பெருநகரத்து அரசாங்க அலுவலகங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு புழுக்கம் இருக்கும். அதுவும் கோடைக்கால மதியங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கசகசப்பிற்கும், எரிச்சலுக்கும் எந்தக் குறையும் இருக்காது. நகரின் மத்தியில் நெருக்கடியான ஏரியாவில் ஐந்தடுக்கு மாடி கட்டிடத்தில் நான்காவது தளத்தில் அமைந்திருக்கும், எங்களது அலுவலக அறை இன்னும் சிறப்பு வாய்ந்தது. முன்பு உயரதிகாரி இருந்த அறையாதலால் குளிர் சாதன வசதி எல்லாம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு மேம்படுத்தப்பட்ட வேறு அறை வழங்கப்பட்டு குளிர்சாதன வசதியும் அவருடன் சென்று விட்டபடியால், வெறும் அறையில் மின்விசிறி மாட்டப்பட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. காற்று புக எந்த வசதியும் இல்லாமல் நல்லா கொதிக்கின்ற இட்லி கொப்பரைக்குள் அமர்ந்து வேலை பார்ப்பது போல் இருக்கும்.
அலுவலக விதிமுறைகள் இன்னும் சுவாரஸ்யமானவை. ஒரு கடிதத்தை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் முதலில் எங்கள் அதிகாரி சொல்வதை நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைலில் இண்டக்ஸ் செய்து அவர் சரி பார்ப்பதற்காக வைக்க வேண்டும். அதில் பிழைகள் ஏதும் இல்லையென்றாலும் ஓரிரண்டு வார்த்தைகளை மாற்றிப் போட்டு நம் உழைப்பை செம்மைப் படுத்திய பெருமிதத்தோடு எங்களைப் பார்ப்பார். நாங்களும் “அதிகாரி, அதிகாரி தான்” என்ற பாவனையோடு ஒரு நன்றி உதிர்க்கும் பார்வையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் கோப்பை சரி செய்து அவர் பார்வைக்கு வைப்போம். அதை மீண்டும் முதலிலிருந்து ஒரு முறை நிதானமாகப் படித்துப் பார்த்து, பின் பேனா சரியாக எழுதுகிறதா என்று அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தாளில் சிறு கிறுக்கல் கிறுக்கிப்பார்த்து விட்டு, அதில் திருப்தியடைந்தவராய் கோப்பில் தனது பொற்கரங்களால் கையெழுத்திட்டு விட்டு தலைமையிடத்துக்கு அனுப்பச் சொல்வார்.
இனி தான் இருக்கிறது தொழில்நுட்பம். கையெழுத்தான லெட்டரை ஸ்கேன் செய்து தலைமையிடத்துக்கு இமெயிலில் அனுப்ப வேண்டும். அங்குள்ளவர்கள் அலுவலக மின்னஞ்சல்களைப் பார்ப்பதே குதிரைக்கொம்பு. எனவே உடனுக்குடன் தகவல் பார்வையில் படும் பொருட்டு ஒரு ஃபேக்ஸ் காப்பியும் அனுப்ப வேண்டும். அரசாங்க அலுவகத்து ஃபேக்ஸ் மிசின்கள் வேலை செய்வதெல்லாம் தெய்வச் செயல் தான். ஒன்று அணைத்து வைக்கப்பட்டிருக்கும், இல்லை பேப்பர் அவுட் ”சிவப்பு” மிணுங்கிக் கொண்டிருக்கும். அதை சரி செய்ய அங்குள்ளவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து, பின் அவர்கள் அதை சரி செய்த பின் ஃபேக்ஸ் அனுப்பி அதை உறுதிப்படுத்த மீண்டும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டும். அது போக “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். ஆனால் அரசாங்க அலுவகங்களில் இமெயில், ஃபேக்ஸ் எல்லாம் நிரந்தர தகவல் தொடர்பு முறை இல்லை, அவசரத்துக்குத் தான். எனவே ஃபேக்ஸ் அனுப்பிய லெட்டரை ஒரு ஜெராக்ஸ் எடுத்து நகலை எங்களது அலுவலக கோப்பில் வைத்து விட்டு ஒரிஜினலை பதிவுத்தபால் தபால் மூலம் தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும். பிறகு அதற்கான “அக்நாலேட்ஜ்மெண்ட்” ஸ்லிப்பையும் கோப்பில் போட்டு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்த சுலபமான நடைமுறையெல்லாம் ஒரே கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருக்கும் எங்களது கிளை அலுவலகத்திலிருந்து, அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கும் தலைமையிடத்துக்கு அனுப்புவதற்கு மட்டுமே. வேறு ஊர்களுக்கு அனுப்புவதற்கு ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் கூண்டிற்குள் உள்ள கிளிக்கு தினமும் பச்சை மிளகாய் வைத்து அதனைப் பேசப்பழக்குவது போல, எழுநூறு என்னூறு பக்க செயல்முறைக் கையேடு இருக்கிறது. அதன்படி, அது அது, அதன் அதன் செய்நேர்த்தியோடு நடைபெற வேண்டும்.
இப்படியாய் வியர்வை ஊற்றாய் கொட்டிக் கொண்டு, அரும்பாடுபட்டு அரசு இயந்திரத்தை சுழல வைத்துக் கொண்டிருந்த சுபயோக சுபதினமான ஒரு விசாலக்கிழமை நன்பகல் மணி ஒன்றரை - மூன்று கொழுத்த இராகு காலத்தில் திருவாளர் பொதுஜனம் எங்கள் அலுவலகத்திற்குள் காலடியெடித்து வைத்தார். வைத்தாரென்ன... அறைக்குள் நுழையும் போதே, கண்ணாடிக் கதவைத் திறந்தவர் தனது செல்ஃபோனின் ரிங் டோடான ”வந்தே மாதரம், ஜெய வந்தே மாதரம்” ஒலிக்கவும் ஒரு நொடி பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தவர் பின் சுதாரித்துக் கொண்டு “மன்னிக்கனும், சைலண்ட் மோடில் போட மறந்துட்டேன்” என்று கதவில் வைத்திருந்த கையை தன் கழுத்தில் ”டேக்” போட்டு தொங்கப்போட்டிருந்த செல்ஃபோனை நோக்கிக் கொண்டு சென்றார். எங்கள் அறைக்கதவும் அரசாங்க ஊழியராயிற்றே... இரண்டு நொடி அதே நிலையில் நின்று யோசித்து விட்டு பின் தன்னுடைய நெற்றியில் ”டோர் க்ளோசர்” மாட்டியிருக்கிறதே என்ற சுயநினைவு வந்து படாரென சாத்தத் துவங்கியது. அது சென்ற வேகத்தில் நமது பொதுஜனத்தை இரண்டு அடிக்கு வெளியே தள்ளி சமர்த்தாக மறுபடி பூட்டிக்கொண்டது. எது சொன்னாலும் குறைந்தது மூன்று முறை செயல்முறை விளக்கம் கொடுத்தால் மட்டுமே “என்ன, அப்படியா!” என்பது போல் திரும்பிப் பார்க்கும் எங்கள் அலுவலக சிப்பந்தியே அறைக்கதவின் இந்த செயல் கண்டு “படாரென” பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டார். அப்போதாவது இன்று ஒரு அசாதாரணமான நாள் என்று நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ம்ச்ச்... விதி வலியது போலும், துர்சகுணத்தை உணர்ந்து கொண்டேனில்லை.
சிப்பந்தி வேகமாக சென்று அவருக்கேயுரிய பிரத்யேக முறையில், பாதத்தால் தடுப்பு ஏற்படுத்தி, அறைக்கதவின் ஆற்றலை மட்டுப்படுத்தி, நிலை குலைந்திருந்த இராமசாமியை உள்ளே அழைத்து வந்தார்.
“சார், எத்தனை நாளா சொல்றேன், இந்த டோர் க்ளோசரை கழட்டி விட்றலாம்னு.. இப்ப பாருங்க ஐயாவை கழுத்தப் பிடிச்சு நாமே வெளியே தள்ளுனா மாதிரி ஆகிருச்சு”
அவர் சொல்வதும் வாஸ்தவம் தான். ஆனால் அரசாங்க அலுவலக பகவத் கீதையான “ஸ்வாமீஸ் கைடில்” தலைமை அலுவலகத்தின் முன்னனுமதியின்றி “டோர் க்ளோசரின்” ஸ்க்ரூவில் திருப்புளியை வைப்பதற்கு எந்த சரத்தும் இடம் கொடுக்காததால், அறைக்கதவை டோர் க்ளோசரிடமிருந்து விவாகரத்து செய்யும் விழா நிலுவையில் இருக்கிறது. இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தும் புதிதாய் ஒருவர் வந்திருக்கிறார் இல்லையா, அவர் முன் தான் ஒரு சிப்பந்தி மட்டுமல்ல, தவறென்றால் அலுவலரேயானாலும் நேருக்கு நேர் கேள்வி கேட்கும் ”தோழர்” என்ற ஜபர்ஜஸ்த்தை காட்ட வேண்டுமென்ற முனைப்பு.
“ஏ, சும்மா இருப்பா... நீ வேற !” என்று அவரது அறச்சீற்றத்தை தற்காலிகமாக அமர்த்தி விட்டு,
“ஐயா, ஒன்னும் அடிபடலியே... பார்த்து வரக்கூடாதா” என்று பொதுவாகத் தான் கேட்டேன். அதற்கு மையமாய் ஒரு பார்வையை மட்டும் வீசி விட்டு, தனது செல்போனை கழுத்துப் பட்டையிலிருந்து விடுவித்து, இரண்டொரு சங்கேத குறியீடுகளை செலுத்தி மௌன நிலைக்கு அனுப்பி விட்டு, மீண்டும் தாலிக்கொடியில் மாட்டிக் கொண்டு செருமியபடி பேசத்துவங்கினார் பொதுஜனம்.
”வணக்கம், தகவலறியும் சட்டத்தின் படி, எனக்கு ஒரு தகவல் தெரியனும்”
“நல்லதுங்கய்யா... அதற்கான அலுவலகம் மேலே ஐந்தாவது மாடில இருக்கு. அங்க பி.ஆர்.ஓ இருப்பார், அவரப்பாருங்க”
“இதான், நாடு நாசமாப் போறதுக்கான காரணமே இதான்... உங்களோட சேர்த்து பதிமூனு பேர். எனக்குத் தெரியாது, இங்க கேளு, அங்க கேளுன்னு ஒரு அலக்கழிப்பு. ஏன் சார், நான் தெரியாமத் தான் கேக்குறேன் அரசாங்கம் உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் சம்பளம் கொடுக்குது, எனக்கு எதுவும் தெரியாது வெளியே போன்னு கைய விரிக்குறதுக்கா?
அறைக்கதவு சம்பவத்தால் முதல் ஓவர் “மேட்-இன்” ஆகிவிட்டதே என்ற கவலையில் இருந்திருப்பார் போல, அடுத்த ஓவர் சிக்ஸரா வெளுக்கிறார்.
“ஐயா, நீங்க சொல்றது ஓகே தான்.. ஆனாலும் அதுக்குன்னு ஒரு அதிகாரி இருக்கார்ல , சரியா அவரப்போய் பார்த்தா தானே தேவையான தகவல் கிடைக்கும்”
“ஸீ... மிஸ்டர் கவர்மெட் செர்வண்ட், இதெல்லாம் நல்லா பேசுறீங்க, உங்க ஆஃபிஸில் இதுவரை மொத்தம் எத்தனை ஃபைல்ஸ் உபயோகிச்சிருக்கீங்கன்னு ஒரு லிஸ்ட். இது தான் என்னோட ஸிம்பிள் க்வஸ்டீன். அதை சொல்றதுக்கு இவ்ளோ அலைக்கழிக்கிறீங்களே !”
நான் நாற்காலியில் உட்கார்ந்தபடியே ஒரு 360 டிகிரி வட்டம் போட்டு பார்த்தேன். பத்து அடி உயரத்துக்கு நாலா பக்கமும் கோப்புகள். இந்த நான்காவது மாடியில் மட்டும் இது மாதிரி சுமார் 20 அறைகள். அலுவலகத்திற்கு மொத்தம் ஐந்து தளங்கள்... ஐந்து பெருக்கல் இருபது, சுமார் நூறு அறைகள், ஒவ்வொரு அறை முழுதும் இவ்வளவு கோப்புகள்... அலுவலகம் 1996ல் இருந்து இந்த கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போ 2015, மொத்தம் பத்தொன்பது வருடம் உபயோகப்படுத்தின மொத்த கோப்புகளையும் தெரிந்து கொண்டு திருவாளர். பொதுஜனம் என்ன ஆராய்ச்சி செய்யப்போகிறார் என்று எனக்குத் தீராத ஆர்வம் பற்றிக்கொண்டது. நாக்கில சனி நர்த்தனமாடி விட, வாய்திறந்து கேட்டு விட்டேன்.
“ஐயா, இவ்ளோ ஃபைல் லிஸ்ட் வச்சு என்ன பண்ணபோறீங்க”
“மிஸ்டர்... ஆர்.டி.ஐ ல அப்ளிகண்ட் ரீசன் ஃபார் ஆஸ்கிங் டீடைல்ஸ் கொடுக்கவேண்டியதில்லை, தெரியும் தானே !”
இதெல்லாம் நல்லா தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் யாரிடம் கேட்க வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்.
”சரிங்கய்யா... நீங்க பி.ஆர்.ஓ வைப் பாருங்க, ப்ளீஸ்!”
“முடியாது சார்... எனக்கு தகவல் தெரியாம இங்கே இருந்து நகல மாட்டேன்”
அடுத்த பாலும் ஃபுல்டாஸா போச்சா. பவுண்டரிக்கு தூக்கி தூக்கி அடிக்கிறார். நான் மாட்டிக் கொண்டு விழிப்பதில், உடனிருக்கும் சிப்பந்திக்கு அப்படியொரு சந்தோஷம். அறையின் ஈசானி மூலையில் மூன்று செங்கோனங்கள் எப்படி சந்திக்கின்றன என்று அளவெடுத்துக் பார்த்துக் கொண்டே இருந்தார். என் பக்கம் தலையை சாய்க்கக் கூட மாட்டேன் என்கிறார். சரி, நம் வயிற்று வலிக்கு நாமே தான் கசாயம் காய்ச்ச வேண்டும் போலிருக்கிறது.
“அது சரிய்யா, ஆர்.டி.ஐ. ல தகவல் கேட்க பத்து ரூபாய்க்கு பி.ஓ எடுக்கனுமே, எடுத்துட்டு வந்துர்றீங்களா?
பனிரெண்டு எலிகள் தொட்டுப்பார்க்காத மசால் வடையை பதிமூன்றாவது ஆளாய் வந்த நான் மட்டும் ஏன் கடித்துத் தொலைக்க வேண்டும். அதன் பெயர் தான் விதி.
பேட்ஸ்மேனுக்கு சாதகமாய் எல்லா விதிகளும் மாற்றப்பட்ட வேளையிலும், கஷ்டப்பட்டு வீசும் பவுன்சருக்கு கொஞ்சம் மதிப்பிருக்கத் தான் செய்கிறது. மிஸ்டர் பொதுஜனம் இந்தக் கேள்விக்கு லேசாக பம்மினார் (என்று நானாக நினைத்துக் கொண்டேன்)
“ஓ, அப்படியா... சரி இதப்பிடிங்க”
என் கை ஓங்கி இருக்கின்ற தைரியத்தில், அவர் கிளம்பிச் சென்றால் போதும் என்ற ஆவலாதியில் அவர் கொடுத்த அந்த வஸ்துவை “கை” நீட்டி பெற்றுக்கொண்டு என்னவென்று பார்த்தேன். ஜோலி முடிந்தது என்று அப்போது தெரியவில்லை.
“சார்... பி.ஓ இல்லாட்டி கேஷா கூட கொடுக்கலாம்ல, அதான்.... இப்ப சொல்லுங்க, உங்க ஆஃபிஸ்ல மொத்தம் எத்தனை ஃபைல்?”
“ஐயா, என்கிட்ட எதுக்கு பணம் கொடுக்குறீங்க.. இந்தாங்க முதல்ல பிடிங்க.. பி.ஆர்.ஓ வைப் பாருங்க, தயவு செய்து இப்போ இடத்தை காலி பண்ணுங்க”
“என்ன சார், கவர்மெண்ட்ல வேலை இருக்கு, கை நிறைய சம்பளம், ஒரு வேலையும் கிடையாது, காலாட்டிட்டே சாகுற வரை பென்சன்... இதுல பப்ளிக்கை வேற இன்சல்ட் பண்ணுவீங்க... கவர்மெண்ட் மக்களுக்கு செய்றதை குட்டிச்சுவராக்குறதே உங்கள மாதிரி அரசாங்க ஊழியருங்க தான். இப்போல்லாம் காலம் முன்ன மாதிரி இல்ல சார்.. பப்ளிக் அவேர்னஸ் வந்திருச்சு சார். என்ன நடக்கும் தெரியுமில்ல”
“ஐயா, நான் ஒரு சாதாரண குமாஸ்தா.. எனக்குன்னு சில வரைமுறை அரசாங்கம் விதிச்சிருக்கு. அதை மீறிய விஷயத்தை என்கிட்ட கேட்டா என்ன சொல்ல... என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோங்க, இப்போ முதல்ல இடத்தை காலி பண்ணுங்க”
ஒரு வழியாக வேண்டா வெறுப்பாக ஏதோ சவால் விட்டபடி கிளம்பிச் சென்று விட்டார்.
சரியாக ஒரே வாரம், அடுத்த விசாலக்கிழமைக்கு அலுவலம் முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. எங்களது அலுவலகத்தில் ஒருவர் லஞ்சம் வாங்குற நேரடி வீடியோ க்ளிப்பிங் இண்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸப் எல்லாத்துலயும் சுத்திட்டு இருக்கிறது என்று ஆளாளுக்கு அள்ளி விட்டுகொண்டிருக்கிறார்கள். இதில் வரலாறு காணாத விதமாய் ஒரே வாரத்தில் ஒன்னரை லட்சம் வியூஸ் என்று ஆச்சர்யமாய் வேறு பேசிக்கொண்டார்கள். நானும் தேமே என்று கேட்டுக்கொண்டிருந்தேன். மதியத்துள் விஷயம் ஸ்படஷ்டமாக விளங்கி விட்டது. ஒரு காப்பி என் மொபைல் வரை வந்துவிட்டது, “இந்த கயவனை செருப்பாலடிக்க, ஐந்து பேருக்கு ஷேர் செய்யுங்கள்” என்ற தலைப்போடு. திருவாளர் பொதுஜனம் வேலையைக் காண்பித்து விட்டார். அன்று நடந்த அனைத்தையும் கழுத்தில் தொங்கவிட்டிருந்த மொபைல் மூலமாக படம் பிடித்து, வீட்டில் உட்கார்ந்து நல்லா எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்து நான் பத்து ரூபாய் லஞ்சம் வாங்குவது போல ஐம்பது செகண்ட் படமாக ஓட்டி விட்டார். இதில் எனது முகத்துக்கு இரண்டு முறை டைட் க்ளோசப் வேறு. சாயங்காலம் வீட்டிற்கு கை நிறைய சஸ்பென்ஸன் ஆர்டரோடு சென்று கொண்டிருக்கிறேன். வாழ்க தகவலறியும் உரிமை, வாழ்க திருவாளர் பொதுஜனம், வாழ்க வாட்ஸப் புரட்சிப் போராட்டம் !
******
பல அரசு பீரங்கிகளின் அலட்சியத்தினால் சில நல்ல அதிகாரிகளிடமும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஐந்தாவது மாடிக்கு கோப்பு அனுப்பும் முறை மண்டையை கிறுகிறுக்க வைத்தது சார் ... சுவாரசியமான புனைவுக்கு (என்று தான் நம்புகிறேன்) வாழ்த்துக்கள் ...
ReplyDeleteஇதுதாங்க அரசாங்க ஆபீஸ் அந்த ஆளை அப்படியை விட்டுட்டு கான்டீனுக்குப் போகாம அவன்கூட எதுக்கய்யா பேச்சுக்கொடுத்தீங்க?
ReplyDeleteரொம்ப வெகுளியான ஆபிசர் பேனால கூட காமிரா வச்சு படம் புடிக்குதுக ப ய புள்ளைக .... (அந்த வீடி யோ காண கிடைக்குமா? ) madhanammm@gmail.com
ReplyDelete