Sunday, July 30, 2023

வீரமே ஜெயம்

மகனின் தொடர் தோழமைச் சுட்டலின் விளைவாக நேற்று மாவீரன் படம் பார்த்தோம். மூன்றாம் வார சனிக்கிழமை மதியக் காட்சிக்கும் பாதி அரங்கு நிறைந்திருந்தது. முதல் பார்வை போஸ்டரில் 'தளபதி' ரஜினியை நினைவுபடுத்தும் சிவகார்த்தியின் சிகையலங்காரமும், படம் பற்றிய நேர்மறைச் செய்திகளும் எனக்குமே படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.

'ரமணா' படம் போல அடுக்குமாடிக் கட்டிடத் தொகுப்பு இடிந்து விழுவதற்கான ஒரு வலுவான காரணம், சுவர் பெயர்ந்து விழுவதையே திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தியது, தேர்தல் வருகிறது, பொறுமையாக இருங்கள் என்ற தேய்வழக்கு கதைந்கர்த்தல் போன்ற சில பிசிறுகள் தவிர்த்துப் படம் காட்சி அனுபவமாக நல்ல கோர்வையாகத் தொய்வின்றிச் சென்றது.

டான், பிரின்ஸ் போன்ற காவியங்களுக்குப் பிறகு இதனைப் பார்த்ததும் ஒரு வலுவான காரணமாய் இருக்கலாம். டானின் வெற்றி பிரின்ஸுக்கு வழிவகுத்தது. பிரின்ஸின் தோல்வி மாவீரனுக்கான பாதையை அமைத்திருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி.

சிவா கோழைத்தனத்தின் உச்சமாகத் தற்கொலைக்கு முயல்கிறார், அதன் பின் மாவீரன் அவதாரம் நிகழுமென யூகிக்க முடிந்தாலும், அரங்கில் நிறைய சிறுவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது உறுத்தியது. மாடியிலிருந்து கீழே விழுந்தால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என தொன்னூற்றுக் குளவிகள் சில நம்பியது போன்ற அபத்தம் இதன் மூலம் ஏற்படும் என பயந்தேன். பழைய 'மாவீரன்' பார்த்துவிட்டு வந்து, படத்தில் வந்தது போல கத்தியால் கையில் 'மாவீரன்' என என் தம்பி எழுதத் துவங்கி, கத்தி கீறலை விட அதிக வலியெடுக்க எங்கள் அம்மாவிடம் அடி வாங்கியதும் நினைவில் வந்தது. ஆனால் அந்தக் காட்சியை ஒருமாதிரி 'பேட்ச் வொர்க்' செய்து சுவர் முனை பெயர்ந்து இடறி விழுவதாக எடுத்திருந்தார்கள், நல்லது.

வில்லன் கார்ட்டூன் பதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் மிகை செய்கை தோற்றம் கொடுக்கும் அரசியல்வாதி, அதற்கு பெரிய கண்களை உருட்டும் மிஸ்கின் நன்றாகப் பொருந்தியிருந்தார். அவருக்கு உதவியாளராக, தனக்கென எந்தத் தனிப்பட்ட வாழ்வும் இல்லாத பள்ளி/கல்லூரி நண்பன் என்ற சரடும் பிடித்திருந்தது. இவர்கள் இருவரின் வளர்ச்சியும் வாழ்க்கையும் வைத்தே அழகான தனிக் கதை எழுதலாம்.

நாயகனுக்கு ஒரு மனக்குரல் ஒலிக்கிறது. அது அவனைக் கோழைத்தனத்திலிருந்து விடுத்து மாவீரனாக்குகிறது எனற ஐடியா நன்று. அதற்கு படத்தில் சொல்வது போல், 'உனக்குத் தெரியாத எதையும் அந்தக் குரல் பேசாது' என்ற அளவிலேயே கொண்டு முடித்திருக்கலாம். அமானுஷக் கதை போல அவனுக்குத் தெரியாததை எல்லாம் சொல்லி வழிநடத்துகிறது என்று கொஞ்சம் கதை சொல்லிவிட்டார்கள்.
படம் தயாராகும் நிலையில், இயக்குநருக்கும் நாயகனுக்கும் மனக்கசப்பு, நாயகனின் கதை நகர்வின் மூக்கை நுழைக்கிறார் என பல செய்திகள் காற்றில் உலாவிக் கொண்டிருந்தன. வெளிவந்திருக்கும் படைப்பாக நிறைவான அனுபவத்தையே தந்தது. குழந்தைகளையும் குடும்பங்களையும் மனதில் வைத்துப் பொறுப்புடன் எடுத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இயக்குநர் மடோன் அஸ்வின், நாயகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்துகள்.

#Maaveeran
#வீரமேஜெயம்
#மாவீரன்

No comments:

Post a Comment