Saturday, January 28, 2017

நோயர் ஊர்தி ஓட்டுநன்

காலை பணிக்கு வந்து, உடைமாற்றி, வாகனத்தை உயிர்ப்பித்து மீண்டும் மற்றொரு நாளுக்கான ஜீவமரண விளையாட்டுக்கு ஆயத்தமானபடி காத்திருப்பதில் ஆரம்பிக்கிறது அன்றைய நாளுக்கான ஓட்டம். அழைப்பு வந்ததும், இடத்தையும் வழித்தடத்தையும் குறித்து வைத்துக் கொண்டு, உயிரையும் உடலையும் சேர்த்தள்ளிக் கொண்டு வரும் போராட்டம் துவங்கி விடுகிறது. தாமதிக்கும் ஒவ்வொரும் நொடியும் பாசக்கயிற்றின் நீளம் அதிரிகத்துக் கொண்டே வருகிறதென்ற உணர்வு இன்னும் பதற்றத்தைக் கொடுத்து ஆக்ஸிலேட்டரை அழுத்தச் சொல்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த ஊர்தியின் எச்சரிக்கையொலி காதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது போலவே தோன்றினாலும் ஒவ்வொரு முறை வாகனத்தை இயக்கத் துவங்கும் போதும் பணியின் முதல் நாளுக்குண்டான படபடப்பும் பிரார்த்தனைகளும் அனிச்சையாக பற்றிக் கொள்கிறது. எப்போதும் சூழ்ந்திருக்கும் நெருக்கடி நிலையில் இருதயம் பன்மடங்கு வேகத்தில் துடிப்பதை நன்றாக உணர முடியும்.

புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். வாகனம் வந்து ஏறியதும் தன் மடியில் வைத்து கைகள் நடுங்கியபடி அவள் தலையைத் தாங்கிக் கொண்டு வரும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண். அவளது கண் காது மூக்கு வாய் என்று நீக்கமற வழிந்து கொண்டிருக்கிறது உதிரம்.

பள்ளிக்குச் செல்வதாய் சொல்லிவிட்டு நகரத்தைத் தாண்டியிருக்கும் குன்றிற்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்தும் பள்ளியிலிருந்தும் சம்பந்தமில்லாத மற்றொரு திசையில் தொலைவில் இருக்கிறது குன்று.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே குன்றின் பாதி உயரத்திற்கு ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சையாக அங்கே வரும் சில இளைஞர்கள் 108 ஐ அழைக்கிறார்கள். முதலுதவி செய்து வாகனத்தின் ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்து செல்ல, சுயநினைவின்றிக் கிடக்கின்றான் சிறுவன். தலையணை முழுக்க இரத்தம் பரவிக் கொண்டே வருகிறது.

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும் இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் தவறான பாதையில் வந்த நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேராய் மோத, இரண்டு பேரும் மொத்தமாய் உருக்குலைந்து கிடக்கின்றனர். அக்கம் பக்கத்திலிருந்து ஓடி வந்தவர்கள் ஆம்புலன்சை அழைக்கின்றனர். இருவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு விரையும் போது, இவர்கள் வரவிற்காக காத்திருக்கும் பெண் வீட்டார் தொடர்ந்து செல்லில் அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். இரத்தப்பிசுபிசுப்போடு செல் பாக்கெட்டில் அடிக்க, அவர்களின் பல்ஸ் இறங்கிக் கொண்டே இருக்கிறது.

மில்லில் ஆறு மணி ஷிப்ட் முடிந்து, வீடு வந்தவர் கை கால்களை கழுவி விட்டு சாப்பிட உட்காருகிறார். லேசாக மூச்சுக் குத்து போல வலியெடுக்கவே பிறகு சாப்பிட்டுக் கொள்வதாய் சொல்லி விட்டு தெருமுனையில் இருக்கும் பெட்டிக் கடைக்கு நடந்து செல்கிறார். சுமார் ஐந்து நிமிடம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர், அங்கேயே மேசையிலிருந்து மயங்கிச் சரிகிறார். அருகிலிருப்பவர்கள் முகத்தில் சோடா அடித்துப் பார்த்தும் நினைவு திரும்பாததால், வீட்டிற்குத் தகவல் சொல்லி விட்டு, 108ஐ அழைக்கிறார்கள். வாகனம் விரைந்து வந்து அவசர சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு செல்லும் போதே, தொண்டையிலிருந்து வாய் வழியாக ஒரு மாதிரி இழுத்து மூச்சுவிட முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறார்.

பதைபதைப்பான தருணங்களினூடாகவே நிதானத்தையும் இழக்காமல், வேகத்தையும் மட்டுப்படுத்தாமல் துரித கதியில் விலைமதிக்கமுடியாத் மணித்துளிகளை மிச்சப்படுத்தி மருத்துவமனைக்குள் கொண்டுவருவதற்குள் ஓட்டுநனுடன் சேந்து நோயர் ஊர்தியும் பதறியடித்து விரைந்து செல்லும். இப்படி, எத்தனையோ தருணங்கள், எத்தனையோ உயிர்கள். சூழ்நிலைகளும், மனிதர்களும் மாறுபட்டாலும் ஒரு வாழ்வு தன்னைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனிக்கும் உயிர்ப்போராட்டதின் வலி எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. வாகனம் ரீங்காரமிட்டு அலறிச்செல்லும் பாதி வழியில் தலை திருப்பி உள் சாளரம் வழி காண நேரும் கணநேர காட்சியில் பரிச்சயமில்லாத ஓர் உயிரின் ஊசலாட்டம் ஒழுங்குமுறையின்றி வாகனம் முழுமைக்கும் அலைந்து ஆடிக்கொண்டிருக்கும். அங்கே கவிந்திருக்கும் ஓலக்குரல்களின் அதிர்வொலி சுற்று வெளியெங்கும் நிரம்பியிருக்கும். நோயர் ஊர்திக்கென தனி விலக்குரிமை வழக்கப்பட்டிருந்தும், பயிற்சியின் போதெல்லாம் மனனம் செய்த அடிப்படை விதிகளை ஒப்புவித்த பின்னரும் கூட சாலைகள் அகன்று வழிவிட மறுப்பவையே அன்றாடம் நிகழும். நகரும் வாகனவோட்டத்தை செங்குத்தாய் பிளந்து சமிக்ஞைகளைப் புறந்தள்ளி விரைந்து செல்வது பிழைத்தெஞ்சி நிற்பதற்கான கடைசி கட்ட முயற்சி. ஒருவழியாய், மருத்துவமனை அடைந்து ஊர்தியின் பின்கதவைத் திறந்து உயிரையும் உடலையும் இணைத்து இறுகக் கட்டி ஸ்ரெட்சருக்கு தாரை வார்க்கும் தருணங்களில் பள்ளிப்பருவத்தின் தேர்வுக்கு முந்தைய நிமிடங்கள் நிழலாடிச் செல்வதை இத்தனை வருடங்களாகியும் தவிர்க்க முடியவில்லை.

வழமையான பரபரப்புகள் நிறைந்த மற்றுமொரு பணிநாள் நிறைவு பெறுகிறது. வாகனத்தை ஷெட்டில் நிறுத்துமுன், அந்நாள் முழுக்க உள்ளே வாகனத்தில் சேர்ந்திருக்கும் பிணியையும், வலியையும், உதிரத்தையும் கழுவித் துடைத்து தூர எறிந்து விட்டு அடுத்த நாளிற்கான புதிய ஓட்டத்திற்கான ஆயத்தங்களை செய்து விட்டு வெளியேற வேண்டும். ஒத்திசைவில் இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநனும் ஊர்தியும் அந்த இரவுக்காய் பிரியும் தருணத்தில் தான் இயல்பு நிலை திரும்பி சோர்வும், தனிமையும் ஆட்கொள்ளும். பணியறைக்குச் சென்று வெள்ளுடுப்பைக் கலைந்து விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை முடுக்கி வீட்டுக்கு விரையத் துவங்கும் வேளை, கூடடையச் செல்ல வேண்டிய தூரம் மலைப்பை அதிகரிக்கும். தூக்கத்திற்காய் இரைஞ்சும் கண்களுக்கு ஒளிநிரப்பும் ஆற்றல் சாலையோர நடைபாதைக் கடையின் ஆவி பறக்கும் தேநீரில் ஒளிந்து கிடக்கும். அவ்வொளியை லாவகமாய் மீட்டெடுத்து, நடுநிசியில் ஆளரவற்ற சாலைகளில் எதிர் காற்றினூடே வீடு சேர மேற்கொள்ளும் பதினாறு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப் பயணம் அன்றைய சுமைகள் ஒவ்வொன்றையும் மெதுவாய் கட்டவிழ்த்து காற்றில் பறக்கச் செய்கிறது. இரவில் வீடு வந்து சேரும் போது மனமானது மௌனமான, பரிசுத்தமான, சலனமற்றதாய் மாறியிருக்கிறது. எதிர்பாராமையை எதிர்நோக்கியிருக்கும் மற்றுமொரு அதிகாலை விடியும் வரை செத்துக்கிடக்கலாம் போலத் தோன்றுகிறது.


***
நன்றி: மலைகள் http://malaigal.com/?p=9699

No comments:

Post a Comment