Saturday, December 26, 2009

சட்டென மலரும் காட்டுப்பூ ...

உறுமீனைத்
தப்பவிட்ட நாரைக்கு,
ஆறுதல் சொல்கிறது
அழியப் போகும் குளம்.

******
எரிக்கிறது நெருப்பு
துடிக்கிறது காடு
எதிர்க்கிறது காற்று,
துணைபோவது தெரியாமல்.

******
திசைமாறிய பறவைக்கு
உணவாகக் காத்திருக்கிறது,
உமி நீக்கிய பச்சரிசி
விரித்திருக்கும் கண்ணிக்குள்.

******
மழை பெய்து ஊர்செழிக்க
மனதார வேண்டிக் கொண்டன,
சேர்த்து வைக்கப்பட்ட 
கழுதைகள் ரெண்டும்.

******
குளிர்ந்திருக்கும் நதியை
ஒளித்து வைத்து சிரித்திருக்கும்
சூரியனைப் பார்த்து
கண்சிமிட்டும் கூழாங்கல்.

******
பறந்து கொண்டே இருக்கிறது,
பழம் தின்ற பறவை.
விழப்போகும் விதைக்காக
காத்துக் கொண்டே இருக்கிறது,
வானம் பார்த்த பூமி.

******
மகரந்தம் சுமக்க
சோம்பல்படும் வண்டை,
வலைவீசி அழைக்கிறது
மணம் பரப்பும் காற்று.

******
பெய்யென சொன்னதும்
பெய்தது பெருமழை
நில்லென தடுத்தும்
நிற்காமல் நனைகிறது,
காற்றும், நெருப்பும் ஒன்றாக.

******

Thursday, December 24, 2009

பெயரில்லாதவை

மதுரையில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்.

"கவிதையை நினைத்தால் காதல் பிடிக்கும்,
காதலை நினைத்தால் பெண்னைப் பிடிக்கும்
பெண்னை நினைத்தால் பைத்தியம் பிடிக்கும்"

பயபுள்ள, ரொம்ப அடிபட்டிருக்கும் போல!

**************************************

கடந்த ஒரு மாதமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து ஒருவாறு சீர்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக ரோட்டை அடைத்துக்கொண்டிருந்த தடுப்புகள், செயற்கை நீரூற்றுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.பெரியார் பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் போக்குவரத்துக்கு ரொம்ப இடையூறா இருந்த ரவுண்டானா எல்லாம் போயே போச்சு. ஆனா கட்டபொம்மன் சிலையை சுற்றியுள்ள இடத்தில் மட்டும் தினம் ஒரு செங்கலா எடுக்குறாங்க போல. ஒரு வேளை கட்டபொம்மனுக்குன்னு ஒதுக்குன இடத்த ஏன் குறைக்கிறீங்கன்னு யாரும் சண்டைக்கு வருவாங்கன்னு யோசிக்கிறாங்களோ, என்னவோ!  
மொத்தத்துல நம்ம மதுரையில் இவ்வளவு பெரிய ரோடுகள் இருக்கா என ஆச்சர்யமாத்தான் இருக்கு. போக்குவரத்துத் துறையில், யார் மனதில் தோன்றிய யோசனையோ, அவருக்கு வாழ்த்துக்கள்.

**************************************

மதுரை, மதுரைக் கல்லூரி வழியே பெரியார் நிலையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரியவர் லிஃப்ட் கேட்டார். சரியென நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். செல்லும் வழியில், லிஃப்ட் கொடுத்ததற்காக என்னை ரொம்பவே புகழ்ந்து கொண்டு வந்தார். "என்ன, ரொம்ப ஓவரா இருக்கே!" என நினைத்துக்கொண்டே,  காதில் வாங்கிக் கொள்ளாதது போல வந்து கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே வந்தவர்,   தான் அருப்புக்கோட்டை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக இருப்பதாகவும், தனக்கு அம்மன் அருள் இருப்பதாகவும் சொன்னார். மேலும் எனக்கு இப்போ நேரம் சரியில்லையாம், அவரை கூட்டி வந்த புண்ணியத்திற்காக ஒரு பூஜை செய்து சரி செய்து விடுவதாகவும் அதற்கு ஐநூறு ரூபாய் மட்டும் தந்தால் போதுமென்றும் சொன்னார்.
நான் "ஐயா, பெரியார் நிலையம் வந்துருச்சு, இறங்கிக்கிறீங்களா ?" என்று சொல்லி அவரை இறக்கி விட்டு வண்டியை கிளப்பினேன். இப்பெல்லாம், மக்கள் மார்க்கெட்டிங் பண்றதுல ரொம்ப ஸ்மார்ட்டா மாறிட்டு வர்றாங்கல்ல.

**************************************

சென்ற வாரம், கொஞ்சம் பக்கங்களை நகலெடுக்க, நகலகம் சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்க்வே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே, ஊழியர் ஒரு பெரிய புத்தகத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்குள் பூச்சி பறந்து, தலை சுற்றுவது போல் ஆகி விட்டது. பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். இதே வேலையை நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் வீதம், வருடம் முழுவதும் செய்பவரை நினைத்துப் பார்த்தேன்.கொஞ்சம் மலைப்பாகத் தான் இருந்தது.

**************************************

ரொம்ப நாளா சும்மா தான் வச்சிருக்கேன். சரி, இனி அங்கேயும் கொஞ்சம் கிறுக்க்லாம்னு இருக்கேன். என்னோட ட்விட்டர் முகவ்ரி : http://twitter.com/balatwits . வாங்க நண்பர்களே, கொஞ்சம் கை கொடுங்க.
அப்புறம், என் பழைய ப்ளாகர் மின்னஞ்சல் முகவரி solaiazhagupuram@gmail.com கொஞ்சம் நீளமா தோணுச்சா, அதான் balavinmail@gmail.com ன்னு மாத்தி இருக்கேன். 
ஆர்குட்டில் http://www.orkut.co.in/Main#Profile?rl=ls&uid=11039259661382243826. அனைவருக்கும் அன்பு வரவேற்புகள்.

**************************************

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

**************************************

Monday, December 21, 2009

சினிமாக்காரன்

அடுத்த பாட்டு முடிந்தவுடன்
பணக்காரனாவேன் என்று தெரிந்தால்,
நானும் கூடத் தான் இந்நேரம்
தொடை தட்டி சவால் விட்டுக் கொண்டிருப்பேன்.

******

என்னை வாழ வைக்கும்
அன்பு தெய்வங்களே,
சீக்கிரம் வந்து என்
செருப்பை துடையுங்கள் !


******

கெட்ட சினிமா பார்த்து
கெட்டுப் போகாதீர்கள் !
நம் அடுத்த படத்தில்
இளமை குலுங்கும்
மூன்று ஹீரோயின்கள்,
மறந்து விடாதீர்கள் !


******

"தமிழ் தான் என் பேச்சு,
தமிழகமே என் மூச்சு !"
படம் அங்கேயும் 
ரிலீஸ் ஆகுதுல்ல, சரி 
இதையே தெலுங்குலயும் 
ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க.


******

அடுத்த பிறந்தநாளுக்கு
ரெயின் கோட் கொடுப்போம்,
நிறைய தோல்விகளை
மூடி மறைக்க வேண்டியிருக்கு !


******

கருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்
கதைக்கருவா ?
கண்டிப்பா பண்ணலாம்.
பேமண்ட் எப்பவும் போல
ப்ளாக்லயே தந்திடுங்க.


******

"பையன் ஒன்னுக்கும் உதவாம
சும்மா தான் சுத்திட்டு இருக்கான்.
அதான் கழுத,
ஹீரோவாக்கிறலாம்னு பார்க்குறேன்.
பின்னால முதலமைச்சர் வேலைக்கு
அப்ளை பண்ணலாம் பாருங்க !"
--- மதுரைப் பக்கமிருந்து
மூட்டையுடன் வந்தவர்,
சந்தேகமாகத்தான் கேட்டார்.
நான் தான் வாழும் 
உதாரணங்களை எடுத்துக் காட்டி,
வரிசையில் நிற்க வைத்திருக்கிறேன்.

******

Monday, December 14, 2009

அப்பா ! ("உரையாடல்" கவிதை போட்டிக்காக.)இரவிலிருந்தே கூட இருந்தோம்,
காலை மருந்தின்போது கூட
ஒரு முகக்குறிப்பு காட்டவில்லை.

மதியம் வரை தூங்கிவிட்டு
மெளனமாகவே சென்றுவிட்டார்,
என்ன செய்தி வைத்திருந்தாரோ
கடைசிவரை தெரியவில்லை.


தெருமுனையில் வண்டி நிற்க,
நண்பர்கள் துணைகொண்டு
நான்கு மாடி ஏற்றிவிட்டோம்.


வேறென்ன செய்ய வேண்டும்,
யாருக்கென்ன சொல்ல வேண்டும்
எப்போதும் அப்பாதானே கூட்டிப்போவார்,
அவரை எப்படி கூட்டிப்போக?


விஷயம் தெரிந்து வீடு நிறைந்தது...
முன்வந்து முகம் காட்டி,
கண் நனைத்து கட்டிப்பிடித்து,
ஆறுதல் சொல்லி, தேறுதல் கூறி
என்னென்னவோ செய்கின்றனர்...
தாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய !


அங்கும் இங்குமாய் அம்மாவை
ஆளாளுக்கு அலைக்கழிக்க,
ஐஸ்கட்டி பாளத்தில் அப்பா
அவஸ்தையுடன் தான் படுத்திருந்தார்.


"இரவெல்லாம் நாய்க்குட்டி
தனியாக தூங்காது.
காலையில் தானே எடுப்பீங்க,
அதுக்குள்ள வந்துருவோம்"
தொலைபேசி சொன்னது
உயிருக்குயிரான் சொந்தம் சில.


விடிந்ததிலிருந்து
வரவுசெலவு கணக்கெழுதி
இல்லாத பொறுப்பையெல்லாம்
பங்கு வைத்து, பந்தி வைத்து
தலைகீழாய் தாங்கியது
ஒன்றுவிட்ட சொந்தமெல்லாம்,
அப்பா இல்லையென்ற தைரியத்தில்.


தடித்த சத்தம், குறுட்டு வழக்கம்...
யாராரோ அதிகாரம் செலுத்த,
யாராரோ உரிமை வளர்க்க,
முன்னும் பின்னுமாய் எல்லாரும்
தங்கள் பெயரை பொறித்துச் செல்ல,
கொட்டுகிறது பெருமழை.


முச்சந்தியில் அந்நியமாய்
ஒதுங்கி நாங்கள் நிற்கின்றோம்.
அனைத்தையும் மெளனமாய்
பார்த்துக்கொண்டிருந்த அப்பா,
பல்லக்கிலிருந்து முகம் திருப்பி
எங்களைப்பார்த்து லேசாக,
புன்முறுவல் பூக்கின்றார்.


சொன்ன செய்தி புரிந்து கொண்டு
மெல்லமாய் தலையசைக்கின்றோம்.