Friday, May 22, 2015

திருவாளர் பொதுஜனம்

பெருநகரத்து அரசாங்க அலுவலகங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு புழுக்கம் இருக்கும். அதுவும் கோடைக்கால மதியங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கசகசப்பிற்கும், எரிச்சலுக்கும் எந்தக் குறையும் இருக்காது. நகரின் மத்தியில் நெருக்கடியான ஏரியாவில் ஐந்தடுக்கு மாடி கட்டிடத்தில் நான்காவது தளத்தில் அமைந்திருக்கும், எங்களது அலுவலக அறை இன்னும் சிறப்பு வாய்ந்தது. முன்பு உயரதிகாரி இருந்த அறையாதலால் குளிர் சாதன வசதி எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு மேம்படுத்தப்பட்ட வேறு அறை வழங்கப்பட்டு குளிர்சாதன வசதியும் அவருடன் சென்று விட்டபடியால், வெறும் அறையில் மின்விசிறி மாட்டப்பட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. காற்று புக எந்த வசதியும் இல்லாமல் நல்லா கொதிக்கின்ற இட்லி கொப்பரைக்குள் அமர்ந்து வேலை பார்ப்பது போல் இருக்கும். 

அலுவலக விதிமுறைகள் இன்னும் சுவாரஸ்யமானவை. ஒரு கடிதத்தை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் முதலில் எங்கள் அதிகாரி சொல்வதை நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைலில் இண்டக்ஸ் செய்து அவர் சரி பார்ப்பதற்காக வைக்க வேண்டும். அதில் பிழைகள் ஏதும் இல்லையென்றாலும் ஓரிரண்டு வார்த்தைகளை மாற்றிப் போட்டு நம் உழைப்பை செம்மைப் படுத்திய பெருமிதத்தோடு எங்களைப் பார்ப்பார். நாங்களும் “அதிகாரி, அதிகாரி தான்” என்ற பாவனையோடு ஒரு நன்றி உதிர்க்கும் பார்வையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் கோப்பை சரி செய்து அவர் பார்வைக்கு வைப்போம். அதை மீண்டும் முதலிலிருந்து ஒரு முறை நிதானமாகப் படித்துப் பார்த்து, பின் பேனா சரியாக எழுதுகிறதா என்று அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தாளில் சிறு கிறுக்கல் கிறுக்கிப்பார்த்து விட்டு, அதில் திருப்தியடைந்தவராய் கோப்பில் தனது பொற்கரங்களால் கையெழுத்திட்டு விட்டு தலைமையிடத்துக்கு அனுப்பச் சொல்வார்.

இனி தான் இருக்கிறது தொழில்நுட்பம். கையெழுத்தான லெட்டரை ஸ்கேன் செய்து தலைமையிடத்துக்கு இமெயிலில் அனுப்ப வேண்டும். அங்குள்ளவர்கள் அலுவலக மின்னஞ்சல்களைப் பார்ப்பதே குதிரைக்கொம்பு. எனவே உடனுக்குடன் தகவல் பார்வையில் படும் பொருட்டு ஒரு ஃபேக்ஸ் காப்பியும் அனுப்ப வேண்டும். அரசாங்க அலுவகத்து ஃபேக்ஸ் மிசின்கள் வேலை செய்வதெல்லாம் தெய்வச் செயல் தான். ஒன்று அணைத்து வைக்கப்பட்டிருக்கும், இல்லை பேப்பர் அவுட் ”சிவப்பு” மிணுங்கிக் கொண்டிருக்கும். அதை சரி செய்ய அங்குள்ளவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, பின் அவர்கள் அதை சரி செய்த பின் ஃபேக்ஸ் அனுப்பி  அதை உறுதிப்படுத்த மீண்டும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டும். அது போக “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால் அரசாங்க அலுவகங்களில் இமெயில், ஃபேக்ஸ் எல்லாம் நிரந்தர தகவல் தொடர்பு முறை இல்லை, அவசரத்துக்குத் தான். எனவே ஃபேக்ஸ் அனுப்பிய லெட்டரை ஒரு ஜெராக்ஸ் எடுத்து நகலை எங்களது அலுவலக கோப்பில் வைத்து விட்டு ஒரிஜினலை பதிவுத்தபால் தபால் மூலம் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். பிறகு அதற்கான “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் போட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். 

இந்த சுலபமான நடைமுறையெல்லாம் ஒரே கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருக்கும் எங்களது கிளை அலுவலகத்திலிருந்து, அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கும் தலைமையிடத்துக்கு அனுப்புவதற்கு மட்டுமே. வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்கு ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் கூண்டிற்குள் உள்ள கிளிக்கு தினமும் பச்சை மிளகாய் வைத்து அதனைப் பேசப்பழக்குவது போல, எழுநூறு என்னூறு பக்க செயல்முறைக் கையேடு இருக்கிறது. அதன்படி, அது அது, அதன் அதன் செய்நேர்த்தியோடு நடைபெற வேண்டும். 

இப்படியாய் வியர்வை ஊற்றாய் கொட்டிக் கொண்டு, அரும்பாடுபட்டு அரசு இயந்திரத்தை சுழல வைத்துக் கொண்டிருந்த சுபயோக சுபதினமான ஒரு விசாலக்கிழமை நன்பகல் மணி ஒன்றரை - மூன்று கொழுத்த இராகு காலத்தில் திருவாளர் பொதுஜனம் எங்கள் அலுவலகத்திற்குள் காலடியெடித்து வைத்தார்.  வைத்தாரென்ன... அறைக்குள் நுழையும் போதே, கண்ணாடிக் கதவைத் திறந்தவர் தனது செல்ஃபோனின் ரிங் டோடான ”வந்தே மாதரம், ஜெய வந்தே மாதரம்” ஒலிக்கவும் ஒரு நொடி பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தவர் பின் சுதாரித்துக் கொண்டு “மன்னிக்கனும், சைலண்ட் மோடில் போட மறந்துட்டேன்” என்று கதவில் வைத்திருந்த கையை தன் கழுத்தில் ”டேக்” போட்டு தொங்கப்போட்டிருந்த செல்ஃபோனை நோக்கிக் கொண்டு சென்றார். எங்கள் அறைக்கதவும் அரசாங்க ஊழியராயிற்றே... இரண்டு நொடி அதே நிலையில் நின்று யோசித்து விட்டு பின் தன்னுடைய நெற்றியில் ”டோர் க்ளோசர்” மாட்டியிருக்கிறதே என்ற சுயநினைவு வந்து படாரென சாத்தத் துவங்கியது. அது சென்ற வேகத்தில் நமது பொதுஜனத்தை இரண்டு அடிக்கு வெளியே தள்ளி சமர்த்தாக மறுபடி பூட்டிக்கொண்டது. எது சொன்னாலும் குறைந்தது மூன்று முறை செயல்முறை விளக்கம் கொடுத்தால் மட்டுமே “என்ன, அப்படியா!” என்பது போல் திரும்பிப் பார்க்கும் எங்கள் அலுவலக சிப்பந்தியே அறைக்கதவின் இந்த செயல் கண்டு “படாரென” பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டார். அப்போதாவது இன்று ஒரு அசாதாரணமான நாள் என்று நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ம்ச்ச்... விதி வலியது போலும், துர்சகுணத்தை உணர்ந்து கொண்டேனில்லை.

சிப்பந்தி வேகமாக சென்று அவருக்கேயுரிய பிரத்யேக முறையில், பாதத்தால் தடுப்பு ஏற்படுத்தி, அறைக்கதவின் ஆற்றலை மட்டுப்படுத்தி, நிலை குலைந்திருந்த இராமசாமியை உள்ளே அழைத்து வந்தார். 
“சார், எத்தனை நாளா சொல்றேன், இந்த டோர் க்ளோசரை கழட்டி விட்றலாம்னு.. இப்ப பாருங்க ஐயாவை கழுத்தப் பிடிச்சு நாமே வெளியே தள்ளுனா மாதிரி ஆகிருச்சு”

அவர் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் அரசாங்க அலுவலக பகவத் கீதையான “ஸ்வாமீஸ் கைடில்” தலைமை அலுவலகத்தின் முன்னனுமதியின்றி “டோர் க்ளோசரின்” ஸ்க்ரூவில் திருப்புளியை வைப்பதற்கு எந்த சரத்தும் இடம் கொடுக்காததால், அறைக்கதவை டோர் க்ளோசரிடமிருந்து விவாகரத்து செய்யும் விழா நிலுவையில் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தும் புதிதாய் ஒருவர் வந்திருக்கிறார் இல்லையா, அவர் முன் தான் ஒரு சிப்பந்தி மட்டுமல்ல, தவறென்றால் அலுவலரேயானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் ”தோழர்”  என்ற ஜபர்ஜஸ்த்தை காட்ட வேண்டுமென்ற முனைப்பு.
“ஏ, சும்மா இருப்பா... நீ வேற !” என்று அவரது அறச்சீற்றத்தை தற்காலிகமாக அமர்த்தி விட்டு, 
“ஐயா, ஒன்னும் அடிபடலியே... பார்த்து வரக்கூடாதா” என்று பொதுவாகத் தான் கேட்டேன். அதற்கு மையமாய் ஒரு பார்வையை மட்டும் வீசி விட்டு, தனது செல்போனை கழுத்துப் பட்டையிலிருந்து விடுவித்து, இரண்டொரு சங்கேத குறியீடுகளை செலுத்தி மௌன நிலைக்கு அனுப்பி விட்டு, மீண்டும் தாலிக்கொடியில் மாட்டிக் கொண்டு செருமியபடி பேசத்துவங்கினார் பொதுஜனம்.

”வணக்கம், தகவலறியும் சட்டத்தின் படி, எனக்கு ஒரு தகவல் தெரியனும்”
“நல்லதுங்கய்யா... அதற்கான அலுவலகம் மேலே ஐந்தாவது மாடில இருக்கு. அங்க பி.ஆர்.ஓ இருப்பார், அவரப்பாருங்க”
“இதான், நாடு நாசமாப் போறதுக்கான காரணமே இதான்... உங்களோட சேர்த்து பதிமூனு பேர். எனக்குத் தெரியாது, இங்க கேளு, அங்க கேளுன்னு ஒரு அலக்கழிப்பு. ஏன் சார், நான் தெரியாமத் தான் கேக்குறேன் அரசாங்கம் உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் சம்பளம் கொடுக்குது, எனக்கு எதுவும் தெரியாது வெளியே போன்னு கைய விரிக்குறதுக்கா?

அறைக்கதவு சம்பவத்தால் முதல் ஓவர் “மேட்-இன்” ஆகிவிட்டதே என்ற கவலையில் இருந்திருப்பார் போல, அடுத்த ஓவர் சிக்ஸரா வெளுக்கிறார்.

“ஐயா, நீங்க சொல்றது ஓகே தான்.. ஆனாலும் அதுக்குன்னு ஒரு அதிகாரி இருக்கார்ல , சரியா அவரப்போய் பார்த்தா தானே தேவையான தகவல் கிடைக்கும்”
“ஸீ... மிஸ்டர்  கவர்மெட் செர்வண்ட், இதெல்லாம் நல்லா பேசுறீங்க, உங்க ஆஃபிஸில் இதுவரை மொத்தம் எத்தனை ஃபைல்ஸ் உபயோகிச்சிருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட். இது தான் என்னோட ஸிம்பிள் க்வஸ்டீன். அதை சொல்றதுக்கு இவ்ளோ அலைக்கழிக்கிறீங்களே !”

நான் நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஒரு 360 டிகிரி வட்டம் போட்டு பார்த்தேன். பத்து அடி உயரத்துக்கு நாலா பக்கமும் கோப்புகள்.  இந்த நான்காவது மாடியில் மட்டும் இது மாதிரி சுமார் 20 அறைகள். அலுவலகத்திற்கு மொத்தம் ஐந்து தளங்கள்... ஐந்து பெருக்கல் இருபது, சுமார் நூறு அறைகள், ஒவ்வொரு அறை முழுதும் இவ்வளவு கோப்புகள்... அலுவலகம் 1996ல் இருந்து இந்த கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போ 2015, மொத்தம் பத்தொன்பது வருடம் உபயோகப்படுத்தின மொத்த கோப்புகளையும் தெரிந்து கொண்டு திருவாளர். பொதுஜனம் என்ன ஆராய்ச்சி செய்யப்போகிறார் என்று எனக்குத் தீராத ஆர்வம் பற்றிக்கொண்டது. நாக்கில சனி நர்த்தனமாடி விட, வாய்திறந்து கேட்டு விட்டேன். 

“ஐயா, இவ்ளோ ஃபைல் லிஸ்ட் வச்சு என்ன பண்ணபோறீங்க”
“மிஸ்டர்... ஆர்.டி.ஐ ல அப்ளிகண்ட் ரீசன் ஃபார் ஆஸ்கிங் டீடைல்ஸ் கொடுக்கவேண்டியதில்லை, தெரியும் தானே !”
இதெல்லாம் நல்லா தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் யாரிடம் கேட்க வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.
”சரிங்கய்யா... நீங்க பி.ஆர்.ஓ வைப் பாருங்க, ப்ளீஸ்!”
“முடியாது சார்... எனக்கு தகவல் தெரியாம இங்கே இருந்து நகல மாட்டேன்”

அடுத்த பாலும் ஃபுல்டாஸா போச்சா. பவுண்டரிக்கு தூக்கி தூக்கி அடிக்கிறார். நான் மாட்டிக் கொண்டு விழிப்பதில், உடனிருக்கும் சிப்பந்திக்கு அப்படியொரு சந்தோஷம். அறையின் ஈசானி மூலையில் மூன்று செங்கோனங்கள் எப்படி சந்திக்கின்றன என்று அளவெடுத்துக் பார்த்துக் கொண்டே இருந்தார். என் பக்கம் தலையை சாய்க்கக் கூட மாட்டேன் என்கிறார். சரி, நம் வயிற்று வலிக்கு நாமே தான் கசாயம் காய்ச்ச வேண்டும் போலிருக்கிறது.

“அது சரிய்யா, ஆர்.டி.ஐ. ல தகவல் கேட்க பத்து ரூபாய்க்கு பி.ஓ எடுக்கனுமே, எடுத்துட்டு வந்துர்றீங்களா?
பனிரெண்டு எலிகள் தொட்டுப்பார்க்காத மசால் வடையை பதிமூன்றாவது ஆளாய் வந்த நான் மட்டும் ஏன் கடித்துத் தொலைக்க வேண்டும். அதன் பெயர் தான் விதி.
பேட்ஸ்மேனுக்கு சாதகமாய் எல்லா விதிகளும் மாற்றப்பட்ட வேளையிலும், கஷ்டப்பட்டு வீசும் பவுன்சருக்கு கொஞ்சம் மதிப்பிருக்கத் தான் செய்கிறது. மிஸ்டர் பொதுஜனம் இந்தக் கேள்விக்கு லேசாக பம்மினார் (என்று நானாக நினைத்துக் கொண்டேன்)
“ஓ, அப்படியா... சரி இதப்பிடிங்க”

என் கை ஓங்கி இருக்கின்ற தைரியத்தில், அவர் கிளம்பிச் சென்றால் போதும் என்ற ஆவலாதியில் அவர் கொடுத்த அந்த வஸ்துவை “கை” நீட்டி பெற்றுக்கொண்டு என்னவென்று பார்த்தேன். ஜோலி முடிந்தது என்று அப்போது தெரியவில்லை.

“சார்... பி.ஓ இல்லாட்டி கேஷா கூட கொடுக்கலாம்ல, அதான்.... இப்ப சொல்லுங்க, உங்க ஆஃபிஸ்ல மொத்தம் எத்தனை ஃபைல்?”
“ஐயா, என்கிட்ட எதுக்கு பணம் கொடுக்குறீங்க.. இந்தாங்க முதல்ல பிடிங்க.. பி.ஆர்.ஓ வைப் பாருங்க, தயவு செய்து இப்போ இடத்தை காலி பண்ணுங்க”
“என்ன சார், கவர்மெண்ட்ல வேலை இருக்கு, கை நிறைய சம்பளம், ஒரு வேலையும் கிடையாது, காலாட்டிட்டே சாகுற வரை பென்சன்... இதுல பப்ளிக்கை வேற இன்சல்ட் பண்ணுவீங்க... கவர்மெண்ட் மக்களுக்கு செய்றதை குட்டிச்சுவராக்குறதே உங்கள மாதிரி அரசாங்க ஊழியருங்க தான். இப்போல்லாம் காலம் முன்ன மாதிரி இல்ல சார்..  பப்ளிக் அவேர்னஸ் வந்திருச்சு சார். என்ன நடக்கும் தெரியுமில்ல”
“ஐயா, நான் ஒரு சாதாரண குமாஸ்தா.. எனக்குன்னு சில வரைமுறை அரசாங்கம் விதிச்சிருக்கு. அதை மீறிய விஷயத்தை என்கிட்ட கேட்டா என்ன சொல்ல... என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க, இப்போ முதல்ல இடத்தை காலி பண்ணுங்க”

ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக ஏதோ சவால் விட்டபடி கிளம்பிச் சென்று விட்டார். 

சரியாக ஒரே வாரம், அடுத்த விசாலக்கிழமைக்கு அலுவலம் முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. எங்களது அலுவலகத்தில் ஒருவர் லஞ்சம் வாங்குற நேரடி வீடியோ க்ளிப்பிங் இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸப் எல்லாத்துலயும் சுத்திட்டு இருக்கிறது என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுகொண்டிருக்கிறார்கள். இதில் வரலாறு காணாத விதமாய் ஒரே வாரத்தில் ஒன்னரை லட்சம் வியூஸ் என்று ஆச்சர்யமாய் வேறு பேசிக்கொண்டார்கள். நானும் தேமே என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.  மதியத்துள் விஷயம் ஸ்படஷ்டமாக விளங்கி விட்டது. ஒரு காப்பி என் மொபைல் வரை வந்துவிட்டது, “இந்த கயவனை செருப்பாலடிக்க, ஐந்து பேருக்கு ஷேர் செய்யுங்கள்” என்ற தலைப்போடு. திருவாளர் பொதுஜனம் வேலையைக் காண்பித்து விட்டார்.  அன்று நடந்த அனைத்தையும் கழுத்தில் தொங்கவிட்டிருந்த மொபைல் மூலமாக படம் பிடித்து, வீட்டில் உட்கார்ந்து நல்லா எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து நான் பத்து ரூபாய் லஞ்சம் வாங்குவது போல ஐம்பது செகண்ட் படமாக ஓட்டி விட்டார். இதில் எனது முகத்துக்கு இரண்டு முறை டைட் க்ளோசப் வேறு. சாயங்காலம் வீட்டிற்கு கை நிறைய சஸ்பென்ஸன் ஆர்டரோடு சென்று கொண்டிருக்கிறேன். வாழ்க தகவலறியும் உரிமை, வாழ்க திருவாளர் பொதுஜனம், வாழ்க வாட்ஸப் புரட்சிப் போராட்டம் !

******

Thursday, May 21, 2015

வெல்டன் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன் - 36 வயதினிலே


திருமணத்திற்கு முன் தனித்துவமாக சிறந்து விளங்கும் ஒரு பெண், திருமணத்திற்குப் பின் குடும்பம், குழந்தை என்று சிறு வட்டத்திற்குள் அமிழ்ந்து, தன் சுயத்தை இழந்து விட்டு வாழ்கிறாள். பின் தனது சுயமரியாதைக்கு இழுக்கு வரும் பொழுது எவ்வாறு அவள் தன்னை மீண்டும் கண்டெக்கிறாள் என்பதை பிரச்சார தொனியோ, ஒரே பாடலில் உலகப்புகழ் அடைவது போன்ற குருட்டு அதிர்ஷ்ட நிகழ்வுகளோ இன்றி இயல்பாக சொல்கிறது வசந்தியின் வாழ்க்கை, அல்லது “36 வயதினிலே” என்ற திரைப்படம்

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த நட்சத்திர அந்தஸ்த்தை சட்டென உதறிவிட்டு குடும்பத்தலைவியாக மாறிய ஜோதிகா, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையினூடே நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் “36 வயதினிலே”. வேலைக்குச் செல்லும் மத்தியதரவர்க்கத்து பெண்களின் பிரதிநிதியாய் ஜொலித்திருக்கிறார் ஜோ. பெண்களை மையப்படுத்தி அரிதாக வரும் சில படங்களில் கூட குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கும் அனைவரும் அவர்களை கொடுமைப்படுத்துவது போலவும், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு தியாகத்திருவுருவாய் இருக்கும் நாயகி, ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து சீறுப்பாய்வது போன்ற மிகையுணர்ச்சிப் பிரதிபலிப்புகளையே பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் “36 வயதினிலே”வில் இயல்பான காட்சியமைப்புகளோடு வசந்தியின் வெற்றிக்கு உடன் இருப்பவர்களும் துணை நிற்பது போன்ற வடிவமைப்பு, படத்திற்கு உயிரோட்டத்தையும், நாம் அன்றாடம் நமது பக்கத்து வீடுகளில், நமது சுமூகத்தில் நடப்பது போன்ற உணர்வையும் தந்திருக்கிறது.

கணவன், குழந்தை, குடும்பம் இதைத்தவிர எதைப்பற்றியும் யோசிக்காமல் கண்களையும், மனதையும் கட்டி வைத்திருந்தவளுக்கு தன்னை விட்டுவிட்டு தனது கணவனும், மகளும் மட்டும் வெளிநாடு சென்று வாழ முடிவெடுக்கும் போது தான் தோன்றுகிறது... “இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் நான் இவர்களுக்கு என்னவாக இருந்திருக்கிறேன்? கணவனுக்கு மனைவியாக, ஒரே மகளுக்குத் தாயாக நான் இனி இவர்களுக்குத் தேவையே இல்லையா ? அப்படியென்றால் நான் இத்தனை நாள் இவர்களுக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் தான் என்ன ?” இந்த கேள்விகள் தாம் அவள் தன்னை தனக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்க்கான விடைகளைத் தேடச் சொல்கின்றன. அதற்கு உறுதுணையாக, காபி போட்டுக் கொண்டு வந்து தரும் மாமனாராகவும், அவளை நம்பி தன் வீட்டு கல்யாணத்திற்கான காய்கறிகளை ஆர்டர் செய்யும் நகைக்கடைக்காரராகவும், அலுவல சிக்கல்களில் அவள் பக்கமிருந்து உற்சாகமூட்டி உதவி செய்யும் உடன் பணிபுரியும் அலுவலராகவும், மொட்டை மாடித்தோட்டம் என்ற அவளது ஐடியாவிற்கு துணை நிற்கும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகவும்,  சக மனிதர்கள் எப்போதும் அவள் உடனிருக்கிறார்கள். அவர்களின் துணைகொண்டே அவள் சாதனை புரிகிறாள். 

சில மாதங்களுக்கு முன், நானும் எனது மனைவியும் இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களது குழந்தை வளர்ப்பில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி அவர் பணிபுரிந்த கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவிற்கு மாணவர்கள் பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்தார். அப்போது மாணவர்கள், தங்களை சுய அறிமுகம் செய்து கொள்ளும் போது பெரும்பான்மையினர் தங்கள் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்கின்றனர் என்று பெருமை பொங்க கூறியிருக்கின்றனர். அந்த மாணவர்களில் என் மனைவி ட்யூட்டராக இருக்கும் பிள்ளைகளும் அடக்கம். அதில் மூன்று மாணவ, மாணவிகளின் அம்மா வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தலைவியாகத் தான் இருந்தனர் என்பது என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். எனவே பிறகு அவர்களை தனித்தனியாக அழைத்து ஏன் தங்கள் அம்மா வேலைக்கு செல்வதாகக் கூறினர் என்று கேட்டால், சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே பதிலைத் தான் கூறியிருக்கின்றனர் “ எல்லா ஸ்டூடன்ஸ்க்கும் முன்னாடி அம்மா வீட்டுல தான் இருக்காங்கன்னு சொல்றதுக்கு அவமானமா இருந்துச்சு மேம், அம்மா வொர்க் பண்றாங்கன்னு சொன்னாத்தான் கௌரவம்” என்பது தான் அவர்களின் பதில். இந்த மாணவர்களில் யாரேனும் ஒருவருடைய தாய், திருமணத்திற்குப் பிறகு தனது குழந்தைக்காக வேலையை விட்டவராகவும் இருக்கக்கூடும். அவர் தனது மகனின்/மகளின் இந்த பதிலைக் கேட்க நேர்ந்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும் ?.  சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு தாங்கள் பள்ளியிலிருந்து வரும் போது அம்மா வீட்டில் இருந்து தங்களை வரவேற்க வேண்டும். தங்கள் கூடவே இருந்து தங்களை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளின் எண்ணவோட்டம் எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள். அவர்களுக்கு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்கள் தாய் ஒரு ”சாதாரண” குடும்பத்தலைவி என்று சொல்லிக்கொள்ள அவமானமாக இருக்கிறது. தங்கள் தாய் இந்த துறையில், இந்த வேலையில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வதில் தான் அவர்களுக்க்குப் பெருமை. 

இந்த தலைமுறையில் பிரதிபலிப்பாய் தான் வசந்தியின் மகளும் இருக்கிறாள். அவளுக்குப் பெரிய பெரிய கனவுகள் இருக்கிறது. தன் தாய் தன் அளவு ஈடுகொடுத்து வரமுடியாதவளாய் இருக்கிறாள் என்று அவள் மீது ஆற்றாமை இருக்கிறது. அது சமயங்களில் கோபமாய், உதாசீனமாய் வெளிப்படுகிறது. ஒரு சமயம் வசந்தி “உனக்காகத் தானேடீ நான் என் கனவுகளையெல்லாம் விட்டுட்டு இருக்கேன்” என்று கூறுவதற்கு “உன் சோம்பேறித்தனத்திற்கு என்னை காரணம் சொல்லாதே” என்று அவளால் உடனே பதில் சொல்லி வசந்தியை நிலைகுலைய வைக்கவும் முடிகிறது. அதே போல இக்கட்டான சூழ்நிலையில் வசந்தி தங்களோடு வெளிநாட்டில் வந்து தங்கிவிட வேண்டும் என்று அவளது கணவன் வற்புறுத்தும் போது தங்கள் மகளையே துருப்புச்சீட்டாக உபயோகிக்கிறான். ஆனால் வசந்தி சொல்லும் பதிலைக் கேட்டு அவள் மகளால் சமாதானம் ஆகவும் முடிகிறது. பின் தன் தாய் சாதித்து விட்டதை பெருமை பொங்க உலகத்துக்கு தெரிவிக்கவும் முடிகிறது.

வசந்தியின் கணவனான தமிழ்ச்செல்வன், ஒட்டுமொத்த இந்திய நடுத்தரவர்க்கத்து ஆண்களின் பிரதிநிதி. எப்படியாவது முட்டிமோதி அன்றாட பஞ்சப்பாட்டுகளின் கெடுபிடிகளில் இருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற வெறி அவனிடம் இருக்கிறது. அவனது கனவுகள் நொறுங்கும் வேளையில், பகடைக்காயாக மனைவியை உருட்டுகிறான். தனது தோல்விகளுக்கு அவளைக் காரணமாக்குகிறான். மனைவியை சுதந்திரமாக சிந்திக்கவும் விடாமல், தான் நினைப்பதை அவளை செய்ய வைத்து விட்டு பின் அவள் எதற்கெடுத்தாலும் தன்னை எதிர்பார்த்து நிற்கும் போது அதற்காகவும் சினம் கொள்கிறான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், மத்தியவர்க்கத்து கணவன்மார்கள் எல்லோருக்குள்ளும் அவனது சாயல் இருப்பதைக் காணலாம்.  வழமையாக, பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்களில் நாயகனின் கதாப்பாத்திரம் தொய்வாகவோ அல்லது கொடூரமாகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அவ்வாறு இல்லாமல், தன் மகளைத் தன் பக்கத்து நியாயங்களை நம்ப வைப்பவனாக, அவளது நல்ல எதிர்காலத்திற்காக தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்து செல்பவனாக நல்ல தந்தையாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் தவறு செய்யும் இடங்களில் கண்களைத் தாழ்த்தி குற்றயுணர்ச்சியோடு அதே சமயம் மனைவியின் சொற்களை ஏற்காமல் நிலைகுலையும் இடங்களில் இரகுமான் நன்றாக நடித்திருக்கிறார். நாயகன் கதாப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வும் கூட.

சமூக ஊடகங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் என்னென்ன சலனங்களை, பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது இத்திரைப்படம். வழக்கமாக, ஃபேஸ்புக்கில் தான் திரைப்படங்களை கிண்டல் செய்வார்கள். அதனால் இயக்குநருக்கு ஃபேஸ்புக் பயனர்கள் மீது இருக்கும் கோபத்தையும் லேசாக காட்டியிருக்கிறார். மொத்ததில், தன் தனித்திறமைகளை மறந்து வீட்டு வாழ்க்கைக்குள் முடங்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான திருமதிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், மனம் நிறைந்த உற்சாகம் கொடுக்கும் வகையிலும் 36 வயதினிலே வென்றிருக்கிறார் மிஸஸ். வசந்தி தமிழ்ச்செல்வன். 

******

Thursday, May 14, 2015

வாசிப்போர் களம் - சித்திரைத் திருவிழா

அலுவலகத்தின் வாசிப்போர் களம் அமைப்பின் இந்த மாத கூட்டம், கடந்த வெள்ளியன்று (08/05/2015) மாலை நடைபெற்றது. தோழர் கருப்பையா அவர்கள், இராமாயணத்திலுள்ள பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான “மீட்சி” புத்தகத்தையும், தோழர் சங்கையா அவர்கள் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள். சுருக்கமாகவும், அதே நேரம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் வகையிலும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இருவரின் உரையும். தோழர்களுக்கு வாழ்த்துகள் !. 

மேலும் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சிக்காலத்தில் சித்திரை மாதத்தில் மதுரையில் சித்திரைத்திருவிழா எவ்வாறு பெருநிகழ்வாக உருப்பெற்றது என்ற தகவல்  பரிமாற்றம் சுவையானதாக இருந்தது. மதுரை மாநகரிலுள்ள மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரபலப்படுத்தப்பட்டது தான் “அழகர் ஆற்றில் இறங்கும் விழா”. சுற்று வட்டாரத்திலிருக்கும் கிராம மக்கள் வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து செல்வது சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம். பலர் அழகர் கோவிலில் இருந்து அழகர் கிளம்பி, வைகை ஆற்றில் இருங்கி, பின் திரும்பி அழகர் கோவிலுக்கு செல்வது வரை சாமி கூடவே பயணம் செய்த பின்னே தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவர். அந்த நேரங்களில் மதுரை நகரம், சுற்றியுள்ள ஊர்களுக்கு மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக இருக்கும். முதலில் தேணூர் கிராமத்தில் தை மாதத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெற்றது. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தான் அந்த நிகழ்வை, விவசாயிகள் ஓய்வாக இருக்கும் சித்திரை மாதத்தில், சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியான பெரிய ஊரான மதுரையில் “சித்திரைத் திருவிழாவாக” மாற்றி அமைத்துள்ளனர். இன்றும் சித்திரைத் திருவிழா என்பது மதுரை மக்களுக்கு ஒரு விழா மட்டுமல்ல, மிகப்பெரிய உள்ளூர் வர்த்தகத்துக்கான தளம்.  

வாசிப்போர் களம் சார்பாக வெளியிடப்பட்ட முதல் நூலான, தோழர் சங்கையா எழுதிய “இலண்டன், ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியையும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் புனைவு சார்ந்த நூல்கள் மட்டுமல்லாது அறிவியல், சட்டம், பொது அறிவு தொடர்பான நூல்களைய் பற்றிய விவாதங்களையும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்க “வாசிப்போர் களம்” மூலமாக இன்னும் சீரிய முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில், வாசிப்போர் களம் அமைப்பை பதிவு செய்வது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

******
நன்றி: வாசிப்போர் களம் : http://vasipporkalam.blogspot.in/2015/05/08052015.html

Friday, May 8, 2015

பந்தயக்குதிரை

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் நுழையும் போது மணி நான்கு. உடனே பேருந்து கிடைத்தால் எப்படியும் விடிவதற்குள் ஊருக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கொண்டான். எதிர்பார்த்தது போல, பேருந்து நிலையத்தில் எந்தவித அசம்பாவிதத்திற்கான அறிகுறியும் இல்லை. தொலைக்காட்சி செய்தி சேனல்களின் அசுர வாய்க்கு எப்போதும் பெருந்தீனி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. சிறு சலசலப்பைக் கூட பூதாகரமாக்கி பிரளயம் போல் பிரகடனப்படுத்தி விடுகின்றனர். அதையொட்டிய வதந்திகளுக்கு கைகால் முளைத்து ஊரெங்கும் பரவி விடுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளின் எண்னிக்கையை குறைத்திருக்கிறார்களா இல்லை இந்த நேரத்து வழமையான கூட்டம் தானா என்று தெரியவில்லை. எல்லாப்பேருந்துகளும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு எங்கிருந்து தான் இந்த பதற்றம் தொற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் அவசரம். சிறு சலனங்கள் கூட இவர்களின் பதற்றத்தினாலேயே பிரளயமாய் வெடித்துக் கிளம்பி விடுகிறது.

திருநெல்வேலி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்ததும், அங்கே ஒரு பெருங்கூட்டமே பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையம் முழுக்க மனிதத் தலைகள் தாம். எல்லோருக்கும் ஏதோ பயண அட்டவணை இருக்கிறது. எந்தெந்த ஊருக்கோ தினமும் இலட்சக்கணக்கான மக்கள் சென்று கொண்டே தான் இருக்கிறார்கள். கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனதேயொழிய பேருந்து எதுவும் வந்தபாடில்லை.

அரைமணிநேரக் காத்திருப்பிற்குப் பிறகு கண்ணில்பட்ட பேருந்து அதன் இடத்தில் வந்து நிற்பதற்குள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலரும் முண்டியடித்து ஏதேதோ சாகசங்கள் செய்து தங்களுக்கான இருக்கைகளை தேர்ந்ததை வியப்புடன் பார்த்தபடி நின்றான். ம்கூம்… இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவனாய் தனியார் பேருந்து நிலையம் பக்கம் நிலைமை எவ்வாறு இருக்கிறது எனப்பார்க்க வெளியே வந்து பார்த்தால், தனியார் பேருந்துகளும் துக்கத்தில் பங்கு கொள்கிறார்கள் போல, ஒரு பேருந்து கூட இயங்கவில்லை. மறுபடியும் பேருந்து நிலைய முகப்பிற்கு வந்த போது வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்தை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருந்தனர். பார்த்தால்… திருநெல்வேலி செல்லும் பேருந்து. வேகமாகச் சென்றால் தன்னாலும் இடம் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கைக் கீற்று ஒளிர பேருந்தை நோக்கி ஓடினான். ஒருவழியாக மூன்று பேர் அமரும் இருக்கையின் ஜன்னலோரத்தைப் பிடித்து விட்டான். அப்பாடா…. இதற்கு முன் இப்படி ஓடி எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்ற நினைப்பு வர, மூச்சு முட்டியபடி மெல்லமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். சற்று நேரத்திற்கு முன் தான், மக்களின் அவசரம் குறித்து சலித்துக்கொண்டதும், வாய்ப்பு வரும் போது தன்னிச்சையாய் தானும் அவ்வாறு தான் செய்தோம் என்ற நினைப்பும் கலவையாய் தோன்ற லேசாக பெருமூச்செறிந்து கொண்டான். கண் இமைக்கும் நேரத்திற்கெல்லாம், நிறைசூலியாய் உருமாற்றம் கொண்ட பேருந்து அடுத்த சில நிமிடங்களில் கிளம்பியது.

அலுவலகத்தின் வருடாந்திரக் கூட்டத்திற்காக தலைமையிடமான சென்னைக்கு, திருநெல்வேலியில் இருந்து நேற்று அவனோடு சேர்த்து மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தார்கள். வழக்கமான பயண அட்டவணைப்படி இன்றும், நாளையும் மீட்டிங்கை முடித்து விட்டு நாளை இரவு ரயிலில் செல்வதாகத் தான் முன்பதிவு செய்திருந்தார்கள். வழக்கு ஒன்றில் முதல்வருக்கு எதிராக தீர்ப்பு வந்து அவர் கைதாகிவிட்டபடியால், பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதாகக் கூறி கூட்டத்தை இன்று மதியத்தோடு ரத்து செய்து விட்டார்கள். நாளை இரவு தான் முன்பதிவு செய்திருப்பதால் அவனுடன் வந்தவர்கள், சென்னையிலேயே தங்கியிருந்து விட்டு நாளை வருவதாகக் கூறிவிட்டனர். வேலை இல்லாத இடத்தில் வெறுமனே அமர்ந்திருக்க அவன் மனம் ஒப்பவில்லை. கூடடையும் நினைப்பு வந்துவிட்டால் போதும், பறவையின் நினைப்பு முழுவதும் கூட்டை நோக்கியே தான் இருக்கும். கிடைக்கும் பேருந்தைப் பிடித்து இன்றே தான் ஊர் செல்வதாகவும், மற்றவர்கள் மெதுவாக வரட்டும் எனக்கூறிக் கிளம்பி விட்டான். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தினமும் இலக்குகளின் பின் துரத்திக் கொண்டோடும் குதிரைப் பந்தயத்திலிருந்து இரண்டு நாள் எதிர்பாரா விடுப்பு கிடைத்திருக்கிறது என்று மனம் மகிழ்ந்திருக்கவே வேண்டும், ஆனாலும் அவனால் அங்கு இருப்புக் கொள்ள முடியவில்லை. அடுக்கடுக்கடுக்காய் பணிச்சுமை காத்திருக்கையில் இரண்டு நாள் வெட்டியாக அறையில் முடங்கிக் கிடக்க மனம் வரவில்லை. விரைவில் வீட்டுக்குச் சென்றால் அடுத்த வாரத்திற்கான தயாரிப்புப் பணிகளை செய்து வைக்கலாம் என்ற எண்ணம். பெரும்பான்மையான நேரத்தில் இப்படித் தான். வேலையை நினைத்துக் கொண்டு பொழுதுபோக்கிற்கும் மனம் செல்லாது. அதே நேரம் வேலை செய்யும் பாவனையில் மடியில் அலுவலக டைரியையோ, கணினியையோ வைத்துக் கொண்டு வேலை செய்யாமல் வெறுமனே அமர்ந்திருந்தாலும் அதிலொரு திருப்தி. மத்திமர் பிழைப்பு !

அரிதாகத்தான் அமைகின்றன இப்படியான முன்னேற்பாடில்லாத பயணங்கள். இந்தக் காத்திருப்பு, கூட்டம், நெரிசல், ஓட்டம், இருக்கை எல்லாம் ஒரு மனநிறைவைத் தந்து ஏதோ சாகசம் நிகழ்த்தியது போலவே தோன்றியது. உண்மையில், வேலைக்குச் செல்ல ஆரம்பித்து வாழ்வின் படிநிலையில் ஓரளவு ஸ்திரத்தன்மை பெற்ற இத்தனை ஆண்டுகளில் வழமையான அலுவலக நேரம், ஒரே மாதிரியான பணிச்சூழல், வசதி வாய்ப்புகள், ஒழுங்குமுறை, முன்பதிவு செய்த பயணம் என்று சிறைக்குள் அடைபட்டு அந்த வாழ்க்கைக்கே தன்னை ஒப்புக் கொடுத்தவனைப் போலவே புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு இந்த நேர்கோட்டுத் தன்மையில் இருந்து விலகி இன்று ஒருநாளாவது எதிர்பாராமையை எதிர்கொண்டு வீடு வந்து சேரலாம் என்ற ஆர்வமே மகிழ்ச்சியைத் தந்தது. கடிகாரத்தை சுற்றிய தினசரி ஒட்டங்களின் செக்கு மாட்டுத் தனத்தில் இருந்து ஒரு நாள் விடுப்பு கிடைத்தது போல கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டான். ஆனாலும் மனதின் ஓரம் சிறு பரபரப்பும், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறோமோ என்ற தயக்கமும் தொற்றிக் கொண்டே வந்தது. கிளம்பும் போதே கூடவந்தவர்கள், தங்கிவிட்டு மறுநாள் போகலாம் என வற்புறுத்தியும், எந்தப்பேருந்தும் ஓடாது என்று பயமுறுத்தியும் கூட அவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஒரு அறுநூற்றைம்பது கிலோமீட்டர் பயணத்தை எதிர்கொள்ள, அதுவும் மனைவி, குழந்தை, மூட்டை முடிச்சு எதுவுமின்றி தனியனாகச் செல்வது குறித்து இவ்வளவு யோசனை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய் முகத்திலடிக்கும் எதிர்க்காற்றின் குளுமையை அனுபவிக்கத் துவங்கினான். தான் கிளம்பிய தகவலை வீட்டிற்கு அழைத்து சொல்லி விடலாம் என்று அலைபேசியை எடுத்தான். முதல் நாள் இரவும் பயணத்தில் இருந்ததால் சார்ஜ் போடவில்லை. அலைபேசி முழுவதுமாக சார்ஜ் இறங்கி உயிரை விட்டிருந்தது. சரி, ஒன்றும் பிரச்சனை இல்லை, அதுவுமின்றி காலையில் விடிவதற்குள் சென்று விடலாம் என்ற நினைப்பில் அருகில் இருப்பவர்களிடம் அலைபேசியை இரவல் பெற்று பேசத் தோன்றவில்லை.

பேருந்து இடைப்பட்ட எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் நெடுஞ்சாலை வழியாகவே சென்று கொண்டிருந்தது. மதுரையில் நிறைய மக்கள் இறங்க வேண்டி இருந்ததால், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குப் பேருந்து வந்து நின்றது. வண்டியை விட்டு கீழே இறங்கியவன் உடம்பை முறுக்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அந்த நள்ளிரவின் குளிர்ந்த காற்றும், மிதமான சாரலும் இதமாக இருந்தது. இந்த மாதிரி நேரங்களில் தான் புகைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை வரும். குழந்தைகளுக்காக கைவிட்டுவிட்ட ஒரு பழக்கத்தை மீண்டும் துவக்கக்கூடாதென்ற பிடிவாதம் அந்த ஆசையை தடுத்தது. ஆதலால், புகைப்பிடிப்பது போன்று விரல்களை பாவனை செய்து குளிர்ந்த காற்றை வாய்வழியாக நுரையீரல் வரை இழுத்து பின் மெதுவாக மூக்கின் வழியாகவும், வாய்வழியாகவும் வெளியேற்றினான். தொடந்து இது போன்று நான்கைந்து முறை செய்த போது புகை பிடித்தது போன்ற ஒரு திருப்தி கிடைத்தது.

அரை மணிநேரத்திற்கு மேலாகியும் பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பாததால், பேருந்தில் இருந்த மக்கள் சலசலக்கத் துவங்கினர். நடத்துநரிடம் விசாரித்தால், வண்டியை மேற்கொண்டு ஓட்ட நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என்றும் மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வண்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மீண்டும் எப்பொழுது பேருந்துகள் இயங்கும் என்ற தகவலும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்கள், நேரம் செல்லச்செல்ல பேருந்து நிலையத்தில் அங்குமிங்கும் அலைமோதத் துவங்கினர். தங்கள் ஊர்களுக்குச் செல்ல வழியில்லாமல், மக்கள் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க, அந்த பேருந்து நிலையமே ஒரு பெரிய சிறைச்சாலை போன்றும் அங்குள்ள மக்கள் யாவரும் அந்தகர்கர்கள் போன்று துலாவித் திரிபவர்கள் போலவும் தோன்றியது. தனியொரு மனிதருக்குக் கிடைத்திருக்கும் சிறைவாசத்தை ஒட்டு மொத்தமாக ஒரு மாநிலம் முழுமையும் அனுபவிக்கிறது. அந்த அளவுக்கு மக்களின் இயக்கத்தை அவர்களால் ஸ்தம்பிக்க வைக்க முடிகிறது. வேறு வழியின்றி மக்கள் அனைவரும் பேருந்து நிலையத்திலுள்ளேயே கிடைத்த இடங்களில் சிறு சிறு குழுக்களாக உட்காரவும் படுக்கவும் துவங்கினர். இரண்டு முறை பேருந்து நிலையம் முழுவதும் சுற்றித் திரிந்தவன், வேறு வழியின்றி காற்று நன்றாக வீசும் ஒரு இடமாகப் பார்த்து தானும் அமர்ந்தான்.
இரவு உணவு உண்ணாததால் பசி வயிற்றைக் கிள்ளியது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடியிருந்தபடியால் எதையும் வாங்கவும் வழியில்லை. நேரம் செல்லச்செல்ல பசி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. நடுநிசியைத் தாண்டிய வேளையில் சிறைச்சாலை போலிருந்த பேருந்து நிலையம் சற்று பழகிய சத்திரம் போலக் காட்சியளிக்கத் துவங்கியது. மக்கள் அனைவரும் அங்கங்கே இருந்த இடத்திலேயே படுத்து உறங்கிவிட்டனர். பசியும் சோர்வும் சேர்ந்து கொள்ள, அமர்ந்த நிலையில் அரைத்தூக்கத்தில் இருந்தவனை யாரோ உலுக்கி எழுப்புவது போலத் தோன்றியது.

அலறியடித்து எழுந்தவன், சடையேறி சிக்குப் பிடித்த முடியுடனும், அழுக்கு அப்பிய நீண்ட தாடியுடனுடம், கிழிந்த ஆடையுடனும் ஒரு பிச்சைக்காரன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவனைத் துரத்த நினைத்து குரலெழுப்பினால் தொண்டைக்குழியிலிருந்து எந்தவொரு சப்தமும் எழவில்லை. தனது தோளைத் தொட்டுக்கொண்டிருக்கும் பிச்சைக்காரனின் கையைத் தட்டி விட முயன்றாலும் முடியவில்லை. தன் மனது சொல்வதை உடல் கேட்காமல் இருப்பதை உணர்ந்து, தன்னை அவன் பிடிக்குள் இருந்து விடுவிக்க பெருமுயற்சி செய்தான். ஆனால் தான் செய்யும் முயற்சிகள் அனைத்துக்கும் எதிர்வினையாய் தனது உடல் அந்தப் பிச்சைக்காரனை தொழுது நிற்பது போலத் தோன்றியது. அந்தப் பிச்சைக்காரன் வாய்திறந்து எதுவும் கூறாமல், பேருந்து நிலையத்தை விட்டு மேற்கு நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவனுக்கோ தனது தோளில் மாட்டியிருந்த பயணப்பையை கீழே தூக்கியெறிந்து விட்டு அந்தப் பிச்சைக்காரனின் கந்தல் மூட்டையை தோளில் தூக்கிக் கொண்டு தானும் அவன் பின்னால் செல்ல வேண்டும் என்று யாரோ கட்டளை இடுவது போலத் தோன்றியது.

அடுத்த கணம் அவன் பிச்சைக்காரனைத் தொடரந்து நடந்து கொண்டிருந்தான். எவ்வளவு தூரம், எத்தனை காலம் என தெரியாமல் வேக வேகமாய் நடந்தவனுக்கு தாகமெடுத்து நா வறண்டு போகவே தன்னையறியாமல் தலை குணிந்தான். பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் தனது நிழல் ஒரு குதிரையின் நிழலை ஒத்து இருப்பதைக் கண்டான். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பிச்சைக்காரனின் நிழல் ஒரு சமயத்தில் சிங்கத்தின் நிழலைப் போலவும், மறுசமயம் யானையின் நிழலைப் போலவும் தோற்றமளித்தது. தொடந்து நடந்து கொண்டிருக்கையில் யானையின் மீது பவனி செல்லும் சிங்கத்தின் பின் அணிவகுத்துச் செல்லும் குதிரையைப் போல் தன்னை உணர்ந்தான். நிலவை மேகம் முழுவதுமாய் மூடிய ஒரு பொழுதில் யானையில் இருந்து இறங்கிய பிச்சைக்காரன அவன் தூக்கிச் சுமக்கும் கந்தல் மூட்டையை தூர வீசி எறிந்து விட்டு தனதருகில் வருமாறு சைகை செய்தான். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவனைப் போல, பலம் கொண்ட மட்டும் கந்தல் மூட்டையைத் தூக்கி வீச, அதிலிருந்த கிழிசல் துணிகள் கட்டவிழுந்து கீழே விழுந்த இடமெல்லாம், அல்லிப்பூவாய் பூக்கத் துவங்கியது. அவன் பிச்சைக்காரன் அருகே சென்று பார்த்த பொழுது, கருத்து திரண்டு செழித்து வளர்ந்திருந்த யானை, தனது முன்னங்கால்களை நீட்டிய படி உட்கார்ந்திருக்க, அதன் அடி வயிற்றில் சாய்ந்தபடி சிங்கம் அமர்ந்திருக்க. அருகில் வந்தவன் தன்னையுமறியாமல் மண்டியிட்டு பசிக்கிறது என்பது போல் சைகை செய்ய, அவனைத் தோள் தொட்டு எழுப்பி, யானையின் மத்தகம் நோக்கி பார்த்தது சிங்கம். சமிக்ஞையை புரிந்து கொண்டவனாய், யானையின் முன்னங்கால்களை பற்றிய படி மேலேறி நீண்டு வளர்ந்திருந்த தந்தங்களைப் பிடித்து மத்தகத்தின் மீதேறி அதன் தலையில் பத்மாசனத்தில் அமர்ந்து, ஆழமாக மூச்சிழுத்தபடி காற்றைக் குடிக்கத் துவங்கினான். காற்று உட்புக உட்புக வயிறு என்ற ஒன்றே இல்லாமல் சுருங்கியது. மேலும் மேலும் காற்றை இழுத்து உள் நிறைக்க, தனது அங்கங்கள் ஒவ்வொன்றாய் மறைந்து, தானே ஒரு காற்றுப் பொட்டலமாய் மாறி மேகத்தை நோக்கி மேலே பறப்பது போல உணரத்துவங்கினான்.

சடாரென விழிப்பு வந்து பார்த்தால் அவனை இரண்டு பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டிருந்தனர். சுய நினைவுக்கு வந்து பதறியடித்து அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன், என்ன நடக்கிறது என்று வினவினான். அவனைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் திருநெல்வேலிக்கான விடிகாலை முதல் வண்டி கிளம்பத் தயாராக இருக்கிறதென்றும் அதன் பொருட்டு அவனை எழுப்பினால், அவன் அசையாமல் கிடந்ததாகவும், தண்ணீரைத் தெளித்துப் பார்த்தால் அதற்கும் மசியாததால் மயக்கத்தில் கிடக்கிறானோ என்று கவலை கொண்டு தூக்கியதாகவும் கூறினர். சற்று நேரம் குழப்பத்தில் இருந்தவன் ஒருவாறு தெளிந்து, தனக்கும் ஒன்றும் நேரவில்லையென்று கூறி அவர்களிடம் இருந்து விலகினான். அருகில் அப்போது தான் திறந்து கொண்டிருந்த கடையில் ஒரு போத்தல் நீர் வாங்கி தன் முகத்தில் அடித்துக் கொண்டான். சற்று தெளிச்சியடைந்தவனாய், தூரத்தில் கிளம்பத்தயாராய் இருந்த திருநெல்வேலி பேருந்தை நோக்கி விரைந்தான். சற்று தூரம் சென்றவன், திரும்ப வந்து கீழே கிடந்த தனது பயணப்பையை தோளில் மாட்டிக் கொண்டு மீண்டும் பேருந்தை நோக்கி ஓடினான்.

பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைப் பிடித்து அமர்ந்தான். வண்டி கிளம்பி, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது. புலரும் காலைப் பொழுதின் குளிர்காற்று முகத்தில் சில்லென வீச இடப்பக்கம் திரும்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவனுக்கு, கருத்து செழித்து வளர்ந்த யானையொன்று முன்னங்கால்களை நீட்டியவாறு தூரத்தில் அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது. கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தவனின் பார்வையிலிருந்து யானைமலை மெல்ல மெல்ல மறைய, பேருந்து பாண்டிகோவில் சுற்றுச்சாலையைத் தாண்டி திருநெல்வேலி நோக்கிப் பயணபட்டது.

//சொல்வனம் இணைய இதழில் வெளியான எனது சிறுகதை. நன்றி சொல்வனம்: http://solvanam.com/?p=39499//
******