Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, April 24, 2026

ஏன் தொடர வேண்டும் திமுக அரசு?

இந்தத் தேர்தலில் என் வாக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே. அதற்கான காரணங்கள்:

1. ஒன்றிய அரசின் அசுரப் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காத்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேற்றிச் செல்ல திமுக அரசு தொடர வேண்டும்.

2. கல்விக்கும், மாணவர்கள் நலனுக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் (நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், காலைச் சிற்றுண்டி)என  இந்த திமுக அரசு செய்திருப்பவை ஏராளம். அவை யாவும் தங்குதடையின்றி தொடர திமுக அரசு தொடர வேண்டும்.

3. மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை - இவை பெண்களுக்கு சிறகுகளையும், பொருளாதார விடுதலையையும்  கொடுத்த புரட்சிகரத் திட்டங்கள். 

4. திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை போன்று பக்தி சார்ந்த விஷயங்களில் பாஜக மதக் கலவரங்கள் செய்ய முனைந்த போது, அதனை தீரமான ஒற்றைக் குரலில் ஒடுக்கியது, தமிழ்நாட்டில் மத அரசியலுக்கு இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாடு.

5. திமுக 2021ல் ஆட்சிக்கு வந்த போது, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. நிதி கிடைக்காது, கைது அச்சுறுத்தல்கள் இருக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் குறிவைக்கப்படுவார்கள்/விலைபேசப் படுவார்கள் என்று பல பிரச்ச்னைகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே எல்லாப் பிரச்சனைகளும் வந்தன. ஆனால் திமுக இவை எதற்கும் அஞ்சாமல் மதவாத/சனாதன/வலதுசாரி ஃபாசிச எதிர்ப்பு அரசியலை இன்னும் தீவிரமாக முன்னெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக வை வைத்துப் பார்த்தாலே போதும், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு திமுக ஏன் தேவை என்று புரிந்துவிடும்.

 6. சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில நலன் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் திமுக வே ஒரே தேர்வு.

7. தொழில் வளர்ச்சி, பெருநிறுவன முதலீடுகள் ஆகியவற்றை ஈர்க்க தொலைநோக்குடன் கூடிய  நிலையான, தன்னிச்சையான முடிவுகள் எடுக்கக் கூடிய அரசு வேண்டும். 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநில நலன்கள் அனைத்தும் அடகுவைக்கப் பட்டிருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது.

8. "பாஜக உள்ளே புகுந்துவிடும்" என்பது என்று கேலிச் சொல் ஆகிவிட்டது. அதன் உண்மையான பதற்றத்தை தமிழக மக்களை அண்ட விடாமல் திமுக அரசு இந்த ஐந்து வருடங்களில் உண்மையில் அரணாகக் காத்து இருக்கிறது. இந்தக் கோட்டையில் விரிசல் விட வழிவகுக்கக் கூடாது.

9. கலை, இலக்கியம், வாசிப்பு தொடர்பான அறிவுசார் நிகழ்வுகளுக்கு ஓர் அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே ஆட்சியின் செழிப்புக்கான அளவுகோல். அவ்வகையில் பல்நோக்கு நூலகங்கள், மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகள், கலை இலக்கியத் திருவிழாக்கள், நூலகங்களுக்கான வெளிப்படையான நூல் கொள்முதல்கள் என்று நிறைய செய்திருக்கிறது, இன்னும் செய்யும்.

10. திராவிட மாடல் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. திராவிடத்தின் பயனாளியாக, நம் அடுத்த தலைமுறைகளுக்கும் அத்தகைய தொடர் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக எனது தேர்வு திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!

சரி 2021-2026 குறைகளே இல்லாத பொற்கால ஆட்சியா என்றால், குறைகளும் இருந்தன. அவை திமுக அரசின் தோல்வி என்ற பொய்ப் பரப்புரைகளைப் புறந்தள்ளி இந்தக் காலத்தின் பெருகி வரும் ஆபத்துகள் என்ற வகையில் வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதிக கவனம் செலுத்தத் தேவையான சில விஷயங்களும் உள்ளன.

1. அதிகாரிகளின் ஆட்சியாக இல்லாமல், உண்மையான பொருளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியாக இருப்பது.

2. போதைக் கலாச்சாரம் - வயது வித்தியாசமின்றி காலத்தின் சீரழிவாகப் பெருகிக் கொண்டிருக்கும் போதை அதன் தொடர்ச்சியான குற்றச் செயல்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் பட வேண்டும்.

3. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு - இன்னும் தீவிரமாக எல்லா மட்டங்களிலும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

4. குடிநோய் மறுவாழ்வு - சமுதாயத்தின் பெரும்பகுதியை அழித்துக் கொண்டிருக்கும் அரசு மதுக்கடைகள் முறைப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

இவை அடுத்து வரும் திராவிட மாடல் 2.0 தீவிரமாகச் செயல்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையுடன்...

ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!

Thursday, March 26, 2026

தன்நெஞ்சறிவது! - வைரமுத்து - ஞானபீடம் தொடர்பான கட்டுரை

 

தன்நெஞ்சறிவது!

பாலகுமார் விஜயராமன்

---

கவிஞர் வைரமுத்துவுக்கு 2025ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் இன்னும் சர்ச்சைகளும், விவாதங்களும் முடிந்தபாடில்லை. தமிழ்ச் சூழலில் வழக்கமாக எந்த விருது அறிவிப்புக்குப் பின்னும் அத்தேர்வு குறித்த போதாமைகளும், அவநம்பிக்கைகளும் எழுவது இயல்புதான் ஆனால் இம்முறை எதிர்ப்புகள் இவ்வளவு காத்திரமாக வெளிவருவதற்கு விருதாளர் வைரமுத்து என்பதே முக்கியக் காரணம். முற்போக்காளர்கள், இடதுசாரிகள், நடுநிலையாளர்கள், அடிப்படைவாதிகள், வலதுசாரிகள், சங்கிகள், தீவிர இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டோரும் வைரமுத்துவின் தேர்வை விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் வைரமுத்து அவர்களின் முந்தைய வரலாறு அப்படி இருக்கிறது.  ஞானபீடம் போன்ற இந்திய அளவில் மிக உயரிய இலக்கிய அந்தஸ்து உள்ள விருதுக்கு வைரமுத்து தகதியானவர் இல்லை என்று சொல்வதற்கு மூன்று வகையான காரணங்கள் காணக் கிடைக்கின்றன.

1. வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் ஞானபீட விருதுக்கான தரத்தில் இல்லை. அவர் பெரும்பாலும் கூட்டு உழைப்பைக் கோரும் திரையிசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லுநர். அவரது தனிப்பட்ட கவிதைத் தொகுப்புகளும், புதினங்களும் மிகவும் மேம்போக்கானவை. அவற்றிற்கு இலக்கிய மதிப்பு இல்லை.

2. வைரமுத்து நேர்மையான முறையில் இவ்விருதைப் பெற்றிருக்க வாய்ப்பில்லை. அவர் விருதுக் குழுவினர்கள், பரிந்துரையாளர்கள், அதிகார மையத்திலிருப்போர், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, நீண்ட கால காய்நகர்த்தலின் தொடர்ச்சியாக இவ்விருதைக் கைக்கொண்டிருக்கிறார்.

3. வைரமுத்து #metoo தொடர்பாக பெண்கள் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர். தார்மீக அடிப்படையில் அவருக்கு இவ்விருதை வழங்கக் கூடாது.

முதல் விஷயத்திற்கான விளக்கம் நேரடியானது. ஞானபீட விருது என்பது தீவிர இலக்கிய எழுத்துக்கான விருது மட்டுமா? சாமானியர்களின் உணர்வுகளைத் தீண்டும் திரையிசை போன்ற மற்ற கலை வடிவங்களுக்கு அதில் இடமில்லையா? இவற்றிற்கான பதில்: ஞானபீடம் பல்துறை வகைமைகளைச் சேர்ந்த கலை வடிவங்களை உள்ளடக்கிய தேர்வாகவே இதுவரை இருந்திருக்கிறது. 2023ம் ஆண்டு உருது/இந்தி கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போதும் சர்ச்சைகள் வெடித்தன. குல்சாருக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருதை அங்கீகரிக்காத தீவிர இலக்கியவாதிகள் ஒருபுறமென்றால், குல்சாரோடு சேர்ந்து அவ்வருடம் ஞானபீட விருது பகிர்ந்தளிக்கப்பட்ட இன்னொரு நபர் குறித்தும் சர்ச்சை எழுந்தது. 2023ம் ஆண்டு கவிஞர் குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர்/ஆன்மீக வழிகாட்டி/ பக்தி இலக்கிய குரு ராம்பத்ராச்சாரியா ஆகிய இருவருக்கு ஞானபீட விருது சேர்ந்தளிக்கப்படது. குல்சார் போன்ற திரைப்பட பாடலாசிரியருக்கு ஞானபீட விருதை அளிப்பதா என்றும், குல்சார் போன்ற தேர்ந்த கவிஞருக்கு ராம்பத்ராச்சாரியா போன்ற ஒரு மதத் தலைவரை இணை வைத்து விருது கொடுத்து அவரை அவமானப்படுத்துவதா என்றும், ஞானபீட விருதை ராமர் கோயில் கட்டுவதற்காகத் தொடர் பிரச்சாரம் செய்த ஒரு மதகுருவிற்கு அளிப்பதா என்றும் பல்முனைகளில் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல, 1998ம் ஆண்டு புகழ்பெற்ற கன்னட நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. கன்னட இலக்கிய அடையாளம் என்பது தீவிர எழுத்து வடிவம் மட்டுமல்ல அது நாடக அரங்கிலும் சமானமான உயிர்ப்புடன் இயங்கிறது என்பதை அவ்வருட விருது அறிவிப்பு உணர்த்தியது. இன்னும் பின்னே போனால், 1972ல் தேசியவாதக் கவிஞரான ராம்தாரி சிங் தினகருக்கு (இந்தி) வழங்கப்பட்ட விருது முக்கியமாக அவர் ஆற்றிய நாட்டுப்பற்று மிக்க அரசியல் உரைகளுக்கானதே. இலக்கியம் என்பது தனிப்பட்ட வாசிப்பு இன்பம் மட்டுமல்ல, அது வாய்மொழி மரபும்கூட என்ற செய்தியை அறிவிப்பதாக அமைந்தது. 1982ல் விருது பெற்ற கவிஞர், ஓவியர் மகாதேவி வர்மா (இந்தி) அவரது கவிதைகளைப் போலவே சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண்கள் உரிமை மற்றும் கல்விக்காக அவர் கொடுத்த குரலுக்காகவும் போற்றப்பட்டவர். 1996ல் விருது வென்ற மகஸ்வேதா தேவி (வங்கம்) தீரமிக்க மனித உரிமைப் போராளி மற்றும் பத்திரிகையாளர். பொதுவெளியில் அவரது இலக்கியத்தைக் காட்டிலும் பழங்குடியினர் நல்வாழ்வு மற்றும் கொத்தடிமைத் தொழிலுக்கெதிரான நேரடிச் சமூகச் செயல்பாடு வீரியமிக்கவை. இப்படி பன்முக இலக்கிய, பண்பாட்டு வடிவங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது ஞானபீட விருது. ஆயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களை, கவிதைகளை, சில புதினங்களை எழுதிய வைரமுத்துவும் செழுமையான மொழிப்பங்காற்றியிருக்கிறார். பல முறை தன் திரையிசைப் பாடல்கள்களுக்காக தேசிய அளவிலான அங்கீகாரமும், தனது “கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருதும் பெற்றிருக்கிறார். அவர் சாகித்ய அகாடெமி விருது பெறும் போதும் சில சர்ச்சைகளை எதிர்கொண்டார். எனினும் இத்தகைய அவரது சாதனைகள், அவருக்கான ஞானபீட விருதுத் தேர்வுக்கு பலமான அடித்தளம் அமைக்கின்றன.

இரண்டாவது விஷயம், வைரமுத்து நேர்மையற்ற முறையில் மறைமுக அழுத்தங்கள் மற்றும் சிபாரிசுகள் மூலமே ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படும் யூகம். இதனை வைரமுத்துவின் மீதான வெற்றுக் காழ்ப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கிவிடவும் முடியாது. தமிழின் தன்னிகற்ற படைப்பாளி எனத் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் வைரமுத்து, எப்போதும் ஆட்சியாளர்களின் நன்மதிப்புப் பட்டியலில் இடம் பெறத் தவறியதே இல்லை. திராவிட இயக்கத் தலைவர்களோடு நட்பு பாராட்டி அவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் அதே வேளையில் ஒன்றிய அரசுப் பிரதிநிதிகளுடனும் அமைச்சர்களுடனும் இணக்கத்தை வளர்க்கத் தவறியதும் இல்லை. ஒன்றிய நிதியமைச்சரை “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல இருக்கிறார் என்று பாராட்டியது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹரித்வாரில் திருவள்ளுவருக்கு சி்லை நிறுவ முன்னெடுக்கையில் வலியச் சென்று வாழ்த்தியது, முக்கியமாக, தற்போதைய பிரதம மந்திரியின் இந்தி மொழி கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டு அவரின் “கவிப்புலமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியது இவையெல்லாம் பொதுப்பார்வையாளர்களுக்கு அவர் மீது அசூயையை ஏற்படுத்தின. அவரது இத்தகைய செயல்கள் மூலம் அவர் எத்தகைய நேரடி, மறைமுகப் பலன்கள் பெற்றிருப்பார் என்று தங்கள் யூகங்களை வளர்க்க அவரது நடவடிக்கைகள் துணைபோயின. ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளுக்குத் தகுதியுடைய பலர் தேர்வுப் பரிசீலனையில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் ஆளுமை செலுத்துபவர்கள், முக்கிய படைப்பாளுமைகள் போன்றோரின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் சூழ்நிலையில் வைரமுத்து அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பார் என்ற சந்தேகத்தை, அவருக்கு ஞானபீட விருது அறிவித்திருக்கும் இவ்வேளையில் தங்கள் எதிர்ப்புக்கான காரணமாக முன்வைக்கின்றனர். இச்சங்கிலியில் முக்கியமான இன்னொரு கண்ணி, தமிழில் இதற்கு முன் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறுதிக் காலத்தில் இருக்கும் போது, வைரமுத்து வலியச் சென்று அவரிடம் தனது சிறுகதைகள் குறித்து  ஜெயகாந்தன் எழுதியது போல ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி அவரது கையெழுத்தைப் பெற்றார் என்று ஜெயகாந்தன் அவர்களின் மகள் முன்வைத்த குற்றச்சாட்டு. அதற்கு வைரமுத்து தரப்பில் இருந்து ஜெயகாந்தனின் ஒப்புதலின் பெயரிலேயே அந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டது என்று மறுப்பு வந்தாலும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அப்படியே தான் இருக்கின்றன.

 வெளியில் இருந்து பார்ப்பதற்கு இவை நேர்மையற்ற செயல்களாகத் தோன்றலாம். ஆனால் தகுதியுடைய தனது படைப்புகள் உயரிய இடங்களுக்குச் சென்று சேரத் தானே அதற்கான சந்தைப்படுத்துதலையும் செய்வதில் என்ன தவறு என்று வைரமுத்து நினைத்திருக்கலாம். தகுதியற்ற ஒன்றிற்காக சமூகத்தின் பிரபலர்களும், ஆளுமைகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் வலிய வந்து பாரட்டுப்பத்திரங்கள் வாசிப்பதில்லை. தான் முறையாக தன் படைப்பாற்றலை அவர்கள் முன் ‘கூச்சமின்றி (இதனைப் படைப்பாளர்களுக்கு உள்ள பொதுவான அவையடக்கம்/கூச்சம் என்ற பொருளில் வாசிக்கவும்) நடத்திக் காட்டுவதால் தன் படைப்புகளுக்கான சிபாரிசும் அங்கீகாரமும் கிடைக்கின்றன என்பது விருதாளரின் வாதமாக இருக்கலாம். ஒரு மனிதன் பல வருடங்களாகப் கணக்குகள் போட்டு, முன்னேறி, தனக்கு முன்பிருந்த விருது பெற வாய்ப்பிருந்த படைப்பாளுமைகளைப் புறந்தள்ளி, தன் சுயவிவரக் குறிப்புகளை மெருகேற்ற தகுதியான பரிந்துரைக் கடிதங்களைச் சேகரித்து அவற்றை வலுவுள்ளதாக்கி, விருதுக் குழுவின் பல படிநிலைகளைத் தனது செல்வாக்கினால் தகர்த்து, இறுதி வெற்றியையும் பெற்றிருப்பார் என்று நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் இன்றைய சமூக சூழ்நிலையில் அவ்வாறு நிகழ வாய்ப்பில்லை என்று முற்றாகப் புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால் அத்தகைய வழிமுறைகளில் தான் வைரமுத்து ஞானபீட விருதினைப் பெற்றிருப்பார் என்று பொது சமூகம் யூகித்தாலும், வலுவான ஆதாரங்களின்றி அதனை எதிர்க்க பொது சமுதாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் நேர்மையற்ற முறையில் இவ்விருதை அடைந்திருப்பார் எனில் அவ்விருதின் பொதுமதிப்பு குறைகிறதே ஒழிய, வேறொரு வெளிப்பாடும் அதன் மூலம் கிடைக்கப்போவதில்லை.

மூன்றாவது விஷயம், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான #metoo சர்ச்சை.  பிரபலங்கள் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்தி தம் அதிகாரத்திற்கும் ஆளுமைக்கும் பணிந்து போக வேண்டிய இடத்தில் இருக்கும் எளியவர்களை பாலியல் ரீதியாக சீண்டல்கள்/அத்துமீறல்கள் / துன்புறுத்தல்கள் செய்ததை சமூகத்தின் பார்வைக்கு அம்பலப்படுத்தும் ஒரு பேரியக்கமாக உலகம் முழுவதும் வெடித்தெழுந்தது #metoo அதாவது ”நானும் பாதிக்கப்பட்டேன் எனும் கையறு நிலையின் முழக்கம்.  2017ம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக எழுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர் வகித்துவந்த துறை சார்ந்த பதவிகள் பறிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் #metoo ஒரு இயக்கியமாகப் பரவியது.  பின்னர் வெயின்ஸ்டீன் மீதான குற்றங்கள் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அவருக்குச் சிறைத் தண்டனையும் கிடைத்தது. அவர்  தொடர்பான செய்திகளை ஆழமாகவும், விரிவாகவும் பிரசுரித்ததற்காக, நியூ யார்க் டைம்ஸ் மற்றும் நியூ யார்க்கர் பத்திரிகைகளுக்கு 2018ம் ஆண்டு பொதுச் சேவைக்கான மதிப்புமிக்க “புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது. ஆனால் #metoo பரவலாகியபின், ஆதாரப்பூர்வமாகவும் சட்டப்படியும் நிரூபிக்க வாய்ப்பில்லாத / விருப்பமில்லாத பாலியல் சீண்டல்களை, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவெளியில் வெளிப்படுத்துவதன் மூலம் குற்றம்சாட்டப்படும் பிரபலங்களின் சமூக மதிப்பைக் குலைக்கும் சிறிய ஆயுதமாக அது பயன்படத் துவங்கியது. அதே சமயம், சட்டப்படியான அல்லது ஆதாரப்பூர்வமான இறுகியப் பிடிப்பு இல்லாத காரணங்களினால் #metoo என்பது பிரபலங்களின் சமூக நன்மதிப்பைக் கெடுக்கும் வெறும் அவதூறாக நீர்த்துப் போகும் வாய்ப்புகளும் பெருகின.

தமிழ்ச் சூழலில், 2018ம் ஆண்டு வைரமுத்துவுக்கு எதிரான #metoo பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை பிரபல பாடகி உட்பட பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முன்வைத்தனர். இன்று வரை அவை சட்டப்பூர்வமான வழக்காக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுகள், திரைத்துறையைத் தாண்டி சமூகத்திலும் அரசல் புரசலாக ஒரு வதந்தியைப் போலவே சுற்றியபடியே இருக்கின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிராக புகாரளித்தவர்களுக்கு வாய்ப்புகள் இரகசியமாக மறுக்கப்படுகின்றன. அதே போல வைரமுத்துவுடன் பணிபுரிந்த பிரபல இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மௌனமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதை நிறுத்திவிடுகின்றனர். அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் தொடர்ந்து பொதுவெளியில் அவரைப் பற்றி விமர்சித்தபடியே இருக்கின்றனர். ஆனால் இவையாவும் தன் சட்டை நுனி தூசி என்பது போல, தட்டிவிட்டு வைரமுத்து தொடர் தனியிசைப் பாடல்கள் வெளியிட்டுக் கொண்டே இருந்தார், பொதுநிகழ்வுகளில் வலிய தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றார், புத்தகங்கள் எழுதி தன்னைவிடப் பிரபலங்களின் முன்னிலையில் பிரமாண்ட வெளியீட்டு விழாக்கள் நடத்திக் கொண்டே இருந்தார்.  தனது படைப்பாளுமை பற்றி வாய்ப்புள்ள சந்தைகளில் எல்லாம் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். இன்று மதிப்புமிக்க ஞானபீட விருதையும் பெற்றிருக்கிறார். அதற்கு சமூகத்தின் மேன்மை மிக்க பல ஆளுமைகள் தஙகள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.  அவர் புதிய சிறகுகளுடன் தான் இன்னும் உயரப்பறக்க இவ்விருது சிறந்த உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று பேருவகை கொள்கிறார். அதே வேளையில் அவர் மீது அபிமானம் கொண்டோர், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட பிண்ணனியில் இருந்து வந்த ஒருவர் ஞானபீடம் போன்ற உயரிய விருதினை பெறுவது பொறுக்காத மேட்டிமைக் குழுவின் சூழ்ச்சியே அவர் மீதான இத்தகைய அவதூறுகள் என்கின்றனர்.

வைரமுத்து ஞானபீட விருதுக்குத் தகுதியற்றவர் என்று நம்புபவர்கள் அவருக்கு அவ்விருது வழங்கியதை, தங்களுக்குச் சரியென்று தோன்றும் தேற்றத்தை வைத்து எதிர்க்கிறார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட ஊடகத் துறையில் செல்வாக்கு உள்ளோர் அவருக்கு எதிராகக் கட்டுரை எழுதுகின்றனர். சிலர் விருதுக்குழுவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுகின்றனர். எழுத்தாளர்கள், தீவிர இலக்கியவாதிகள், வாசகர்கள் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், ஒரு படி மேலே போய், தங்களது தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டு, இவ்விருது அவருக்குக் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், அதனையும் மீற இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதால், தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறொரு விருதுக்கு, ஞானபீடத்திற்கு மாற்று என்ற சாயத்தைப் பூசி கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கிறார்கள்.

தேரளத்தைச் சேர்ந்த ஒ.என்.வி. பண்பாடுக் கழகம் சார்பாக பழம்பெரும் மலையாளக் கவிஞர் ஒ.என்.வி. குரூப் நினைவாக  வழங்கப்படும் இலக்கிய விருது 2021ம் ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. கவிஞர் ஒன்.என்.வி. குரூப் 2007ம் ஆண்டு இதே ஞானபீட விருதை வென்றவர் என்பது இதில் இன்னொரு உபசெய்தி. #metoo தொர்பான சர்ச்சைகள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மலையாளத் திரைத் துறையினரின் எதிர்ப்பு காரணமாக விருதுக் குழுவினர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட அவ்விருது குறித்த தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தனர். ஆனால் விருதுக்குழு தன் மறுமுடிவை அறிவிக்கும் முன்பே, தான் அந்த விருதை ஏற்க மறுப்பதாகவும்/திருப்பித் தருவதாகவும் விருதுத் தொகையான மூன்று லட்ச ரூபாயை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துவிடும்படியும் வைரமுத்து அவசரமாக ஒரு காணொளி அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். அவரை அந்த முடிவு நோக்கி உந்தித் தள்ளியது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

 "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

 பள்ளிப்பருவத்தில் படித்த குறள், இப்போது ஏனோ பொருத்தப்பாடுடனோ, பொருத்தமின்றியோ திடீரென மனதில் தோன்றுகிறது. தன் நெஞ்சு அறிய ஒருவன் பொய் சொல்வானெனில் அந்தப் பொய்யே அவனைச் சுட்டுப் பொசுக்கும். கவிஞர் வைரமுத்துவுக்கான ஞானபீட அறிவிப்புக்குப் பின்னால், (தீவிர இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத) அவரது பாடல்கள், கவிதைகள், புதினங்கள் என்று நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கான சாமனியர்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறது. (அவர் பரிந்துரைக் கடிதங்களை எப்படிப் பெற்றிருப்பார் என்று பலவித யூகங்கள் இருந்தாலும்), மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் தன் சுயவிவரக் குறிப்பினை பலப்படுத்துவதற்கான போதுமான துணைக் கோப்புகளை இத்தனை ஆண்டுகளாகச் சேகரித்து அடுக்கியிருக்கிறார். ஆகவே முதல் இரண்டு விஷயங்களில், படைப்பாளர் சமூகமாக அவரை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதில் நியாயமில்லை. மூன்றாவது விஷயமுமே, நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை, அவதூறுகளுக்காக மனம் ஒடுங்கி ஓரமாக அமர்ந்திருக்க வேண்டியதும் இல்லை. எனவே வெளியில் இருந்து இக்காரணத்திற்காக அவருக்கான விருதை எதிர்ப்பது சரியா என்று தெரியவில்லை. ஆனால் தன் நெஞ்சறிய பொய்யை வைத்துக் கொண்டு ஒருவன் உயரிய மேடையில் தலை நிமிர்ந்து வீற்றிருப்பானெனில், அப்பொய் அவனைச் சுடும் என்று மட்டும் நம்புகிறேன், அவ்வளவுதான்.

--- 
பாலகுமார் விஜயராமன்

******



Tuesday, April 23, 2024

நோ சொல்லுங்க!

"உங்கள் பாட்டி உங்களுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக் கொள்கிறார். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை, என்ன சொல்வீர்கள்?"

"விளையாட்டில் உங்கள் அணிக்கும், எதிர் அணிக்கும் சண்டை வருகிறது. எதிர் அணியைச் சேர்ந்த பையனை அடிக்கச் சொல்லி உங்கள் நண்பர்கள் தூண்டுகிறார்கள். என்ன செய்வீர்கள்?"
 
இப்படி எளிய கேள்விகள் மூலமாகவும், சிறு கதைகள் மூலமாகவும் சிறார்களுடன் உரையாடுகிறது "நோ சொல்லுங்க" புத்தகம். மிக எளிமையான வாக்கிய அமைப்புகளில், சின்னச் சின்ன எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, குழந்தைப் பருவத்தில் இருந்தே பிடிக்காத விஷயங்களில் 'நோ' சொல்லும் பழக்கத்தை எப்படி வளர்ப்பது என்று கூறுகிறது இந்நூல்.  புத்தகம் என்பதை விட எளிமையான பயிற்சிக் கையேடு என்றே கூறலாம்.

முக்கியமாக, 'நோ' சொல்வது சொல் பேச்சுக் கேளாமை இல்லை, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு என்பதையும் பெற்றோர்கள் அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது புத்தகம். குழந்தை பொய் சொல்லிப் பழகாமல் இருக்க முதலில் வீட்டில் அது மறுத்துப் பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதையும், அதனைக் காரணங்களோடு விவரிக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதையும் பேசுகிறது.

சிறார்களும், பெற்றோர்களும் படிக்க வேண்டிய நூல்.

"நோ சொல்லுங்க" - மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல். 

ஆசிரியர்களும் வாசிப்பு இயக்கச் செயற்பாட்டாளர்களுமான சக.முத்துக்கண்ணன் மற்றும் ச.முத்துக்குமாரி இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மேஜிக் லாம்ப் பதிப்பாக இப்புத்தகத்தை கொண்டு வந்திருக்கும்
எதிர் வெளியீடு நண்பர்களுக்கு ஒரு கோரிக்கை. இத்தகைய சிறந்த புத்தகத்தை மலிவு விலை சிறப்புப் பதிப்பாக வெளியீட்டு குழந்தைகள்/சிறார்/பெற்றோர்கள் மத்தியில் இதனைப் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.

Saturday, March 9, 2024

கமல் - அரசியல்

உண்மையில் இதுதான் கமலுக்கான இடம். கட்சி ஆரம்பிக்காமல் அப்படியே பொதுவாக நான்கு கருத்துக்களைச் சொன்னோமா, அறிவுஜீவிப் பிம்பத்துடன் கெத்தாக அலைந்தோமா என்றே இருந்திருக்கலாம். 

ரஜினி எப்படியும் கட்சி ஆரம்பிப்பார், எதிர்முனையில் நாம் நின்றால் அவருக்கு மாற்று நாம் என்று மக்கள் மனதில் பதிந்து  அரசியல் பாதை எளிதாக இருக்குமென நினைத்துவிட்டார். 

அதோடு சுற்றியிருந்தவர்கள் வெற்றிடம் சுற்றிடம் என்று ஆசைகாட்டிவிட ஏமாந்துவிட்டார்.  கட்சி ஆரம்பித்து அவர் முன்னெடுத்தது எல்லாம் என்.ஜி.ஓ வேலைகள் தாம். அதோடு இந்தப்பக்கம் இரண்டு அந்தப்பக்கம் இரண்டு என்று பஞ்ச் டயலாக் என்று நினைத்துக்கொண்டு விட்டவை வெற்றுச் சத்தங்களே. தமிழ்நாட்டு மக்கள் அவருக்கான சரியான இடத்தை அவரது முதல் தேர்தலில் காட்டியதும்  அடுத்த தேர்தலுக்கு முன்பே அவர் அதனைப் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சி. வருங்கால ராஜ்ய சபா எம்.பி.க்கு வாழ்த்துகள்.

ஆனால் உலகத்தின் ஆகச் சிறந்த இந்த முடிவைத் தான் எடுத்ததற்கென்று காரணங்களை தன் வழக்கமான ஜாங்கிரி சுற்றல் மொழியில் பிழிவாரே, அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது.

Friday, January 19, 2024

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2024

தமிழை உலகுக்கு எடுத்துச் செல்லவும், உலகைத் தமிழுக்கு கொண்டு வரவும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி, சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா. இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

தமிழ்ப் படைப்புகள் மற்றும் பதிப்பகங்கள் பற்றிய அறிமுகத்தை விழாவிற்கு வந்திந்த பன்னாட்டு பதிப்பகங்கள் தெரிந்துகொள்ளவும், போலவே பிற உலக மொழிப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரவும் இவ்விழா ஒருங்கிணைப்பு மேடை அமைத்துக் கொடுத்தது.

மூன்று நாள் நிகழ்வில் நூற்றுக் கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.  ஆர்வமாய் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இது முதற்படி மட்டுமே. இவை ஒப்பந்தங்களோடு நின்றுவிடாமல் மொழியாக்கப் படைப்புகளாக, மொழிபெயர்ப்புக்காக தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கைகளைப் பெறுபவைகளாக முழுமை அடைய வேண்டும். அதற்கு பதிப்பாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் முகவர்களின் தொடர் உழைப்பும் ஒருங்கிணைப்பும் தேவை. அப்போது தான் அரசின் இம்முயற்சிகள் முழு வெற்றியடைந்தவை ஆகும்.

இப்போது, ஒரு நினைவோடை... சென்ற ஆட்சியில், உலகத் தரமான அண்ணா நூற்றாண்டு நூலகமே பராமரிப்பின்றி கவலைக்கிடமாகக் கிடந்தது. இந்த அரசு, இருக்கும் நூலகங்களை புணரமைத்து திறம்பட செயல்பட வைப்பது மட்டுமின்றி கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது, மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது, முத்தாய்ப்பாக ஆண்டுதோறும் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடத்துவது என்று அறிவுசார் உலகில் தமிழையும், தமிழ்நாட்டையும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கிறது. 

இத்தகைய அறிவுசார் நிகழ்வுகள் நடத்துவது ஓர் அரசின் கடமை தானே... இதில் கூடவா அரசியல் பேசுவது என்று கேட்பீர்களானால், ஆம் நம் மக்களுக்கு, அதுவும் இத்தகைய நிகழ்வுகளால் பயன்பெறும் இலக்கியச் சான்றோர்களுக்கு எப்போதும் ஞாபக மறதி அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாம் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. 

மூன்று நாள் விழாவில் ஒரு நாளேனும் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. செறிவான ஓர் அனுபவம் தவறிவிட்டது. குறையொன்றுமில்லை, ஒரு நாள் இத்தகைய அறிவுசார் விழாக்களை எடுத்து நடத்தும், ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பேன்.

எந்தவொரு நிறுவனப் பின்புலமும், அதிகாரத் தொடர்புகளும் இல்லாமல், படைப்பாளியாக நாமே கலந்துகொள்ள முடியும் என்பதே இவ்விழாவின் சிறப்பு. உதவி தேவை எனில், தமிழ்நாடு அரசால் பயிற்சி பெற்ற இலக்கிய முகவர்கள் மூலமாகவும் விழாவிற்கு வந்திருந்த பன்னாட்டுப் பதிப்பகங்களை அனுகலாம். அதைச் சொல்லவே இப்பதிவு. அடுத்த ஆண்டு நம்மில் இன்னும் பலர் கலந்துகொள்ள வேண்டும்.

நம் படைப்புகளைப் பற்றி நாம் பேசாவிட்டால், வேறு யார் பேசுவது!

#CIBF2024
#StalinEra

Sunday, January 14, 2024

எங்கள் விஜயகாந்த்

டிசம்பர் 28, 2023 நடிகர் விஜயகாந்த் மறைந்தார்
 அவர் நினைவை ஒட்டொ எழுதியது.
---
தமிழ்த் திரைத்துறையின் ஒரு சகாப்தம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழக நடிகர்களில் அவரைப் போல ஒருவர் அவருக்கு முன்பும் இல்லை, அவருக்குப் பின்னும் இல்லை. அந்தளவு தனித்துவமான ஆளுமையாக விளங்கியிருக்கிறார் விஜயகாந்த்.

ரஜினிக்கும், கமலுக்கும் இளவட்டங்கள் ரசிகப்பட்டாளம் சேர்ந்து கொண்டிருந்த காலத்தில், அமைதியாக அவர்களை விட எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக பெண்களுக்குப் பிடித்த நடிகராக விஜயகாந்த் வீற்றிருந்தார். இன்று நாற்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் இருக்கும் தமிழகப் பெண்களில் பெரும்பான்மையோர் மனம் கசிந்து ஆத்மார்த்தமாக ஒரு துளிக் கண்ணீரேனும் சிந்தியிருப்பர். தமிழகத்துப் பெண்கள் அந்தளவு தங்கள் மனதிற்கு நெருக்கமானவராக, குடும்பங்களில் ஒருவராக விஜயகாந்த்தை வரித்திருந்தனர்.

தமிழ்த் திரைத்துறையில் இருக்கின்ற ஒருவரால் கூட அவரைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது போல. ஏற்றத் தாழ்வுகளும், அவமானங்களும் மலிந்து போயிருக்கும் திரைத் துறையில் மிக்க பெருந்தன்மையோடும், திறந்த மனதோடும் உண்மையான ஒரு தலைவனாகவே வாழ்ந்திருக்கிறார். கடைநிலை ஊழியர்களின் நலம், தன்னைத் தேடி வந்த அனைவருக்கும் எப்போதும் பசியாற்றும் தன்மை, தனக்கு நியாயம் என்று தோன்றும் விஷயங்களுக்காக எந்தப் பயமும் இன்றி துணிந்து குரல் கொடுப்பது என்று இயல்பிலேயே சிறந்த தலைமைப் பண்புடன் இருந்திருக்கிறார்.

விஜயகாந்தின் திரைத்துறை வாழ்வு முழுமைக்கும், அரசியல் வாழ்வின் துவக்கத்திற்கும் பாதை அமைத்தவர் அவரது உயிர்த் தோழரான இப்ராகிம் ராவுத்தர். தன் நண்பனுக்காக தனது தனிப்பட்ட வாழ்வையே அர்ப்பணித்திருந்தார் ராவுத்தர். விஜயகாந்தும் அவரை முழுமையாக நம்பி தன்னை அவரிடம் ஒப்படைத்திருந்தார். விஜயகாந்த் முப்பது ஆண்டுகள் திரைத் துறையில் பெரும் பெயர் பெறுவதற்கும், சிறந்த ஆளுமையாக நிலைத்து நின்றதற்கும் ஆணிவேராக ராவுத்தர் இருந்தார்.

காலம் அவர்கள் நட்பில் சிறு விரிசல் கொண்டு வர, அதிலிருந்து விஜயகாந்தின் கிரீடம் நழுவத் துவங்கியது. திரைத்துறையில் நிறை வாழ்வு வாழ்ந்து சாதனைகள் புரிந்தவர், அரசியலில் சரியாகச் சென்று கொண்டிருந்த பாதி வழியில் தடம் மாறிவிட்டார். அதன்பிறகு உடலும் மனமும் நலிவுற இறுதி வரை அவரால் மீண்டு வர முடியவில்லை. இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜி தன் பிரியமான நண்பனுடன் சென்று சேர்ந்துவிட்டார். கண்ணீர் அஞ்சலி கேப்டன். என்றும் எங்கள் தலைமுறையின் மனங்களில் நிறைந்திருப்பீர்கள்.  

#Vijayakanth

கலைஞர் பல்கலைக்கழகம்

கலைஞர் பல்கலைக்கழகம் எந்த ஊரில் அமைய வேண்டுமென நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது குறித்து எனக்குத் தோன்றியவை...

1. ஏற்கனவே பெரிய பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும்.
2. வான் வழி போக்குவரத்துக்குத் தோதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
3. பின் தங்கிய பகுதியாய் இருப்பின் கல்வியில் மேலோங்க நல்ல வாய்ப்பு
4. பரப்பளவில் விரிய, ஊர்/மாவட்டம் பெரிதாக வாய்ப்புள்ள, வளர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடிய பகுதியாக இருக்க வேண்டும்.
5. மாணவர்கள் உண்டு உறைவிட படிப்புகள் பயில, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தகுந்த இனிமையான தட்பவெட்ப நிலை.
6. பிற மாநில/பிற நாட்டு அறிஞர் பெருமக்கள் வந்து போகத் தோதுள்ள பகுதி
7. சர்வதேச நிகழ்விடங்களின் அருகாமை, மாணவர்கள் கண்ணோட்டமும், அறிவுத் திறனும் வளர உதவும்.
Update:
8. பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்ள பகுதியாய் இருப்பின், தொழிற்கூடம் - கல்விக்கூடம் இணைந்த ஆராய்ச்சிகளுக்கு, பொருளாதார நல்கைகளுக்கு வழிவகுக்கும்.
(பல்கலைக்கழகம் அமைக்கும் இடம் சார்ந்து வேறு என்ன அடிப்படைத் தேவை, நீங்களும் சொல்லலாம்)

ஆகவே, இத்தகைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேகமாக வளர்ந்து வரும், எதிர்காலத்தில் தமிழகத்தின் தொழில்நுட்பமாக மாறப் போகும், Little England என்று அழைக்கப்படும் ஒசூரில் "கலைஞர் சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" அமைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்...றோம்...றோம்...
#hosurdiary
#kalaignaruniv

Monday, January 1, 2024

2023

#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும். 

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப்  பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.

அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன்  செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை,  உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள்  ...

அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம்.  அவர் தலைமையில் சேவாலயம்  மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.

இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும்,  முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில்  எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.

அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.

சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது.  சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.

இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன். 

மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!

#HappyNewYear2024

Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்

Wednesday, June 29, 2022

தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?

சிறந்த அரசின் கொள்கை என்பது அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது, அவர்கள் மேலெழுந்து வரும் வரை தொடச்சியான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது.

கல்வித் துறையில் எண்ணிக்கை குறைவாகத் தேர்வாவதால் மட்டுமே ஒரு சிஸ்டம் சிறந்தது என்றோ அதிகமானோரைத் தேர்ச்சி அடையச் செய்வதால் மற்றொன்று தரம் தாழ்ந்ததாகவோ ஆகிவிடாது. இந்தியா போன்ற மக்கள் வளம் மிகுந்த நாடுகளில் இளம் தலைமுறையினரின் ஆற்றலை முறைப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் மலிந்து போயிருக்கும் சமூகத்தில் கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் "சான்றிதழும்", வேலை வாய்ப்பும் ஒருவனை எத்தனை உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்று சிந்திக்க வேண்டும்.

மாறாக, 'தரம்' சரியில்லை என்று ஒரு கோட்டைக் கிழித்து ஒரு வகுப்பில் ஐம்பதுக்கு நாற்பது பேரைத் தோல்வியடையச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு கல்விச் சாலை பக்கம் திரும்பாத அதில் பெரும்பான்மையினர் சமூகத்தின் அதே அடுக்கிலோ அல்லது அதற்குக் கீழேயேயோ தேங்கிவிடுகின்றனர். அப்படியின்றி, எளிய தேர்ச்சி முறைகள் மூலம் அவர்கள் மேல் வகுப்புகளுக்குச் செல்லும் போது கற்றல் அனுபவம் போக, தன்னம்பிக்கை, ஒரு சூழ்நிலையைக் கையாளும் மனப்பக்குவம், பரந்த உலகத்தைக் காணுதல் என்று அதிக அனுபவத்தையே பெறுகின்றனர்.

" பத்தாவது வகுப்பு வரை இந்த அனுபவம் போதும், உயர்கல்விக்கு கறாரான தேர்வு முறை வேண்டும்" என வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் யோசிப்பாரேயானால், ஒரு மாணவனின் சமூகக் கற்றல் பயணத்தை அரசும், இப்போதுள்ள கல்வி அமைப்பும் உயர்த்தி விட வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

இன்னொரு சாராரின் கருத்து, அரைகுறையாய் பட்டதாரியாக வெளிவரும் ஒருவனைக் காட்டிலும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் சிறந்த வேலைக்காரனாக வருவான் என்பது. சிறந்த வேலைக்காரனாக வந்து... உங்கள் பைக் டயருக்கு சிறந்த முறையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? அதற்கு அவன் அரைகுறை பட்டதாரியாகி ஒரு அலுவலகத்தில் மின்விசிறிக்குக் கீழ் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருக்கட்டுமே, அவன் தனது முதல் இரண்டு அலுவலகக் கடிதங்களை தப்பும் தவறுமாய் எழுதிப் பின் திருத்திக் கொள்ளட்டுமே... என்ன குறைந்து விடப் போகிறது?

Thursday, May 5, 2022

தமிழ் விக்கி(பீடியா)

தமிழ் விக்கிபீடியா கட்டற்ற களஞ்சியமாக இல்லாமல் குறுங்குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது, எனவே இலக்கியத்தை முழுமையாக உள்ளடக்கும் வகையில் புதிதாக "கட்டுப்பாட்டுடன்' கூடிய இன்னொரு கலைக் களஞ்சியத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் போல. நல்லது, பொது வெளியில் பண்பாடு, கலை, இலக்கியம் சார்ந்த தகவல்கள் நிரம்பி வருவது ஏற்புடையதே. ஆனால் எத்துறையில் ஒரு புதிய முயற்சியைத் துவங்கினாலும் அது ஏற்கனவே அத்துறையில் பலகாலமாக நிகழ்ந்தவைகளின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும். அப்போது தான் அது இன்னும் செம்மையடைந்து மெருகேறும்.

அப்படியில்லாமல், தமிழ் விக்கிபீடியாவில் இத்தனை ஆண்டுகள் பலரின் கூட்டு முயற்சியால் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல் களஞ்சியத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டு, அதே போன்றதொரு வார்ப்பில் மீண்டும் ஒன்றை நிறுவ வேண்டிய தேவை என்ன?

அலுவலகப் பயன்பாட்டில் "Reinventing the wheel" என்று சொல்வார்கள். அதாவது ஒரு திட்டத்தில் இருக்கும் இடத்திலிருந்து முன் நகராமல், செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்வது. எளிமையாகச் சொல்வதானால், ரமணா படத்தில் யூகி சேது, "இப்போ தான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா?" என்பாரே, அது போல. 

ஆனால் சற்று யோசித்துப் பார்த்தாலே புரிந்துவிடும், கலைக் களஞ்சியம் போன்ற மிகப்பெரிய தகவல் பின்னலை நெய்யும் போது, இருப்பவை அனைத்தையும் விடுத்து சுயம்புவாக இன்னொன்றை உருவாக்குவது சாத்தியமே இல்லை. ஆக, தமிழ் விக்கிபீடியாவின் வடிவமைப்பு, இயங்குமுறை, பார்வை, திருத்தம் முறைகள் இவற்றை மாதிரியாகக் கொண்டு தான் தமிழ் விக்கியை (நாகபதனி, நாகப்பதனி போல இதில் பெயர்க்குழப்பம் வேறு!) வடிவமைக்கப் போகிறார்கள் என்றால், ஒரே துறையின் முன்னோடியாக இருக்கும் பெருமுயற்சியைத் தூற்றி புதியதைத் துவங்குவது அறமாகாது. 

சரி, ஒரிஜினல் தமிழ் விக்கிபீடியாவில் சிலர் பெரிய பூட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்கிறார்களே, நாம் ஏதாவது செய்து பார்ப்போம் என்று தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஒருவர் பெயரில் தகவல்களைப் பதிந்தேன். அழகாக ஏற்றுக்கொண்டது. அந்தப் பக்கத்தின் இணைப்பு: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D#

நன்றி வணக்கம்!

Thursday, March 28, 2019

வீதிக்கு வரும் தெய்வங்கள்


சித்திரவீதிக்காரன் எழுதிய “திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை” பற்றிய வாசிப்பனுபவம்

  அன்றாட வழமைகளில் இருந்து, கொஞ்சம் விடுதலையாகி இலகுவான மனநிலையில் நம்மை மிதக்க வைப்பவை திருவிழாக்கள். ஊர்கூடி ஒன்றுசேர்ந்து, ஆக்கிப் பொங்கி தின்று, கூட்டத்தோடு சுற்றி அலைந்து, மனதிருப்தியுடன் கூடடையும் போது, ஆசுவாசமும், நிம்மதியும் பொங்கிப் பெருக வைக்கின்ற திருவிழாக்கள் என்பன எளிய மனிதர்களுக்கான புத்துணர்ச்சி முகாம்கள். “திருவிழாக்கள் சமூக இளைப்பாறுதல்கள்” என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம். மதுரை என்பதே ஒரு பெரிய கிராமம். அதுபோக சுற்றியுள்ள அத்தனை கிராமங்களுக்கும் தலைநகரம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்நகரம் உயிர்ப்புடன் இருப்பதற்கு இதன் பண்பாட்டு கட்டுமானமே முக்கியக் காரணம். அத்தகைய பண்பாட்டை தலைமுறை தலைமுறையாகக் கடத்திக் கொண்டுவருவன இந்நகரில் நிகழும் பண்பாட்டுத் திருவிழாக்கள்.

மதுரையை அங்குலம் அங்குலமாக ரசித்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் திருவிழா அனுபவங்களின் தொகுப்பு, “திருவிழாக்களின் தலைநகரம் - மதுரை” என்னும் புத்தகம். மதுரையில் நடக்கும் அநேகத் திருவிழாக்களின் மரபு, வழிபாட்டு முறை, அங்கே ஆயரக்கணக்கில் கூடும் மக்களின் உற்சாக மனநிலை, தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கவழக்கங்கள், தொன்மங்களாக மாறிய சடங்குகள் ஆகியவற்றை அழகாக ஒரு சாமான்யனின் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுந்தர். வைதீகம் சார்ந்து, சாமி ஊர்வலங்களின் புனிதத் தன்மையை விதந்தோதுவது போலின்றி, கடவுள்கள் உற்சவமாய் தெருவில் நகர்ந்துவந்து எளிய மக்களின் வாழிடங்களில் காட்சிதரும் தருணங்களையே சுந்தரின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன. அவரது எழுத்தில் மிளிரும் இந்த யதார்த்தமே, இப்புத்தகத்தை ஸ்தல புராணம் பாடும் ஆன்மீக நூலாக்கிவிடாமல், கடவுள்கள் தங்கள் சன்னதிகளில் இருந்து வீதிக்கு வந்து, கடைக்கோடி மனிதர்களோடு வீதிகளில் புழங்கும் நிகழ்வரத்தைப் பேசும் சிறந்த படைப்பாக்குகிறது.

கட்டுரைகளினூடே மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் தொடங்கி, பண்பாட்டு அசைவுகள், அழகர்கோவில், ஏழரைப்பங்காளி வகையறா, சொட்டாங்கல் வரை பல்வேறு நூல்களில் மதுரை சார்ந்து எழுதப்பட்ட பாடல்கள் மற்றும் பத்திகளில் இருந்து காட்டப்பட்ட மேற்கோள்களும், அவற்றைக் கட்டுரைகளுக்கு மிகத் தேவையான இடங்களில் இணைத்ததும் இந்தப் புத்தகத்தில் மிகவும் கவர்ந்தவை. இது கட்டுரைகளுக்கு செறிவான ஆழத்தையும், பண்முகத் தன்மையையும் அளிக்கின்றன.

மதுரையின் பண்பாட்டுத் திருவிழாக்களோடு சேர்த்து, சமூகத் திருவிழாக்களான புத்தகத் திருவிழா மற்றும் பசுமை நடை பயணங்களையும் இணைத்திருப்பதும் மிகச் சிறப்பு. பொதுவாகவே மதுரைக்காரர்களுக்கு ஊர்ப்பாசம் அதிகம் என்பார்கள். அப்படி மதுரையையும், அதன் திருவிழாக்களையும் எளிய மக்களில் ஒருவராக இருந்து, திகட்டத் திகட்ட ரசித்தும், மீண்டும் மீண்டும் இத்திருவிழாக்களின் ஊடான அசைவுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தரின் இப்புத்த்கம் இதன் எளிமைத் தன்மைக்காகவே முக்கியத்துவம் பெறுகிறது. மதுரை மக்கள் தாங்கள் இயல்வாழ்வில் பங்குபெறும் இத்திருவிழாக்களின் எழுத்து வடிவத்தை வாசிக்கையில், “அட ஆமால்ல!” என்று மன உற்சாகத்தையும், மெல்லிய புன்னகை கலந்த பெருமிதத்தையும் அடையலாம். மற்ற ஊர்க்காரகள் மதுரையின் தொன்மையான திருவிழாக்களை நேரில் கண்டது போன்ற ஆச்சரியத்தை இப்புத்தகத்தை வாசிக்கையில் பெறமுடியும். முழு அர்ப்பணிப்போடு இத்தகைய திருவிழாக்களைப் பதிவு செய்திருக்கும் சித்திரவீதிக்காரன் சுந்தருக்கும், அழகான வழுவழு தாளில், நேர்த்தியாக வடிவமைத்து, குறைந்த விலையில் வெளியிட்டிருக்கும் பசுமைநடை நண்பர்களுக்கும் மதுரைக்காரனாக வாழ்த்துகளும், நன்றியும்!

******
திருவிழாக்களின் நகரம் – மதுரை (கட்டுரைகள்)
சித்திரவீதிக்காரன் சுந்தர்
பசுமைநடை வெளியீடு
விலை: ரூ. 130
பக்கங்கள்: 200
******