Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

No comments:

Post a Comment