Wednesday, December 10, 2014

பெரியகுளத்தானை மன்னனாய் உடைய தெள்ளுதமிழ்நாடு

சமீபத்தில் கன்னியாக்குமாரி கடலுக்குக் கீழே நடந்த அகழ்வாராய்ச்சியில், லெமூரியா நாகரீகம் தொடர்பான ஒரு செப்பேடு கிடைத்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த வௌவால் சித்தர் எழுதியிருக்கும் குறிப்பில் பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்துள்ளன என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலம் பொருந்திய அரசி தன் உச்சககட்ட சக்தியுடன் திகழும் பொழுது, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு தீவினையின் பயனை அனுபவிக்கும் பொருட்டு செயலிழந்து மௌனியாக இருக்க நேரிடுமென்றும், அதன் பின் அந்த அரசியின் சிப்பாய்களில் ஒருவன் குடவோலை முறை வழியாக இரண்டாம் முறையாக மன்னனாக தேர்வு செய்யப்படுவான் என்றும் குறிப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவ்வாறு அவன் பொறுப்பேற்றபின் நடக்கும் ஆட்சி வரலாறு காணாத விதத்தில் சிறப்பானதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் பொற்கால ஆட்சியாகவும் இருக்கும். மாதமல்ல, வாரம் மும்மாரி பொழிந்து தூர்ந்து போன வாய்க்கால் வழியெங்கும் நுரை பொங்க புதுவெள்ளம் பாய்ந்தோடும். காய்ந்து போன கண்மாய்கள் எல்லாம் நீர் தழும்ப நிறைந்திருந்தும். விசுவாசமே மூச்சாய் கொண்டு இயங்கும் மன்னன் ஆளும் நாட்டில் சட்டசபை கூடி அமைச்சரவை முடிவெடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லாமல், எல்லாம் இயற்கையின் வழியே தானாக நடக்கும். மாற்றுக்கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட மன்னன் ஆட்சிப் பொறுப்பில் நிலைத்து நிற்பதற்கான அறிவுரைகளைக் கூறுவர். நம்மைப் போன்ற சாமான்யன் நடத்தும் ஆட்சி, சாமான்யர்களைப் போல அதிகாரமற்றதாய் தான் இருக்கும் என்றும் உணர்வுள்ளவர்களாய் மாறியிருக்கும் மக்கள் மன்னனோடு சேர்ந்து வாரமிருமுறை கூட்டு அழுகைப் பிரார்த்தனையும், அங்கப்பிரதட்சணங்களும் செய்து முன்னூறு ரூபாய் காணிக்கை பெற்றுச் செல்வர். மொத்ததில் ஆள்பவரில் இருந்து அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரும் உள்ளுக்குள் மனம் மகிழ குதூகலித்தாலும் கூட, வெளியே சோகமே உருவான மோன நிலையில் தியானம் செய்தபடியிருப்பர். இவ்வாறான தகவல்களும் அந்த செப்பேட்டில் பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இது பற்றி பழைய தலைமுறை தொலைக்காட்சியில் கருத்து கூறிய பல்துறை வித்தகர், கெத்துக்கு சொத்தை விற்ற கவிஞர். காத்தமுத்து அவர்கள் சங்கப்பாடல்களில் கூட இத்தகைய சிறப்பான மன்னனைப் பற்றிய பாடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். “ விடிந்தும் விடியாமல் துயில் எழுந்து பல் கூட விளக்காமல் முதல் வேலையாய் தேநீர்க்கடைக்கு வந்து ஓசிப்பேப்பர் படித்து வெட்டி நியாயம் பேசும் மக்களைப் பெருவாரியாய்க் கொண்ட ஊரில், தொடர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கலனிலிருந்து பாலினால் அசுத்தமடைந்த நீரானது மீண்டும் தன் தூய்மை நிலையை அடைய ஆவியாய் உருமாறிக் கொண்டிருக்கும் தேநீர்க்கடையில், தன் இரு கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் நீள வீசி, சளைக்காமல் ஒன்-பை-டூ டீ போடும் ஆற்றல்மிக்க கரங்களையுடைய, குங்குமத்தை விபூதி போல் பூசியிருக்கும் பெரியகுளத்தானை மன்னனாகக் கொள்ளும் தெள்ளுதமிழ்நாடு” என்ற பாடல் வரிகளே இதற்கு சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக இரண்டு நாட்களாகத் தொடரும் பயனற்ற விவாதங்கள் வைரலாகப் பரவி கண்டங்களைத் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை எதேச்சையாக தனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்த சீனாவைச் சேர்ந்த பாஸ்ட்ராமஸ், தனது வீட்டின் பூஜையறையில் பாதுகாத்து வைத்திருந்த தனது எள்ளுத்தாத்தாவான நாஸ்ட்ராமஸின் ஓலைச்சுவடிகளை மோந்து பார்த்ததில் மேலும் சில ஆச்சர்யமான விஷயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாஸ்ட்ராமஸ் குறிப்பின் படி ”குணிந்த முதுகும் நிமிரும் காலம், பரப்பன அக்ரஹார கதவுகள் அடைக்கும். நவநீதம், ஷீலாமயம், எடப்பாடியம் எல்லாம் மேலே பழைய பன்னீர் வாசம் தூக்கலாய் அடிக்கும். ஹூஹூட் வந்து நிறைய நனைக்கும். ஆவின்பாலின் ஜம்ப்பும் இருக்கும்” என்ற கூற்று தன்னிரலில்லா தமிழ் மன்னனின் தற்கால ஆட்சியைக் குறிப்பதாகவே உள்ளது என்று ”உண்மையின் உரைகல்”தெரிவித்துள்ளது.

குறிப்பு: இந்த கற்பனைக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு நமது தமிழ்நாடல்ல. லெமூரியா கண்டத்தில் வடகிழக்கு திசையில் இருநூற்று ஐம்பது மைல்கற்கள் தாண்டி, உள்ளடங்கி அமைந்த ஒரு சிற்றூரின் பெயரும் தமிழ்நாடு தான். எனவே மேலே சொல்லியிருக்கும் குறிப்புகள் யாவும் அந்த சிற்றூரில் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் வசித்த ஒரு பழங்குடி இனத் தலைவனைப் பற்றிய குறிப்புகளேயாகும். இதற்கும் நிகழ்காலத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கோ, எந்தப்பொருளுக்கோ, முக்கியமாக எந்த அமைச்சருக்கோ சம்பந்தமில்லை என்று என் சுயநலன் கருதி தெரிவித்துக் கொள்கிறேன்.

******

No comments:

Post a Comment