Friday, May 27, 2016

சியாமளா கல்வி அறக்கட்டளை


சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து சில நிவாரண உதவிகளை செய்தோம். அதன் வரவு செலவு விவரங்களை “சியாமளா கல்வி அறக்கட்டளை”யிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பி வைத்திருந்தார்கள். செய்த உதவிகளை பொது வெளியில் காட்சிப்படுத்தி விளம்பரம் தேட வேண்டுமா என்ற இயல்பான தயக்கமும், வழக்கமான சோம்பேறித்தனமும் சேர்ந்து கொள்ள அப்படியே போட்டு வைத்திருந்தேன். இன்று இணையத்தில் எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களின் வலைப்பூவில் வந்த பதிவைப்படித்ததும் (http://www.nisaptham.com/2016/05/blog-post_26.html) நல்ல விஷயத்திற்கான விளம்பரம் ஒன்றும் தவறல்ல என்று தோன்றவே வெள்ள நிவாரணப்பணிகளின் முழு விவரங்களை நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

சென்னை-கடலூர் வெள்ளத்தின் போது நண்பர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று யோசித்து, கல்லூரி நண்பர்களிடம் கோரிக்கை வைத்தேன். முதலில் பணமாக பெற்றுக்கொள்வதில் பெரும் தயக்கம் இருந்தது. அப்போது ஆபத்பாந்தவனாக அருண்மொழி மேடம் நிர்வகிக்கும் “சியாமளா கல்வி அறக்கட்டளை” மூலம் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிக்கலாம் என்று முதல் உதவிக்கரம் வந்ததும், ஜி.சி.இ. கல்லூரி நண்பர்கள், பி.எஸ்.என்.எல் நண்பர்கள், சியாமளா கல்வி அறக்கட்டளை கொடையாளர்கள், மற்றும் பல நண்பர்கள் மளமளவென பணத்தை அனுப்பத் துவங்கி விட்டனர். சுமார் பதினைந்து நாட்களுக்குள் ரூ. 1,39,230 வரை வந்தது. அதன் முழு விவரம் கீழே அட்டவணையில் உள்ளது.நண்பர்கள் நம்மை நம்பி பணம் அனுப்புகிறார்கள். அது உரிய நேரத்தில் உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற  பதட்டம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு வழியாக சரியான தன்னார்வலர்களை கண்டுபிடித்து, சென்னைக்கும் கடலூருக்குமென நிவாரணப்பொருட்களை அலுவலக நண்பர் செந்தில் குமார் ராஜூ, மேலும் குமரேசன், ஜேம்ஸ் ஆகிய நண்பர்கள் மூலமாக கொண்டு சேர்த்தோம். சிவரஞ்சனி, அரவிந்த், ஆண்டியப்பன், கருப்பையா சார் என சில நண்பர்கள் பொருட்களாகவே நிவாரண உதவியை செய்தார்கள். முதலில் நண்பர் மதுரை சரவணன் உதவியோடு, நண்பர்கள் அருணாச்சலம் சார், கடங்கநேரியான் ஒருங்கிணைத்த மதுரை நண்பர்கள் மூலமாகவும், இரண்டாம் கட்டமாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பசுமை நடை குழுவினர் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், மூன்றாம் கட்டமாக பி.எஸ்.என்.எல். – டி.எஸ்.ஓ.ஏ சங்க நிர்வாகிகளான நண்பர்கள் சிலாவ் ராவ், ஆதிகோவிந்த் ஒருங்கிணைத்த குழு மூலமாகவும், பின் நான்காவது கட்டமாக நண்பர் ராமஜெயம் மூலமாக ஐ.ஆர். சி.டி.எஸ் குழு வழியாகவும், பின் ஐந்தாவது கட்டமாக நண்பர் “பிக்.ஏ அப்துல் ரஹீம்” மூலமாகவும் அவசர நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தோம். பின் கடந்த பிப்ரவரியில் சென்னையிலுள்ள பார்வையற்றோர் உறைவிடப்பள்ளிக்கு நண்பர் ராமஜெயம் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் தண்ணீர் சுத்தீகரிக்கும் இயந்திரத்தை நிறுவினோம். மீதமிருந்த ரூபாய்க்கு மதுரையில் இருக்கும் நமது சேவாலயம் விடுதி மாணவர்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம். செலவுக்கணக்கு முழு விவரம் அட்டவணை வடிவில் கீழே உள்ளது.பள்ளி, கல்லூரி, அலுவலகம், இணையம், இலக்கியம், தொழில், மேற்படிப்பு, அறக்கட்டளை, குடும்பம் என்று வெவ்வேறு வட்டங்களில் நண்பர்களுடன் பழகுகிறேன். அந்தந்த வட்டத்துக்குள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், எல்லாம் தனித்தனி தீவுகளாகத் தான் இருந்து வந்தன. முதன்முறையாக, வெள்ள நிவாரணப்பணியின் சிறு துளி இந்த வட்டங்களை இணைத்து என்னுள் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. வெள்ள நிவாரணப்பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்றிற்குச் சென்றால், அங்கு எனது அலுவகத்தின் வாடிக்கையாளர் வரவேற்கிறார், பள்ளித்தோழியின் கணவர் வந்திருக்கிறார், அலுவலகத்தின் வேறு பிரிவில் வேலை பார்ப்பவர் தானாக வந்து அறிமுகம் செய்து கொள்கிறார், நடுவில் அவ்வப்பொழுது அலைபேசி அடித்துக்கொண்டே இருக்கிறது, எடுத்துப்பேசினால் வெளிநாடுகளில், வெளியூரில் இருக்கும் கல்லூரித் தோழர்கள் தங்களது பங்களிப்பின் விவரங்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர், பொதுமேலாளர் அழைத்து அலுவலகம் சார்ப்பாக என்ன செய்யலாம் என விவாதிக்கிறார். வாட்ஸப் குழுக்களிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டியவாறே இருக்கின்றனர். இது போல உலகமெங்கும் வெவ்வேறு வகையான இணைப்புப் பாலங்கள். நாம் நேரடியாக சொல்லாவிட்டாலும் கூட, யார் மூலமோ கேள்விப்பட்டு தாமாக வந்து உதவிக்கரம் நீட்டும் நண்பர்கள் என்று வட்டம் இன்னும் இன்னும் பெரியதாகிக் கொண்டே இருந்தார்கள். உதவி செய்யத் தயாராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவலை, தான் செய்கின்ற உதவி சரியான நபரிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான். ஒருங்கிணைக்கும் பணியில் இருந்த என் மீதும், சியாமளா கல்வி அறக்கட்டளை மீதும் நம்பிக்கை வைத்து உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இதை ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கான உதவி என்றில்லாமல், தொடர்ந்து இது போன்ற உதவிகளை ஒருங்கிணைக்க எண்ணமிருக்கிறது. முக்கியமாக ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக. ஏற்கனவே மதுரை “சேவாலயம்” மாணவர்களுக்காக செய்து வரும் உதவிகள் போக மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தி கல்வி சார்ந்த உதவிகள் வழங்க, சியாமளா கல்வி அறக்கட்டளையின் அருண்மொழி அம்மா விருப்பம் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து என்னாலான ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறேன். இதன் செயல்பாடுகள் குறித்து ”தென்திசை” (thendhisai.blogspot.in) தளத்திலும், ஃபேஸ்புக், வாட்ஸப் மூலமாகவும் அவ்வப்பொழுது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன். உடனடியாக செய்ய வேண்டியது, வரும் கல்வியாண்டில் பள்ளியில் தொடர பணம் செலுத்த முடியாதவர்களைக் கண்டறிந்து தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

விருப்பமுள்ள நண்பர்கள், அருண்மொழி அம்மா அலைபேசி எண்ணான 9486102324 என்ற எண்ணுக்கு உங்கள் விவரங்களுடன் வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பினால் “சியாமளா கல்வி அறக்கட்டளை” வாட்ஸப் குழுமத்தில் உங்களை இணைத்துக் கொண்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அல்லது shyamalatrust@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமிருந்தால் அதனையும் தயங்காமல் தெரிவியுங்கள்.

நாம் போகிற போக்கில் செய்கின்ற சிறு உதவி, யாரோ ஒருவருடைய வாழ்க்கையே மாற்றி விடலாம். நல்ல நினைப்பை செல்லும் வழியெங்கும் தூவிச் செல்வோம். சேர்ந்து பயணிப்போம் !

 - வி.பாலகுமார்.
******


Friday, May 20, 2016

அகாலத்தின் மெல்லிசை – கவிஞர் சமயவேல் பணிநிறைவில் சில நினைவுகள்

அலுவலகத்தை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்….. “
-    “இப்பொழுதெல்லாம்”, கவிஞர் சமயவேல்: ஜுலை 31, 2009

மத்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த சமயவேல் அவர்கள் கடந்த 30/04/2016 அன்று பணி நிறைவு பெற்றார். இறுக்கங்களுக்குப் பெயர் போன கட்டுப்பெட்டியான துறையில் வேலை பார்த்தபடியே, அவர் நவீனக்கவிதை எழுதும் மனமும் வாய்க்கப்பெற்றவராக இருந்திருக்கிறார். உலக இலக்கியங்களோடு தொடர்ந்து பயணித்து வரும் சமயவேல் அவர்களுக்கு இந்த பணி ஓய்வு மிகப்பெரிய இளைப்பாறுதலையும், விடுதலையுணர்வையும், இடைவிடாத வாசிப்பிற்கான களமாக அமையும் என்று நம்புகிறேன். அவரைப் பற்றிய எண்னம் வரும் பொழுதெல்லாம், ஒருமுறை அவர் நேர்ப்பேச்சில் கூறியது தான் முதலில் தோன்றும், “I am in delearning process. தெரிந்த விஷயம் ஒன்வொன்றிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொண்டே வருகிறேன்”. அடர்ந்த வனத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்த பருத்த முதுமரத்தில் பெருங்கிளையொன்றின் உள்ளடங்கிய பொந்தில், காற்றின் இசையை ரசித்தபடி தன் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருக்கும் தனித்த ஆண் பறவையின் தோற்றம் அது.

சென்ற ஆண்டு, கவிஞர் சமயவேல் அவர்களின் “பறவைகள் நிரம்பிய முன்னிரவு” கவிதைத் தொகுப்பு வெளியான சமயத்தில், எங்களது அலுவலகத்தின் “வாசிப்போர் களம்” சார்பாக மதுரையில் ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தினோம். அப்போது அவர் தனது ஏற்புரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் கவிதைத்தொகுப்பு தனக்கு மீண்டும் பழைய உத்வேகத்தைத் தருவதாகக் கூறினார். அதே சமயம், அலுவலக நண்பர்கள் பலர் கூடியிருக்க, தன்னை மேடையில் இருத்திப் பாராட்டுவது, தனது பணி ஓய்வுக்கான ஒத்திகையைப் போல இருப்பதகாவும் தெரிவித்தார். அக்கூட்டத்தில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். கல்லூரிப்படிப்பு முடித்துவிட்டு, எதுபற்றிய கவலையுமின்றி சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த வேளையில் கிடைத்த அரசுப்பணி எவ்வாறு தன்னை கட்டிப்போட்டது என்றும், அரசுத்துறையின் ஒழுங்குமுறை சட்ட திட்டங்கள், காலத்திற்கு ஒவ்வாத வெற்று நடைமுறைகள் ஆகியவற்றில் அமிழ்ந்து காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே இலக்கியத்தை இறுகத் தழுவிக் கொண்டதாகவும் கூறினார். இந்த கெடுபடிகள் நிறைந்த அரசுக் கட்டுப்பாடுகளைத் தாண்டியும் இத்தனை வருடமாய் தனக்குள் இருக்கும் ஒரு நவீனக்கவிஞனை உயிர்ப்புடன் வைத்திருப்பது தனது பரந்துபட்ட வாசிப்பின் மூலம் தான் என்பதையும் குறிப்பிட்டார்.

“எளியவனின் அரசியல் ஆயுதம் மௌனம்” என்பார்கள். தனது அலுவக பணிநாட்களிலும் கூட சமயவேல் அவர்கள் அதனையே தான் கடைப்பிடித்திருந்தார் என்று நினைக்கிறேன். தான் உண்டு தனது வேலை உண்டு என்ற அளவில் தான் அவரது அலுவலக செயல்பாடுகள் இருக்கும். எடுத்துக் கொண்ட வேலையை எவ்வளவு திறம்பட செய்தாலும் கூட அதற்கான அங்கீகாரத்திற்காக காத்திருக்காதவராகவே இருந்து வந்தார். ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பதவி மாறுதலில் அலுவலக வளாகத்து கட்டிடங்களின் பராமரிப்பு பொறுப்பாளராக அவர் பதவி ஏற்ற பொழுது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானது. அது வரை அந்த வளக்கத்திற்குத் தேவையான தண்ணீர் வெளியில் இருந்து விலைக்குத் தான் பெறப்பட்டு வந்தது. அது பல ஆண்டுகளாக இருந்த நடைமுறை. மாதந்தோறும் தண்ணீருக்காக மட்டுமே பெரும் தொகை செலவாகிக் கொண்டிருந்தது. சமயவேல் அவர்கள் பதவியேற்றதும், அந்த வளாகத்திலுள்ள நீர்நிலைகளை ஆராய்ந்து, பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மோட்டாரை சரி செய்ய வழிசெய்து வெளியிலிருந்து தண்ணீர் வாங்குவதை நிறுத்தினார். இதனால் நிறுவனத்திற்கு மாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் செவவு தவிர்க்கப்பட்டது. இது போன்ற சீர்மிகு நடவடிக்கைகள் அவ்வப்போது பல்வேறு விஷயங்களில் பல அதிகாரிகளால் செய்யப்படுவதும் உண்டு தான். ஆனால் அது செய்யப்பட்ட உடனேயே தன் பெயர் பொறித்த அடையாளத்தோடு மேல் மட்ட நிர்வாகத்திற்குத் தெரிவித்துவிடுவார்கள். ஆனால் சமயவேல் அவர்கள் தனது சிறப்பான பணிகளை வெளியே சொல்வதில் பெரிய விருப்பம் கொண்டிருக்கவே இல்லை. அது தான் அவரது இயல்பு. நவீன இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் சமயவேலின் இலக்கியப்பணி பற்றி உடன் வேலை செய்யும் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருக்குண்டான கவியுலகில் அவர் அன்றாட வாழ்வின் அபத்தங்கள் அண்டாமல் பார்த்துக் கொண்டார் என்று கூட சொல்லலாம்.

வாசிப்பில் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கவிஞர். சமயவேல் அவர்களுக்கு இந்த பணி நிறைவு இன்னும் அதிக நேரத்தையும், படைப்பாற்றலுக்கான மனநிலையையும் அளிக்கட்டும். வாழ்த்துக்கள் !


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8195

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள் ( தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ் )

“ஒரு படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு உண்மையாய் இருப்பதில்லை”
-- ஜார்ஜ் லுயிஸ் போர்ஹே

இணையப்புழக்கம் பெருகி விட்ட இந்தக்காலத்தில், எந்த நாட்டின் படைப்புகளையும், இலவச கோப்புகளாக தரவிறக்கிக் கொள்ள எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்றிருக்கிறோம். எந்தவொரு படைப்பாளரைப் பற்றிய குறிப்புகளையும், பின்புலனையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிற இந்த யுகத்தில், உண்மையில் மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறதா என்ன? இது பொதுவாக இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்கிற பிரதான கேள்வி. முன்பு பிற மொழிப்படைப்பாளர்களின் அறிமுகம் நூலகம் தவிர பிற வடிவங்கள் மூலமாக கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் அவர்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அறிந்து கொண்டோம். உலகமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய சூழ்நிலையிலும், ஒரு படைப்பின் மொழிபெயர்ப்புக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது?

என்ன தான், பிறமொழிப்படைப்புகளை வாசித்தாலும், தன் தாய்மொழியில் ஒரு படைப்பை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை, திருப்தியை ஒரு வாசகனுக்கு வேறு எதுவும் தரமுடியாது என்பதைத் தான் இன்றைக்கும் கணிசமான அளவிற்கு வெளியாகும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய நிலையில், மூலப்படைப்பை சிதைத்து விடாமல், அதே சமயம் தனக்கிருக்கும் குறைந்த பட்ச சுதந்திர எல்லைக்குள் படைப்பை மறு ஆக்கம் செய்வது என்பது இன்றைய மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலை தன் எளிமையான மொழியின் மூலமாக, மூலப்படைப்பிற்கு மிக அணுக்கமான நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதர்ரங்கராஜ்.

ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் ஸ்ரீதர்ரங்கராஜ் மொழிபெயர்த்த ஏழு கதைகளை ”நீர்க்கோழி” என்ற தலைப்பில் தொகுப்பாக்கி வெளியிட்டு இருக்கிறது வலசை பதிப்பகம். முரகாமி எழுத்துக்கள் தனித்துவம் வாய்ந்தவை. கிழக்காசிய எழுத்தாளராக இருந்தாலும் அவரது படைப்புகளில் மேற்கத்திய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் சாயல்கள் இருப்பதைக் காண முடியும். இயல்பாய் யதார்த்த நிகழ்வுகளோடு தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை முறை பற்றிய விவரணை ஒருபுறம். மாய உலகின் கனவுகளோடும், அமானுஷ கற்பனைகளின் படிநிலையான சித்திரம் இன்னொரு புறம். இவையிரண்டும் சமுத்திரத்தில் கலக்கும் நதிகள் போல ஒன்றோடு ஒன்று இணையும் தருணம். மாய யதார்த்ததில் நிகழ் உலகம் தொலைந்து போவது போலவோ அல்லது நிஜ உலகில் அமானுஷத்தின் சுவடுகள் அமிழ்ந்து போவது போலவோ அவரது கதைகள் முடிவுறும். 

இக்கதைகள் மலைகள் மின்னிதழில் தனித்தனியாக வெளியான பொழுது வாசித்ததற்கும், இப்போது தொகுப்பாக வாசிக்கையில் உள்ள அனுபவத்தையும் குறிப்பாகச் சொல்லலாம். முரகாமியின் கதைகள் அனைத்திலும் அவரே பிரதான பாத்திரமாக இருக்கிறார். ஒரு மனிதன் தன் சுயம் சார்ந்த பிரச்சனைகள் மூலம் உலகத்தை அணுகும் கதைகள் அவருடையது. இந்த அகமுகச் சிந்தனை (introvert) தன்மை கொண்ட கதைகளை வாசிக்கும் போது நாமும் அந்த பாத்திரமாக மாறி கதைக்குள் நம்மை எளிதாக ஒப்புக்கொடுக்க முடிகிறது. எளிமையான சிக்கலற்ற வாழ்க்கை ஓர் எதிர்பாராமையை சந்திக்கும் போது நிகழும் தருணங்களைத் தாம் அவரது கதைகள் பேசுகின்றன. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றிற்குமே தொடர்பு இருப்பது போலத் தோற்றமளிக்கிறது. “நீர்க்கோழி” கதையில் புதிதாய் வேலைக்குச் செல்பவனுக்கும், “எதேச்சையின் பயணிக்கும்” ஏதோ உறவு இருக்கிறது. ”டோனி தகிதானி”யின் தந்தை தான் ”ஏழாவது மனிதர்” தானோ. “நேற்று” கதையில் வரும் எதையும் மரபார்ந்த முறையில் கேள்விகளின்றி எதிர்கொள்ளும் எரிகா என்னும் அழகிய பெண்ணின் எதிர் வடிவம் தான் ”இரும்புத்துண்டுடன் ஒரு நிலக்காட்சி”யில் வரும் கேளிக்கைத்தீயை மணிக்கணக்காய் பார்த்தபடி அமரந்திருக்கும் ஜுன்கோவோ என்ற எண்னமும் எழுகிறது. அல்லது இவர்கள்
எல்லோருமே ஒருவர் தானோ என்ற எண்ணம் கதைகளை ஒரே வாசிப்பில் தொகுப்பாக வாசிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்குள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணநலன்கள், செயல்பாடுகள், எண்ணவோட்டம், எதிர்வினை, பார்வை எல்லாவற்றையும் வரைபடநிரலாக (graph chart) காட்சிப்படுத்தி அதனை ஆய்வு நோக்கில் அணுகிப் பார்த்தால், இன்னும் கூட விரிவான சித்திரம் கிடைக்கும்.

நிறைவான மொழிபெயர்ப்பை தந்திருக்கும் ஸ்ரீதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

நீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள்
(தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்)
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
வலசை பதிப்பகம்
விலை: ரூ 120.


******
நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=8012
******

குழந்தைகள் உலகில் ஒரு பயணம்

இன்றைய சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் எதனையும் வர்த்தகமாக்கி காசுபார்க்கும் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் குழந்தைகளை குறிவைத்து இயங்கும் வியாபார உலகம் மிக பிரமாண்டமானது. நாமும் கூட குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து கொடுக்கிறேன் பேர்வழி என்று, அவர்களுக்கென பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட தனியறை, மேஜை நாற்காலி, கணினி, அலைபேசி, அவர்கள் பார்க்குற, கேள்விப்படுகிற மற்றும் நாம் சிறுவயதில் வாங்க நினைத்து வாங்க முடியாமல் போன பொருட்கள், சந்தையில் குழந்தைகளுக்கென புதிதாய் வரும் எல்லாவிதமான விளையாட்டுப் பொருட்கள், கல்வி சார் சாதனங்கள் என்று நம் குழந்தைகளுக்கென பார்த்துப் பார்த்து வாங்கிக் குமிக்கின்றோம். குழந்தைகளின் மகிழ்ச்சி என்பது நாம் அவர்களுக்காக செலவு செய்யும் பணத்தில் அடங்கி இருக்கிறது என்ற அளவிலேயே நாம் புரிந்து வைத்திருக்கின்றோம். என் குழந்தை என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துடுவேன், அவ எந்தவொரு சின்ன விஷயத்துக்குக் கூட ஏமாந்து போறது எனக்குப் பிடிக்காதுஎன்பதை கொள்கையாக வைத்திருக்கும் பெற்றோர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

நல்ல வசதி வாய்ப்புகளோடு நம் குழந்தைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பது பெற்றோராகிய நம் கடமை தான். ஆனால் நமது நிகழ் உலகத்தில், மகிழ்ச்சி என்ற பொருளுக்கு நாம் நிர்ணயித்து வைத்திருக்கும் கோட்பாடுகளையும், அளவுகோல்களையும் தாண்டி அவர்களின் உலகை புரிந்து கொள்வது அவசியம். குழந்தைகள் என்னும் சின்ன்ஞ்சிறிய மனிதர்களை வலியக் கொண்டு வந்து நமது மன எல்லைக்குள் அமரவைத்து, நம் கண் கொண்டு அவர்களைக் காணச்செய்வதைக் காட்டிலும், அவர்களின் சிறிய உலகத்தில் நாம் நுழைந்து பார்த்தால் பற்பல அற்புதங்களை நாமும் ஸ்பரிசிக்க முடியும். நாம் அனைவருமே குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அதை மறந்து விட்ட்தாலேயே நாம் அனைவரும் பெரிய மனிதர்கள் வேடமிட்டு எதெற்கெடுத்தாலும் ஒரு கவலையை கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறோம்.  மாறாக நம்முள் இருக்கும் குழந்தைமை நம்மையும் மீறி வெளிவரும் தருணங்களில் தான் நாம் எந்தவிதக் கவலையுமின்றி ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதே உண்மை.

நம் குழந்தைமையை மீட்பதெப்படி? மிகவும் சுலபமான வழி தான், நாம் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும் குழந்தைகளாக வேண்டும், அவ்வளவு தான். ஆனால் அவர்களின் உலகிற்கு ஒரு பார்வையாளராக அல்லாமல் சகபயணியாய் சென்று பயணித்தால் மட்டுமே அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும், நம்மாலும் அவர்களின் குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். குழந்தைகளின் கற்பனை உலகம் (fancy world) தர்க்கங்களற்ற களங்கமின்மையால் (illogical innocence) நிறைந்து இருக்கும். அங்கே இயல்பு வாழ்க்கையில் நாம் வகுத்து வைத்திருக்கும் நேர்க்கோட்டு வரைமுறைகளுக்கு வேலையே இல்லை. குழந்தைகள் கேள்விகளின் துணை கொண்டே தங்களின் கற்பனை உலகை வளர்க்கின்றனர். அவர்களின் கேள்விகளை காது கொடுத்துக் கேட்டு, பொறுமையாக பதில் சொன்னாலே போதும், அவர்களின் உலகிற்குள் நுழைய கதவு திறந்துவிடும்

என் மகள் பேசத்துவங்கிய பருவத்தில், அவள் பேசும் எல்லா வாக்கியங்களுமே கேள்வியில் தான் முடியும். அதுவும் “ஏன்என்ற வார்த்தை இல்லாமல் ஒரு வாக்கியமும் முடியாது.

அப்பா, ஏன் வெயில் மறஞ்சு மறஞ்சு வருது?”
அப்பா, பஸ் எல்லாம் எங்க தூங்கும்?”
“அப்பா, அம்மா காக்கா வீடு எங்க இருக்கும், பாப்பா காக்கா எப்போ ஸ்கூலுக்குப் போகும்?
அப்பா, வண்டி ஏன் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி போகுது?”
அப்பா, ரொம்ப தூரம் சைக்கிள் ஓட்டுனா எனக்குத் தண்ணி தவிக்குதுல்ல, சைக்கிள் எப்படி தண்ணீர் குடிக்கும்?”
அப்பா, காக்கா, கார் ரெண்டும் பறக்கும்ல, யாரு ஃபர்ஸ்ட்?”
அப்பா, சைக்கிள் ரெஸ்ட் எடுக்க என் பெட்ல படுக்க வைக்கலாமா?”
"அப்பா, இது ஓசூர் பஸ்ஸா, சென்னை பஸ்ஸா?”
"அப்பா, போட்ல ஸ்பீடா போனா கடலுக்குள்ள போலாமா?”
“அப்பா, ஃபிஷ் டேங்குல மீனெல்லாம் எப்போ தூங்கும்?

இப்படியான கேள்விகளை அநேகமாக நம்மில் எல்லோரிடமுமே நம் குழந்தைகள் கேட்டிருப்பார்கள். இக்கேள்விகளுக்கு நேரடியான அறிவுப்பூர்வமான பதில்களைக் காட்டிலும், கற்பனை கலந்த, குழந்தைகளையும் அந்த கேள்விக்கான பதிலின் கதாப்பாத்திரங்களாக உள்நுழைத்து கதை போல விரிவாகச் சொல்லும் போது, அவர்களின் யோசிக்கும் திறனும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கும்.

இப்பொழுது எல்.கே.ஜி படிக்கும் என் மகள், பள்ளியிலிருந்து சுமந்து வரும் கேள்விகளுக்காகவும், கதைகளுக்காகவும் நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம். ஆசிரியை சொல்லும் கதைகளுடன் இவளது சொந்தக் கற்பனையையும் சேர்த்து ஒரே கதை பல்வேறு வடிவங்கள் எடுத்த நிகழ்வுகளும் உண்டு. இக்கதை இப்படித் தான் முடியும் என்ற எந்த வரைமுறைகளையும் நாங்கள் அவளுக்கு நிர்ணயிப்பதில்லை, மாறாக ஒரு பாட்டி வடை சுட்ட கதைக்கே பல பரிமாணங்களை வைத்திருக்கிறோம்.

நாம் படித்த காலத்தில், நம் பெற்றோர் வியந்தது போலவே தான் நாம் நம் குழந்தைகளைப் பார்த்து வியக்கின்றோம். மாறிவரும் கல்வி முறை குழந்தைகளின் மனப்பாட்த்திறனை மட்டும் சோதிப்பதோடு நிற்காமல், அவர்களுக்கான செயல்முறைக் கல்வி அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கவே செய்கிறது. நம் பெற்றோர், “நாங்கள் எல்லாம் ஆறாவதில் தான் “A” எழுதவே கற்றுக் கொண்டோம், என் மகன் எல்.கே.ஜி.யிலேயே எல்லா எழுத்தும் எழுதுகிறான்என்று பெருமை கொண்டிருப்பர். இன்று என் மகள் வீட்டுக்குக் கொண்டு வரும் செயல்முறைப் பயிற்சிகள் எங்களுக்கு வியப்பூட்டுகிறது

கடந்த சுதந்திர தினத்தன்று என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வந்த செயல்முறைத் தாளில், செயல்பணி இவ்வாறு இருந்த்து.

முதலில், சில தாமரைகள் – அவை எத்தனை என்று கூட்ட வேண்டும், தாமரைக்குரிய நிறங்களை வடிவத்திற்குள் சரியாக நிரப்ப வேண்டும். ஏன் அந்த்தாளில் தாமரை இருக்கிறதென்றால், அது நமது தேசிய மலர், அதனால். அது போல அந்த தாளிலேயே, தேசிய விலங்கான புலி, தேசியப்பறவையான மயில் மற்றும் தேசியக்கொடி ஆகியவற்றிற்கும் இது போல கூட்டிப் பார்த்து, நிறமடித்து, அவை அனைத்தும் தேசிய சின்னங்கள் என்ற விளக்கத்தையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறது.  ஒரே நேரத்தில பல விஷயங்களை கற்றுத் தரும் இத்தகைய செயல்வழிக் கல்வி முறை எங்களுக்கு ஒரு சேர  வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வீட்டில் அவளோடு சேர்ந்து நாங்களும் கற்கத் துவங்கியிருக்கிறோம். நாம் படிக்கும் காலத்தில், நோட்டு புத்தகங்களை கிழிக்காமல் பாதுகாப்பதையே தலையாய கடமையாய் கருதியிருப்போம். இன்று பள்ளியில் இருந்து வரும் போதே அன்றைய நாளுக்கான செயல்முறைத் தாளை மட்டுமே என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வருகிறாள். அதையும் வடிவத்துக்கேற்றவாறு கத்தரித்து ஒட்டும் செயலை வீட்டுப்பாடமாக அவளோடு சேர்ந்து நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்.


குழந்தைகள் உலகில் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அன்றாட அயற்சியூட்டும் அலுவல்களுக்கிடையே நமக்குமே நாம் இழந்த பால்யத்தை மீண்டுமொரு முறை வாழ்ந்து பார்க்கும் இனிய அனுபவமாக இருக்கிறது.

நன்றி: மலைகள் இணைய இதழ்: http://malaigal.com/?p=7507
******

இயந்திரம்

அலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதாரணமாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு,குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.

இன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.

“என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க!”

“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”

“சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே.எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு”

“அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாது… இன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்க… வேற என்ன செய்ய.. ?”

வழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.

“ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன?” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது? இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்

“என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க?”

“எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க”

“இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா?”

“இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க”

“எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க”

“ம்ம்ம்… நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க!”

“என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்…சும்மா டென்ஷனைக் கிளப்பாதே…  சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு”

ஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.

சாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,“என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா,நிச்சயம் பையன் தான்” என்று வாதிடுவாள்
“பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதே” என்று அவளை வம்பிழுப்பாள்

”அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க!” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்

”பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான்,பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க”

“நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா!”

“சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்” என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.

இன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம் “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான்.அப்பொழுதும் பதிலில்லை.

சரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, “எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தா… உன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.

சில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான்.அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம்!.  முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.

பின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு,உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.


நன்றி: பதாகை மின்னிதழ் - https://padhaakai.com/2016/01/17/machine-story/

Monday, May 9, 2016

யாருக்கு வாக்களிக்கலாம் ?


எழுத்தாளர் சுஜாதா அவர்கள்  யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி சில குறிப்புகள் கொடுத்திருந்ததைப் படித்தேன். என்னளவில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க என்னென்ன வரையறைகள் வைத்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

1. என் சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக எந்தவொரு முன்னுரிமையும் கொடுக்க மாட்டேன்
2. தொழில் நுட்ப பரிச்சயம் / உதவியாளர்கள் இல்லாமல் நேரடி இணையப் புழக்கம் உடையவர் என்றால் நாட்டு நடப்பின் மறுபக்கத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் கொஞ்சம் “ப்ளஸ்” 
3. கிரிமினல் கேஸ், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி இப்படியில்லாத, பொதுமக்கள் போராட்டம் சார்ந்த நிகழ்வுகளின் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா என்று பார்ப்பேன்
4. தனிநபர் துதி பாடுகிற போஸ்டர்கள், விளம்பரங்கள் கொடுக்கும் வழக்கம் உள்ளவராக இருந்தால் மைனஸ் மார்க்
5. எந்தக்கூட்டணி சார்பாக என்றாலும், கோமாவிற்குச் சென்றுவிட்டார்கள் என்று வசைபாடப்பட்டாலும், என் தொகுதியில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக களத்தில் இருந்தால், பிரதிபலன் பாராமல் களத்தில் போராடுபவர்கள் என்ற அடிப்படையில் , அநேகமாக அவர்களுக்குத் தான் முன்னுரிமை. (மோகன், பாலபாரதி, நன்மாறன், நல்லகண்ணு என்று நம் காலத்திய உதாரணங்களே நிறைய பேர் இருக்கின்றார்கள்)
6. சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறவர்களுக்கோ, அல்லது சர்வாதிகாரத்தைப் போற்றுபவர்களுக்கோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளுக்கோ நிச்சயம் “நோ” தான்
7. சமூகநீதி, இட ஒதுக்கீடு ஆகியவை சார்ந்து செயல்படுகிறவர்கள் என்றால் “யெஸ்”
8. மனுதர்மத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை
9. ஊர், பெயர் தெரியாத சுயேட்சைகளுக்கு நிச்சயமாக இல்லை
10. சத்தியமாக “நோட்டோ” கிடையாது. தற்பொழுதைய நிலையில் அது ஒரு செத்த பாம்பு
11. இருப்பதில் நிறைய படித்திருப்பவருக்கு வாக்களிக்க வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம் (அதிலும் பி.இ. என்று தெரிந்தால் தன்னியல்பாய் காலரைக்கால் வீசம் படி அளவு பாசம் அதிகரிக்கும்)
12.  இது எதுவும் தேறவில்லையென்றால், வெளியே சொல்லாவிட்டாலும் எப்படியும் உள்ளுணர்வுப்பட்சி அந்தந்த சம்யத்திற்கேற்றாற்போல், எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும். ரகசியமாகத் தானே வாக்களிக்கப் போகிறோம். எனவே அட்டைப்பெட்டி மறைப்புக்குப் பின் சென்று அந்த உள்ளுணர்வின்படி ஒரு சின்னத்தை அழுத்திவிட்டு வரவேண்டியது தான். ஆனால் எல்லோருமே அயோக்கியர்கள் தானே, எதற்குப் போய் வீணாய் வரிசையில் நின்று வாக்களிக்க என்று காலாட்டிக் கொண்டு வீட்டில் இருக்காமல், கண்டிப்பாகப் போய் வாக்களிப்பேன்

--- வி.பாலகுமார்