மூன்று வருடங்களுக்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவில் இருந்து வர்த்தகப் பிரிவுக்கு மாற்றலாகி வந்த போது, இனி தொழில்நுட்ப நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும் என்ற வருத்தம் லேசாக இருந்தது. அது வரை பணியாற்றியது, டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - DBA, மாறறலாகி வந்த இடம் - கஸ்டமர் ரிலேஷன் மேனேஜ்மெண்ட் - CRM. சரி, மாற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம் (வேற வழி!!!) என்ற மனநிலைக்கு வந்த பிறகு, புது இடத்துக்கேற்றவாறு மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்த, இதுவும் பிடித்தமானதொரு வேலையாக மாறிவிட்டது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஒரு சத்திய சோதனை.
மாலை அலுவலகம் முடியப்போகும் நேரத்தில், தூத்துக்குடி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இயங்கிக் கொண்டிருந்த ஒரு டேட்டாபேஸ் படுத்து விட்டது போல. பழைய ஞாபகத்தில் என்னை அழைத்து விட்டார்கள். நானும் “இந்தமாதிரி இந்தமாதிரி.... நான் யூனிஃபார்ம்மை கழற்றி மூனு வருஷமாச்சு. இப்போ மறுபடி மாட்டுனா... அளவு சரியா இருக்காது, கரண்ட்ல யூனிஃபார்ம் போட்டு ட்யூட்டி பாக்குற ஆபீஸர் யாரையாவது கூப்பிடுங்க” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக “தீவிரவாதிகளை அடக்கனும்னா நீங்க தான் துப்பாக்கியை எடுத்துட்டு எல்லைக்கு வந்தே ஆகனும், உங்களால மட்டும் தான் இந்த மிஸனை கம்ப்ளீட் பண்ண முடியும். (என்ற அளவுக்கு இல்லாட்டியும்) யூனிஃபார்ம் இல்லேன்னா பரவால்ல, மஃப்டிலயே சார்ஜ் எடுங்க” என்று ஒரே பிடிவாதம் பிடித்தார்கள். பிறகு... ”ஏத்தி விட்டால், ஏறாதார் யாருமுண்டோ...?” நானும் சிக்கிட்டேன்.
கடைசியாக எஸ்.க்யூ.எல் கமாண்ட் அடித்துப் பார்த்தே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம், நமது மல்லுக்கட்டு எல்லாம் இயந்திரமயமான மனிதர்களோடு தான். செல்லமான செர்வர்களுடனும், பிரியமான டேட்டாபேஸ்களுடனும் பழக்கவழக்கம் சுத்தமாய் நின்று பலகாலம் ஆகிவிட்டது. அதுக்காக எடுத்துக் கொண்ட டாஸ்கை பார்த்து பயப்படவா முடியும். டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் கூகுள் டாட் காம் என்ற அதிநவீன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு “குதிச்சுற்றா கைப்புள்ள...” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கியாயிற்று. “நாலு மணி நேரம், திணறத் திணற... சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, ரிமோட் டெக்ஸ்டாப்க்கு உள்ளேயே மூழ்கி தூத்துக்குடிக்கே போய்விட்டேன். சுத்தமாக மறந்து விட்டது என்றே நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள், ஆட்டோ ரீவைண்ட் செய்து தானாக மனத்திரையில் ஓட ஆரம்பித்து விட்டது. மூளையும் விரல்களும் தானாக கூட்டு சேர்ந்து அதுவாக வேலை பார்க்க நான் சும்மா வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது போல இருந்தது.
ஒரு வழியாக சுயநினைவுக்கு வரும் போது, எந்தவித சேதாரமும் இல்லாமல் டேட்டாபேஸ் மீண்டும் பழைய நிலையை அடைந்து ஓடிக் கொண்டிருந்தது. “சக்சஸ்” என்று கத்தலாம் என பார்த்தால், இங்கே அலுவலகத்தில் ஒரு காக்கா குருவியைக் கூட காணோம். சரியென மானிடருக்கும், சிபியூவுக்கும் டாட்டா சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தாலும் “ஐயோ, இப்போ எதையாவது வாங்கனுமே!”னு துடிக்கிற கவுண்டமணி மனநிலை தான். இதற்கு முன்னர் இதை விட பலமடங்கு பெரிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறோம் தான். ஆனால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, சடாரென களத்தில் குதித்தவுடன், பழைய அனுபவம் எல்லாம் லைன் கட்டி மனத்திரையில் வந்ததும், “குமாரு ஹேப்பி அண்ணாச்சி!”. சரி, அதைப் பகிர்ந்து கொள்ள இணையத்தை விட்டா வேறு வழி? அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன். இனி நார்மலாகி விடுவேன்.
ஆங், இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நமக்குள்ள இருக்க வித்தக்காரன் எத்தனை வருசமானாலும் உள்ளே தூங்கிட்டு தான் இருப்பான் போல, தேவைப்படும் போது தானா விழுச்சுக்குறான். நாம தான் அப்படி ஒருத்தன் இருக்கதையே மறந்துட்டு “பே”னு சுத்திட்டு இருக்கோம்”. :)
******
No comments:
Post a Comment