Sunday, July 27, 2014

நினைவுப் பறவை

மதுரைக்குப் பயணம் என்று சொன்னதுமே, அவன் மனமும் உடலும் தன்னிச்சையாக கல்லூரிக் காலத்திற்குத் திரும்பி உற்சாகத்தை வாரி இறைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டது. தான் படித்த கல்லூரியில் கருத்தரங்கு ஒன்றிற்கு தலைமை தாங்குவதற்காக ஒரு நாள் பயண அட்டவனை. காலையில் விமானத்தில் மதுரை சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, அன்று இரவே சென்னை திரும்புவதாக ஏற்பாடு. இது போல எத்தனையோ பயணங்கள், எத்தனையோ நகரங்களுக்குச் சென்றாகி விட்டது, இருந்தும் மதுரை என்றவுடன் ஒரு வாரமாகவே அந்த ஊர் பற்றிய நினைவுகளே சுழன்று கொண்டிருந்தது. விமானம் விட்டு இறங்கியதுமே மதுரைக்கான பிரத்யேக வெயில் அவனை அரவணைத்துக் கொண்டது. வீடு விட்டால் பள்ளி, பள்ளி முடிந்தால் வீடு என்று சிறு நேர்கோட்டில் முன்னும் பின்னும் மட்டும் சென்று கொண்டிருந்த பள்ளிச்சிறுவனை, நான்காண்டு கால விடுதி வாழ்க்கையின் மூலம், உலகத்தை பரந்த விழிகளால் பார்க்கச் சொல்லிக் கொடுத்த ஊர். அந்த வகையில் தன் சுயத்தை வெளிக்கொணர்ந்த களமான மதுரைக்கு எப்போதும் அவன் மனதில் தனியாக ஒரு இடமுண்டு. பின் கோடை தகிக்க, அனல் காற்று சுழற்று அடிக்க, மனதுக்குப் பிரியமான மதுரை அவனை வரவேற்றது.
     
இது போன்றதொரு தகிக்கும் பின் கோடையில் தான் அவளை முதன் முதலாக சந்தித்தான். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் கல்லூரிக்குச் செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தவனை இரண்டு கண்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. பேருந்து வர தாமதமாகவே அவன் அருகிலுள்ள பெட்டிக்கடைக்கு சென்று வார இதழ் வாங்குவது, அருகில் இருந்த திண்டில் அமர்வது என்று ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் இங்குமங்கும் அலைந்து கொண்டே இருந்தான். அப்போதும் அந்த கண்கள் விடாமல் அவனை மிரட்சியுடன் பின் தொடர்ந்து கொண்டு, அவனது இருப்பை நோட்டமிட்டபடியே இருந்தன. சிறிது நேரத்தில் அதனை அவனும் உணர்ந்து, அந்தக் கண்களை நேருக்கு நேர் பார்க்கவும், அந்த மருண்ட விழிகளுக்கு சொந்தக்காரியான அவள் அதிக பதற்றமாகி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பேருந்து வந்தது. அதிக கூட்டமில்லை. அவன் காலியாய் இருந்த இருக்கைகளில் அமராமல், பின் படிக்கட்டில் சாய்ந்தபடி பயணம் செய்து வந்தான். அவளும் இருக்கையில் அமராமல் முன் படிக்கட்டுக்கு அருகில் கம்பியை இறுகப் பிடித்தபடியே வந்தாள். அவ்வப்பொழுது அவள் அவனைப் பார்ப்பதும், அவன் தன்னை பார்ப்பது தெரிந்ததும் தலையை கவிழ்த்திக் கொள்வதுமாக பயணம் தொடர்ந்தது. திருப்பரங்குன்றம் நிறுத்தம் வந்து அவன் இறங்கும் போது பொழுது இருட்டத் துவங்கியிருந்தது, அவளும் வேகமாக இறங்க எத்தனிக்கையில் கால் இடறிக் கீழே விழப் போனாள். பின் அவளாக சுதாரித்துக் கொண்டு வேகமாக இறங்கினாள். கல்லூரிக்கு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே நடந்து செல்ல வேண்டும். அவன் முன்னே செல்ல அவளும் தயங்கிய படியே சில அடிகள் தள்ளி பின்னால் நடந்து வந்தாள்.

அதனை கவனித்த அவன் நின்று பின்னால் திரும்பி, “என்ன ஃப்ர்ஸ்ட் இயரா?” என்றான்

அவன் கேட்ட குரலில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டத்துவங்கியது.

“ஏய், ஏ.. என்னாச்சு.. இப்போ ராகிங் பண்ற மூடெல்லாம் இல்ல, சும்மா  பேரத்தான் கேட்டேன். அதுக்கேன் அழுற?”

“இல்ல....” வார்த்தை முடிவதற்குள்ளாக தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

“அம்மா தாயே.... என்னாச்சு? சரி ஹாஸ்டல் தானே, சீக்கிரம் போமா தாயே !” விலகி வழி விட்டு நின்றான்

அவள் அந்த இடத்திலிருந்து அசையாமல் அழுது கொண்டே இருந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண், அதுவும் இது வரை யாரென்றே ஒருத்தி, இரண்டு அடி தூரத்தில் நின்று தன்னைப் பார்த்து அழுது கொண்டிருக்கவும்.. அவளைப் பார்க்க பாவமாய் போய்விட்டது.

என்ன சொல்லி அவளைத் தேற்றலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவளே பேசினாள்.

“இல்ல, வந்து... சிவகங்கைல இருந்து வாரேன். பஸ் ப்ரேக் டவுன்.... லேட்டாயிடுச்சு.... வார்டன் உள்ள விடமாட்டாங்க...”

அவள் மென்று முழுங்கி சொன்னதை அவன் ஒருவாறு கோர்த்துப் புரிந்து கொண்டான்.

“அட, இதுக்குப் போயா இவ்வளவு ஆர்ப்பாட்டம். வா, நான் கொண்டு போய் விட்றேன்”

அவன் சொல்லிக் கொண்டு முன்னால் நடக்க, அவள் தொடர்ந்து பின்னால் வந்தாள்.

“பேரு என்ன?”

“ஃப்ர்ஸ்ட் இயர் சிவில்... ச்சீ கண்ணாத்தாள்”

அவன் லேசாக சிரித்துக் கொண்டே.... “ஊரு சிவகங்கையா இருக்காதே, பக்கத்துல எந்த கிராமம்...”

“ஆமா, காணாடுகாத்தான்.... வார்டன் ஹாஸ்டலுக்குள்ள அலோ பண்ணுவாங்களா, பயமா இருக்கு”

“உங்க சேர்மனை வந்து கூட்டிட்டு போகச் சொல்றேன், போதுமா?”

“ம்ம்ம்....”

“என்னை உனக்கு தெரியுமா என்ன, பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நோட் பண்ணிட்டே இருந்த?”

“இல்ல, ஃப்ரஷர்ஸ் டே அன்னிக்கு நீங்க தானே வெல்கம் ஸ்பீச் கொடுத்தீங்க... மாட்டுத்தாவணில இருந்து தனியா பஸ் ஏறி வந்து பழக்கமில்லை, லேட்டா வேற ஆகிருச்சு. அதான் உங்களைப் பார்த்தோன்ன அப்படியே ஃபாலோ பண்ணி, அப்படியே காலேஜ் வந்துறலாம்னு.....”

”நல்லா வந்த போ !”

பேசிக்கொண்டே வந்தவன், வழியில் இருந்த காயின் பூத்தில் இருந்து கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு ஃபோன் அடித்து, அவனது வகுப்புத் தோழியான ஸ்டூடண்ட் சேர்மனை ஹாஸ்டலுக்கு வெளியே வரச் சொன்னாள். 
அவள் வந்ததும், ”ஏ, என்னடா யாருக்குடா பாடிகார்டா வர்ற” என்றாள்

“ஏ, லூசு... எனக்குத் தெரிஞ்ச பொண்ணு... ஊருலருந்து வர லேட்டாயிடுச்சு, உங்க குண்டம்மா உள்ளே விடாதுனு ஒரே அழுகை... அதான் ஹாஸ்டல் ரௌடி நம்மாளு தான், நான் சொல்லி உனக்குப் பாதுகாப்பு தர்றேன்னு கூட்டி வந்தேன்... நம்ம பொண்ணுமா, பாத்துக்கோங்க”

“சொல்லிட்டேல்ல, ஸ்பெசல் ராகிங் கிளாஸ் எடுத்துருவோம்”

“ஹே ரௌடி... ஒழுங்கா பார்த்துக்கோ... சரி ஜூனியர், ஒன்னும் கவலைப்படாதே, இவ பார்த்துப்பா”

ஒருவழியாக ஆறுதல் சொல்லி வழியனுப்பிவிட்டு, அவன் பாய்ஸ் ஹாஸ்டலுக்குக் கிளம்பினான். அவள் காய்ந்த கண்ணீர்த் தடத்தை துடைத்தவாறே அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்குள் சென்றாள்.

அவன் இறுதியாண்டு படித்த அந்த ஒரு வருடம் முழுமைக்குமே அவன் அவளுடன் பேசிக்கொண்டது மொத்தம் நூறு வார்த்தைகளுக்குள் தான் இருக்கும். ஆனால் அவன் செய்த அறிமுகத்தால் அவளுக்கு ஹாஸ்டலில் சிறப்பு அந்தஸ்த்து கிடைத்தது. ராகிங்கில் இருந்து முழுதாய் தப்பிக்க முடிந்தது. சீனியர்கள் கூட்டத்தில் சரிசமமாய் உட்கார்ந்து கதையடிக்க முடிந்தது. சொல்லப்போனால் வகுப்பில் அவன் வழக்கமாய் செய்யும் ஏதாவது ஒரு குட்டிக்கலாட்டாவிற்கு நேர்வினை, எதிர்வினை எல்லாம் ஹாஸ்டலில் அவளை வைத்து நடத்திக் காட்டப்பட்டது. மொத்தத்தில் அவனைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அவனது வகுப்புத் தோழிகள் மூலமாக அவ்வப்பொழுது அவளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல அவள் விடுதியில் செய்யும் சிறுபிள்ளைத்தனங்கள் முதல் வியாழக்கிழமை காலை உப்புவாவிற்கு பயந்து இராகவேந்தர் விரதம் இருப்பது வரை, ஹாஸ்டல் டேவிற்கு அவள் வரைந்த ரங்கோலி முதல் அவன் பிறந்தநாளுக்காக ஹாஸ்டலில் அவன் தோழிகள் எல்லாம் அவளது முகத்தில் கேக் அப்பி கொண்டாடியது வரை எல்லாம் அவனுக்கும் தெரிந்து இருந்தது. அவ்வப்பொழுது கல்லூரிக்குள் எங்காவது கண்ணுத்தட்டுப்பட்டு ஒருவரையொருவர் சந்திக்கும் போது சிந்தும் ஸ்நேகமான புன்னகையில், உள்ளன்பை பரிமாறிக்கொண்டனர். ஏதோ நீண்ட நாள் பழகிய பிரியம் போல இருவரின் உள்ளத்திலும் அன்பு நீக்கமற நிறைந்திருந்தது. பிரத்யேகமாய் முயற்சி எடுத்து ஒருவரையொருவர் சந்திக்கப் பிரயத்தனங்கள் செய்யாமலே, அவ்வாறான சந்திப்புகள்  நிகழாமலே கூட இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் எப்போதும் உணர்ந்தே இருந்தனர்.

அவனுக்கு கல்லூரி இறுதியாண்டு முடியும் சமயத்தில், அவனது வகுப்புத் தோழிகள் எழுதுவதற்காக அவனது “ஆட்டோகிராப்” டைரியை பெண்கள் விடுதிக்கு எடுத்துச் சென்றிருந்தனர். அந்தப்புத்தகம் திரும்பி அவனிடம் வந்த போது, அதனை யதார்த்தமாக திருப்பிக் கொண்டிருந்தான். அதில் ஒரு தேதியில் வட்டமிட்டு, அதில் சிறிய தென்னை மரம் வரைந்து அதன் கீழ் இரண்டு கண்கள் வரைந்து இருந்தது. அவனுக்கு யோசிக்கவெல்லாம் தேவையிருக்கவில்லை. அவளை தான் முதன் முதலில் பார்த்த நாளும், அவளது மருண்ட கண்களும், அவற்றிலிருந்த தவிப்பும் சட்டென அவன் நினைவுக்கு வந்தன. இமைகளை மூடுவதைப் போல மெதுவாக, மிக மெதுவாக டைரியை மூடி வைத்தான்.

கல்லூரி முடிந்த பிறகு, வாழ்க்கைக்கான தேடலில் அவளுடனான தொடர்பு முற்றிலும் விடுபட்டுவிட்டது. எங்கேனும் அதிசயமாக சிவகங்கை என்றோ, கண்ணாத்தாள் என்றோ காதில் விழுந்தால், முதலில் அவள் மருண்ட கண்களும், அந்த பேருந்துப்பயணமும் தான் ஞாபகம் வரும். இன்று மதுரை பயணம் என்றவுடனேயே, ஏதோ அவனை அறியாமல் பழைய ஞாபகம் கிளரப்பட்டு விட்டது. மனதின் ஏதோவொரு மூளையில் “இன்று அவளை சந்திப்போம்” என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. கல்லூரி நெருங்க நெருங்க படித்த காலத்தின் நினைவுகள் அலையடித்துக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக கல்லூரியை அடைந்து கருத்தரங்கிற்கு வளாகத்தில் நுழையுமுன்னர் நிகழ்ச்சி நிரலுக்கான அட்டவனை அவனுக்குத் தரப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த ஓர் அமர்விற்கு கருத்துரை வழங்குபவர்களின் பெயர்ப்பட்டியலில் கண்ணாத்தாள் என்ற பெயரைப் பார்த்ததும் அவனது படபடப்பு இன்னும் சற்று அதிகமாகியது. அவளை முதன்முதலாக பார்த்த நாள் முதல் அவனது மனதில் பசுமையாய் பதிந்திருந்த அந்த களங்கமில்லாத முகமும், மருண்ட கண்களுமே அவனை முழுமையாக ஆக்கிரமித்தது. நேரம் செல்லச்செல்ல ஏனோ மனதின் ஓரத்தில், பெயர்ப்பட்டியலில் இருக்கும் கண்ணாத்தாள் அவளாக இருக்ககூடாது என்று மனது பிரார்த்தனை செய்யத்துவங்கியது.

**********
நன்றி: மலைகள்  - http://malaigal.com/?p=5124