Tuesday, August 8, 2023

வீரப்பன் வேட்டை

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய மற்றுமோர் ஆவணப்படம் வெளியாகியிருக்கிறது. வீரப்பனைப் பற்றி பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இன்றைய தலைமுறை இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்கான ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை நான்கு பகுதிகள் கொண்ட இந்தப் படம் வழங்குகிறது. ஆனால் இதனைப் பார்க்கப் போகும் பெரும்பான்மையோர், வீரப்பனைப் பற்றி தொன்னூறுகளில், ஈராயிரத்தின் துவக்கத்தில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தவர்களாகவே இருப்பர்.

ஆவணப்படத்தின் பெரும்பகுதி கர்நாடக மாநில காவல்துறையினர், வனத்துறையினர், ஊடகவிலளாலர்கள் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. இடையிடையே வீரப்பன் கூட்டாளிகள், மற்றும் ஊர் மக்களின் கருத்துக்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனோ வீரப்பன் மனைவியின் பதிவு, வீரப்பன் குறித்த அவரது பெருமிதம் சார்ந்த பகுதியாக மட்டுமே சுருங்கிவிட்டது.

இதில் உணர்வுப் பூர்வமான ஒரு விஷயம், ஸ்ரீநிவாஸ் எனும் கர்நாடக வன அதிகாரியின் வாழ்வும் மரணமும். காந்திய வழியில் வீரப்பனை  சரணடைய வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார். வீரப்பனின் கோபிநத்தம் கிராமத்திலேயே அலுவலகம் அமைத்து அங்கேயே தங்குகிறார், ஊர் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் செய்ய முனைகிறார், மக்களின் நன்மதிப்பைப் பெறுகிறார். இடையில் வீரப்பனின் தங்கை மாரி அவருக்குச் சில உதவிகள் செய்கிறார். ஊர்மக்கள் மூலமாகவும், மாரி மூலமாகவும் வீரப்பனை நெருங்கி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வீரப்பனைச் சரணடைய வைக்க முடியும் என நினைக்கிறார், அதற்காக உண்மையாகப் பணியாற்றுகிறார். ஒரு கட்டதில் மாரியை ஊர் மக்கள் தவறாகப் பேச, மாரி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். தன் தங்கையின் மரணத்திற்கு ஸ்ரீநிவாஸ் தான் காரணமென வீரப்பனின் கோபம் தனிப்பட்ட முறையில் அவர் மீது திரும்புகிறது. சில நாட்களில் வீரப்பன் சரணடைய விரும்புவதாகவும், ஸ்ரீநிவாஸ் தனியாக காட்டுக்குள் வர வேண்டும் என்றும் அவருக்குத் தகவல் வருகிறது. அதை நம்பி காட்டுக்குள் செல்லும் ஸ்ரீநிவாஸை வீரப்பன் சுட்டுக் கொன்று, அவர் உடலை அங்கேயே எரித்தும் விடுகிறான். வீரப்பனை சரணடைய வைக்க வேண்டும் என்ற ஸ்ரீநிவாஸின் காந்திய வழிமுறை அவ்வாறு முடிகிறது.

படத்தின் இறுதிப் பகுதி, இதே போன்று இன்னொரு நிகழ்வு. வீரப்பனின் கண்களில் புரை விழுந்து பார்வை மங்குகிறது. விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய ஆயுதத் தரகர் என்று பழக்கமாகும் ஒருவர், அவனின் கண் அறுவை சிகிச்சைக்கு வழிசெய்து, அவனை இலங்கையில் கொண்டு விடுவதாக வாக்களிக்கிறார். அதனை நம்பி நோயர் ஊர்தியில் வரும் வீரப்பனும் அவனது எஞ்சிய கூட்டாளிகளும், துப்பாக்கி ரவைகள் துளைக்கப்பட்ட பிணங்களாகவே மிஞ்சுகிறார்கள்.  ஆயுதத் தரகர் வேடமேற்றவர் காவல்துறை உயரதிகாரி. வீரப்பனின் போரட்டமான வாழ்வும், சுமார் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்த அவனது தேடுதல் வேட்டையும் முடிவுக்கு வருகிறது. 

அவன் இறந்த சமயத்தில், அவன் கொல்லப்பட்ட விதம் குறித்து பல வதந்திகள் காற்றில் உலாவின. படத்தின் இறுதியில் வரும் சிறப்பு அதிரடிப்படையில் இருந்த தமிழகக் காவல் அதிகாரியின் கூற்று முக்கியமானது. வீரப்பன் இறந்தது உண்மை, அதற்கு சிறப்புக் காவல்படை தான் காரணம் என்பது உண்மை. இடையில் என்னவிதமான கதைகளை வைத்தும் நிரப்பிக் கொள்ளலாம் என்று அவர் கூறிய செய்தி வீரப்பன் மரணம் குறித்து காற்றில் உலவி வரும் செய்திகளை இன்னும் அலைவுறவே வைக்கின்றன.

குறைந்த காலத்தில், ஏற்கனவே இருக்கின்ற தகவல்களையும், காட்சிப் பதிவுகளையும் வைத்துக் கொண்டு சிலரின் அனுபவப் பகிர்வுகளை சேர்த்து, பறவைப் பார்வையாக இந்த ஆவணப்படத்தைச் செய்திருக்கிறார்கள். இதில் முக்கிமான விடுபடல்களாக இருப்பவை, வெறுமனே மேலோட்டமாக மட்டும் சொல்லப்பட்டு, கடந்து செல்லப்படும் 'ஒர்க்‌ஷாப்பில்' வைத்து நடத்தப்பட்ட சிறப்பு அதிரடிப் படையின் அத்துமீறல்களும், மனித உரிமை மீறல்களும். இன்னொரு விடுபடல், சிறப்பு அதிரடிப்படைத் தலைவராக இருந்து காவல் அதிகாரி விஜயகுமார் மற்றும் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கத் தூது சென்ற பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் இருவரின் அனுபவப் பகிர்வுகளோ நேர்காணலோ இல்லாதது. 

 காட்டு வாழ்க்கை, யானை வேட்டை, சந்தனக்கடத்தல், அரசியல்வாதிகளின் தெரிந்த, தெரியாத வாக்குறுதிகள், போராளிக்குழுக்கள் உடனான தொடர்பு, நடிகர் ராஜ்குமார் கடத்தல், ஊடக வெளிச்சம்  ஒலிநாடாக்கள், வீடியோ பதிவுகள், காட்டுக்குள் நேர்காணல்கள், இரு மாநில அரசுகளுக்கும் காவல்துறைக்கும் உண்டான நெருக்கடி, அதிரடிப் படையின் அத்துமீறல்கள், அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட சொல்லவியலாத் துன்பங்கள், வீரப்பனின் அந்திம நாட்கள், இறுதி நாடகம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமாக ஆனால் இனியும் வெளிவர வாய்ப்பில்லாததுமாக ஏகப்பட்ட செய்திகளையும் இரகசியங்களையும் கொண்டது கட்ததல்க்காரன் வீரப்பனின் வாழ்வும் மரணமும். அதில் ஏற்கனவே பொதுவெளியில் பதிவாகியிருப்பதில் சில பகுதிகளைத் தொகுப்பாக்கி வந்திருக்கிறது, #HuntforVeerappan எனும் இந்த ஆவணப்படம். நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.