வை வழியாக விவரிக்கிறது புதினம். இடையில் அவனுக்கு ஒரு பொருந்தாக் காதல். பதின் வயது சிறுமியின் தாயான “அழகு” உடனான அவனது தொடர்பு, இடையில் அவன் ஊரை விட்டுச் சென்ற பின், அவள் மனம் பேதலித்து தெருவில் அலைந்தது கடைசி வரை அவனுக்குத் தெரியாமலே போகிறது.

பெரும் பணம் சேர்த்து வைத்திருக்கும் அரசு ஊழியரான தந்தையின் சிபாரிசின் பேரில், மிக எளிதாக அரசு வேலையில் அமரும் ரஃபியுத்தீனுக்கு நான்கு சுவருக்குள், எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தபடி செய்யும் குமாஸ்தா வேலையில் இருப்புக் கொள்ளவில்லை. சொத்து சுகம், வேலை, சொந்த பந்தம் அத்தனையையும் உதறி விட்டு வடக்கு நோக்கி ரயிலேறுகிறான். தில்லியில் அமைச்சகங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இடையேயான “லயசன் ஆஃபிசராக” சமூக நிலையிலும், பொருளாதாரத்திலும் சரசரவென மேலேறி தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறான். எவ்வளவு பணம், ஆதாயம் கிடைக்குமென்ற போதிலும் தனக்கென வகுத்திருக்கும் கொள்கையிலிருந்து பிறழாதவனாகவே இருக்கிறான். அதன் பொருட்டு இன்னும் நல்ல பெயரை சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில், மனைவியும் இறந்து, மகளும் திருமணம் முடிந்து வெளிநாடு சென்றுவிட்ட பிறகு வாழ்வின் வெறுமையை உணர்ந்து. பிறந்த மண்ணைத் தேடி மீண்டும் மதுரை வருகிறான். அரசியல்வாதிகளால் கையகப்படுத்தப்பட்ட தனது பூர்வீக சொத்தை மீட்க வேண்டி போராடுகிறான்.
  
முப்பது வயதாகியும், வடிவம் குறுகிய உடல்குறை மற்றும் அவ்வப்பொழுது பிசகிப்போகும் மனக்குறைபாடு காரணமாக வீட்டில் உள்ளவர்களாலேயே ஒதுக்கப்படுகிறான் தவுலத் பாட்சா. கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வந்த அவனது தந்தை “மௌத்” ஆன பிறகு, நிராதரவாய் நிற்கிறான். அவனை யார் வைத்துப் பராமரிப்பது என்ற சண்டை குடும்பத்தினரிடம் நடந்து கொண்டிருக்கும் போதே, யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனது இருப்பு மற்றும் செயலகள் குறித்த தெளிவான விவரங்கள் யாருக்கும் புலப்படவில்லை. குரங்கு முகச்சாயல் கொண்ட அவன், அவ்வப்போது கபர்ஸ்தானில் அவுலியாவின் தம்பி அவர்களுக்காக பிரத்யேகமாக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் குழியில் இருந்து எழுந்து போவதை பார்த்ததாகவும், அவன் தான் கருணை வடிவான அவுலியாவின் தம்பி என்றும் ஊருக்குள் அரசல் புரசலாக பேசத் துவங்குகின்றனர். விகல்பமற்று, மழலையாய் இருந்த அவன் இறுதியில் மீண்டும் தன் பிறந்த மண்ணான தர்ஹாவின் கபர்ஸ்தானில், இறைவனுக்குள் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.

இப்படி, வெவ்வேறு சூழ்நிலைகளின் பொருட்டு,  பிறந்த மண்ணை விட்டு விலகிச் செல்லும் வெவ்வேறு நபர்கள், மீண்டும் தாய் மண்ணை அடைய நேர்கையில் அவர்கள் கைகொண்ட ஆன்ம பலம், அனுபவம், இறை நிலை ஆகியவை கோரிப்பாளயம் தர்ஹா என்னும் ஆல விருட்சத்தின்  பெருங்கிளைகளாக எப்படி விரிகிறது என்று காட்சிப்படுத்தியிருக்கிறது இப்புதினம். அதே போல இந்த விருட்சத்தைத் தேடி வரும் பறவைகளுக்கு வாழ்வாதாரமான உணவையையும், இருப்பிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதாகவும் வளர்கிறது புதினம்.

பெரிய சம்சாரியான அய்யங்கோட்டை ஆகாசம்பிள்ளை தான் பிறந்த ஊரை விட்டு விட்டு, புதியதொரு இடமான கோரிப்பாளையத்தில் பதியம் போட வைக்கிறது காலம். கனவில் வந்து கருப்பணசாமி சொன்ன இடத்தைத் தேடியலைந்து இறுதியாக கோரிப்பாளையத்தில் வந்தடைந்த போது, அது தான் தனக்கான இடம் என்று உணர்கிறார். அங்கேயே தலைமுறை தலைமுறையாக அவரது வம்சமும் தழைக்கிறது. அதே போல், ஊரில் இருந்து கோயில் காசைத் திருடிக்கொண்டு வரும் சந்தனத்தேவர், காடு, கரை, வெள்ளாமை என்று செழித்து இருந்தாலும், அவரது நிலத்தில் கிடை போட வரும் ராசுக்கோனாரின் வளர்ப்புக் கிடாயின் மூலம் அவரது திருட்டுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கிறது.

மில் வேலைக்காக மதுரைக்கு வரும் வேலுத்தேவருக்கு மனதுக்குள் ஒரு பெருங்கனவு. தன் அதிகாரத்தை நிலைநிறுத்தவும், தனக்குப் பணிந்து போக, தன் சொல்லை மீறத் துணியாத ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்கவும் வேண்டும் என்று உள்ளூர ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்க, அதனைப் பிடித்து மேல் எழுகிறார். அவருக்கு ஏற்ற துணையாக, மனைவி “தண்டட்டி”யும் அமைய அவரது ராஜாங்கம் விரியத்துவங்குகிறது. ஊருக்குள் வட்டிக்கு விட்டு, தவணைத் தொழில் செய்து காசைப் பெருக்குகின்றனர். அதற்கு அவர்களின் இயற்கையான மூர்க்க குணமும், அடாவடித்தனமும் கை கொடுக்க ஊருக்குள் அவர்களின் கொடி பறக்கிறது. ஒரு கட்டத்தில், வேலுத்தேவர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வர, அவர் விட்ட இடத்திலிருந்து அவரது ஒரே பேரனான சங்கு முத்தையா தொடர்கிறான். அவனுக்கு அரசியல் ஆசையும் சேர்ந்து வர, எதிர்பாராமல் கிடைக்கும் அமைச்சரின் மகனுடனான நட்பை பயன்படுத்தி, தன் எல்லைகளை விஸ்தரிக்கிறான். இவன் மூலமாக, இன்றைய அரசியல் காட்சிகளின் கோர முகம், அதில் நடக்கும் தகிடுதத்தங்கள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகியவற்றை  புனைவுக்குள் நைச்சியமாக ஒளித்து வைத்து விளையாட்டு காட்டியிருக்கிறது “சொட்டாங்கல்”

அதே போல, சாணி மற்றும் கவிச்சி வாசம் வீசும் நெல்ப்பேட்டை ஆட்டுத்தொட்டி, வகைவகையாய் பிரித்து விற்கப்படும் மீன் கடைகள், தினக்கூலிகளாக சோணையா கோவில் தெருமுனையில் தினமும் காலையில் நிற்கும், கொத்தனார் சித்தாள், நிமுந்தாள் வேலைக்குப் போகின்ற அன்றாடங் காய்ச்சிகளின் பிழைப்பு, செல்லூர் கைத்தறி தொழில் சித்தரிப்புகள், கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்று நாள் கணக்கு வைத்து, தவணை கொடுக்கும் தண்டல்காரர்களின் மிரட்டல்கள், ரசிகர் மன்றங்களுக்குள் இருக்கும் போட்டி மற்றும் சண்டை சச்சரவுகள், அதனால் ஏற்படுகின்ற தகராறுகள், பெருகி வரும் ஃபிளக்ஸ் பேனர் கலாச்சாரம், மூன்றாம் நிலை அரசியல்வாதிகளின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், கோவில் சர்ச் மற்றும் மசூதி என்று அருகருகே ஒரே நேரத்தில் சமத்துவமாய் நிகழும் திருவிழாக்கள் என்று மதுரை மண்ணுக்கே பிரத்யேகமாக உள்ள நிலக் காட்சிகளை  வாசகனே அருகில் இருந்து பார்ப்பது போன்ற தத்ரூபமான விவரிப்பு ”சொட்டாங்கல்”லின் பெரிய பலம். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களின் அன்றாடத்தை அப்படியே புதினத்தில், காட்சிப்படுத்தியிருப்பது சிலிர்ப்பை உருவாக்கும் என்றால், மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரையின் அசல் சித்திரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.

“சொட்டாங்கல்” மேலோட்டமான வாசிப்புக்கு அரசியல் களம் சார்ந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கினாலும், உண்மையில் இது மனிதர்களுக்கு தங்கள் மண் மீது இருக்கும் தீராப்பிரியம் பற்றிய கதை தான். சூழ்நிலை காரணமாக மதுரை மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தவர்களின் மீள்வருகையை பேசுவது ஒரு புறம் என்றால், உள்ளூரில் அடையாளமற்று சுற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்தவும், தங்கள் அதிகாரத்தை வலுப்பெறச்செய்யவும் நிலக்கையகப்படுத்துதலை ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ளுதலும், அதுவே அவர்களுக்கான கொலைக்கருவியாய் மாறுவதும் இன்னொரு பக்கம்.

கோரிப்பாளையம் தர்ஹாவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சியும் புதினத்தில் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாண்டிய மன்னனின் அரண்மனையின் மராமத்து வேலைக்காக, அழகர் கோவிலுக்கு வடக்கிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட பாறை ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவுக்கான விதானக் கல்லாக மாறிய கதை சிலிர்ப்பூட்டக் கூடியது. அதே போல பல்வேறு இடங்களில் இருந்து இங்கே குடிபெயரும் பலதரப்பட்ட மக்கள் தங்களுக்கான வாழ்விடமாக இப்பகுதியை மாற்றுவதும், இந்நிலம் தன்னை நெகிழ்த்தி அம்மக்களை தனக்குள் வாழ அனுமதிப்பதும், காலப்போக்கில் அவர்களின் வாழ்வியல் வழிகளிலும், வழிபாட்டு முறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அதனால் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வு குலைந்து பகைமையும், பொறாமையும் வேர்விடுவதையும் இயல்பாக விவரித்திருக்கிறது இப்புதினம். இறுதியில், எந்தவித கொள்கை கோட்பாடுமின்றி, தங்களின் சுயலாபத்திற்காகவும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அரசியலைக் கருவியாகப் பயன்படுத்துபவர்களின் நிலைமை என்னவாகிறது என்பதையும் சொல்லி முடிகிறது “சொட்டாங்கல்”.

மதுரையின் தற்கால நிலவியலையும், சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும்  தொடர்ந்து தனது படைப்புகள் மூலமாக பதிவு செய்து வரும் மண்ணின் மைந்தன் எஸ்.அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தை வெளியிட்ட “எதிர் வெளியீடு” பதிப்பகத்திற்கும் அன்பும், வாழ்த்துகளும்.

*******
சொட்டாங்கல் – புதினம்
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கம்: 264
விலை: ரூ. 220


******
நன்றி: சொல்வனம் இதழ்: https://solvanam.com/?p=50553

Friday, October 27, 2017

யாரை எதிர்க்க வேண்டும்?

நம்மை "அவுட் ஆஃப் பாக்ஸ்" யோசிக்க விடாமல், நம் எதிர்ப்பையோ ஆதரவையோ யாருக்குத் தரவேண்டும் என்று எதிர் தரப்பே நமக்கும் சேர்த்து மடைவெட்டி விடுவது தானே ராஜதந்திரம் (உடைச்சு சொல்லணும்னா, பார்ப்பனீயம்). திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டிய அத்தாரிட்டி, "தி இந்து" தான் என்று திமுகவினர் வாயாலேயே சொல்ல வைப்பதும், தமிழ் இன உணர்வாளர் "விஜய்" என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே குரலில் சொல்ல வைப்பதும் கூட எதிர்தரப்பு மாஸ்டர் மைண்ட்களின் எண்ணங்களாக இருக்கலாம். அதற்காகவே சில்லுண்டிகளை வைத்து, பலவீனமான அல்லது உப்புக்குப்ப்பெறாத கருத்துக்களைப் பேச வைப்பது. அதில் கடுப்பாகும் எந்த நடுநிலையாளரும் தன்னையும் அறியாமல் அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களுக்கு கம்பு சுற்றத் துவங்கிவிடுகிறார்கள்.
"பேரியக்கத்தின் அஸ்தமனம்" எழுதிய பத்திரிக்கையின் "திராவிட இயக்க வரலாற்றிற்காக" அதன்பக்கம் நின்று பேச திராவிட அபிமானிகளைத் தூண்டியது எது? தீவிர வலதுசாரிகளின் சல்லி வேர்களை அதற்கு எதிராய் லேசாய் சலம்ப வைத்தது தானே. அதே போல் தான், அன்னா ஹசாரேவின் கூட்டத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர், பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் "மரியாதை நிமித்தம்" சந்தித்துப் பேசியவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என்ற இரண்டு வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில், அதுவும் ஒரு திரைப்பட காட்சியில் கூறியதற்காக, சில அல்லக்கைகள் எழுதி வைத்ததை ஒப்பிப்பதைப் போல, படம் வந்த முதல் நாளே எதிர்க்கிறார்கள், அது பொதுவானவர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது, ஆகவே அவர்கள் நடிகரின் பக்கமிருந்து பேசத் துவங்கிவிடுகின்றனர்.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சி, கொஞ்ச நாள் கழித்து நடிகரும், ஆளும் கட்சியின் தேசியத் தலைவரும் கைகொடுத்து, கட்டிப் பிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இருக்கலாம். அப்போதும் நம்மையும் அறியாமல் நாம் எதிராளியின் விருப்பப்படி, வேறு யாருக்காகவாவது கம்பு சுற்றிக் கொண்டிருப்போம்.
******

Saturday, June 3, 2017

காவி அரசியல்

இன்று "மோடி ஜி கி ஜே, பாரத் மாதா கி ஜே, குஜராத்தை பாருங்க ஜி, பாலாறும் தேனாறும் ஓடுது, உத்தர் பிரதேஷ்க்கு கிடைச்ச முதல்வர் மாதிரி நமக்கெல்லாம் எந்த ஜென்மத்துல கிடைக்குமோ தெரியலயே ஜி" என்று கூவும் காவி கோஷ்டிகள் எல்லாம் எங்கிருந்தோ வந்தவர்கள் கிடையாது. நேற்று வரைக்கும் திமுக, அதிமுக என்று ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து அரசியல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் தாம். 

"இராஜாஜிக்குப் பிறகு தமிழ்நாட்டுல தலைவர்களே இல்லை. வெளியே மார்தட்டி சொல்லிக்க முடியாட்டியும், நம்மவான்னு சொல்லி மனசுக்குள்ள பூரிச்சுக்குறதுக்கு மேடம் இருந்தாங்க, இப்போ அதுவும் இல்லேன்னு ஆனபிறகு மோடிஜி தான் தமிழ்நாட்டைக் காப்பத்தணும்" என்று புல்லரித்துப் போய் இருக்கும் எலைட் கோஷ்டியைப் பற்றி நான் சொல்லவில்லை. இலாபமோ, நஷ்டமோ தன் நேரத்தையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொழில்முறை அரசியல்வாதிகளைச் சொல்கிறேன்.


இவர்களுக்கு அரசியல் தான் வாழ்வு. திராவிடக் கட்சிகளில் வரிசை ரொம்ப நீளம், போதாக்குறைக்கு மாவட்டச் செயலாளருக்குப் பிறகு அவர் மகன் மாவட்டச் செயலாளர், வட்டத்திற்குப் பிறகு மகன் வட்டம், ஒன்றியத்துக்குப் பின் மகன் ஒன்றியம் என்று வாரிசு இட ஒதுக்கீடு வேறு. இந்நிலையில் கடைமட்டத்திலிருந்து மேல் அதிகாரத்திற்கு வர நினைக்கும் ஒருவனின் அடுத்த தேர்வு தேசிய கட்சிகள். இந்த அடிபடையில் தான், தொண்டர்களே இல்லாவிட்டாலும் கூட, அமைப்பு முறை குலையாமல் இத்தனை வருடம் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தாக்குப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தங்களுக்கு அவர்களின் தயவு தேவைப்படலாம் என்ற எண்ணத்திலேயே அதனை அழிக்கும் வேலைகளை திராவிடக்கட்சிகள் மேற்கொள்வதில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தேமுதிகவில் இருந்தும், மதிமுகவில் இருந்தும் கொத்துக் கொத்தாக நிர்வாகிகளை இழுத்த பெரிய கட்சிகள், காங்கிரஸ் அடிமடியில் எப்போதும் கை வைத்ததில்லை. 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலுமே காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக தான் அரசியல் தொழில்காரர்களின் அடுத்த தேர்வு. (பர்செண்டேஜ் கமிஷன் அரசியலில் எப்பொழுதும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் பங்கு இல்லை என்பது என் துணிபு).


இயல்பாகவே அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் ஒருவன், தலைமையின் கொள்கைகளையும், திட்டங்களையும் விதந்தோதவே செய்வான். அவனுக்கு வேறு வழியில்லை. அதே போல, தேசிய அளவில் இருக்கும் தலைமையும், அந்தந்த பிராந்தியத்தை பிரதிநுவப்படுத்துவது மாதிரியான திட்டங்களை அறிவிக்கும். அதை வைத்து உள்ளூர் நிர்வாகிகள், தலைமையிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலமே தங்கள் பிராந்தியத்துக்கான நன்மைகள் கிடைக்கிறது என்ற தங்களையும் தங்கள் கட்சியையும், தங்கள் பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 


துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தமிழகத்தை, கூட்டணி கட்சிகள் தயவில் பத்து எம்.பி.கள் வரை கிடைக்க வாய்ப்புள்ள ஒரு மாநிலம் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் யோசிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக இன்னும் மோசம். அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் என்பது புளிக்கும் திராட்சை. ஆனால், பாஜகவின் தேசியத்தலைமையை நம்பி, களத்திலிருக்கும் மாநில, மாவட்ட தலைவர்களின் நிலைமை தான் பரிதாபம். வெளியில் ஜபர்தஸ்தாக பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு, அவர்கள் ஒன்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருக்க வேண்டும் அல்லது தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். நேர்மையான முறையில்  கைகொள்ள நினைத்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஜெ மர்ம மரணத்திற்குப் பிறகான குழப்பம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் என்று வரிசையாய் வந்த பிரச்சனைகளின் போதெல்லாம் "நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்ற பிம்பத்தை (பெயருக்காவது) உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம், "என்னையா ஒதுக்கி வைக்கிற, உன்னை என்ன செய்கிறேன், பார்!" என்ற வெறுப்பரசியல் தான். ஆனால் இவர்களை நம்பி, களத்தில் இருக்கும் உள்ளூர் தலைவர்கள் தான் பாவம். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், எதற்கெடுத்தாலும், மோடிஜியைப் பார், யோகிஜியைப் பார் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எப்படி வீதி வீதியாக கத்திக் கொண்டிருக்க, எலைட் குரூப்போ, டிவியில் விவாத நிகழ்ச்சியில் உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்களை அள்ளி வீசினோமா, அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பை டெல்லிக்கு அனுப்புனோமா, சில்லரையைத் தேத்துனோமா என்று காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.

ஆனால், இப்பொழுது தெரிகிறது, இவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து எல்லாம் அடிப்பதில்லை. இவர்களின் அரசியலே வெறுப்பின் மூலம் வளர்ந்த அரசியல் தான். பிராந்தியங்களின் தனித்தன்மையை ஒழிப்பது இவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது. மொழியாகட்டும், கலாச்சாரமாகட்டும், பழக்கவழக்கங்களாகட்டும், உணவு முறையாகட்டும் எல்லாவற்றிலும் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்தும் வெறி தான் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

"நீ செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதைச் செய்ய உனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட நான் உனக்காகப் போராடுவேன்" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் தானே நாமெல்லாம். மண்ணின் மக்களுக்கான அரசியல் செய்யாமல், எதேச்சிகரமான உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்படி தான் அனைவரும் நடக்க வேண்டும் எனறு கண்களை மூடிக் கொண்டு ஆணையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல. தன் பரிபாலனையின் கீழ் இருக்கும் எல்லா மக்களும் தம் மக்களே என்று எண்ணாத எந்த சாம்ராஜ்யமும், அது எவ்வளவு அசுர பலத்தோடு இருந்தாலும், நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை. வரலாற்றில் நீங்கள் வில்லன்களாகக் கூட அல்ல, கோமாளிகளாகவே பதிவு செய்யப்படுவீர்கள்.


******

Monday, January 25, 2016

விருதைத் துறந்த கலைஞன்

கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. நாட்டின் உயரிய கௌரவங்களில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருதினை எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்திருப்பதாகத் தெரிகிறது. இதனை இணைய வழக்கப்படி ஒரு “மீம்” தயாரித்துப் போட்டு கலாய்த்துவிட்டு கடந்து செல்ல வேண்டுமா இல்லை அவரது ரசிகத் தொண்டர்கள் போல அவரது அருமை பெருமையை சில பல பத்திகள் எழுதி, அவர் இந்த விருதுக்கெல்லாம் மேலே என்பது போன்ற வரிகளை நடுநடுவே தூவி, இறுதியில் அவர் இதனைப் பெற்றுக்கொள்ளாததால் பச்சைத்தண்ணீர் பருகாமல் வாடிக்கொண்டிருக்கின்றேன் என்று இரண்டு சொட்டுக் கண்ணீரை காணிக்கையாக்கி முடிக்க வேண்டுமா தெரியவில்லை.
நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகிவருவதால் பலரும் தாம் வாங்கிய விருதுகளை திருப்பித்தருவதாக கூறிவரும் காலகட்டத்தில், தற்பொழுதைய மத்திய அரசின் சித்தாந்தங்களில் ஒத்துப் போகிற, இந்து ஞான மரபைப் போற்றுகின்ற ஜெயமோகன் அவர்கள் இந்த விருதை மறுத்திருப்பது வியப்பையே தருகிறது. தான் இந்த விருதைப் பெற்றுக்கொள்வது என்பது, தன் ஆகச்சிறந்த படைப்பான “வெண்முரசு” எழுதிவருவதும், தன்னுடைய தொடர்ந்த இலக்கிய செயல்பாடுகளும் இத்தைய விருதுகளுக்காகத் தாம் என்று தன்னைத் தூற்றுபவர்கள் பேச வழிவகை செய்துவிடும். அதனாலேயே இந்த விருதினை தான் மிகுந்த மன வருத்தத்தோடு மறுப்பதாக பதிவு செய்திருக்கிறார். இது மிக வலிமையற்ற வாதம் என்பது அவருக்கே கூட தெரிந்திருக்கக்கூடும்.
மத்திய அரசின் முன்னாள் ஊழியர் என்ற முறையில் நாட்டில் விருதுகளுக்கான தகுதியுரைகள் (citations) மற்றும் பரிந்துரைகள் (recommendations) எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன, கோப்புகளுக்கான தரவுகள் எவ்வாறு திரட்டபடுகின்றன, அதிலுள்ள காரியச்சிக்கல்கள், விடுபடல்கள், தொடர்முயற்சிகள் இவற்றையெல்லாம் அவர் நன்கு அறிந்திருப்பார் என்றே நம்புகிறேன். இருந்தும் கடைசி நேரத்தில் விருதினை அவர் மறுத்திருக்கிறார். தான் இதற்கெல்லாம் தகுதியுள்ளவன் தான் என்று நிரூபித்துப் பிறகு இது தன்னை எவ்விதத்திலும் சலனப்படுத்தவில்லை என்று நிறுவது ஒரு வகை ஹீரோயிஸம் அல்லது ஒரு வகை பற்றற்ற நிலை. இதில் எந்த எண்ணத்தில் அவர் விருதினை மறுத்தார் என்று தெரியவில்லை. அல்லது தனது தகுதிக்கு இந்த விருது ஏற்புடையதல்ல என்று அவர் எண்ணியிருந்தாலும், அடுத்து பிற்காலத்தில் இன்னும் பெரிய விருதுகளுக்கு இவர் பெயர் பரிந்துரை செய்யப்படும் பொழுது இச்சம்பவம் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும் என்பதே உண்மை. இவர் உள்ளூர் சண்டை காரணமாக இதனை மறுத்தார் என்ற சம்பவம் எல்லாம் அரசாங்கத்தின் கோப்புகளில் பதிவாகப்போவதே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, “வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும், அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது” என்று அவர் கூறியது சத்தியமென்றால், தன் வாழ்நாள் அனைத்தையும் தன் எழுத்துக்காக, தனக்குக் கிடைக்கின்ற தனிப்பட்ட புகழை ஒதுக்கிவிட்டு தன் படைப்பின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தக் கலைஞனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். (ஆனாலும் கூட இவர் இவ்விருதினை மறுப்பதால் அது வெண்முரசிற்கு பெருமை சேர்க்கும் என்று கூறுவதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.)
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுப்பக்கங்களை மேய்ந்ததில் சில தகவல்கள் கிடைத்தன. நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா”விற்கு மட்டும் பிரதமர் நேரடியாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யலாம் போல. மற்ற விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகியவற்றிற்கு மாநில அரசுகள், மத்திய அமைச்சகம், மத்திய அரசுத்துறை, ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் பரிந்துரை செய்யலாம். இவர்கள் தவிர சுயபரிந்துரைகளும் ஏற்கப்படும். பிரதமரை உள்ளடக்கிய குழு வந்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து தகுதியுள்ளோர்க்கு விருதுகளை வழக்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார்கள், ஜனாதிபதியின் பார்வைக்குப் பிறகு அவர் விருதுகளை அறிவிப்பார் என்று அறிகிறேன். ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பரிந்துரைகள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின் போது விருதுகள் அறிவிக்கப்படும். ஆயிரக்கணக்கில் பரிந்துரைகள் பெறப்பட்டாலும், ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 120 பேர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமாக இன்னொரு தகவல், இந்த “பத்ம விருது” பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ இந்த விருதின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த விருதுகளுக்கு பணப்பரிசு எதுவும் கிடையாது. அப்புறம் மிக முக்கியமான இன்னொன்று, விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை சில நாட்களுக்குப் பின் அரசின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள். உண்மையில் யார் யார் பெயர் பரிந்துரையில் இருந்தது என்ற தகவல் அதில் இருக்கும் :)

பத்ம விருதுகள் பெற்றிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் !
தரவுகள்:
http://mha.nic.in/awards_medals
http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
http://timesofindia.indiatimes.com/india/Govt-invites-nominations-for-Padma-awards-2016/articleshow/48526263.cms
http://www.jeyamohan.in/83792#.VqY2Q5p97IU

******

Wednesday, December 10, 2014

பெரியகுளத்தானை மன்னனாய் உடைய தெள்ளுதமிழ்நாடு

சமீபத்தில் கன்னியாக்குமாரி கடலுக்குக் கீழே நடந்த அகழ்வாராய்ச்சியில், லெமூரியா நாகரீகம் தொடர்பான ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த வௌவால் சித்தர் எழுதியிருக்கும் குறிப்பில் பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்துள்ளன என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலம் பொருந்திய அரசி தன் உச்சககட்ட சக்தியுடன் திகழும் பொழுது, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தீவினையின் பயனை அனுபவிக்கும் பொருட்டு செயலிழந்து மௌனியாக இருக்க நேரிடுமென்றும், அதன் பின் அந்த அரசியின் சிப்பாய்களில் ஒருவன் குடவோலை முறை வழியாக இரண்டாம் முறையாக மன்னனாக தேர்வு செய்யப்படுவான் என்றும் குறிப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவ்வாறு அவன் பொறுப்பேற்றபின் நடக்கும் ஆட்சி வரலாறு காணாத விதத்தில் சிறப்பானதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் பொற்கால ஆட்சியாகவும் இருக்கும். மாதமல்ல, வாரம் மும்மாரி பொழிந்து தூர்ந்து போன வாய்க்கால் வழியெங்கும் நுரை பொங்க புதுவெள்ளம் பாய்ந்தோடும். காய்ந்து போன கண்மாய்கள் எல்லாம் நீர் தழும்ப நிறைந்திருந்தும். விசுவாசமே மூச்சாய் கொண்டு இயங்கும் மன்னன் ஆளும் நாட்டில் சட்டசபை கூடி அமைச்சரவை முடிவெடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல், எல்லாம் இயற்கையின் வழியே தானாக நடக்கும். மாற்றுக்கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மன்னன் ஆட்சிப் பொறுப்பில் நிலைத்து நிற்பதற்கான அறிவுரைகளைக் கூறுவர். நம்மைப் போன்ற சாமான்யன் நடத்தும் ஆட்சி, சாமான்யர்களைப் போல அதிகாரமற்றதாய் தான் இருக்கும் என்றும் உணர்வுள்ளவர்களாய் மாறியிருக்கும் மக்கள் மன்னனோடு சேர்ந்து வாரமிருமுறை கூட்டு அழுகைப் பிரார்த்தனையும், அங்கப்பிரதட்சணங்களும் செய்து முன்னூறு ரூபாய் காணிக்கை பெற்றுச் செல்வர். மொத்ததில் ஆள்பவரில் இருந்து அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரும் உள்ளுக்குள் மனம் மகிழ குதூகலித்தாலும் கூட, வெளியே சோகமே உருவான மோன நிலையில் தியானம் செய்தபடியிருப்பர். இவ்வாறான தகவல்களும் அந்த செப்பேட்டில் பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி பழைய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து கூறிய பல்துறை வித்தகர், கெத்துக்கு சொத்தை விற்ற கவிஞர். காத்தமுத்து அவர்கள் சங்கப்பாடல்களில் கூட இத்தகைய சிறப்பான மன்னனைப் பற்றிய பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். “ விடிந்தும் விடியாமல் துயில் எழுந்து பல் கூட விளக்காமல் முதல் வேலையாய் தேநீர்க்கடைக்கு வந்து ஓசிப்பேப்பர் படித்து வெட்டி நியாயம் பேசும் மக்களைப் பெருவாரியாய்க் கொண்ட ஊரில், தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கலனிலிருந்து பாலினால் அசுத்தமடைந்த நீரானது மீண்டும் தன் தூய்மை நிலையை அடைய ஆவியாய் உருமாறிக் கொண்டிருக்கும் தேநீர்க்கடையில், தன் இரு கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் நீள வீசி, சளைக்காமல் ஒன்-பை-டூ டீ போடும் ஆற்றல்மிக்க கரங்களையுடைய, குங்குமத்தை விபூதி போல் பூசியிருக்கும் பெரியகுளத்தானை மன்னனாகக் கொள்ளும் தெள்ளுதமிழ்நாடு” என்ற பாடல் வரிகளே இதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக இரண்டு நாட்களாகத் தொடரும் பயனற்ற விவாதங்கள் வைரலாகப் பரவி கண்டங்களைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதேச்சையாக தனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்த சீனாவைச் சேர்ந்த பாஸ்ட்ராமஸ், தனது வீட்டின் பூஜையறையில் பாதுகாத்து வைத்திருந்த தனது எள்ளுத்தாத்தாவான நாஸ்ட்ராமஸின் ஓலைச்சுவடிகளை மோந்து பார்த்ததில் மேலும் சில ஆச்சர்யமான விஷயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாஸ்ட்ராமஸ் குறிப்பின் படி ”குணிந்த முதுகும் நிமிரும் காலம், பரப்பன அக்ரஹார கதவுகள் அடைக்கும். நவநீதம், ஷீலாமயம், எடப்பாடியம் எல்லாம் மேலே பழைய பன்னீர் வாசம் தூக்கலாய் அடிக்கும். ஹூஹூட் வந்து நிறைய நனைக்கும். ஆவின்பாலின் ஜம்ப்பும் இருக்கும்” என்ற கூற்று தன்னிரலில்லா தமிழ் மன்னனின் தற்கால ஆட்சியைக் குறிப்பதாகவே உள்ளது என்று ”உண்மையின் உரைகல்”தெரிவித்துள்ளது.

குறிப்பு: இந்த கற்பனைக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு நமது தமிழ்நாடல்ல. லெமூரியா கண்டத்தில் வடகிழக்கு திசையில் இருநூற்று ஐம்பது மைல்கற்கள் தாண்டி, உள்ளடங்கி அமைந்த ஒரு சிற்றூரின் பெயரும் தமிழ்நாடு தான். எனவே மேலே சொல்லியிருக்கும் குறிப்புகள் யாவும் அந்த சிற்றூரில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வசித்த ஒரு பழங்குடி இனத் தலைவனைப் பற்றிய குறிப்புகளேயாகும். இதற்கும் நிகழ்காலத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கோ, எந்தப்பொருளுக்கோ, முக்கியமாக எந்த அமைச்சருக்கோ சம்பந்தமில்லை என்று என் சுயநலன் கருதி தெரிவித்துக் கொள்கிறேன்.

******