Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, June 29, 2022

தேர்வுகள் கடினமாக்கப்பட வேண்டுமா?

சிறந்த அரசின் கொள்கை என்பது அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் வழங்குவது மட்டுமல்ல பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்குவது, அவர்கள் மேலெழுந்து வரும் வரை தொடச்சியான வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது.

கல்வித் துறையில் எண்ணிக்கை குறைவாகத் தேர்வாவதால் மட்டுமே ஒரு சிஸ்டம் சிறந்தது என்றோ அதிகமானோரைத் தேர்ச்சி அடையச் செய்வதால் மற்றொன்று தரம் தாழ்ந்ததாகவோ ஆகிவிடாது. இந்தியா போன்ற மக்கள் வளம் மிகுந்த நாடுகளில் இளம் தலைமுறையினரின் ஆற்றலை முறைப்படுத்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.  சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகள் மலிந்து போயிருக்கும் சமூகத்தில் கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் "சான்றிதழும்", வேலை வாய்ப்பும் ஒருவனை எத்தனை உயரத்திற்கு ஏற்றிச் செல்லும் என்று சிந்திக்க வேண்டும்.

மாறாக, 'தரம்' சரியில்லை என்று ஒரு கோட்டைக் கிழித்து ஒரு வகுப்பில் ஐம்பதுக்கு நாற்பது பேரைத் தோல்வியடையச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அத்தோடு கல்விச் சாலை பக்கம் திரும்பாத அதில் பெரும்பான்மையினர் சமூகத்தின் அதே அடுக்கிலோ அல்லது அதற்குக் கீழேயேயோ தேங்கிவிடுகின்றனர். அப்படியின்றி, எளிய தேர்ச்சி முறைகள் மூலம் அவர்கள் மேல் வகுப்புகளுக்குச் செல்லும் போது கற்றல் அனுபவம் போக, தன்னம்பிக்கை, ஒரு சூழ்நிலையைக் கையாளும் மனப்பக்குவம், பரந்த உலகத்தைக் காணுதல் என்று அதிக அனுபவத்தையே பெறுகின்றனர்.

" பத்தாவது வகுப்பு வரை இந்த அனுபவம் போதும், உயர்கல்விக்கு கறாரான தேர்வு முறை வேண்டும்" என வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் யோசிப்பாரேயானால், ஒரு மாணவனின் சமூகக் கற்றல் பயணத்தை அரசும், இப்போதுள்ள கல்வி அமைப்பும் உயர்த்தி விட வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதனை நாம் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

இன்னொரு சாராரின் கருத்து, அரைகுறையாய் பட்டதாரியாக வெளிவரும் ஒருவனைக் காட்டிலும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பட்டறைக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் சிறந்த வேலைக்காரனாக வருவான் என்பது. சிறந்த வேலைக்காரனாக வந்து... உங்கள் பைக் டயருக்கு சிறந்த முறையில் பஞ்சர் போட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? அதற்கு அவன் அரைகுறை பட்டதாரியாகி ஒரு அலுவலகத்தில் மின்விசிறிக்குக் கீழ் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருக்கட்டுமே, அவன் தனது முதல் இரண்டு அலுவலகக் கடிதங்களை தப்பும் தவறுமாய் எழுதிப் பின் திருத்திக் கொள்ளட்டுமே... என்ன குறைந்து விடப் போகிறது?

Saturday, October 7, 2017

பணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்

கரும்பலகை


அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் கல்வி, பெரும்பகுதி அவனது ஆசிரியர்களின் செயல்பாட்டை மையமாக வைத்தே செழிப்படைகிறது. போதிய அடிப்படை வசதியும், வெளியுலகம் குறித்த பார்வையும் மறுக்கப்படும், தேசத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, ஒரே ஊற்றுக்கண் அவர்களது கல்வி மட்டுமே. தங்களுக்குக் கிடைக்கக் கூடிய மிக சொற்ப வாய்ப்புகளைக் கெட்டியாக பிடித்து மேல் எழுந்து, தங்கள் தலைமுறையையே முன்னேற்றிய எத்தனையோ கிராமப் புற மாணவர்களைக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகையோரின் வெற்றிக் கதைகளில், நிச்சயம் அவர்களது பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கு முக்கியப் பங்கு இருக்கும். அத்தகைய பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள மனச்சுமையைப் பேசுகிறது எழுத்தாளர் அர்ஷியா எழுதிய ”கரும்பலகை” என்னும் நாவல். ”அரசு வேலை கிடைத்து விட்டது, அவர்களுக்கென்ன வேலை பார்த்தாலும் பார்க்காட்டியும் கை நிறைய சம்பளம், வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் விடுமுறை” என்ற பொதுப்பார்வைக்குப் பின்னால், அத்தகைய ஆசிரியர்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகள், மன உளைச்சல், சிவப்பு நாடா முறையில் சிக்கி சுண்ணாம்பாகும் அவலம், மிக நியாயமான கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல், அது தான் வழக்கம், இருக்கின்ற வட்டத்திற்குள் நின்று கொண்டு, தேர்வு சதவீதத்தை உயர்த்திக் காட்டு என்று கண்மூடித்தனமாக வாசிக்கப்படும் அறிக்கைகள், குறிப்பாக அரசு ஆசிரியப் பணியின் பொருட்டு, குடும்பத்தை விட்டு வேறு ஏதேனும் ஒரு குக்கிராமத்தில் தங்கியோ அல்லது தினம் நெடுந்தூரம் பயணம் செய்தோ வேலை பார்க்கும் பெண்களின் துயரம் ஆகியவற்றைப் பேசுகிறது நாவல்.

”போஸ்டிங் இலவசம், டிராஸ்ஃபர் காசு” – இது தான் நாவலின் கரு.  மனசாட்சிப்படி, வாங்குகிற சம்பளத்திற்கும், ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியப்பணிக்கும் உண்மையாய் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் மாணவர்களிடம், தன்னால் ஆன மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வர முயற்சிக்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி. அவரின் அன்றாட ஆசிரியப்பணியின் நேர்க்கோட்டுச் சித்திரம் தான் “கரும்பலகை” நாவல். பள்ளிக்கு வந்து போகும் போக்குவரத்து தூரத்தைக் கடக்கவே தங்கள் மொத்த சக்தியையும் இழக்கும் இன்றைய அரசுத் துறை ஆசிரியர்களின் பிரச்சனையைப் பேசுகிறது நாவல்.  நாடகத்தன்மையோ, மிகையுணர்வோ துளியும் இன்றி, நிஜத்தில் பணபலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண அரசுத்துறை ஆசிரியர் படும் கஷ்டங்களைத் தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

நாவலில் எங்கும் அறிவுரை சொல்கின்ற போக்கோ, அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்யும் பகுதிகளோ இன்றி, இயல்பில் ஒரு பிரச்சனையை தன் எல்லைக்குட்பட்டு ஒரு ஆசிரியை எவ்வாறு எதிர்கொண்டு அதனை சமாளிப்பாரோ அதை அப்படியே எழுத்துக்களாக்கி இருப்பது, நாவலின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. ஆசிரியை ராஜலட்சுமியும், ”பணிமாறுதல்” என்னும் கதாபாத்திரமும் மாறி மாறி தாயக்கட்டை உருட்டி விளையாடுவது தான் கதை. பெயர் தெரியாத ஒரு ஊருக்கு, ராஜலட்சுமியை “பணிமாறுதல்” அனுப்பி வைத்தால், அவர் அங்கே இருக்கும் குறைகளை வென்று தன்னால் ஆன அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்து அந்த “பணிமாறுதலை” தன் வசப்படுத்த முயல்கிறார். ராஜலட்சுமி கொஞ்சம் ஆசுவாசமாய் உணரத் துவங்கும் வேளை, “பணிமாறுதல்” மீண்டும் ஒரு தாயம் போட்டு அவரை வேறு ஒரு புது ஊருக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலைமை. இப்படி இந்த இரண்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பரமபதம் தான் இந்தப்புதினம்.

 நேரடி போக்குவரத்து வசதியின்மை, மத / சாதி ரீதியான கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளோடு தான், ஒவ்வொரு அரசுத்துறை ஆசிரியரும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சுயமுனைப்போடு கண்ணும் கருத்துமாய் வேலை செய்பவர்கள் ஒரு சிலர். ஆனால் பெரும்பான்மையினர், கட்டுப்பாடுகளும் சரியான மேற்பார்வையும் இல்லாததாலே எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல், மாதமானால் சம்பளம் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மந்த நிலைக்கு வந்து விடுகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நாவல் ஒரு பாடமாக அமையலாம்.

கதையின் நாயகி, கொள்கைவாதப் பிடிப்புகள் கொண்ட, நூறு சதவீத தூய்மை வாதி, அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் கொடிய வில்லன்கள். அவர்களையும், குலைந்து சரிந்து கிடக்கும் இந்த அமைப்பு முறையையும் நாயகி எப்படி தன் மதியூகத்தாலும், போர்குணத்தாலும் வெற்றி கொள்கிறார் என்றெல்லாம் ”கதை” சொல்லாமல், யதார்த்தத்திற்கு மிக மிக அருகில் நின்று, ராஜலட்சுமி என்னும் ஆசிரியையின் பணி வாழ்வில் இருந்து சில நாட்களை, அவற்றிற்கே உரிய ஏற்றத் தாழ்வுகளோடு மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் அர்ஷியா. பணம் கொடுத்தாவது, சொந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் ராஜலட்சுமிக்கும் தோன்றுகிறது. என்ன அமைப்பு முறை இது, உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும் அதற்குரிய அங்கீகாரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் அவருக்கும் வருகிறது. அவை எல்லாவற்றையும் மீறி, தன்னை நம்பி, தன்னிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளை, எப்படியாவது முன்னேற்றி அவர்களை சமூகத்தில் சிறந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற வேட்கை அவரைத் தொடர்ந்து, விடாமல் போராட வைக்கிறது. சிறுகச் சிறுகத் தான் விதைக்கும் தானியங்கள் சோலையாகும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குள் எப்பொழுதும் ஈரமாய் சுரந்து கொண்டே இருக்கின்றது. அந்தத் திறம் தான் அடுத்து எந்த ஊருக்கு மாற்றல் கிடைத்தாலும், அங்குள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே நம்ப வைக்கிறது. அவரது பயணமும் தொடர்கிறது.

எடுத்துக் கொண்ட கருவின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் கோர்வையான காட்சிகள், நேர்கோட்டிலிருந்து சிறிதும் விலகாத கதை சொல்லல், சொல்ல வந்த விஷயத்தை இயல்பாகப் பேசிய நடை, பலரும் அறிந்திராத ஒரு சமகாலப் பிரச்சனையின் உண்மையான பதிவு என்று பல விதங்களில் “கரும்பலகை” சிறந்ததொரு படைப்பாக ஆகியிருக்கிறது. அரசுத் துறை ஆசிரியர்களின் பணி மாறுதல், பணி நிரவல் தொடர்பான சிக்கல்களை ஒரு ஆசிரியையின் பார்வையில், நேர்த்தியாக எழுதியிருக்கிறது “கரும்பலகை”
வாழ்த்துகள், எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தைப் பதிப்பித்த “எதிர் வெளியீடு” நிறுவனத்தினருக்கும்.

******
கரும்பலகை (புதினம்)
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கங்கள்: 171
விலை: ரூ. 150.

******

Monday, September 18, 2017

கல்வி – மரணம் – பாடம்

தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது. சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாணவனும், கல்வியின் மூலம் ஏதாவது ஒரு நிலையில் தனக்கான ஊன்றுகோலைப் பிடித்து மேல் எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது. பள்ளிக்கல்வியில் வெகு சுமாராகப் படிக்கும் எத்தனையோ மாணவர்கள், தொடர் வாய்ப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு இந்த இலகுவான கல்வி முறை தான் காரணம். தகுதியில்லை என பெரும்பகுதியைக் கழித்துக் கட்டிவிட்டு சிறந்ததற்கு மகுடம் சூட்டும் முறை அல்ல இந்த கல்வி முறை, மாறாக சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் மேலே அழைத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கம்.

நூற்றாண்டுகளாக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் தான். ஒரு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, அதில் ஊட்டச்சத்து இல்லாமல் இளைத்திருப்பவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் கொடுத்து அவனையும் தேற்றி, பந்தய தூரத்தை கடக்க வைப்பது.

போதுமான நீண்ட கால அவகாசமும், சரியாக முன்னெடுத்துச் செல்கின்ற தலைமையும் இருந்திருந்தால், ”நீட்” தேர்வையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் ஆகியிருக்கும். ஆனால் நீட் எதிர்ப்புக்கான காரணம் அதுவல்ல. பலதரப்பட்ட பண்பாடு, மொழி, பொருளாதார, சமூக நிலை உள்ள பரந்துபட்ட தேசத்தை, ஒற்றைக் கொள்கை மூலம் அடைக்க நினைக்கும் முட்டாள்த்தனத்துக்கு எதிராக கிளம்பு எதிர்ப்பு இது. ஏற்கனவே கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலங்களை, தங்கள் பிடிவாதமான கடிவாளப் பார்வை கொண்டு, ஒடுக்க நினைக்கும் அடக்குமுறையாகத் தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மாநில இனங்களின் அடையாளங்களை அழிப்பதன் மூலமே, அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இருக்குமானால், அது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையாக நிச்சயம் இருக்காது.

சமீப காலத்தில், “நீட்” தொடர்பாக, மத்திய மாநில அளவில் நடந்த கலந்துரையாடல்கள் எதுவுமே ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லவில்லை. நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்று தெரிந்தே, மாநில வழிக்கல்விக்கு 85 சதம் ஒதுக்கீடு அளித்தது, மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிகள், மாநில அமைச்சர்களின் டெல்லி பயண நாடகங்கள் இப்படி எல்லாமே வெறும் கண் துடைப்பாகவே அமைந்தன. உடைத்து சொல்வதானால், இவையணைத்தும் மக்களை ஏமாற்றும் வேலையின்றி வேறு இல்லை. மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து தவறான வழிகாட்டுதல்களை செய்து கொண்டே இருந்தார்கள். எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை மக்களின் மனதில் போலியாக விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் தங்கள் பதவிகளுக்காக நடந்த பேரங்களை எல்லாம், நீட் குறித்த விவாதம் என்று பரப்பினார்கள். விளைவு, நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு உயிர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றுக் கணக்கான பிள்ளைகள், மனக்குமுறலோடும் ஆற்றாமையோடும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பெரும நிலை அரசியல் இப்படி தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இதற்கான உடனடித் தீர்வு கண்களுக்குத் தென்படுவது போல இல்லை. வழக்கம் போல, அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு, நாமெல்லாம் கிள்ளுக் கீரைகள், இங்குள்ள மக்கள், அவர்களுக்கான முதல்தர குடிமகன்கள் இல்லை. மாநிலத்தில் இருப்பவர்களுக்கோ தங்கள் நாற்காலிகளைக் காத்துக் கொள்ள வேண்டிய பரிதாமான நிலை. இது மேலே இருப்பவர்களுக்கு மிக வசதியாய் போய்விட்டது. நினைத்தபடி எல்லாம் அடித்து ஆடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசன் குடிகளை நினைக்க மறந்தாலும், குடியானவன் உழுவதை நிறுத்தக் கூடாது என்பது தானே விதி. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய சிறுமியின் மன உறுதியை, ”மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போவேன் என்று சொல்லிட்டு இருந்த, இப்போ மாட்டுக்கு வைத்தியம் பார்க்கப் போறியா” என்பது போன்ற எந்த சுடு சொல் வீழ்த்தியதோ தெரியவில்லை.  அவளின் மனவருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு, அவளுக்கு இருக்கும் மறு வாய்ப்புகள் பற்றி, மாற்றுப் பாதைகள் பற்றி மனம் விட்டு உரையாட, அந்த நேரத்தில் அவள் அருகில், அணுக்கமான ஒரு ஆசிரியரோ அல்லது அவள் உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடத் துணை நின்ற ஏதேனும் அமைப்புகளோ இல்லாமல் போனார்களே என்ற ஆதங்கம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

கிராமப்புற, விளிம்பு நிலை மாணவர்களிடம் பேச வாய்பு கிடைக்கும் போதெல்லாம், நாம் நினைக்கின்ற கனவு தேசம் என்று ஒன்று இல்லவே இல்லை. இங்கே ஏற்றத்தாழ்வுகளும், அவநம்பிக்கைகளும், அவமானங்களும் எப்பொழுதும் நம் வழியை மறித்து நிற்கவே செய்கின்றன. அதற்காக எல்லாம், மனம் நொந்து, உங்கள் பயணத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தொடர் முயற்சிகள் எப்பாடுபட்டேனும் திறக்காத கதவுகளைத் திறக்க வைக்கும், இல்லையென்றால், உங்கள் பயணத்துக்கான மாற்றுப் பாதையும்  இருக்கலாம், சரியான திசையைக் கண்டறிந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதே சாதிப்பதற்கான வழி. முழுதும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. ஏற்கனவே இதைப் போன்ற இடர்களை எல்லாம் உடைத்து பலர் முன்னேறி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் சந்திப்பீர்கள், அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு தக்க நேரத்தில் இளைப்பாறுதலைத் தரும். எப்படி இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தன் வாழ்நாள் கனவான மருத்துவப்படிப்பு அநியாயமாக மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அந்தச்சிறுமியின் மனநிலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறியும் ஆற்றல் ஒருவருக்குமில்லை. ஆனாலும், இந்தப்பிரச்சனை தான் என்றில்லை, எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் தயக்கங்களை விலக்கி, அவர்கள் மனதில் உள்ளதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு அவர்களுடன் உரையாடினால், அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் பல விபரீத நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்று தோன்றுகிறது. இன்று அந்தச் சிறுமிக்காக கண்ணீர் சிந்துகிற ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஒரு மரணத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை.

(நன்றி மலைகள் : http://malaigal.com/?p=10748)
******

Friday, May 9, 2014

முதல் தாயம்


முழுதாய் பத்து மணிநேரம் கரைந்திருந்தது, அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து. அதற்கு முன் மூன்று மணி நேரம் வெளியே வரிசையில் காத்திருந்தது வேறு. பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான தேர்வு என்றாலும் ரேஷன் கடை போல அடித்துப் பிடித்துக் கொண்டு தான் இடம் பிடித்து உள் நுழைய வேண்டியிருக்கிறதுபெருகிக் கிடக்கும் கல்லூரிகளின் புண்ணியத்தில் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளியே வரும் புதுமுக பொறியாளர்களின் எண்ணிக்கை அவ்வளவு இருக்கிறதுசுற்றுமுற்றும் அனைவரும் மிக பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் தன்னை ஒருவரும் கண்டுகொள்ளாமல் தனித்தீவில் இருப்பது
 போன்ற ஒரு பிரமை.

இவ்வளவு நேர காத்திருப்பில்இடையில் அவ்வப்பொழுது தேநீர் அருந்துவதற்காகவும், சிறுநீர் கழிப்பதற்காகவுமே இடத்தை விட்டு நகர்ந்தது. உணவருந்தவென்று எந்தவொரு இடைவேளையும் விடப்படவில்லை. நடுவே நேரமேற்படுத்திச் சென்று, சாப்பிட்டு விட்டு வரும் மனநிலையும் இல்லை. உடல் அயற்சியை மீறி மனபாரம் தான் பெரும்பாறையாய் அழுத்தியது. ஏனோ, இது தான் கடைசி வாய்ப்போ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதில், ஐம்பதில் வந்து நின்றது தற்பொழுதைய கணக்கு. இறுதிச்சுற்று முடிவிற்காக ஐம்பது பேரில் ஒருவனாய் அவன் காத்திருந்தான்.

பள்ளிப்படிப்பு முடிந்துமாநிலத்தின் பெரிய அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததும்குடும்பத்தின் மொத்த நம்பிக்கையும் அவன் மீது ஏற்றப்பட்டதுகல்லூரிக்குள் நுழையும் போதே, குடும்பத்தினர் அனைவராலும் மந்திரித்து அனுப்பப்பட்ட ஒரே சொல். “படிச்சு முடிக்கும் போது வேலையோடு தான் வெளியே வரனும். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மதியதர வர்க்கத்தில் குடும்பத்தின் மூத்த பிள்ளை மீதும் இருக்கும் பிரத்யேக எதிர்பார்ப்புகளுக்கு அளவுண்டாஎன்ன! அவனும் அதற்கேற்றவாறு தன்முனைப்புடன் படித்தான்எந்தவித அவச்சொல்லுக்கும் இடம் தராமல் தன் எல்லைகளை சிறுகச் சிறுக விரித்து துறை அளவிலும்கல்லூரி அளவிலும் சிறந்தே விளங்கினான்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில்திருவிழாவாய் வளாகத்தேர்வு வைபவங்கள் துவங்கினமிகப்பெரிய நிறுவனங்களிடம் தங்களை இணைத்துக் கொள்ள மிக எளிய வாய்ப்பு இந்த வளாகத்தேர்வு.   மாணவர்கள் அனைவருக்கும் அத்தேர்வின் முக்கியத்துவம் தெரிந்தே இருந்ததுஒவ்வொரு தேர்வுக்கும் அவனும் பிரத்யேகமாக தயாரித்துக் கொண்டாலும் இறுதியில் ஏதேனும் ஒரு முட்டுக்க்ட்டை அவனது வெற்றியை தடுத்துக் கொண்டே இருந்தது.இறுதிச்சுற்று வரை முன்னேறி கடைசியாய் வெளியேறுபவனாய் வெகுவிரைவிலேயே கல்லூரி முழுவதும் பிரபலம் ஆகியிருந்தான்.

இன்னது தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முடியாதது தான் அவனது பெரும் பிரச்சனையாக இருந்ததுஎழுத்துத்தேர்வுகுழுவிவாதம்தொழில்நுட்ப நேர்முகத்தேர்வுமனிதவள நேர்முகத்தேர்வு என்று பல படிகள் இருந்த பொழுதும்எல்லா நிறுவனங்களும் ஒவ்வொரு வரிசையில் இந்த தேர்வு முறைகளை நடத்துவார்கள்எந்த முறையாக இருந்தாலும் மிகச்சரியாக கடைசி சுற்றில் கடைசியாக வெளியேறுபவாக அவன் இருந்தான்தவறு எங்கு என்று தெரிந்தாலாவது சரி செய்து கொள்ளத் தயாராகவே இருந்தான்.இருந்தாலும் எங்கு இடர்கிறான் என்ற ஆணிவேர் மட்டும் புலப்பட்டதே இல்லைஎல்லாம் சரியாக செய்தது போலவே தான் தோன்றும்இறுதிப் பெயர்ப்பட்டியலில் அவன் பெயர் மட்டும் எப்படியோ ஒவ்வொரு முறையும் விடுபட்டுப் போகும் 

மற்ற துறை பேராசிரியர்களும்விரிவுரையாளர்களும் அவன் படிக்கும் துறையின் ஆசிரியர்களிடம் பேசும் போது உங்க டிபார்ட்மெண்ட்ல வளர்த்தியா ஒரு பையன் இருப்பானேஎல்லா கேம்பஸ் இண்டர்வ்யூலயும் கடைசி ரவுண்ட் வரை போவானேஅவன் ப்ளேஸ் ஆகிட்டானா?”  என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கெல்லாம் இருந்தது.

ஒவ்வொரு வளாகத்தேர்வின் முடிவிலும் நண்பர்கள அவனை தேற்ற வந்தாலும் கூட அவர்களுக்கு அவன் ஆறுதல் கூறி அனுப்புவான். ”ஒன்னும் பிரச்சனை இல்லைவிடுங்கடா... என்னைப் போன்ற ரிசோர்ஸை உபயோகிக்க அந்த கம்பெனிக்கு கொடுத்து வைக்கல.. எனக்கான ஐடியல் கம்பெனி நிச்சயம் எங்கேயோ இருக்குஅதுவும் நானும் இன்னும் நேருக்கு நேர் சந்திக்கலை.அப்படி நடக்குற நாள் என் மேஜிக் துவங்கும்”. நண்பர்களும் உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமாடா” என்று சிரித்துச் செல்வார்கள்.

ல்லூரி முடித்து பெருங்கூட்டமாய் இந்த மாநகருக்கு வந்து சேர்ந்து, ஒவ்வொரு அலுவலகமாய் ஏறியிறங்கிய உற்சாகமெல்லாம் சில மாதங்களிலேயே வடிந்து விட்டது. மயிரிழையில் தவறவிட்ட வளாகத்தேர்வு வாய்ப்புகள் கொடுங்கனவாய் துரத்தத்துவங்கிய இரவிலிருந்து, அதனை வென்று வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு வேகவேகமாய் தாவிச் செல்லும் நண்பர்களுடனான ஆத்மார்த்தமான உறவு மெதுவாக பொறாமைக்குரியதாய் மாறத்துவங்கியது. இயலாமை வெறுப்பாய் மாறிய போது, மௌனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய் மாறி, உள்ளெரியும் தீயை மறைத்துக் கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி, இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு!” என்று கூறிச் செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல்வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சு காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும்.

கல்லூரி சமயத்தில் விட்டேர்த்தியாய் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட, எப்படியெப்படியோ பணியில் சேர்ந்து தங்களது அன்றாட அட்டவனையை ஏதோவொரு விதத்தில் பூரித்தி செய்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய முக்கியத்துவம் தந்து பொறுப்புடன் நடந்து கொண்ட தனக்கான வாய்ப்பு மட்டும் எப்பொழுதும் இறுதி நிலை வரை கூட வந்து, வெற்றிக்கோட்டைத் தொடும் அந்த நிர்ணயிக்கும் நொடியில் கைநழுவிப் போவதற்கான காரணம் ஏனென்று புரிந்ததில்லை. உற்சாகக்குறைவு நிரந்தரமாகத் தங்கத் துவங்கினால, தனக்கான குழியைத் தானே வெட்டுவது போலாகி விடும் என்று உணர்ந்த தருணங்களில் தன்னம்பிக்கை உதாரணங்களை முன்னிறுத்தி ஒரு உந்துதல் கொடுப்பதற்காக, தோல்வி குறித்து மனதுக்குள் கூறிக்கொண்ட வெற்று சமாதானங்கள் எல்லாம் தீரத் துவங்கி விட்டன.

மலையுச்சி வரை மூச்சு முட்ட ஏறி, இறுதியில் விளிம்பினைப் பிடிக்கத் தவறி மீண்டும் கீழே விழுந்த ஒரு நாள், தோற்றுத் தான் போய் விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அந்த ஒரு நொடி, இத்தோடு முடித்துக் கொள்ளலாம்!”என்ற சாத்தானின் அழைப்பை, எப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு சிலிர்த்துக் கொள்ளும். தற்கொலையுணர்வினை சுவைத்த அந்த ஒரு நொடி எவ்வளவு மகத்தானது. அவ்வாறான ஒரு உணர்வு இனியொருபோதும் துளிர்க்கக் கூடாது!” என்று உள்ளுக்குள் சபதமெடுத்துக் கொண்டாலும், வாழ்வின் முழுமைக்கும் அந்த நொடியின் கசப்பை நினைவடுக்குகளில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள்  வலுப்பெற்றுக் கொண்டே வந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்த ஒவ்வொரு பெயராக எச்சரிக்கையாக உச்சரிக்கப்பட்டு, ஒலிபெருக்கி வழி அதிர்ந்து கருத்தரங்கக்கூடத்தின் உட்கூரையெங்கும் எதிரொலித்து, காத்திருந்தவர்களின் காதுகளை துளைக்கத் துவங்கியது. ஆரம்ப கால பரபரப்புகள் இப்பொழுதெல்லாம் வற்றி தூர்ந்து விட்ட போதும்,  பிறைத்துக் கிடக்கும் சூரியன் போல தன்னை நினைத்துக் கொண்டு, விடியலுக்கான நேரத்தை நோக்கி கண்களை தாழ்த்தி, பற்களை கடித்துக் கொண்டு செவிகளை மட்டும் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கையில்... வானில் வெகுதூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பறவை கண்படும் தூரத்தில் வட்டமடித்து, இறுதியில் சிறகை விசிறி விசிறி வந்து அருகிலுள்ள மரக்கிளையில் அமர்வது போல, பறவையின் அமர்வின் மெல்லிய அதிர்வில், கிளையில் ஒட்டிக் கொண்டிருந்த சருகு மெதுவாய் விடைபெற்று, ஆடியசைந்து கீழிருக்கும் கிணற்று நீரினில் விழுந்து மிதப்பது போல, சருகின் படர்வில் நீரினுள் நீந்திக் கொண்டிருந்த மீன் லேசாக விலகி வட்டமடித்துச் செல்வது போல... அவ்வளவு இயல்பாய் நிகழ்ந்துவிட்டது அந்த நிகழ்வு. அதனை எதிர்கொண்ட அவனது செவி தான் தாங்கமாட்டாமல் தகவலை மூளைக்கு அனுப்பி விட்டு அடைத்துக் கொண்டு விட்டது. மூளையோ உச்சரிக்கப்பட்ட பெயருடன் நாளையை இணைத்து பெரும்பாய்ச்சலாக மொத்த உதிரவோட்டத்தையும் இதயத்திற்கு மடைமாற்றி, எக்குத்தப்பாய் துடிக்க விட்டுவிட்டது. இதயத்தின் துடிப்பு அரங்கமெங்கும் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஹ்ம்ம்ம்... இந்தத் திறப்பிற்குத் தான் இத்தனை நாள் காத்திருப்பு... சிறிது நேர இந்த உணர்வுக்கிளர்ச்சிக்குப் பின் மனது மெதுவாக சமநிலையடைந்து பணியாணையைப் பெற்றுக் கொள்ள எழுகையில், தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது.

(வெட்டி பிளாகர்ஸ் - சிறுகதைப்போட்டி 2014க்காக எழுதியது: http://vettibloggers.blogspot.in/2014/01/71.html)
******