பன்னெடுங்காலமாக இலக்கியம சமைக்கும் பெருங்கூட்டத்தில் துவங்கி இன்று ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் வறுப்பவர்கள் வரை முக்காலே அரைக்கால் வீசம் பேர் புனைப்பெயரில் தான் எழுதுகிறார்கள். நாமும் சீத்தலை சாத்தனார், நரிவெருவூர்த்தலையார் என்று ஆரம்பித்து டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி, பன்னிக்குட்டி ராமசாமி வரை பற்பல நாமகரணங்களையும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஒருவர் தன் இயற்பெயரை விட்டு புனைப்பெயரில் எழுதுவதன் உளவியல் தான் என்ன? அதிலும் ஒரு ஆண் எழுத்தாளர் எதற்காக பெண் பெயரில் எழுத வேண்டும் என்ற சந்தேகமெல்லாம் நடிகை சுஜாதா வேறு, எழுத்தாளர் சுஜாதா வேறு என்று தெளிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதிலும் புனைப்பெயர்கள் போக சில பட்டப்பெயர்கள் வேறு.
இதில் என் நண்பன் ஒருவன் சொல்லும் லாஜிக் மிகவும் எளிமையானது. “உனக்கு மத்தவங்க வச்சா பட்டப்பெயர், உனக்கு நீயே வச்சுக்கிட்டா அது புனைப்பெயர். அவ்வளவு தான்”. அவ்வாறு தொடர்ந்த விவாதத்தில், தனக்கான பெயர் இன்னதென்று முடிவெடுக்கும் ஞானம் அடையுமுன்னே குழந்தைப்பருவத்திலேயே பெயர் சூட்டு விழா நடத்தி விடும் சமுதாயத்தில், பிற்காலத்தில் தனக்கான பெயரைத் தானே புனைந்து கொள்வதில் தவறனென்ன இருக்க முடியும் என்று முடிவுரை வாசித்தோம். புனைப்பெயர் வைத்துக் கொள்வதில் பலவகை. காரணப்பெயராக நினைத்து வைத்துக் கொள்வது ஒரு புறமென்றால் அழகுணர்ச்சிக்காகவும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் வைத்துக் கொள்ளும் பெயர்களும் இருக்கத்தான் இருக்கின்றன.
ஆனால் புனைப்பெயராளர்களே! பெயர் வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்காக ”ஆக்கங்கெட்ட கூகை”, "அகிலத்தால் நிராகரிக்கப்பட்ட அரைவேக்காட்டு ஆஃப்பாயில் வாயன்" என்பது போன்றெல்லாம் பெயர் வைத்தால் அழைப்பதற்கு சற்று சிரமமாய் இருக்கிறது என்று புரிந்து கொண்டு பெயர் வையுங்கள். உங்களுக்கு தன்னடக்கம் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்றாலும் கூட அதைப் பெயரில் எல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்பதில்லை. பெயர் என்பது நமக்கே நமக்கானது தான் என்றாலும் அதை பெரும்பான்மையான சமயங்களில் நம்மைத் தவிர பிறரும் பயன்படுத்தும் போது அவர்களை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ள வேண்டாமே!. இவர்களாவது பரவாயில்லை, சிம்பதி சிகாமணிகள். ஏதோ போகட்டும் என்று விட்டுவிடலாம். சில தலைப்பிரட்டைகள் இருக்கின்றன, அவர்களின் புனைப்பெயரைக் கேட்டவுடனேயே “ஆளை விடுங்கடா சாமி” என்று நம்மைத் தெறித்து ஓட வைக்கும். இதற்கு இணையத்திலேயே நிறைய உதாரணங்கள் சொல்லலாம். யாரிடமும் சண்டை போட்டு பிரபலம் ஆகும் எண்னம் எதுவும் எனக்கில்லாததால் அத்தகைய பெயர்களை குறிப்பிட முடியவில்லை.
இணையம் பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்தில் “யாகூ சேட் ரூம்” என்று ஒரு சேவை இருந்தது. அங்கே காளையர்களும் கன்னியர்களும் வைத்துக் கொண்டிருந்த புனைப்பெயர்கள் எல்லாம் ரொம்ப ஓபன் ரகம். அதன் நீட்சி இன்று “ஃபேஸ்புக்” வரை தொடர்கிறது என்றாலும் ஃபேக் ஐடி பற்றிய அறிவு சார் சிந்தனைகள் இப்பொழுது போல அப்போது சரிவர புரிபடாத பருவமாதலால், சேட் ரூம் பெண் பெயர்களுக்குப் பின்னால் எல்லாம் பெண்கள் தான் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட காலம் எல்லாம் ஒன்று இருந்தது... ம்ம்ம் அது ஒரு காலம். இப்போதைய இணைய பிரபலங்கள் பலரும் யாகூ சேட் ரூமில தாங்கள் வைத்திருந்த பெண் ஐடி பிரஸ்தாபங்களை அளந்து விடும் போது, “இவன் தான் மாப்ள எங்கயோ செமத்தியா வாங்கியிருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விடுறான்” என்பது தான் ஞாபகம் வருகிறது. முதலில் ஏமாறுவது, பிறகு போதுமான பல்புகள் பெற்று ஞானம் அடைந்தபின் அடுத்து வருபவர்களை ஏமாற்றுவது. இது தானே பாஸ் காலங்காலமாய் தொடரும் வழக்கம். இன்று பத்துப்பதினைந்து ஃபேக் ஐடி வைத்து சுத்திக்கொண்டிருக்கும் எந்தப் பிரபலமும் ஒரு காலத்தில் “ஏ.எஸ்.எல் ப்ளீஸ்” கேட்டுத் தான் இணைய வாழ்வை துவக்கியிருப்பார் என்பதை மறந்து விடக்கூடாது.
சரி, உண்மையில் புனைப்பெயர் என்பது நிஜ வாழ்க்கையின் சுவடுகளின்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையாய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு என்பதற்காகவே பலர் புதிய பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதுவும் அரசு அலுவலகங்கள், ஐ.டி கம்பெனிகள் போன்று கட்டுப்பெட்டியான இடத்தில் வேலை செய்து கொண்டு அதே பெயரில் புரட்சிப் போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் சட்டச்சிக்கலை உண்டாக்குற காரியம் தானே. எனவே, தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவற்காக தன் சுயத்தை மறைத்துக் கொண்டு புனைப்பெயரில் எழுதுபவர்களும் உண்டு. அப்படி எழுதும் போது, கவன ஈர்ப்புக்காகவோ அல்லது தங்கள் கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாகவோ அல்லது சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ற மாதிரியோ பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள் போலும். முதலில் நிஜப்பெயர் வாழ்க்கைக்கும், புனைப்பெயர் வாழ்க்கைக்கும் நடுவில் கோடு கிழித்துக் கொண்டு டபுள் கேம் ஆடத்துவங்குபவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பிரபல லெவல் மேலேறும் போது இயற்பெயர் அமிழ்ந்து போய் புனைப்பெயரே சாஸ்தவமாகி அதன் மூலமாகவே அவர்கள் முகமும் வெளி உலகின் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. தெரிந்தவர்களிடம் இருந்து தனது இருப்பை மறைப்பதற்காக புனைந்த கொண்ட பெயர் மூலமாகவே இன்னும் பெரிய வட்டத்திற்கு அடையாளம் காட்டப்பட்ட பலர் இருக்கிறார்கள். எது எப்படியோ பத்தோடு பதினொன்றாக செல்லும் ரமேஷ், சுரேஷ், ராமசாமி, குப்புசாமி வகையறாவிற்கு பதிலாக புதுமையான புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்கள் முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.
-வி.பாலகுமார்.
******
நன்றி: மலைகள் இணைய இதழ் http://malaigal.com/?p=2416
முதல் பார்வையில் கவனம் ஈர்க்கவே செய்கிறார்கள். ஆனால் நிலைத்து நிற்க.... என்றென்றைக்கும் உள்ளது போல எழுதும் விஷயம் தான்.
ReplyDelete>>
சரிதான்
சொந்தப் பெயரில் சொதப்புனா, சொந்தபந்தங்களும் நண்பர்களும் ஏளனம் பண்ணுவாங்க. புனை பெயரில் அந்தப் பிரச்சினை இல்ல பாருங்க!
ReplyDeleteபுனைபெயரில் எப்போதுமே ஒரு கவர்ச்சி இருக்கிறதல்லவா?
ReplyDelete