Saturday, January 28, 2017

நோயர் ஊர்தி ஓட்டுநன்

காலை பணிக்கு வந்து, உடைமாற்றி, வாகனத்தை உயிர்ப்பித்து மீண்டும் மற்றொரு நாளுக்கான ஜீவமரண விளையாட்டுக்கு ஆயத்தமானபடி காத்திருப்பதில் ஆரம்பிக்கிறது அன்றைய நாளுக்கான ஓட்டம். அழைப்பு வந்ததும், இடத்தையும் வழித்தடத்தையும் குறித்து வைத்துக் கொண்டு, உயிரையும் உடலையும் சேர்த்தள்ளிக் கொண்டு வரும் போராட்டம் துவங்கி விடுகிறது. தாமதிக்கும் ஒவ்வொரும் நொடியும் பாசக்கயிற்றின் நீளம் அதிரிகத்துக் கொண்டே வருகிறதென்ற உணர்வு இன்னும் பதற்றத்தைக் கொடுத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தச் சொல்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஊர்தியின் எச்சரிக்கையொலி காதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது போலவே தோன்றினாலும் ஒவ்வொரு முறை வாகனத்தை இயக்கத் துவங்கும் போதும் பணியின் முதல் நாளுக்குண்டான படபடப்பும் பிரார்த்தனைகளும் அனிச்சையாக பற்றிக் கொள்கிறது. எப்போதும் சூழ்ந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருதயம் பன்மடங்கு வேகத்தில் துடிப்பதை நன்றாக உணர முடியும்.

புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். வாகனம் வந்து ஏறியதும் தன் மடியில் வைத்து கைகள் நடுங்கியபடி அவள் தலையைத் தாங்கிக் கொண்டு வரும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண். அவளது கண் காது மூக்கு வாய் என்று நீக்கமற வழிந்து கொண்டிருக்கிறது உதிரம்.

பள்ளிக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு நகரத்தைத் தாண்டியிருக்கும் குன்றிற்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் சம்பந்தமில்லாத மற்றொரு திசையில் தொலைவில் இருக்கிறது குன்று.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே குன்றின் பாதி உயரத்திற்கு ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சையாக அங்கே வரும் சில இளைஞர்கள் 108 ஐ அழைக்கிறார்கள். முதலுதவி செய்து வாகனத்தின் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து செல்ல, சுயநினைவின்றிக் கிடக்கின்றான் சிறுவன். தலையணை முழுக்க இரத்தம் பரவிக் கொண்டே வருகிறது.

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும் இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் தவறான பாதையில் வந்த நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேராய் மோத, இரண்டு பேரும் மொத்தமாய் உருக்குலைந்து கிடக்கின்றனர். அக்கம் பக்கத்திலிருந்து ஓடி வந்தவர்கள் ஆம்புலன்சை அழைக்கின்றனர். இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு விரையும் போது, இவர்கள் வரவிற்காக காத்திருக்கும் பெண் வீட்டார் தொடர்ந்து செல்லில் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இரத்தப்பிசுபிசுப்போடு செல் பாக்கெட்டில் அடிக்க, அவர்களின் பல்ஸ் இறங்கிக் கொண்டே இருக்கிறது.

மில்லில் ஆறு மணி ஷிப்ட் முடிந்து, வீடு வந்தவர் கை கால்களை கழுவி விட்டு சாப்பிட உட்காருகிறார். லேசாக மூச்சுக் குத்து போல வலியெடுக்கவே பிறகு சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லி விட்டு தெருமுனையில் இருக்கும் பெட்டிக் கடைக்கு நடந்து செல்கிறார். சுமார் ஐந்து நிமிடம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், அங்கேயே மேசையிலிருந்து மயங்கிச் சரிகிறார். அருகிலிருப்பவர்கள் முகத்தில் சோடா அடித்துப் பார்த்தும் நினைவு திரும்பாததால், வீட்டிற்குத் தகவல் சொல்லி விட்டு, 108ஐ அழைக்கிறார்கள். வாகனம் விரைந்து வந்து அவசர சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு செல்லும் போதே, தொண்டையிலிருந்து வாய் வழியாக ஒரு மாதிரி இழுத்து மூச்சுவிட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்.

பதைபதைப்பான தருணங்களினூடாகவே நிதானத்தையும் இழக்காமல், வேகத்தையும் மட்டுப்படுத்தாமல் துரித கதியில் விலைமதிக்கமுடியாத் மணித்துளிகளை மிச்சப்படுத்தி மருத்துவமனைக்குள் கொண்டுவருவதற்குள் ஓட்டுநனுடன் சேந்து நோயர் ஊர்தியும் பதறியடித்து விரைந்து செல்லும். இப்படி, எத்தனையோ தருணங்கள், எத்தனையோ உயிர்கள். சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுபட்டாலும் ஒரு வாழ்வு தன்னைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் உயிர்ப்போராட்டதின் வலி எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. வாகனம் ரீங்காரமிட்டு அலறிச்செல்லும் பாதி வழியில் தலை திருப்பி உள் சாளரம் வழி காண நேரும் கணநேர காட்சியில் பரிச்சயமில்லாத ஓர் உயிரின் ஊசலாட்டம் ஒழுங்குமுறையின்றி வாகனம் முழுமைக்கும் அலைந்து ஆடிக்கொண்டிருக்கும். அங்கே கவிந்திருக்கும் ஓலக்குரல்களின் அதிர்வொலி சுற்று வெளியெங்கும் நிரம்பியிருக்கும். நோயர் ஊர்திக்கென தனி விலக்குரிமை வழக்கப்பட்டிருந்தும், பயிற்சியின் போதெல்லாம் மனனம் செய்த அடிப்படை விதிகளை ஒப்புவித்த பின்னரும் கூட சாலைகள் அகன்று வழிவிட மறுப்பவையே அன்றாடம் நிகழும். நகரும் வாகனவோட்டத்தை செங்குத்தாய் பிளந்து சமிக்ஞைகளைப் புறந்தள்ளி விரைந்து செல்வது பிழைத்தெஞ்சி நிற்பதற்கான கடைசி கட்ட முயற்சி. ஒருவழியாய், மருத்துவமனை அடைந்து ஊர்தியின் பின்கதவைத் திறந்து உயிரையும் உடலையும் இணைத்து இறுகக் கட்டி ஸ்ரெட்சருக்கு தாரை வார்க்கும் தருணங்களில் பள்ளிப்பருவத்தின் தேர்வுக்கு முந்தைய நிமிடங்கள் நிழலாடிச் செல்வதை இத்தனை வருடங்களாகியும் தவிர்க்க முடியவில்லை.

வழமையான பரபரப்புகள் நிறைந்த மற்றுமொரு பணிநாள் நிறைவு பெறுகிறது. வாகனத்தை ஷெட்டில் நிறுத்துமுன், அந்நாள் முழுக்க உள்ளே வாகனத்தில் சேர்ந்திருக்கும் பிணியையும், வலியையும், உதிரத்தையும் கழுவித் துடைத்து தூர எறிந்து விட்டு அடுத்த நாளிற்கான புதிய ஓட்டத்திற்கான ஆயத்தங்களை செய்து விட்டு வெளியேற வேண்டும். ஒத்திசைவில் இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநனும் ஊர்தியும் அந்த இரவுக்காய் பிரியும் தருணத்தில் தான் இயல்பு நிலை திரும்பி சோர்வும், தனிமையும் ஆட்கொள்ளும். பணியறைக்குச் சென்று வெள்ளுடுப்பைக் கலைந்து விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை முடுக்கி வீட்டுக்கு விரையத் துவங்கும் வேளை, கூடடையச் செல்ல வேண்டிய தூரம் மலைப்பை அதிகரிக்கும். தூக்கத்திற்காய் இரைஞ்சும் கண்களுக்கு ஒளிநிரப்பும் ஆற்றல் சாலையோர நடைபாதைக் கடையின் ஆவி பறக்கும் தேநீரில் ஒளிந்து கிடக்கும். அவ்வொளியை லாவகமாய் மீட்டெடுத்து, நடுநிசியில் ஆளரவற்ற சாலைகளில் எதிர் காற்றினூடே வீடு சேர மேற்கொள்ளும் பதினாறு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பயணம் அன்றைய சுமைகள் ஒவ்வொன்றையும் மெதுவாய் கட்டவிழ்த்து காற்றில் பறக்கச் செய்கிறது. இரவில் வீடு வந்து சேரும் போது மனமானது மௌனமான, பரிசுத்தமான, சலனமற்றதாய் மாறியிருக்கிறது. எதிர்பாராமையை எதிர்நோக்கியிருக்கும் மற்றுமொரு அதிகாலை விடியும் வரை செத்துக்கிடக்கலாம் போலத் தோன்றுகிறது.


***
நன்றி: மலைகள் http://malaigal.com/?p=9699

உள்ளங்கை தொழில்நுட்பம்

உள்ளங்கை தொழில்நுட்பம்
-          ஷான் எழுதிய “ஆண்ட்ராய்டின் கதை” புத்தகம் குறித்த வாசிப்பனுபவம்
பாலகுமார் விஜயராமன்
----------------------------------------

“புதிய விஷயத்தை விளக்க, பழக்கமான சொற்களையே பயன்படுத்துங்கள்” என்பார்கள். எந்தவொரு சிக்கலான தொழில்நுட்பமும் அதனைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு எளிமையாக இருக்கும்பட்சத்திலேயே அது வெற்றியடையும். அதே போல ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிமுகமும் எளிய வார்த்தைகளால் சொல்லப்படும் பொழுது தான், அதன் மீதான ஆர்வமும், விருப்பமும் அதிகரிக்கும்.

கவிஞராக, ஓட்டப்பந்தய வீரராக, நீச்சல்க்காரராக, சைக்கிள் வீரராக, சமூக செயல்பாட்டாளராக இணையத்தில் அறியப்படும் ஷான் கருப்பசாமி என்கிற ஷான் அவர்களின் இன்னொரு அடையாளமான தொழில்நுட்பத் திறனை வெளிக்கொணர்ந்திருக்கும் புத்தகம் “ஆண்ட்ராய்டின் கதை”. ஆண்ட்ராய்டு பற்றிய எளிய அறிமுகக் கையேடாக, கைக்கு அடக்கமான சிறிய புத்தகமாக அழகாக வந்திருக்கிறது. மொத்தமே 10 அத்தியாயங்கள், எழுபதே பக்கங்களுக்குள்… யாரும் ஒரே அமர்வில் படித்துவிடக்கூடிய எளிய மொழியில்… இன்றைக்கு உலகளவில் பெருமளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமான “ஆண்ட்ராய்டு” பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார் ஷான்.

தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் என்றவுடன், வறட்சியான மொழியில் எக்கச்சக்க தரவுகள் கொண்ட, வல்லுநர்களுக்கான சமாச்சாரம் என்று மற்றவர்கள் ஒதுங்கி விடவேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன் தோன்றிய வரலாறையும், அதன் தொழில்நுட்பம் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் கதை போல விவரித்திருக்கிறார் ஷான். வரலாறு, பரிணாம்ம் என்ற காலகட்டம் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப அசுர வளர்ச்சியில் வெறும் பத்து ஆண்டுக்குள் நடந்த மாற்றங்கள் தான். நோக்கியா 1100 முதல் சியோமி வரையிலான பெரும்பயணத்தின் ஆதி முதல் இன்று வரையான எல்லாவற்றையும் நாம் பயனர்களாக அனுபவித்திருக்கிறோம். இப்புத்தகம் இவ்வளர்ச்சியின் பின்னாலான தொழில்நுட்பத்தையும், வர்த்தகத்தையும்  நமக்குப் புரியும் மொழியில் பேசுகிறது, அவ்வளவு தான்.

Howstuffworks மாதிரியான தளங்கள் பிரபலம். ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்று எளிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். இப்புத்தகமும் அத்தகையதொரு சிறந்த முயற்சி. ஷான் அவர்கள் தொடர்ச்சியாக இது போன்று தொழில்நுட்பங்களின் புத்தக வரிசையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் பார்க்கும் பணி சார்ந்த விஷயங்களையே அலுவலகம் தாண்டி, பொது மக்களுக்கான படைப்பாக வெளியிடக்கூடிய வாய்ப்பு உண்மையில் ஒரு படைப்பாளிக்கு ஆத்மதிருப்தி அளிக்கக்கூடிய விஷயமாகவே இருக்கும். அவ்வகையில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் ஷான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருந்து இதனை எழுத  ஷானை ஊக்கப்படுத்தி, அது புத்தகமாக வருவதற்கும் முன்னின்று செயலாற்றிய யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவகரிகாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பதின் வயது மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல். தயங்காமல் உங்கள் பரிசுப்பட்டியலில் இந்த புத்தகத்தை சேர்க்கலாம்.

ஆண்ட்ராய்டின் கதை – கட்டுரைகள்
ஷான்
யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கம் – 75
விலை – ரூ. 70

******

 நன்றி மலைகள்: http://malaigal.com/?p=9778

கறுப்பு ஆடு - மொழிபெயர்ப்பு சிறுகதை

கறுப்பு ஆடு
-    இடாலோ கால்வினோ (தமிழில்: பாலகுமார் விஜயராமன்)

ஒரு நாட்டில் அனைவரும் திருடர்களாக இருந்தனர்.

இரவில், ஒவ்வொருவரும் பல பூட்டுகளைத் திறக்கும் போலி சாவிகளுடனும், ஒளி குறைத்த லாந்தர் விளக்குகளுடனும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்து வீட்டில் களவாடுவர். களவாடிய பொருட்களை சுமந்தபடி விடியலில் அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது, தங்கள் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள்.

ஒருவர் அடுத்தவரிடம், அடுத்தவர் அதற்கு அடுத்தவரிடம், அவர் இன்னொருவரிடம், அப்படியே சென்று கடைசி ஆள் முதல் ஆளிடம் என்று மாற்றி மாற்றி திருடிக் கொண்டிருந்ததால், யாருக்கும் எந்த இழப்புமில்லை.  எனவே, அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். நாட்டில் நடக்கும் வியாபாரங்களில் வாங்குபவர், விற்பவர் என்று இரண்டு தரப்புமே பரஸ்பரம் ஏமாற்றிக் கொள்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. அரசாங்கம் தன் குடிமக்களிடமிருந்து திருடும் ஒரு குற்றவியல் நிறுவனமாகவும், பதிலுக்கு குடிமக்கள் தங்கள் பங்குக்கு, அரசாங்கத்தை ஏமாற்ற விருப்பம் கொண்டவர்களாகவுமே இருந்தனர். இவ்வாறு வாழ்க்கை மிக சுமூகமாக சென்று கொண்டிருந்தது. அந்நாட்டில் யாரும் பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை.

ஒருநாள், எவ்வாறு என்று தெரியவில்லை, ஒரு நேர்மையான மனிதன் அந்த இடத்தில் வந்து வசிக்க நேர்ந்தது. இரவில், தனது சாக்குப்பையையும், லாந்தர் விளக்கையும் தூக்கிக் கொண்டு திருடச் செல்லாமல், அவன் தனது வீட்டிலேயே தங்கி புகைத்துக் கொண்டும், புதினம் வாசித்துக் கொண்டுமிருந்தான்.

திருடர்கள் வந்தார்கள், அவன் வீட்டில் விளக்கு எரிவதைக் கண்டு, உள்ளே வராமல் சென்றுவிட்டார்கள்.

இப்படியே சில நாட்கள் சென்றன. எனவே இது பற்றி அவனிடம் விளக்கமளிக்க அவர்களுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. அவன் எதுவும் செய்யாமல் வாழலாம் என்று விரும்பினாலும், அவன் மற்றவர்களை தாங்கள் செய்யும் வேலையைத் தடுப்பதற்கு எந்த உரிமையுமில்லை என்று கூறினர். அவன் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு இரவும், ஏதோவொரு குடும்பத்திற்கு அடுத்த நாளுக்கான உணவு இருக்காது என்று விளக்கினர்.

நேர்மையானவனால் அவர்களின் இந்த விளக்கத்தை ஆட்சேபிக்க முடியவில்லை. எனவே அவனும் மாலை தன் வீட்டை விட்டு வெளியேறி மறுகாலை காலை வீடு திரும்பினான். ஆனால் அவன் யாரிடமும் திருடவில்லை. அவன் தூரத்தில் இருந்த ஆற்றுப்பாலம் வரை சென்று, அங்கே நீர் விழுந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். விடிகாலை வீட்டை அடைந்த போது, அவன் வீடும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே, நேர்மையானவனிடம் சல்லிக்காசு கூட இல்லை, அவன் உண்பதற்கு எதுவுமில்லை, அவன் வீடு காலியாகிக் கிடந்தது. அது அவனது தவறு தான் என்பதால் அது ஒரு பிரச்சனையாய் இருக்கவில்லை. ஆனால் உண்மையான பிரச்சனை என்னவென்றால் அவனது இந்த செயல் மற்ற அனைவரையும் எரிச்சலடையச் செய்தது. ஏனென்றால், அவன் தன்னிடமிருந்த அனைத்தையும் மற்றவர்களை திருடவிட்டு விட்டு தான் மட்டும் யாரிடமும் எதுவும் திருடாமல் இருந்தான். எனவே தினமும் அதிகாலை அந்த நேர்மையானவன் திருடியிருக்க வேண்டிய, யாரோ ஒருவருடைய வீடு கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இதே செயல் சில நாட்கள் தொடர்ந்தபின், தங்கள் வீடு திருடப்படாமல் இருந்தவர்கள் தங்களை மற்றவர்களை விட பணக்காரர்களாக உணர்ந்தனர். எனவே அவர்கள் அதன்பிறகு திருட வேண்டாம் என்று நினைத்தனர். இதை விட மோசம் என்னவென்றால், நேர்மையானவன் வீட்டில் திருட வந்தவர்கள், காலியாய் கிடக்கும் வீட்டையே எப்போதும் கண்டு ஏமாந்தனர். எனவே அவர்கள் ஏழைகளாகினர்.

அதே சமயம், பணக்காரர்களாக ஆனவர்கள் அந்த நேர்மையானவனைப் போலவே, இரவு நேரங்களில் தூரத்தில் இருக்கும் ஆற்றுப்பாலத்திற்குச் சென்று நீர் விழுவதை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் இன்னும் பலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் ஆக, குழப்பம் மேலும் அதிகரித்தது.

இப்பொழுது பணக்காரர்கள், தினமும் இரவு ஆற்றுப்பாலத்திற்குச் சென்றால், தாங்களும் விரைவில் ஏழைகளாகி விடுவோம் என்று உணர்ந்தனர். ”நாம் ஏழைகள் சிலருக்கு பணம் கொடுத்து, நமக்காக சென்று திருடச்சொல்லலாம்” என்று முடிவெடுத்தனர். அவர்கள் ஒப்பந்தங்கள், நிலையான ஊதியம், சதவீதங்கள் என்று செய்து கொண்டனர். பணக்காரர்கள், ஏழைகள் என்று எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் திருடர்கள் தானே, எனவே இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தனர். ஆனால் இயல்பில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டே சென்றனர்.

இனி தாங்கள் திருடத் தேவையே இல்லை அல்லது தங்களுக்காக இன்னொருவரை நியமித்து திருட வைக்கத் தேவையில்லை என்ற அளவுக்கு, சில பணக்காரர்கள் மிக அதிகமான செல்வத்தை வைத்திருக்கும் நிலை வந்தது. ஆனால் அவர்கள் திருடுவதை நிறுத்திவிட்டால், அவர்களிடமிருப்பதை ஏழைகள் திருடத்துவங்கி தாங்கள் ஏழைகளாகி விடுவோம் என்று எண்ணினர். எனவே ஏழையிலும் பரம ஏழையாய் இருக்கும் சிலருக்குப் பணம் கொடுத்து வேலைக்கு நியமித்து, மற்ற ஏழைகளிடமிருந்து தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ளத் துவங்கினர். அதாவது காவல்துறையையும், சிறைச்சாலைகளையும் அமைத்தனர்.

எனவே, நேர்மையான மனிதன் வந்து சில வருடங்களுக்குள்ளாகவே, அந்நாட்டிலுள்ள மக்கள் கொள்ளை அடிப்பது பற்றியோ கொள்ள போவது பற்றியோ பேசிக்கொள்வதே இல்லை, ஆனால் பணக்காரர்களைப் பற்றியும், ஏழைகளைப் பற்றியும் பேசிக் கொண்டனர். ஆனால் மக்கள் அனைவரும் இன்னும் திருடர்களாகத் தான் இருந்தார்கள்.

துவக்கத்திலிருந்த ஒரே நேர்மையான மனிதன், வெகு விரைவிலேயே பசியால் இறந்து போனான்.


******
நன்றி: மலைகள் http://malaigal.com/?p=9478

Wednesday, January 25, 2017

வணக்கம் தோழர் !ஜல்லிக்கட்டுக்கான போராட்டக் களத்தில், இறுதி நாட்களில் இயக்கத்தவர்கள் புகுந்து விட்டார்கள். அவர்களால் தான் கலவரமும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று அதிகாரவர்க்கமும், காவல்துறையும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இயக்கத்தவர்கள் அருகில் உங்கள் பிள்ளைகளை நெருங்க விடாதீர்கள், அவர்கள் உங்கள் குழந்தைகளை மூளைச்சலவை செய்து அப்படியே அள்ளிக்கொண்டு சென்று விடுவார்கள், எனவே போராட்டம் கீராட்டம் என்று பிள்ளைகளை வீதிக்கு அனுப்பிவிடாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை போன்ற தொனியில் மிரட்டவும் செய்கின்றன. அதோடு இனி வரும் காலங்களில் வீதிக்கு வந்து போராட நினைக்கும் சாமான்யர்களுக்கு, என்ன மாதிரியான பரிசு காத்திருக்கும் என்பதனை ஒரு செய்முறை விளக்கமும் செய்து காண்பித்திருக்கின்றன.

காவல்துறை சொல்வது போல் கடைசி நாளில் இயக்கத்தவர்கள் புகவில்லை. தமுக்கத்தில் தினமும் சுற்றிப் பார்த்த வகையில், முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தான் இருந்தார்கள். அவுட்போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரையான சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பல்வேறு இயக்கத்தினரும், பல அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் கூட களத்தில் இருந்தனர். இவர்கள் யாரும் தங்கள் அரசியல் அடையாளத்தை வெளிக்காட்டாமல் “ஜல்லிக்கட்டு”, “முல்லைப்பெரியாறு”, “காவிரி”, “பணமதிப்பிழப்பு” என்று பொதுவான தமிழர் பிரச்சனைகளை முன் வைத்தே போராட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், சிலம்பம், நாட்டுப்புறப்பாட்டு, தப்பாட்டம் என்று கலைநிகழ்ச்சிகள் போன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. வந்திருந்த கூட்டம் மிரண்டு திரும்பிச் செல்கின்ற வகையில் தீவிரமான அரசியல் கோஷங்களின்றி, கேளிக்கையுடன் கூடிய கவனமீர்ப்பு செயல்பாடுகள் தான் அதிக அளவில் நடந்து கொண்டிருந்தன. அதனால் தான் தொடர்ந்து தினமும் பொதுமக்கள் குழந்தை குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆதரவினைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.  மைக் பிடித்து பேசுபவர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, வரம்பு மீறிப் பேசிய பொழுது, கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரே அதனை ஆட்சேபித்து, பொதுவான விஷயங்களை மட்டும் பேசுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

பொதுவாக அமைதியாகவும், சுவாரஸ்யம் குறையாமலும், ஒற்றை மையப்புள்ளியான ஜல்லிக்கட்டினை சுற்றி லேசாக மற்ற பொதுவான பிரச்சனைகளை தொட்டு மட்டுமே போராட்டக்களம் இயங்கிக் கொண்டிருந்தது. சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களே இதனை உணர்ந்து கொள்ளும் போது, இருபத்தி நான்கு மணிநேரமும் மூன்று ஷிப்ட் போட்டு மஃப்டியில் பணியாற்றிக் கொண்டிருந்த உளவுத்துறை நண்பர்களுக்கு, இலக்கை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்த போராட்டத்தின் வீச்சு, அரசியல் சாயம் எதையும் கலக்கவிடாமல் மாணவர்கள் போராட்டத்தினை கொண்டு சென்ற திசை, யார் கட்டுப்பாடும் இல்லாமல் தானாக நடந்து கொண்டிருந்த ஒழுங்கமைவு, மாணவர்களின் சலித்துக் கொள்ளாத உற்சாக மனோதிடம், போராட்டம் மெதுமெதுவாக பொது மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நேர்மறை தாக்கம், அதானால் நாளுக்கு நாள் பெருகிய ஆதரவு எல்லாம் தெரியாமலா இருக்கும்.

இதுவரை நாம் பார்த்த போராட்டங்கள் எல்லாம் இரண்டு வகை தான். ஒன்று நிறுவனமாக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் அடையாள எதிர்ப்பு. சாலை மறியல் என்றால் இன்று காலை ஒன்பது மணிக்கு சாலை மறியல் என்று தலைவர் அறிவித்து விட்டு ஒரு பொது இடத்தில் தொண்டர்களோடு கூடுவார். சரியாக, அங்கேயே சென்று காவல்துறை அவர்களை சாலை மறியல் செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறும். இவர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனங்களில் ஏறிக் கொள்வர். காவல்துறை அவர்கள் அனைவரையும் கைது செய்ததாய் அறிவித்து, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்து, மதிய உணவு வாங்கிக் கொடுத்து, மாலையில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடும்.  இன்னொரு வகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சாமனியர் பேசத் துணியாத தீவிரமான கோரிக்கைகள். இதற்காக போராடும் சிறு எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் நாள் முழுதும், தொண்டைத் தண்ணீர் வற்ற சாலையோரங்களில் கத்திக் கொண்டிருப்பார்கள். பொதுமக்கள் அவர்களை சட்டையே செய்ய மாட்டார்கள். காவல்துறை வந்து அவர்களை கதறக் கதற அடித்து இழுத்துச் செல்லும். தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல மக்கள் அதனை வேடிக்கை பார்ப்பர்கள்.

ஜல்லிக்கட்டை முன் வைத்து நடந்த இந்தப் போராட்டம், இந்த இரண்டு வகையிலும் மாறுபட்டு இருந்தது. இதில் முதன்மையானது மாணவர்களின் தன்னெழுச்சி. எந்த உள் ஆதாயமும் இல்லாமல், நேர்மையான நோக்கத்தோடு தமிழர் பண்பாடான “ஜல்லிக்கட்டை” நடத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை.  இதனை முன்னெடுத்த மாணவர்கள் எந்தவொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளோ, வேறு இயக்கங்களோ, நடிகர்களோ, தனி நபர் பிரபலங்களோ தங்களின் போராட்டத்தை திசை திருப்பி விட்டுவிடாதபடியும், அபகரித்துக் கொள்ள முடியாதபடியும், நீர்த்துப் போகச் செய்ய முடியாதபடியும், களங்கம் ஏற்படுத்திவிடாதபடியும் உணமையாகப் போராடினர். அதே சமயம் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக போக்குவரத்தினை சரிசெய்தல், போராட்டக் களத்தை தாங்களே சுத்தம் செய்தல், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் என்று போராட்டம் குறித்த நேர்மறைக் கருத்தினை பொதுத்தளத்தில் பரவலாக்கினர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவையாவும் திட்டமிடப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நல்ல பிம்பம் ஏற்படுத்த வேண்டும் என்று விளம்பர நிறுவனங்களை நியமித்து அரசியல் தலைவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இமேஜ் பூஸ்டிங் போன்று அல்லாமல், தன்னியல்பாய் ஒளிவிட்ட நற்பண்புகள்.

இன்னொரு மிக முக்கியமான அம்சம் சமூக ஊடங்கள். இது நாள் வரை கண்டதையும் கழியதையும் தாங்கி வந்த வாட்ஸப் ஃபார்வேர்டுகள் தான் பேர் பாதிக்கும் அதிகம்.  ஆனால் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பரவலாக்க இந்த சமூக ஊடகங்கள் தான் துணை நின்றன. போராட்டத்திற்கு இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்ட இரவு, ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை கலைப்பதாய் நினைத்துக் கொண்டு அந்தப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்த, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பேர்களும் தங்கள் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கையை உயர்த்திய காட்சி, அதனைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் மயிர்க்கூச்சரியும் தருணமாகவே அமைந்தது. அது போக தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம், பெருகும் ஆதரவு ஆகியவை வழக்கமான அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைக் காட்டிலும் மிக வேகமாகவும், உள்ளது உள்ளபடியும் மக்களின் உள்ளங்கைகளுக்குள் சென்று சேர்த்தன சமூக ஊடகங்கள். இப்போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் மூலமும், வாய்வார்த்தைகள் மூலமும் கிடைக்கப்பெற்ற நல்ல பிம்பத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாராத தன்னார்வ நிறுவனங்களும், அமைப்பு சாராத பொதுமக்களும், அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை தங்குதடையின்றி வழங்கத் துவங்கினர்.

எல்லாம் சரி, இவ்வளவு சிறப்பாக நடந்தேறிய, நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று நிகழ்வாக பதிவாக வேண்டிய இந்தப் போராட்டம் ஏன் வெற்றி முழக்கங்களோடும் கொண்டாட்டங்களோடும் நிறைவு பெற முடியவில்லை. அரசும் காவல்துறையும் சொல்வது போல கலகக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஏன் வெற்றிக் கோட்டை நெருங்கும் நாள் வரை காத்திருந்து, சட்டமியற்றப் போகும் இறுதி நாள் அதிகாலையில் வன்முறையைத் துவங்க வேண்டும்.  அத்தகைய தேவையோ கட்டாயமோ இல்லாத பட்சத்தில் அதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்று தான் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், காவல்துறையினர் மூலமாக அதிகாரவர்க்கத்தினரே, இந்த வன்முறை நாடகத்தை துவங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்க மனமில்லாதவர்கள் சொல்லும் காரணம், அரசு மாணவர்களை ஒடுக்க நினைத்தால் முதல் நாளிலேயே கூட்டத்தைக் கலைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே. ஏன் இறுதி நாள் வரை காத்திருந்து, அதுவும் ஒருபக்கம் மாணவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்று சட்டம் இயற்றிவிட்டு, இன்னொரு பக்கம் தடியடியை நடத்த வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடனேயே போராட்டத்தை முடித்திருந்தால் அரசின் மீதான நன்மதிப்பு கூடும் தானே.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அல்லது ஆளக் கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், அது எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் வீதிக்கு இறங்கிப் போராடும் அதிருப்தியாளர்களை முளையிலேயே கிள்ளி எறியவே எண்ணுவார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தைப் பொறுத்த வரை, தமிழகத்தில் நடக்கின்ற அசாதாரணமான அரசியல் நிகழ்வுகள், அவற்றின் மீது ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் இருக்கும் வெளிக்காட்ட முடியாத வெறுப்பு பூடகமாக அரசுக்கும் தெரிந்தே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உணர்வெழுச்சியில் திரண்டிருந்த மாணவர்களின் மீது கைவைக்க நேர்திருந்தால், அனைத்து தரப்பு மக்களிடமும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கும். மாணவர்கள் தானே, இரண்டு நாட்கள் கத்தி விட்டு கலைந்து சென்றுவிடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். விளைவு, கோரிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்குச் சென்றுவிட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நகர்வு எப்பொழுதும் தஙகளிடமிருந்து தான் வரவேண்டும் என்பது அதிகாரவர்க்கத்திற்குத் தெரியாதா என்ன? அதனால் தான் ஒரு வாரமாய் சூடிக் கொண்டிருந்த முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, தன் இயல்பான கோர முகத்தைக் காட்டி விட்டது. போராட்டக்களத்தில் இரவு பகலாய் இருந்துவிட்டு, இப்பொழுது மயிரிழையில் தடியடியிலிருந்து தப்பித்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கும் தான் சொல்ல வேண்டிய செய்தியை கச்சிதமாக ஒளிபரப்பிவிட்டது, அதிகாரவர்க்கம்.

தனது இந்த விளையாட்டுக்கு யாரைப் பணயமாக வைப்பது என்று திரைக்கதையை எழுதியவர்களுக்குத் தெரியாதா என்ன? யாருடைய பெயரைச் சொன்னால் பொதுமக்கள் சட்டை செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சொல்வார்களோ, யாரைக் கதறக் கதற அடித்து இழுத்துச் சென்றாலும், பொதுமக்கள் தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல வேடிக்கை பார்ப்பார்களோ, அவர்களையே பணயமாக வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அதிகாரம் நேரடியாகவே தன் பிரஜைகளுக்கு அறிவுரை வழங்குகிறது, “உங்களைத் ’தோழர்’ என்று அழைப்பவர்களின் தொடர்பினை துண்டியுங்கள் !”.


******

Wednesday, January 18, 2017

எங்கே என் தலைவன் ?


(Image Courtesy: From Internet)

இளைஞர்களின் தற்பொழுதைய போராட்டம், அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயலாற்றும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது. “அரசியல் தேவையில்லை” என்று இளைஞர்கள் சொல்லக்கூடாது, அமைப்பு ரீதியான அரசியல் தலைமை இல்லாமல் போராட்டங்கள் ஒன்றிரண்டு நாட்களில் நீர்த்து விடும் என்கிறார்கள். ரோட்டுக்கு இறங்கி வந்து குரல் கொடுப்பதைவிட சிறந்த அரசியல் அனுபவத்தை எந்த புத்தகம் கொடுத்துவிடும் என்று தெரியவில்லை. இந்த இளைஞர்கள், இதன் மூலம் ஏற்கனவே இன்றைக்குத் தேவையான அரசியலைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். இவர்கள் புறக்கணிப்பது பழம் தின்று கொட்டையையும் தின்று செரித்த அரசியல்வாதிகளைத் தானே ஒழிய அரசியலை அல்ல.

கருத்து சொல்பவர்களுக்கு எப்பொழுது இருக்கும் காரணம், இதை விட உயிர் போகும் விஷயங்களுக்கெல்லாம் கூடாத கூட்டம், தேவையில்லாத சிறு விஷயங்களுக்காக கூடுகிறது, இதன் மூலம் அத்யாவசியத் தேவைகளும், குறைபாடுகளும் மறக்கடிக்கப்படுகின்றன. கொஞ்சம் உற்று கவனித்தால், இப்படி சொல்கின்றவர்கள் உயிர் போகின்ற ஒரு விஷயத்திற்காகப் போராடும் போதும் அதை மடைமாற்ற கச்சிதமான இன்னொரு மாற்று வழியில் கையைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

இன்னொரு குற்றச்சாட்டு, இது கும்பல் சார்ந்த உளவியல், சில மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததும், என்ன ஏது என்று கூடத் தெரியாமல், கொண்டாட்ட மனநிலையில் கும்பல் சேர்ந்து கூச்சல் போடுகிறார்க்ள், இவர்களுக்கு சித்தாந்த ரீதியான பிடிப்பு இல்லை என்ற வாதம். சித்தாந்த ரீதியாய் அலசி ஆராய்பவர்கள் எல்லாம் வீட்டுக்குள் மல்லாக்கப் படுத்துக் கொண்டு கருத்து முத்துக்களை மட்டும் தான் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உணர்வெழுச்சியில் வீதிக்கு வருபவன், கொண்டாட்ட மனிநிலையில் வந்தாலும் கூட களத்தில் அவன் பார்த்து, உணர்ந்து, கற்றுக் கொள்ளும் அரசியல் அவனை பின்னாளில் செதுக்கும். இந்த பெருங்கூட்டத்தில் வெறும் ஒரு சதவீதம் பேருக்குள் போராட்ட குணத்தின் தீ கனன்று கொண்டிருந்தாலும் போதும், அவர்கள் மிகச் சிறந்த தலைவர்களாக உருவாகி விடுவார்கள்.

ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்று சாலைக்கு வந்து போராடும் இளைஞன் அப்படியே இருந்துவிடுவான் என்று சொல்வதற்கில்லை. அவன் தீவிர அரசியலின் படிநிலையில் முன்னேறும் போது, ஏற்கனவே பெருநிறுவனங்களைப் போல செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு ரீதியான கட்சிகளில் ஒன்றில் தான் தன்னை இணைத்துப் பணியாற்ற வேண்டியிருக்கும். அல்லது தனித்தன்மையோடு நின்றால், அசுரத் தனமாய் மக்களை ஆக்கிரமித்து இருக்கும் பெருங்கட்சிகளின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போக வேண்டி இருக்கும். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, ஒரு கட்சியில் சேரும் ஒருவன், தன் சுயசிந்தனையை இழந்து அல்லது ஒதுக்கிவைத்து விட்டு,  தலைவரின் கட்டளைக்கேற்ப செயலாற்றுவது, அப்படியே பதவியை நோக்கி முன்னேறும் பயணம் என்று இயல்பான போராட்ட குணத்தை இழந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போகிறான். சென்ற தலைமுறையில் அரசியலுக்குள் நுழைந்த இளைஞர்கள் பலரின் நிலைமை இதுவாகத் தான் இருக்கும்.  

இன்றைய இளைஞர்கள் தொன்னூறுகளுக்குப் பின்னான இந்தியாவை மட்டுமே நேரடி அனுபவத்தில் பார்த்தவர்கள். உலகமயமாக்கம், தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம் இவற்றை எல்லாம் இவர்கள் மாற்றமாய் உணர்ந்தவர்கள் அல்ல, அந்த சூழ்நிலையிலேயே தான் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களுக்கு நாடு முழுக்க இருக்கும் அமைப்பு ரீதியான அரசியல் கட்சிகள் அனைத்தின் மீதும் அதிருப்தியும், அவநம்பிக்கையும் இருக்கிறது. எந்தவொரு கட்சியின் பெயரை முன்மொழிந்தாலும், இந்த இளைஞர்களின் கண்முன்னால் அந்தக் கட்சியின் கோரமுகமே காட்சியாய் விரிகிறது. இவர்களிடம் நாங்கள் 1965ல் என்ன செய்தோம் தெரியுமா, 1947ல் என்ன செய்தோம் தெரியுமா என்ற பழைய கதைகள் எடுபடுவதில்லை. இன்றைக்கு உங்கள் முகம் என்ன, உங்கள் செயல்பாடு என்ன என்ற அளவில் தான் பார்ப்பார்கள். பழைய தேய்வழக்கு நாடக பாணி வசனங்கள் இவர்களுக்கானதல்ல. இது மீம்களின் காலம், சுருங்கச் சொல்லி புரிய வைக்க வேண்டும். பழையவர்கள் இளைஞர்களின் முகமூடி அணிந்து வந்தாலும், அவர்களால் இவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். இவர்களுக்கான தலைவன் இவர்களுக்குள் இருந்து தான் வர வேண்டும். அவ்வாறு முளைவிடும் இளம்தலைவர்கள், சாதி அரசியல், மத அரசியல், கமிஷன் அரசியல், ஊழல் அரசியல் போன்ற கழிசடைகளுக்குள் சிக்காமல் இருக்க வேண்டும். தடைகளை மீறி நேரான பாதையில் வளரும் இளைஞர்கள், பொதுமக்களின் பார்வைக்கு வரும் போது, அவர்களும் அந்த இளம் தலைவர்களை தோள் மீது வைத்துத் தூக்கிவிடத் தயாராகவே இருப்பார்கள். எங்கே இருக்கிறான் அவ்வாறான தலைவன்?

******