Friday, October 29, 2010

கோவை, திருச்சி, மதுரை... அடுத்து சேலம் தானே!

தினமும் அலுவலகம் கிளம்புமுன் மறக்காமல் வேண்டிக்கொள்கிறேன், "கடவுளே, இன்னைக்கு மறந்து வச்சிட்டுப்போற பொருள் முக்கியமில்லாததா இருக்கனும்!"

எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுபவரைப் பழி வாங்க, என்ன சொன்னாலும் புரியாதவனைப்போல் தொடர்ந்து விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன். #ஆள்எஸ்கேப்

நடிகர்களின் நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்களின் கதை, திரைக்கதை படு மொக்கை தானே. இமேஜை காப்பாற்ற எல்லா சேனல்லயும் காசு கொடுத்து தான் ஓட வைக்கிறாங்களாமே :)

ஆகா! ட்விட்டரில் என்னை இதுவரை யாரும் unfollow செய்யவில்லை. இப்படியே எதுவும் எழுதாமல் இருந்து எல்லாரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கோவை, திருச்சி, மதுரை. அடுத்து சேலம் தானே... 500 ரூபாயுடன் குவாட்டரோ, சேலையோ காத்திருக்கிறது, ரத்தத்தின் ரத்தங்களே கிளம்பத் தயாராகுங்கள்!

"உழைப்பிற்கு அழகிரி, உல்லாசத்திற்கு ஜெ.. Hello Miss Hello Miss எங்கே வர்றீங்க" - ஜெ. மதுரை மாநாட்டிற்கு திமுக போஸ்டர் தான் அதிகமா தெரியுது.

தன் மகனை ஒரு நடிகை கட்டிப் பிடிப்பதை உள்ளம் பூரிக்க பார்த்து மகிழும் தாய்....ம்ம்ம் அழகிய தமிழ் சமூகம் டிவியில் மட்டும் தான் #விஜய்டிவி

ஐயையோ, மழைக்காலம் துவங்கி விட்டதே! மழைக்கவிதை எழுதுறேன் பேர்வழினு இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியாதே !

What’s happening? னு நம்மையே கேள்வி கேட்கும் ட்விட்டரை தார் பூசி அழிப்போம், வாருங்கள் ! 

மாங்கு மாங்குனு புத்தகம்முழுதும் எழுதிட்டு இருந்தவனை எச்சரித்து, முக்கிய கேள்வியை மட்டும் குறிச்சுக்கொடுத்து பிட் எழுத வச்சுவன் #நண்பேன்டா!

எட்டாம்வகுப்பு வரை விஜயகாந்தின் தீவிர ரசிகனாய் இருந்த என்னை நல்வழிப்படுத்தி பந்தாவாய ரஜினி ரசிகனாய் மாற்றிய முத்துகிருஷ்ணன். #நண்பேன்டா!

முதன்முதலா ஒருபொன்னை லுக்குவிடசொல்லோ அவகிட்ட பல்பு வாங்குனதை மறைச்சு, "நீங்க 2பேரும் சூப்பர் மேட்ச் மச்சி" னு உசுப்பேத்துறவன் #நண்பேன்டா

முக்கியமான இண்டர்வியூ ஊத்திக்கிச்சுனு கவலைல இருக்கும் போது, "many more happy returns of the day" சொல்லி ட்ரீட் கேக்குறவன் #நண்பேன்டா

கருத்து சொல்றேன்னு கழுத்தறுக்கிறவர்ட்ட இருந்து காப்பாற்ற, "மச்சி, ஒரு முக்கியமான விஷயம். கொஞ்சம் வாயேன்" னு தள்ளிட்டு போறவன் #நண்பேன்டா!

நாளை என் அறையில் நான் இல்லாததை விட சகிக்க முடியாதது, யாரோ இருக்கப்போவது (பலூன்காரன் வராத தெரு / அழகிய நிலா) #படித்ததில்பிடித்தது

2வருடம் முன்கொடுத்த செமினார் pptஐ திறந்தால் பஞ்சுமிட்டாய்கலரில் எரிக்கிறது.என்னாச்சு எனக்கு? இவ்ளோ சீக்கிரம் என் ரசனை மேம்பட வாய்ப்பில்லையே

விளம்பரம் விரும்பும் என் போன்றோர்க்கு அறைகூவல்: உப்பு சப்பில்லாத நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்களை சேனல் மாற்றி புறக்கணிப்போம் வாருங்கள்!

******

Wednesday, October 13, 2010

இன்னும் சில மனிதர்கள்

"நம்ம வடக்குப்பட்டி ராமசாமி தெரியும்ல..."

"தெரியுமாவா ! கடன்கார நாயி... நேத்து கூட பார்த்தேன். கொடுத்த காசை திருப்பித்தர வக்கில்லை, உனக்கெல்லாம் எதுக்குடா வேட்டிசட்டைன்னு மானாவாரியா கேட்டுட்டு வந்தேன்."

"இல்லப்பா, அவர் நேத்து ராத்திரி தூக்கு மாட்டி செத்துட்டாராம்."

"அடடா, தங்கமான மனுசனாச்சேப்பா ! ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டாரே. நேத்து கூட ரொம்ப நேரம் மனசு விட்டு பேசிட்டு இருந்தேன். ஒரு வார்த்தை என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்ல. இப்படித் தான் முட்டாள்த்தனமா ஏதாவது செய்ய வேண்டியது. என்ன மனுசங்களோப்பா !"

***************************************

"என்னண்ணே, இத்தனை வருசமா இந்த டிவிஷன்ல ராத்திரி பகலா வேலை பார்த்திருக்கீங்க. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம தூக்கி அடிச்சிட்டானுகளே, யூனியன் கேஸ் எடுப்போம்ணே!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்ப்பா!"

"இல்லண்ணே, உங்கள வேணும்னே கஷ்டப்படுத்துறாங்கண்ணே!"

"இருக்கட்டும்பா, புது டிவிஷனுக்குப் போய், இதைவிட இன்னும் நல்லா வேலை பார்த்து அவனுக மூக்கை உடைக்கிறேனா இல்லையா பாரு."

"இது என்னண்ணே லாஜிக், சத்தியமா புரியல"

"அது அப்படித்தான்பா!"

***************************************

"மச்சி, ஏற்கனவே கடியான சப்ஜெக்ட், இதுல கொஸ்டீன் பேப்பர் வேற டஃப். கண்டிப்பா நிறைய பேருக்கு கப்பு விழத்தான் போகுது!"

"சும்மா புலம்பாதே, இந்த பேப்பர் எழுதுன எல்லாரும் தூக்குறோமா இல்லையானு பாரு!"

"என்னடா உளர்ற?"

"பின்ன, அட்டானமஸ் காலேஜ்ல ஹச்.ஓ.டி எடுத்த பேப்பர்ல நிறைய அரியர் விழுமா, அதெல்லாம் தலைமை நம்ம காப்பாத்தும்டா!"

" ஓ, இப்படி ஒரு ஈகோ பாய்ண்ட் இருக்குல்ல!"

***************************************


Tuesday, September 21, 2010

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் "மருதநாயகம்"


தமிழ்த் திரையலகை ஹாலிவுட் தரத்துக்கு மாற்றும் முயற்சியில் சிறிதும் தளராத சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் "மருதநாயகம்". சன் டி.வி. அலுவலத்திற்கு சென்ற கமலஹாசன், கலாநிதி மாறனை மரியாதை நிமித்தமாக சந்தித்தபிறகு வரலாற்று சிறப்புபிக்க இந்த  நிகழ்வு நடந்ததாக சன் டி.வி. ஃப்ளாஷ் நியூஸ் தெரிவித்தது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக சன் பிக்சர்ஸ் எப்போதும் தயாராக இருப்பதாகவும், போதிய நிதியுதவி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த படத்துக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளது என்றும் விரிவான செய்திகளில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று தரம் வீதம் மூன்று நாட்களுக்கு ஒளிபரப்பட்டது.

******
இன்று "மருதநாயகம்" படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  முதல்வர் கலைஞர் பேனாவை எடுத்துக் கொடுக்க, நடிகர் கமலஹாசன் கோப்பை பிடித்துக் கொள்ள கலாநிதி மாறன் கையெழுத்திட்டார். தமிழ் திரையுலகமே திரளாகக் கலந்து கொண்டது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இயக்குநர் சந்தானபாரதி ஏதேதோ பேசினார். ஆனால் எதுவும் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலையில் அவர் கமலஹாசனை நிறையவும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனை அதை விட நிறையவும் புகழ்ந்து தான் பேசியிருப்பார் என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் பெருத்த கரகோஷம் எழுப்பினர். 

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டும் விழா தலைமைச் செயலக வளாகத்தில், புதிதாக அமைக்கப் பட்டுள்ள "கலைத்துறை கமாண்டோ டாக்டர் கலைஞர் திரைப்பட கிராமத்தில்" மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக சோனியா காந்தி அவர்களும், அவருக்குத் துணையாக ராகுல் காந்தி அவர்களும், இவர்கள் இருவரும் வருவதால் வேறு வழி இல்லாமல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கலைஞர் அவர்கள், "திக்கெட்டும் பரணி பாடும் தமிழ் மண்ணில் சட்டென்று செட்டு போட ஓர் இடமில்லை என, திரைத் துறையை தன் செங்கரத்தால் தாங்கும் தம்பி கலாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க தலைமைச் செயலகத்திலேயே இடம் தந்து திரைத்துறையை வாழ வைக்கும் இந்த அரசு, இது ஏழை எளிய மக்களை மகிழ்விக்கும் கலைத்துறைக்கு நம் கழக ஆட்சி தரும் பரிசு" என்று பெருமை கொண்டார். படத்துக்கான முதல் போஸ்டருக்கு கலைஞர் பசை தடவிக் கொடுக்க, சோனியா காந்தி அதை தலைமைச் செயலக வளாகத்தின் முகப்பு வாயிலில் ஒட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், " எந்திரன் ரிலீஸ் ஆகி, 100வது நாள் விழாவில் கலாநிதி மாறன்ட்ட பேசிட்டு இருக்கும் போது, இந்த மாதிரி... உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையா சன் டி.வி. யில எந்திரன் ஒளிபரப்பும் வரை நம்ம பாண்டு இருக்கு. அதுக்கு முன்னாடி ஒரு நாலு நாள் லீவு கொடுத்தீங்கன்னா, இமயமலைக்கு ஒரு ஷார்ட் ட்ரிப் போய்ட்டு வந்திருவேன் அப்டீன்னு கேக்கும் போது, ரொம்ப பெரிய மனசு பண்ணி நாலு நாள் லீவு தந்தார். இத நான் இங்கே ஏன் சொல்றேனா, கமல் என் உயிர் நண்பர், கலையுலத் தாய் எங்களையெல்லாம் நடக்க விட்டு கூட்டுட்டுப் போதும் போது, கமலை மட்டும் தோளில் தூக்கி வச்சு தூக்கிப் போனா, அந்த அளவு கலைக்காக பாடுபட்டவர். அவர் கூச்சப்படாம,  நடுவுல ரெண்டு நாளோ, மூணு நாளோ லீவு கேட்டு வாங்கிக் கொள்ளலாம், அந்த அளவு பெருந்தன்மை கொண்டவர் கலாநிதி மாறன், மற்றபடி "மருதநாயகம்" படத்துக்கும் இத்தாலிய மொழியில் வெளிவந்த "மஷிதோநாய்கா" படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்!" என்று பாராட்டினார்.

கலாநிதி மாறன் அடுத்ததாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக வந்த அதிகாரப்பூர்வமற்ற தகவலையடுத்து இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டு கலாநிதி மாறனை மனம் குளிரப் பாராட்டினர்.

******
சன் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சியாக, "மருதநாயகம் படம் போஸ்டர் ஒட்டும் பசை உருவான விதம்" ஒளிபரப்பப்பட்டது. இதில் பசைக்கான மைதா மாவு வாங்குவதில் துவங்கி, பசை காய்ச்சும் அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாகக் காட்டப்பட்டன. இதில பேட்டியளித்த கிரேசி மோகன், "பசையுள்ள பார்ட்டி தான் மருதநாயகத்தை தயாரிக்க முடியும்னு நான் கமல்கிட்ட முன்னயே சொன்னேன். அது கலாநிதி மாறன் தான் னு கண்டுபிடிக்க கமலால் மட்டும் தான் முடியும். ஏன்னா அவர் தான் ஒரு படம் விட்டு ஒரு படத்துக்கு எனக்கு வசனமெழுத வாய்ப்பு தருவார். எல்லாரும் சொல்ற மாதிரி இந்த படத்தோட போஸ்டர், மழை வெயில் எல்லாத்தையும் தாங்கி ஒரு வருசம், ரெண்டு வருசம் கிழியாம, சாயம் போகாம இருக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்" என்றார். 

இதையடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் "மருதநாயகம்" படத்துக்கு போஸ்டர் ஒட்டும் விழா அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்றும் அதை சன் டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

******
இன்று சன் பிக்சர்ஸ் வழங்கும் "மருதநாயகம்" திரைப்படத்துக்கு டிக்கட் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட்டை அடுத்துள்ள 100 ஏக்கர் அளவுள்ள காலியிடத்தில் மிகப்பிரம்மாண்டமான டிக்கெட் கவுண்ட்டர் செட் அமைத்து, நடைபெற்றது.
விழாவில் முதல் டிக்கெட்டை அமெரிக்க அதிபர் ஒபாமா கிழித்துக் கொடுக்க, உகாண்டா நாட்டு அதிபர் யோவெரிமுசுவெனி பெற்றுக் கொண்டார். டிக்கெட் விலைக்கான செலவை உலக வங்கி சலுகை வட்டியில் உகாண்டா நாட்டுக்கு வழங்கியிருப்பதாக பி.பி.சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் வையாபுரி, "நமது படம் ஹாலிவுட் தரத்தையும் தாண்டியது என்பதை நிரூபிக்கவே ஹாலிவுட்டைத் தாண்டி உள்ள இடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம். இந்த சாதனையை நிகழ்த்த திரு.கலாநிதி மாறன் அவர்களைத் தவிர வேறு எவராலும் முடியாது" என்றார். டிக்கெட் கவுண்ட்டர் செட்டுக்கு முன்,  தோட்டா தரணி கைவண்ணத்தில் உருவான 400 அடி ஆஸ்கார் விருதின் கட் அவுட் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நடிகர் கமலஹாசன், "சொல்லனும், சொல்லனும்னு முடிவு செய்துவிட்டபடியால் எல்லாத்தையும் சொல்லனும், சொல்ல வேண்டாம்னு நினைச்சிருந்தா சொல்லாமலே இருந்திருப்பேன். ஆனால் சொல்லனும்னு முடிவு செய்துவிட்டதால் எல்லாத்தையும் சொல்றேன். கலைஞர், தலைவர், முதல்ல சொல்லனும்னா முதல்வர். அவர் என் தகப்பனார். இதை சொல்ல எனக்கு எந்த மேடையும் தேவையில்லை, இருந்தாலும் சொல்வேன். என்னை தமிழ் படிக்க வைத்த வாத்தியார் என்றும் சொல்வேன். மருதநாயகம் பற்றி சொல்லனும், அதற்குமுன் இதைப் பெற்றுத் தந்த கலாநிதி மாறனைப் பற்றி சொல்லனும்.  நன்றி என்ற செம்மொழி சொல் கொண்டு சொல்லலாம், ஆனால் 'என்னிடம் வந்து நீயும் மாட்டிக் கொண்டதற்கு நன்றி, கொஞ்சம் ஓராமாய் நின்று வேடிக்கை பார்' என்று என்னிடம் அவரே சொல்லிவிட்ட பிறகு நான் என்ன சொல்ல முடியும். இருந்தாலும் சொல்வேன் நன்றி." எனறு கண்கலங்கினார்.

அடுத்து பேச வரும் கலாநிதி மாறன், "மன்னிக்கனும், வால்ட் டிஸ்னி மூவீஸ் தயாரிப்பில் பாதியில் நிற்கும் ஒரு படம் விலைக்கு வந்திருக்கு. அது பற்றி பேசி முடிக்க வேண்டியிருப்பதால், இப்பொழுது விடை பெறுகிறேன். நன்றி!' என்று கூறிவிட்டு அவசரமாக கிளப்பிச் சென்றார்.

எச்சரிக்கை:
இவையெல்லாம் நடக்க அநேக வாய்ப்புகள் இருந்தாலும், இப்பொழுதைக்கு "இது முழுதும் எனது கற்பனை" என்றும்,  இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்ட நிகழ்வுகளோடு இணைத்து யோசிப்பது அவரவர் கற்பனை சக்தியைப் பொறுத்ததே என்றும் என் சுயநலம் கருதி இந்த அறிவிப்பு. 

******

Monday, August 23, 2010

பெயரில்லாதவை - 23/08/2010

எனக்கு குறுந்தகவலில் வந்த கேள்வி.

" நான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்குக் போராடிக் கொண்டிருக்கிறேன் என நினைத்துக் கொள்ளவும், இந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு பாடலை அர்ப்பணிக்க வேண்டுமென்றால் நீ எந்த பாடலைத் தேர்ந்தெடுப்பாய்? என் மேல் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உடனடி பதில் அவசியம்"

அலுவலக மண்டைக்காய்ச்சலின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வந்த இந்த குறுந்தகவலுக்கு நான் அனுப்பிய பதில்,

"வெளக்கெண்ணைகளா, சாகப் போற நேரத்துல கூட பாட்டு டெடிகேட் பண்ணாத் தான் சாவீங்களா ? எவனோ ராப்பகலா உருவாக்குனதை நீங்க நோகாம டெடிகேட் பண்ணுவீங்களாக்கும் &%^&%^*& ???"

எதிர்முனையைப் புரிந்த வரையில், "என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா அதுக்குக் கூட திட்டுவீங்க?" என்ற பதிலை எதிர்பார்த்திருந்தேன். நல்ல வேளை, எதிர்முனை என்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் நட்பு என்பதால் ஒரு ஸ்மைலி மட்டும் பதிலாக வந்தது. 


******


சென்ற வாரம் மதுரை நகர் முழுவதையும் ஒரு போஸ்டர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது.  வழக்கம் போல் அண்ணன் "அ"னாவை வாழ்த்தி தான் என்றாலும், "கலைஞரின் குமுகியே வருக!" என்ற வாசகம் புதிதாக இருந்தது. காட்டு யானைகளை கட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்படும் "கும்கி" யானையாக அண்ணன் இருக்கிறார் என்பதைத் தான் உடன்பிறப்புகள் மெய்சிலிர்க்க புகழ்ந்திருக்கிறார்கள் என யூகிக்கிறேன். வாசகம் தயாரிப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பதினோரு நபர் குழுவிற்கு மதுரை மக்களின் சார்பாக வாழ்த்துகள். பின்னே, ஒரு இரண்டு நொடியாவது சிரிக்க வைக்கிறார்களே !


******

மெகா சீரியல் கேப்பில் வேறு வழியில்லாமல் விளம்பரம் பார்க்கும் வேலையற்ற என் போன்றோர்க்கு ஒரு அறைகூவல்: "கோடி கோடியாய் நாயகர்களுக்கு கொடுத்து எடுக்கப்படும் விளம்பரங்கள், ஒன்று சுவாரஸ்யமாகவாவது இருக்க வேண்டும், இல்லை விளம்பரப் படுத்தப்படும் பொருள், நடிக்கும் நடிகர் பிம்பத்தையாவது உயர்த்த வேண்டும். இது எதுவும் இல்லாமல் கடுப்பேற்றும் உப்பு சப்பில்லாத நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்கள் வரும் போது சேனல் மாற்றி நம் புறக்கணிப்பை தெரிவிப்போம், வாருங்கள்!"  

******

மனுஷ்யபுத்திரனின் "அதீதத்தின் ருசி" வாசித்தேன். ( பின்ன சும்மாவா, கவிதைத் தொகுப்பெல்லாம் வாசிப்போமாக்கும்!!!).  இரண்டு நாட்களாக மூக்கால் பேசுவது போலவே ஒரு உணர்வு. கவிதை எங்கெங்கும் அவ்வளவு மெல்லினம். 
சட்டென மனதில் ஒட்டிக் கொண்ட இந்த வரிகள், இறங்க மறுக்கின்றன. காரணம் தெரியவில்லை. 

"இளமையில் தேவதையாக இருந்தவர்கள் 
சாத்தானாக மாறும்போது 
பிறந்ததிலிருந்தே 
சாத்தானாக இருப்பவர்களை 
நடுநடுங்கச்செய்தார்கள்" 

******

கடந்த ஞாயிறு கவிஞர் நேசமித்ரனை மதுரைப் பதிவர்கள் சந்தித்தோம். பேச்சினூடே அவர் சொன்ன ஒரு விஷயம் ஏற்புடையதாய் இல்லை. எவ்வளவு மறுத்தும் அவர் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் ஒப்புக்கு சரி என்று ஒப்புக் கொண்டு வந்து விட்டேன். அவர் சொன்ன விஷயம், நான் சுவாரஸ்யமாக எழுதுகிறேனாம், இன்னும் நிறைய எழுத வேண்டுமாம். அது சரி. நான் என்ன வச்சுக்கிட்டா சார் வஞ்சகம் பண்றேன். 

******

நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.

******

Sunday, August 8, 2010

சமகால ட்வித்துவ தெறிப்புகளின் இன்னொரு காப்பி.

எழுத்தாளர்கள் சிலர் ஏன் பெண்பெயரில் எழுதுகிறார்கள் என ஓர் உளவியல் புத்தகம் எழுதுனும். அதை ஒரு பெண்பெயரில் எழுதலாமா என்று தான் பலத்த யோசனை.

என் கிருபை மட்டும் உனக்குப் போதும். அதற்கு மேல் கேட்டால் கெட்ட கோபம் வரும்.

கலாநிதிமாறன் இது செய்து, கலாநிதிமாறன் அது செய்து, கலாநிதிமாறன் ஏதேதோ செய்த எந்திரன் படத்தில் ரஜினி என்று யாரோ ஒருவர் நடித்திருக்கிறாராம்.

வீணாப்போனோர் அமைப்பின் தானைத்தலைவர் திடீரென காணாமல் போனதால் காணாப்போனோர் கழகத்தின் தலைவர் தானாக கூடுதல்பொறுப்பு வகிக்கிறாராமே, உண்மையா?

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவின் பரிசுத்த ஆவிவே, ஊற்றி வைத்திருக்கும் மாவை சீக்கிரம் வேகவைத்து இட்லியாக்கிக் கொடும! பசி உயிர் போகுது.

உன்னை நீயாக இருக்கவிடாத சுமையை உன் நன்மைகருதி ஒளித்துவைத்திருந்தேன். விமர்சனத்தைப் பொறுக்க முடியாத நீ இனி முகஸ்துதியை சுமந்து செத்தொழிவாய்

ஐயையோ, எனது ட்விட்டர் ஐடி "writer" என துவங்கவில்லையே. அப்போ நான் பெரிய எழுத்தாளனாகி தமிழுக்கு சேவை செய்யவே முடியாதா! #வருதுபாருங்கசந்தேகம்

இன்று கோமாளிமுகமூடி அணிந்துள்ளதால் என்ன வெறுப்பேற்றினாலும் சிரிப்புதான். ஒருநாள் போராளிமுகமூடி கிடைக்கையில் தெரியும் இந்தசிரிப்பின் வன்மம்

பிரபலஎழுத்தாளர் தன்பெயர்மறைத்து வெளியிடும் இணையபத்திக்கும் பயங்கரவரவேற்பென்றார்.அவர் எழுதுனார்னு தெரிஞ்சாத்தான் ஒருபய எட்டிப்பார்க்கமாட்டானே

மதுரையில் கக்கன் நூற்றாண்டுவிழா. நண்டு சிண்டுகளுக்கெல்லாம் வானுயர பேணர்கள். பார்க்கும் நமக்கே சிரிப்பையும் தாண்டி ஒருமாதிரி கூச்சமாயிருக்கு.

கவிதைப் புத்தகங்கள் பன்முகப்பயன் கொண்டவை. பக்கத்துக்கு 4 வரி தவிர மீதமுள்ள காலியிடம் அனைத்தும் பால் கணக்கு பேப்பர் கணக்கெழுத மிக்க உபயோகம்

புத்தகம் முதல்பக்க வாசிப்பு முடியுமுன்னரே அதுபற்றி பதிவெழுத கை அரித்தால், சிரங்குக்கு வைத்தியம் புத்தகத்தை மூடி வைத்து விடுவது தான்.

மதராசபட்டினம் படத்தின் "மேகமே, ஓ மேகமே பாடல்", Rain rain go away பாட்டின் Remix தானே !

100வது ட்விட் ஏதும் சிறப்பாக தோன்றாததால் இந்த இடம் காலியாக விடப்படுகின்றது. இருக்கும் 99ல் பிடித்த ஒன்றை 100வதாக நினைத்துக் கொள்ளுங்களேன்.

பந்த் முழுவெற்றி என்றால் பந்த் முழுவெற்றி என மட்டுமே கொள்ள வேண்டும்.அப்போ, பெட்ரோல்விலை குறைந்து விட்டதா என துடுக்குற்றால் மூக்குடை தான்.

"தி"னாக்கு "தி"னா போடணும்னு திருச்சி திமிங்கலம் என்றெல்லாம் பெயர் வச்சு கொல்றாங்க.திருச்சில எப்படிய்யா திமிங்கலம்? #சன்டிவி சங்கீதயுத்தம்

குடிகார நண்பர்கள் பற்றி ஒரு குறையுமில்லை, குடித்து சலம்பும் போது கூட சேர்ந்து ரசிக்கலாம். ஆனால்... சென்றவாரம் குடித்துவிட்டு சலம்பியது பற்றி இப்பொழுது பெருமையடிப்பதெலாம் ரொம்பஓவர். that that enjoyment,that that time,thatsall இல்லையா?

தொட்டனைத் தூறும் மணற்கேணியெல்லாம் இப்பல்ல, எட்டு இன்ச் போர் போட்டு இறக்கு.
  
திறப்பது மட்டுமல்ல, பூட்டுவதும் அதே சாவி தான் - தத்துவமியம்பிய நண்பனுக்கு அமுக்குப்பூட்டுகள் விதிவிலக்கென்று புதியஏற்பாட்டை பதியச்சொன்னேன்.

******

Monday, July 26, 2010

ஆரக்கிள் எனும் குறி சொல்லும் தேவதை !பண்டைய கிரேக்க காலத்தில் கடவுள்கள் "ஆரக்கிள்" என்று அழைக்கப்பட்ட தேவதைகள் மூலமாக மக்களிடம் பேசினார்களாம். அல்லது மக்கள் தங்கள் சுக துக்கங்களை, தங்களுக்குத் தெரியாத‌ செய்திகளை அறிய ஆரக்கிள் என்னும் "குறி" சொல்லும் தேவதைகளை நாடினார்கள் யாரோ ஒருவர் ஆழ்மனதின் ஏதோ ஒரு அற்புத சக்தி மூலமாக, உங்களுக்கு நடந்த‌ ஒரு செயலைப் பற்றியோ அல்லது நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு நிகழ்வைப் பற்றியோ கூறும் போது ஒரு ஆச்சர்யம் உண்டாகும் தானே....

ஆனால் நாம் இப்போது ஆன்மீகம் பேசப்போவதில்லை, இந்த புள்ளியில் இருந்து தொடங்கி தொழில்நுட்பம் பேசப் போகிறோம். சரி, இப்போ இன்னும் ஒரு 40 வருடம் கழித்து நீங்கள் உங்களது அறுபதாவது பிறந்தநாளையோ, என்பதாவது பிறந்தநாளையோ கொண்டாடும் போது, உங்கள் பேரன் உங்களுக்கு ஒரு பரிசளிக்கிறான். திற‌ந்து பார்த்தால், நீங்கள் உங்கள் மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளின் தொகுப்பு ... அதுவும்... அவர் உங்களுக்கு அறிமுகமான போது, உங்கள் தோழியான பிறகு, உங்கள் காதலில் திளைத்திருந்த போது, உங்கள் மனைவியான புதிதில், திருமணத்திற்குப் பிறகு முதன்முதலில் நீங்கள் இருவரும் பிரிந்த்திருந்த சமயங்களில்......நீங்கள் அனுப்பிய தொகுப்பு. (சரி, "பொக்கிஷம்" கதை மாதிரி போகுதா, இருங்க விசயத்துக்கு வர்றேன்.)

இது சாத்தியமா ? இன்றைய நிலைமமைக்கே நிச்சயம் சத்தியம் தான். இப்படி எண்ணிலடங்கா செய்திகளை, எண்களை, இன்றைய‌ கணினி யுகத்தில் பரிமாறப்படும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்து நாம் "குறி" கேட்கும் போது வழங்கும் தேவதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் ஒன்று "ஆரக்கிள்" எனும் டேட்டாபேஸ்.
இப்போ "ஆரக்கிள்" எனும் இந்த குறி சொல்லும் தேவதை எப்படி வேலை செய்கிறது என கொஞ்சம் சுருக்கமாவே பார்க்கலாம்.

ஆரக்கிள் சர்வர்(server) இரண்டு பகுதிகளைக் கொண்டது. பயனாளிகள் தகவலை அடைய உதவும் வழி, இன்ஸ்டன்ஸ் (instance) முதலாவது. மற்றொன்று தகவல் பெட்டகம் (database). ஒரு பயனாளி இந்த தகவல் பெட்டகத்திலிருந்து ஒரு தகவலைப் பெறவோ, புதிய தகவலை சேர்க்கவோ, அல்லது இருக்கும் தகவலை மாற்றவோ வேண்டுமென்றால், அவர் எஸ்.க்யு.எல் (SQL) என்ற கணினி மொழி மூலமே செய்ய முடியும். அதற்கு தேவையானவை இரண்டு.

1. ஆரக்கிள் சர்வராக(server) நிறுவப்பட்டுள்ள கணினிக்கும், பயனாளி உபயோகைக்கும் கணினிக்கும் இடையேயுள்ள நெட்வர்க். இது சரியாக இருக்கும் பட்சத்தில் பயனாளியின் கேள்வி (query) சர்வரை அடைந்து விடும்.
2. ஆரக்கிள் டேட்டாபேஸில் பயனாளிக்கு அளிக்கப் பட்டிருக்கும் உரிமைகள் (privileges). இந்த உரிமை சரியாக இருக்கும் பட்சத்தில் தனக்குத் தேவையானவற்றை பயனாளி பெற்றுக் கொள்ள முடியும்.

சரி, ஆரக்கிள் எப்படி தகவல்களை சேர்த்து வைக்கிறது? 

ஆரக்கிள் டேட்டாபேஸில் தகவல்கள் பட்டியல்களாகவே (tables) சேமிக்கப் படுகின்றன். இந்த பட்டியல்கள் அடங்கிய கோப்புகள் (files), முக்கியத்துவம் கருதி மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன.

1. தகவல் கோப்பு (datafile)
2. கட்டுப்பாட்டு கோப்பு (controlfile)
3. தகவல் பரிவர்த்தனைக் குறிப்புக்கான கோப்பு (redo log file).

இந்த கோப்புகளில் எழுதப்படும் தகவல்கள் அனைத்தும் "ஆரக்கிள் ப்லாக்ஸ்" (oracle blocks) எனப்படும் சிற்சிறு துண்டுகளாகவே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நமக்குத் தேவையான ஒரு தகவலை ஆரக்கிள் டேட்டபேஸிலிருந்து எப்படி பெறுவது என பார்ப்போம்.

1. பயனாளி தனக்குத் தேவையான கேள்வியை எஸ்.க்யு.எல் கணினி மொழியில் கேட்கிறார்.
2. நெட்வொர்க் இணைக்கும் பட்சத்தில் அது ஆரக்கிள் சர்வரை அடைகிறது.
3. ஆரக்கிள் இன்ஸ்டன்ஸ் அந்த கேள்வியின் பொருளை கிரகித்து அதற்கான தகவலைப் பெற முனைகிறது.
4. அதற்காக இன்ஸ்டன்ஸிலிருந்து டேட்டாபேஸை இணைக்கும் பின்புல செயல்முறைகள் செயல்படத் தொடங்குகிறது.
5. பின்புல செயல்முறைகள் சரியான தகவலை கட்டுப்பாட்டு கோப்பு (through controlfile) உதவியுடன் தகவல் கோப்பிலிருந்து (from datafile) பெற்று
 இன்ஸ்டன்ஸ் வழியாக பயனாளிக்கு தெரிவிக்கிறது.
6. இணையாக, என்ன பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற முழு விவரத்தையும் தகவல் பரிவர்த்தனைக் குறிப்புக்கான கோப்பில் (redo log file) சேமித்தும் வைக்கிறது. 

இவை அனைத்தும் சரியாக இயங்கும் பட்சத்தில், பயனாளி கேட்ட தகவல் நொடிப் பொழுதில் அவருக்குக் கிடைக்கிறது. 


இன்றைய எண்மயமாக்கப்பட்ட கணினி உலகில், வங்கி கணக்கு முதல் ரயில்வே முன்பதிவு வரை,  மின்னஞ்சல் கணக்கு முதல், தொலபேசி இணைப்பு வரை, குறுந்தகவல் முதல் தேர்தல் முடிவு வரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அனைத்துமே ஏதேனும் ஒரு தகவல் பெட்டகத்தில் (database) இருந்து தான் இயங்குகிறது. எல்லையற்ற தகவல்களை ஒருங்கிணைத்து, பட்டியலிட்டு தேவையான நேரத்தில், தேவையான அளவில், தேவையான நபருக்கு வழங்குவதில் தான் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தின் சூட்சமம் இருக்கிறது.

***

Monday, May 31, 2010

பண்புத்தொகை

இல்பொருள் உவமை அணிக்கு உதாரணமாக 
இலியானா இடுப்பை சொல்லும்
மாணவனை வைத்துக் கொண்டு 
என்னதான் செய்வதென,
நொந்து கொண்டான்...
படிக்கும் காலத்தில் 
பண்புத்தொகைக்கு, கூடப் படித்த 
பைந்தமிழ்ச் செல்வியை 
வம்பிழுத்து சிநேகம் வளர்த்த 
வாத்தியார் நண்பன்.
**************************************

Wednesday, May 5, 2010

பெயரில்லாதவை - 05/05/2010


எனக்கு தெரிந்த குட்டிப் பசங்களுக்கு கணினி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அப்பொழுது தான் முதன் முறையாக கணினியைக் கையாள்கிறார்கள். எனவே முதலில் "பெயிண்ட்" அப்ளிகேஷனை திறந்து காண்பித்தேன். பிறகு அவர்களே ஒவ்வொருவராக "மௌஸை" பிடித்து இயக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு குட்டிப் பையன் "மௌஸை" இயக்க சிரமமாய் இருந்ததால்,  ரொம்ப ஆர்வக்கோளாறில் தன் சுட்டுவிரலைக் கொண்டு "மை கம்ப்யூட்டர்" ஐகானை சுட்ட ஆரம்பித்து விட்டான்.  எனக்கு சிரிப்பு வந்து விட்டது.  மானிட்டருக்குள்ளே போக இருந்தவனை ஆசுவாசப் படுத்தி, "மௌஸ்" செயல்பாடு பற்றி விளக்க ஆரம்பித்தேன். பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பொடியன், "அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" ன்னு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி பார்த்தான். நான் பல்பை பெற்றுக் கொண்ட திருப்தியோடு பயிற்சியைத் தொடர்ந்தேன்.

**************************************************************************************

குறுந்தகவலில் வந்த ஒரு துணுக்கு:

"மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரனும்னா கல்லூரித் தேர்வையெல்லாம் T20 கிரிக்கெட் முறைக்கு மாற்றனும். தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு,  இருபது மதிப்பெண்ணுக்கு வைக்கனும். ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும். வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும். தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு முறை "அடிஷ்னல் ஆன்ஸர் ஷீட்" வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்" நடனமாடனும்." 

**************************************************************************************

சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"

3இடியட்ஸ் தமிழ் வெர்ஸனுக்கு யாராரையோ யோசிக்கிறாங்க. என்னோட டெரர் காம்பினேஷன்: பிரசாந்த், அப்பாஸ், ஸ்ரீகாந்த் #செத்தான்எதிரி.

வீடெல்லாம் ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படுற, ஒட்டடையே வீடா இருக்கேன்னு சிலந்தி என்ன கவலையா படுது? #ஜே.ஜே #டயலாக்

மந்தபுத்தியுள்ள செம்மறி ஆட்டுக் கூட்டம் மட்டுமல்ல, புத்திசாலி வெள்ளாடுகளும் கசாப்புக் கடைகளுக்குத் தான் கொண்டு செல்லப்படுகின்றன. #தேர்தல்

**************************************************************************************

வலைமனை தளத்தில், சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் ஒரு படம் போட்டு அதற்கு நம் கமெண்ட் கேட்டிருந்தார். நான் சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது போல. அந்த படமும், அதற்கு என் கமெண்ட்டும், அவரது அனிமேஷனும் உங்கள் பார்வைக்காக (ரொம்ப லேட் ஆகிருச்சோ?)**************************************************************************************
நன்றி, மீண்டும் சந்திப்போம் !
**************************************************************************************

Friday, April 30, 2010

ஒன்னுமில்லை "எங்க வீட்டு நாய்க்கு நாலு நாளா காய்ச்சல். ஜுரத்துல அது முனங்குறது உன் குரலைத் தான் ஞாபகப் படுத்துது".  இது ஒரு செய்தி. இதையே கவிதையா மாத்தினா,  
"கொஞ்சும்
நாய்க்குட்டி,
உன்னை
நினைக்க வைக்கிறது
அன்பே !"

மேலும் வாசிக்க, 

Thursday, April 15, 2010

விருந்தோம்பல்


அரைஞான் 
கொடியிலிருந்து
நீளும் கயிறு
ஜன்னலில்
முடிந்திருக்க,

"போத்தீஸ்" பாட்டியின் 
பட்டுப் புடவை கணக்கில்
பரவச நிலையிலிருக்கும்
ப்ரைம் ஸ்லாட்டின்
விளம்பர இடைவேளையில்
எதை எதிர்பார்த்து
காத்திருக்கிறீர்கள்,

முகம் திரிந்து 
நோக்கிக் குழையாத
விருந்தோம்பலையா?

**********************************

Monday, April 12, 2010

மூன்று பத்துரூபாய்க்குக் கிடைக்கும் பிளாஸ்டிக் பட்டாம்பூச்சிஇட்ட முட்டை இரண்டில்
ஒன்றை மட்டும் பொரித்து
டயட் கன்ட்ரோலில் வளர்க்கின்றன, 
அபார்ட்மெண்ட் தாழ்வாரத்தில் 
கூடுகட்டும் புறாக்கள்.

*****************************

கண்ணாடித் தொட்டி முழுதும்
அழகழகாய் மிதக்கின்றன
வண்ணமயமாய் 
பிளாஸ்டிக் மீன்கள்,
தண்ணீர் மாற்றும் 
தொல்லையின்றி.

*****************************

சக்கரை பொரிகடலை 
சம்பளமின்றி 
முனியோட்டம் விரட்டி 
கூர்க்கா வேலை பார்க்கிறார்
முச்சந்தி வீட்டின் முன் 
கம்பிக்கூண்டு பிள்ளையார்.


*****************************

Wednesday, March 24, 2010

மணற்கேணி போட்டி - வாழ்த்துக்கள் நண்பர்களே !சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் இணைந்து நடத்திய கருத்தாய்வு போட்டியில் அரசியல்/சமூகம் பிரிவில் நமது தருமி ஐயா வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்டுரை   சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் 


 இலக்கியப் பிரிவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு.பிரபாகர் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது படைப்பு தமிழர் இசை

அறிவியல் பிரிவில் திரு. இரா.இரஞ்சித் அவர்களின் படைப்பு நவீனகால நுண்ணோக்கிகள் மற்றும்,
நமது டாக்டர்.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) வெற்றி பெற்றுள்ளன. 

போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள். சிறப்பாக நடத்தியிருக்கும் சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். 

வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் மதுரைக் காரர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.


Tuesday, March 23, 2010

என் பிரிய இளம் தம்பதியினரே !

என் கல்லூரி சமயத்தில் வாசித்து, பிடித்துப் போய் விடுதி அறை சுவரில் எல்லாம் மாட்டி இருந்த "கலீல் கிப்ரானின்" திருமணம் பற்றிய வாசகங்கள். இப்பொழுது தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அழகிய மனக்கதவு திறப்பது போல இருக்கிறது. தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். 


"திருமணம் பற்றி கலீல் கிப்ரான்" 


என் பிரிய இளம் தம்பதியினரே !


நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் என்பதாகவே பிறந்தீர்கள்,
காலந்தோறும் இரண்டறக் கலந்தே இருப்பீர்கள்.

மரணத்தின் இறகுகள் உங்களை வருடும் தருவாயிலும்,
இல்லறத்தில் இணைந்தே இருப்பீர்கள்.

என் பிரிய இளம் தம்பதியினரே !
எங்கெங்கும் மௌனமாய் வியாபித்திருக்கும் 
இயற்கையின் நினைவலைகளிலும் இன்பமாய் சேர்ந்திருப்பீர்கள்.

ஆனால்,

உங்கள் இணைபிரியா நெருக்கத்திலும் 
சிறு இடைவெளி இருக்கட்டும்.
அந்த இடைவெளியில் உங்கள் இருவருக்குமான 
தனித்துவம் தென்றலாய் வீசட்டும்.

காதலில் திளைத்திருங்கள், அதையே விலங்காக்கி இறுக்கிக் கொள்ளாதீர்கள்.
மாறாக மனதின் கரைகளை முத்தமிட்டு உள்செல்லும்,
நுரையும் அலையுமான கடலைப் போல காதலியுங்கள்.

மகிழ்வின் கோப்பையை ஒருவருக்கொருவர் நிரப்பிக்கொள்ளுங்கள்,
உணவைப் போலவே அன்பையும் பரிமாறிக் கொள்ளுங்கள்,
ஆனால், உங்கள் துணைக்கான உணவிற்கும் 
உங்களையே சார்ந்திருக்கும்படி செய்துவிடாதீர்கள்.

ஜோடிக் குயில்களாய் பாடித் திரியுங்கள், அதே சமயம்
தனிமையின் சங்கீத்திலும் மனமுருகப் பழகிக் கொள்ளுங்கள்.
குழலாயினும் துளைகள் தனித்திருந்தால் தானே இன்னிசை பிறக்கும்.

உங்கள் இதயத்தை உங்கள் துணைக்காகவே அர்ப்பணியுங்கள்,
ஆனால் அதன் சுமையை உங்களை 
அறியாமல் கூட அவர்மீது அழுத்தி விடாதீர்கள். 
உங்கள் இருவர் இதயங்களின் ஒத்த இசையை
வார்த்தைகள் அல்ல, வாழ்க்கை தீர்மானித்துக் கொள்ளட்டும்.

இணைந்தே இருங்கள், சார்ந்திருக்கும் நிலைக்கு சென்றுவிடாதீர்கள்
பிரகாரத் தூண்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை, 
இணைந்தே கலசத்தைத் தாங்கி நிற்கின்றன.

வேம்பும் அரசுமாய் சேர்ந்து வளரலாம் - ஆனால்
ஆலமரமாய் வியாபிக்க நினைத்தால் அதன் நிழலில்
வேறெந்த செடியும் தளிர்விட முடியாது.

**************************************************************************
மூலம்:"Kalil Gibran on Marriage"

You were born together, and together you shall be forevermore.
You shall be together when white wings of death scatter your days.
Aye, you shall be together even in the silent memory of God.
But let there be spaces in your togetherness,
And let the winds of the heavens dance between you.
Love one another but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf.
Sing and dance together and be joyous, but let each one of you be alone,
Even as the strings of a lute are alone though they quiver with the same music.
Give your hearts, but not into each other's keeping.
For only the hand of Life can contain your hearts.
And stand together, yet not too near together:
For the pillars of the temple stand apart,
And the oak tree and the cypress grow not in each other's shadow.

**************************************************************************

Monday, March 1, 2010

பெயரில்லாதவை 01/03/2010


சென்ற வாரம், ஒரு கடை திறப்புவிழா அமர்க்களப் படுத்திட்டு இருந்தாங்க. கடை பெயரைப் பார்த்தா, "விர்ஜின் டிஸ்ட்ரிப்யூசன்" ன்னு இருந்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போய், என்னடா மதுரைக்கு வந்த சோதனை ன்னு பார்த்தா, மொபைல் ஃபோன் கடையாம். பேரு வைக்கிறவய்ங்க கொஞ்சம் யோசிச்சு வைக்கக் கூடாதா, பீதியைக் கிளப்புறீங்களேய்யா ?
*******************
எனக்கு ரொம்ப நாளாகவே ப்ளாகரில் இந்த "ஃபாலோயர்ஸ்" என்ற வார்த்தை கொஞ்சம் தர்மசங்கடத்தை கொடுப்பது போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இப்போ கூகிள் பஸ்ஸிலும், அட்ரஸ் புக்கிலிருந்து கொஞ்ச நண்பர்களைத் தூக்கி ஃபாலோயர்ஸ் ஆக்கி விட்டிருக்குகிறது. சரி பதில் மரியாதை செஞ்சா சாபம் விமோசனம் கிடைக்கும்னு துரத்தி துரத்தி ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். நாம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஃபாலோ பண்ணிக்குவோம் ன்னு அக்ரிமெண்ட் போடாத குறை தான். ஃபாலோயர்ஸ் என்ற வார்த்தைக்கு பதில் ஆர்குட்டில் இருப்பது போல "ஃபிரண்ட்ஸ் - நண்பர்கள்" ன்னு இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு.
*******************
சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"
"எப்பொருள் யாரார்வாய் கேட்பினும் கொஞ்சம் தள்ளி நின்று கேட்பதறிவு : எச்சில் முகத்தில் தெறிக்காமல் இருப்பதழகு."
"தமிழில் யோசித்து, ஆங்கிலத்தில் டைப்படித்து, அதை தமிழில் பார்த்து, ஒற்றுப்பிழைகளை சரி செய்ய மறுபடியும் ஆங்கிலத்தை தேடி... ஸ்ஸ்ஸ்ஸ் #முடியல்ல"
*******************
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு இணையதள முகவரி : http://www.view360.in/virtualtour/madurai/ . தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக.
360 டிகிரி அமைப்பு அருமையாக உள்ளது. ஒரு சுற்று பார்த்து வாருங்கள்.
*******************
சச்சினை பாரட்டத் துவங்கிய 200 க்கு சற்றுமுன் வரை எல்லோரும் நிச்சயமாக தோனியை திட்டிக் கொண்டிருந்து தான் இருந்திருப்போம். ஒரு சாதனை நிகழவிருக்கும் தருணம் பற்றி தோனிக்குத் தெரியாமலா இருந்திருக்கும். பிறகும் ஏன் பொறுமையை அவ்வளவு சோதித்தார் ? 360, 370 எடுத்தாலும் தென்னாப்ரிக்கா துரத்திப் பிடித்து விடும், இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம் என நினைத்திருக்கலாம். இல்லை, சச்சினை எதிர்முனையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கலாம். ம்ம்ம்ம் தெரியல, அவரிடம் தான் கேக்கணும்.
*******************
சென்ற வாரத்தில் மிகவும் கவர்ந்த பன்ச் "சினிமாவே வேணாம், அரசியலுக்கு வரட்டா?"

நன்றி மீண்டும் சந்திப்போம்.
*******************

Wednesday, February 24, 2010

நெப்ட்யூன் தேசத்து நேசமித்ரன்.தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை.  கடந்த ஞாயிறு (21/02/2010) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சந்தித்தோம்.  கவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...

இன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் செய்தல் "போலச்செய்தல்". நதியின் வழியெங்கும் கூடவே பயணித்து வருகிறது கூழாங்கல். தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது. கூழாங்கல் போலவே வழவழப்பாகவும், ரேகையுடனும் தான் இருக்கிறது கோலிக்குண்டு. கூழாங்கல் கிடைக்கப் பெறாதவர்கள் கோலிக்குண்டுகளை வாயினுள் சுழற்றி மொழி விளையாட்டு நடத்த முயற்சிக்கும் போது வார்த்தை மேலும் சிதிலமடையத்தான் செய்யும். மாறாக சில நதிக்கரைப் பயணங்கள் கூழாங்கல்லை கண்டடைய வழிவகுக்கும். இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான். 

வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ? இலட்சிய வாசிப்பும் இருக்கிறது, இலக்கில்லா வாசிப்பும் இருக்கிறது.  வார்த்தை பிரயோகம் உணர்ந்து, இடம் பொருள் 'ஆ'வல் உணர்ந்து, இன்ன தேவைக்காக வாசிக்கிறோம் என்றுணர்ந்து இலக்கடைவதை இலட்சிய வாசிப்பாகக் கொள்ளலாம். தொடர்ந்த இலட்சிய வாசிப்பு புதிய புதிய வார்த்தைகளைக் கண்டடைய உதவும். இவ்வாறான சில வார்த்தைகளே சூழ் கொண்டு, கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.

பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம். மொழியை வளைத்து, வளர்த்து ஒரு வார்த்தை நீளாமலும், இடை நிறுத்தாமலும் பத்தியம் பார்த்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் மகப்பேறு வரை தான். கவிதை பிரசவித்த பின் பெற்றவன் இறந்து விடுவான். அது தான் நல்ல கவிதைக்கான அடையாளம். 

ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே மாற்ற முடியும். நம்மில் பலர் ஸ்ரீ எழுதிய "மாமாவின் கவிதை"யை வாசித்திருப்போம். இதில் ஒரே ஒரு வார்த்தையை சேர்க்கும் போது கவிதையின் முகமே மாறி வேறொரு தளத்துக்கு உயர்ந்து விடுகிறது.

"பொதுக் கழிப்பிடங்களின் சுவர்களில்
பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்
சாலையோர நீர்க் கழிப்புகளில்
திரையரங்கு இடைவேளைகளில்
என எங்கேயும் பக்கம் பார்த்து
ஒப்பீடு செய்து கொள்கிறேன் .
...................................................
எப்போது பார்ப்பினும்
தவிர்க்க முடியவில்லை,
இன்னும் சற்றே பெரியதாய்
அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...."

என் பெயர்

இந்த கவிதையில் சேர்க்கப்பட்ட ஒரே வார்த்தை "சுவர்களில்", இறுதியில் நமது நினைப்பை சுக்குநூறாக உடைக்கும் 'குறி'யீட்டுச் சொல் "பெயர்".

பல தரப்பட்ட நினைவுகளைக் கலைத்துப் போட்டு, நடுவில் இணைக்கும் "நார்" போன்று ஒரு வார்த்தையை வைத்து விளையாடும் கவிதை விளையாட்டு நுட்பமானது. வாசிப்பவனே நார் தேடி எடுத்து, உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகளைக் கோர்த்து சரம் தொடுத்து பூப்பந்து செய்து மணம் நுகர்ந்து கொள்ள வேண்டியது தான். இணைக்கும் நார் தென்படவில்லையென்றாலும் ஒன்றும் மோசமில்லை, உதிரிப் பூக்களுக்கும் அதே மணம் தானே.

இனிதே மணந்தது அந்த ஞாயிறு மாலை. நன்றி நேசமித்ரன்.

Friday, February 19, 2010

மதுரை பெரியாஸ்பத்திரி.புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். மருத்துவமனை வந்து அவசர சிகிக்சை நடக்கும் போதும் கைகள் நடுங்கியபடி தன் தலையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண்.

ஞாயிறு காலை வீட்டிற்கு சொல்லாமல், திருப்பரங்குன்றம் மலைக்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது மலை.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே பாதி மலை ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சியாக அங்கே வரும் சில இளைஞர்கள் ஆட்டோவில் தூக்கிப் போட்டு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். முதலுதவி செய்யப்பட்ட பின், நர்ஸ் அவனது முகவரியை விசாரிக்க, தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எட்டு மணிநேரம் ஆன பின்பும் அவனது பெற்றோருக்கு தகவல் சொல்ல முடியவில்லை. அவர்கள் இவனை எங்கே தேடிக் கொண்டிருக்கிறார்களோ?

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும்  இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் நாய் குறுக்கிட, ப்ரேக் அடித்து சரிந்த வண்டியிலிருந்து விழுந்த தாயின் பின் தலை நேராக ரோட்டில் மோத ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வண்டியின் இடிபாடுகளிலிருந்து எழும் மகன், தாயை கொண்டு வந்து சேர்த்து விட்டு, நான்கு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான். அந்த பெண்மணிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

வாரம் ஒரு முறை மட்டும் வரும் மாநகராட்சி குடிநீர் குழாயை ஒட்டி நீண்ட வரிசையில் காலி குடங்கள். தண்ணீர் வரப் போகின்ற நேரம், வரிசை நீள்கிறது, குடங்களை காக்கின்ற ஆட்கள் கூடுகிறார்கள். சின்ன குடம், ஓட்டை குடம், ஏதோ கணக்கு வழக்குப் படி குடங்கள் மாறுகின்றன. மாற்றுக் கருத்துகள் எழுகின்றன, வார்த்தைகள் தடிக்கின்றன், வாக்குவாதம் முற்றுகிறது. குடங்களின் வரிசை கலைக்கப்படுகின்றது. கலைத்த பெண்மணியின் தலை முடி கொத்தாக பிடிக்கப்பட்டு, அருகிலுள்ள மின்கம்பத்தில் அடிக்கப்படுகின்றது. ரத்தம் கொட்டத் துவங்க, காவல் நிலையம் போய் விட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு வருகிறார்கள். முகம் முழுதும் ரத்தம். முன் தலையில், நெற்றிக்கு மேல் பதினான்கு தையல்கள். அந்த வலி எல்லாம் தெரியவே இல்லை போல, அடுத்த 48 மணி நேரத்துக்குள் முடியைப் பிடித்த பெண்மணிக்கு இன்னும் அதிக தையல் போட வைப்பதற்கான சபதங்களைப் பற்றியே விடாது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இன்னும்......

கணவனிடம் இரும்புத் தடியில் அடி வாங்கி தலை, முகம் முழுதும் கட்டுடனும், இடுப்பிலும் அருகிலுமாய் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும், காவ்ல்துறை வந்து விசாரிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாய் சொல்லும்   டிகிரி படித்த பெண்...

பள்ளி விட்டு வரும் போது, ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து ஒரு வாரம் நினைவு தப்பி, இன்று தான் அம்மாவிடம் ரொம்ப பசிப்பதாய் சொல்லி அழும் சிறுமி, அதைப் பார்த்து வெடித்து அழுது, பின்பு சிரிக்கும் தாய்...

செல்போனில் பேசிச் சென்ற சுவாரஸ்யத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்கத் தவறி, தலை குப்புற விழுந்து நான்கு நாளில் பாதி குணமான தைரியத்தில் மருத்துவர் இல்லாத நேரம் பார்த்து செல்போன் எங்கே எனத் தேடும் கல்லூரிப் பெண்...

இன்னும் எத்தனையோ பேர், எத்தனையோ விபத்துகள், எத்தனையோ விதமான சிகிச்சைகள். 

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் ஒரு நாளில் பார்த்த காட்சிகள்.  ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சுமையை இறக்கி வைக்கனும் போல இருந்தது, வைத்து விட்டேன். 

Saturday, January 30, 2010

இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.


மதுரை அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹாலில் கடந்த வெள்ளியன்று (29/01/2010) மாணவர்களுக்கான பதிவர் பயிலரங்கு சிறப்பாக நடந்தது.
பதிவரும், அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான தருமி ஐயா தலைமையில் நடபெற்ற பயிலரங்கில் பதிவுலக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்வின் சில துளிகள், நினைவிலிருந்து.

தலைமையாசிரியர் ஜெரி ஈசானந்தா,  ஈழத்திற்காக உயிராயுதம் ஏந்திய முத்துக்குமார் பற்றி நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு தான், தான் பதிவு எழுத முக்கிய காரணமாக இருந்ததையும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார். தனது கல்லூரி பருவத்தில் இருந்த வாசிக்கும் ஆர்வம், இப்போது வலைப்பதிவுகள் படிப்பது மூலம், வெகுவாக அதிகரித்திருப்பதாக சொன்னார். மாணவர்கள் பொதுநல நோக்கோடு சமுதாயத்தை அணுக பதிவுகள் முதற்படியாக அமையலாம் என்றார்.
அவர் குறிப்பிட்ட தடுப்புமுகாம் கவிதைகளிலிருந்து சில வரிகள்...

புதைகுழி மறந்த 
சதைபிண்டங்களிநூடே 
ஊர்ந்து ...நெளியுது 
மானுடம்.

வலைச்சரம் சீனா ஐயா குழுப்பதிவுகள் பற்றிக் கூறினார். ஒத்த கருத்துடைய நண்பர்கள் பொதுவான தளத்தில் புகுந்து விளையாட முடியும் என்றும், உதாரணமாக, வருத்தபடாத வாலிபர் சங்கம், பயமறியா பாவைகள் சங்கம், வலைச்சரம், பேரண்ட்ஸ் க்ளப் இன்னும் பல குழுப்பதிவுகள் பற்றியும், அவற்றை உருவாக்குவது பற்றியும், நண்பர்களை உறுப்பினர்களாக இணைப்பது பற்றியும் சில தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கினார். 

ஐயா பதிவுலகை கலக்கும் "எதிர் கவிதைகள்" பற்றி சொல்லிக் கொண்டிருக்க, கணினியை இயக்கிக் கொண்டிருந்த கார்த்திகைப் பாண்டியன், ஒரு கவிதையையும், அதற்கான எதிர்கவிதையையும் திரையில் காட்ட, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சீனா ஐயாவை இரு கவிதைகளையும் மைக்கில் வாசிக்குமாறு பணிக்க, அவர் கவிதைகளை வாசிக்க, ஐயோ கவிதையா, கலவரம் எதும் வெடிக்கப் போகுதோ என் நான் நினைக்கும் போதே.... நல்ல வேளை, மாணவர்கள் சிரித்துக் கொண்டே கவுஜைகளை கடந்து விட்டனர்.


நண்பர் ஸ்ரீ புதிதாக வலைப்பதிவு ஆரம்பிப்பது எப்படி என செயல்முறை விளக்கங்களுடன் செய்து காட்டினார். ஜிமெயில் ஐ.டி. உருவாக்குவதிலிருந்து, ப்ளாகருக்குள் நுழைவது, கெஜ்செட் சேர்ப்பது, இன்னும் பல தொழில்நுட்ப விஷயங்களை எளிமையாக விளக்கினார். மாணவர்கள் கவனித்தார்களா தெரியவில்லை, கலந்து கொண்ட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா குறிப்பு எடுத்துட்டு இருந்தாங்க. அமெரிக்கன் கல்லூரி, விஷ்வல் கம்யூனிகேசன்(தமிழில் என்ன?) துறைக்காக http://viscom-ac.blogspot.com/ என்ற வலைப்பூவும் துவங்கப்பட்டது. 


நண்பர் கார்த்திகைப் பாண்டியன் நிகழ்ச்சி முழுமைக்கும் தேவையான, பொருத்தமான ஸ்லைடுகளை கணினியில் இயக்கினார். மேலும் பதிவுலகில் இலக்கியம், நட்பு (தனிதனியா தான், ரெண்டும் சேராதுன்னு பெரியவங்க சொல்லிக்கிறாங்க) பற்றி பேசினார். இலக்கிய மும்மூர்த்திகள் (என்று யாரோ மூன்று பேர் பெயர்கள் சொனார், எனக்கு மனதில் பதியவில்லை) பதிவுலகில் சுறுசுறுப்பாக எழுதுவதாக பேசினார். பதிவுலகில் நீங்கள் காட்டும் உழைப்பு (அதாவது, எழுதுவதில் காட்டும் உழைப்பு) உங்களுக்கு நன்மதிப்பையும், நல்லவேலையும் கூட பெற்றுத்தரும் என்றும் சொன்னார்.  எழுத்து என்பதையும் தாண்டி பதிவுலகம் மூலம் நடைபெறும் ஆக்கப்பூர்வமான  நிகழ்வுகள் பற்றி அருமையாக பேசினார். 

வெறும் ஒத்த கருத்துடைய நன்பர்களுக்குள் நடக்கும் அரட்டை மட்டுமல்ல, இந்த நட்பு மூலமாக சமுதாயத்தில் ஒரு சிறு மாற்றமாவது கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் சொல்லித் தெரிய வைக்க முடியாது, உள்ளிருந்து தான் வர வேண்டுமென்றாலும் ஏற்கனவே ஆர்வமுள்ளவர்களுக்கு கார்த்தியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கும். முக்கியமாக ஒரு வாத்தியார்த்தனம் இல்லாமல், நண்பர்களிடம் பேசுவது போலவே இயல்பாகவே பேசினார்.


நான், என்னென்ன வகையில் பதிவுகள் இருக்கின்றன் என்றும், என்னென்ன வகையிலும் பதிவுகள் இருக்கலாம் என்றும், பதிவில் என்னென்ன செய்யலாம் என்றும், பதிவில் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், யாராரெல்லாம் பதிவு எழுதுகிறார்கள் என்றும், யாரார் வேண்டுமானாலும் பதிவு எழுதலாம் என்றும் எளிமையாக (????) சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தருமி ஐயா பதிவுலகம் பற்றி விரிவான விளக்கமும், துவக்கவுரையும் (பவர் பாயிண்ட் ப்ரசண்டேசன் வயிலாக) தந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தாமதமாக வந்ததால், நான் அவரின் உரையைத் தவற விட்டு விட்டேன். 

இறுதியாக, காட்சி ஊடகத்துறையின் தலைவர், பேரசிரியர் ப்ரபாகர் பேசும் போது, பதிவுலகம் மிகச்சிறந்த மாற்று ஊடகமாக இருக்கும் என்றும், வந்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். 


மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள். 

நண்பர்களின் இடுகைகள்:


******