Friday, April 29, 2011

பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !


நிறைசூலி ஆட்டை
தின்னக் கேட்கும் சுடலைமாடன்

ஐந்தாம் நாளாய் 
நிற்காத உதிரப்போக்குடன் புதுப்பெண்

வாரிச் சுருட்டி எழும் முன் 
நின்று போகும் நடுநிசி தொலைபேசி அழைப்பு

ஈனும் முதல் குட்டியை
மருந்தாய்க் கொள்ளும் ஒரு விலங்கினம் 

பொருந்தாக் காம அலைக்கழிப்பை
அழிக்கப் போராடும் மேன்சன்காரன்

சுருதி தப்பி ஒலிக்கும் 
ஒருமணி உதிர்ந்த சலங்கை

தற்கொலைக்கு தைரியமில்லாதவனின்
உயிர்க்கொல்லி நோய்

சிறகொடிந்த பட்டாம்பூச்சியை 
கொத்தி விளையாடும்
சிறகொடிந்த கரிச்சான் குருவி

பாவிகளை பிடித்து வைத்து தன்
பிரதாபங்களை பட்டியலிடும்
பரிசுத்த புது ஆவி

இதிலொன்றை கேட்டுப் பெற துணிவின்றி
பொருத்தமற்ற ஏதோவொரு தலைப்பை
விருப்பமின்றி தாங்கி நிற்கும்
பொருளற்ற இந்த கவிதை !

படம் உதவி : இணையம்

Tuesday, April 26, 2011

கடவுளும் தேர்தலும் !கடவுள் இறந்த பிறகு தான்
அடுத்த கடவுளுக்கான
தேவையும் தேர்தலும் துவங்கியது.

துணைக் கடவுள் முதல்
துவார பாலகர் வரை
அனைவருக்கும் போட்டி.

கஜானாவை காவல் 
காத்தவருக்குத் தான்
வெற்றி வாய்ப்பென்று கருத்துக் கணிப்பு.
காரியதரிசிக்கும், கொள்கை பரப்புச் செயலருக்கும்
உடன்பாடாகி விட்டதாகவும் ஒரு பேச்சு.

பேசாமல் பழைய கடவுளே
தன் மச்சானையோ ஒன்று விட்ட
சித்தப்பா பையனையோ
அடுத்த கடவுளென
சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

எவ்வளவு நேரம் தான்
காப்போன் இல்லாமல்
கலங்கி நிற்கும் மந்தை !

***

Sunday, April 3, 2011

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !


கிரிக்கெட்டை தேசப்பற்றோடு முடிந்து பார்க்கும் மூடத்தனத்தையெல்லாம் தாண்டி வந்து ஆண்டுகளாகி விட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்பது, இந்திய நாட்டின் சார்பாக விளையாடும் அணியல்ல, பி.சி.சி.ஐ என்ற அரசு சாராத, ஒரு தனியார் அமைப்பின் சார்பாக விளையாடும் அணி என்று எத்தனையோ விவாதங்கள் செய்தாயிற்று. அவ்வப்பொழுது கிரிக்கெட்டில் நடக்கும் சில‌ நிகழ்வுகளைப் பார்க்கும் போது, சூதாட்டத்திற்கான வாய்ப்புகள் பெருமளவு இருப்பது போலவும் தோன்றத்தான் செய்தது. இந்த விளையாட்டின் பெயரில் நடக்கும் மிகப்பெரிய வணிகமும், வீண் விளம்பரமும் அயற்சியை தரத்தான் செய்திருக்கிறது. உயிரைக் கொடுத்து ஆதரிப்பது போல் கேமிராவிற்கு முகம் காட்டும், ஆனால் விளையாட்டின் அரிச்சுவடியும் தெரியாத தொழிலதிபர்களும், நடிக நடிகைகளும் பல சமயங்களில் எரிச்சலடைய செய்யவும் செய்திருக்கிறார்கள். ஆனால் இது அனைத்தையும் தாண்டி குழுவிளையாட்டு என்ற அளவில் 'கிரிக்கெட்'டின் சுவாரஸ்யங்களுக்கு எப்போதும் குறையிருந்ததேயில்லை. சமயங்களில் மந்தமாகத் தோன்றினாலும், சதுரங்க விளையாட்டைப் போலவே 'கிரிக்கெட்'டும் மனதால் ஆடப்படும் ஆட்டம் தான்.

பதினான்கு அணிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு போட்டிக்கு 'உலகக் கோப்பை' என்று பெயர், இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதால் கிடைக்கப்பெறும் சந்தை லாபங்கள், 'ஐபிஎல்' க்கு கூடும் வரவேற்பு இன்னபிற அரசியலுக்குள் போக விரும்பாமல் ஒரு கிரிக்கெட் பார்வையாளனாய், ரசிகனாய் மிக மகிழ்வாய் உணரும் தருணம் இந்த 'உலகக் கோப்பை' வெற்றி.எங்களை நீங்கள் மகிழ்வுறச்செய்திருக்கிறீர்கள், தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எங்களை ஒருமைப்படுத்தியிருக்கிறீர்கள். எம் போன்ற சாமான்யர்களுக்கும் 'உலகை வெற்றி கொண்டது' போன்ற உணர்வை சிறு பொழுதேனும், நீங்கள் உங்கள் உழைப்பின் மூலமும் வியர்வையின் மூலமும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

வீரர்களே, உங்களுக்கு எங்கள் உளம் கனிந்த நன்றி !

***pictures courtesy espnstar.com***