Saturday, February 23, 2019

குற்றவுணர்வைப் போக்கும் பழி


அய்யனார் விஸ்வநாத் எழுதிய “பழி” நாவல் குறித்த வாசிப்பனுபவம்


எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் எழுதிய ‘பழி’ நாவலை அவரது வலைப்பூவில் தொடராக வந்தபோதே, முழுதும் வாசித்திருந்தேன். இருந்தும் இதிலுள்ள கதை மாந்தர்களின் சாகசத்தை ஒரே மூச்சில் வாசித்து அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே புத்தகத்தை வாங்கினேன். அதேபோல, நான்குமணி நேரத்தில் வாசித்தும் முடித்தேன். அரக்கோணத்திற்கும் சென்னைக்கும் இடையே இருப்புப்பாதைகளுக்கு அருகே, ஏதோவொரு பெயர் தெரியாத ஊரில், எந்த ஆயுதமும் இன்றி ஒருவனைக் கொடூரமாகக் கொலைசெய்வதில் துவங்கும் நாவல், பாண்டிச்சேரி, மதுரை, திருவண்ணாமலை, குண்டூர், ஊட்டி, கொடைக்கானல் என்று வெக்கை, புழுதி, குளிர், மழை என்று சுழன்று  இறுதி அத்தியாயத்தில் நாவல் துவங்கும் இடத்தில் வந்து நிற்கிறது. இதற்கிடையே தங்கள் இயற்பெயர், சொந்த ஊர், பின்புலம், விருப்பார்வம், நடவடிக்கைகள் அனைத்தையும் மறைத்து, முகம் தெரியாத தலைமை சொல்லும் வேலைக்காய், முன்பின் பகையில்லாத யாரையோ கொலைசெய்துவிட்டு, தடம் தெரியாமல் நழுவிச் செல்லும் மறைவுலக இளைஞர்கள் நால்வரின் கதையை இரத்தமும் சதையுமாய் சொல்கிறது, ‘பழி’.

அய்யனாரின் கதை சொல்லலில் சுழற்சி முறையிலான சில பின்னல்கள் இருக்கும். அந்த பாணி, ‘பழி’ நாவலில் மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. நாவலின் கடைசி அத்தியாயத்தை வாசிக்கும் யாரும் நிச்சயமாக மறுபடியும் நாவலில் முதல் அத்தியாயத்தை வாசிக்காமல் இருக்க முடியாது. ‘பழி’ என்னும் தலைப்புக்குக்கான காரணிகளான காமமும், குடியும், கொலைகளும் நாவல் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன. என்னதான் புனைவென்றாலும், வழிந்து திணிக்கப்படாமல் அவற்றிற்குண்டான தர்க்கங்களுடன் கட்டமைக்கப்பட்டிருப்பது அவற்றின் நம்பத்தன்மையை அதிகரிக்கின்றது.

தொழில்முறை கொலைகாரர்களான நான்கு நண்பர்களின் செய்நேர்த்திமிக்க தொழிலான கொலைகளையும், அத்தொழிலிற்கு அவர்கள் வரநேர்ந்த பின்புலக் கதைகளையும், அவர்களை ஆற்றுப்படுத்தும் குடி மற்றும் அலைக்கழிக்க வைக்கும் காமம் ஆகியவற்றில் தோய்த்தெடுத்துக் காட்சிகளாக விரியவைத்திருக்கிறார் அய்யனார்.

கதைசொல்லியின் பெயர் குறிப்பிடப்படாமலேயே நாவல் முழுவதும் நகர்கிறது. எந்தவித திருப்பமோ, தேவையோ இன்றி திடீரென கடைசி பத்து பக்கங்களில் மட்டும் அவனின் பெயர்சொல்லி விளிக்கப்படுகிறது. அதுவும் கதைசொல்லியின் பெயர் படைப்பாளியின் பெயராகவே இருக்கும் போது, அங்கே லேசாகப் புனைவுத்தன்மை அடிவாங்கியது போன்று தோன்றியது. மற்றபடி இரண்டாம் முறை வாசிக்கும்போதுகூட எந்தவிதத் தொய்வுமின்றி மிகப் விறுவிறுப்பாகச் சென்றது நாவல். அய்யனார் முன்னுரையில் மிகக்கொதிப்பானதொரு மனநிலையில், பரபரவென்றிருந்த காலகட்டத்தில் எழுதிய நாவல் என இதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த கொதிநிலையை நாவல் வாசிக்கும்போது நம்மாலும் உணரமுடியும் என்பதே அவர் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி. எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும், நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

-------------------------------
பழி (நாவல்)
அய்யனார் விஸ்வநாத்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் – 168
விலை – ரூ. 200
-------------------------------