Friday, January 18, 2019

சேவல்களம் நாவல் - எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்னுரை

‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’
----------------------------------------                                                   

மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண இலக்கியப் பதிவுகளில் கோழி பற்றிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. அப்பதிவுகளில் தொடர்ச்சியும் இருக்கிறது.  தொல்காப்பிய மரபியலில் ‘கோழி கூகை ஆயிரண்டல்லவை சூழுங்காலை அளகெனல் அமையா’ என்னும் நூற்பா உள்ளது. பெட்டைக் கோழியை ‘அளகு’ என்று குறிப்பிடும் வழக்கு இருந்துள்ளது. ‘மனைவாழ் அளகின் வாட்டொடு பெறுகுவீர்’ எனப் பெரும்பாணாற்றுப்படை வீட்டில் வளர்க்கும் கோழியைக் கறி சமைத்தல் பற்றிக் கூறுகிறது.

கோழி கூவலை நேரம் கணக்கிடப் பயன்படுத்தும் முறை மிகப் பழமையானது.  விடியலைக் கோழி கூவலைக் கொண்டு அடையாளப்படுத்தும் முறை இன்றும் உள்ளது. காதலனோடு கூடியிருக்கும் பெண், வாள் போல விடியல் வந்து காதலனைப் பிரிக்கப் போகிறது எனத் துயருறுவதாகக் குறுந்தொகைப் பாடல் (157) ஒன்றுள்ளது. அப்பாடல் ‘குக்கூ வென்றது கோழி; அதனெதிர் துட்கென்றது என் தூய நெஞ்சம்’ என்று தொடங்குகிறது. கோழியின் கூவல் கேட்டதும் விடியல் வந்துவிட்டதே எனத் தன் நெஞ்சம் அச்சப்பட்டதாக அப்பெண் கூறுகிறாள்.

பறவைகளில் ஆணுக்குச்  ‘சேவல்’ என்பது பொதுப்பெயராக அமைந்த போதும் பெரிதும் கோழிச்சேவலைக் குறிப்பதாகவே வருகிறது. முருகன் ‘சேவற்கொடியோன்.’ உறையூருக்குக்  ‘கோழியூர்’ என்னும் பெயர் இருந்துள்ளது. அவ்வூரில் கோழி ஒன்று யானையை எதிர்த்துச் சண்டை போட்டதாகவும் அதன் வீரம் கருதி அவ்வூருக்கே கோழியூர் எனப் பெயர் வந்ததாகவும் கதைப் பதிவுகள் காணப்படுகின்றன. அகநானூற்றில் போர் புரியும் போது சிலிர்த்து விரியும் கோழிச்சேவலின் கழுத்து கூறப்படுகிறது. ‘மனையுறை கோழி மறனுடைச் சேவல் போர்புரி எருத்தம் போல’ (277) என்பவை அவ்வடிகள்.  ‘போர் செய்யுங்கால் கிளர்ந்தெழும் சேவலின் கழுத்தினைப் போல’ என்று உரையாசிரியர் விவரிக்கின்றனர். அது மறனுடைச் சேவல்; அதாவது வீரம் கொண்ட சேவல்.  சேவற்சண்டை பற்றிக் கிடைக்கும் முதல் பதிவு இது என்று நினைக்கிறேன்.

பின்னர் புறப்பொருள் வெண்பா மாலையில் சேவற்சண்டை பற்றிய மிக முக்கியமான பதிவு உள்ளது. நூலின் இறுதியான வாகைத் திணைக்குப் புறனடை கூறும் ‘ஒழிபு’ என்னும் பகுதியில் ‘கோழி வென்றி’ என்னும் துறை கூறப்படுகிறது. அதற்கு நூலாசிரியராகிய ஐயனாரிதனாரே எழுதியுள்ள சேவற்சண்டை சித்திரத்தை அருமையாகக் காட்டியுள்ள உதாரணப் பாடல் இது:

பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்

காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் – ஆய்ந்து

நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்

புறங்கண்டும் தான்வருமே போர்க்கு.                (348)

‘கடிய கூவுதலையுடைய சேவல் மேலெழப் பாய்ந்தும் தனது கால் முள்ளாலே அடித்தும் தலைகுனிந்தும் பலகாலும் சினந்தும் வாயால் கொத்தியும் இங்ஙனம் பொருது கோழி வித்தகர் நிறம் அறிந்து இதற்கு ஒப்பாக விட்ட சேவற்கோழியைப் புறங்கண்ட பின்னரும் சினம் ஆறாமையால் பொருதற்குத் தானே அச்சேவல் மேல்வரும்’ என்பது பழைய உரையை ஒட்டிப் பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய உரை. பாய்ந்து, எறிந்து, படிந்து, காய்ந்து, வாய்க்கொண்டு – எனச் சேவலின் போர்ச் செயல்களை வினைச்சொற்களால் விவரிக்கிறது இப்பாடல். பல சேவல்களை வென்ற பின்னும் வேகம் அடங்காமல் மேலும் போர் செய்யும் ஆவேசத்துடன் இருக்கும் சேவலைச் சிறப்பித்துப் பாடுகிறது இப்பாடல். ‘எறிந்தும்’ என்பதற்குக் ‘காலின் முள்ளை இட்டு இடித்தும்’ எனப் பழைய உரையாசிரியர் கூறுகின்றார்.  ‘முள்’ என்னும் சொல் இன்றும் வழக்கில் இருப்பதும் சேவற்சண்டையில் முள்ளைப் பயன்படுத்துவது இன்றைக்கும் மறையாமல் இருப்பதும் இச்சண்டையின் பழமையை உணர்த்துகின்றன.

சேவற்சண்டையில் தேர்ந்த வல்லுநர்கள் இருந்தனர் என்பதையும் ‘வித்தகர்’ என்னும் சொல் குறிப்பிடுகின்றது. அதற்குப் பழைய உரையாசிரியராகிய சாமுண்டி தேவநாயகர்  ‘கோழிநூல் வல்லவர்’ எனப் பொருள் தருகிறார். சேவற்சண்டையின் நுட்பங்களை விளக்கும் வகையில் ‘கோழிநூல்’ என்னும் நூலே இருந்தது என்பது வியப்பான செய்தியாகும். எத்தனையோ நூல்கள் அழிந்து போன தமிழில் இவ்வகை நூல்களும் அழிந்து போயின போலும். சொல், ஆமை, தெங்கு ஆகியவை சேவல்களின் வகைகளாக இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தன எனவும் அறிகிறோம். ஆகவேதான் விளக்கத்தில் ‘சொல்லுக்குச் சொல் வெல்லும், ஆமைக்கு ஆமை வெல்லும், தெங்குங்குத் தெங்கு வெல்லும்’ என உரையாசிரியர் கூறுகின்றார். இப்பாடலில் வரும் ‘நிறம்கண்டு’ என்பதற்கு சேவல்களின் நிறப் பொருத்தம் கண்டு சண்டைக்கு விடுவர் என்று விளக்குகின்றனர். அதற்கு ‘நிலமறிந்து’, ‘திறமறிந்து’ என்றும்  என்றெல்லாம் பாட வேறுபாடுகளைக் காட்டுகின்றனர். நிறப் பொருத்தம், வளர்ந்த நிலப் பொருத்தம், போர்த்திறப் பொருத்தம் என எச்சொல்லைக் கொண்டு பொருள் கண்டாலும் பொருட்பொருத்தம் வருகிறது.

இத்தனை விரிவாகப் பதிவு பெற்றிருக்கும் சேவற்சண்டைக்கு இன்றைக்கும் பதிவுகள் கிடைக்கின்றன. திரையில் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படம் சேவற்சண்டையைப் பின்புலமாக்கி எடுக்கப்பட்டது. மரபறியாத ஆர்வலர்களின் தொந்தரவுக்கு அஞ்சிக் கிராபிக்ஸ் வழி உருவாக்கப்பட்ட சண்டையே படத்தில் காட்சிப்படுத்தபட்டிருந்தாலும் நல்ல காட்சியனுபவங்களை வழங்கிய படம் அது. அதற்கு முன் சில திரைப்பாடல்களில் கோழிக்கு நல்ல இடம் கிடைத்திருக்கிறது.  ‘பதிபக்தி’ படத்தில் இடம்பெற்ற ‘கொக்கரக் கொக்கரக்கோ சேவலே’ பாடலும் ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தின் ‘கோழி ஒரு கூட்டிலே’ பாடலும் சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ‘கோழி கூவுது’ என்றொரு படம் உண்டு. அதில் கோழிக்கு ஏதேனும் இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

நவீன இலக்கியத்திலும் கோழிகளைப் பற்றி நிறையப் பதிவுகள் உள்ளன. கிராமங்களைக் களமாகக் கொண்ட நாவல்களிலும் சிறுகதைகளிலும் கோழி வளர்ப்பு, கோழிக்கறி ஆகியவை பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. சுப்ரபாரதிமணியனின் ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ என்னும் சிறுகதை கோழிக்கறி தயாரிக்கும் கலையை மையமாக வைத்து மனநிலைகளைச் சித்திரிக்கும் சிறந்த கதை. ஆனால் ஜல்லிக்கட்டை முன்வைத்து சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ போல ஒரு நாவல் சேவற்சண்டையைப் பற்றி இல்லாமல் இருந்தது. அக்குறையை 2009ஆம் ஆண்டு வெளியான ம.தவசியின் ‘சேவல்கட்டு’ நாவல் ஓரளவு போக்கிற்று. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் பரவலான போதுதான் தமிழகத்தின் பலவிடங்களில் சேவற்சண்டை இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது என்பது பொதுச்சமூகத்திற்குத் தெரிய வந்தது. குறிப்பாகத் திண்டுக்கல் பகுதியில் சேவற்சண்டைக் களம் இன்னும் உயிர்ப்போடு இயங்குகிறது என்னும் செய்திகள் தெரியலாயின.

இத்தொடர்ச்சியில் நண்பர் பாலகுமார் விஜயராமன் இந்தச் சேவற்சண்டையை மையமாக்கிச் ‘சேவல்களம்’ என்னும் நாவலை எழுதியுள்ளார். ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’ என்று இவர் எழுதும்போது எனக்குப் புறப்பொருள் வெண்பா மாலையின் ‘காலின் முள்ளை இட்டு இடிக்கும் கடுஞ்சேவல்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எத்தனை அருமையான வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டிருக்கிறோம் என்னும் பெருமித உணர்வும்கூடத் தோன்றியது. அவ்விதம் வரலாற்றுப் பெருமிதம் தரும் நாவல் இது.

மிகுந்த நிதானத்துடன் எழுதப்பட்டுள்ள நாவல் இது.  புதிய களம் ஒன்றை எடுத்துக் கொள்ளும்போது பரவசத்தில் தகவல்களைக் கொட்டி நிரப்பிவிடும் ஆபத்து இருக்கிறது. அதை எளிதாகக் கடந்திருக்கிறார் பாலகுமார். மேலும் நாவலைச் சேவற்சண்டை தொடர்பானதாக மட்டுமல்லாமல் அதைச் சார்ந்தும் அதற்கு வெளியிலும் மனித வாழ்க்கை இயங்கும் விதத்தை விவரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆகவே நாவல் இரண்டு இணைதளங்களில் செல்கிறது. சேவற்சண்டை என்னும் விளையாட்டு, அதன் அம்சங்கள், அது உருவாக்கும் ஈர்ப்புகள், அதில் ஈடுபடுவோரின் இயல்புகள் என ஒரு தளம் விரிகிறது. அதற்கு இணையாக  குடும்பக் கதை ஒன்று இன்னொரு பக்கம் விரிந்து செல்கிறது. இரண்டுக்குமான இணைவை ஏற்படுத்த ஆசிரியர் குறைந்தபட்ச முயற்சியைச் செய்து வாசகரிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

ஒருவகையில் வாழ்க்கை என்பதும் விளையாட்டுத்தான். விளையாட்டுக்கென உருவாக்கி வைத்திருக்கும் விதிகளைப் போலவே விழுமியங்களைக் கொண்டு வாழ்க்கை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்டு விளையாடினால் பிரச்சினை எதுவும் இல்லை. விதிமீறல்கள் நடக்கும்போதுதான் பிரச்சினைகள் வந்து சேர்கின்றன. சிலசமயம் சின்ன சின்ன விதிமீறல்கள் வாழ்வுக்குச் சுவாரசியம் கூட்டுபவையாகவும் ஆவதுண்டு. நாவலில் வரும் சிறுபகுதியாகிய காதுகுத்து நிகழ்வு மட்டும் விரிவானதொரு நாவல் களம்.  விதிகளும் விதிமீறல்களும்  அவற்றைச் சமாளித்து விதிகளுக்குள் மீண்டும் மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளுதலும் என அதற்குள் இருக்கும் சுவாரசியங்கள் ஒரு விளையாட்டுக்குரியவைதான். இத்தகைய விளையாட்டின்  தனமைகளை எல்லாம் நாவல் கொண்டிருக்கிறது.

ஆகவே சேவற்சண்டை, குடும்பம் ஆகிய இரண்டையும் இணைத்துப் பார்க்கும் அதிகபட்ச வேலை வாசகருக்கு வந்து சேர்கிறது. விளையாட்டும் அது கொடுக்கும் ஈர்ப்பும் எவ்விதம் குடும்பத்திற்குள் பிரதிபலிக்கிறது என்பதையும் விளையாட்டின் கூறுகளுக்கு நிகரானவை அன்றாட வாழ்வில் எப்படி நடக்கின்றன என்பதையும் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் சுவாரசியமான விளையாட்டு ஒன்றுக்குள் வாசக மனத்தை நகர்த்துவதை மிக எளிதாகச் சாத்தியமாக்கியிருக்கிறார் பாலகுமார். சேவற்சண்டை நுட்பங்களை ரசிக்க முடிவது போல கணினி நுட்பங்கள் மூலம் நடைபெறும் விளையாட்டுக்களையும் ரசிக்க முடிகிறது.  மூன்று தலைமுறை மனிதர்கள் நாவலில் வருகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையின் வாழ்க்கையும் சிந்தனை முறையும் வெவ்வேறாக இருக்கின்றன. மூன்று தலைமுறையிலுமே எவராவது ஒருவர் சேவற்சண்டை விளையாட்டில் ஈடுபவராக இருக்கிறார். மரபின் ஈர்ப்பு அவ்விதம் போலும். இந்த மனிதர்கள் எல்லோருமே அத்தனை நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்கு ஏற்ப அற்பக் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டாலும்கூட எல்லோருமே நல்லவர்கள்தான். மனிதர்களைப் பற்றிய அவநம்பிக்கை மிகுந்து வரும் சூழலில் நல்ல குணங்கள் இயல்பாக மனிதர்களிடம் படிந்திருக்கின்றன என்பதைக் காணும்போது பெரும் ஆசுவாசமாக இருக்கிறது.

நாவல் சேவற்சண்டைக்கு எதிரான மனநிலையைச் சிறிதும் உருவாக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். மனித வாழ்வோடு காலங்காலமாகப் பிணைந்திருக்கும் ஒரு பறவையினம் வெறும் வளர்ப்பு, உணவு என்று மட்டும் நின்று போயிருக்குமானால் அதன் வாழ்வுக்கும் அர்த்தம் இல்லை; வளர்க்கும் மனித வாழ்வுக்கும் அர்த்தமில்லை. மனித வாழ்வுக்குள் கோழி ஊடுருவும் அரிய கணமாகச் சேவற்சண்டை இருக்கிறது. வளர்க்கும் மனித இயல்புகள் கோழியில் படியும் விதம் மிகவும் வியப்பானது. வாழ்வியல் முறைகளைப் பற்றிய சிறுஅறிவும் இல்லாமல் விலகி நின்றுகொண்டு ‘இது பறவையைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வு’ என்று சொல்லும் மேட்டிமைத்தனத்தின் பக்கம் நாவல் துளியும் சாயவில்லை என்பதோடு வாழ்வைச் சித்திரிக்கும் வகையில் அதற்குச் சரியான பதிலடியாகவும் இருக்கிறது.

ஏற்ற இறக்கங்கள் இன்றிச் சீராகச் செல்லும் நாவலில் எங்கேனும் சட்டென ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பு வந்து சேருமோ என்னும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எல்லாம் ஆற்றொழுக்குப் போல நடந்து செல்கின்றன. படிப்பகம், வாசிப்பு, கூட்டம், போராட்டம் என்று மெல்ல நகரும் ரமேஷ் பாத்திரம் வரும் பகுதியே உணர்ச்சிக் கொந்தளிப்பானது. ஆனால் பொதுவெளிக்குள் ஒருவர் நுழைவதைப் பற்றிய எதிர்மறைச் சித்திரமாக அது தேங்கிப் போகிறது. அந்தப் பகுதி வெறும் நாடகத்தனமாகவும் அரசியல் உணர்வுக்கு எதிரானதாகவும் இருப்பது சற்றே சங்கடம் தருகிறது. மனிதர்கள் தம் குடும்ப வெளிக்குள் சுருங்கியவர்களாக இருப்பதுதான் இன்றைய பெரும்பிரச்சினை. பொதுவெளிக்குள் நுழைபவர்கூடப் பொதுவெளி, குடும்ப வெளி இரண்டையும் இணைக்காமல் தனித்தனியாக வைத்துக்கொள்கிறார்கள். அது வசதியாக இருக்கிறது. ஒருவகையில் குடும்ப வெளிக்குள் சுருங்குபவருக்கும் தனித்தனியாக வைத்துக்கொள்பவருக்கும் பெரிய வேறுபாடில்லை. இரண்டையும் இணைக்கும் வகையில் பொதுவெளிக்குள் மனிதன் நுழைய வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தின் எதிர்பார்ப்பு.

மற்றபடி எளிதாக உள்ளிழுக்கும் பேச்சு மொழியும் வட்டார மொழியும் வாழ்வியலும் கலந்து வாசிப்புத்தனமையுடன் நாவல் உருவாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.  ‘புறாக்காரர் வீடு’ என்பது அவரது சிறுகதைத் தொகுப்பு. புறா, சேவல் எனப் பறவை சார்ந்து அவர் எழுத்துக்கள் அமைவது மகிழ்ச்சி தருகிறது. சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என்று எழுதிப் பழகிய விரல்கள் வழங்கியிருக்கும் முதல் நாவல். இன்னும் எழுதப் போகும் எவ்வளவோ விஷயங்களுக்குக் கட்டியம் இது. பாலகுமார் விஜயராமனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

24-11-18                                                                                 பெருமாள்முருகன்

நாமக்கல்.

******

Friday, January 11, 2019