Saturday, December 31, 2011

நாளை மற்றொரு நாளே !


"டிமாண்ட்" உள்ள பொருளுக்கு விலையேற்றி விற்பது என்ற கொள்ளை இன்று குறுந்தகவல் வரை வந்து நிற்கிறது. புத்தாண்டு அன்றோ, முதல் நாளோ குறுந்தகவல் அனுப்பினால் அதிக பைசா வசூலாம். நம் மக்கள் அதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன. 29ம் தேதி, 30ம் தேதியே வாழ்த்து 'எஸ்.எம்.எஸ்'கள் அனுப்பத் துவங்கி விடுகிறார்கள். இப்படியே அதிக கட்டணங்களுக்கான நாட்களை கூட்டிக் கொண்டே போய் மக்கள் அக்டோபர், நவம்பர் மாதத்திலேயே புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் போல. இருக்கட்டும், நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியாவிட்டாலும், ஜஸ்ட் இன்று உங்களை நினைக்கிறேன் என்ற வகையில் ஒரு குறுந்தகவலும் உவப்பானதே.

ஒரு காலம் இருந்தது. புத்தாண்டு வாழ்த்து சொல்ல, செல்ஃபோனில் உள்ள தொள்ளாயிரத்து சொச்சம் எண்களுக்கும் வரிசையாக குறுந்தகவல் அனுப்புமாறு சிறிய மென்பொருள் "கோட்டிக்காரத்தனம்"  செய்தது. அதெல்லாம் ஒரு காலம். இப்போது, வரும் வாழ்த்துகளுக்கு சம்பிரதாய நன்றி சொல்லும் அளவில் நிற்கிறது. 

பெரிதாக புத்தாண்டு கொண்டாட்டங்கள், சபதங்கள் என்ற ஆடம்பர அலப்பரைகளில் சிக்கிக் கொள்ளும் பழக்கம் இப்போது வரை இல்லை. எல்லாரும் புத்தாண்டை கொண்டாட "மலையேற" விரும்புகையில், நான் மலைதேசத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது வந்த இரண்டு புத்தாண்டு தினங்களில் மலையிறங்கி மதுரை வந்துவிட்டேன். அந்த அளவு தான் நம் கொண்டாட்ட மனநிலை. ஆனால், ஒரு அளவீடாக கடந்த ஆண்டு எதையெல்லாம் கிழித்திருக்கிறோம் என்று கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுண்டு. வழக்கமாக கிழித்த பேப்பரெல்லாம் கப்பல் விட்டு விளையாண்டதாய் தான் இருக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய கப்பல் எல்லாம் விட்டிருப்பது போலத் தோன்றுகிறது. இல்லற வாழ்வு துவக்கம், மக்கட்செல்வம், புதுவீடு கட்டி குடியேறுதல், கோவில் குடமுழுக்கு, ஆராய்ச்சிப்படிப்பு துவக்கம், முதன்முதலில் அச்சேறிய படைப்பு என எல்லா விதங்களிலும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது இந்த ஆண்டு.

அப்புறம், ஒரு சரித்திர சாதனையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். திருமண வருடம் என்றால் அப்படித்தானாம் :)

இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நிச்சயம் இந்த 2011 ஒரு மைல்க்கல். அந்த அளவில் என்றும் நினைவிலிருக்கும் என் இனிய நண்பன் இந்த 2011. 

சென்று வா என் நண்பனே! 

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் பெற்றிட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :)

******

Monday, December 12, 2011

"ரஜினி எனும் யானை"இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில் அப்பா “மாவீரன்” படத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். படம் பார்த்துவிட்டு வந்து என் தம்பி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கையில் “மாவீரன்” எனறு எழுதத் துவங்கிவிட்டான். அம்மா நடுவில் தடுத்து நிறுத்தி, கத்தியை பிடுங்கி விட்டு, முதுகில் நாலு சாத்து சாத்தினார். கையில் வழியும் ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டே, “நான் ரஜினி. அப்படித்தான் பண்ணுவேன்” என்றான். அப்போது அவன் சிறுவன் கூட இல்லை, வெறும் நான்கு வயது குழந்தை. அதிலிருந்து நாங்கள் சினிமா பார்ப்பதற்கே கூட தடை உத்தரவெல்லாம் கூட சில வருடங்கள் அமலில் இருந்தது. எனக்கும், என் தம்பிகளுக்கும் முதன்முதலில் ரஜினியிடம் ஈர்ப்பு வந்தது அந்த படத்தில் தான். இது போன்ற விஷயங்கள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ரஜினியின் பெயரால் ‘கோட்டித்தனம்’ செய்யும் குழந்தைகள் எல்லா வீட்டிலும் நிறையவே இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். எல்லோரும் சொல்வது போல ரஜினி என்பது ஒரு மந்திரச்சொல். தமிழ்நாட்டின் குடும்பங்களில் இந்த நாற்பது வருடங்களில் அவரது ஆளுமையோ, செய்கையோ, பாதிப்போ இல்லாமல் எந்தவொரு குழந்தையும் வளர்ந்திருக்காது. சிலர் பதின்ம வயதைத் தாண்டிய பிறகு ரஜினி ரசிப்பை மனதிற்குள் மட்டும் வைத்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் தங்களது “ப்ரஸ்டீஜ் சிம்பலாக” ரஜினி ரசிகன் என்ற விசிட்டிங் கார்டை உபயோகிக்கிறார்கள்.

ரஜினி என்ற கலைஞனை ரசிப்பது, ஏன் விமர்சிப்பது என்பது கூட ஒரு வகையில் சரி தான். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளிலும் கூட ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. இதெல்லாம் அவரவர் தம் மனநிலைக்கேற்ப ரஜினி என்ற நடிகனை, ரஜினி என்ற தனிமனிதனின் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னொரு வகை இருக்கிறது. ரஜினி என்ற பிம்பத்தை சந்தைப்பொருளாக்கி கூவிக்கூவி விற்பது. 

சமீப காலமாக ரஜினியின் ரீச் இந்தியா முழுமைக்கும், உலகின் மற்ற சில பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் ரஜினி பிம்பத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நோக்கம் ரஜினியைப் பாராட்டுவதாகவோ, விமர்சிப்பதாகவோ கூட இருப்பதில்லை. ரஜினியை வைத்து முடிந்தமட்டும் கல்லா கட்டுவது. இவர்களின் வியாபாரத்திற்கு ரஜினி இல்லையென்றால் நாளை புகழின் உச்சத்திலிருக்கும் இன்னொரு பிம்பம். அவ்வளவுதான். முன்பு ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரஜினியை தாழ்த்தி பேசி பேட்டி கொடுத்தால் பிரபலமடையலாம் என்று. இன்று அடுத்த நிலையாக , யார் அதிகமாக ரஜினியைப் பற்றி பேசுகிறார்களோ அவரே அன்றைய பிரபலம். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் ஊத்துக்கு இவர்கள் ரஜினி ரசிகர்களை ஊறுகாய் ஆக்கிக் கொள்வது தான். 

முன்பு ரஜினி உயிருக்குப் போராடி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடைநிலை ரசிகர் ஒவ்வொருவரும் அவர் நல்லபடியாக உயிர் பிழைத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க, இந்த வியாபாரிகளோ, “ரஜினி நிச்சயம் குணமடைவார், குணமடைந்து ‘ராணா’ படத்தில் நடித்து மக்களை மகிழ்விப்பார்” என்று அறிக்கை விடும் சாக்கில் அடுத்த படத்துக்கான டெம்ப்போ குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர். அட, பதர்களே! அவர் இனி படமே நடிக்காவிட்டாலும் சரி, நல்ல ஆரோக்யத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவரை உண்மையாக நேசிப்பவரின் விருப்பமாக இருக்க முடியும்.

இந்த ஆண்டும் ரஜினியின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் அந்த கொண்டாட்டங்களை நமது ஊடகங்கள் பன்மடங்கு ஊதிப் பெருக்கி ப்ரைம் டைமில் ஒன்றுக்கு பத்து முறை ஒளிபரப்பி ரஜினி பாசம் காட்டுவார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று மட்டுமல்ல, ரஜினி சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வையும், ஏன் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மருத்துவமனை காட்சிகள் கிடைத்தால் கூட பாசமுடன் ஒளிபரப்பி, நடுவில் நிறைய விளம்பர இடைவேளை வைத்து ரஜினி என்னும் பிம்பத்தை துண்டு துண்டாக்கி விற்றுக் கொண்டிருப்பார்கள்

இவர்களுக்கு, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனால் ஒரு வேளை, யானை இ’ர’க்க வேண்டிய நிலை வந்தால், கால் காசு போட இந்த வியாபாரிகள் வரப்போவதில்லை என்பது தான் உண்மை.


ரஜினி என்னும் நடிகரின் உண்மை ரசிகனாக, அவருக்கு “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்". அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், நிம்மதியும் நிலைத்திருக்கட்டும்.

******

Saturday, December 10, 2011

மதுரை ”போஸ்டர்”மதுரை மண்ணின் மைந்தர்களின் ”போஸ்டர் கிரியேடிவிட்டி”க்கு அளவே கிடையாது. இந்த கலாச்சாரம் வேறூன்றி, செழித்து வளர என்றும் பெருந்துணையாய் இருப்பவர்கள் நம் திரைநாயகர்கள் தான். தீபாவளிக்கு அவர்கள் தலைவர் படம் ரிலீசானால் போதும், போஸ்டர்கள் தொடங்கி கட் அவுட், கொடி, தோரணம், பாலாபிஷேகம் இப்போது பீராபிஷேகம் என கலக்குவார்கள், பொங்குவார்கள், வழிவார்கள். அதே போல, தலைவர் படம் வெளிவராத போது துக்க தீபாவளி கொண்டாடவும் தயங்க மாட்டார்கள். இரங்கல் செய்தி போல கண்ணீர் சிந்தும் கண்கள் படமெல்லாம் போட்டும் கறுப்பு பார்டர் கட்டி கொட்டை எழுத்துகளில் “தலைவா, உன் படம் வெளிவராதபோது தீபாவளி ஒரு கேடா!” என உருகியிருப்பார்கள். இதெல்லாம் சும்மா பப்ளிசிட்டிக்காக மட்டும் செய்வதில்லை. உண்மையிலேயே ரசிகர் மன்றத்தினர் முச்சந்திகளில் பந்தல் போட்டு கறுப்புக் கொடியேற்றி, தீபாவளி அன்று முழுதும் தலைவரின் சோகப்பாடல்கள் ஒலிக்க விட்டு, அந்த பந்தலிலேயே இழவு காத்த நிகழ்வுகளெல்லாம் நடந்திருக்கின்றன.

சிறிது நாட்கள் முன்பு நடிகர் ரஜினி உடல்நலமில்லாமல் இருந்த போது சில ஆட்டோக்களின் பின்னால் எழுதியிருந்த வாசகம் நேரடியாக மதுரை மீனாட்சிக்கு வேண்டுகோள் எல்லாம் வைத்தது. “தாயே மீனாட்சி, ரஜினிக்கு சக்தி கொடு!”என்று அந்த வாசகத்தை வாசித்த ஒவ்வொருவரும் தங்களை அறியாமலே ரஜினிக்காக வேண்டிக் கொண்டனர். இப்போது “எமனையே எதிர்த்தவன், எவனையும் எதிர்ப்பான்” என ரஜினி பிறந்த நாள் போஸ்டர் வரை தூள் பரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“கடவுள் முரளி வாழ்க” - சாலையில் போகும் போது, என் போல் சைடில் பராக்கு பார்த்துக் கொண்டு செல்லும் ஒவ்வொரு மதுரைக்காரனுக்கும் இந்த வார்த்தைகளுக்கென இருக்கும் பிரத்யேக ஃபாண்ட் இந்நேரம் மனதில் தோன்றியிருக்கும். கரிக்கட்டையில் கிட்டத்தட்ட மதுரையின் அனைத்து சந்து பொந்துகளிலும் வருடக்கணக்காக இந்த வார்த்தைகள் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரே நபர் தொடந்து சளைக்காமல் நடிகர் முரளியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார், கிட்டத்தட்ட தனிநபர் புரட்சி போல அதுவும் முரளி இறந்த பிறகும் கூட.

நடிகர்கள் போஸ்டர் அடிப்பதன் நீட்சியாக மக்கள் அடுத்த நிலைக்கும் சென்று விட்டனர். கல்யாணம், கருமாதி, காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா என சகலத்துக்கும் போஸ்டர் அடித்து கலக்கிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் அவர்கள் அடிக்கும் வாசங்கள் தான் இன்னும் ‘ஹைலைட்”. ஃபிளக்ஸ் வராத கற்காலத்திலும், மக்களின் கிரியேடிவிட்டிக்கு குறைவே இருந்ததில்லை. “வீட்ல விஷேசங்க” என தொடங்கி, ”இப்படிக்கு நாட்டுக்கொரு நல்லவன் ரஜினி கொலைவெறி குரூப்ஸ்” என முடிவது வரைக்கும் இடையில் ஏகப்பட்ட அம்புக்ள், ஆர்ட்டீன்கள், புறாக்கள், ஏஞ்சல்கள் என போஸ்டர்கள் கலைகட்டும். பிறகு தற்கால டிஜிடல் யுகத்தில் இந்த கலாச்சாரம் பன்மடங்கி பரிணாம வளர்ச்சியடைந்து திரை நடிகர்களின் ஸ்டில்களில் தலையை மட்டும் வெட்டி விட்டு அதில் நம்மவர்கள் புது அவதாரமெடுத்திருப்பார்கள். பாட்ஷா ரஜினி உடமபில் நமது பால்பாண்டியோ, முத்துக்கருப்பனோ தன் நண்பனின் கல்யாணத்தில் மண்டப வாசலில் பத்துக்கு பதினாறு மெகா சைசில் சொடக்குப் போட்டுக் கொண்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம். அதிலும் ஒரு வெரைடி. பாட்ஷாவிற்கு அருகில் இருக்கும் நாய்க்கு பதிலாக சிங்கமோ, புலியோ தான் உருமிக் கொண்டிருக்கும். இதை “ப்ராண்ட் இம்ப்ரவைசேன்” என்ற தலைப்பில் ஐ.ஐ.எம். மாணவர்கள் பாடமாகப் படிக்கலாம்.

இதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். நம் அரசியல் தலைவர்களுக்கு தொண்டர்கள் அடிக்கும் பேனர்க்ள் தான் லைம்லைட். காந்தி, பெரியார், அன்ணா, பகத்சிங், வீரசிவாஜி, முருகன், சிவன், ஐயப்பன், காளி, மேரி, மேரி கையில்ருக்கும் குழந்தை என சகலரின் தலையையும் தயவு தாட்சண்யமின்றி வெட்டிவிட்டு தற்கால தலைவர்களின் தலையை பொருத்தும் காலங்களும் வந்துவிட்டன. ஏன் ஒரு முறை சச்சின் தலையைக் கூட வெட்டியிருக்கிறார்கள். ஆனால், சும்மா சொல்லக் கூடாது. நல்லா தமாஷா இருக்கும். இந்த போஸ்டர்களைப் பார்த்து விட்டு நடிகர்கள் கூட அப்போதைக்கப்போது சாமி வேடம் போடுவார்கள். அது தனி ட்ராக். ஆனால் அரசியல்வாதிகள் குறிப்பால் தன்செயல் உணர்த்துவதில் வல்லவர்கள். இவர்கள் சூசகமாக தங்கள் வளர்ச்சியை போஸ்டர்கள் மூலமாகவே தெரிவிப்பார்கள். முதலில் அல்லக்கைகளாக இருக்கும் போது, தலைவரின் படத்தை ஆளுயரம் போட்டு, கால்களுக்குக் கீழே ”உண்மைத்தொண்டன்” என தங்கள் பெயரை மட்டும் போடுவார்கள். பின்பு அல்லக்கை தலைவரின் பார்வையில் பட்ட பிறகு, கீழே பெயருடன் வட்டத்துக்குள் போட்டோவும் சேர்ந்து கொள்ளும். பின்பு வட்டம், நகரம் என கொஞ்சம் சேர்க்க ஆரம்பித்த பிறகு, தலைவருக்கு மாலையோ சால்வையோ அணிவிப்பது போன்று தலைவருக்கு சரி அளவில் போட்டோ எடுத்து போஸ்டர் ஒட்டப்படும். பிறகு செட்டிலான பிறகு, தலைவர் போஸ்டரின் வலது மேல் மூலைக்கு சென்று விடுவார். இவர் ஃபுல் சைசில் நின்று கொண்டிருப்பார். கீழே கால்களுக்கருகில் “உண்மைத்தொண்டன்” என இன்னொரு அல்லக்கை உருவாகி இருக்கும். 

சிலர் விஷயங்களை சிலர் செய்யும் போது, ஒரு சிறிய ஏளன சிரிப்போடு கடந்து விடுவோம். சிலருக்கு ஓவர் ஐஸ் வைத்து, வேடிக்கை பார்க்கும் நமக்கே கூச்சம் வர வைத்து விடுவார்கள். சில அரைவேக்காடுக்ளோ மினிமம் வொர்த் கூட இல்லாத சில்லரைகளுக்கும் “ஆகா, ஓகோ”வென்று போஸ்டர் அடிப்பார்கள். சரி என்று சிறு எரிச்சலோடு அதையும் கடந்து சென்று போக முடியும். ஆனால் இன்று ஒரு போஸ்டரைப் பார்த்தேன். சிரிப்பு வரவில்லை, கூச்சம் வரவில்லை, எரிச்சல் வரவில்லை. சத்தியமாய் சொல்கின்றேன், காறித் துப்ப வேண்டும் போலத் தோன்றியது. அந்த போஸ்டர் “பாரத மாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தலைப்பிட்டு ஓர் இத்தாலிய பெண்மணிக்கு பாரதமாதா வேடம் போட்டு ஒட்டியிருந்தார்கள். Shame on you, Madurai. 
  
******

Monday, November 28, 2011

பெயரில்லாதவை - 28/11/2011


இப்பொழுதெல்லாம் ஏன் நிறைய எழுதுவதில்லை என்ற கேள்வியை இப்பொழுதெல்லாம் நிறைய முறை கேட்க வேண்டியிருக்கிறது. (ஒன்றுக்கு மேற்பட்டு மொத்தம் "இரண்டு" முறை கேட்கப்பட்டதால் "நிறைய" எனக் கொள்க).  "நான் எப்பொழுது நிறைய எழுதினேன்" என்ற பதில் கேள்வி தொண்டை வரை வந்தாலும் அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு மையமாய் ஒரு புன்னகையை மட்டும் வீசி விடுகிறேன். பின்னே, அரசுத்துறையில் இருப்பதனால் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியே பழக்கமாகி விட்டது. சரி, "எழுதாமல் இருப்பதற்கான காரணத்தையே எழுதினால் என்ன" என்று கூட நினைப்பதுண்டு. ஆனால் அதுவும் அப்படியே காற்றோடு போய் விடும். 

உண்மையில் எழுத நேரமெல்லாம் இருக்கத் தான் செய்கிறது. எழுத 1008 நிகழ்வுகளும் நம்மைச் சுற்றி நிகழத்தான் நிகழ்கிறது. அப்படி, தோதாக எழுத ஏதாவது விஷயம் கிடைத்து, எழுத உட்காரும் பொழுது கை மணிக்கட்டு வரை வரும் எழுத்து, விரல்களில் தட்டச்ச வராது. அதற்கு என்னை மட்டும் குறை சொல்ல முடியாது. நேரடியாக மனதிலிருந்து மானிட்டருக்கு மாற்றும்  தொழில்நுட்பம் வளராதது காலத்தின் போதாமை. சரி "வீடியோ ப்லாக்" பண்ணலாம்னு நீங்கள் என்னை மடக்க நினைக்கலாம். அதையும் முயற்சி செய்து பார்த்தேனே. என்ன பிரச்சனையென்றால் பேச ஆரம்பித்தாலே வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் தான் வரும். மேலும் பதிவுக்கு வருபவர்களுக்கு என் பதிவை கேட்பது, கேட்டுக் கொண்டே என் முகத்தைப் பார்ப்பது என ஒரே நேரத்தில் இரட்டை தண்டனை கொடுப்பது முறையல்லவே. போகட்டும், இனி(யாவது) தொடர்ந்து எழுத வேண்டும். யாருக்காகவும் இல்லையென்றாலும், எனக்காகவாவது.

நாட்டு நடப்புகள் ரொம்பவும் தான் ஊன்றி கவனிக்கிறோம் போல. நேற்று ஒரு விநோத கனவு(ஆனால் இன்றைய ஆட்சி முறையில் சாத்தியமானது தான்). கடந்த ஆட்சிக் காலங்களில் பள்ளிக் கட்டணம் மிகவும் குறைவாக வசூலிக்கப்பட்டு விட்டது. அதனால் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு. எனவே அதிகம் கட்டணம் செலுத்தி அனைவரும் தங்களது பனிரெண்டாம் வகுப்பை முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கத் தவறுபவர்களுக்கு அவர்கள் படித்த மேற்படிப்பு செல்லாது என்று சட்டம். பிறகென்ன அடுத்த சீன்... எங்கள் பள்ளியின் +2 வகுப்பில் அமர்ந்து இருக்கிறோம். பொதுவாக பள்ளி சமயத்தில் நான் பேசுவது மிகவும் குறைவு. தொண்டை கிழிய வாக்கு வாதம் செய்யப் பழகியதெல்லாம் கல்லூரி சமயத்தில் தான். பிறகு பொதுத்துறை வேலைக்கு வந்த பின் சங்க நடவடிக்கைகளும் சேர்ந்து பேசினாலே "ஹை டெசிபல்" என்றாகி விட்டது. ஆனால் கனவில் பள்ளித் தோழர்களிடமும், ஆசிரியர்களிடமும் இந்த சட்டத்திற்கு எதிராய் பெரிய விவாதம். ஒரு மாதிரி, இப்பொழுதுள்ள கேரக்டரில் பள்ளியில் படித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற மாயா யதார்த்த கனவு. நன்றாகத் தான் இருந்தது. :)

அது போல விழித்துக் கொண்டே காணும் கனவுகளும் சில உண்டு. எனக்கு மரபுசாரா தொழில்கள் மீது கொஞ்சம் ஈர்ப்பு அதிகம். கோழி, முயல் பண்ணை வளர்ப்பது, உணவகம் நடத்துவது தொடங்கி கார்ட்டூன் சித்திரங்களுக்கு பின்னனி குரல் கொடுப்பது, விவசாயம் பார்ப்பது, புல்லாங்குழல் இசைப்பது, ஓவியம், கணினி வரைகலை பயில்வது என கனவுகள் அவ்வப்போது வந்து போகும். எதையும் நடைமுறைப் படுத்தும் முயற்சிகளை இதுவரை துவங்கியதில்லை. இருந்தாலும் நீண்ட காலத் திட்ட்ங்களின் பட்டியல் மட்டும் தொடர்கிறது. பார்ப்போம், மனமும் உடலும் உயிர்த்திருந்தால் தொடங்க வேண்டும்.

சரி, மீண்டும் எழுதத் துவங்கியாகி விட்டது. தொடர வேண்டும். அதற்கு முன் தொடர்ந்து வாசிக்க வேண்டும். வாசிக்க, வாசிக்க தான் எழுத வருமாம், பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆனாலும், "இவ்வளவு கொடுமையிலும் நீ ஏன் கண்டிப்பா எழுதியே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறாய்" என நீங்கள் கேட்பதும் தெரிகிறது. கடைசி வரை வாசித்த உங்களுக்கு அதைக் கேட்கும் உரிமையும் இருக்கிறது. நாளை முதல் பத்து நாட்களுக்கு ஒரு தேர்வுக்காக படிக்க வேண்டும். இப்படிப்பட்ட சமயங்களில் உற்சாகமான மனநிலையில் இருப்பது அவசியம். குறைவில்லா உற்சாகத்தை பதிவெழுதுவது இப்போது வரை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான்...  :)

Tuesday, October 11, 2011

வாகை சூடவா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பொருட்டு ஒரு குக்கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஓர் இளைஞன். அந்த மக்களிடமும், சிறுவர்களிடமும் அவன் படும் அவஸ்தைகளையும், அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட அவன் மேற்கொள்ளும் முயற்சிகளையும் நகைச்சுவையாக பேசுகிறது “வாகை சூடவா”. ஒரு எளிய கதை, அதற்குத் தேவையான சின்னஞ்சிறிய கட்டமைப்பு இதில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வருவது போல கலகமும் இவ்வளவு சீக்கிரம் நடந்து, எளியவர்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெறும் நிலையும், சர்க்கார் பெயரைச் சொல்லி ஒரு முறை மிரட்டுவதற்கே ஆண்டைகள் விலகி போவதுவும் நிஜத்திலும் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் “இப்படி இருக்குமா”, “அப்படி இருக்குமா” என்ற யூகங்களை விட்டுவிட்டுப் பார்த்தால் இயக்குநர் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு நேர்மையாக உழைத்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடியும் சிறிய படம், தெள்ளிய நீரோடை போல மிதமாக செல்கிறது. தொய்வென்று சொல்லும் படியாகவெல்லாம் இல்லை. காட்சிகளை ஆற அமர ரசிக்கும் மனநிலையில் இருந்த எனக்குப் பிடித்தே இருந்தது. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஆவணப்படுத்தப் பட வேண்டிய ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கிறது. 

“போஸ்ட் வுமனை” அறிமுகப்படுத்தும் காட்சியில் “ஒரு கனவுப்பாட்டை புகுத்திடுவானுகளோ” என்ற சிறிய சஞ்சலம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியேதும் அசம்பாவிதங்கள் நடந்துவிடவில்லை. காபிக் கொட்டை அரைக்கும் கருவி, ரேக்லா வண்டி, ஆண்டையின் பிரம்பு, சைக்கிள் முன்விளக்கு, பெரிய மூக்கு பஸ் என அறுபதுகளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து செதுக்கப் பட்டிருக்கின்றன. “சூதாடி சித்தன்” போன்ற தோற்றத்தில் ஒரு கிழவனைப் பார்த்ததும், “ஐயோ, இந்த கேரக்டர் ஹீரோவிற்கு அப்பபோ வந்து அறிவுரையா சொல்லுமே” என பயந்தேன். அது போல் தான் நடந்தது, ஆனாலும் ஓரிரு வார்த்தைகளிலேயே அந்த கிழவன் பேசுவது நன்றாகவே இருந்தது. அதுவும் காட்டை அழித்த தன் தவறுக்கு வருந்தி “குருவிச்சத்தம் கேக்குது” என புலம்புவதும் யதார்த்தம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு என்று எந்த நுன்னறிவும் புலப்படாத எனக்கே இந்த படத்தின் முழுமைக்கு இவையெல்லாம் கண்டிப்பாக உதவியிருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடிகிறது. இன்னொரு மிகப்பெரிய ஆச்சர்யம், நாயகியின் நடிப்பும் பின்னனிக் குரலும். அழகு! நாயகனும் எங்கும் வீராவேசம் காட்டாமல் இயற்கையாக இருக்கிறார். போக, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு இனிய அனுபவத்தைத் தந்த மொத்த குழுவிற்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

சரி, நம் கதைக்கு வருவோம். படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. அதைப் பற்றி உரையாடுகையில் களம் இன்னும் விரியக்கூடும். செங்கல் சூளையில் இறக்கும் கற்களை விலைக்கு எடுக்கும் புதியவனும் ஒரு முதலாளி தானே. அவனையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும் போது வேலு அதை எப்படி எதிர்கொள்வான். தோற்றுப் போன ஆண்டை பழி தீர்க்க என்னென்ன செய்வான். இதையெல்லாம் விட முக்கியமாக இரண்டு காசு, மூன்று காசு என ரகம் வாரியாக ”டீ” விற்கும் மதி ஊர் மதிக்கும் வாத்தியாரின் மனைவியான பின்பு அவள் நடவடிக்கை எப்படி இருக்கும். 

”யதார்த்ததில் வேலுவின் அடுத்த தலைமுறை ஒரு பண்ணையார் குடும்பமாகவே திகழும் அல்லது அவ்வாறு ஊராரால் பார்க்கப்படும். பிறகு அக்குடும்பத்தின் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்க இன்னொருவன் வருவான். பிறகு அவனைத் தலைவனாக்கி அவன் பின்னும் செல்வார்கள். அவனுக்கும் ஒரு ஒளி வட்டத்தை ஏற்படுத்துவார்கள். இயக்குநர் இதனைத் தொடர்கதையாக்கி படங்கள் இயக்கலாம்” என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அது இருக்கட்டும், ஒரு படத்தைப் படமாக பார்க்காமல் அகழ்வாராய்ச்சி செய்வதே என் பொதுப்புத்தியின் நோக்கமாய் போய்விட்டது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!

******

Wednesday, September 21, 2011

வேரும் விழுதும்

எனது தோழி ஒருவர் நடத்தும் மழலையர் பள்ளிக்கூடத்தில் நடந்த "Grand parents Day" விழாவில் வாசிப்பதற்காக, "தாத்தா தன் பேரனுக்கு எழுதுவது போல"  ஒன்றைக் கேட்டிருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தும் வழக்கம் போல் சும்மா இருந்து விட்டு, விழாவிற்கு முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தேன். நன்றாக இருந்ததாக அவர் சொன்னார். எப்படி இருக்கிறதென உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்.

*********************************************************************************
தன் செல்லப் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா எழுதும் கடிதம்.

எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வந்த தலைமுறை இடைவெளியெல்லாம்
பேரக் குழந்தைகளிடம் வருவதில்லையே என நினைத்ததுண்டு!

"எல்லாப் பிடிவாதமும் அப்படியே தாத்தா போல" என்று பாட்டி
செல்லமாய் கோபிக்கும் போது தான் புரிந்தது,
என் செல்லமே, நீ தான் நான் என்பது!
உன்னுடன் இருக்கும் போது தான் 
என்னையும் நீ மழலையாக்கி விடுகிறாயே,
பின்பு எங்கிருந்து வரும் இடைவெளி.

நேற்று என் வேர் ஆழப்பதிந்து செழித்து வளர்ந்த 
கிளையைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்தேன் - ஆனால்
இன்றோ என் நிழலில் வேறூன்றும் விழுதைப் பார்த்து
மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.
என் இள விழுதே, இந்த முதுமரத்தை 
நீ முழுதாய் தாங்கும் நன்னாளும் 
வரும் தானே!
அதைப் பார்த்து பூரித்து நிற்கும் நிலையை
கடவுள் தந்தால் நல்வரம் தானே!

உன் அப்பாவின் பால்யத்தை ரசிக்கவும் நேரமின்றி
வேலை வேலை என்று தான் ஓடிக் கொண்டிருந்தேன்.
இன்றோ உன் மழலை சொல்லில், செய்யும் குறும்பில்
என் பால்யத்தையே மீண்டும் முழுதாய் உணர்கிறேன்.

என் கைப்பிடித்து நீ நடைபயின்று வரும் போது, 
உன் தத்துப்பித்து மழலை மொழியில்
உன் தந்தை பெருமையை எனக்கு சொல்வாய்
உலகத்தில் சிறந்த மனிதன் எல்லாம்
உன் தந்தை தான் என்ற நம்பிக்கை உனக்கு
அதை உன் வார்த்தைகளில் கேட்கையில் 
மென்சிரிப்பு பூக்கும் எனக்கு!
ஏழேழு பிறவிக்கும் நான் செய்த தவத்திற்குப் பலனாய்த் தான்
நான் வாழும் நாளிலேயே இறைவன் உன்னைத் தந்தானோ!

நீ நல்லதைச் செய்ய, நட்பைப் பாராட்ட
நாளை உலகை வெல்ல,
கல்வி, கலை, கருணை
மனித நேயம் , மக்கட்பண்பு
அனைத்தும் பெற்று
வளமாய் வாழ 
என்றும் உன் நிழலாய் இருப்போம்
நலமே வாழ இனிதான வாழ்த்துகள் !
மண்ணோடு வேர் கொண்டிருக்கும் ஆழமான அன்புடன்,
வானமெங்கும் கிளைப் பரப்பி பூத்துக் குலுங்கும் விருட்சமாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க !

********************************************************************** 

Thursday, August 18, 2011

உலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்இந்த 'டீம் அன்னா'னா யாரு, மிஸ்டுகால் கொடுத்தா, SMS 10 பேருக்கு ஃபார்வேட் பண்ணா புரட்சி வெடிக்கும்னு சொன்னாய்ங்களே, அந்த குரூப் தானே பாஸ்?

வங்கிகளின் கண்காணிப்பு கேமிராக்கள் வாடிக்கையாளர்களை மட்டும்தான் பார்க்குமா? அரட்டையடிக்கும், குமுதம் படிக்கும் அலுவலர்களை கண்டுகொள்ளாதா?

ஆடி மாதத்தில், நாம் தூங்கும் நேரத்தை மாரியம்மன் கோவில் மைக்செட்காரர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் # விடிகாலை 5 மணிக்கு 'ஆடி வாறா மாரி ...'

'நான்' என்று எழுதாமல், 'நாம்' சென்றோம் 'நாம்' வந்தோம் என்று பதிவெழுதுபவர்கள் பத்திரிக்கைக்காரர்கள். # வெளியே ஒரு உருவம்,உள்ளே பல ரூபங்கள்

’கே’டிவியில் 'முத்து’ திரைப்படம்.ரஜினி யாரையோ நினைத்து மீனாவிடம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.அல்லது நாம் அப்படி நினைத்துக்கொள்கிறோம்

விலங்கு இறந்ததும், அதற்கு வைக்கப்பட்ட விஷமும் உடன் இறக்கிறது #படித்ததில்பிடித்தது

நடிகர் விக்ரமின் அனைத்து பேட்டிகளிலும் ஒரு 'லபக்குத்தன்மை' இருப்பதை கவனித்திருக்கிறீர்களா!!! ( வீரா இஸ் ய ஸ்வீட் கேரக்டர் யு நோ...)

கிரிக்கெட்டில் வேணுகோபால்ராவ், ரஜத்பாட்டியா, லெக்ஷ்மிரதன்சுக்லா, முரளிகார்த்திக் போன்றோரை கவனிக்கிறீர்களா? நீங்கள் என் இனம்.

அதிகாரத்தையும், செல்வாக்கையும், புகழையும் இப்பொழுதெல்லாம் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளும் கலையை கற்க ஆரம்பித்து விட்டார்கள் பிரபலங்கள்.

மங்குனிப்பாண்டியர்கள் என்பவர்கள் போரில் வெல்பவர்களும்அல்ல,தோற்பவர்களும்அல்ல.வேடிக்கைபார்த்து கருத்துசொல்லும் புனிதமான இடத்தை சேர்ந்தவர்கள்

சமூக வலைத்தளங்களில் "அடங்கமறு, அத்துமீறு!" ... சமூகத்தில் "அடங்கு, அப்பீட்டாகு!"

உருகிஉருகி எழுதிய கவிதையை படித்துவிட்டு நண்பன் நக்கலாக சிரித்தான்.இந்த‘டீஸர்’கூட உனக்கு புரியலையான்னு நானும் சிரித்து சமாளித்தேன் #யாருகிட்ட

பிரபல எழுத்தாளர்களின் பெயர்தெரியா வாசகர்கள் நுன்னறிவுபடைத்தவர்கள், எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பதிலுக்கான கேள்விகளையே எப்போதும் கேட்கிறார்கள்

கறுப்பு பணத்திற்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் அபாரவெற்றி #முதல்ல பாபாவிடமிருந்தே ஆரம்பிக்க சிபிஐ முடிவு #பாஸ், அந்த தீவை மறந்துறாதீங்க‌

'பச்சை'யை சமாளிக்க 'மஞ்சள்'உதவியது.இப்போ 'சிவப்பு'க்கு எதிர்ப்பான் என்னன்னு கண்டுபிடிக்கனுமே #எங்கள் ஆடைகளையும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவிமர்சகர்' என்றே நினைத்திருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால்! ;)

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவாசகர்' என்றே நினைத்துக்கொண்டு இருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால் ;)

பலே திருடன் என வரையப்படும் 'கபாலி'க்கு எப்போதும் ஏன் கோடு போட்ட பனியனும், கைலியும் மட்டுமே அணிவிக்கப்படுகிறது. # வேட்டிசட்டை?கோட்சூட்??

496/500 எடுத்த மாநிலத்தின் முதல் மாணவியிடம் சன் டி.வி. நிருபர் கேக்குறார், "எந்த பாடத்துல மார்க் குறைந்ததுன்னு நினைக்கிறீங்க?" :(

ஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஏதேனும் திறனாய்வுக் கட்டுரை வந்துள்ளதா?

ஏதோவொரு நெடுந்தொடரில், 'மனுசன்னா நீதி,நேர்மை,மனசாட்சி இருக்கனும்' னு பேசிட்டிருந்தார் 'மகாநதி' துலுக்கானம். ம்ம் எப்படி இருந்த மனுசன் :(

தமிழ்சினிமாவில் கல்லூரி நண்பர்கள் சேர்ந்து புரட்சியெல்லாம் செய்கிறார்கள். இங்கே ஒரு 'டீ'க்கு காசுகொடுக்க மூக்கால்அழுகிறான் உயிர்த்தோழன் :(

சகுனமே சரியில்லை. ரஜினி 'ராணா' படத்தை நிறுத்திடுவார் என்று தான் நினைக்கிறேன். # நிறுத்துனா ஜக்குபாய், வந்தா பாபா?

கடவுள் இறந்த பிறகு தான் அடுத்த கடவுளுக்கான தேவையும் தேர்தலும் துவங்கியது. 

வீட்டில் "திருந்தாத ஜென்மம்" என்று வாழ்த்துப்பெற்றவர்கள் தாம் நாட்டை திருத்த கிளம்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பஞ்சர் கடை முன் வண்டி பஞ்சராவது, என் அதிர்ஷ்டமா இல்லை கடைக்காரர்களின் தொழில் ரகசியமா?

கிரிக்கெட் வர்ணனையில் மைக்குடன் கங்குலியைப் பார்க்கும் பொழுது, படையப்பாவில் சுடிதார் அணிந்து, வீணை வாசிக்கும் ரஜினி நினைவுக்கு வருகிறார் :(

நான் கூட விக்கிலீக்ஸ்னா பெரிய புலனாய்வுப் புலி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேன் #நம்ம ஜல்லிக்கட்டுக்கு ஸ்பெயினிலிருந்து கமெண்ட்ரி தர்ற மாதிரி தான்

கிட்டாதாயினும் கிட்டக்கப் போய் என்னன்னு பார் !

நடுநிசி நாய்களைப் பார்க்க நேரிடும் போது தான், தவமாய் தவமிருந்தவர்களின் மேல் மதிப்பு கூடுகிறது.

விருந்துகளில், "ஒன்னு சரக்கு தீரனும், இல்லை நான் தீரனும்!" என்று முழுமூச்சாய் இறங்கியடிக்கும் நண்பர்கள் மகிழ்வூட்டுகிறார்கள்.

ஹோட்டலில் சில்லிபரோட்டா சாப்பிடாமல் ஏன் போயும் போயும் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறார்கள் என்று பரிதாபப்பட்ட பால்யம் அழகாக இருந்தது.

தாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, "குடிகாரர்கள்" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்?

Tuesday, August 16, 2011

ஒரு கதை சொல்லவா?


இன்று வண்டிக்கு பெட்ரோல் போடும் போது, முன்னூறு ரூபாய்க்கு போடச் சொல்லி விட்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். ‘பங்க்’கில் இருந்த நபர் முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மொத்தம் முன்னூறு ரூபாய் கொடுத்தார். எண்ணிக் கொண்டே பர்ஸில் வைக்கச் சென்ற நான் இதை கவனித்து விட்டு மீண்டும் ரூபாயை அவரிடமே கொடுத்து, “சரியா எண்ணிப் பார்த்து கொடுங்கண்ணே!” என்றேன். அவரும் எண்ணிப் பார்த்து விட்டு இரண்டு ஐம்பது ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டு சரியான சில்லரையான இருநூறு ரூபாயை கொடுத்து விட்டு, “ரொம்ப நன்றி சார், ரொம்ப ரொம்ப நன்றி சார்” என்றார். நான் லேசாக சிரித்துக் கொண்டே, “பரவால்லண்ணே!” என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

ஆனால் இந்த கதையை நீங்கள் கேட்கும் போது, மீதி முன்னூறு ரூபாயை பர்ஸுக்குள் வைக்கப் போன அந்த ஒரு நொடியின் சபலத்தை மறைத்து விட்டுத் தான் சொல்வேன். பரவாயில்லையா?

Monday, August 15, 2011

மூன்றை எடுத்த பின்னிருக்கும் முடிச்சு


"மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'ஸ்ரீ' க்கு நன்றி.

மூன்று என்று எண்ணிக்கையில் இல்லாமல் பொதுவாக எழுதலாம் என நினைக்கிறேன். அப்புறம், இதை புறம் சார்ந்த விஷயமாக கருதாமல் அகம் சார்ந்து எழுத முயற்சிக்கிறேன். 

விரும்பும் விஷயம்

தனிமை
அதுவும் இரவில் விடுதி அறையில் கரண்ட் போகும் சமயம் கதவு, ஜன்னல் மற்றும் வெளிச்சம் வரும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டு இருட்டை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு இருப்பேன். தனிமை - அமைதி. 

விரும்பாத விஷயம்

தற்பெருமை
ஒருவர் தொடர்ந்து தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் என்னால் ஒன்றி இருக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன், சில சமயம் லேசான மனநிலையில் இருக்கும் போது ஏதேனும் சுயபுராண பார்ட்டி மாட்டினால் நான் சொல்லும் ஓரிரு ‘கமெண்ட்டில்’ டோட்டல் டேமேஜ் ஆகிவிடுவார் 

பயப்படும் விஷயம்

எனது கோபம்
பூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.

புரியாத விஷயம்

நான் தான்.
’வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது’ என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் எதையோ தேடுவது போல தோன்றிக் கொண்டே இருக்கிறது. எதைத் தேடுகிறேன் என தெரியாமலே ரொம்ப சின்ஸியரா தேடிட்டு இருக்கேன். இலக்கு இன்னும் பிடிபடவில்லை.

மேஜையில் உள்ள பொருள்

இப்பொழுது மடிக்கணினி வைத்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் மேஜையில் மடிக்கணினி மட்டுமே இருக்கிறது. இது நான் சிறு வயது முதல் வீட்டுப்பாடம் எழுத பயன்படுத்தும் சின்ன ‘ரைட்டிங் டெஸ்க்’

சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்

சமீபத்தில் சிரிக்க வைத்தவர்கள், கோவை சரளாவும், தேவதர்ஷினியும் - ’காஞ்சனா’ படத்தில்.

தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்

அன்றாட அலுவல் போக, நல்லபடியாய் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவங்கியிருக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பு

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

ஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்

உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்

காரியம் எதுவாகினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று நம்புகிறேன்.

கேட்க விரும்பாத விஷயம்

நம்பிக்கைக்குரியவர்களின் பொய் - இதை மட்டும் எப்போதும் ஒத்துக் கொள்ள மனம் வருவதேயில்லை.

கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்

முன்பு புல்லாங்குழல், இப்பொழுது கணினி வரைகலை. பிறகு வாய்ப்பு அமைந்தால் ‘கார்ட்டூன் பொம்மைகளுக்கு’ குரல் கொடுக்க வேண்டும்

 பிடிச்ச உணவு வகை?

முன்பு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு எழுப்பி ஊட்டிவிடப்பட்ட பட்டர் பன், முட்டை பரோட்டா. இவற்றின் சுவை இப்போதும் நாக்கில் ஒட்டிக் கொண்டுள்ளது.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்

முணுமுணுப்பதெல்லாம் இல்லை, ஆனால் ஒருவர் பாடக் கேட்டால் கரைய வைக்கும் “கங்கைக்கரைத் தோட்டம்...”
   
பிடித்த படம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாய் போய் படம் பார்க்க பிடிக்காமல், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நண்பனை, வழியில் மதுரையில் இறங்க வைத்து, முதன்முதலாய் பிளாக்கில் டிக்கெட் எடுத்து இரண்டாவது வரிசையில் கழுத்து வலிக்க வலிக்க பார்த்து ரசித்த படம் “ஆட்டோகிராப்”, ஏமாற்றவில்லை ... ம்ம்ம் அது ஒரு காலம் :)

இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்

தன்னம்பிக்கை

இதை எழுத அழைக்கப்போகும் நபர்

அண்ணன் முரளிகண்ணன் - நேரம் இருந்தால் எழுதுங்களேன். 

-- 
நட்புடன், 
பாலகுமார்.

Wednesday, August 10, 2011

'வலசை' புதிய காலாண்டிதழ் துவக்கம் - வாழ்த்துகள்

நண்பர்கள் நேசமித்ரன், கார்த்திகைப்பாண்டியன் இருவரும் இணைந்து 'வலசை' எனும் புதிய காலாண்டு இதழைத் துவக்கியிருக்கிறார்கள்.

'வலசை' என்பதற்கு பறவைகளின் இடப்பெயர்ச்சி என்று பொருள் சொல்லப்படுகிறது. நண்பர்கள் என்ன பொருளில் இப்பெயரை சூட்டியுள்ளனர் என்றும், இதழின் உள்ளடக்கம் குறித்தும் அறிய ஆவல். 

இதழ் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
***

Saturday, August 6, 2011

தகத்தாய சூரியன் - சிறப்பு கார்ட்டூன் கிறுக்கல்

பொழுது போகாத பொழுதில் கிறுக்கியவை 

(பெரிதாக பார்க்க, படங்களின் மேல் சுட்டவும்)

1. பறக்க நினைப்பவர்களுக்கான பிரத்யேக யோகாசனம். கொதிக்கும் என்ணெய் சட்டியின் மேல் தியானிப்பவர்கள் ஒரே 'தம்'மில் பறந்து விடலாம்.


2. தகத்தாய சூரியனின் "கோர்ட் சீன்"


3. ரயில் பயணத்தின் 'சன்னல்' பார்வையில் பதிந்த சென்னை


உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

Monday, July 18, 2011

பூதத்தை விரட்டும் தேவதை


அப்பா, 
நேத்து ராத்திரி பூதம் வந்துச்சா?

இல்ல செல்லம்,
பூதமெல்லாம் கிடையவே கிடையாது !

அம்மா சொன்னாங்க,
அப்போ கண்டிப்பா பூதம் இருக்கும்
என்னை மாதிரியே நீங்களும்
சமத்தா தூங்கியிருப்பீங்க, 
அதான் உங்களுக்கும்
பூதம் வந்தது தெரியல

என்றவள், சிறிது யோசனைக்குப் பின்

அம்மா மட்டும் பாவம்லப்பா...
டெய்லி, டெய்லி 
அம்மா, நான், நீங்க
நாம எல்லாரும் 
சீக்கிரமே தூங்கிருவோம், சரியா!

என்று கூறிக் கொண்டே
அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

சின்ன சின்ன சிலிர்ப்புகளில்
முழுமையடைகிறது வாழ்க்கை.

Thursday, July 14, 2011

செவியிடை மனிதர்கள் - 2

ஹலோ, யாரு பேசுறது ?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க யாருனு சொல்லுங்க?

ஹலோ பாலா, உங்களைக் கூப்பிட்டுட்டேனா! ஸாரி...

பரவால்ல, நீங்க யாருன்னு தெரியலையே.... ஹலோ...

டிக். (போன் கட்)

(இரண்டு நிமிடத்திற்கு பிறகு, மறுபடியும் அதே நம்பரிலிருந்து...)

ஹலோ, யாரு பேசுறது ?

ஹலோ, மறுபடியும் என்னைத் தான் கூப்பிட்டு இருக்கீங்க.

ஸாரி, நீங்க யாரு?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க முதல்ல சொல்லுங்க.

ஓ ! ஸாரி பாலா ... மறுபடியும் உங்களையே கூப்ட்டேனா....

அது சரிங்க, நீங்க யாரு ? என்ன நம்பர் டயல் பண்ணனும்?

டிக்.

(மறுபடியும் அடுத்த நிமிசமே அதே 'கால்' வர இம்முறை நான் எடுக்கவில்லை. உடனே அடுத்து குறுஞ்செய்தி.

"ஸாரி பாலா, தெரியாம உங்களைக் கூப்ட்டுட்டேன், ரியலி ஸாரி."

# டேய், யாருடா நீ உனக்கு என்ன தான் வேணும். 

ஸாரி, ஸாரி னு சொல்லி கழுத்தறுக்குற சனியன் யாருன்னு மட்டும் சொல்லித் தொலைய மாட்டுது.

ஆனா ஒன்னு மட்டும் புரியுது. "நீ அந்த வேலைக்கு சரிப்பட மாட்ட" ன்னு  எல்லாரும் சொன்னப்ப வடிவேலு மனசு எப்படி உறுத்தி இருக்கும்னு இப்ப நல்லா தெரியுது.


Wednesday, July 13, 2011

செவியிடை மனிதர்கள் - 1

ஹலோ !  .... டேய் உன்னக் கூப்பிடனும்னு நெனச்சுட்டே இருந்தேன், நீயே கூப்டுட்ட. எப்டிடா இருக்க?

மூதேவி,  நினைக்க மட்டுமில்லடா. கூப்டவே செஞ்சிருக்க. நான் ஹலோ, ஹலோ ன்னு பத்து நிமிசமா கத்திட்டு இருக்கேன். நீ செல்'ல கவனிக்கவே இல்ல, அதான் கட் பண்ணீட்டு நான் கூப்டேன்.

சரி, சரி... இங்க ஆஃபீஸில ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசட்டா?

அதான் தெரியுதே, பக்கத்துல யாரு உங்க மேனேஜரா? நல்லா வண்ட வண்டயா திட்றான். நீயும் சளைக்காம 'யெஸ் சார்' போட்டுட்டு இருக்க. இதுக்குப் பேரு தான் மீட்டிங்'கா ?

அதான் கேட்டுட்டேல, மூடிட்டு செல்'ல கட் பண்ணு, நான் அப்புறம் பேசுறேன்.

டிக்.

Friday, April 29, 2011

பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !


நிறைசூலி ஆட்டை
தின்னக் கேட்கும் சுடலைமாடன்

ஐந்தாம் நாளாய் 
நிற்காத உதிரப்போக்குடன் புதுப்பெண்

வாரிச் சுருட்டி எழும் முன் 
நின்று போகும் நடுநிசி தொலைபேசி அழைப்பு

ஈனும் முதல் குட்டியை
மருந்தாய்க் கொள்ளும் ஒரு விலங்கினம் 

பொருந்தாக் காம அலைக்கழிப்பை
அழிக்கப் போராடும் மேன்சன்காரன்

சுருதி தப்பி ஒலிக்கும் 
ஒருமணி உதிர்ந்த சலங்கை

தற்கொலைக்கு தைரியமில்லாதவனின்
உயிர்க்கொல்லி நோய்

சிறகொடிந்த பட்டாம்பூச்சியை 
கொத்தி விளையாடும்
சிறகொடிந்த கரிச்சான் குருவி

பாவிகளை பிடித்து வைத்து தன்
பிரதாபங்களை பட்டியலிடும்
பரிசுத்த புது ஆவி

இதிலொன்றை கேட்டுப் பெற துணிவின்றி
பொருத்தமற்ற ஏதோவொரு தலைப்பை
விருப்பமின்றி தாங்கி நிற்கும்
பொருளற்ற இந்த கவிதை !

படம் உதவி : இணையம்

Tuesday, April 26, 2011

கடவுளும் தேர்தலும் !கடவுள் இறந்த பிறகு தான்
அடுத்த கடவுளுக்கான
தேவையும் தேர்தலும் துவங்கியது.

துணைக் கடவுள் முதல்
துவார பாலகர் வரை
அனைவருக்கும் போட்டி.

கஜானாவை காவல் 
காத்தவருக்குத் தான்
வெற்றி வாய்ப்பென்று கருத்துக் கணிப்பு.
காரியதரிசிக்கும், கொள்கை பரப்புச் செயலருக்கும்
உடன்பாடாகி விட்டதாகவும் ஒரு பேச்சு.

பேசாமல் பழைய கடவுளே
தன் மச்சானையோ ஒன்று விட்ட
சித்தப்பா பையனையோ
அடுத்த கடவுளென
சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

எவ்வளவு நேரம் தான்
காப்போன் இல்லாமல்
கலங்கி நிற்கும் மந்தை !

***

Sunday, April 3, 2011

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !


கிரிக்கெட்டை தேசப்பற்றோடு முடிந்து பார்க்கும் மூடத்தனத்தையெல்லாம் தாண்டி வந்து ஆண்டுகளாகி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்பது, இந்திய நாட்டின் சார்பாக விளையாடும் அணியல்ல, பி.சி.சி.ஐ என்ற அரசு சாராத, ஒரு தனியார் அமைப்பின் சார்பாக விளையாடும் அணி என்று எத்தனையோ விவாதங்கள் செய்தாயிற்று. அவ்வப்பொழுது கிரிக்கெட்டில் நடக்கும் சில‌ நிகழ்வுகளைப் பார்க்கும் போது, சூதாட்டத்திற்கான வாய்ப்புகள் பெருமளவு இருப்பது போலவும் தோன்றத்தான் செய்தது. இந்த விளையாட்டின் பெயரில் நடக்கும் மிகப்பெரிய வணிகமும், வீண் விளம்பரமும் அயற்சியை தரத்தான் செய்திருக்கிறது. உயிரைக் கொடுத்து ஆதரிப்பது போல் கேமிராவிற்கு முகம் காட்டும், ஆனால் விளையாட்டின் அரிச்சுவடியும் தெரியாத தொழிலதிபர்களும், நடிக நடிகைகளும் பல சமயங்களில் எரிச்சலடைய செய்யவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இது அனைத்தையும் தாண்டி குழுவிளையாட்டு என்ற அளவில் 'கிரிக்கெட்'டின் சுவாரஸ்யங்களுக்கு எப்போதும் குறையிருந்ததேயில்லை. சமயங்களில் மந்தமாகத் தோன்றினாலும், சதுரங்க விளையாட்டைப் போலவே 'கிரிக்கெட்'டும் மனதால் ஆடப்படும் ஆட்டம் தான்.

பதினான்கு அணிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு 'உலகக் கோப்பை' என்று பெயர், இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதால் கிடைக்கப்பெறும் சந்தை லாபங்கள், 'ஐபிஎல்' க்கு கூடும் வரவேற்பு இன்னபிற அரசியலுக்குள் போக விரும்பாமல் ஒரு கிரிக்கெட் பார்வையாளனாய், ரசிகனாய் மிக மகிழ்வாய் உணரும் தருணம் இந்த 'உலகக் கோப்பை' வெற்றி.எங்களை நீங்கள் மகிழ்வுறச்செய்திருக்கிறீர்கள், தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எங்களை ஒருமைப்படுத்தியிருக்கிறீர்கள். எம் போன்ற சாமான்யர்களுக்கும் 'உலகை வெற்றி கொண்டது' போன்ற உணர்வை சிறு பொழுதேனும், நீங்கள் உங்கள் உழைப்பின் மூலமும் வியர்வையின் மூலமும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !

***pictures courtesy espnstar.com***

Monday, January 17, 2011

சக்தி கல்யாண வைபோகமே !

******
நீ வைக்கப் போகும் பாயசத்தில் முந்திரிப் பருப்பாக மிதப்பேனா, தெரியாது. ஆனால் நிச்சயம் சக்கரை இனிப்பாக கலந்திருப்பேன்.
******
சுடுதண்ணீர் சமைப்பதை ரசித்துப் பாராட்டத் தோன்றும் இன்றைய மனநிலை பின்னொரு நாளில் உப்பில்லா ரசம் கிடைக்கும் போதும் வாய்த்திருக்கட்டும்.
******
பச்சை மிளகாய் போடாத ஆம்லேட்டாய் இருந்த என் வாழ்க்கைக்கு பெப்பர் தூவலாய் வருபவள் நீ !

******
மல்லிப்பூ இட்லியையும் மிளகாய் பொடியையும் சேர்த்து வைத்து சுவைக்க வைக்கிறது நல்லெண்ணை, வாழ்க்கை உன்னையும் என்னையும் சேர்ப்பதைப் போல.

****** :) ******


நண்பர்கள் அனைவரையும் எங்களது திருமண விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.


திருமணம்: 26/01/2011 காலை 9.30 முதல் 10.30 வரை
வரவேற்பு: 25/01/2011 மாலை 7.35 முதல்.
இடம்: சந்திரகுழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை

நட்புடன்,
பாலகுமார் - சக்திதேவி

******

******

Monday, January 10, 2011

டிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்


அட! வீரர்களையெல்லாம் யார் ஏலம் எடுத்தா நமக்கென்ன, எந்த நடிகையை எந்த டீம் ஓனர் எடுத்திருக்கார் ஏலம், அதைச் சொல்லுங்க முதல்ல. #IPL4

வெங்காய வடைக்கு முட்டைக்கோஸை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்த அறிஞன் இந்நேரம் எந்த டீக்கடை முன் வடை போட்டுக் கொண்டிருப்பான். #ஆ!னியன்

பிளைன் பிரியாணிக்கு தயிர் வெங்காயமின்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் இக்கட்டான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் #ஆ!னியன்

ஏதாவது கேட்க வேண்டுமேயென கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஏனோ தானோவென்று சொல்லும் பதில்களே போதுமானதென்று வைத்திருக்கிறேன்.

எழுந்து போய் படுத்துத் தூங்க அலுப்புப் பட்டு, அரைமணி நேரமாய் சும்மா கணினி முன் உட்கார்ந்திருக்கும் பழக்கம் எனக்கு மட்டும் தானா? #இரவு2மணி

உங்களை மகாத்மாவாய் நிறுவ யுகம்யுகமாய் நீங்கள் செய்த தவமெல்லாம் என் ஒற்றை அவச்சொல்லில் கலையுமென்றால், சாபம் எனக்கா, உங்களுக்கா?

கேப்டனுக்கு அப்படிஎன்ன வயசாயிடுச்சு?ஏன் ஹீரோயின்,டூயட் இல்லாம நடிச்சார். மனசுக்கு ரொம்பசங்கடமாயிருக்கு #சதுரகிரி..மதுரகிரி.ச்சீ.விருதகிரி

நீ எப்படி என்னைப்போலவே இருக்கவேண்டும் என எடுக்கும் வகுப்புகளில், நான் நானாக இல்லாத சமயங்களை வேண்டுமென்றே சொல்லாமல் விடுகிறேன் #தாம்பத்யம்

சுருங்கச் சொல்லுதல் குறித்து எழுதிய ஒரு ட்விட் 140 எழுத்துகளுக்குள் அடங்க மறுக்கிறது. என்ன செய்ய?

யாரைப் பற்றியும் அக்கறை இல்லை என்று சொல்பர்கள் தான் எல்லாரும் தம்மை கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  
#படித்ததில் பிடித்தது. நன்றி. கா.பா.

"நந்தலாலா மோசமான படம்,ரசித்தவர்களெல்லாம் மடையர்கள்.இதுதான் என் பெஸ்ட்" என இயக்குனர் தன் அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் நாளும் சீக்கிரம் வரும் தானே!

இறைவா! நேர்மையில்லாத அல்லக்கைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று, திறமையில்லாத எதிரிகளை நானே விலக்கிக் கொள்கிறேன். #முடியல்ல‌

அண்ணாந்து பார்க்கின்ற ஐ.டி. பில்டிங் பக்கம், தம்மடிக்க சின்ன பெட்டிக்கடை இருக்கும்... சிங்காரச் சென்னையை போற்றுகிறேன்.

தன்னை தாண்டிச் செல்லும் இருசக்கரவாகனப் பெண்னை துரத்தி ஓவர்டேக் செய்து, பின் கண்ணாடிவழி பார்ப்பவன் வீட்டில்போய் நிச்சயம் பெண்ணியம் பேசுவான்.

கால்பந்தாட்டம் போல ஆளாளுக்கு உதைக்கிறார்கள்.சரி,வெற்றியோ தோல்வியோ 2மணிநேரத்தில் முடித்துவிட்டால் எவ்வளவுநல்லாயிருக்கும் இந்தமீட்டிங்கும்

தீபாவளி முதல் நாள் - பலர் லீவு போட்டு வீட்டில் முறுக்கு சுற்றுகிறார்கள், மீதி சிலர் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு ஊர் சுற்றுகிறார்கள்.

என்னைப் போல் இவர்கள் என்று ட்விட்டர் சிலரைக் காட்டுகிறது. வேணாம் மிஸ்டர் ட்விட்டர் நான் ஒன்னும் அப்படிப்பட்ட ஆளில்லை.

நினைவிலிருந்து மறந்தவர்களைத் தேடிப்பிடித்து அழிக்கும் விளையாட்டு காத்திருக்கிறது. மொபைலில் தொடர்புகள் பதிந்தது 1000 தொட்டு நிரம்பிவழிகிறது

புதிதாய் பழகநேர்கையில் பெரியவர்கள் இயல்பாகவே இருப்பதில்லை.ஒன்று ஹாய்மச்சி என துள்ளிவிளையாடுகிறார்கள் இல்லை 'அந்த காலத்துல' என ஆரம்பிக்கிறார்கள்