முழுதாய் பத்து மணிநேரம் கரைந்திருந்தது, அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து. அதற்கு முன் மூன்று மணி நேரம் வெளியே வரிசையில் காத்திருந்தது வேறு. பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான தேர்வு என்றாலும் ரேஷன் கடை போல அடித்துப் பிடித்துக் கொண்டு தான் இடம் பிடித்து உள் நுழைய வேண்டியிருக்கிறது. பெருகிக் கிடக்கும் கல்லூரிகளின் புண்ணியத்தில் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வெளியே வரும் புதுமுக பொறியாளர்களின் எண்ணிக்கை அவ்வளவு இருக்கிறது. சுற்றுமுற்றும் அனைவரும் மிக பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் தன்னை ஒருவரும் கண்டுகொள்ளாமல் தனித்தீவில் இருப்பது
போன்ற ஒரு பிரமை.
இவ்வளவு நேர காத்திருப்பில், இடையில் அவ்வப்பொழுது தேநீர் அருந்துவதற்காகவும், சிறுநீர் கழிப்பதற்காகவுமே இடத்தை விட்டு நகர்ந்தது. உணவருந்தவென்று எந்தவொரு இடைவேளையும் விடப்படவில்லை. நடுவே நேரமேற்படுத்திச் சென்று, சாப்பிட்டு விட்டு வரும் மனநிலையும் இல்லை. உடல் அயற்சியை மீறி மனபாரம் தான் பெரும்பாறையாய் அழுத்தியது. ஏனோ, இது தான் கடைசி வாய்ப்போ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதில், ஐம்பதில் வந்து நின்றது தற்பொழுதைய கணக்கு. இறுதிச்சுற்று முடிவிற்காக ஐம்பது பேரில் ஒருவனாய் அவன் காத்திருந்தான்.
பள்ளிப்படிப்பு முடிந்து, மாநிலத்தின் பெரிய அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததும், குடும்பத்தின் மொத்த நம்பிக்கையும் அவன் மீது ஏற்றப்பட்டது. கல்லூரிக்குள் நுழையும் போதே, குடும்பத்தினர் அனைவராலும் மந்திரித்து அனுப்பப்பட்ட ஒரே சொல். “படிச்சு முடிக்கும் போது வேலையோடு தான் வெளியே வரனும்”. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. மதியதர வர்க்கத்தில் குடும்பத்தின் மூத்த பிள்ளை மீதும் இருக்கும் பிரத்யேக எதிர்பார்ப்புகளுக்கு அளவுண்டா, என்ன! அவனும் அதற்கேற்றவாறு தன்முனைப்புடன் படித்தான். எந்தவித அவச்சொல்லுக்கும் இடம் தராமல் தன் எல்லைகளை சிறுகச் சிறுக விரித்து துறை அளவிலும், கல்லூரி அளவிலும் சிறந்தே விளங்கினான்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில், திருவிழாவாய் வளாகத்தேர்வு வைபவங்கள் துவங்கின. மிகப்பெரிய நிறுவனங்களிடம் தங்களை இணைத்துக் கொள்ள மிக எளிய வாய்ப்பு இந்த வளாகத்தேர்வு. மாணவர்கள் அனைவருக்கும் அத்தேர்வின் முக்கியத்துவம் தெரிந்தே இருந்தது. ஒவ்வொரு தேர்வுக்கும் அவனும் பிரத்யேகமாக தயாரித்துக் கொண்டாலும் இறுதியில் ஏதேனும் ஒரு முட்டுக்க்ட்டை அவனது வெற்றியை தடுத்துக் கொண்டே இருந்தது.இறுதிச்சுற்று வரை முன்னேறி கடைசியாய் வெளியேறுபவனாய் வெகுவிரைவிலேயே கல்லூரி முழுவதும் பிரபலம் ஆகியிருந்தான்.
இன்னது தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முடியாதது தான் அவனது பெரும் பிரச்சனையாக இருந்தது. எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், தொழில்நுட்ப நேர்முகத்தேர்வு, மனிதவள நேர்முகத்தேர்வு என்று பல படிகள் இருந்த பொழுதும், எல்லா நிறுவனங்களும் ஒவ்வொரு வரிசையில் இந்த தேர்வு முறைகளை நடத்துவார்கள். எந்த முறையாக இருந்தாலும் மிகச்சரியாக கடைசி சுற்றில் கடைசியாக வெளியேறுபவாக அவன் இருந்தான். தவறு எங்கு என்று தெரிந்தாலாவது சரி செய்து கொள்ளத் தயாராகவே இருந்தான்.இருந்தாலும் எங்கு இடர்கிறான் என்ற ஆணிவேர் மட்டும் புலப்பட்டதே இல்லை. எல்லாம் சரியாக செய்தது போலவே தான் தோன்றும். இறுதிப் பெயர்ப்பட்டியலில் அவன் பெயர் மட்டும் எப்படியோ ஒவ்வொரு முறையும் விடுபட்டுப் போகும்.
மற்ற துறை பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் அவன் படிக்கும் துறையின் ஆசிரியர்களிடம் பேசும் போது ”உங்க டிபார்ட்மெண்ட்ல வளர்த்தியா ஒரு பையன் இருப்பானே, எல்லா கேம்பஸ் இண்டர்வ்யூலயும் கடைசி ரவுண்ட் வரை போவானே, அவன் ப்ளேஸ் ஆகிட்டானா?” என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கெல்லாம் இருந்தது.
ஒவ்வொரு வளாகத்தேர்வின் முடிவிலும் நண்பர்கள அவனை தேற்ற வந்தாலும் கூட அவர்களுக்கு அவன் ஆறுதல் கூறி அனுப்புவான். ”ஒன்னும் பிரச்சனை இல்லை, விடுங்கடா... என்னைப் போன்ற ரிசோர்ஸை உபயோகிக்க அந்த கம்பெனிக்கு கொடுத்து வைக்கல.. எனக்கான ஐடியல் கம்பெனி நிச்சயம் எங்கேயோ இருக்கு. அதுவும் நானும் இன்னும் நேருக்கு நேர் சந்திக்கலை.அப்படி நடக்குற நாள் என் மேஜிக் துவங்கும்”. நண்பர்களும் “உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமாடா” என்று சிரித்துச் செல்வார்கள்.
கல்லூரி முடித்து பெருங்கூட்டமாய் இந்த மாநகருக்கு வந்து சேர்ந்து, ஒவ்வொரு அலுவலகமாய் ஏறியிறங்கிய உற்சாகமெல்லாம் சில மாதங்களிலேயே வடிந்து விட்டது. மயிரிழையில் தவறவிட்ட வளாகத்தேர்வு வாய்ப்புகள் கொடுங்கனவாய் துரத்தத்துவங்கிய இரவிலிருந்து, அதனை வென்று வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு வேகவேகமாய் தாவிச் செல்லும் நண்பர்களுடனான ஆத்மார்த்தமான உறவு மெதுவாக பொறாமைக்குரியதாய் மாறத்துவங்கியது. இயலாமை வெறுப்பாய் மாறிய போது, மௌனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய் மாறி, உள்ளெரியும் தீயை மறைத்துக் கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி, ”இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு!” என்று கூறிச் செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல்வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சு காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும்.
கல்லூரி சமயத்தில் விட்டேர்த்தியாய் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட, எப்படியெப்படியோ பணியில் சேர்ந்து தங்களது அன்றாட அட்டவனையை ஏதோவொரு விதத்தில் பூரித்தி செய்து கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய முக்கியத்துவம் தந்து பொறுப்புடன் நடந்து கொண்ட தனக்கான வாய்ப்பு மட்டும் எப்பொழுதும் இறுதி நிலை வரை கூட வந்து, வெற்றிக்கோட்டைத் தொடும் அந்த நிர்ணயிக்கும் நொடியில் கைநழுவிப் போவதற்கான காரணம் ஏனென்று புரிந்ததில்லை. உற்சாகக்குறைவு நிரந்தரமாகத் தங்கத் துவங்கினால, தனக்கான குழியைத் தானே வெட்டுவது போலாகி விடும் என்று உணர்ந்த தருணங்களில் தன்னம்பிக்கை உதாரணங்களை முன்னிறுத்தி ஒரு உந்துதல் கொடுப்பதற்காக, தோல்வி குறித்து மனதுக்குள் கூறிக்கொண்ட வெற்று சமாதானங்கள் எல்லாம் தீரத் துவங்கி விட்டன.
மலையுச்சி வரை மூச்சு முட்ட ஏறி, இறுதியில் விளிம்பினைப் பிடிக்கத் தவறி மீண்டும் கீழே விழுந்த ஒரு நாள், தோற்றுத் தான் போய் விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. அந்த ஒரு நொடி, ”இத்தோடு முடித்துக் கொள்ளலாம்!”என்ற சாத்தானின் அழைப்பை, எப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு சிலிர்த்துக் கொள்ளும். ”தற்கொலையுணர்வினை சுவைத்த அந்த ஒரு நொடி எவ்வளவு மகத்தானது. அவ்வாறான ஒரு உணர்வு இனியொருபோதும் துளிர்க்கக் கூடாது!” என்று உள்ளுக்குள் சபதமெடுத்துக் கொண்டாலும், வாழ்வின் முழுமைக்கும் அந்த நொடியின் கசப்பை நினைவடுக்குகளில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றுக் கொண்டே வந்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிலிருந்த ஒவ்வொரு பெயராக எச்சரிக்கையாக உச்சரிக்கப்பட்டு, ஒலிபெருக்கி வழி அதிர்ந்து கருத்தரங்கக்கூடத்தின் உட்கூரையெங்கும் எதிரொலித்து, காத்திருந்தவர்களின் காதுகளை துளைக்கத் துவங்கியது. ஆரம்ப கால பரபரப்புகள் இப்பொழுதெல்லாம் வற்றி தூர்ந்து விட்ட போதும், பிறைத்துக் கிடக்கும் சூரியன் போல தன்னை நினைத்துக் கொண்டு, விடியலுக்கான நேரத்தை நோக்கி கண்களை தாழ்த்தி, பற்களை கடித்துக் கொண்டு செவிகளை மட்டும் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கையில்... வானில் வெகுதூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த பறவை கண்படும் தூரத்தில் வட்டமடித்து, இறுதியில் சிறகை விசிறி விசிறி வந்து அருகிலுள்ள மரக்கிளையில் அமர்வது போல, பறவையின் அமர்வின் மெல்லிய அதிர்வில், கிளையில் ஒட்டிக் கொண்டிருந்த சருகு மெதுவாய் விடைபெற்று, ஆடியசைந்து கீழிருக்கும் கிணற்று நீரினில் விழுந்து மிதப்பது போல, சருகின் படர்வில் நீரினுள் நீந்திக் கொண்டிருந்த மீன் லேசாக விலகி வட்டமடித்துச் செல்வது போல... அவ்வளவு இயல்பாய் நிகழ்ந்துவிட்டது அந்த நிகழ்வு. அதனை எதிர்கொண்ட அவனது செவி தான் தாங்கமாட்டாமல் தகவலை மூளைக்கு அனுப்பி விட்டு அடைத்துக் கொண்டு விட்டது. மூளையோ உச்சரிக்கப்பட்ட பெயருடன் நாளையை இணைத்து பெரும்பாய்ச்சலாக மொத்த உதிரவோட்டத்தையும் இதயத்திற்கு மடைமாற்றி, எக்குத்தப்பாய் துடிக்க விட்டுவிட்டது. இதயத்தின் துடிப்பு அரங்கமெங்கும் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஹ்ம்ம்ம்... இந்தத் திறப்பிற்குத் தான் இத்தனை நாள் காத்திருப்பு... சிறிது நேர இந்த உணர்வுக்கிளர்ச்சிக்குப் பின் மனது மெதுவாக சமநிலையடைந்து பணியாணையைப் பெற்றுக் கொள்ள எழுகையில், தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது.
(வெட்டி பிளாகர்ஸ் - சிறுகதைப்போட்டி 2014க்காக எழுதியது: http://vettibloggers.blogspot.in/2014/01/71.html)
******
Fantastic maamaa.. As u have correctly penned, those companies missed an asset.. God has planned something more important for u.. All the best in ur endeavors..
ReplyDeleteFine .Very touching portraial of campus interview and its pain .But in reality it is the destiny which decides ultimately .
ReplyDeleteகதை அருமையாக உள்ளது.நாம் பெரிதாக எதிர்பார்க்கும் எதுவுமே நமக்கு நடக்கும் அந்த மணித்துளிகள் மிகவும் இயல்பாய் கடந்து செல்லும்போது மூன்றாவது மனிதனாக அந்த மணித்துளிகளைப் பார்க்கும்போது...
ReplyDeleteஇதற்குதானே இத்தனை நாளை ஆசைப்பட்டாய் என்று மனம் சொல்லும். மிக அழகாக அந்த உணர்வைத் தொட்டுக்காட்டியிருக்கிறீர்கள்.
நன்று.
superb bala..
ReplyDeleteVery nicely described...took back to college final year!!!!
ReplyDeleteFeel guilty to write in english.!! still cannot leave without appreciating.Wonderful writing!
Roll model for many of them Bala including me..
ReplyDeleteRoll model for many of them bala, including me..
ReplyDelete// இன்னது தான் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முடியாதது தான் அவனது பெரும் பிரச்சனையாக இருந்தது.//
ReplyDelete?!!?....... complication ........?!!?
உங்களுக்கு ரொம்ப ஞாபக சக்தி பாஸ் ! பின்னி பெடல் எடுக்குறீங்க ....
-மதன்