Showing posts with label BSNL. Show all posts
Showing posts with label BSNL. Show all posts

Saturday, December 15, 2018

செல்ஃபோன் கதிர்வீச்சு ஆபத்தானதா?

 
 
செல்ஃபோன் கதிர்வீச்சின் அபாயம் பற்றி இப்போது பரவலாகப் பேசப்படுவதால், அத்துறையில் இருப்பவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையை (Frequency band / Spectrum) அதிகரிக்கமுடியாது. ஆனால் Radiating power ஐ அதிகரிக்க முடியும்.

ஒரு செல்ஃபோன் டவரில் (BTS) இருந்து வரும் Radiating power standard உலக அளவில் 12 வாட்ஸ். இந்திய அளவில் 15 முதல் 18 வாட்ஸ். இந்த அளவில் இருந்தால் பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

சில தனியார் நிறுவனங்கள் 60 வாட்ஸ் வரை வைத்திருப்பதாகக் கேள்வி. (TRAI விதிமுறைப்படி இதற்கு அனுமதியில்லை என்றாலும், நம் நாட்டில் விதிமுறைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்று தெரிந்தது தான்)

இதனால் பறவைகளுக்கு மட்டுமல்ல, மனிதனின் காது, மூளை ஆகியவையும் பாதிப்படையும். இது நீண்ட கால அடிப்படையிலானது என்பதால் இன்னும் முழுதாக நிரூபிக்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல். நினைத்தாலும் இப்படி தனியார் போல வேண்டுமென்ற power radiationஐ அதிகப்படுத்திக்கொள்ள முடியாது. காரணம், தொழிலில் இலாபம் வரும் என்றாலும், ஓர் அரசு நிறுவனம் சட்டத்திற்குப் புறம்பான, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களைச் செய்யமுடியாது, செய்யக்கூடாது.

அதனால் தான் தனியார் செல்ஃபோன் சிக்னல், கண்ணாடி அறை, அண்டர்கிரவுண்ட் குடோன் என்று நீக்கமற எங்கும் துல்லியமாகக் கிடைக்கிறது. ஆனால் பி.எஸ்.என்.எல். செல்லுக்கு அழைப்பு வந்தால் செல்லை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு ஓடவேண்டி இருக்கிறது.

இதைத் தான் இத்தனை நாள், xxxxxxx சிக்னல் கக்கூஸில் கூட கிளியரா கிடைக்கும், பி.எஸ்.என்.எல். வேஸ்ட் என்று நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மற்ற நாடுகளில் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்றால், செல்ஃபோன் என்பது வெளியிடங்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. வீட்டுக்கு வந்துவிட்டால் லேண்ட்லைன் தான் என்ற புரிதல் அவர்களிடம் இருக்கிறது.

லேண்ட்லைனில், தரைவழி கம்பிகள் வழியாக இணைப்பு கொடுப்பதால், Radiation என்ற பேச்சே அதில் கிடையாது.

என் செல்ஃபோனுக்குத் தான் அழைப்பு வரும். ஒவ்வொருமுறையும் லேண்ட்லைனுக்கு மாற்றி அழைக்கச் சொல்லமுடியாது என்றால், நீங்கள் வீட்டில் இருக்கும் போது, உங்கள் செல்லுக்கு வரும் அழைப்புகளை லேண்ட்லைனிற்கு 'கால் டைவர்ட்' செய்துகொள்ளலாம்.

செல்ஃபோன் Radiationக்கு தீர்வு, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதல்ல. Radiation powerஐ, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் வைக்க வலியுறுத்துவதே. இதை பொதுமக்கள் நேரடியாகப் பார்த்து உணரமுடியாது என்பதால் கயவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் இருந்துகொண்டு, செல்ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள் என்று பயமுறுத்த மாட்டேன். ஆனால் உங்கள் தேர்வு எது என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

இன்னும் 2.0 பார்க்கவில்லை. அதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாகத் தெரியவில்லை.

******

Friday, February 28, 2014

”பழைய பன்னீர் செல்வம்” மொமெண்ட்


மூன்று வருடங்களுக்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவில் இருந்து வர்த்தகப் பிரிவுக்கு மாற்றலாகி வந்த போது, இனி தொழில்நுட்ப நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும் என்ற வருத்தம் லேசாக இருந்தது. அது வரை பணியாற்றியது, டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - DBA, மாறறலாகி வந்த இடம் - கஸ்டமர் ரிலேஷன் மேனேஜ்மெண்ட் - CRM. சரி, மாற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம் (வேற வழி!!!) என்ற மனநிலைக்கு வந்த பிறகு, புது இடத்துக்கேற்றவாறு மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்த, இதுவும் பிடித்தமானதொரு வேலையாக மாறிவிட்டது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஒரு சத்திய சோதனை. 

மாலை அலுவலகம் முடியப்போகும் நேரத்தில், தூத்துக்குடி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இயங்கிக் கொண்டிருந்த ஒரு டேட்டாபேஸ் படுத்து விட்டது போல. பழைய ஞாபகத்தில் என்னை அழைத்து விட்டார்கள். நானும் “இந்தமாதிரி இந்தமாதிரி.... நான் யூனிஃபார்ம்மை கழற்றி மூனு வருஷமாச்சு. இப்போ மறுபடி மாட்டுனா... அளவு சரியா இருக்காது, கரண்ட்ல யூனிஃபார்ம் போட்டு ட்யூட்டி பாக்குற ஆபீஸர் யாரையாவது கூப்பிடுங்க” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக “தீவிரவாதிகளை அடக்கனும்னா நீங்க தான் துப்பாக்கியை எடுத்துட்டு எல்லைக்கு வந்தே ஆகனும், உங்களால மட்டும் தான் இந்த மிஸனை கம்ப்ளீட் பண்ண முடியும். (என்ற அளவுக்கு இல்லாட்டியும்) யூனிஃபார்ம் இல்லேன்னா பரவால்ல, மஃப்டிலயே சார்ஜ் எடுங்க” என்று ஒரே பிடிவாதம் பிடித்தார்கள். பிறகு... ”ஏத்தி விட்டால், ஏறாதார் யாருமுண்டோ...?” நானும் சிக்கிட்டேன். 

கடைசியாக எஸ்.க்யூ.எல் கமாண்ட் அடித்துப் பார்த்தே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம், நமது மல்லுக்கட்டு எல்லாம் இயந்திரமயமான மனிதர்களோடு தான். செல்லமான செர்வர்களுடனும், பிரியமான டேட்டாபேஸ்களுடனும் பழக்கவழக்கம் சுத்தமாய் நின்று பலகாலம் ஆகிவிட்டது. அதுக்காக எடுத்துக் கொண்ட டாஸ்கை பார்த்து பயப்படவா முடியும். டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் கூகுள் டாட் காம் என்ற அதிநவீன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு  “குதிச்சுற்றா கைப்புள்ள...” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கியாயிற்று. “நாலு மணி நேரம், திணறத் திணற... சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, ரிமோட் டெக்ஸ்டாப்க்கு உள்ளேயே மூழ்கி தூத்துக்குடிக்கே போய்விட்டேன். சுத்தமாக மறந்து விட்டது என்றே நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள், ஆட்டோ ரீவைண்ட் செய்து தானாக மனத்திரையில் ஓட ஆரம்பித்து விட்டது. மூளையும் விரல்களும் தானாக கூட்டு சேர்ந்து அதுவாக வேலை பார்க்க நான் சும்மா வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது போல இருந்தது. 

ஒரு வழியாக சுயநினைவுக்கு வரும் போது, எந்தவித சேதாரமும் இல்லாமல் டேட்டாபேஸ் மீண்டும் பழைய நிலையை அடைந்து ஓடிக் கொண்டிருந்தது. “சக்சஸ்” என்று கத்தலாம் என பார்த்தால், இங்கே அலுவலகத்தில் ஒரு காக்கா குருவியைக் கூட காணோம். சரியென மானிடருக்கும், சிபியூவுக்கும் டாட்டா சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தாலும் “ஐயோ, இப்போ எதையாவது வாங்கனுமே!”னு துடிக்கிற கவுண்டமணி மனநிலை தான். இதற்கு முன்னர் இதை விட பலமடங்கு பெரிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறோம் தான். ஆனால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, சடாரென களத்தில் குதித்தவுடன், பழைய அனுபவம் எல்லாம் லைன் கட்டி மனத்திரையில் வந்ததும், “குமாரு ஹேப்பி அண்ணாச்சி!”. சரி, அதைப் பகிர்ந்து கொள்ள இணையத்தை விட்டா வேறு வழி? அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன். இனி நார்மலாகி விடுவேன்.

ஆங், இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நமக்குள்ள இருக்க வித்தக்காரன் எத்தனை வருசமானாலும் உள்ளே தூங்கிட்டு தான் இருப்பான் போல, தேவைப்படும் போது தானா விழுச்சுக்குறான். நாம தான் அப்படி ஒருத்தன் இருக்கதையே மறந்துட்டு “பே”னு சுத்திட்டு இருக்கோம்”. :)

******

Thursday, November 26, 2009

பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை

தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.



சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான்.  அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம். 
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா?  போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை. 


ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான்  பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.  சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு,  3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.


(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு : 
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான். 
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல்  3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx  (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.  
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால் 
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம். 
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய 
http://portal.bsnl.in/BSNLCCA/ThreeGRegistration.aspx ஐ அழுத்தவும்
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
       • Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
        • K 660i, K 610i, K530i
       • P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
        • Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
        • MotoRazor V9
  • Apple 3G I Phone • HTC
       • Blackberry Bold 9000        
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.

தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb