2012 - ஸ்ஸ்ஸ்ஸப்பா... மூச்சு முட்ட வைத்து விட்டது இந்த ஆண்டு. கவலை, கலக்கம், கண்ணீர், கலகம் என்று ஏகப்பட்ட சூறாவளிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றையெல்லாம் அப்படியே மூட்டையாய் கட்டி இந்த ஆண்டோடு சேர்த்து அனுப்பி விட்டு, புத்தாண்டு புதிதாய் பிறக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
”சார்புத் தத்துவம்” தான் உலகத்தை வழிநடத்துகிறது என்பார்கள். உலகத்தை விடுங்கள், தனி மனிதனுக்குள்ளும் ஒரு நிகழ்வில் ஏற்படும் அயற்சி, ஒழுங்காய் சென்று கொண்டிருக்கும் மற்ற நிகழ்வுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஏதோவொரு இணைப்பு நூல் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்றன் உற்சாகம் மற்றொன்றில் பாய்வது போலவே தொய்வும் தானாகவே மற்றொன்றைத் தொற்றிக் கொள்கிறது.
இந்த ஆண்டு, எப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை எல்லாம் தரை தட்டி மேல் எழும்பியிருக்கிறது. எப்போதும் நான் எடுத்த முடிவுகள் சரியோ, தவறோ அதற்காக பின்நாட்களில் வருத்தம் கொண்டது இல்லை. ”இது இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று விதித்திருக்கிறது. நம் மூலமாக இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவு தான்” என்று சென்று விடுவேன். ஆனால் இந்த ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் முன்பு நான் எடுத்திருந்த முடிவு சரியான தேர்வு இல்லையோ என மன சஞ்சலம் சொள்ளும் அளவு ஆகிவிட்டது. பின்பு வழக்கம் போல் “ஆல் இஸ் வெல்” ஜெபம் சொல்லிக் கொண்டபின் தெளிவாயிற்று... ”எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்தது தான். நான் தான் அந்தந்த காலத்திற்குச் சென்று அவற்றைக் காண வேண்டும்” என்று உள்ளுணர்வு எப்போதும் போல் சொல்லிக் கொண்டே இருந்ததால் ஒவ்வொரு முறையும் மீண்டு வர முடிந்திருக்கிறது.
எந்தவொரு சிறு வேலையாக இருந்தாலும் அதற்கான முக்கியத்துவமும், முயற்சியும் நிச்சயம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் அதன் மூலம் வரும் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் நாம் உடையவர்களாக ஆவோம் என்ற எண்ணம் உடையவன் நான். அவ்வாறு உரிய முக்கியத்துவம் தராததால், கைமேல் பலனாக அலுவலக ரீதியான ஒரு தோல்வியையும் இந்த ஆண்டு சந்தித்திருக்கிறேன். வெற்று சமாதானங்கள் ஆயிரம் வெளியே சொல்லிக் கொண்டாலும், சிரத்தை இல்லாமல் ஒரு தேர்வை எதிர் கொண்டது தவறு என்ற புத்தி கொள்முதல் கிடைத்திருக்கிறது. ”ஆல் இஸ் வெல்”.
நினைவில் கொள்ளத்தக்க நேர்மறை நிகழ்வுகளும் நடக்கத்தான் நடந்திருக்கின்றன. எனது மேடைப் பேச்சு இந்த ஆண்டு ஏகத்துக்கும் வளர்ந்திருக்கிறது. அலுவலக சங்க கூட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பேச வேண்டிய நிலையிலும் தெளிவாக எனது கருத்துக்களை கூறியது எனக்கே மன நிறைவைத் தந்தது. அலுவலகத்தில் சிறிய அளவில் “வாசிப்போர் களம்” என்ற அமைப்பையும் துவங்கியிருக்கிறோம். வேலை, வீடு என்றில்லாமல் ஒத்த கருத்துள்ள தோழர்களுடன் சேர்ந்து ஒரு மாற்றுக் களத்தையும் அமைத்து, ஆரோக்யமான ஒரு சூழலுக்கான முதல் படியைத் தாண்டியிருக்கிறோம் என்ற அளவில் மகிழ்ச்சி.
அப்புறம்... நல்லாள் ஒருத்தியை இல்லாளாய் கொண்ட வரத்தையும், மழலை பேசும் மகளின் அழகையும், இன்னும் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் பெற்றோரையும், பக்கபலமாய் நிற்கும் உடன்பிறப்புகளையும் பற்றியெல்லாம் எழுத்தில் அடக்கி விட முடியாது, வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்.
நாளை நமது நாளாகவே பிறக்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே !
******
என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்நாடு LIST OF HOLIDAYS
ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் பின்னோக்கி பார்த்தல் என்பது அவசியமான ஒன்று . நாம் சாதித்ததை , பெற்றதை, விட்டதை , மறந்து போனதை நினைவு படுத்திக்கொள்ளும் போது , அடுத்து நாம் எதிர் கொள்வதில் உள்ள நன்மை தீமைகளை உணருவதில் நம்மால் தெளிவு பெற முடியும். உன் எழுத்து என் கடந்த காலங்களை நினைவு படுத்துகிறது . உன் பாதை மிகச் சரியானது தம்பி!.
ReplyDeleteWish u Happy new year......... 2013......
ReplyDeleteஉங்களது தெளிந்த சிந்தனைக்கும், நிதானமான செயல்பாட்டிற்கும், அறிவு முதிர்ச்சியான மேடை பேச்சிற்க்கும் நான் எப்பொழுதுமே ரசிகன். உங்களை அருகில் இருந்து சில காலம் கவனித்தவன் என்ற அடிப்படையில்,உங்களின் மூத்த சகோதரன் உரிமையில் சொல்கிறேன். தேர்வு - தோல்வி என்பதெல்லாம் உங்களை மேலும் பக்குவப்படுத்துமேயன்றி, துவளசெய்ய முடியாது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் , பாலா.
ReplyDelete- என்றும் அன்புடன்.
தைத்திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்தாண்டை பொங்கலிருந்து உற்சாகமாகத் தொடங்கலாமென்று இருக்கிறேன்.
- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.
வாழ்த்துக்கள் !!!
ReplyDelete-மதன்