Friday, October 27, 2017

யாரை எதிர்க்க வேண்டும்?

நம்மை "அவுட் ஆஃப் பாக்ஸ்" யோசிக்க விடாமல், நம் எதிர்ப்பையோ ஆதரவையோ யாருக்குத் தரவேண்டும் என்று எதிர் தரப்பே நமக்கும் சேர்த்து மடைவெட்டி விடுவது தானே ராஜதந்திரம் (உடைச்சு சொல்லணும்னா, பார்ப்பனீயம்). திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டிய அத்தாரிட்டி, "தி இந்து" தான் என்று திமுகவினர் வாயாலேயே சொல்ல வைப்பதும், தமிழ் இன உணர்வாளர் "விஜய்" என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே குரலில் சொல்ல வைப்பதும் கூட எதிர்தரப்பு மாஸ்டர் மைண்ட்களின் எண்ணங்களாக இருக்கலாம். அதற்காகவே சில்லுண்டிகளை வைத்து, பலவீனமான அல்லது உப்புக்குப்ப்பெறாத கருத்துக்களைப் பேச வைப்பது. அதில் கடுப்பாகும் எந்த நடுநிலையாளரும் தன்னையும் அறியாமல் அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களுக்கு கம்பு சுற்றத் துவங்கிவிடுகிறார்கள்.
"பேரியக்கத்தின் அஸ்தமனம்" எழுதிய பத்திரிக்கையின் "திராவிட இயக்க வரலாற்றிற்காக" அதன்பக்கம் நின்று பேச திராவிட அபிமானிகளைத் தூண்டியது எது? தீவிர வலதுசாரிகளின் சல்லி வேர்களை அதற்கு எதிராய் லேசாய் சலம்ப வைத்தது தானே. அதே போல் தான், அன்னா ஹசாரேவின் கூட்டத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர், பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் "மரியாதை நிமித்தம்" சந்தித்துப் பேசியவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என்ற இரண்டு வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில், அதுவும் ஒரு திரைப்பட காட்சியில் கூறியதற்காக, சில அல்லக்கைகள் எழுதி வைத்ததை ஒப்பிப்பதைப் போல, படம் வந்த முதல் நாளே எதிர்க்கிறார்கள், அது பொதுவானவர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது, ஆகவே அவர்கள் நடிகரின் பக்கமிருந்து பேசத் துவங்கிவிடுகின்றனர்.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சி, கொஞ்ச நாள் கழித்து நடிகரும், ஆளும் கட்சியின் தேசியத் தலைவரும் கைகொடுத்து, கட்டிப் பிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இருக்கலாம். அப்போதும் நம்மையும் அறியாமல் நாம் எதிராளியின் விருப்பப்படி, வேறு யாருக்காகவாவது கம்பு சுற்றிக் கொண்டிருப்போம்.
******

Saturday, October 7, 2017

பணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்

கரும்பலகை


அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் கல்வி, பெரும்பகுதி அவனது ஆசிரியர்களின் செயல்பாட்டை மையமாக வைத்தே செழிப்படைகிறது. போதிய அடிப்படை வசதியும், வெளியுலகம் குறித்த பார்வையும் மறுக்கப்படும், தேசத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, ஒரே ஊற்றுக்கண் அவர்களது கல்வி மட்டுமே. தங்களுக்குக் கிடைக்கக் கூடிய மிக சொற்ப வாய்ப்புகளைக் கெட்டியாக பிடித்து மேல் எழுந்து, தங்கள் தலைமுறையையே முன்னேற்றிய எத்தனையோ கிராமப் புற மாணவர்களைக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகையோரின் வெற்றிக் கதைகளில், நிச்சயம் அவர்களது பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கு முக்கியப் பங்கு இருக்கும். அத்தகைய பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள மனச்சுமையைப் பேசுகிறது எழுத்தாளர் அர்ஷியா எழுதிய ”கரும்பலகை” என்னும் நாவல். ”அரசு வேலை கிடைத்து விட்டது, அவர்களுக்கென்ன வேலை பார்த்தாலும் பார்க்காட்டியும் கை நிறைய சம்பளம், வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் விடுமுறை” என்ற பொதுப்பார்வைக்குப் பின்னால், அத்தகைய ஆசிரியர்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகள், மன உளைச்சல், சிவப்பு நாடா முறையில் சிக்கி சுண்ணாம்பாகும் அவலம், மிக நியாயமான கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல், அது தான் வழக்கம், இருக்கின்ற வட்டத்திற்குள் நின்று கொண்டு, தேர்வு சதவீதத்தை உயர்த்திக் காட்டு என்று கண்மூடித்தனமாக வாசிக்கப்படும் அறிக்கைகள், குறிப்பாக அரசு ஆசிரியப் பணியின் பொருட்டு, குடும்பத்தை விட்டு வேறு ஏதேனும் ஒரு குக்கிராமத்தில் தங்கியோ அல்லது தினம் நெடுந்தூரம் பயணம் செய்தோ வேலை பார்க்கும் பெண்களின் துயரம் ஆகியவற்றைப் பேசுகிறது நாவல்.

”போஸ்டிங் இலவசம், டிராஸ்ஃபர் காசு” – இது தான் நாவலின் கரு.  மனசாட்சிப்படி, வாங்குகிற சம்பளத்திற்கும், ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியப்பணிக்கும் உண்மையாய் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் மாணவர்களிடம், தன்னால் ஆன மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வர முயற்சிக்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி. அவரின் அன்றாட ஆசிரியப்பணியின் நேர்க்கோட்டுச் சித்திரம் தான் “கரும்பலகை” நாவல். பள்ளிக்கு வந்து போகும் போக்குவரத்து தூரத்தைக் கடக்கவே தங்கள் மொத்த சக்தியையும் இழக்கும் இன்றைய அரசுத் துறை ஆசிரியர்களின் பிரச்சனையைப் பேசுகிறது நாவல்.  நாடகத்தன்மையோ, மிகையுணர்வோ துளியும் இன்றி, நிஜத்தில் பணபலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண அரசுத்துறை ஆசிரியர் படும் கஷ்டங்களைத் தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

நாவலில் எங்கும் அறிவுரை சொல்கின்ற போக்கோ, அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்யும் பகுதிகளோ இன்றி, இயல்பில் ஒரு பிரச்சனையை தன் எல்லைக்குட்பட்டு ஒரு ஆசிரியை எவ்வாறு எதிர்கொண்டு அதனை சமாளிப்பாரோ அதை அப்படியே எழுத்துக்களாக்கி இருப்பது, நாவலின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. ஆசிரியை ராஜலட்சுமியும், ”பணிமாறுதல்” என்னும் கதாபாத்திரமும் மாறி மாறி தாயக்கட்டை உருட்டி விளையாடுவது தான் கதை. பெயர் தெரியாத ஒரு ஊருக்கு, ராஜலட்சுமியை “பணிமாறுதல்” அனுப்பி வைத்தால், அவர் அங்கே இருக்கும் குறைகளை வென்று தன்னால் ஆன அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்து அந்த “பணிமாறுதலை” தன் வசப்படுத்த முயல்கிறார். ராஜலட்சுமி கொஞ்சம் ஆசுவாசமாய் உணரத் துவங்கும் வேளை, “பணிமாறுதல்” மீண்டும் ஒரு தாயம் போட்டு அவரை வேறு ஒரு புது ஊருக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலைமை. இப்படி இந்த இரண்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பரமபதம் தான் இந்தப்புதினம்.

 நேரடி போக்குவரத்து வசதியின்மை, மத / சாதி ரீதியான கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளோடு தான், ஒவ்வொரு அரசுத்துறை ஆசிரியரும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சுயமுனைப்போடு கண்ணும் கருத்துமாய் வேலை செய்பவர்கள் ஒரு சிலர். ஆனால் பெரும்பான்மையினர், கட்டுப்பாடுகளும் சரியான மேற்பார்வையும் இல்லாததாலே எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல், மாதமானால் சம்பளம் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மந்த நிலைக்கு வந்து விடுகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நாவல் ஒரு பாடமாக அமையலாம்.

கதையின் நாயகி, கொள்கைவாதப் பிடிப்புகள் கொண்ட, நூறு சதவீத தூய்மை வாதி, அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் கொடிய வில்லன்கள். அவர்களையும், குலைந்து சரிந்து கிடக்கும் இந்த அமைப்பு முறையையும் நாயகி எப்படி தன் மதியூகத்தாலும், போர்குணத்தாலும் வெற்றி கொள்கிறார் என்றெல்லாம் ”கதை” சொல்லாமல், யதார்த்தத்திற்கு மிக மிக அருகில் நின்று, ராஜலட்சுமி என்னும் ஆசிரியையின் பணி வாழ்வில் இருந்து சில நாட்களை, அவற்றிற்கே உரிய ஏற்றத் தாழ்வுகளோடு மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் அர்ஷியா. பணம் கொடுத்தாவது, சொந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் ராஜலட்சுமிக்கும் தோன்றுகிறது. என்ன அமைப்பு முறை இது, உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும் அதற்குரிய அங்கீகாரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் அவருக்கும் வருகிறது. அவை எல்லாவற்றையும் மீறி, தன்னை நம்பி, தன்னிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளை, எப்படியாவது முன்னேற்றி அவர்களை சமூகத்தில் சிறந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற வேட்கை அவரைத் தொடர்ந்து, விடாமல் போராட வைக்கிறது. சிறுகச் சிறுகத் தான் விதைக்கும் தானியங்கள் சோலையாகும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குள் எப்பொழுதும் ஈரமாய் சுரந்து கொண்டே இருக்கின்றது. அந்தத் திறம் தான் அடுத்து எந்த ஊருக்கு மாற்றல் கிடைத்தாலும், அங்குள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே நம்ப வைக்கிறது. அவரது பயணமும் தொடர்கிறது.

எடுத்துக் கொண்ட கருவின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் கோர்வையான காட்சிகள், நேர்கோட்டிலிருந்து சிறிதும் விலகாத கதை சொல்லல், சொல்ல வந்த விஷயத்தை இயல்பாகப் பேசிய நடை, பலரும் அறிந்திராத ஒரு சமகாலப் பிரச்சனையின் உண்மையான பதிவு என்று பல விதங்களில் “கரும்பலகை” சிறந்ததொரு படைப்பாக ஆகியிருக்கிறது. அரசுத் துறை ஆசிரியர்களின் பணி மாறுதல், பணி நிரவல் தொடர்பான சிக்கல்களை ஒரு ஆசிரியையின் பார்வையில், நேர்த்தியாக எழுதியிருக்கிறது “கரும்பலகை”
வாழ்த்துகள், எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தைப் பதிப்பித்த “எதிர் வெளியீடு” நிறுவனத்தினருக்கும்.

******
கரும்பலகை (புதினம்)
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கங்கள்: 171
விலை: ரூ. 150.

******