Wednesday, November 20, 2013

கருப்பு என்னும் காவல்காரன்


புறநகர்ப்பகுதியில் புதிதாய் வீடுகட்டிப் போகும் எல்லோருக்கும் இருக்கும் பயம் தான் கண்ணனுக்கும் இருந்தது. அந்தப் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பொழுது தான் வீடுகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. இருட்டி விட்டால் போதும். சில்வண்டுகளின் இரைச்சலும், தேங்கிக் கிடந்த தண்ணீரிலிருந்து வரும் தவளைச் சத்தமும் பெரும் பயத்தைக் கொடுப்பதாய் இருக்கும். அலுவலகத்தில் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து மாதத் தவணையில் சீட்டுப் போட்டதில் கிடைத்த இடம் அது. ஒவ்வொருவராக அவரவர் வசதிக்கேற்ப வீடு கட்டி குடிவந்து கொண்டிருந்தனர். கண்ணன் முன்பு குடியிருந்த வீட்டின் வாடகையும், உரிமையாளரும் ஒன்றாய் கழுத்தை நெறிக்க, வேறு வழியின்றி இங்கு அவசர அவசரமாக வீடு கட்டி குடிவந்து விட்டார்கள். ஒரு கடை கண்ணிக்கு செல்வதென்றால் கூட இரண்டு மூன்று கிலோ மீட்டர் செல்ல வேண்டி இருந்தது. அதெல்லாம் கூட பரவாயில்லை. ஆனால் திருட்டு பயம் தான் பெரிதாகத் தோன்றியது. அதுவும் அக்கம்பக்கத்தில் இரண்டு முறை களவு போயிருக்கிறது என்று கேள்விப்பட்டவுன் அவர்களது பயம் இன்னும் அதிகமானது.

பால் காய்ச்சு விழாவிற்கு வந்திருந்த போதே அவனது அப்பா சொன்னார், “அத்துவானக் காட்டுக்குள்ள கிடக்குறது மாதிரி இருக்கு, ராத்திரில வீடு புகுந்து அடிச்சாக் கூட கேக்க நாதியில்ல” 

அதற்கு அவன், “அதுக்கென்னப்பா பண்றது... பக்கத்து இடங்க பூராம் எங்க ஆபிஸ் ஆளுங்க தான். ஒவ்வொருத்தரா கட்ட ஆரம்பிச்சா கொஞ்ச நாள்ல பக்கா டவுன் மாதிரி ஆகிரும் பாருங்க” என்றான். அவனுக்கும் அந்த நம்பிக்கை தான். 

ஆனால் அவன் அப்பாவுக்கு மனம் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. பால் காய்ச்சு முடிந்து கண்ணனையும் அவனது மனைவியையும் குடியமர்த்தி விட்டு ஊருக்குப் போனவர், கொஞ்ச நாட்களிலேயே திரும்பி வந்தார். கையில் வித்தியாசமாய் வயர் கூடை ஒன்று இருந்தது.

“என்னப்பா, திடுதிப்புன்னு வந்து நிக்கிறீங்க... ?” என்றவன் அவர் கையிலிருந்த கூடையையே உற்று நோக்கினான்.

அவரும் “ஒன்னுமில்லய்யா, நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா கிடக்கீங்க. எங்களாலயும் உங்க கூட வந்து இருக்க தோதுப்படல... அதான் இதப் புடிச்சிட்டு வந்தேன். மீந்ததைப் போடுங்க. துணைக்கு நிக்கும்”

கூடையில் இருந்து இறக்கி விட்டதும் அதற்கு திசை பிடிபடவில்லை போல. லேசாக முனங்கி விட்டு மெல்ல தத்தித் தத்தி கண்ணன் காலடி வரை வந்து விட்டது.

“ஐயோ, இதெ எங்கெருந்துப்பா புடிச்சிட்டு வந்தீங்க. நான் பொழுது விடிய போனா, பொழுது சாய தான் வர்றேன். இவ ஒருத்தியால இதை வச்சு பண்டுவம் பாக்க முடியாது. பேசாம, போறப்போ வீட்டில கொண்டு போடுங்க... உங்களுக்குத் தான் இதெல்லாம் சரிப்படும்”

கண்ணன் அப்பாவிற்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். கிராமத்தில் நான்கைந்து நாய்களை வீட்டில் வைத்து வளர்ப்பது போக ஊரிலுள்ள் அத்தனை உருப்படிகளோடும் உறவு கொண்டாடிக் கொண்டிருப்பார். அந்த நினைப்பில் மகன் வீட்டிற்கும் காவல் நிற்கட்டும் என ஒரு குட்டியைத் தூக்கி வந்து விட்டார்.

“டேய், ஊருலருந்து தான் வேலை மெனக்கட்டு கொண்டு வர்றேன். தலையீத்துக் குட்டி. அம்சம் எப்படி இருக்கு பாரு. நம்ம குலதெய்வம் கருப்பசாமியவே கொண்டு வந்து உன் புது வீட்டுல விட்டுருக்கேன். உஙகளுக்கு எப்பவும் காவல் நிக்கும்டா” என்று சொல்லிவிட்டு மருமகளைப் பார்த்தாள். அவள் கண்ணன் என்ன சொல்வானோ என அவனது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்

கண்ணனுக்கு நாய் வளர்ப்பதில் எல்லாம் ஆர்வம் இல்லை. சொல்லப்போனால் சின்ன வயதிலிருந்து போதும் போதும் என்கிற அளவுக்கு அவன் அப்பா நாய்களுடனேயே விளையாட்டுக் காட்டியதில் ஒரு வித வெறுப்பே வந்திருந்தது. இப்போது தான் புதுவீடு கட்டி வந்திருந்தார்கள். அங்கேயும் நாயைக் கொண்டு வந்து விட்டதில் எரிச்சல் தான் அதிகமாகியது.

“புரியாம பேசாதீங்கப்பா... அதெல்லாம் சரிப்படாது, நீங்க போறப்போ தூக்கிட்டுப் போயிடுங்க”

கண்ணன் கடிந்து சொன்னதும் அவனது அப்பாவின் முகம் சட்டென சுருங்கி விட்டது.

“சரிப்பா.. நான் கொண்டு போய்க்கிட்றேன்”

கண்ணனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ”ஒரு நிமிஷத்துல முகத்தில் அறைவது போல பேசிட்டோமே. இதுக்காக நூத்தம்பது கிலோ மீட்டர் வந்திருக்கார். வீட்டுக்குள்ள நுழைஞ்சும் நுழையாம இப்படி கத்திட்டோமே” என மனது அடித்தது.

“சரி வாங்க... முகத்தைக் கழுவிட்டு சாப்பிட உக்காருங்க” என்று அரவணைத்துக் கூட்டிப் போய் அவருக்கு முகம் துடைக்க துண்டை எடுத்துக் கொடுத்து விட்டு, உள்ளே அடுப்படிக்குள் சென்று ஒரு பழைய பிளாஸ்டிக் தட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அதில் தண்ணீரை ஊற்றி அந்த நாய்க்குட்டியினருகே வைத்து விட்டு அதைப் பார்த்தான். சுமார் ஒரு மாதமான ஆண் குட்டி. முற்றிலும் கறுப்பான உடலில், நெத்தி சுழி மற்றும் நான்கு கால்களில் மட்டும் வெள்ளை நிறம். கிராமத்தில் விலா எலும்பு தெரிய நீட்டு வாக்காய் சுற்றிக் கொண்டிருக்கும் நாட்டு நாயினம் தான். ஆனாலும் அப்பா சொன்னது போல அம்சமாய்த் தான் இருந்தது. லேசாக அதன் தலையைத் தொட்டான். அதுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அது அவன் தொடுதலில் ஏதோ உணர்ந்ததைப் போல, வாலை வேகமாய் ஆட்டிக் கொண்டே குழைந்தபடி தண்ணீரை நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.

அப்பா வீட்டில் இருந்த இரண்டு நாட்களுக்குள் கண்ணனின் மனைவியிடம் குட்டி நன்றாக பழகி விட்டது. அவளுக்கும் முதலில் இருந்த தயக்கம் விலகி அதனோடு சகஜமாய விளையாடத் துவங்கியிருந்தாள். இனி வேறு வழியில்லை, அந்த நாய்க்குட்டி இனி தங்களுடன் தான் இருக்கப் போகிறது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டான் கண்ணன். குட்டிக்கு “கருப்பு” என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது. அப்பாவும் நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினார். அதற்கு பால், பிஸ்கட் கொடுப்பது, சமயங்களில் வராண்டாவில் அது எடுத்து வைத்திருக்கும் வாந்தி மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வது, அதனுடன் விளையாடுவது என்று வேண்டா வெறுப்பாக செய்யத்துவங்கிய வேலைகள் எல்லாம் நாட்கள் செல்லச்செல்ல கணவன் மனைவி இருவருக்கும் விருப்பமானதாகவே மாறிப்போயின. கட்டிப் போட்டு வளர்க்காவிட்டாலும் வீட்டைத் தாண்டி எங்கும் செல்லாமல் “கருப்பும்” எப்போதும் அவர்களுடனேயே வலம் வந்தது.

வெளியூரில் நடக்கும் உறவினரின் திருமணத்திற்காக கணவ்ன் மனைவி இருவரும் செல்ல வேண்டிய நாளில் கருப்பை தனியே விட்டு விட்டு செல்வது குறித்தே அதிகம் கவலைப்பட்டனர். சரி இரவுக்குள் வீடு திரும்பி விடலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒரு நாளில் கருப்பு சாப்பிடும் அளவிற்கு சாப்பாட்டை அதற்குரிய தட்டில் வைத்து விட்டுக் கிளம்பினர். அதிகாலை சென்றவர்கள் ஊர் வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது. பேருந்து நிலைத்தை அடைந்து அங்கே விட்டுவிட்டுச் சென்றிருந்த இருசக்கரவாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிக் கிளம்பினர்.

பேருந்து நிலைய நுழைவாயிலைக் கடக்கையிலேயே கண்ணன் சத்தமிட்டான்.

“இங்க பாரு, நம்ம கருப்பு இங்க வரை வந்து சுத்திட்டு இருக்கு”

கருப்பு, அவர்கள் வீடு இருக்கும் புறநகர்ப்பகுதியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பேருந்து நிலையம் வரை எப்படி வந்திருக்க முடியும் என்று அவன் மனைவிக்கும் ஆச்சரியம் தான். ஆனால் அவள் பார்வைக்கு கருப்பு தட்டுப்படவில்லை.

“சும்மா உளறாதீங்க.. இவ்வளவு தூரத்துக்கு அது எப்படி வரும்” என்றவளாய் வண்டியை கவனமாய் ஓட்டச் சொல்லி விட்டு திரும்பினாள்.

நகரம் கடந்து புறநகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டிய நெடுஞ்சாலையைத் தொடும் போதும், கண்ணனுக்கு கருப்பு கூடவே ஓடி வருவது போலவே தோன்றியது. சற்று நிதானித்துப் பார்த்தால் கண்ணுக்கு அகப்படவில்லை. ஆனால் சிறிது நேரத்திற்கொரு முறை அது வண்டியை ஒட்டி நெடுஞ்சாலையில் முன்னால் ஓடிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது. அதனைப் பற்றி அவன் மனைவியிடம் அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டே வந்தாலும் அவள் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை.

நெடுஞ்சாலையைக் கடந்து அவர்கள் வீடு இருக்கும் புறநகர் சாலைக்குச் செல்ல வண்டியை வலதுபுறம்  திருப்ப எத்தனிக்கையில் எதிரே கண் மண் தெரியாமல் ஒரு மணல் லாரி இவர்களை நோக்கி விரைந்து வந்தது. ”செத்தோம்” என இவர்கள் கூச்சலிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே வந்த நாய் போன்ற ஏதோ ஒரு விலங்கை அடித்து விட்டு, இவர்களின் இருசக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை மயிரிழையில் தவிர்த்து சீரில்லாமல் பறந்து சென்றது. அதனை சற்றும் எதிர்பாராத இவர்கள், சுதாரித்து வண்டியை ஓரமாய் நிறுத்தி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தனர். சுற்றுமுற்றும் எந்தவொரு விலங்கும் அடிபட்டதற்கான எந்தத் தடயமும் அங்கில்லை,

பயம் விலகாமல் வீடு வந்து சேர்ந்தவர்களுக்கு, வாசல் கதவருகே கருப்பு படுத்திருப்பதைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அவர்களைக் கண்டவுடன் அது மெல்லிய குரலில் முனகத்துவங்கியது.
“காலைல இருந்து ஆளக்காணாம்னு செல்லம் கொஞ்சுது... வச்ச சாப்பட்டக்கூட தொட்டுப்பார்க்கல பாரேன்” என்றான் கண்ணன்.
“அது பாட்டுக்கு படுத்த இடத்த விட்டு எந்திருக்காம கிடக்கு.. நீங்க ரோட்டுல பார்த்தேன், காட்டுல பார்த்தேன்னிங்க!” என்று அவன் மனைவி சொன்னதற்கு சிரித்துக் கொண்டே போய் கதவைத் திறக்க முற்பட்டான். வாசல் படியெங்கும் இரத்தம் உறைந்து போய் இருந்தது.

வீட்டைச் சுற்றி எங்கு பார்த்தாலும் இரத்தத் துளிகளாய் சிதறிக் கிடப்பதையும், கருப்பின் முனகல் சத்தம் அதிகமாவதையும் கவனித்து வேகமாய் வந்து அதனைத் தூக்கினான்.அதன் முன்னங்கால் இரண்டிலும் சதை பிய்ந்து இரத்தம் உறைந்து போய் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவன் கருப்பை கையில் ஏந்தியதும் அது பலகீனமாய் அவன் மார்பில் தலை சாய்த்து, அது வரை தேக்கி வைத்திருந்த வலியணைத்தையும் வெளிப்படுத்துவது போல, ஈனசுரத்தில் பெருங்குரலெடுத்து முனங்கத் துவங்கியது.

தங்கள் குலதெயவமான கருப்பசாமியை நினைத்து நிலக்காப்பை எடுத்து அதன் நெற்றியில் பூசி விட்டு, அதனைத் தூக்கிக் கொண்டு நகரத்திலுள்ள மருத்துவமனை நோக்கி ஓடினான்.

முறையாக வைத்தியம் பார்த்து, கண்ணும் கருத்துமாக கவனித்ததில் வெகு விரைவிலேயே கருப்பு குணமாகி விட்டது. வேண்டாவெறுப்பாக வீட்டுக்குள் வந்த ஜீவன், வீட்டின் முக்கிய உறுப்பினராக மாறி விட்டது. கருப்பினை தனியாக விட்டுச் செல்ல நேருமே என்று பெரும்பான்மையான வெளியூர்ப் பயணங்களைக் கூட அவர்கள் தவிர்த்தனர்.

மாதங்கள் செல்லச் செல்ல அவர்கள் குடியிருந்த பகுதியில் நிறைய வீடுகள் வரத்துவங்கியது. ஓரிரு ஆண்டுகளிலேயே மக்கள் அதிகமாய் புழங்கும் ஏரியாவாக மாறிப்போனது.

ஒரு முறை கண்ணனது அப்பா அவன் வீட்டிற்கு வந்தார். 

”வீட்டைக் கண்டுபிடிக்குறக்குள்ள பெரும்பாடா போச்சுப்பா. சுத்தி எத்தனை கட்டடங்கள் ஆகிபோச்சு.. திக்கும் தெரியல, தெசையும் தெரியல” என்று நொந்து கொண்டவர். 

”எங்கடா நம்ம கருப்பு எங்கே... ஊர் சுத்துற அளவு முன்னேறிடுச்சா?”

“இல்லப்பா, ஏரியால போற வர்றங்களை எல்லாம் துரத்த ஆரம்பிச்சிருச்சு. எல்லாரும் வீட்டுல வந்து சண்டை போட்டாங்க"

“பருவத்துல கொஞ்சம் விளையாட்டுத் தனம் இருக்கும்டா... கொஞ்ச நாள்ல சரியாடும்”

”கட்டி வச்சும் பார்த்தோம். ராத்திரியெல்லாம் ஊளையிட வேற ஆரம்பிச்சிருச்சு... அதனால”

"அதனால....”

“இல்லப்பா... ரெண்டு சின்னப்பசங்களுக்கு பல்லு பட்ற அளவு ஆகிடுச்சு... அதனால...”

“அதனால....”

கண்ணன் அதற்கு மேல் பேச முடியாமல், கொல்லைப்புறத்தில் நின்ற தென்னைங்கன்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

******

நன்றி: மலைகள் இதழ்: http://malaigal.com/?p=3390

Wednesday, October 30, 2013

நான் எழுதலாமா?

இணையத்தில் எழுதுகிறேன் என்று தெரிந்தவர்கள் கேள்விப்படும் பொழுது, பெரும்பான்மையினர் சுற்றி வளைத்துக் கேட்கும் கேள்வி “எதுக்காக எழுதுறீங்க?”. இதற்கு நேரடியாக என்னால் பதில் சொல்ல முடிந்ததில்லை. மையமாக சிரித்து விட்டு “சும்மா தான்” என்று  கூறுவேன். 

நேரம் ஒதுக்கி, உழைப்பை செலுத்தும் பொழுதுபோக்கு தேவையா?
நீயெல்லாம் எழுதி என்ன “ஆஸ்காரா” வாங்க போற?
லீவு நாள்ல ரெஸ்ட் எடுக்காம என்னத்த லேப்டாப்லயே உக்கார்ந்திருக்க?
ஆஃபிஸ் டென்சன் பத்தாதுன்னு இதுல வேற ஏங்க முட்டி மோதிட்டு இருக்கீங்க?
ஹாபி’யைக் கூட கர்மசிரத்தையா செய்ற ஆளாடா நீ?
பாரு, பொழுதன்னக்கும் எதையாவது யோசிட்டு, மூளை குழம்ப தான் போகுது?
இண்டர்நெட்ல எழுதுறதெல்லாம் குப்பைங்க. வேலைவெட்டி இல்லாதவனுக என்னத்தையாவது கிறுக்குவானுக.
எழுதுறதெல்லாம் வேஸ்ட் சார். சினிமா, டி.வி.னு போனா தான் சார் ஒரு கெத்து.
காலம் எங்கேயோ போய்ட்டு இருக்கு. இப்பல்லாம் வாசிக்கிற பழக்கம் எல்லாம் ஓல்ட் ஃபேஷன்.
பக்கம் பக்கமா எழுதுறவங்களை பார்த்தாலே எனக்கு அவெர்சன். 
ஜிப்பா, தாடி, ஜோல்னாபை ஸ்டேடஸுக்கு எப்போ மாறுவீங்க?

இப்படி எத்தனை கேள்விகள் வந்தாலும், எதையும் பொருட்படுத்தியதே இல்லை. எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். நான் ஒன்றும் உலக எழுத்தை எழுதிவிடப்போவதில்லை தான்.  ஒளிவட்டம் கூடும், சிலபல லைக்ஸ், கமெண்ட்ஸ் வரும், ஓவர்நைட் பிரபலம் ஆகிடுவோம் என்ற நப்பாசைகள் எல்லாம் கூட இல்லை. ஆனாலும் என்ன எழுதினாலும், அது அசட்டு நகைச்சுவையோ அல்லது சுயசொறிதலோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் மனதுக்கு நெருக்கமானதை, உண்மையானதை மட்டும் தான் எழுத வேண்டும். அதை யார் எப்படி எடுத்துக் கொண்டாலும், எனக்கான இலக்கு தூரத்தில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி தினம் ஒரு அடி எடுத்து வைக்கிறேன் என்ற நம்பிக்கையுடனேயே எழுதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த ஆரோக்கியமான பொழுதுபோக்கில் மிகப்பெரிய இளைப்பாறுதல் கிடைக்கிறது. கடிவாளம் கட்டிவிட்டு ஓடும் குதிரை போன்ற வாழ்க்கை முறையில், “எதையாவது” எழுதுவது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. அவ்வளவுதான்.

இணைப்பில் உள்ளது, அதிசயமாக நான் முழுவதும் ஏற்கும் ஒரு கட்டுரை. இவர் சொல்லி இருக்கும் கருத்தை தான் நானும் நம்புகிறேன், என்னால் ஆனதை எழுதுக் கொண்டிருக்கிறேன்
http://www.jeyamohan.in/?p=338

விடுதலை

சோதனைக்குழாய் சரிந்து
மேஜை நடுவில் 
சமுத்திரமாய் விரிகிறது
ஒற்றை பாதரசம்

அள்ளியெடுக்கும்
வடிகுழலுக்கு அடங்காமல்
உடைகிறது சமுத்திரம்

ஒவ்வொரு துளியும்
தனித்தனி வாழ்க்கை...
தனித்தனி உலகம்...
தனித்தனி சமுத்திரம்...


Friday, October 18, 2013

எங்கே செல்கிறோம்?

அமெரிக்காவில், கல்லூரி மாணவர் வகுப்பறைக்குள் புகுந்து சராமாரியாக சுட்டதில் இத்தனை பேர் பலி என்பது போன்ற செய்திகளை தொலைக்காட்சியில் காட்டும் போது, ஒரு நிமிடம் அதிர்ந்து பின் எல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு, அளவுக்கு மீறிய எக்ஸ்போசர், மது மற்றும் போதைப் பொருட்களின் பாதிப்பினால் ஏற்படும் மனப்பிறழ்வினால் தான் மேலை நாடுகளில் இத்தகைய கொடுஞ்செயல்கள்  சாதாரணமாகி விட்டன, நமது கல்வி முறையும், குழந்தைகள் வளர்ப்பு முறையும் அவ்வளவு மோசமில்லை என்று சிறு சமாதானங்கள் தோன்றி மனதை அமைதிப்படுத்தும். ஆனால் சமீபமாக கேளவிப்படும் நமது ஊர் செய்திகள் மனதை பதைபதைக்கச் செய்வதுடன், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற நீங்கா அச்சத்தையும் தருகின்றது.

சென்றவாரம் நடந்த ஒரு படுகொலை. கல்லூரியில் தவறு செய்ததற்காக தண்டனை கொடுத்ததால், கல்லூரி முதல்வரை அவரது அலுவலக அறைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இது நடந்தது ஒரு “பொறியியல்” கல்லூரியில், கொலை செய்தவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது. மாணவப்பருவத்தில் இருக்கும் ஒருவனுக்கு எப்படி இப்படி ஒரு நினைப்பும் துணிச்சலும் வருகிறது என்றே புரியவில்லை. இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்று அவன் யூகித்திருப்பானா, இல்லை எதற்கும் துணிந்து தனது பேராசிரியரை கொலை செய்யும் அளவிற்கு அதுவும் துடிக்கத்துடிக்க வெட்டிக் கொள்ளும் அளவிற்கு அவனது மனநிலை மிருகத்தனமாக மாறியிருந்ததா.. என்ன பதில் அவனிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.

பெருத்துப் போயிருக்கும் இன்றைய பொறியியல் கல்லூரி சந்தையில் ஒரு வழக்கமிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை சுயநிதிக் கல்லூரியின் காலி இடங்களை நிரப்ப ”ஆள் பிடிப்பது”. எந்த அடிப்படை தகுதியும் ஆர்வமும் இல்லாமல் இருந்தால் கூட ஒருவன் சில இலட்சங்கள் செலவில் ஏன் சில ஆயிரங்களில் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விடலாம். அதற்கென ஏஜண்டுகள், கமிஷன் என்று பெரிய வலையமைப்பே செய்ல்படுகிறது. ஏகப்பட்ட கல்லூரியில் ஒரு மாணவன் கூட சேராத துறைகள் இன்று இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகள் காளான்களைப் போல் முளைவிட்டிருக்கும் காலகட்டத்தில், குறிப்பிட்ட கல்லூரியில் தகுந்த மாணவர்களும் கிடைக்காத வேளையில், நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவனும் நான்கு வருடங்களுக்கு படியளக்கும் கடவுள். திறமையும் ஆர்வமும் இன்றி வகுப்பில் வந்து உட்காரும் ஒருவனுக்கு கொஞ்சம் விஷமத்தனமும், ஏற்றிவிட அவனைப் போன்ற சக மாணவர்களும், இளமைத்திமிரும் கூட்டு சேரும் போது முதல் வேலையாக பாடமெடுக்க வரும் விரிவுரையாளரை கிண்டல் செய்வான். அவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தால்,  அவனை ஒழுக்க நெறிமுறைகளின் கீழ் கொண்டு வர முற்பட்டு அவனுக்குக் கடுமையான தண்டனைகள் விதித்தாலோ அல்லது அவனை கல்லூரியிலிரிந்து நீக்கினாலோ, அவனிடமிருந்து அடுத்த ஆண்டுகளில் வரும் வருமானம் நின்று போகும். இதனை நிர்வாகம் எப்ப்டி ஏற்கும். எனவே புகார் கொடுக்க வந்த ஆசிரியரையே கடிந்து, அவர் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்தால் மாணவன் ஏன் கவனச்சிதறல் அடைகிறான். எனவே அவர் தான் பொறுப்புடன் பாடம் நடத்த வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டுச் செல்லலாம் என அறிவுரைகள் கிடைக்கும். பிற்கெப்படி அந்த ஆசிரியரால் மாணவர்களைக் கண்டிக்க முடியும். படிக்க வருபவனுக்கு ஒன்று படித்து பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் அல்லது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். நான்கு வருடம் இஷ்டம் போல்  பொழுது போக்கிக் கொள்ளலாம் என்று வருபவனை எந்த ஆசிரியர் தான் திருத்த முடியும். அதற்கும் மீறி சில கல்லூரிகள் தவறு செய்யும் மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை - சில ஆயிரம் ரூபாய் அபராதம். அது அவனுக்கு இன்னும் வசதி. பணத்தை கட்டி விட்டு முகத்தில் காறி உமிழாத குறையாக ஆசிரியர்களை ஏளனப்பார்வை பார்க்கத்தான் செய்வான். அதனையும் மீறி கண்டிக்கும் ஆசிரியர்களை வெட்டிகொலை செய்யும் அளவு குரூர புத்தி வளர்கிறது.

இது ஏதோ விதிவிலக்கான ஒரு சம்பவமாக தோன்றவில்லை. சில மாதங்கள் முன்பு, இதே போன்று பள்ளி மாணவன் ஒருவன் தன் வகுப்பு ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவமும் நிகழந்துள்ளது. அதே போன்று, சமீப காலங்களில் பெருநகர வழிப்பறிகளிலும், திருட்டு, கொலை கொள்ளை சம்பவங்களிலும் பெரும்பாலும் பதின்ம வயது கல்லூரி, பள்ளி மாணவர்களே ஈடுபடுவதாக செய்திகள் தெரிவிக்கன்றன. பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கு ”ஒழுக்கவியல்” வகுப்புகள் நடக்கத்தான் நடக்கின்றன. ஆனால் அவை எவ்வளவு தூரம் அவர்களை நல்வழிப்படுத்த உதவுகின்றன என்று தான் தெரியவில்லை. வீடு தொடங்கி, சமுதாயம், அரசியல், ஊடகம், திரைப்படம், இணையம், விளையாட்டு என தன்னைச் சுற்றிய அனைத்து சாளரங்களும் நன்னடத்தை, சமூக ஒழுக்கம், சுயமரியாதை இப்படி அனைத்தையும் எள்ளி நகையாடுகையில்  பாடங்கள் ஏட்டுச்சுரைக்காயாகத் தானே பார்க்கப்படும்.

சரி, இனி கொலை செய்த மாணவனின் எதிர்காலம் என்னாகும்? ஒன்றும் பயப்படத்தேவையில்லை. அது அவனது பணபலத்தையும், அவனுக்காக வாதாடப்போகிற வழக்கறிஞரின் வாய்பலத்தையும் பொறுத்தது. யார் கண்டது, பிற்காலத்தில் அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவும் செய்யலாம். அதற்கு என்ன முன்னுதாரணங்களா இல்லை. சமூக விழுமியங்கள் செத்துக்கொண்டிருக்கும் காலத்தில் ஆசிரியராவது, மாணவனாவது, மண்ணாங்கட்டியாவது?

-----------

Monday, October 14, 2013

விழியனின் சிறுவர் உலகம்

விழியனின் சிறுவர் உலகம்

வி. பாலகுமார்
Vizhiyan1
வீடியோ கேம்ஸோடும், கார்ட்டூன் சேனல்களோடும் ஒன்றிப் போயிருக்கும் இன்றைய குழந்தைகளை புத்தகங்களின் பக்கம் இழுப்பது ஒரு பெரிய சவாலான வேலை. அதுவும் புத்தகம் என்று நினைக்கும் போதே மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் என்று மனரீதியாக சோர்ந்து விடும் குழந்தைகள் பலர். அவர்களுக்கு ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்காக, உற்சாகம் தரும் விளையாட்டாக “சிறுவர் புத்தகங்களை” அறிமுகம் செய்வது பெற்றோரின் கடமை. சிறுவர் கதை புத்தகங்கள் இன்றைய குழந்தைகளின் இயந்திரமயமான நடைமுறைகளுக்கிடையில் ஒரு கற்பனை உலகை வடிக்க வல்லவை. அவை குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், கற்பனைவளத்தையும், ஆக்கத்திறனையும் தரக்கூடியவை.
ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பான்மையான சிறுவர் புத்தகங்கள் நீதி சொல்லக்கூடியவை தாம். சிறுவர்களைப் பொறுத்தவரை ஒரு புத்தகமானது வெறுமனே நீதி போதனை செய்யும் ஆசானாக மட்டுமில்லாமல், அவர்களின் உலகத்துக்குள் எளிதாகச் சென்று ஒரு தோழனைப் போல் கதை பேசினால் அவர்களும் புத்தகத்துடன் ஒன்றி விடுவர். தொலைக்காட்சியில் கார்ட்டூன் சானலைப் பார்க்கும் ஒரு சிறுவன், தன்னை “சோட்டா பீமாகவோ”, “லிட்டில் கிருஷ்ணா”வாகவோ சுலபமாக உருவகப்படுத்திக் கொள்கிறான். காரணம், அந்தப் பாத்திரங்களின் சுட்டித்தனங்களை, சாகசங்களை, விளையாட்டுக்களை தானே நிகழ்த்துவதாக நம்புகிறான். எனவே அந்த தொடர்களுடன் ஒன்றிப் போகிறான். அதுபோலவே சிறுவர் கதை புத்தகங்களை வாசிக்கும் ஒரு சிறுவர் சிறுமியர் அதிலுள்ள பாத்திரங்களில் தங்களைப் பொருத்திப் பார்த்து உற்சாகம் அடையும் வண்ணம் இருந்தால் அத்தகைய புத்தகங்கள் நிச்சயம் அவர்களை ஈர்க்கும்.
vizhiyan2
இணையம் மூலம் அறிமுகமான நண்பர் உமாநாத், விழியன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது புதிய புத்தகமான “மாகடிகாரம்” சமீபத்தில் வெளிவந்துள்ளது. உலக சுழற்சிக்கு முதுகெலும்பாய் விளங்கும் ஒரு பெரிய கடிகாரத்தைப் பற்றிய கதை. தாத்தாக்களின் தாத்தா கடிகாரமான “மாகடிகாரம்” மூலமாகவே இந்த உலக இயக்கம் நடைபெறுகிறது. அதனை சாவி கொடுத்து தொடர்ந்து இயக்கவைக்கும் பணிக்காக “தீமன்” என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். மலைப்பிரதேசத்துள் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும் அந்த கடிகாரம், அதனைக் காவல் காக்கும் வீரர்கள், கடிகாரத்தை தொடர்ந்து இயக்க வைப்பதற்கான சாவியை எடுக்கப் போகும் வழிமுறைகள் என்று கதை முழுவதும் தீமனின் பயண அனுபவம் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் சிறுவன் தீமனின் புத்தி கூர்மை மற்றும் துணிச்சலினால் ஒரு மிகப்பெரிய உண்மையும் வெளிப்பட இனிதாய் முடிகிறது கதை. புத்தகத்தின் கடைசியில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் சாதனங்கள் பற்றிய அறிவியல் குறிப்பும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
அது போலவே விழியனின் இன்னொரு புத்த்கமான “பென்சில்களின் அட்டகாசம்” சுவாரஸ்யமான கதை. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் பென்சில்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா செலவது தான் கதை. அவை எவ்வாறு ஒன்று கூடி திட்டம் போட்டு, ரகசியமாக குழந்தைகளின் டப்பாக்களில் இருந்து வெளிவந்து, எல்.கே.ஜி அறையில் இருக்கும் பொம்மை பஸ்ஸை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு குட்டி அருவிக்கு சுற்றுலா செல்கின்றன என இயல்பான நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார். அதிலும் பென்சில்களைத் துரத்தி வரும் எதிரிகளான ஷார்ப்னர்களிடமிருந்து அவை எப்படி தப்பிக்கின்றன, பிறகு எப்படி அவை குழந்தைகளிடம் மீண்டும் சேர்ந்தன என்பதெல்லாம் செம இண்ட்ரஸ்டிங். தொலைந்த போன பொருட்கள் எல்லாம் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் “கறுப்புப் பெட்டி” என்றால் பென்சில்களுக்கு மிகவும் பயம். அந்தப் பெட்டிக்குள் சென்று விட்டால் திரும்பி வருவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியம். சுற்றுலா சென்று திரும்பி வரும் பென்சில்கள் அந்த பெட்டிக்குள் அகப்படுவதிலிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கின்றன என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.
vizhiyan3
“டாலும் ழீயும்” என்னும் விழியனின் மற்றுமொரு புத்தகம் கடல் நண்பர்களான டால் என்ற டால்பினும், ழீ என்ற தங்கமீனும் கடலுக்கு அடியில் கோட்டை கட்டும் சுவையான கதை. “அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை” நிலவில் சிறுவர்கள் நடத்தும் சாகசங்கள் பற்றிய கற்பனைக்கதை. விழியனின் கதைகள் அனைத்தும் சிறுவர் உலகத்துக்குள் சென்று அவர்கள் மொழியில் பேசி, அவர்களுடன் விளையாடி, அவர்களுடன் ஒன்றுபட்ட அலைவரிசையில் பயணிக்கும் உணர்வினை தரவல்லவை.
vizhiyan4
“ஃபேஸ்புக்கில்” அவர் அவ்வப்பொழுது பகிர்ந்து கொள்ளும் அவரது வாழ்க்கை அனுபவங்கள் பெரும்பாலும் குழந்தைகளை மையப்படுத்தியதாகவும், அவரது மகள் “குழலி”யுடனான சுவாரஸ்ய கதையாடல்களாகவும் இருக்கின்றன. மென்பொருள் துறையில் பணியாற்றும் விழியன் பயணம் செய்வதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வமுடையவர். விழியனின் புத்தகங்களை பாரதி புத்தக நிலையம் “BOOKS FOR CHILDREN” என்ற தொகுப்பின் கீழ் மிகக்குறைந்த விலையில் (ரூ 20 அளவில்) தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அடுத்த முறை உங்கள் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கும் பொழுது, நூலாசிரியர் “விழியன்” என்று இருந்தால் கண்களை மூடிக்கொண்டு அவற்றை வாங்கலாம், அவற்றை வாசிக்கையில் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல உங்களுக்குமே ஒரு மகிழ்வான, நேர்மறை சிந்தனை தோற்றுவிக்கும், ஆரோக்கியமான பொழுதுபோக்கம் அம்சமுடைய ஒரு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
----
நன்றி: சொல்வனம் இதழ் http://solvanam.com/?p=29015

Tuesday, September 10, 2013

பாழி நோக்கிய பயணம்

வாவலின் அதிர்வொலிப்பெருக்கம்
திணைப்பெயர்வுக்கான பேரூழி
வன்மம் செய்பொருளாகிய வதனத்தில்
கவணம் போர்த்திய மறைவெறியீடு

ஓர் ஓலச்சத்த தூரத்திலிருக்கும்
விடுபடலுக்கஞ்சி
தொங்கிதழின் கீழ் குரல்வளையில் 
பாரமாய் தொக்கி நிற்கும் மொழி

புலரியின் உரித்தீட்டை மறுதலித்து
அசுரசந்தியொளியில் இறக்கை விரித்து 
காத்திருக்கையில் இறுதி எரிமீன் வீழ்ச்சி

சோடு பிரிந்த இணைபட்சியின்
கேவல் பொதிந்த இசைச்சுரம்
நெடுவழிப்பயணத்தின் சமிக்ஞை

துர்க்கந்தம் வீசும் பாழ்நத்தத்தின்
எஞ்சிய ஆன்மா புதைமணலில் அமிழும்
உடற் பாய்மத்தில் மிதக்கும் நோய்க்குறியோ
நாவாய் திசையின் முற்றொருமையாகும்

குகியம் நிறைந்த பாதைவழி
பற்றெல்லையை காணாக்கிரகணமாக்கி
பாழி நோக்கிய பயணம் நெடுகப்பிடிக்கிறது...

செல்வோம்!


Saturday, September 7, 2013

பெயரற்றவன் கனவு

குழு நிழற்படங்களின் ஓரத்தில்
பாதியாய் தெரிபவன்

எதற்கான எதிர்வினையாயும்
தலைகவிழந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்

நன்றியறிவித்தலில்
தன் பெயர் விடுபட்டதை
பொருட்டாக எண்ணாதவன்

கடைசிக்கு இரண்டு வரிசை முந்திய
இருக்கையை எப்போதும்
தேர்ந்து கொள்பவன்

மஞ்சள் முடிந்து 
பச்சை தெரியக் காத்து நிற்பவன்

அவனுக்குள்ளும் இருக்குமோ
ஆளம்புசேனை கொண்டு
பிரபஞ்சத்தைக் கட்டியாளும் பெருங்கனவு !


Monday, August 26, 2013

விருட்சத் திருவிழாமதுரையைச் சுற்றிய தொன்மையான இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், அந்த இடங்களைப் பார்வையிடவும் என்று குழுமிய நண்பர்கள் “பசுமை நடை” என்ற அமைப்பை உருவாக்கி, மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பசுமை நடை குழுவினரின் இருபத்தி ஐந்தாவது பயணத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக “விருட்சத் திருவிழா” நடைபெற்றது.

நேற்று (25/08/2013 - ஞாயிறு) மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் நடைபெற்ற “விருட்சத் திருவிழா”விற்குச் சென்றிருந்தோம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள குளத்தின் கரையிலுள்ள ஆலமரங்களின் பிரம்மாண்ட நிழலில், இயற்கையான சூழலில் இனிதே நடந்தது திருவிழா. இந்த அமைதியான சுற்றுப்புறத்தின் காரணமோ இல்லை “பசுமை நடை”யின் இயல்போ தெரியவில்லை, விழா முழுமையுமே நிதானமாக, வெற்று பரபரப்பின்றி, இயல்பான இளைப்பாறுதல் தருவதாய் அத்தனை சுகமாக இருந்தது. விழாவில் பேசியவர்களும் மேடைப்பேச்சு போல நீட்டி முழக்காமல், தேர்ந்த கதை சொல்லிகள் போல் மென்மையாகவே பேசியது கேட்க இதமாக இருந்தது.

பொதுவாக பொதுப்பயன் கருதிய சமூக நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் “ஒளிவட்டம்” பொருந்திய பிரபலங்களின் வரத்து அதிகமாய் இருந்தால், நிகழ்ச்சியின் மையப்புள்ளியை விட்டுவிட்டு இந்த பிரபலங்களைச் சுற்றியே கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனாலேயே அத்ததைய நிகழ்வில் ஒன்ற பார்வையாளர்களுக்கு சிறு மனத்தடங்கல் இருக்கும். ஆனால் நேற்று நடந்த “விருட்சத் திருவிழாவில்” அத்தகைய ஒளிவட்டங்களின்றி ஒரு குடும்ப விழா போன்று ஆளாளுக்கு இழுத்துப் போட்டு அனைத்து வேலைகளையும் இயல்பாக செய்தனர். அதுவும் சுறுசுறுப்பாக இங்குமங்கும் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த இளைஞர்கள் இணையமேற்றுவதிலிருந்து இலையெடுப்பது வரை புகுந்து விளையாடினர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம், குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விளையாட்டு முகாம்”. கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், களிமண்ணில் பொம்மை செய்தல் என்று அமர்க்களப்படுத்திவிட்டனர். குழந்தைகளைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, அவர்களை அலுப்படைய விடாமல் தொடர்ந்து உற்சாகமூட்டி பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்திய தன்னார்வலர்களின் பணி பாராட்டுதற்குரியது. தன்னார்வலர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் போன்று தான் தோன்றினார்கள். தங்களுடைய விடுமுறையை இவ்வாறு சமூக நிகழ்வுகளுக்காக, அதுவும் மைய நிகழ்வு தனியாக நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான பொழுபோக்கில் ஈடுபடுத்தும் பணிக்காக வந்திருந்து ஆர்வத்துடன் பங்கேற்றது வியப்பாய் இருந்தது. இறுதியில் முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பரிசுப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 

விழாவில், மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, அழகர்மலை கிடாரிப்பட்டி, யானைமலை, திருப்பரங்குன்றம், கீழகுயில்க்குடி உள்ளிட்ட பல்வேறு பழமை வாய்ந்த இடங்களைப் பற்றிய ஆவனம், “மதுர வரலாறு” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், தேநீரும், பருத்திப்பாலும், மதியம் உணவும் வழங்கப்பட்டது. மொத்தத்தில் நம் பூர்வீக கிராமத் திருவிழாவிற்கு சென்று ஊர் சுற்றிவிட்டு, குளக்கரையோரத்து ஆலமர நிழலில் காலாற அமர்ந்து சொந்த பந்தங்களிடம் கொஞ்சம் கதைகேட்டுவிட்டு, பார்த்துப் பார்த்து பசியாற்றிய நண்பர்களின் விருந்தோம்பலில் வயிறு நிறைய உண்டு வீடு திரும்பிய மகிழ்வைத் தந்தது நேற்றைய முற்பகல் பொழுது. பிரதிபலன் பாராது விழாவை முன் நின்றும், பின் நின்றும் சிறப்பாக நடத்தியிருக்கும் பசுமை நடை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மனம்நிறைந்த வாழ்த்தும், நன்றியும்.படங்கள்: நன்றி - இணையம்
******

Tuesday, August 13, 2013

சார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்


இன்னிக்கு அதிகாலை ஆறு மணிக்கு காலிங் பெல் சத்தம். இரண்டு பேர் பக்கா யூனிஃபார்மல வந்து, “நாங்க ப்ரஸ்ல இருந்து வர்றோம். ”குடும்பத்தலைவர்”ட்ட முக்கியமான விஷயம் பேசனும்”னு சொல்லி இருக்காங்க. எங்கம்மா என்னமோ ஏதோனு என்னை எழுப்பி விட, நான் “ஆறு மணிக்கு கூப்ட்டு விசாரிக்கிற அளவுக்கு என்ன பண்ணிட்டோம்”னு யோசிச்சுட்டே வந்தேன்.

சார், நாங்க “ஹிந்து” நியூஸ் பேப்பர்ல இருந்து வர்றோம். ஹிந்துல தமிழ் பேப்பர் வரப்போகுது. ஆறுமாத சந்தா 375 ரூபாய் சார், கட்டுறீங்களா?

(அடப்பாவிகளா, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லயாய்யா) பேப்பர் என்ன பெயர் சொன்னீங்க?

”ஹிந்து” சார்

(யே, என்னைப்பார்த்தா கொஞ்சம் மாங்கா மாதிரி தான் இருக்கும், அதுக்காக இப்படி ஓட்டாதே!) இல்லங்க. தமிழ்ல வர்றதுக்குப் பெயர் என்ன?

ஹிந்து தமிழ் பேப்பர் சார்.

(சூப்பர் ஆன்சர்) சரி விடுங்க, வழக்கமா புதுப்பேப்பர் வர்றதுக்கு முன்னாடி சாம்பிள் வருமே, அது மாதிரி இருக்கா? (ஓசி சாம்பிள் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்காட்டா நாம என்ன தமிழன்)

இல்ல சார், ப்ரௌச்சர் தான் இருக்கு. பார்க்குறீங்களா?

சரி கொடுங்க. (அது ஓசி தானே!)

இந்தாங்க சார். வேற காப்பி இல்ல, பார்த்துட்டு திருப்பிக் கொடுத்துருங்க.

(அது வேறயா, தெளிவாத்தாய்யா மார்க்கெட்டிங் பண்றீங்க) இல்லங்க சந்தோசம், நீங்களே வச்சுக்கங்க.

சார், ஆறு மாத சந்தா போட்றவா சார்?

(காரியத்துல கண்ணா இருக்காராமாம், ஆனா நம்மகிட்டயேவா) இல்லங்க பேப்பர் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.

சார், ஹிந்து சார். ஆஃபர் பிறகு கிடைக்காது சார்.

(நாங்கெல்லாம் பல வருசமா தினத்தந்தியவே டீக்கடை க்யூல நின்னு தான் ஓசில படிச்சிட்டு வர்றோம், எங்ககிட்டயேவா?) ரொம்ப நன்றி சார். போய்ட்டு வாங்க சார்.

ஆனாலும் “தி ஹிந்து”வின் மார்க்கெட்டிங் திறமை வியக்க வைக்கிறது. ஊர் முழுக்க இதுக்குன்னு நூத்துக்கணக்கான இளைஞர்களை இறக்கி விட்டிருக்காங்க. ஆனா, பேப்பருக்கு என்ன பெயர்னு சொல்ல மாட்டாங்களாம். எப்போல இருந்து வருதுன்னு தெரியாது. மாடல், ஃப்ரிவியூ எதுவும் கிடையாது. சந்தா மட்டும் முதல்லயே கட்டிட்டு பேப்பர் வர்றதுக்காக தேவுடு காக்கனுமாம். ஒரு வேளை நாம கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு தான் பூஜை போடப்போறாங்களோ என்னவோ!

******

Monday, August 12, 2013

ஒரு போத்தல் மது


ஒரு போத்தல் மது...

கொஞ்சம் கிறக்கத்தை கொடுத்து,
குழறல் பேச்சில் சில தற்பெருமைகளை
வெளிக்கொணர்ந்திருக்கும்

மூளையை மழுங்கடித்து
ஏதேனுமொரு ஒழுக்கக்கோட்டின்
எல்லையை தொட வைத்திருக்கும்

அர்த்தமில்லாதவொரு கொண்டாட்டத்தில்
வெற்றுக்கூச்சலை கொட்டியிருக்கும்

மனதை சொஞ்சம் பூஞ்சையாக்கி,
வாய்விட்டு அழ வைத்திருக்கும்

வாழ்நாளின் சில மணித்துளிகளை
குறைத்திருக்கும்.

இல்லையென்றால்....

சொந்த ஊரிலிருந்து
முன்னூறு கிலோமீட்டர் தள்ளிப்போய்
கவனமாய் தகுந்த அடையாளங்களை
பதிந்து எடுத்த அறையினுள்,
மிரிண்டாவில் பொட்டாஷியம் சல்ஃபேட்
கலந்து குடித்து மரித்துக் கிடந்த ஒருவனின்
தற்கொலையைத் தவிர்த்திருக்கும்.

******

Monday, July 8, 2013

புனைப்பெயர்

பன்னெடுங்காலமாக இலக்கியம சமைக்கும் பெருங்கூட்டத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் வறுப்பவர்கள் வரை முக்காலே அரைக்கால் வீசம் பேர் புனைப்பெயரில் தான் எழுதுகிறார்கள். நாமும் சீத்தலை சாத்தனார், நரிவெருவூர்த்தலையார் என்று ஆரம்பித்து  டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி, பன்னிக்குட்டி ராமசாமி வரை பற்பல நாமகரணங்களையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஒருவர் தன் இயற்பெயரை விட்டு புனைப்பெயரில் எழுதுவதன் உளவியல் தான் என்ன? அதிலும் ஒரு ஆண் எழுத்தாளர் எதற்காக பெண் பெயரில் எழுத வேண்டும் என்ற சந்தேகமெல்லாம் நடிகை சுஜாதா வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு என்று தெளிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலும் புனைப்பெயர்கள் போக சில பட்டப்பெயர்கள் வேறு.

இதில் என் நண்பன் ஒருவன் சொல்லும் லாஜிக் மிகவும் எளிமையானது. “உனக்கு மத்தவங்க வச்சா பட்டப்பெயர், உனக்கு நீயே வச்சுக்கிட்டா அது புனைப்பெயர். அவ்வளவு தான்”. அவ்வாறு தொடர்ந்த விவாதத்தில், தனக்கான பெயர் இன்னதென்று முடிவெடுக்கும் ஞானம் அடையுமுன்னே குழந்தைப்பருவத்திலேயே பெயர் சூட்டு விழா நடத்தி விடும் சமுதாயத்தில், பிற்காலத்தில் தனக்கான பெயரைத் தானே புனைந்து கொள்வதில் தவறனென்ன இருக்க முடியும் என்று முடிவுரை வாசித்தோம். புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பலவகை. காரணப்பெயராக நினைத்து வைத்துக் கொள்வது ஒரு புறமென்றால் அழகுணர்ச்சிக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் வைத்துக் கொள்ளும் பெயர்களும் இருக்கத்தான் இருக்கின்றன. 

ஆனால் புனைப்பெயராளர்களே! பெயர் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக ”ஆக்கங்கெட்ட கூகை”, "அகிலத்தால் நிராகரிக்கப்பட்ட அரைவேக்காட்டு ஆஃப்பாயில் வாயன்" என்பது போன்றெல்லாம் பெயர் வைத்தால் அழைப்பதற்கு சற்று சிரமமாய் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெயர் வையுங்கள். உங்களுக்கு தன்னடக்கம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்றாலும் கூட அதைப் பெயரில் எல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்பதில்லை. பெயர் என்பது நமக்கே நமக்கானது தான் என்றாலும் அதை பெரும்பான்மையான சமயங்களில் நம்மைத் தவிர பிறரும் பயன்படுத்தும் போது அவர்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாமே!. இவர்களாவது பரவாயில்லை, சிம்பதி சிகாமணிகள். ஏதோ போகட்டும் என்று விட்டுவிடலாம். சில தலைப்பிரட்டைகள் இருக்கின்றன, அவர்களின் புனைப்பெயரைக் கேட்டவுடனேயே “ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைத் தெறித்து ஓட வைக்கும். இதற்கு இணையத்திலேயே நிறைய உதாரணங்கள் சொல்லலாம். யாரிடமும் சண்டை போட்டு பிரபலம் ஆகும் எண்னம் எதுவும் எனக்கில்லாததால் அத்தகைய பெயர்களை குறிப்பிட முடியவில்லை.

இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் “யாகூ சேட் ரூம்” என்று ஒரு சேவை இருந்தது. அங்கே காளையர்களும் கன்னியர்களும் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர்கள் எல்லாம் ரொம்ப ஓபன் ரகம். அதன் நீட்சி இன்று “ஃபேஸ்புக்” வரை தொடர்கிறது என்றாலும் ஃபேக் ஐடி பற்றிய அறிவு சார் சிந்தனைகள் இப்பொழுது போல அப்போது சரிவர புரிபடாத பருவமாதலால், சேட் ரூம் பெண் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் தான் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது... ம்ம்ம் அது ஒரு காலம். இப்போதைய இணைய பிரபலங்கள் பலரும் யாகூ சேட் ரூமில தாங்கள் வைத்திருந்த பெண் ஐடி பிரஸ்தாபங்களை அளந்து விடும் போது, “இவன் தான் மாப்ள எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விடுறான்” என்பது தான் ஞாபகம் வருகிறது. முதலில் ஏமாறுவது, பிறகு போதுமான பல்புகள் பெற்று ஞானம் அடைந்தபின் அடுத்து வருபவர்களை ஏமாற்றுவது. இது தானே பாஸ் காலங்காலமாய் தொடரும் வழக்கம். இன்று பத்துப்பதினைந்து ஃபேக் ஐடி வைத்து சுத்திக்கொண்டிருக்கும் எந்தப் பிரபலமும் ஒரு காலத்தில் “ஏ.எஸ்.எல் ப்ளீஸ்” கேட்டுத் தான் இணைய வாழ்வை துவக்கியிருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது.

சரி, உண்மையில் புனைப்பெயர் என்பது நிஜ வாழ்க்கையின் சுவடுகளின்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையாய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு என்பதற்காகவே பலர் புதிய பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் அரசு அலுவலகங்கள், ஐ.டி கம்பெனிகள் போன்று கட்டுப்பெட்டியான இடத்தில் வேலை செய்து கொண்டு அதே பெயரில் புரட்சிப் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சட்டச்சிக்கலை உண்டாக்குற காரியம் தானே. எனவே, தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்காக தன் சுயத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயரில் எழுதுபவர்களும் உண்டு. அப்படி எழுதும் போது, கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தங்கள் கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாகவோ அல்லது சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ற மாதிரியோ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள் போலும். முதலில் நிஜப்பெயர் வாழ்க்கைக்கும், புனைப்பெயர் வாழ்க்கைக்கும் நடுவில் கோடு கிழித்துக் கொண்டு டபுள் கேம் ஆடத்துவங்குபவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பிரபல லெவல் மேலேறும் போது இயற்பெயர் அமிழ்ந்து போய் புனைப்பெயரே சாஸ்தவமாகி அதன் மூலமாகவே அவர்கள் முகமும் வெளி உலகின் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. தெரிந்தவர்களிடம் இருந்து தனது இருப்பை மறைப்பதற்காக புனைந்த கொண்ட பெயர் மூலமாகவே இன்னும் பெரிய வட்டத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட பலர் இருக்கிறார்கள். எது எப்படியோ பத்தோடு பதினொன்றாக செல்லும் ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குப்புசாமி வகையறாவிற்கு பதிலாக புதுமையான புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்கள் முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.

-வி.பாலகுமார்.
******
நன்றி: மலைகள் இணைய இதழ் http://malaigal.com/?p=2416

Friday, July 5, 2013

வாதனைதாழிமரங்களை வனையோட்டுத் தொட்டிகளில்
வளர்க்கும் அடுக்ககங்களின்
குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்ட
குறுங்கணினிகள் தேவையாய் இருக்கின்றன.

மிளகாய்ச்செடிக்கு 
அடிக்க வைத்திருந்த ரோக்கருக்கும் 
எறும்புப்பொடியின் சுவைதான் இருக்குமென 
எண்ணியவளின் விளையாட்டு
எப்படி முடிந்ததென சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கனரக வாகனத்தில அடிபட்டு 
குடல்சரிந்து கிடக்கும் குரங்குக்குட்டியை 
செவ்வரளிப்பூ கொண்டு உரசிச்செல்கிறது
மலையை வகுந்து போடப்பட்ட
நெடுஞ்சாலையின் கோரக்காற்று.

ஸ்திரி பார்ட் போடுபவனின் கனவில்
விடாது இம்சிக்கும் கத்திச்சண்டை.

முடிவுறாமல் நீளுமொரு தற்கொலைக்குறிப்பில்
சுருக்கிட்டுக் கொள்ளும் செய்முறையை
விடாமல் அழித்து அழித்து
வரைவுத் திருத்தம் செய்யும்
மொழிபெயர்ப்புக்காரனின் வாதனை
புரிகிறதா உங்களுக்கு!


******
படம் உதவி: http://www.wallpaperswala.com/bonsai-tree/

Wednesday, July 3, 2013

வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை

டீக்கடை உளுந்தவடையில் இப்பொழுதெல்லாம் ஏன் பச்சைமிளகாய் சேர்ப்பதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்க முடியுமா?
#மத்தியானசிந்தனை

************************************************
புதுசா “வாட்டர் ரெசிஸ்டெண்ட் வடை”னு எதும் கண்டுபிடிச்சிருக்காங்களா என்ன? அரை மணி நேரமா ஊற வச்ச பிறகும் ஒரு சொட்டு சாம்பாரைக் கூட உள்ளே விடாமல் தம் கட்டி நிக்குது உளுந்தவடை.

************************************************
ரொம்ப வருசமா ஊத்தப்பத்தை தான் தோசைனு சொல்லி எங்கம்மா ஏமாத்தி இருக்காங்கன்னு ஹோட்டல்ல சாப்பிட ஆரம்பிச்ச பிறகு தான் தெரிஞ்சுது. 
#அது ஒரு காலம், உலகம் தெரிய ஆரம்பிச்ச காலம் !

************************************************
டிபன் பாக்ஸை திறந்தால் புளியோதரைக்கு வெண்டைக்காய் பொரியல்.... குட் காம்பினேசன்.
எப்படி இப்படியெல்லாம் என்று கேட்டால் வெரைட்டி ட்ரை பண்றேனு பதில் வரும், எதுக்கு வம்பு!
#சத்தம் போடாம சாப்பிடனும் குமாரு.

************************************************
"வடை போச்சே” என்று உணரும் தருணங்களில் எல்லாம் இழந்தது உளுந்தவடை தான் என நம்மை அறியாமலே மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம். இதைப் புரிந்து கொள்ளாதவரை இந்த இனத்திற்கு விடிவில்லை.
#statuslikeilakiyavaadhis

************************************************

Monday, July 1, 2013

ஃபேஸ்புக் கலவரம் - வெள்ளைக்கொடிக்கு வேலை

ஃபேஸ்புக்கை பற்றி அவ்வப்பொழுது ஃபேஸ்புக்கில் எழுதிய்வை. சேமிப்புக்காக இங்கேயும்.

**************************************
ஃபேஸ்புக்கில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் கூகுள் ப்ளஸ்ஸில் சும்மா வேடிக்கை பார்ப்பதற்கும் இடையேயான உளவியல் வேறுபாடுகளை யோசித்துப் பார்க்கிறேன்.

**************************************
மேற்பார்வை பார்த்தபடி நெஞ்சு நிமுத்தி, மீசை முறுக்கி சுத்திட்டு இருக்க பெரியாம்பளைக எல்லாம்  கெத்தா மெயின் ரோட்டு வழியாவே போறது தான் நல்லது போல. சும்மா, சில்லுண்டிப் பயலுக ஏன் இப்படி சலம்புறாய்ங்கன்னு முட்டுச்சந்துக்கு வந்து எட்டிப் பார்த்தா... இப்ப பாருங்க மானாவாரியா  லந்தக் கொடுத்து வழிய மறிக்கிறாய்ங்க...

#பெரியமனுசனுக்கு மரியாதை கொடுங்கடான்னு சொன்னா, எங்கண்ணே கேக்குறாய்ங்க!!!
#ஃபேஸ்புக்கலாட்டா

**************************************
என்னை யாரும் “டேக்” பண்ணக்கூடாது.
என் டைம்லனில் எவனாவது கவிதை எழுதினீங்க, பிச்சுப்புடுவேன் பிச்சு.
எதையாவது திரும்பத் திரும்ப ஷேர் பண்ணீங்க, செம காண்டாகிடுவேன்.
வீடியோ லிங்க் அது இதுனு எதுனா போட்டீங்க, கொன்னேபுடுவேன்.
ஐயோ, ஏன் தான் தினமும் எனக்கு இத்தனை பேர் ஃப்ரண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து உயிரை வாங்குறீங்களோ?
ரொம்ப சாதாரணமான ஒரு மொக்கை ஸ்டேடஸ். அதுக்குப் போய் நூத்தி சொச்சம் லைக். நீங்களெல்லாம் எப்ப திருந்தப்போறீங்க.

#இல்ல சார், இப்ப கொஞ்ச நாளா தான்... சீக்கிரம் சரியாயிடும்ல சார்?
#நானும் இப்படி எல்லாம் “பிகு” பண்ணலாம்னு தான் பார்க்குறேன், ஆனா ஒரு பயபுள்ள கூட நம்ம பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டுது!
#ஃபேஸ்புக்காமிடி
  
**************************************
ஃபேஸ்புக் பிரபலங்களுக்கு வர்ற கமெண்ட்டுகளைப் பார்த்தா, உண்மையிலேயே ரசிகக் கண்மணிகள் தான் அப்படி சிலாகிச்சுக்கிறாய்ங்களா இல்ல, இதுக்குனு சம்பளத்துக்கு ஆள் கீள் போட்டுருப்போய்ங்களோன்னு ஒரே டவுட்டு.

#ச்சீ.. பொறாமையெல்லாம் இல்ல பாஸ், நாம அதுக்கு சரிப்பட மாட்டோம் !

**************************************
வந்த நாலு லைக்ல மூனு ஃபேக் ஐடியா இருந்தாக்கூட மீதி ஒன்னு ஒரிஜனலாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் நடமாடும், பெருமை பீத்தக்களையன்களால் நிறைந்திருக்கிறது ஃபேஸ்புக்

#ஃபேஸ்புக்கை ஃபுல் அன் ஃபுல் ஃபிகர் மடிக்கும் இடமென்னே நினைச்சுட்டானுக போல. :)

**************************************
எங்க பெரியாத்தா அப்பவே சொல்லுச்சு, “பெரியாம்பளய எப்பவும் மரியாதை குறைவா பேசாத கண்ணு... நாளப்பின்ன அவுக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தரும் போது, உனக்கு நாக்கு ஊறும்.. வேண்டாம்னு வீராப்பா இருக்கவும் முடியாது, இப்படித்தா பெருசுனு உரிமையா பிடுங்கித் தின்னவும் கூசும்”னு...
நாந்தான் கேட்கல!

#சமகால “போயட்டு”கள்

**************************************
ஹாய் டெக்கீஸ், நாப்பது நாப்பத்தஞ்சுக்கு மேலுள்ள பெருசுங்க கேர்ள் ஃபிரண்டு புராணம் பாடும் ஸ்டேடஸ்களை மட்டும் தடை செய்யும் ஆப்ஸ் எதுவும் கண்டுபிடிக்க முடியுமா... அர்ஜண்ட் ப்ளீஸ்!

#முடீலிங்கசாமி
#ப்ளஸ் சொக்கத்தங்கம், நான் பேச்சுபுக்கை சொன்னேன் :)

**************************************
போர் மேகங்கள் சூழ்வதைப் பாத்தால், வேடிக்கை பார்ப்போர் சங்கம் சார்பாக அணிசேரா இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

#வெள்ளைக்கொடிக்குவேலை
#பேச்சுபுக்கு கலவரம்

**************************************

Sunday, June 16, 2013

நீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு!

இந்த வாரம் ரெண்டு படம் போட்டியில் இருந்தது. சித்தார்த்தா ஷிவாவா என்று யோசிச்சாக்கூட ஷிவா தான் லீடிங்ல இருந்தார். ரெண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் மொக்கையா இருக்குனு எக்ஸ்பர்ட் ஒபீனியனும், எக்ஸிட் போல் நிலவரமும் சொல்லுச்சு. சரி, படம் பிடிக்கலைனாலும் தில்லு முல்லு போன்ற க்ளாசிக்கை குதறிட்டாங்கன்னு ஃபீல் பண்ண வேண்டாமேனு “தீயா வேலை செய்யனும் குமாரு” படத்துக்கு கிளம்பினோம்.

படம் முழுவதுமே ஏகப்பட்ட நாஸ்டால்ஜியா. பத்து பதினைந்து வருடம் ஆனப்பிறகு கூட இன்னும் சித்தார்த் ”பாய்ஸ்”ல பார்த்த மாதிரி இருக்கார். அவ்வளவு சார்மிங்கானு கேக்காதீங்க. ஒரு ”ஐட்டத்தை” எதிர்கொள்ள அப்போ எப்படி பயந்தாரோ அதே மாதிரி தான் இப்பவும் பயப்படுறார். இண்டஸ்ட்ரில இத்தனை வருசம் என்னப்பா எக்ஸ்பீரியன்ஸ் எடுத்தீங்க. அப்புறம் சுந்தர்.சி. தன் கம்பெனி ஆர்டிஸ்ட்களுக்கெல்லாம் கொஞ்சம் ரிச் காஸ்ட்யூம் போட்டுப் பார்க்கனும் ஆசைப்பட்டார் போல, “கலகலப்பு” குரூப்ஸை அப்படியே மொத்தமாய் ஐ.டி. என்வராய்ன்மெண்ட்ல இறக்கி விட்டிருக்கார். அஞ்சலி கொஞ்ச நாள் காணாமல் போயிருந்ததால அவர் மட்டும் தான் தலையைக் காட்டலை. 

படத்துல சந்தானத்துக்குத் தான் செம மாஸ். அவர் இண்ட்ரோல என்னா க்ளாப்ஸ் அள்ளுது...மனுசன் பீக் ஃபார்ம்ல இருக்கார். அடிச்சு தூள் பண்றார். என்ன,  “கிரி”ல வடிவேலு வச்சிருந்த பேக்கரியை இப்ப இவருக்கு தான் எழுதி கொடுத்துட்டு போயிருக்கார் போல, நல்லா மெய்ண்டென் பண்ணியிருக்கார். பாஸ்கி எல்லாம் வாயைத் திறக்காமல் நடித்திருப்பதே மிகப்பெரிய ஆறுதல். அதுக்கு பதில் ஆர்.ஜே பாலாஜி கிடைச்ச கேப்ல எல்லாம், கிடா வெட்ற அளவுக்கு இல்லேனாலும் கிச்சடி கிண்டற அளவுக்காவது பெர்பார்ம் செய்திருக்கிறார். ஆனாலும் ஆனானப்பட்ட சந்தானத்துக்கே பல படங்களுக்கப்பறம் தன் ஜோடி கிடைச்சது, இவர் வந்த புதுசுலயே ஃபிகர் உஷார் பன்ணீடுறார், அதுவும் ஹீரோவின் தங்கையை.. ம்ம்ம் ஃபேட் ஆப் த முண்டக்கண் ஃபிகர் ஆப் கான்ஸ்டிட்யூசன் ஆப் இந்தியா

ப்ரொடக்‌ஷன் யூனிட்ல இருந்து, ”நம்ம சுந்தர் சார் படம், சொந்த பந்தத்தோட தவறாம வந்து சூட்டிங் ஸ்பாட்டை சிறப்பிக்கனும்”னு கம்பெனி ஆர்டிஸ்ட் ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் பணம் பாக்கு வச்சு சிறப்பு செஞ்சிருப்பாங்க போல, அவர்களும் குடும்பம் சகிதமாய் வந்து ஃபுல் மீல்ஸ் சாப்ட்டுட்டு திருப்தியா நடிச்சுக் கொடுத்திருக்காங்க. ஃப்ரேம்ல தூரமா அவுட்டாஃப் ஃபோகஸ்ல சும்மா என்வய்ரான்மெண்ட்டுக்கு நிக்கிற ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட நமக்குத் தெரிஞ்ச முகமாத்தான் இருக்காங்க. ஆனா இந்த மொத்த கூட்டத்துலயும் ஒரு ஜீவன் மட்டும் திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருனு முழுச்சுட்டே இருக்கு. பொதுவா, சித்தார்த்தை பார்த்தாலே பீட்டர் பாய் மாதிரி தான் தெரியும். அவருக்கெல்லாம் இந்த “அம்மாஞ்சி” கேரக்டர் சுத்தமா செட்டாகவே இல்லை. படம் முழுதும் பொழுதுதன்னைக்கும் சந்தானம் ஓட்டு ஓட்டுனு ஒட்டிட்டு இருக்கார், இவர் என்னடான்னா “தேமே”னு நின்னு குச்சி மிட்டாய் சாப்பிடுற மாதிரி வேடிக்கை பார்க்குறார். ஐய்யயய்யே, இதுக்கு உதயநிதி பரவால்ல போலயே. வேணாம்... இப்படியே இன்னும் இரண்டு படம் ”நடிச்சா” ஃபீல்டவுட் பண்ணீடுவானுக. நீ திரும்ப தெலுங்கு சினிமாவுக்கே போய்ரு குமாரு. பாவம், ஜெயம் ரவியும், ராஜாவும் வேற சரியான படம் கிடைக்காம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க, அவுங்களுக்காவது ஹெல்ப்பா இருக்கும்

ஜிம்முக்குப் போன சாம்பார், கணேஷ் வெங்கட்ராம் பத்தியெல்லாம் படத்துலயே போதுமான அளவு ஓட்டிட்டதால, நாம் அவரை விட்டு விடுவோம். ஆனா மனசாட்சியே இல்லாமல் அவரை பார்த்து ஜொள்ளு விடும் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நினைத்தால் தான் பாவமா இருக்கு. யாராவது ஐ.டி. ஆண்ட்டி முன் வந்து “இந்தப்படத்துல எங்களின் ரசனையை கேவலப்படுத்துற மாதிரி காட்சி வச்சிருக்காங்க. இந்தப்படத்தை தடை செய்யனும்”னு வழக்கு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல் பாதி முழுக்க லெவல் ஒன்னு, லெவல் இரண்டுன்னு “மருதம் க்ரூப்ஸ் ஹோம் ஸ்வீட் ஹோம்” ரேஞ்சுக்கு ப்ளேடு போட்டுட்டு இருந்த சந்தானம் இரண்டாம் பாதில தான் அடிச்சு ஆடிருக்கார். பள்ளிக்கூட ஃப்ளாஷ்பேக் அப்புறம் “வீடா இல்ல விக்ரமன் சார் படமா” டைமிங் எல்லாம் செம செம. மொத்தத்தில் ஒண்டைம் டைம்பாஸர்.

இவ்ளோ பேசுறியே குமாரு... ஹன்சிகாவைப் பத்தி மட்டும் ஒரு தப்பு சொல்ல மாட்றியே, இன்னா விஷயம்?னு யாரும் சவுண்ட் விட்றீங்களா என்ன, எனக்கு எதுவும் கேட்கவே இல்லையே !

******

Tuesday, June 11, 2013

வாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” - மு.சங்கையா  - புத்தக வெளியீடு
வரவேற்புரை - வி.பாலகுமார்

"ஒரு பொருள் விற்பனைக்கு வருகிறது. அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப் பொருளை உருவாக்குவதற்கு உண்டான சமூக உழைப்பு என்று ஒன்று இருக்கிறது. வணிக மதிப்பு என்பதைத் தாண்டி அந்தப் பொருளுக்கான உண்மையான ஒப்புமை மதிப்பு என்பது அந்தப் பொருளில் நிறைவாகவோ குறைவாகவோ கலந்திருக்கும் சமூக அக்கறை என்ற சாரம்சத்தைப் பொருத்தே அமைகிறது"

இது பொருள், விலை, லாபம் குறித்து கார்ல் மார்க்ஸ் கூறிய வரிகள். வணிக நோக்கில் தயாரிக்கப்படும் ஒரு பொருளுக்கே சமூக அக்கறை தேவையாய் இருக்கையில், வாழ்வியல் அனுபவத்தையோ, ஒரு பயணத்தின் நிகழ்வுகளையோ, ஏன் ஒரு கதையோ இல்லை புதினமோ எதுவாகினும் அதனைப் படைப்பாக பொதுப்பார்வைக்கு வைக்கும் போது அதற்குள் “சமூக அக்கறை” என்பது எந்த அளவில் கலந்திருக்கிறது என்பதே, அந்தப்படைப்பு காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்பதற்கான சான்று.

அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். உலகில் மாற்றம் என்பது மட்டும் தான் சாஸ்தவமானது. ஒரு சிறிய முன்னெடுப்பும், சீரிய முனைப்பும், தொடந்த ஈடுபாடும் எத்தகைய மாற்றங்களையும் கொடுக்கவல்லவை. அவ்வாறான மாற்றங்கள வளர்ச்சிப் பாதையில் ஏற்றங்களைத் தரும் தருணங்கள் மகிழ்விற்குரியன ஆகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் ஒரு சிறந்த அதிகாரியாக, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தொழிற்சங்கத் தலைவராக, மனித உரிமை ஆர்வலராக பொதுவாழ்வில் பல முகங்களைக் கொண்ட நம் தோழர் மு.சங்கையா இன்று எழுத்தாளர் என்ற இன்னொரு புதிய முகத்தையும் பெறுகிறார். இன்று அவரது முதல் நூலான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற படைப்பு வெளியிடப்படும் சிறப்பான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நூல், ஆசிரியரது லண்டன் பயணக்கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதனை வெறும் பயணக்குறிப்பு என்று சுருக்கி விட முடியாத படி, பிரிட்டன் தேசத்தின் வரலாறையும் லண்டன் நகரின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலாகவும், அதே சமயம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக எளிய நடையில் ஒரு புதினத்தைப் போன்ற கதை சொல்லல் முறையில் மிக நேர்த்தியாகவும் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் தனது பணிநிறைவுக் குறிப்பையே கவிதைக்கான நேர்த்தியுடன் செழுமையாக தயார் செய்து ஒரு சிறு கையேடாக வெளியிட்டவர் தோழர் சங்கையா. "பணி ஓய்வு என்பது ஏற்றுக் கொண்ட பணிக்குத் தான். இன்னும் காலம் இருக்கிறது. களம் மாறுகிறது. மிண்டும் மற்றொரு தளத்தில் சந்திப்போம்" என்ற குறிப்புடன் தான் இருந்தது அவரது “விடைபெறுகிறேன்” என்ற பணிஓய்வுக் கையேடு. அந்த சொற்கள் எத்தனை உண்மை மிக்கதாக இருக்கிறது!. சிறந்த வாசிப்பனுபவமும், நுன்பார்வையும், பொதுவுடைமை சிந்தனையும் உள்ள தோழர் சங்கையா அவர்கள் தனது படைப்பை வாசிப்போர் களத்தின் முதல் வெளியீடாக வெளிவர சம்மதித்திருப்பதை “வாசிப்போர் களத்திற்கான” மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதுகிறோம்.

தாங்கள் வாசித்த படைப்புகள் பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்காகவும், நேர்மறையான விவாதங்களுக்காகவும், பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் பி.எஸ்.என்.எல் தோழர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கப்பட்ட “வாசிப்போர்களம்” அமைப்பு பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பதிப்பகமாக வளர்ந்து தனது முதல் வெளியீட்டை நடத்துகிறது. இதன் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும், உரிய நேரத்தில் தக்க ஆலோசனை சொல்லும், கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நண்பருக்கும் இணைய வெளியில் கூட்டங்களின் விவாதங்களை, நூல் மதிப்புரைகளை வாசிக்கும், தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியை வழங்கும் ஒவ்வொரு வாசகருக்கும், வாசிப்பின் பால் ஆர்வம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் “வாசிப்போர் களம்” சார்ப்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” புத்தகத்தின் சில துளிகள்.

1. ”லண்டன் என் கனவில் வராத பிரதேசம். கனவில் வராதது நிஜத்தில் வந்தது காலத்தின் அதிசயம்” - இது தான் இந்தப்புத்தகத்தின் முதல் வரிகள். முதல் வரியில் தொற்றிக் கொள்ளும் சுவாரஸ்யம் நூல் நெடுக காணக்கிடைப்பது நல்ல வாசிப்பனுபவம்.
2. ஆங்கிலம் என்பது நம்மில் பலருக்கு மேட்டுக்குடியினரின், சீமான் சீமாட்டிகளின் மொழி. ஆனால் ஒரு காலத்தில் பிரிட்டனில் “ஆங்கிலம் ஒரு நீச மொழி, குதிரைக்காரன் மொழி” என்று எண்ணப்பட்ட காலங்களும் இருந்தன. அது பற்றிய சுவையான தகவலை புத்தகத்தை வாசிக்கையில் தெரிந்து கொள்ளலாம்
3. வளங்களை, நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்நோக்கி அல்லது பின்நோக்கி நகர்த்தினால் போதும். இது என்ன விளையாட்டு என்கிறீர்களா.. இதற்கான விடையும் புத்தகத்தில் இருக்கிறது.
4. குழந்தை வளர்ப்பில் நிறைய கண்டிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியப் பெற்றோர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாய் இந்தியாவிற்கு வந்து இறங்கி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்குள் ஏன் குழந்தைகளை மொத்தி எடுத்திறார்கள் என்பதற்கான உளவியல் காரணம் தெரிய வேண்டுமா.. இந்த புத்தகத்தை வாசியுங்கள்
5. லண்டன் டவர் அரண்மனை என்று சொன்னவுடன் நமக்குத் தோன்றுவது என்ன... மாட மாளிகைகள், ஆடம்பர வாழ்க்கை முறை, அந்தப்புரங்கள் இவை தானே... அவற்றின் மறுபக்கமாய், சித்தரவதைக் கூடங்களாய், கொலைக்களங்களாய், மரண ஓலங்களின் வாசல்களாய் இருந்ததைப் பற்றித் தெரிய வேண்டுமா..அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
6. லண்டன் மெழுகு மியூசியத்தில் “ஐஸ்வர்யா ராயின்” சிலை அவரது நிஜ அழகுக்கு பக்கத்தில் கூட வரவில்லை. அந்த அழகிய முகத்தின் நுண்ணிய பிரதிபலிப்பற்று பொம்மையாய் நின்ற சிலையைப் பார்த்த ஆசிரியரின் ஏமாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா, அதுவும் இருக்கிறது.
7. “கார்ல் மார்க்ஸின் சமாதி” லண்டனில் இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியான அவரின் கல்லறை எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும் என்ற கற்பனையுடன் சென்ற ஆசிரியருக்கு அங்கே ஏற்பட்ட மன உணர்வுகளும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன.

இப்படி சுவாரஸ்யமாக, எளிய மொழியில் அழகாக கதை கொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை படித்தது ஒரு இனிய வாசிப்பனுபவமாகவே இருந்தது.

நூல்: “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்”
ஆசிரியர்: மு.சங்கையா
வெளியீடு: வாசிப்போர்களம், மதுரை
தொடர்புக்கு: 94861 02431, 94861 00608
மின்னஞ்சல்: skaruppiah.bsnl@gmail.com

நன்றி: வாசிப்போர்களம்  http://vasipporkalam.blogspot.in/2013/06/blog-post_10.html
******