Monday, December 24, 2018

வாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்
பத்தாண்டுகளுக்கு முன், வலைப்பூ (Blog) மூலமாக எழுத ஆரம்பித்தவர்களில் கணிசமானவர்கள் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து, இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

22/12/2018 அன்று வாசகசாலை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த “முப்பெரும்விழா”, அவர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்வு நிறைவான ஒன்றாக இருந்தது.

வாசகசாலை இந்த ஆண்டுதான், மொழிபெயர்ப்பு பிரிவுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இருப்பதிலேயே காஸ்ட்லியான கோட்-சூட் காஸ்ட்யூம் கொடுத்திருந்தாலும், தாலிகட்டும் நேரத்தில் நேக்காகக் கழற்றிவிடப்படும் தமிழ்சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளை போல் இருந்த மொழிபெயர்ப்பாளர்களை, நான்கு ஹீரோக்களில் ஒருவராக்கி மேடையில் அமரவைத்ததற்கு நன்றி என்று எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.

எனது மொழிபெயர்ப்பின் துவக்கவிடமான ’வலசை’ மற்றும் இந்நூலில் உள்ள கதைகள் தேர்வின்போது  கவிஞர் நேசமித்ரன், மறைந்த எழுத்தாளர் அர்ஷியா, நண்பர் கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருடனான எனது தொடர் உரையாடல்கள் குறித்தும் சிறிது பேசினேன்.

இன்னும் நிறைய பேசக் குறிப்புகள் வைத்திருந்தேன். புத்தகங்கள் வெளியீடு, வாசகசாலை ஆண்டுவிழா, விருதுகள் வழங்குதல் என்று மூன்று நிகழ்வுகள் இருந்ததால், மிக நீண்ட மாலை போலத் தோன்றியது. அரங்கில் பொறுமையாக அமர்ந்திருந்தவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்பதால், சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
நீண்ட தூரத்திலிருந்து க.ரா வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் பதிப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டனை தொலைபேசி பேச்சின் வழியாக அறிமுகப்படுத்தினார். எனது இரண்டு புத்தங்கள் ‘நூல்வனம்’ மூலமாக வெளிவந்துவிட்டன. இப்போது தான் மணிகண்டன் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

நிகழ்வு இடைவெளியில் அருணாச்சலம் சார் உடனும், எழுத்தாளர் கணேசகுமாரனோடும் பேசிக்கொண்டிருந்ததில் சிறுதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடவிட்டுப்போய்விட்டது. உமா மோகன் மேடம், ஜான்சி மேடம், கலையரசி மேடம் ஆகியோரை அருணாச்சலம் சார் அறிமுகப்படுத்திவைத்தார்.

விருது அறிவித்ததில் இருந்து, கார்த்திகேயன் தொடர்பில் இருந்தபடியே இருந்தார். குடும்பத்தோடு வருகிறேன் என்றதும், பயண ஏற்பாடு, தங்கும் வசதி போன்றவற்றை கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொண்டார். விழாவுக்குச் சென்றதும் அவரையும், அருணையும் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

பி.கு.விடம் நீங்கள் மாரி செல்வம் தானே என்று கேட்டு பல்பு வாங்கியபின், மாரி செல்வம் தானாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டார். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனிடமும், எழுத்தாளர் எஸ்.பாலபாரதியிடமும் அறிமுகம் செய்துகொண்டு இரண்டு வார்த்தைகள் பேசினேன்.

விக்னேஷ்வரன், விருதுக்குத் தேர்வான எனது “கடவுளின் பறவைகள்” புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார். கணவனையும், மகனையும் கொன்றவனை சட்டத்திற்குமுன் நிறுத்தும் பெண்ணின் போராட்டம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, பிசிறில்லாத மொழிபெயர்ப்பு (’காட்டுமிராண்டிகள்’ சிறுகதை) என்று வாழ்த்தினார். மகிழ்வாக இருந்தது.

கார்த்திகைப்பாண்டியனின் ஃபிரண்ட் என்று ஓர் இளம்பெண் (செல்வராணியா, யோகநந்தினியா? ) அறிமுகம் செய்துகொண்டு பேசினார். நானும் அவர் ஃபிரண்ட்தாங்க! என்று பதில் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஃபெட்ரிக்கும், பிரவீண் குமாரும் சிரமம் பார்க்காமல், நாங்கள் தங்கியிருந்த அறைக்கே வந்து, வசதிகள் குறித்து சரிபார்த்துவிட்டுச் சென்றனர்.

திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டதுமுதல், விருந்தினர் உபசரிப்பு, மண்டப ஏற்பாடு, சமையல் மெணு, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்துப்பார்த்துத் திட்டமிட்டாலும், முகூர்த்ததின்போது தாலிசெயினை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடித்துலாவி, பின் சரி அதற்குபதில் சாமி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்துக்கட்டுங்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான குளறுபிடிகள் நடந்தன.

சிறப்புரை ஆற்றவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசுவதற்குமுன் இடைவேளை அறிவித்து, பாயாசம் சாப்பிட அழைப்புவிடுத்தது, புத்தக வெளியீட்டின் போது, வேறு புத்தகம் உள்ள பார்சலை வைத்தது, புத்தகம் பெற்றுக்கொள்பவர் என்று பெயர் அறிவிக்கப்பட்டபின் அவரைத்தேடி வாசலுக்கு ஓடி, அவரை அங்கே காணாமல், அவருக்கு மாற்றாக அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒரு நண்பரை புத்தகம் பெற்றுக்கொள்ள வைத்தது என்று இந்த சுவாரஸ்ய தருணங்களில், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, எதிரில் இருந்து வேடிக்கை பார்க்கையில் நமக்கு ரசிக்கும்படி ஜாலியாக இருந்தது.

சிறப்புரையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எந்தவிஷயம் செய்வதானாலும், அதற்குரிய முக்கியத்துவத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினார்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொள்வது, அவர்கள் நிகழ்வுக்கு அவர்களே மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்பதுபோன்ற மேம்போக்கான விஷயங்கள் மட்டுமே தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு இவர்களிடம் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகச்சிறப்பானவை. அதற்குண்டான நீண்டகால வெற்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்.

பொதுமக்களின் தளத்திற்கு இலக்கியம் சென்றடைய, நிச்சயம் பெண்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே முடியும். அவ்வகையில் வாசகசாலை பெண்களின் தொடர்பங்களிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. முப்பெரும் விழா ஏற்பாட்டிலும், ஒருங்கிணைப்பிலும், விருதுக்குரிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், தொகுத்து வழங்கியதிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றியமைப்பதில், வாசகசாலையின் பங்கு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். வாழ்த்துகள் நண்பர்களே, தொடர்ந்து பயணிப்போம்.

#வாசகசாலை
#முப்பெரும்விழா2018
******

Friday, December 21, 2018

'கடவுளின் பறவைகள்’ - வாசகசாலை விருது 2018வாசகசாலை - விருது குறிப்பு
-----------------------------------------------
#வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2018-ல் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பிற்கான விருது: "கடவுளின் பறவைகள்"
பெறுபவர்: பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: நூல் வனம்

வழக்கமான அன்றாடத்தின் அழுத்தங்களில் இருந்து விடுபடலுக்காக கைக்கொண்ட செல்லப் பறவைகள் வளர்ப்பு என்பதில் இருந்து துவங்குகிறது பாலகுமார் விஜயராமனின் இந்தத் தொகுப்பிற்கான ஆதிப்புள்ளி.

அங்கிருந்து துவங்கிய அவரின் ஆர்வமானது வளர்ப்புப் பறவைகள் மற்றும் விலங்குகள் சார்ந்த கதைகள் வாசிப்பு, சூழலியல் சார்ந்த உலகக் கதைகள் வாசிப்பு என கிளை பரப்பி வளர்ந்துள்ளது. அவ்வாறு வாசித்தவற்றில் பிடித்தவற்றை மொழியாக்கம் செய்வதில் துவங்கிய ஆர்வம், நல்லதொரு தொகுப்பாய் நம்முன் இன்று நிற்கிறது.

பாலகுமாரின் இந்தத் தொகுப்பை மேலும் சுவராசியமாக்குவது வெவ்வேறு நாடுகள் சார்ந்த அவரின் கதைகள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்வுதான். எழுத்தாளர்களில் அநேகம் பேர் உங்களுக்குப் புதியவர்கள் என்பதால் முன்முடிவுகள் ஏதுமின்றி ஆழ்ந்து வாசிக்கலாம்.

அதேபோல் இந்தப் பத்து கதைகளுமே கால, தேச வர்த்தமானம் தாண்டி, இந்தப் பூமிப் பந்தின் கோடுகளுக்குள் அடைக்கலமாகியுள்ள எளிய மனிதர்களை, அவர்களது இச்சைகளை, அவர்களது நிலம் மற்றும் வாழ்வியல் சார்ந்து இணைந்துள்ள விலங்குகளுடன் அவர்களுக்குள்ள உறவு மற்றும் பிரிவு, கோபம், சோகம் என பல்வேறு தருணங்களை அழகாக காட்சிப்படுத்துகிறது.

மிக முக்கியமாக இந்தத் தொகுப்பை நம் மனதுக்கு மேலும் நெருக்கமாக்குவது பாலகுமாரின் மொழியும், வார்த்தைகளின் பயன்பாடும்தான். படைப்பின் நிலம், சூழல் மற்றும் காலம் சிதையாமல், அதே நேரம் படிப்பவரையும் சலிப்புற வைக்காத, பிசிறு தட்டாத இலகுவானதொரு மொழி லாகவம் பாலகுமாருக்கு கைவசமாகி இருக்கிறது. அத்துடன் மறைந்த எழுத்தாளர் அர்ஷியாவின் எடிட்டிங்கில் இப்படைப்பு மேலும் மெருகேறியுள்ளது.

மொழிபெயர்ப்பை விரும்பி வாசிப்பவர்களுக்கு நல்லதொரு தேர்வாக அமையும் இந்த படைப்பிற்காக விருதுபெறும் எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மற்றும் நூல்வனம் பதிப்பகத்திற்கு வாசகசாலை தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. #மகிழ்ச்சி.

******

Saturday, December 15, 2018

செல்ஃபோன் கதிர்வீச்சு ஆபத்தானதா?

 
 
செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.

ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)

இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.

அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.

இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.

லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.

என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.

செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை.

******

சகமனிதனுடனான உரையாடல்


(முனைவர் வா.நேருவின் “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)


சாதியக் கட்டுப்பாடுகளும், பிற்போக்குத்தனங்களும். மூடநம்பிக்கைகளும் மண்டிக்கிடக்கும் சமுதாயத்தின் கடைநிலை வாழ்விலிருந்து, தன் கல்வியாலும் பணியாலும் மேலெழுந்து வரும் ஒருவன், தனது சக மனிதர்களையும், சூழ்நிலைகளையும் எவ்வாறு அறவுணர்வோடு அனுகுகிறான் என்பதைப் பேசுகின்றன, முனைவர். வா.நேரு அவர்கள் எழுதி, எழிலினி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் சிறுகதைத் தொகுப்பு.

மொத்தம் பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொப்பில், இலக்கிய ரசனை மிகுந்த சொற்சரங்களோ, வர்ணனைகளோ, அலங்கார விவரிப்புகளோ இல்லை. மாறாக இக்கதைகள், நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நடந்த அல்லது தாங்கள் எதிர்கொண்ட அன்றாட சம்பவங்களை நேரடிப் பேச்சில் விவரிப்பதைப் போன்ற சரளமான மொழியில் அமைந்திருக்கின்றன. கதையின் மையக்கருத்தை முகத்தில் அடிப்பதைப் போலக் கூறும் இந்த எளிய நடை, படைப்பிற்கு பெரும்பலத்தை அளித்திருக்கின்றது. சாதாரணமாக வாசித்துச் செல்லும் இடங்களில் கூட திடீரென நம்மையும் அறியாமல் மனம் கனத்து, கண்களில் நீர் கோர்த்து விடுகின்றது.

நோயினாலோ, விபத்துக்களினாலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவருக்குத் துணையாக, வாசலில் காத்துக் கிடப்பவர்களின் மனவோட்டத்தையும், பதற்றத்தையும் சொல்லிச் செல்லும் கதை முக்கியமானது. அங்கே காத்திருக்கும் நேரங்களில் அருகில் இருப்பவர்களும் உருவாகும் நட்பு, பரஸ்பரம் தங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருவருக்கு ஒருவர் ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொள்ளுதல், உள்ளே எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அங்கே ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் எழும் பதைபதைப்பு, வெவ்வேறு வகையான பிரார்த்தனைகள், அவர்களின் துக்கங்களுக்கு வடிகாலாக மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தளங்கள், அது குறித்த மாற்றுப் பார்வை என்ற பல்வேறு சித்திரங்களையும் வழங்குகிறது அக்கதை.

சமூகத்தின் அடி ஆழத்தில் கிடக்கிறவன், மேலே ஏறி வர அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை எவ்வாறு இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். தன்னால் முடியாததை ஒரு சவாலாக ஏற்று எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மிக யதார்த்தமான மொழியில் சொல்கிறது ஒரு கதை. கிராமப்புற மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆங்கிலப் பாடத்தைக் கற்பதை நீச்சல் அடிக்கப் பழகுவதோடோ அல்லது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதோடோ ஒப்பிடும் போது, அது ஒரு மாணவனின் மனதில் எத்தகைய நேர்மறை உணர்வுகளை விதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.

குடும்பத்தில் ஒரு விழா நடத்தும் போது ஏற்படும் பொருளாதார முடைகளைக் குறைக்க உதவும் விதமாக உருவான மொய் எழுதும் பழக்கம், காலப்போக்கில் பெருவட்டி போட்டுத் திருப்பிச் செலுத்தும் நிர்பந்தமாகி விட்டது. மதுரை பக்கங்களில் மொய் வசூல் செய்வதற்காகவே குடும்ப விழாக்கள் நடத்துவார்கள். இலட்சங்களில் வசூல் ஆகும் பணத்தை வட்டியோடு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவமானத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அவ்வாறு சீர் செய்கையில் எழும் சமூக அழுத்தத்தைப் பேசுகிறது ஒரு கதை.
ஒரு புரோட்டா கடையில் வேலை பார்க்கும் மாஸ்டருக்கும், சப்ளை செய்பவருக்கும் இடையேயான இயல்பான கேலி, கிண்டல் கலந்த நட்பையும், அதில் ஒருவர் பிரியும் போது, மற்றொருவரின் இயல்பான மனநிலை மாற்றத்தையும், அதனூடாக தினம் பதினாறு மணி நேரத்திற்கு மேலாக உழைக்கும் ஒரு எளிய மனிதனின் உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவனது குடும்பம் அடையும் இன்னல்களையும், வெள்ளத்தில் மூழ்குபவனுக்கு கையில் கிடைக்கும் சிறு மடத்துண்டு போல உதவும் அரசுக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும், அரசின் இத்தகைய திட்டங்கள் பரம்பரை சொத்தை சொகுசாக அனுபவித்து வரும் சமூகப் புரிதலற்ற ஒருவனின் மனதில் என்னவிதத்தில் பதிவாகுகிறது என்பதையும் சொல்கிறது இன்னொரு கதை.

இக்கதைகள் முழுவதையும் வாசித்து முடித்த பிறகு, அவை மனதில் அதிக சலனத்தை ஏற்படுத்தி இருந்தன. சமுதாயத்தில் உள்ள சகமனிதர்களுக்கு உதவுவது என்பது ஏதோ அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து ஆற்றக் கூடிய பெரும்பணிகளோ, சிறந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உதவிகளோ மட்டுமல்ல. எளியவன் ஒருவன் போகிற போக்கில் செய்துவிட்டுப் போகின்ற ஏதோவொரு நற்செயல் இன்னொருவனுடைய வாழ்க்கையையே மாற்றிப் போடக்கூடியதாக இருக்கலாம். பெரிய முனைப்புகள் இன்றி, தன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நல்லறத்தை விதைத்து விட்டுச் செல்லும் ஓர் எளிய மனிதனின் டைரிக்குறிப்புகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். சரளமான வாசிப்பு அனுபவத்தையும் தாண்டி, இக்கதைகளின் மனிதர்கள் மனிதில் நிற்கிறார்கள்.

வாசிப்பு இன்பத்திற்காக கதைகளை அனுகும் சிறிய வட்டத்தைத் தாண்டி, இக்கதைகள் பொதுசமூகத்தின் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் உரையாடப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டுமென விரும்புகிறேன். நகர்ப்புற ஆடம்பரங்களுக்கு பரிச்சயமற்று, உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் மட்டுமன்றி, ஓரளவு பொருளாதார தன்னிறைவும், கேட்டது கேட்டவுடன் கிடைக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளரும் மேல்மத்திய வர்க்க குழந்தைகளுக்கும் இத்தகைய கதைகள் சென்று சேர வேண்டும். ஒரு கப் இட்லி மாவு விற்பனையில் ஒரு குடும்பம் ஜீவித்திருக்கும் சூழ்நிலையும், ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைக்க பெயர் தெரியாத எத்தனை பேரிடம் ஒருவன் சிபாரிசுக்கு அலைய வேண்டி இருக்கிறது என்பதையும், ஒரு புரோட்டா மாஸ்டரின் நெஞ்சு வலிக்கு அரசின் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு அவனது உயிரைக் காக்கிறது என்பதையும், தொழிற்சங்கங்கள் இன்றும் ஏன் தேவையாய் இருக்கின்றன என்பதையும் சமூகத்தின் பல படிநிலைகளில் இருக்கும் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். நல்லறத்தை வாழ்வின் அன்றாட நடைமுறையில் தன்னியல்பில் போற்றும் எழுத்தாளர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும், இத்தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் எழிலினி பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******************************************
நெருப்பினுள் துஞ்சல் (சிறுகதைத் தொகுப்பு)
முனைவர் வா.நேரு
எழிலினி பதிப்பகம்
பக்கங்கள்: 98
விலை: ரூ. 120/-
******************************************

(28/10/2018 அன்று தமுஎகச், பொள்ளாச்சி கிளை சார்பாக நடத்தப்பட்ட நூல் அறிமுக நிகழ்வில், தோழர்கள் மூலம் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை. நன்றி !)

Monday, November 19, 2018

மலையெங்கும் பூக்கும் மலர்ஒரு தாமரை மொக்கை விரிக்கும் போது, பூவின் இதழ்கள் ஒவ்வொரு அடுக்காக மலர்வது போல, ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதினம் தன்னைத் தானே அழகாக விரித்துக் கொள்கிறது, அய்யனார் விஸ்வநாத் எழுதியுள்ள “ஓரிதழ்ப்பூ” புதினம். சமீபத்தில் கோவில்கள், மாளிகைகள் போன்ற புராதானச் சின்னங்களை 360 பாகை கோணத்தில் சுற்றிச் சுழற்றிக் காட்டும் காணொளிகளைப் பார்த்திருப்போம். இப்புதினத்திலும், ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் மேலோட்டமாகச் சொல்லப்படும் ஒரு காட்சி, அதில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு கதாபாத்திரத்தின் பார்வையில் வேறு ஒரு கோணத்தில் சொல்லப்படும் போது, ஒரே நிகழ்வின் பல்வேறு அடுக்குகளை கண்முன்னே காட்சிகளாக விரிகின்றன. இந்த யுக்தி மேம்போக்காகச் சொல்லப்பட்டிருந்தால், சொன்ன விஷயத்தையே மீண்டும் சொல்வது போல, வாசிக்கையில் அலுப்புத் தட்டி இருந்திருக்கும். ஆனால் அய்யனாரின் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையினால், ஒரே நிகழ்வின் பல படிமங்கள், உயிரோட்டமான முப்பரிமான நிகழ்வுகளாக உயிர்பெறுகின்றன. 

ஓரிதழ்ப்பூ என்று கருத்தாக்கத்தை யதார்த்தம், புனைவு, மீபுனைவு என்று பல்வேறு தளங்களில் பரவவிட்டு, சுழற்சியான ஒரு புனைவுப் பின்னல் உருவாக்கப்பட்டிருக்கிறது. புள்ளிமான் உடலில் மனித முகம் கொண்டவன் கனவில் வரும் சித்திரம், தாலிகட்ட அருகில் அமர்ந்திருப்பவனுக்கு நரிமுகம் போன்ற தோற்றம் எழுவது, அகத்தியரும், ரமணருக்குமான உரையாடல் போன்றவற்றோடு திருவண்ணாமலை என்ற ஊரின் வரைபடமும் அதில் வாழும் மனிதர்களைப் பற்றியதுமாக, உள்ளும் வெளியுமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

ஓரிதழ்ப்பூ என்பது என்ன என்பதற்கான தேடலில் துவங்கும் புதினம், அதனை மாமுனிவர் கண்டுணரும் இடத்தில் முடிந்து விடுவது போலத் தோன்றினாலும், அது ரவியின் மனதில் அச்சுறுத்தும் அக்கினிப் பிழம்பாக தொடர்ந்தபடியே இருக்கிறது. மாய யதார்த்தத் தளத்தில், மாமுனிவர் உலவுவது போல தொடங்கும் சரடு, அவரைத் தேடி அவரது மனைவி வரும்போது, அவர் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மனப்பிறழ்வு என்ற இணைப்பில் சரியாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சங்கமேஸ்வரன் தொடர்பான அங்கையுடைய நினைவுகள், சங்கமேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி இடையேயான நிகழ்வுகள் அனைத்தும் நிகழில் கலந்த மாய யதார்த்தக் காட்சிகளே.

மலர் சங்கமேஸ்வரனை அடர்கானகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுவது எல்லாம் மீபுனைவுத் தளத்தில் சொல்லப்பட்டு, அவன் அவளைக் கூட்டிச் செல்கையில் அவள் அணிந்திருந்த நைட்டியோடு டூவீலரில் ஏறிச் செல்கிறாள் எனும் போது திடீரென அக்காட்சி மீபுனைவல்ல ஒரு யதார்த்த நிகழ்வு என்று வாசிக்கும் மனம் அலைவுறுகிறது. இத்தகைய இடறல் புதினத்தின் பல பகுதிகளில் வருகிறது. அய்யனார் இதனை பிரஞ்கையோடு விரும்பியே செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. புனைவுக்கும், யதார்த்தத்துக்குமான இந்த அலைச்சல் தான் புதினத்தை அடர்த்தியாக்கவும் செய்கிறது.

தான் கனவில் கண்ட மானின் நினைவிலேயே மூழ்கியிருக்கும் அங்கை, கையாலாகாத தனது கணவனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனியாளாய் அவனையும் வைத்துக் காப்பாற்றும் துர்கா, கானகத்துக்குள் மறைந்து போகும் மலர், தன்னிடம் வந்து தஞ்சமடைபவனை அவன் வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, வெளியுலகில் சுதந்திரமாய்ப் பறக்க நினைக்கும் அமுதா, இந்த நான்கு பெண்களையும் மையமாகக் கொண்டதே "ஓரிதழ்ப்பூ". இவர்களை நெருங்க அஞ்சுகிறவர்களாக, இவர்களிடம் சரணாகதி அடைந்தவர்களாக, இவர்களுக்குள் பிரபஞ்சத்தின் பேருண்மையை உணர்ந்து தெளிபவர்களாக, இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வேட்கை மிகுந்தவர்களாக, இவர்களை நினைத்து உள்ளுக்குள் மருகுபவர்களாக இப்படி இவர்களின் வாழ்வை ஒட்டியவர்களாகவே இப்புதினத்தில் வரும் ஆண்கள் இருக்கிறது.

ஆண்களின் பராக்கிரமங்கள் மற்றும் வீழ்ச்சி, அதற்குப் பின்னிருக்கும் பெண்கள் எனும் ஆண்மய புனைவுகள் மத்தியில், " ஓரிதழ்ப்பூ"வின் ஆண்கள், பெண்களின் பகடைகளாகவே சுழற்றப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வும் தாழ்வும் பெண்களைச் சார்ந்தே இருக்கின்றன. சொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒவ்வொருவரின் நிகழ்வாழ்வும் கூட இப்படி பெண்களை மையப்படுத்தியதாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

புனைவு மற்றும் யதார்த்தக் களங்களில் பயனித்தாலும், புதினத்தின் எழுத்துநடை, மிக எளிமையானதாகவே இருக்கிறது. தீவிர வாசகர்களுக்கு இது ஒரு குறையாகவும், அதேநேரம் சுவாரஸ்மான வாசிப்புக்குத் துணையாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் முக்கோணக் கதைகளில் ”ஓரிதழ்ப்பூ” இரண்டாவது என்று அய்யனார் குறிப்பிட்டிருக்கிறார். முதல் பகுதியான “இருபது வெள்ளைக்காரர்கள்” இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசிக்க வேண்டும். அடுத்து வரவிருக்கும் மூன்றாவது பகுதிக்காகவும் காத்திருக்கிறேன். எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத் அவர்களுக்கும், இதனை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******
ஓரிதழ்ப்பூ (நாவல்)
அய்யனார் விஸ்வநாத்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 166
விலை: ரூ. 150

வாழ்வின் பரமபதம்
தனக்குப் பிடிப்பதை, எந்தத் தடையையும் மீறி நிறைவேற்றுக் கொள்கின்ற ஒருத்தி, தனக்குரியவனின் ஒரு சுடுசொல்லைத் தாங்க முடியாமல் தன்னைப் பொசுக்கிக் கொள்கிறாள். அபாண்டமாய் மாண்ட அவள் அரூப ராஜநாகமாய் மாறி, தன் வாழ்வை வீழ்த்திய தன் மாமனின் குடும்பத்தை அழிப்பது ஒரு கண்ணி.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தில் இருந்து, மேலெழுந்து வரும் ஒருவன், தன் பால்யத்தின் நினைவுகளோடும், தொன்மத்தின் மீதுள்ள ஆழ்ந்த ஒட்டுதலோடு அதே நேரம் அதிலிருந்து விலகி ஓடும் எத்தனிப்போடும் அலைவுற்று, இறுதியில் மீண்டு தன் வாழ்வுக்கான மொட்டெடுக்க முனையும் ஒரு கண்ணி.

நிகழ்வாழ்வின் சுயத்தைத் தொலைத்து, துறவறத்தில் விட்டேர்த்தியாய வெறுமையைக் குடித்து, கசப்பேறி வன்சொற்களாய் உமிழும் எச்சலில் இருந்து, சுற்றியிருப்பவர்களுக்கான சுபிட்சத்தை அருளும் அஞ்ஞானவாசியின் இருப்பும் மறைவும் ஒரு கண்ணி.

இப்படி, கதைசொல்லியின் உள்ளொடுங்கிய மனப்பிரவாகத்தின் மூலமாகவும், பாவங்களுக்குள்ளும் அவற்றிற்கு உண்டான தண்டனைகளுக்குள்ளும் தன்னைத் தானே புதைத்துக் கொள்ளவும், ஒரு மொட்டெடுப்பின் மூலம் உள்ளிருந்து முட்டித் தள்ளி வெளிவரத் துடிக்கும் எத்தனத்தையும், மேல்சொன்ன கண்ணிகளின் சரடாகக் கோர்த்து புனையப் பட்டிருக்கிறது சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்”.

சரவணன் சந்திரனின் கதை சொல்லிகள், சட்டகத்துக்குள் அளந்து வைத்திருக்கும் கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்ட வகையில் கட்டத்துக்கு வெளியே இருந்து தம் அகத்தின் சாகச உணர்வையும், அதன் களிப்பையும், பின் அதனூடாக உண்டாகும் குற்றவுணர்ச்சியின் மூலம் தம்மை சுருக்கிக் கொள்வதையும், பின் அரூபத்தில் இருந்து நீளும் ஒரு கையைப் பற்றிக் கொண்டு அந்தக் குற்றவுணர்வில் இருந்து மீண்டு எழும் மீட்சி என்பதாகவும் உருவாகி இருப்பவர்கள். அவரது இதுவரையான புதினங்களில் இதே குணவார்ப்புள்ள நாயகன் தான் கதைசொல்லியாக இருப்பான். ஆனால் முந்தைய புதினங்களில், வாசிப்புக்கு பெருந்தடையாய் இருந்தது, அத்தியாயங்களுக்கு இடையேயான தொடர்ச்சியின்மை. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியாய் தொக்கி நிற்பது போலவே தோன்றும். ஒரு அத்தியாயத்தில் ஒரு பாத்திரத்தைப் பற்றிய அறிமுகம், அப்பாத்திரத்திற்கு கதைசொல்லியுடனான உறவு அல்லது தொடர்பு, அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் ஒரு சம்பவம். அதோடு அந்த அத்தியாயம் முடியும். ஒரு அத்தியாயத்தின் நிகழ்வுகள், கதையோட்டத்திற்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன அல்லது அது புதினத்தை எப்படி நகர்த்துகிறது என்பதில் சில குழப்பங்கள் இருந்தன. ஆனால் ”சுபிட்ச முருகனில்” அந்த தொடர்பின்மை மறைந்து, கண்ணிகளை புனைவுச் சரடில் இணைக்கும் லாவகம் வாய்த்திருக்கிறது.

சுபிட்ச முருகனின் முதல் மூன்று அத்தியாயங்கள், இளங்கா என்னும் இளம்பெண்ணின் தனித்தன்மையான வாழ்வையும், சாவையும், அடர்த்தியான விவரிப்புகள் மூலமும் பேசுகிறது. அவள் கதைசொல்லியின் மனதுக்குள் தொன்மமாய் பதிந்து, தனது வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை அலைக்கழித்து பலிவாங்கிய துர்நிகழ்வுகள் அவனைக் கொடுங்கனவாய்த் துரத்த, அதில் அவன் வீழ்கிறானா இல்லை விதியின் இந்த சாபத்தில் இருந்து அவளே அவனை விடுக்கிறாளா அல்லது அவளையும் தாண்டி அவன் தான் கண்டுணரும் தரிசனங்கள் மூலம் இறுதியில் மொட்டெடுக்கிறானா என்ற கேள்விகளை முன்வைத்து, புதினத்திற்கு மிகப்பலமான அஸ்திவாரம் நட்டு வைக்கப்படுகின்றது.

ஆனால் புதினத்தின் இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் இரண்டாம் பகுதி மிகப் பலவீனமாக எழுந்திருப்பது துரதிர்ஷ்டம். ஒரு புனைவின் போக்கு, நம் மனம் நினைக்கின்றபடி தான் செல்லவேண்டும் என்று நினைத்து வாசிப்பது அபத்தம், ஆனால் முதல் மூன்று அத்தியாங்களில் கட்டமைக்கப்பட்ட இளங்கா என்னும் பெண்ணின் பிம்பம் அப்படியே நட்டாற்றில் ஆதரவின்றி விடப்பட்டு, அதன் பின்னான அத்தியாயங்கள் கதைசொல்லி தன் அகம் சார்ந்த பிரச்சனைகளின் புலம்பலையும், தன் இயலாமையையும், தன் வாழ்க்கை முறை மாற்றத்தையும் அன்றாடம் எழுதிச் செல்லும் டைரிக்குறிப்பைப் போன்று சுருங்கி விடுகின்றன. உண்மையில், இப்புதினத்தின் மையப்பகுதி, இளங்காவுக்கும், கதைசொல்லிக்குமான பரமபத விளையாட்டாகவும், சமராகவும், போராட்டமாகவும் அமைந்திருந்தால் முன் அத்தியாயங்களின் அடர்த்தி, புதினம் முழுக்கப் பரவியிருக்குமோ என்று தோன்றுகிறது. இளங்கா தன் மாமனின் குடும்பத்தை புல்பூண்டு இன்றி பஸ்பமாக்கும் ரௌத்திரத்தில் தனக்குப் பிரியமான ஐந்து வயது சிறுவனை மட்டும் தன் நஞ்சின் வீரியத்தில் இருந்து காப்பது என்ற பதைபதைப்போடு அவனை நெருங்குவதும், ஆனால் கதைசொல்லிக்கு இளங்கா என்பவள் தன் குடும்பத்தை கருவறுக்க வந்த யட்சியா அல்லது தன் மீதிருக்கும் சாபத்தின் வினையை அறுக்க வந்த கன்னிமார் தெய்வமா என்ற கலக்கத்துடனும் இதே கதையை இன்னொரு கோணத்தில் யோசித்து, புனைவின் திசையை மாற்றிப் பார்க்கையில் “சுபிட்ச முருகன்” இன்னும் செழுமையான சித்திரமாகத் துலக்கமாகிறது. மாறாக, முன்பு நன்கு கட்டமைக்கப்பட்ட இளங்கா என்ற ஒருத்தியின் பிம்பமே மறந்து போய், கதைசொல்லி, தன் இயலாமையையும், எச்சில் சாமியின் இடத்தில் அல்லறும் படிமங்களும் மீண்டும் மீண்டும் வரும் போது, புதினத்தின் இரண்டாம் பகுதி தனியான வேறு காட்சியாக, வெறும் புலம்பலாக தோற்றம் கொள்ள வைக்கின்றது.

வாழ்வின் ஒன்றின் மீதான மோகம், அதனை அடையத்துடிக்கையில் நிகழும் வேட்கை, பின் பிடித்தது தரும் சலிப்பு அல்லது பிடித்தது கைநழுவிப் போகையில் எழும் குரோதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது புதினத்தின் முதல் பகுதி. சாகச மனம் கொண்ட ஒருவன் உச்சத்திலிருந்து அதளபாதாளம் நோக்கி விழுகையில் தோன்றும் ரோகம், அதன் மூலம் தனக்குள் சிற்றெரும்மாக ஊறல் எடுக்கும் கழிவிரக்கம், அதனூடே கிடந்து உழலுதல், அந்த பாதாளத்திலிருந்து மேலெழுந்து வர முடியாமல் மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே தன்னைச் சுருக்கி சுருக்கி சுற்றியுலவும் வட்ட எல்லை ஆகியவை இரண்டாம் பகுதி. பின் தன் கீழ்நிலையிலிருந்து தன்முனைப்போடோ அல்லது மேலிருந்து நீளும் ஒரு ஒளிக்கற்றையைத் தொடர்ந்தோ வான் நோக்கி ஏகி, மொட்டெடுத்து, போகம் பெருக எழும் முயற்சி முடிவுப் பகுதி. இப்படி மோகத்தில், துவங்கி, ரோகத்திலிருந்து மீண்டு போகம் பெருகி வரும் படைப்பாக வந்திருக்கிறது “சுபிட்ச முருகன்”.

உண்மையில், இந்த புதினத்தை வாசிக்க எடுக்கும் போது, இணையத்தில் இப்புத்தகம் ஏற்படுத்தி இருந்த எதிர்பார்ப்புகளினாலும், வாசிக்க நேர்ந்த நான்கைந்து விமர்சனக் குறிப்புகளினாலும், இருவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றின. ஒன்று, “சரவணன் சந்திரன் பெயர்சொல்லக்கூடிய தனது முதல் நாவலை எழுதிவிட்டார்” என்ற நம்பிக்கை. இன்னொன்று, “இந்த தெர்மாக்கோலைத் தான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தீங்களா” என்ற பரவை முனியம்மாவின் வசனம். புதினத்தை வாசித்து முடிக்கையில் இவற்றில் எந்த எண்ணம், நிலைபெறப்போகிறது என்று எந்த யோசனையும், முன்முடிவுகளின்றியே வாசிக்கத் துவங்கினேன். ஆனால் ஒற்றை வரியில் வீசிச் செல்லும் வெற்று விமர்சனச் சொற்களைத் தாண்டி, இந்த புதினத்தின் முதல் சில அத்தியாயங்கள் ஏற்படுத்திய அதிர்வு நாவலை முடித்த பின்பும் நிலைத்திருக்கிறது. பின் வந்த அத்தியாயங்கள், முதல் சில அத்தியாயங்களுக்கு நியாயம் சேர்க்கத் தவறியிருந்தாலும், முடிவில், கரும்பானை உடைத்து பெருமழை பொழிந்து மனம் நிறைக்கும் சுபிட்ச முருகனின் அருளால், இப்புதினம் தனக்கான இடத்தைத் தக்க வைக்கிறது. எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களுக்கும், புத்தகத்தை வெளிட்ட “டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினருக்கும் வாழ்த்துகள். 

******
சுபிட்ச முருகன் (நாவல்)
சரவணன் சந்திரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 127
விலை: ரூ. 150