Wednesday, June 29, 2022

தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?

சிறந்த அரசின் கொள்கை என்பது அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது, அவர்கள் மேலெழுந்து வரும் வரை தொடச்சியான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது.

கல்வித் துறையில் எண்ணிக்கை குறைவாகத் தேர்வாவதால் மட்டுமே ஒரு சிஸ்டம் சிறந்தது என்றோ அதிகமானோரைத் தேர்ச்சி அடையச் செய்வதால் மற்றொன்று தரம் தாழ்ந்ததாகவோ ஆகிவிடாது. இந்தியா போன்ற மக்கள் வளம் மிகுந்த நாடுகளில் இளம் தலைமுறையினரின் ஆற்றலை முறைப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் மலிந்து போயிருக்கும் சமூகத்தில் கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் "சான்றிதழும்", வேலை வாய்ப்பும் ஒருவனை எத்தனை உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்று சிந்திக்க வேண்டும்.

மாறாக, 'தரம்' சரியில்லை என்று ஒரு கோட்டைக் கிழித்து ஒரு வகுப்பில் ஐம்பதுக்கு நாற்பது பேரைத் தோல்வியடையச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு கல்விச் சாலை பக்கம் திரும்பாத அதில் பெரும்பான்மையினர் சமூகத்தின் அதே அடுக்கிலோ அல்லது அதற்குக் கீழேயேயோ தேங்கிவிடுகின்றனர். அப்படியின்றி, எளிய தேர்ச்சி முறைகள் மூலம் அவர்கள் மேல் வகுப்புகளுக்குச் செல்லும் போது கற்றல் அனுபவம் போக, தன்னம்பிக்கை, ஒரு சூழ்நிலையைக் கையாளும் மனப்பக்குவம், பரந்த உலகத்தைக் காணுதல் என்று அதிக அனுபவத்தையே பெறுகின்றனர்.

" பத்தாவது வகுப்பு வரை இந்த அனுபவம் போதும், உயர்கல்விக்கு கறாரான தேர்வு முறை வேண்டும்" என வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் யோசிப்பாரேயானால், ஒரு மாணவனின் சமூகக் கற்றல் பயணத்தை அரசும், இப்போதுள்ள கல்வி அமைப்பும் உயர்த்தி விட வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

இன்னொரு சாராரின் கருத்து, அரைகுறையாய் பட்டதாரியாக வெளிவரும் ஒருவனைக் காட்டிலும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் சிறந்த வேலைக்காரனாக வருவான் என்பது. சிறந்த வேலைக்காரனாக வந்து... உங்கள் பைக் டயருக்கு சிறந்த முறையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? அதற்கு அவன் அரைகுறை பட்டதாரியாகி ஒரு அலுவலகத்தில் மின்விசிறிக்குக் கீழ் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருக்கட்டுமே, அவன் தனது முதல் இரண்டு அலுவலகக் கடிதங்களை தப்பும் தவறுமாய் எழுதிப் பின் திருத்திக் கொள்ளட்டுமே... என்ன குறைந்து விடப் போகிறது?