Showing posts with label சொந்தக்கதை. Show all posts
Showing posts with label சொந்தக்கதை. Show all posts

Monday, January 1, 2024

2023

#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும். 

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப்  பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.

அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன்  செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை,  உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள்  ...

அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம்.  அவர் தலைமையில் சேவாலயம்  மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.

இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும்,  முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில்  எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.

அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.

சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது.  சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.

இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன். 

மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!

#HappyNewYear2024

Monday, January 17, 2011

சக்தி கல்யாண வைபோகமே !

******
நீ வைக்கப் போகும் பாயசத்தில் முந்திரிப் பருப்பாக மிதப்பேனா, தெரியாது. ஆனால் நிச்சயம் சக்கரை இனிப்பாக கலந்திருப்பேன்.
******
சுடுதண்ணீர் சமைப்பதை ரசித்துப் பாராட்டத் தோன்றும் இன்றைய மனநிலை பின்னொரு நாளில் உப்பில்லா ரசம் கிடைக்கும் போதும் வாய்த்திருக்கட்டும்.
******
பச்சை மிளகாய் போடாத ஆம்லேட்டாய் இருந்த என் வாழ்க்கைக்கு பெப்பர் தூவலாய் வருபவள் நீ !

******
மல்லிப்பூ இட்லியையும் மிளகாய் பொடியையும் சேர்த்து வைத்து சுவைக்க வைக்கிறது நல்லெண்ணை, வாழ்க்கை உன்னையும் என்னையும் சேர்ப்பதைப் போல.

****** :) ******


நண்பர்கள் அனைவரையும் எங்களது திருமண விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.


திருமணம்: 26/01/2011 காலை 9.30 முதல் 10.30 வரை
வரவேற்பு: 25/01/2011 மாலை 7.35 முதல்.
இடம்: சந்திரகுழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை

நட்புடன்,
பாலகுமார் - சக்திதேவி

******

******

Wednesday, May 5, 2010

பெயரில்லாதவை - 05/05/2010


எனக்கு தெரிந்த குட்டிப் பசங்களுக்கு கணினி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அப்பொழுது தான் முதன் முறையாக கணினியைக் கையாள்கிறார்கள். எனவே முதலில் "பெயிண்ட்" அப்ளிகேஷனை திறந்து காண்பித்தேன். பிறகு அவர்களே ஒவ்வொருவராக "மௌஸை" பிடித்து இயக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு குட்டிப் பையன் "மௌஸை" இயக்க சிரமமாய் இருந்ததால்,  ரொம்ப ஆர்வக்கோளாறில் தன் சுட்டுவிரலைக் கொண்டு "மை கம்ப்யூட்டர்" ஐகானை சுட்ட ஆரம்பித்து விட்டான்.  எனக்கு சிரிப்பு வந்து விட்டது.  மானிட்டருக்குள்ளே போக இருந்தவனை ஆசுவாசப் படுத்தி, "மௌஸ்" செயல்பாடு பற்றி விளக்க ஆரம்பித்தேன். பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பொடியன், "அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" ன்னு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி பார்த்தான். நான் பல்பை பெற்றுக் கொண்ட திருப்தியோடு பயிற்சியைத் தொடர்ந்தேன்.

**************************************************************************************

குறுந்தகவலில் வந்த ஒரு துணுக்கு:

"மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரனும்னா கல்லூரித் தேர்வையெல்லாம் T20 கிரிக்கெட் முறைக்கு மாற்றனும். தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு,  இருபது மதிப்பெண்ணுக்கு வைக்கனும். ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும். வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும். தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு முறை "அடிஷ்னல் ஆன்ஸர் ஷீட்" வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்" நடனமாடனும்." 

**************************************************************************************

சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"

3இடியட்ஸ் தமிழ் வெர்ஸனுக்கு யாராரையோ யோசிக்கிறாங்க. என்னோட டெரர் காம்பினேஷன்: பிரசாந்த், அப்பாஸ், ஸ்ரீகாந்த் #செத்தான்எதிரி.

வீடெல்லாம் ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படுற, ஒட்டடையே வீடா இருக்கேன்னு சிலந்தி என்ன கவலையா படுது? #ஜே.ஜே #டயலாக்

மந்தபுத்தியுள்ள செம்மறி ஆட்டுக் கூட்டம் மட்டுமல்ல, புத்திசாலி வெள்ளாடுகளும் கசாப்புக் கடைகளுக்குத் தான் கொண்டு செல்லப்படுகின்றன. #தேர்தல்

**************************************************************************************

வலைமனை தளத்தில், சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் ஒரு படம் போட்டு அதற்கு நம் கமெண்ட் கேட்டிருந்தார். நான் சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது போல. அந்த படமும், அதற்கு என் கமெண்ட்டும், அவரது அனிமேஷனும் உங்கள் பார்வைக்காக (ரொம்ப லேட் ஆகிருச்சோ?)







**************************************************************************************
நன்றி, மீண்டும் சந்திப்போம் !
**************************************************************************************

Friday, April 30, 2010

ஒன்னுமில்லை



 "எங்க வீட்டு நாய்க்கு நாலு நாளா காய்ச்சல். ஜுரத்துல அது முனங்குறது உன் குரலைத் தான் ஞாபகப் படுத்துது".  இது ஒரு செய்தி. இதையே கவிதையா மாத்தினா,  
"கொஞ்சும்
நாய்க்குட்டி,
உன்னை
நினைக்க வைக்கிறது
அன்பே !"

மேலும் வாசிக்க, 

Monday, March 1, 2010

பெயரில்லாதவை 01/03/2010


சென்ற வாரம், ஒரு கடை திறப்புவிழா அமர்க்களப் படுத்திட்டு இருந்தாங்க. கடை பெயரைப் பார்த்தா, "விர்ஜின் டிஸ்ட்ரிப்யூசன்" ன்னு இருந்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போய், என்னடா மதுரைக்கு வந்த சோதனை ன்னு பார்த்தா, மொபைல் ஃபோன் கடையாம். பேரு வைக்கிறவய்ங்க கொஞ்சம் யோசிச்சு வைக்கக் கூடாதா, பீதியைக் கிளப்புறீங்களேய்யா ?
*******************
எனக்கு ரொம்ப நாளாகவே ப்ளாகரில் இந்த "ஃபாலோயர்ஸ்" என்ற வார்த்தை கொஞ்சம் தர்மசங்கடத்தை கொடுப்பது போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இப்போ கூகிள் பஸ்ஸிலும், அட்ரஸ் புக்கிலிருந்து கொஞ்ச நண்பர்களைத் தூக்கி ஃபாலோயர்ஸ் ஆக்கி விட்டிருக்குகிறது. சரி பதில் மரியாதை செஞ்சா சாபம் விமோசனம் கிடைக்கும்னு துரத்தி துரத்தி ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். நாம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஃபாலோ பண்ணிக்குவோம் ன்னு அக்ரிமெண்ட் போடாத குறை தான். ஃபாலோயர்ஸ் என்ற வார்த்தைக்கு பதில் ஆர்குட்டில் இருப்பது போல "ஃபிரண்ட்ஸ் - நண்பர்கள்" ன்னு இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு.
*******************
சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"
"எப்பொருள் யாரார்வாய் கேட்பினும் கொஞ்சம் தள்ளி நின்று கேட்பதறிவு : எச்சில் முகத்தில் தெறிக்காமல் இருப்பதழகு."
"தமிழில் யோசித்து, ஆங்கிலத்தில் டைப்படித்து, அதை தமிழில் பார்த்து, ஒற்றுப்பிழைகளை சரி செய்ய மறுபடியும் ஆங்கிலத்தை தேடி... ஸ்ஸ்ஸ்ஸ் #முடியல்ல"
*******************
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு இணையதள முகவரி : http://www.view360.in/virtualtour/madurai/ . தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக.
360 டிகிரி அமைப்பு அருமையாக உள்ளது. ஒரு சுற்று பார்த்து வாருங்கள்.
*******************
சச்சினை பாரட்டத் துவங்கிய 200 க்கு சற்றுமுன் வரை எல்லோரும் நிச்சயமாக தோனியை திட்டிக் கொண்டிருந்து தான் இருந்திருப்போம். ஒரு சாதனை நிகழவிருக்கும் தருணம் பற்றி தோனிக்குத் தெரியாமலா இருந்திருக்கும். பிறகும் ஏன் பொறுமையை அவ்வளவு சோதித்தார் ? 360, 370 எடுத்தாலும் தென்னாப்ரிக்கா துரத்திப் பிடித்து விடும், இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம் என நினைத்திருக்கலாம். இல்லை, சச்சினை எதிர்முனையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கலாம். ம்ம்ம்ம் தெரியல, அவரிடம் தான் கேக்கணும்.
*******************
சென்ற வாரத்தில் மிகவும் கவர்ந்த பன்ச் "சினிமாவே வேணாம், அரசியலுக்கு வரட்டா?"

நன்றி மீண்டும் சந்திப்போம்.
*******************

Wednesday, January 20, 2010

பெயரில்லாதவை - 20/01/2010



சென்ற வாரம் எழுதிய இந்த கவிதைக்கு நிறைய்ய்ய புதிய நண்பர்களிடமிருந்து (நிறைய என்றால் நான்கு, ஐந்து எனக் கொள்க) வாழ்த்துகள் வந்தன. அதில் ஒரு நண்பர் ("பிரபல", "பிராபள" போன்ற அடைமொழிகளில் பெரிய ஈடுபாடு இல்லாததால், அவற்றை தவிர்க்கிறேன்) எனக்கு அவர் எழுத்தில் இருக்கும் நெருக்கம் போலவே, தனக்கும் என்னிடம் இருக்கிறது என்று எண்ணும்படியாக (?) ஒரு மறுமொழி இட்டிருந்தார். ஆனால் அவர் இடுகை ஒன்றில் வாசித்த "நகைமுரண்" என்ற வார்த்தை தான் அந்த கவிதைக்கான விதை என சொல்ல நினைத்து, சொல்லவில்லை, இங்கே சொல்கிறேன். அவர்..... அட போங்கப்பா, சூரியனுக்கே டார்ச்சா !  "நகைமுரண்" என நீங்களே கூகுளிட்டுப் பாருங்கள், அவர் பெயர் தான் முதலில் வருகிறது.


*********************************************************


ரொம்ப நாளா ஒரு சந்தேகம். பல பதிவுகளை வாசிக்கும் போது, "சுவற்றில்"  என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டு வருவதை கவனிக்கிறேன். உதாரணமா, "சுவற்றில் படங்களை மாட்டினார்", "சுவற்றில் வெள்ளை அடித்தார்" - இந்த மாதிரி. ஆனா போன ஜென்மத்துல பள்ளிக்கூடத்துல படிக்கும் போது, "சுவற்றில்" என்ற பதம் தவறு, "சுவரில்" என்பது தான் சரி என்று சொல்லிக் கொடுத்ததா ஞாபகம். எந்த பதம் சரி, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


*********************************************************


சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையின் தமிழாக்கம் " சுட்டி-குட்டி".


டீச்சர் : வெப்பம் அதிகமானதும், திடப்பொருளாகும் ஒரு திரவத்தை சொல்லு?
சுட்டி : "தோசை மாவு".


டீச்சர் : Al2O3 னா அலுமினா. சரி சுட்டி, Fe2O3 னா என்ன சொல்லு?
சுட்டி : "ஃபிலோமினா"


டீச்சர் :  இல்பொருள்உவமைஅணி என்றால் என்ன?
சுட்டி :  ஜம்பலக்கடி பிம்பா !
டீச்சர் :  சுட்டி, நீ சொல்றது ஒரு எழவும் புரியல.
சுட்டி :  சேம் டு யூ, மிஸ்.



*********************************************************

இந்த வாரம் எனது "ட்விட்டில் ஹிட்"


"பட்டுப் பாரம்பர்யத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு எடுத்தாலும், வீட்டுக்கு வந்து விட்டுட்டு வந்த புடவையைப் பற்றியே புலம்புவது மனைவியர் மரபு."

*********************************************************


இனிவரும் நாட்களில் "பெயரில்லாதவை"கள் அடிக்கடி வர இருப்பதால் (ஒரு நம்பிக்கை தான்), இந்த இடுகை முதல் பெயரில்லாதவை "தேதியிட்டு" வருகிறது. 

தங்கள் கருத்துக்களை தவறாது தெரிவியுங்கள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

*********************************************************

Thursday, December 24, 2009

பெயரில்லாதவை

மதுரையில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்.

"கவிதையை நினைத்தால் காதல் பிடிக்கும்,
காதலை நினைத்தால் பெண்னைப் பிடிக்கும்
பெண்னை நினைத்தால் பைத்தியம் பிடிக்கும்"

பயபுள்ள, ரொம்ப அடிபட்டிருக்கும் போல!

**************************************

கடந்த ஒரு மாதமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து ஒருவாறு சீர்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக ரோட்டை அடைத்துக்கொண்டிருந்த தடுப்புகள், செயற்கை நீரூற்றுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.பெரியார் பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் போக்குவரத்துக்கு ரொம்ப இடையூறா இருந்த ரவுண்டானா எல்லாம் போயே போச்சு. ஆனா கட்டபொம்மன் சிலையை சுற்றியுள்ள இடத்தில் மட்டும் தினம் ஒரு செங்கலா எடுக்குறாங்க போல. ஒரு வேளை கட்டபொம்மனுக்குன்னு ஒதுக்குன இடத்த ஏன் குறைக்கிறீங்கன்னு யாரும் சண்டைக்கு வருவாங்கன்னு யோசிக்கிறாங்களோ, என்னவோ!  
மொத்தத்துல நம்ம மதுரையில் இவ்வளவு பெரிய ரோடுகள் இருக்கா என ஆச்சர்யமாத்தான் இருக்கு. போக்குவரத்துத் துறையில், யார் மனதில் தோன்றிய யோசனையோ, அவருக்கு வாழ்த்துக்கள்.

**************************************

மதுரை, மதுரைக் கல்லூரி வழியே பெரியார் நிலையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரியவர் லிஃப்ட் கேட்டார். சரியென நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். செல்லும் வழியில், லிஃப்ட் கொடுத்ததற்காக என்னை ரொம்பவே புகழ்ந்து கொண்டு வந்தார். "என்ன, ரொம்ப ஓவரா இருக்கே!" என நினைத்துக்கொண்டே,  காதில் வாங்கிக் கொள்ளாதது போல வந்து கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே வந்தவர்,   தான் அருப்புக்கோட்டை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக இருப்பதாகவும், தனக்கு அம்மன் அருள் இருப்பதாகவும் சொன்னார். மேலும் எனக்கு இப்போ நேரம் சரியில்லையாம், அவரை கூட்டி வந்த புண்ணியத்திற்காக ஒரு பூஜை செய்து சரி செய்து விடுவதாகவும் அதற்கு ஐநூறு ரூபாய் மட்டும் தந்தால் போதுமென்றும் சொன்னார்.
நான் "ஐயா, பெரியார் நிலையம் வந்துருச்சு, இறங்கிக்கிறீங்களா ?" என்று சொல்லி அவரை இறக்கி விட்டு வண்டியை கிளப்பினேன். இப்பெல்லாம், மக்கள் மார்க்கெட்டிங் பண்றதுல ரொம்ப ஸ்மார்ட்டா மாறிட்டு வர்றாங்கல்ல.

**************************************

சென்ற வாரம், கொஞ்சம் பக்கங்களை நகலெடுக்க, நகலகம் சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்க்வே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே, ஊழியர் ஒரு பெரிய புத்தகத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்குள் பூச்சி பறந்து, தலை சுற்றுவது போல் ஆகி விட்டது. பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். இதே வேலையை நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் வீதம், வருடம் முழுவதும் செய்பவரை நினைத்துப் பார்த்தேன்.கொஞ்சம் மலைப்பாகத் தான் இருந்தது.

**************************************

ரொம்ப நாளா சும்மா தான் வச்சிருக்கேன். சரி, இனி அங்கேயும் கொஞ்சம் கிறுக்க்லாம்னு இருக்கேன். என்னோட ட்விட்டர் முகவ்ரி : http://twitter.com/balatwits . வாங்க நண்பர்களே, கொஞ்சம் கை கொடுங்க.
அப்புறம், என் பழைய ப்ளாகர் மின்னஞ்சல் முகவரி solaiazhagupuram@gmail.com கொஞ்சம் நீளமா தோணுச்சா, அதான் balavinmail@gmail.com ன்னு மாத்தி இருக்கேன். 
ஆர்குட்டில் http://www.orkut.co.in/Main#Profile?rl=ls&uid=11039259661382243826. அனைவருக்கும் அன்பு வரவேற்புகள்.

**************************************

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

**************************************

Friday, November 13, 2009

தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவு !





அடர்ந்த கருவேலம் புதரும்
ஆட்டுப் புழுக்கையுமாய் -
இப்பொழுதும் அழகாய் தானிருக்கும்,
எப்பொழுதும் திறந்திருக்கும் எங்கள்
கிராமத்து வீட்டின் மிச்சமாய்
தாழ்ப்பாள் இல்லாத ஒற்றைக் கதவும்,
அதைச் சுற்றிய குட்டிச்சுவரும் !


(நன்றி!  படம், நாதன். http://photo.net/photodb/photo?photo_id=4536455)


Thursday, September 17, 2009

பெயரில்லாதவை !



இதே மாதிரி பிட், பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு போன முறை (சில பல மாதங்களுக்கு முன்ன்ன்னாடி) கேட்டிருந்தேன் . நண்பர்களும் நிறைய பெயர்களை சொல்லி இருந்தீங்க. அனைவருக்கும் நன்றி, ஆனா "பெயரில்லாதவை" ங்கிற பெயரே நல்லா இருப்பது போல தோணுச்சா, அதையே தலைப்பா வச்சிட்டேன்.
**************************************


சமீபத்துல எனக்கும், மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும் நடந்த உரையாடல். 

நான் : குட்டி, உன் பனியன்ல உள்ள "யானை" பொம்மை சூப்பரா இருக்குடா.  
குட்டி : இது "யானை" இல்ல. குனிஞ்சு, குனிஞ்சு நடக்கும்ல அது, "ஒட்டகம்".  
நான் : இல்லடா, இது யானை மாதிரி தானே இருக்கு.  
குட்டி : ஒன்னுமில்ல, யானைனா வாய் பெருசா கீழ வரை தொங்கும் !
நான் : (வேறு வழியில்லாமல்) அப்போ, இது ஒட்டகம் தான்டா ! :):) :) 
**************************************

அப்புறம் சின்னதா ஒரு "பெயரில்லாதது" (கவிதைன்னு சொன்னாத்தான் அப்படியே "எஸ்கேப்" ஆகி ஓடிறீங்களே !


வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !
**************************************
ஒரு தடவை மேலோகத்துல நாரதர், மழைக் கடவுளான வருண பகவான்ட்ட போய்,
"சாமி, பூமில மனுசப்பயலுக எல்லாம், செழிப்பா சந்தோசமா இருக்கானுங்க. அதனால ஒரு பயலும் நம்ம நினைக்க மாட்றாய்ங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு மழைய நிப்பாட்டி வையுங்க, அப்ப தான் அவய்ங்களுக்கு நம்ம அருமை தெரியும்!" ன்னு சொன்னாராம்.  
அதுக்கு மழைக் கடவுளும், 
"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " அப்படின்னு சொல்லி மழைய நிப்பாட்டிட்டாரு. 
பூமில, வறட்சி வர ஆரம்பிச்சிருச்சு. விவசாயம் படுத்திருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, சரி, மக்கள் எல்லாம் நம்ம நினைக்கிறாய்ங்களான்னு பார்க்க மழைக் கடவுள் மாறுவேசத்துல பூமிக்கு வந்தாரு.  
பார்த்தா, ஒரு குடியானவன் பாளம், பாளமா வெடிச்சு காஞ்சு போய் கிடக்குற நிலத்துல, ரெட்ட மாட்டு ஏர் பூட்டி உழுதுட்டு இருக்கான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவனென்ன சரியான முட்டாப்பயலாவுல்ல இருக்கான்னு நினைச்சுட்டு,
"ஏய், இங்க பாருய்யா, உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க ?" 
அதுக்கு அந்த குடியானவன் பொறுமையா, 
"இல்லைங்கையா, எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அவன் என்னைக்கும் எங்களை கைவிட மாட்டான். சீக்கிரம் மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு " ன்னு சொல்லி கடவுள் மனசை குளிர்விச்சு, மழை பொழிய வச்சான்னு சொல்லி கதைய முடிக்கிறத விட.....  
அந்த குடியானவன், 
"நானாய்யா கிறுக்குப்பய? மழை பெய்ய வைக்க வேண்டியது மேல இருக்க கடவுளோட வேலை. அதை அவன் செய்ய மறந்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. அதுக்காக நானும் எஞ்சிவனேன்னு உக்கார்ந்து இருந்தேன்னா, ஏர் பூட்டுற என் வேலை எனக்கு மறந்துறும், ஒழுங்கா ஏர் இழுத்தோட்டுற வேலைய என் மாடுகளும் மறந்துறும். மழை பெய்யுறப்ப பெய்யட்டும், நாங்களாவது எங்க வேலைய மறக்காம செஞ்சுட்டு இருக்கோம்." ன்னு தொடர்ந்து ஏர் ஓட்டுனானாம். அதைக் கேட்டு மாறுவேசத்துல இருந்த கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்ன்னு சொல்லி கதையை முடிச்சா யதார்த்தமா இருக்கும் தானே..... நீங்க என்ன சொல்றீங்க!
**************************************

வரும் ஞாயிறு (செப்டம்பர் 20, 2009) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு இருப்பதாக, நண்பர் கார்த்தி தொலைபேசி சொன்னார். அதோடு இது வழக்கமான "சும்மா, வந்தோம், பேசினோம், பவண்டோ சாப்பிட்டோம், போனோம்" சந்திப்பல்ல, முக்கியமான விசயம் இருக்கு, பிறகு சொல்றேன்" ன்னு பெரிய பிட்டா போட்டிருக்கார். கலந்து கொண்டு கைகோர்க்க ஆர்வமாக இருக்கிறேன். ("ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!)
**************************************

இப்போதைக்கு இவ்வளவு தான். உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க !
நட்புடன்,
பாலகுமார்.

Wednesday, June 24, 2009

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!


ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காக, பணிக்கு, அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறு இல்லாத செயலாகத் தான் இதை நினைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பார்க்காத போது, நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட‌ பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான். நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற உற்சாகம் தரும் உந்துசக்தி இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயமாக‌ உதவும்.

போதும், ஓவர் பில்டப் ..... என்னோட வலைப்பதிவு பத்தி இந்த வாரம் "கல்கி" இதழ்ல (28/06/2009 இதழ், 72ம் பக்கம்) நாலு வரி பாராட்டி எழுதி, வலைப்பதிவு பெயரை வாசகர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. கல்கிக்கு நன்றிகள் பல.
எப்போதும் உடன்வரும், உற்சாகமளிக்கும், கிண்டலடிக்கும், ஓட்டும், குட்டும், படித்துவிட்டு எஸ்கேப் ஆகும், படிக்காமலே பாராட்டும் நண்பர்கள் அனைவரும் நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி அவர்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை. :)


விரைவில் சந்திப்போம்....

நட்புடன்,
வி.பாலகுமார்.


Friday, June 5, 2009

பெயரில்லாதது

எங்கள் தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சின்ன சந்தில் திரும்புகையில், குட்டி சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு அஞ்சு வயசு பையன் குறுக்கால புகுந்த்துட்டான்நான் சுதாரிச்சு பைக்கை சைடு சுவர்லசாய்ச்சு நிறுத்திட்டேன். அந்த குட்டி, சைக்கிள் ஓட்டிட்டு வர்றஅழக பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிச்சது அதுக்கு கோவம் வந்திருச்சு போல. டக்குன்னு சொல்லிச்சு,
 "அண்ணே  பார்த்த்ப்போண்ணே! நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க"
 "சரிங்க சார்,  ஸாரிங்க சார் :) " சிரித்துக்கொண்டே கிளம்பினேன்
கடவுளின் ஸ்பரிஸம், அப்பபோ கிடைக்கத் தான் செய்கிறது.
**************************************
 சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில், "அறை எண் 305ல் கடவுள் ஓடிக்கொண்டிருந்தது. வசனங்கள் சில, பல இடங்களில் நன்றாக இருப்பது போலத் தோன்றவே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடவுள் பவர்(?) கிடைத்த சந்தானம், ஒரு கட்டத்தில் மென்பொருள் துறையினர் அதிக சம்பளம்  வாங்குகிறார்கள் என்பதற்காக, அவர்களின் விரல்களை மொன்னையாக்கி விடுவார். நான் சேனலை மாற்றி விட்டேன்.
 என்ன ஒரு தட்டையான சிந்தனை !!! 
**************************************
 நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார்
"இந்திய கிரிக்கெட் உருப்படவே உருப்படாதுப்பா
"ஏங்க அப்படி சொல்றீங்க?"
 "பின்ன என்ன, இப்போ உலகக் கோப்பை போட்டிக்கு ஜடேஜாவை டீம்ல எடுத்துருக்காங்க?" 
"அதனால என்னங்க, சமீமபா, அவர் நல்லாத் தானே விளையாடிட்டு இருக்கார்." 
"இருந்தாலும், சூதாட்ட ஊழல்ல சிக்கினவரைப் போயி ........"
 "ஹலோ, அது வேற ஜடேஜாங்க"
 "என்னதான் இருந்தாலும் ஜடேஜா, ஜடேஜா தானேப்பா." 
(அடங்கொய்யால, அவனா நீ, இவ்வளவு நேரம் இது தெரியாம பேசீட்டு இருந்துட்டேனைய்யா? )
**************************************
 கடந்த ஞாயிறு அன்று, " நீயா,நானா?" பார்த்துக் கொண்டிருந்தோம். யாரையும் சேனல் மாற்றவிடாமல், நான் உன்னிப்பாக நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன். என் தம்பி கேட்டான்.
 "என்ன, இன்னிக்கி அதிசயமா, இவ்வளவு ஆர்வமா நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்க?"
 "இல்ல, எனக்கு தெரிஞ்வர் இன்னிக்கி கெஸ்ட்டா வர்றார்"
 அவர் வந்து பேச ஆரம்பித்தார்.  நன்றாகப் பேசினார்.
 தம்பி மறுபடி கேட்டான்,
 "யாரு, காலேஜ் ஃப்ரண்டா?"
 "இல்ல
"கூட வேலை பார்க்கிறவரா?"
 "இல்ல"
 "பின்ன?"
 "ப்ளாக் ரைட்டர்"
 "!"
 (அந்த ""விற்கு என்ன அர்த்தமென்று எனக்கு இன்னும் புரியவில்லை :) ஆனந்த விகடன்ல கவிதை எழுதுறவர்னு சொல்லி இருக்கனுமோ!  )
**************************************
 அப்புறம் சின்னதா ஒரு ............... 
ஓரே கூட்டம்...
பட்டனிப் போரட்டமும்,
உணவுத் திருவிழாவும்
அடுத்தடுத்த மேடைகளில்.
**************************************
 இந்த மாதிரி பிட்டு, பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம் ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேன். அவியல், குவியல், பொறியல், டரியல், இட்லி, சாம்பார், சட்னி,வடை, பொங்கல், புளியோதரை, பட்டாணி, சுன்டல், பஞ்சாமிருதம், ஜிகிர்தண்டா,காக்டெய்ல், ஊறுகாய் னு எல்லாரும் ஆளுக்கொரு பேரா, காபிரைட் வாங்கி வச்சிருக்காங்க. எனவே, இப்போதைக்கு தனிப்பெயர் இல்லாமலே போஸ்ட் பண்றேன். ஏதாவது நல்ல தலைப்பு தோனுச்சுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க‌ மக்களே !!!!
**************************************