தாழிமரங்களை வனையோட்டுத் தொட்டிகளில்
வளர்க்கும் அடுக்ககங்களின்
குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்ட
குறுங்கணினிகள் தேவையாய் இருக்கின்றன.
மிளகாய்ச்செடிக்கு
அடிக்க வைத்திருந்த ரோக்கருக்கும்
எறும்புப்பொடியின் சுவைதான் இருக்குமென
எண்ணியவளின் விளையாட்டு
எப்படி முடிந்ததென சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
கனரக வாகனத்தில அடிபட்டு
குடல்சரிந்து கிடக்கும் குரங்குக்குட்டியை
செவ்வரளிப்பூ கொண்டு உரசிச்செல்கிறது
மலையை வகுந்து போடப்பட்ட
நெடுஞ்சாலையின் கோரக்காற்று.
ஸ்திரி பார்ட் போடுபவனின் கனவில்
விடாது இம்சிக்கும் கத்திச்சண்டை.
முடிவுறாமல் நீளுமொரு தற்கொலைக்குறிப்பில்
சுருக்கிட்டுக் கொள்ளும் செய்முறையை
விடாமல் அழித்து அழித்து
வரைவுத் திருத்தம் செய்யும்
மொழிபெயர்ப்புக்காரனின் வாதனை
புரிகிறதா உங்களுக்கு!
******
படம் உதவி: http://www.wallpaperswala.com/bonsai-tree/
No comments:
Post a Comment