Monday, December 29, 2008

பேசாம டாப்பர் ஆகி நல்லவனா ஆகிறவா ?

ஆறாவது செமஸ்டர் Study Holidays  லீவு.  பசங்க எல்லாம் முதல் 4 நாள் வீட்டுக்கு போய் கொஞ்சம்  நல்ல சாப்பாட taste பண்ணிட்டு,  Study Holidays பண்ண வேண்டிய கடமைய மிஸ் பண்ண கூடாதுன்னு கண்ணும் கருத்துமா ஹாஸ்டலுக்கு வந்துட்டாய்ங்க.

மத்த நேரத்துல, அப்படி இப்படி வெளியே சுத்திட்டு இருந்தாலும்,  Study Holidays மட்டும், ரொம்ப சின்சியரா ஒரே ரூம் உக்கார்ந்து ராத்திரி பகலா ..................................................................... சீட்டு விளையாட ஆரம்பிச்சிருவோம்.

( என்ன......... படிப்போம்னு நினைச்சீங்களா ? ஹலோ !  எக்ஸாம் எல்லாம் நாமா யோசிச்சு எழுதணும், யாரோ ஒருத்தர் எழுதுன புக்ஸ் படிச்சு, அத எக்ஸாம் xerox எடுக்குறது எல்லாம்,  எங்கள பொறுத்தவரை காப்பி அடிக்கிறதுக்கு சமம் தான் )

 

வழக்கமா, ரம்மி முதல்ல knock-out  ஆகுறது எப்பவும் கிறுக்கனா தான் இருக்கும். அன்னைக்கும் அவன் தான் knocked-out.  கொஞ்ச நேரம் ஆட்டத்த வேடிக்கை பார்த்துட்டு இருந்தான். ரொம்ப போர் அடிச்சிருச்சு போல... திடீர்னு ரூம் முழுதும் எதையோ தேட ஆரம்பிச்சான். அப்புறம்,

 

"டேய் காடு, Antennas புக் எங்கடா, அதை கொஞ்சம் எடுத்துக் கொடு !"

 

காடு உயிரையும் கொடுக்க ரெடியா  இருக்குறது ரெண்டு விஷயம்... ஒன்னு Half-Boiled Egg,  இன்னொன்னு சீட்டாட்டம். அதுவும் சீட்டடத்துக்குள்ள போய்ட்டான்னா, சாமி ஆடுற மாதிரி அப்படி ஒரு concentration  வந்துரும்.

 

ஆனா, அப்படிப்பட்ட காடையே, கிறுக்கனோட இந்த கேள்வி நிலை குலைய வச்சிருச்சு . So, காடு ரொம்ப பதறிப்போய் எழுந்திருச்சு,

"ஏன்டா கிறுக்கா, நல்லாத் தானே இருந்த, என்ன திடீர்னு புக் எல்லாம் கேக்குற, மனசு ஏதும் சரி இல்லையா, வேணும்னா ஆட்டத்த கலைச்சுட்டு, போய் ஒரு டீ அடிச்சுட்டு வருவோமா ?" ன்னு ரொம்ப அக்கறையா விசாரிச்சான்.

 

எங்க எல்லாருக்குமே, கிறுக்கன் அப்படி கேட்டது ரொம்ப பரிதாபமா ஆகிருச்சு. எல்லாரும் ஒரு கலவரத்தோட கிறுக்கன பார்த்தோம். (பின்ன, ஒரு அப்பாவி பையன் பின் விளைவுகள் பத்தி எதுவும் யோசிக்காம, study holidays  போய், Antennas புக் படிக்க ஆரம்பிச்சா, அந்த செமஸ்டர் எக்ஸாம் விளங்குமா ?)

 

ஆனா கிறுக்கனுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும், அவன் கம்பா நின்னு பதில் சொல்றான் ,

"டேய் நாயிங்களா, ரொம்ப பொறாமை படாதீங்க, Antennas புக் தான், ரொம்ப பெருசா தலைக்கு வைக்கிறதுக்கு தோதா இருக்கும். இந்த ரவுண்டு நீங்க விளையாடி முடிக்கிறதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கம் போடலாம்னு தான்டா அந்த புக்கை தேடுறேன் !"

 

அப்பாடா, இப்போ தான் எங்க எல்லாருக்கும் உயிரே வந்தது ... (அதெப்படி, நம்ம கூட்டத்த சேர்ந்த ஒருத்தன  மட்டும் படிச்சு முன்னேற  விட்டுருவோமா ? )

 

ஆனாலும் காந்தி மட்டும், "டேய் கிறுக்கா, உண்மையிலேயே உனக்கு மூளை வளர்ச்சி அதிகமாயிருச்சுடா, பெருசா இருக்குறது Antennas  புக் தான்னு உனக்கு தெரிஞ்சிருக்கே... இந்த அறிவு போதும் டா, நீ வாழ்க்கைல முன்னேறிறுவடா !" ன்னு ஓட்ட ஆரம்பிச்சுட்டான்.

 

இதை கேட்டவுடன், கிறுக்கனுக்குள்ள தூங்கிட்டு இருந்த "அண்ணாமலை" க்கு முழிப்பு வந்திருச்சு ..

 

" அடேய் காந்தி, என்னையா டா கிண்டல் பண்ற, உன்னோட டைரி குறிச்சு வச்சுக்கோ , இந்த செமஸ்டர் Antennas Paper உங்க எல்லாரையும் விட மார்க் அதிகமா வாங்கி நான் டாப்பர் ஆகி, இந்த உலகத்துக்கு எனக்குள்ள ஒளிஞ்சுக் கிட்டு இருக்க படிப்பாளியா வெளிய கொண்டு வரல..... நான் கிறுக்கன் இல்ல டா " .... தொடையைத் தட்டி சவால் விட்டுட்டு  slow motion  போய், பக்கத்து ரூம் தனியா படுத்துட்டு  "வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் "  ன்னு பாடுனது எங்களுக்கு லைட்டா கேட்டுது . இப்படி எல்லாம் பேசினாத் தான் கிறுக்கன்னு, மனநிலைல இருந்த  நாங்க, இத ஒரு பெரிய விஷயமாவே எடுக்கல ...

 

Antennas எக்ஸாம் க்கு முதல் நாளும் வந்தது. எப்பவும் எக்ஸாம் க்கு முதல் நாள், கிளாஸ் டைம் எடுத்த  நோட்ஸ் வச்சு, ஆளாளுக்கு கொஞ்சம் கதை கேட்டுட்டுப் போய் எக்ஸாம் எழுதிட்டு வந்துருவோம். ஹாஸ்டல் நைட் சாப்பிட்டு முடிச்ச பிறகு, இந்த Discussion நடக்கும். அன்னைக்கும் கூட்டம் கூடியது..  கிறுக்கனும் வேகமா வந்தான் ... Antennas பெரிய புக் கையும் கொஞ்சம் நோட்ஸ் பேப்பரையும் எடுத்தான்.

 

"தம்பிங்களா, நான் விட்ட சவால் ஞாபகம் இருக்குல்ல, எப்படியும் இந்த பேப்பர் நான் தான் டாப்பர், இப்போ உங்க கூட உக்கார்ந்து படிச்சேன்னா, நீங்க சொல்லிக் கொடுத்து தான் டாப்பர் ஆனேன்னு கதை விடுவீங்க. So, நானே தனியாவே படிக்கப் போறேன். இந்த வெற்றி என்னோட தனிப்பட்ட வெற்றியா அமைஞ்சா தான் எனக்குப் பெருமை " ன்னு சொல்லிட்டு, அவன் ரூம்ல தனியா போய் கதவை அடச்சுக்கிட்டான்.

 

பசங்க எல்லாம் " எங்கிட்டோ கிறுக்கனுக்கு நல்ல புத்தி வந்தா சரி தான் " ன்னு பேசாம இருந்துட்டானுங்க.

 

மறுநாள் காலைல எக்ஸாம்க்கு கிளம்புற அவசரத்துல யாரு கிறுக்கனை கவனிக்கலை.

 

Exam Hall  போய் பார்த்தா கிறுக்கன் சீட் மட்டும் காலியா இருக்கு. சரி, எப்படியும் அரை மணி நேரம் Grace Time க்குள்ள வந்திருவான்னு பசங்க சும்மா இருந்துட்டாங்க. பார்த்தா எக்ஸாம் முடியுற வரை கிறுக்கன் வரவே இல்ல...

 

எக்ஸாம் முடிச்சு பசங்க எல்லாம், வேக வேகமா ஹாஸ்ட்டலுக்கு  வந்து, கிறுக்கன் ரூமை பார்த்தா உள் கூடி பூட்டிக் கிடக்கு... என்னாச்சு தெரியலயேன்னு பதறிப் போய், கதவைத் தட்டினா,

உள்ளே இருந்து கிறுக்கன் தூக்க கலக்கத் தோட எழுந்து வர்றான்.

 

வாய்க்கா குழப்பத்தோட, " கிறுக்கா, என்னாச்சு என் எக்ஸாம்க்கு வரல ? "

 

கிறுக்கன் அப்படியே ஷாக் ஆகிட்டான் , "என்ன்ன்ன்ன்ன்ன,  எக்ஸாம் முடிஞ்சுருச்சா ... Antennas புக்கை படிச்சு முடிக்க காலை 6 மணி ஆகிருச்சு டா.. அப்படியே லைட்டா டாப்பர் கனவோட ஒரு குட்டித் தூக்கம் போட்டேன், அந்த கேப் எக்ஸாம் மே வந்துட்டு போயிடுச்சா ... நான் டாப்பர் ஆகக் கூடாதுன்னு விதி சதி செஞ்சிருச்சே டா !"

 

பசங்க எல்லாருக்கும் ரொம்ப வருத்தமாப் போச்சு ...

"சாரிடா, காலைல அவசரத்துல கிளம்பி போய்ட்டோம்டா, வேற எந்த intention னும் இல்லடா, தப்பா எடுத்துக்காதடா !" ன்னு feel ஆகிட்டாங்க.

 

ஆனா கிறுக்கனோ, " சரி விடுங்கடா, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல... அறிவு வேற, தேர்வு வேற, என் அறிவு இன்னும் ஆறு மாதத்துக்கு மேலயும் தாங்கும். அடுத்த செமஸ்டர்ல இதே பேப்பர் நான் arrear  எழுதும் போது நான் தான் டாப்பர் ... இது சவால் டா !" ன்னு அசால்ட்டா சொல்லிட்டு,

"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா !" ன்னு பாடிக்கிட்டே போய்ட்டான் ....................... அதான் கிறுக்கன் !!!


ன்னும் கிறுக்குவோம் ...