Monday, December 31, 2012

நாளை நமதே !2012 - ஸ்ஸ்ஸ்ஸப்பா... மூச்சு முட்ட வைத்து விட்டது இந்த ஆண்டு. கவலை, கலக்கம், கண்ணீர், கலகம் என்று ஏகப்பட்ட சூறாவளிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றையெல்லாம் அப்படியே மூட்டையாய் கட்டி இந்த ஆண்டோடு சேர்த்து அனுப்பி விட்டு, புத்தாண்டு புதிதாய் பிறக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

”சார்புத் தத்துவம்” தான் உலகத்தை வழிநடத்துகிறது என்பார்கள். உலகத்தை விடுங்கள், தனி மனிதனுக்குள்ளும் ஒரு நிகழ்வில் ஏற்படும் அயற்சி, ஒழுங்காய் சென்று கொண்டிருக்கும் மற்ற நிகழ்வுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஏதோவொரு இணைப்பு நூல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றன் உற்சாகம் மற்றொன்றில் பாய்வது போலவே தொய்வும் தானாகவே மற்றொன்றைத் தொற்றிக் கொள்கிறது.

இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை எல்லாம் தரை தட்டி மேல் எழும்பியிருக்கிறது. எப்போதும் நான் எடுத்த முடிவுகள் சரியோ, தவறோ அதற்காக பின்நாட்களில் வருத்தம் கொண்டது இல்லை. ”இது இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது. நம் மூலமாக இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவு தான்” என்று சென்று விடுவேன். ஆனால் இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்பு நான் எடுத்திருந்த முடிவு சரியான தேர்வு இல்லையோ என மன சஞ்சலம் சொள்ளும் அளவு ஆகிவிட்டது. பின்பு வழக்கம் போல் “ஆல் இஸ் வெல்” ஜெபம் சொல்லிக் கொண்டபின் தெளிவாயிற்று... ”எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்தது தான். நான் தான் அந்தந்த காலத்திற்குச் சென்று அவற்றைக் காண வேண்டும்” என்று உள்ளுணர்வு எப்போதும் போல் சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு முறையும் மீண்டு வர முடிந்திருக்கிறது.

எந்தவொரு சிறு வேலையாக இருந்தாலும் அதற்கான முக்கியத்துவமும், முயற்சியும் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் மூலம் வரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் நாம் உடையவர்களாக ஆவோம் என்ற எண்ணம் உடையவன் நான். அவ்வாறு உரிய முக்கியத்துவம் தராததால், கைமேல் பலனாக அலுவலக ரீதியான ஒரு தோல்வியையும் இந்த ஆண்டு சந்தித்திருக்கிறேன். வெற்று சமாதானங்கள் ஆயிரம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சிரத்தை இல்லாமல் ஒரு தேர்வை எதிர் கொண்டது தவறு என்ற புத்தி கொள்முதல் கிடைத்திருக்கிறது. ”ஆல் இஸ் வெல்”.

நினைவில் கொள்ளத்தக்க நேர்மறை நிகழ்வுகளும் நடக்கத்தான் நடந்திருக்கின்றன. எனது மேடைப் பேச்சு இந்த ஆண்டு ஏகத்துக்கும் வளர்ந்திருக்கிறது. அலுவலக சங்க கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேச வேண்டிய நிலையிலும் தெளிவாக எனது கருத்துக்களை கூறியது எனக்கே மன நிறைவைத் தந்தது. அலுவலகத்தில் சிறிய அளவில் “வாசிப்போர் களம்” என்ற அமைப்பையும் துவங்கியிருக்கிறோம். வேலை, வீடு என்றில்லாமல் ஒத்த கருத்துள்ள தோழர்களுடன் சேர்ந்து ஒரு மாற்றுக் களத்தையும் அமைத்து, ஆரோக்யமான ஒரு சூழலுக்கான முதல் படியைத் தாண்டியிருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி. 

அப்புறம்... நல்லாள் ஒருத்தியை இல்லாளாய் கொண்ட வரத்தையும், மழலை பேசும் மகளின் அழகையும், இன்னும் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் பெற்றோரையும், பக்கபலமாய் நிற்கும் உடன்பிறப்புகளையும் பற்றியெல்லாம் எழுத்தில் அடக்கி விட முடியாது, வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை நமது நாளாகவே பிறக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே !

******

Friday, December 28, 2012

செவியிடை மனிதர்கள் - 5


ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

******

Wednesday, December 19, 2012

கும்கி - வெற்றிகொண்டான் !கொடியவன் ஒருவனிடமிருந்து ஊரைக் காப்பதற்காக வெளியூரிலிருந்து அழைத்து வரப்படும் காவல் வீரன். அவனை தெய்வமாக மதிக்கும் ஊர்மக்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உண்மையான காவல் வீரனுக்கு பதிலாக ஒப்புக்கு வரும் ஒரு கோழை. அவனை வைத்து சில நகைச்சுவை. இறுதியில் தன் உயிர்த்தோழனின் உயிருக்கு ஆபத்து வரும் பொழுது வீராவேசம் கொண்டு எதிரியை வீழ்த்தி தானும் மடியும் வழக்கமான “திரை”க்கதை தான். ஆனால் இயக்குநர் பிரபு சாலமன் எடுத்து ஆண்டிருக்கும் களமும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவும், துணை நின்றிருக்கும் இமானின் இசையும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பும் நிச்சயம் “கும்கி”யை மறக்க முடியாதவனாக உருவாக்கியிருக்கிறது.

எந்தவொரு அறிமுக நாயகணும் எதிர்பார்த்துத் தவம் கிடக்கும் “பாத்திரம்” நாயகனுக்கு. “யானையின் பலம் பாகனின் தைரியம் தான்” என்று படத்தில் ஒரு வசனம் வரும். இவரின் நடிப்பும் அப்படித் தான். யானையுடன் நடித்த எந்த காட்சியிலும் சிறு மிரட்சி கூட காட்டாமல் திறம்படவே நடித்திருந்தார். குரலின் ஏற்ற இறக்கத்திலும் குறையொன்றுமில்லை. இவர் கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், அல்லது ஹீரோயிஸம், காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இறங்கியிருந்தாலும் மொத்த படமும் படுத்திருக்கும். நல்ல வேளை அப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. நாயகன் யானையின் தந்தங்களைப் பிடித்து எழும்பி நெற்றியில் முத்தமிடும் அந்த ஒரு காட்சிக்காகவே படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அவ்வளவு கவித்துவமான, அழகான காட்சியமைப்பு. திரையில் காணும் போது ஏனோ மனம் நிறைய சிலிர்ப்பு. பொம்மனுக்கு “நல்வரவு”.

உண்மையில் இந்தப்படம தான் நாயகிக்கும் அறிமுகப்படமாக வந்திருக்க வேண்டும். வடு பதிந்த முகத்தாலும், மருளும் விழியாலும் அல்லியாகவே மாறிவிட்டார். 

படம் முழுவதும் எவ்வளவு அபத்தங்கள் இருந்தாலும் இறுதியில் நாயகன் நாயகியின் கரம் பிடித்துத் தொடுவானை நோக்கிப் பயணிக்கும் காட்சிகளையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் கண்களுக்கு இப்படத்தின் முடிவு ஒரு போதாமையை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக இல்லாமல், ஒருவன் தன் சுயநலனிற்காக தன்னை அண்டியிருந்த மூன்று உயிர்களையும் காவு கொடுத்து விட்டு, ஒரு நம்பிக்கை துரோகத்தை செய்து தன் வாழ்வை துவங்கவும் துணிவுமின்றி நிர்கதியாய் நிற்பது தான் அவனுக்கு விதிக்கப்பட்ட முடிவு. அதை நாம் அவ்வாறே ஏற்றுக் கொள்வது தான் சரியாக இருக்குமென தோன்றுகிறது.

இப்படம் பழங்குடியினரின் வாழ்வை உண்மையாக பிரதிபலிக்கவில்லை என்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் இயக்குநர் தான் வரைந்து கொண்ட வட்டத்திற்குள் நின்று கச்சிதமாகவே விளையாடி இருக்கிறார். வணிக ரீதியான சில சமாதானங்களை செய்து கொண்டிருந்தாலும் அவை மிகவும் உறுத்தாத அளவிலேயே இருந்தன. உதாரணமாக பழங்குடியினரின் அறுவடைப்பாடலை குத்துப் பாட்டாக மாற்றி விட்டார் என்று சொல்வார்கள் என்பதற்காகவே இரண்டு மூன்று இடங்களில் “வெளியூர் ஆட்டக்காரர்களை வரச்சொல்லிட்டியா?” என்று கொஞ்சம் அழுத்தமாகவே கூறும் படி செய்திருந்தார் :)

படத்தில் கொஞ்சம் ஒட்டாமல் உறுத்திக் கொண்டிருந்தது நாயகனின் தாய்மாமனின் ஓயாத தொணதொணப்பான உரையாடல்களும், புலம்பலும் தான். இறுக்கமாக இருக்க வேண்டாமே என நினைத்து படம் முழுவதும் அவரைப் பேசவிட்டு இடநிரப்பியாக பயன்படுத்த நினைத்திருப்பார்கள் போல. ஆனால் அவரது ஆங்கில சொல்லாடல்கள் பல இடங்களில் அந்நியத்தனத்தையே தந்தன. சில இடங்களில் சிரிக்கவும் வைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 

எப்படியிருந்தாலும், படைப்பின் மீது இயக்குநருக்கு இருந்த ஆளுமை படம் முழுவதும் நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியிருக்கிறார்கள் என்று சொல்வார்களே, அது போல காணக் காண கண் நிறைந்த காட்சிகள். மொத்த படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல்லதொரு திரையனுபவத்தைத் தந்தீர்கள், நன்றி !