Monday, January 1, 2018

ரஜினியின் அரசியல்

இப்பொழுதும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாக நான் நம்பவில்லை. 
1. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை
2. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியில்லை
3. 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி, சின்னத்தில் போட்டி.

இது தான் அவரது அறிவிப்பின் சாராம்சம். முதலில், இது விஜயகாந்த் வந்தது போன்ற தன்னெழுச்சியான அரசியல் பிரவேசம் அல்ல. 1996ல் இருந்து ஒவ்வொரு முறையும் இழுஇழுவென இழுத்து, புதுப்பட வெளியீட்டின் போதெல்லாம் ரசிக மன்றத்தினரின் டெம்ப்போவை இழக்க விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் வேலையைத் தான் செய்து கொண்டிருந்தார். ரசிகர் மன்ற நிர்வாகிகளும், இவ்வளவு காலம் இருந்து விட்டோம், ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால், தங்களுக்குக் கிடைக்கப் போகும் மிகப்பெரிய ஓபனிங்கை மனதில் வைத்து, இலவு காத்த கிளியாக காத்திருந்தனர்.
இப்பொழுது, ரஜினிக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் அழுத்தம்.
1. பாஜகவின் காவி அரசியலுக்கு ஒரு தமிழக முகம் தேவை. பாஜக பேனரில் நின்றால் ஒன்றும் தேறாது என்ற நிலையில், ரஜினியைத் தனிக்கட்சி துவங்க அவர்கள் தரும் நிர்பந்தம் (ஒருவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வர, எந்த அளவுக்கும் செல்லும் அவர்களின் செயல் நாம் அறிந்ததே)
2. தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம். அன்பாகவோ, மிரட்டியோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் /அரசியல் அல்லாத வழிகளிலிலோ அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுக்கும் தலைமை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இப்பொழுது இல்லை.
3. மனைவி மற்றும் அவரது குடும்ப உறவுகள் மற்றும் சமூகம் வழி, ரஜினியை முகமாக வைத்து, அரசியல் அதிகாரத்த்தை சுவைத்துப் பார்க்கத் துடிக்கும் ஆவல்.

சோ.ராமசாமி இல்லாத குறையை தான் உணர்வதாக ரஜினி கூறியிருப்பது முக்கியமானது. சோ இருந்திருந்தால், நிச்சயம் பாஜகவின் பிடியில் இருந்து காக்கும் குஷனாக செயல்பட்டிருப்பார் என்பது உண்மை தான். இவரும், வழக்கம் போல வாயில் பாயசம் காய்ச்சிக் கொண்டு, காலத்தையும் ஓட்டியிருப்பார். இப்பொழுது பாவம், எக்ஸ்போஸ் ஆகி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் குணம், தன்முனைப்போடு ஒரு விஷயத்தில் இறங்கி அடிக்கும் அதிரடி சுபாவம் அல்ல மாறாக, பிரச்சனைகளை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் இயல்புடையவர். இப்பொழுதைய அவரது பேச்சும் அதையே தான் உணர்த்துகிறது. பாஜகவிடமோ, குடும்பத்திடமோ, ரசிகர் மன்ற நிர்வாகிகளிடமோ அவரால், தன் மனதில் ஏங்கிக் கொண்டிருக்கும் சந்நியாசி வாழ்க்கை முறையில் அமைதியாக இருப்பது பற்றி திடமாகச் சொல்லவே முடியாது. திரையில் ஆபத்பாந்தவனாகத் தோன்றும் சூப்பர் கதாநாயகன், உண்மையில் எடுப்பார் கைப்பிள்ளை.

தமிழகத்தில் உள்ள எந்த ஒருவரையும் விடவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பவர் ரஜினியாகத் தான் இருக்கும். களம் இறங்குவதற்காக அல்ல, பாஜக ஆட்சி இழந்தால், தனது 2021 திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டு, 2.0வுக்கு அடுத்து 3.0 வுக்கோ, அல்லது காலாவுக்கு அடுத்து, பாலாவுக்கோ கம்பு சுற்றத் துவங்கலாம். அதைத் தான் அவரது மனமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவரது தற்பொழுதைய அறிவிப்பும் அதைத் தான் உணர்த்துகிறது.
தான் நினைப்பது போல திரை வெளிச்சத்தில் இருந்து கம்பீரமாக ஓய்வு பெற்று அமைதியாக வாழவும் முடியாமல், சரி, என்ன தான் நடக்கிறது ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிவாக முடிவெடுக்கவும் முடியாமல், மைக்கின் முன்னால் வீரவசனம் பேசி விட்டு, தனிமையில் தூக்கமின்றித் தவிக்கும் அந்த முதியவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
******