Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, January 14, 2024

கலைஞர் பல்கலைக்கழகம்

கலைஞர் பல்கலைக்கழகம் எந்த ஊரில் அமைய வேண்டுமென நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அது குறித்து எனக்குத் தோன்றியவை...

1. ஏற்கனவே பெரிய பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டமாக இருக்க வேண்டும்.
2. வான் வழி போக்குவரத்துக்குத் தோதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
3. பின் தங்கிய பகுதியாய் இருப்பின் கல்வியில் மேலோங்க நல்ல வாய்ப்பு
4. பரப்பளவில் விரிய, ஊர்/மாவட்டம் பெரிதாக வாய்ப்புள்ள, வளர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடிய பகுதியாக இருக்க வேண்டும்.
5. மாணவர்கள் உண்டு உறைவிட படிப்புகள் பயில, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தகுந்த இனிமையான தட்பவெட்ப நிலை.
6. பிற மாநில/பிற நாட்டு அறிஞர் பெருமக்கள் வந்து போகத் தோதுள்ள பகுதி
7. சர்வதேச நிகழ்விடங்களின் அருகாமை, மாணவர்கள் கண்ணோட்டமும், அறிவுத் திறனும் வளர உதவும்.
Update:
8. பன்னாட்டுத் தொழிற்சாலைகள் உள்ள பகுதியாய் இருப்பின், தொழிற்கூடம் - கல்விக்கூடம் இணைந்த ஆராய்ச்சிகளுக்கு, பொருளாதார நல்கைகளுக்கு வழிவகுக்கும்.
(பல்கலைக்கழகம் அமைக்கும் இடம் சார்ந்து வேறு என்ன அடிப்படைத் தேவை, நீங்களும் சொல்லலாம்)

ஆகவே, இத்தகைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, வேகமாக வளர்ந்து வரும், எதிர்காலத்தில் தமிழகத்தின் தொழில்நுட்பமாக மாறப் போகும், Little England என்று அழைக்கப்படும் ஒசூரில் "கலைஞர் சர்வதேச தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" அமைக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்...றோம்...றோம்...
#hosurdiary
#kalaignaruniv

Monday, January 1, 2024

2023

#2023
மற்றுமோர் ஆண்டு முடிகிறது, அலுவக ரீதியாக மிகச் சிறப்பான ஆண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கின் பொருட்டு இரண்டு வாரங்கள் தில்லியில் தங்கி இருந்தேன். பலதரப்பட்ட அனுபவங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், பயிற்சி என்று சிறப்பாகச் சென்றது. அதோடு இணையப் பாதுகாப்புத் துறையில் தேசிய அளவில் முக்கியமான ஓர் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த உத்வேகத்தையும், கற்றலையும் தொடர வேண்டும். 

தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பைக் கடைசி மாதத்தில் தந்துவிட்டு நகர்கிறது இவ்வாண்டு. எனது பணியின் முதல் மூன்றாண்டுகள் கொடைக்கானலில் தொழிலாளர் மேலாண்மை சார்ந்தே சென்றது. அதன் பின் மதுரை வந்து முழுமையாகத் தொழில்நுட்பத்தில் இறங்கி, தென் தமிழகத்தின் பத்து தொலைதொடர்பு மாவட்டங்களுக்கான “டாட்சாஃப்ட்” சர்வரில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில், எங்கள் மேலதிகாரியாக வேறு பிரிவில் இருந்து மாற்றலாகி வந்தார் அருண்மொழி அம்மா. துறையில் ஏற்கனவே கடுமையான அதிகாரியாக அறியப்பட்டவர் ஆதலால் அனைவரும் அவரை வரவேற்று வணக்கம் வைத்து வந்தனர். இயல்பாக எனக்கிருந்த தயக்கத்தாலும், நம் வேலையை நம் இடத்தில் இருந்து பார்ப்போம் என்ற உந்துதலாலும் நான் மட்டும் சென்று அவரைப்  பார்க்கவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பின், ஒரு நாள் என்னை அவர் தனது அலுவலக அறையில் வந்து பார்க்கும்படி கூப்பிட்டு விட்டார். நான் சென்று பார்த்த போது, நான் வேலை பார்த்த தொழில்நுட்பம் குறித்து அனைவருக்கும் ஒரு செமினார் கொடுக்கச் சொன்னார். சரியென்று ஒத்துக் கொண்டேன். இருந்தும் என்னைச் சோதிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட தேவையில்லாத வேலை என்ற எரிச்சல் மனதிற்குள் மண்டியிருந்தது.

அறை நிறைய அதிகாரிகளும் சக பணியாளர்களும் அமர்ந்திருக்க, அவர் மட்டும் நேர்காணல் எடுக்கும் தொனியில் டைரி, பேனா என்று முழுத் தயாரிப்புடன்  செமினாருக்கு வந்திருந்தார். “நீங்க என்ன என்னை சோதித்து மதிப்பெண் கொடுப்பது?” என்ற ஈகோவில் ஏனோ தானோவென்று துவங்கினேன். இரண்டே நிமிடத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார். கேள்வியின் உண்மைத் தன்மை என்னைச் சுட்டது. அவர் என்னைச் சோதிக்க வரவில்லை,  உண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறார் என்று எனக்குப் புலப்பட்டது. பிறகு அவர் சந்தேகத்துக்கு விளக்கம் கொடுத்து, உண்மையான அர்ப்பணிப்புடன் எனக்குத் தெரிந்த விஷயங்களை எளிமையாக ஆரம்பித்து, கடுமையான பகுதிகள் வரை ஒவ்வொன்றாக விளக்கம் கொடுத்தேன். சுமார் ஒருவாரம், தினமும் மதிய உணவு இடைவேளையின் போது நடந்த செமினாரின் முடிவில் இருவரும் சீனியர் ஜூனியர் பாகுபாடின்றி அலுவலக ரீதியாக இயல்பாகக் கலந்துரையாடும் நிலைக்கு வந்திருந்தோம். துறையில் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர் என்று பெயரெடுத்தவர், உண்மையான திறமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுப்பார் என்று நேரடியாக உணர்ந்தேன். அது நடந்து ஆகின்றன 19 ஆண்டுகள்  ...

அப்போதே, அருண்மொழி அம்மா அவரது மகள் நினைவாக, சமூக நிலையில், பொருளாதாரத்தில், குடும்ப அமைப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விச் சேவையில் பங்காற்றி வந்தார். அவருக்கு உதவியாக நானும், என் அலுவலக நண்பர்களும் பணி முடிந்த மாலை நேரங்களில் தினமும் செல்லத் துவங்கினோம்.  அவர் தலைமையில் சேவாலயம்  மாணவர் விடுதிக்குச் சென்று மாணவர்களுக்குத் தனிவகுப்புகள் நடத்தினோம், பொருளாதார உதவிகள் செய்தோம், மாணவர்களின் மேல்படிப்புக்காக துறை வல்லுநர்களை, புரவலர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டினோம். தனித்தனியாகச் செய்து வந்த உதவிகளை ஒருங்கிணைத்து, பின்பு “சியாமளா கல்வி அறக்கட்டளை” என்ற குடையின் கீழ், மாணவர்களுக்கான உதவியைத் தொடர்ந்தார் அருண்மொழி அம்மா. நானும் சில நண்பர்களும் உடன் இருந்து பணியாற்றுகிறோம். இத்தகைய எனது ”மெண்ட்டாரை” இந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி இழந்துவிட்டேன். சமூகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு.

இப்போது எழுதும் போது, “அம்மா” என்று விளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அவரும் அதனை விரும்பியிருப்பார், ஆனால் அவருடன் பேசும்போது “மேடம்” என்பதைத் தாண்டி வாய் எழவேயிவில்லை. பெரிதாக எந்தக் காரணமும் இல்லை என்றாலும்,  முதலில் இருந்த அந்தத் தயக்கம் அப்படியே இறுதி வரை தங்கிவிட்டது. ஆனால், மாணவர் விடுதிக்குத் தனி வகுப்புகள் எடுக்கச் செல்கையில்  எங்களைத் தொடர்ந்து மாணவர்களும் அவரை “மேடம்” என்று அழைக்கத் துவங்க, அதனை கட்டாயமாக மாற்றி, மாணவர்கள் அனைவரையும் அவரை “அம்மா” என்று அழைக்க வைத்தேன். இழந்த தன் ஒரு மகளின் நினைவாக அவர் செய்த நற்செயல்களின் பொருட்டு அவர் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு “அம்மா”வானார்.

அலுவலகம் சார்ந்தும், சமூக நலம் சார்ந்தும் அவர் மூலம் கற்றுக் கொண்டது ஏராளம். அதைவிட மிக மிக முக்கியமான தருணம், என் வாழ்க்கைத் துணையை நான் கண்டடைந்தது அவரது அறிமுகத்தின் மூலமே. அதற்காக என் வாழ்நாள் நன்றிக்கடனுக்கு உரியவர் அவர். ஆனால் அதன் பொருட்டே சில பிணக்குகளும் ஏற்பட்டன. அவரைப் பொருத்தவரை, அன்பென்றாலும், ஆத்திரமென்றாலும் அதிரடி தான். சில ஆண்டுகள் தனிப்பட்ட முறையில் எங்கள் மேல் கோபம் கொண்டிருந்தார். ஆனாலும் அலுவகப் பணியிலும், அறக்கட்டளைப் பணியிலும் எந்த விலக்கமும் இன்றி தொடர்ந்து வழிநடத்திய வண்ணமே இருந்தார். நானும் கேட்டதற்கு பதில் சொல்லி, கொடுத்த பணியை மனசாட்சிப்படி திறம்பட செய்தேன் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு, அவரது பெருந்தன்மை காரணமாக மீண்டும் எங்களுடன் நன்றாகப் பேசத் துவங்கினார். பணி மாறுதல் காரணமாக உள்ளூரை விட்டு ஒசூர் வந்தபோதும் அவரது அணுக்கமும், வழிகாட்டுதலும் தொடர்ந்தபடியே இருந்தது.

சமூகக் கடமைகள் போக, தொன்னூறுகளின் இறுதியில் இருந்த அவரது அப்பாவைப் பராமரிக்கும் பணி அவருக்கு இருந்தது. பல ஆண்டுகளாக தீவிரமாக விபாசனா தியானத்தை மேற்கொண்ட அனுபவம் உள்ள அவர், தனது அப்பா காலத்திற்குப் பிறகு முழுமையாக விபாசனா தியானத்திற்குத் தன்னைப் ஒப்புக்கொடுத்துப் பணி செய்ய எண்ணியிருந்தார். ஆனால் காலம், அப்பா இறந்ததும் அவர் பூமிக்கு வந்த பணி முடிந்தது என்று தீர்மானித்துவிட்டது போல. அவரது அப்பா இறந்த ஒரு மாதத்திற்குள் அருண்மொழி அம்மாவும் திடீரென இறந்துவிட்டார். அவர் விட்டுச் சென்ற “சியாமளா கல்வி அறக்கட்டளை” பணி மீதமிருக்கிறது.  சுமார் நூறு உறுப்பினர்களோடும், முப்பதுக்கும் மேற்பட்ட மாணவப் பயனாளர்களோடும் இயங்கி வரும் அறக்கட்டளையை திறம்பட நடத்த, அவர் வழிகாட்டிய எங்கள் குழுவிற்குக் காலம் உறுதுணை புரியவேண்டும்.

இந்த ஆண்டும் கணிசமான அளவு எழுதினேன். இயக்குநர் நண்பர் ஒருவருக்காக நான்கு திரைக்கதைகளின் ஒன்-லைனர்களையும், காட்சிச் சுருக்கங்களையும் எழுதினோம், இருந்தும் முழுமையான திரைக்கதை வடிவமாக மாற்றவில்லை. இரண்டு நாவல்கள் பாதி எழுதி நிற்கின்றன. இவை எவையுமே முழுமை பெறாதாதால் இவற்றை எழுத்துப் பணி கணக்கில் சேர்க்க முடியாது. நேரம் போதவே இல்லை என்று அழகாகக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையில் ஒழுங்கான நேர மேலாண்மையில் இவற்றை முடித்திருக்க முடியும் என்று உள்ளுக்குள் உறுத்தியபடியே தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு சாக்குப் போக்கு சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும், பிறகு வேலைகள் தாமாக நடந்து முழுமை பெறத் துவங்கும். ஆண்டு இறுதியில் “நஞ்சுக் கொடி” சிறுகதைத் தொகுப்பு மட்டும் வெளியாகிறது. புத்தாண்டில் புத்தகம் உங்கள் கைகளில் கிடைக்கும். வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிருங்கள். கேட்கவும், கற்றுக்கொள்ளவும் காத்திருக்கிறேன்.

இந்த வருடம் தங்கள் புதிய புத்தகங்கள் குறித்துக் முன்னுரை, விமர்சனம், மதிப்புரை கேட்டுச் சிலர் அணுகினர். அவை ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், “அடே நான் எழுத நினைத்து எழுதாததே இன்னும் நிறைய இருக்கேடா, அதுக்குள்ள சீனியர் சிட்டிசனாக்கி கருத்து கேட்குறீங்களே” என்று தோன்றாமல் இல்லை. கேட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். இன்னும் நாம் இளையர் இல்லை. காலம் கடத்தாமல் எழுத வேண்டியதை சீக்கிரம் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறது. வரும் வருடமும் எழுத்து, வாசிப்பு, கற்றல் உட்பட மனதிற்குப் பிடித்ததை செய்துகொண்டு இங்கே தான் ஓரமாக சுற்றிக் கொண்டிருப்பேன். 

மற்றுமொரு துவக்கம், அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக 2024 அமையட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!

#HappyNewYear2024

Monday, July 25, 2022

தவிட்டுக் குருவி

#memoriesforlife 
---
”ஒரு தோட்டத்தில், மரத்தைச் சுற்றி காலாற நடை பயின்று கொண்டிருந்தது ஒரு பூனை. ஒரு தவிட்டுக் குருவி பறந்து பறந்து வந்து அந்த பூனையைக் கொத்திச் சென்றபடியே இருந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டிருந்த பூனை ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஒரே தாவலில், அந்தக் குருவியைப் பிடித்துவிட்டது. பூனை குருவியைக் கடிக்கப் போனது.”

இந்தக் கதைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள் என்றுதான் இன்று ”வருங்கால எழுத்தாளர்களே” என்ற தலைப்பில் நடந்த வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான இணைய பயிற்சிப் பட்டறையில் என் பேச்சைத் துவக்கினேன். இதே கதையை பெரியவர்கள் கலந்துகொண்ட வேறு சில நிகழ்வுகளிலும் சொல்லி இருக்கிறேன். பெரியவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல், “வலியவனிடம் வம்பிழுக்கும் எளியவனுக்கான தண்டனை அது” என்றே கூறினர். ஆனால் இன்று சிறுவர்கள் ஒருவர் கூட அந்த திசையில் யோசிக்கவில்லை என்பதோடு, விதவிதமான நேர்மறை முடிவுகளைச் சொல்லி அசத்தினர். வழக்கமாக, கலந்துரையாடல் முடியும் போது, ”அந்த பூனைக்கு அருகில் மரத்தின் மேலிருக்கும் கூட்டில், அந்தக் குருவியின் குஞ்சுகள் இருந்தன” என்று ஒரு துப்பினைக் கொடுத்த பிறகு பெரியவர்கள் அப்படியே முடிவை மாற்றிச் சொல்வார்கள். ஆனால் இன்று அதற்கான தேவைகூட வரவில்லை. கதையின் முடிவை வெவ்வேறு விதங்களில் சொன்ன மாணவர்கள் அனைவருக்குமே குருவியைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாக இருந்தது. அதிலும், ஒரு சிறுமி இன்னும் ஒரு படி மேலே சென்று, “பூனைக்குப் பின்புறம் ஒரு பாம்பு வந்துகொண்டிருந்தது. பாம்பிடமிருந்து பூனையைக் காப்பாற்றும் பொருட்டே குருவி பறந்து பறந்து கொத்தி எச்சரிக்கை செய்தது” என்று கதையின் முடிவைச் சொன்னதுடன் அதை அந்தக் குறைந்த இடைவேளையில் அழகிய படமாகவும் வரைந்து வைத்திருந்தாள். ஒரு நிமிடம் கண் கலங்கிவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிக நிறைவான ஒரு நிகழ்வு. நிகழ்வின் முழு காணொளி முதல் மறுமொழியில் இருக்கின்றது. நேரமிருக்கும் நண்பர்கள் பார்க்கலாம்.

இணைய நிகழ்வை திறம்பட நடத்தி, காணொளியும் பதிவு செய்த KenBridge Schoolக்கு நன்றி !

******

Thursday, July 21, 2022

அதிகாரம்!

ஒசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்குச் சென்று வர சுமார் இரண்டாயிரம் பேர் பயணிகள் ரயிலை நம்பி உள்ளனர். ஏற்கனவே இருக்கும் ரயில் எண்ணிக்கை போதுமானதாக இல்லாத நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில் நிறுத்தப்பட்ட சில ரயில்கள் இன்னும் இயக்கப்படவில்லை. மக்கள் அதற்கான கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளிடமும், அரசியல்வாதிகளிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் கொடுத்து பல மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.

தென்மேற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு ஒசூர் பயணிகளின் மேல் எப்போதும் அளவுகடந்த பாசம். அதற்குத் தற்போதைய எடுத்துக்காட்டு, "கூடுதல் ரயில் தானே கேட்ட, இந்த வச்சுக்கோ!" என்று மாலை 3 மணிக்கு யஷ்வந்த்பூரில் கிளம்பி, ஒசூருக்கு மாலை 5 மணிக்கு வந்து, மீண்டும் ஒசூரில் இருந்து மாலை 7.30மணிக்கு யஷ்வதந்த்பூர் சென்று சேர்வது போல ஒரு சிறப்பு பயணிகள் ரயிலை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது தேவை அதிகம் இருக்கும் திசைக்கு நேர் எதிரில் சேவையை அதிகரித்துள்ளனர்.

இதே போல தான் ஒசூர்க்காரர்களின் தொல்லை தாங்க மாட்டாமல், சென்ற ஆண்டு மதியம் 12.00 மணிக்கு ஒசூரில் இருந்து கிளம்பி, 1.30 மணிக்கு பெங்களூர் சென்று மீண்டும் 3.00 மணிக்கு ஒசூர் வரும் ஒரு சிறப்பு ரயிலை விட்டனர். அது எதிர்பார்த்தது போலவே, காலி பெட்டிகளுடன் சென்று திரும்பியதால் ஒரு மாதத்தில் "ஓசூர் பயணிகளிடம் பெங்களூர் ரயில்களுக்குப் போதிய வரவேற்பு இல்லை" என்று அந்த ரயிலை ரத்து செய்துவிட்டார்கள். இப்போது அறிவித்திருக்கும் புதிய ரயிலுக்கும் அதே கதி தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு பக்கம் பயணிகள் ரயிலுக்கு இன்றியமையாத தேவை இருக்கும் போது, மக்கள் பலவிதங்களில் அழுத்தம் கொடுத்து சேவைக்கான ஆணைகளைப் பெற்றாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்களோ அது தான் நடக்கிறது. கோப்புகளின் சாட்சிகளின் படி, "இந்தத் தடத்தில் புதிய ரயில் விடப்பட்டது, மக்களிடம் ஆதரவு இல்லை, அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது, எனவே ரயில் ரத்து செய்யப்படுகின்றது" என்று அழகாக நோட் ஷீட் எழுதி மூடி வைத்துவிடுவார்கள். அதனைப் பிற்காலத்தில் யாரும் சோதனை செய்ய வேண்டி வந்தாலும் "ஆமாம் சரி தான்" என்றே தீர்ப்பெழுதப்படும்.

உண்மையில் காலையில் பணிக்குச் செல்ல ஒசூரில் இருந்து பெங்களூருக்கும், மாலையில் பணி முடிந்து பெங்களூரில் இருந்து ஒசூருக்கும் வரும்படியான கூடுதல் ரயில்களை எதிர்பார்த்திருக்கும் ஒசூர் வாசிகள், "எங்களைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது?" என்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

#HosurDiary
#TrainStory

- பாலகுமார் விஜயராமன்

Friday, March 18, 2022

கடைசி விவசாயி !

 கடைசி விவசாயி !


May be an image of 2 people, outdoors and text
தமிழ் சினி்மா விவசாயத்தைக் கொலையாய் கொன்றெடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் விவசாயியை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

சினிமா பார்ப்பது போலவே இல்லை, இப்படம் மிக இயல்பாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். எனக்கு அது மட்டுமே கொஞ்சம் குறையாகத் தோன்றியது. இதே சரடை இன்னும் சற்று திரைமொழி சேர்த்து, காட்சிகளை இறுக்கக் கோர்த்திருந்தால் இந்தக் கதை பொதுமக்களின் மனதில் ஆழமாகச் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். படத்தில் ஆசுவாசமான மிகப்பெரிய விஷயம், விவசாயியை நல்லவராகக் காட்ட சுற்றி இருப்பவர்களை கொடூரர்களாகச் சித்தரிக்கவில்லை. மனிதர்கள் எல்லோரும் சூழ்நிலைக் கைதிகளே. அவரவர் வாழ்க்கை முறைக்கு அவரவர் நியாயம் சேர்க்கின்றனர். அதிலும் நீதிபதி தான் சார்ந்துள்ள சட்ட அமைப்பின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்தபடி புழுங்குவதும் முதியவர் இறந்துவிட்டார் என்று குற்றவுணர்வோடு கைகளைக் கோர்த்து வேண்டியபடி பரிதவிப்பதும் மிக இயல்பு.

பணியாரத்தை சிணுக்கருக்கியால் திருப்பிப் போடுகையில் அந்தச் சிறுபெண் ரசித்துச் சிரிக்கும் ஒரு சிரிப்பு, ”என்னவாம்.. உன் வம்சமே கிறுக்குப்பய வம்சமாமே, உன்னை எப்படி கல்யாணம் பண்ணனு எங்கம்மா சொல்லுச்சு” என்று குடத்துடன் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண் போகுற போக்கில் ஒரு காதலை மறுதலிக்கும் இயல்பு, இராமையா கேட்காமலே பெரியவர் மூன்று பேருக்கு சோறு பரிமாறி வைக்கும் இடத்தில் அவர் அவனை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்ற நுணுக்கம் என்று நிறைய இடங்கள் ரசிக்க வைத்தன.

ஞானக்கிறுக்கனாக இராமையா பாத்திரத்தை விஜய் சேதுபதி மிக விரும்பி ஏற்றிருப்பார் என்றே தோன்றுகிறது. இராமையாவின் நடையும் பயணமுமே தனிக்கதை. அந்தப் பாத்திர வார்ப்பும், ஒப்பனையும் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அதில் சிறு பிசிறு, அரூபமாய் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளுக்கு வைத்திருக்கும் தேநீரை இன்னொருவன் எடுத்துக் குடிக்கும் போது, அங்கே விஜய் சேதுபதி இருந்ததால் அவனை வெளுத்துவிடுகிறார். உண்மையில் அந்த இடத்தில் இராமையா ஊர்க்கார்களிடம் அடிவாங்கி, புழுதி மண்ணோடும் சிராய்ப்புகளோடும் சிரித்தபடியே கைச்சுமையைத் தூக்கிக் கொண்டு போய், பூட்டுக் குழம்பும் மோதிர அப்பளமும் சாப்பிட்டுக் கிளம்பியிருப்பான்.

படத்தில் தேவையில்லாத இடைச்செருகல், தனது காட்டை விற்று யானை வாங்கி மேய்த்துக் கொண்டிருக்கும் யோகிபாபு பாத்திரம். இக்கதைக்கு யோகியும் யானையும் எந்தவொரு நியாயத்தையும் சேர்க்கவில்லை என்பதோடு எளிய மனிதர்களின் ஊடே அவர்களது ஊர்வலம் தேவையில்லாத ஆடம்பரமே. அதுபோல, குலசாமி நேர்த்திக்கடனுக்காக நெல்லுப் போடும்போதும் நூறுநாள் வேலையில் இருக்கும் ஊர்மக்கள் யாரும் வரமாட்டார்கள் என்பது, காலாவதியான பூச்சி மருந்தை அடித்ததால் பயிர்கள் செத்துப் போவது என்ற சில இடங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. இன்னொரு விஷயம், இக்கதையை இயக்குநர், ரஜினிக்குச் சொன்னார் என்று செய்தி உலவுவதாகக் கேள்விப்பட்டேன். மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

விவசாயம் என்பது புனிதம் அல்ல, ஒரு விதை எத்தனை காலமானாலும் தனக்குத் தேவையான ஒளியும் நீரும் கிடைக்கும்போது தானாக உயிர்பெறும். அது போல, முறைகள் எப்படி மாறினாலும், நவீனம் புகுந்தாலும் ஒரு பயிர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு எப்படியும் மண்ணில் உயிர்பெறும் என்ற கருத்து மனதுக்கு அணுக்கமாகத் தோன்றியது. ஒரு காட்சியில் சிறைக்கைதி ஒருவன் வெறும் மண்ணைப் பாத்திரத்திலிட்டு அதற்கு நீரும் ஒளியும் தரும்போது அதிலிருந்து ஒரு தளிர் துளிர்க்கிறது. “மண்ணில் ஆயிரக்கணக்கான விதை போட்டுருக்கான். உனக்கு வேப்பங்கன்று கொடுத்திருக்கு பாரு!” என்று விவசாயம் கற்க நினைக்கும் அவனிடம் பெரியவர் கூறுகிறார். எனக்கு நேசமித்ரனின் இக்கவிதை நினைவில் வந்தது.

விற்றபிறகும் சங்கையும் நுகத்தடியையும்
பரணுக்குள்
சொல்ல விரும்பாத அவமானத்தைப் போல்
ஒளித்து வைத்திருக்கிறவனின் நம்பிக்கையை
நாளை என்ற சொல் மீது
நத்தைக் கூடு போல் சுமந்து நகர்கையில்
சீழ்கட்டிய குளம்புகளுள்ள குதிரைகள் பூட்டிய தேரில்
ஒரு நாளை அஸ்தமனத்திற்கு இட்டுச் செல்லும் வதை

தன் கடைசி நாணயத்திற்கான மலினச்சீட்டுப்
பேருந்துக்கு
கர்ப்பவதியுடன் காத்திருத்தல்
யாரோ வந்து எல்லோருக்கும் கொடுத்தது போக
கொண்டு முடியாமல் மீதமிருக்கிறது என்றபடி
ஒரு மலைவேம்புக் கன்றை கையளிக்கிற
இவ்வாழ்வு எவ்வளவு அனிச்சையானது!

(ஜெல்லிமீன்கள் கரையொதுங்கும் கடல் - நாட்குறிப்பு, பக்கம்: 101)

Monday, December 24, 2018

வாசகசாலை – முப்பெரும்விழா 2018 – அனுபவங்கள்




பத்தாண்டுகளுக்கு முன், வலைப்பூ (Blog) மூலமாக எழுத ஆரம்பித்தவர்களில் கணிசமானவர்கள் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் இருந்து, இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

22/12/2018 அன்று வாசகசாலை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த “முப்பெரும்விழா”, அவர்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்வு நிறைவான ஒன்றாக இருந்தது.

வாசகசாலை இந்த ஆண்டுதான், மொழிபெயர்ப்பு பிரிவுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இருப்பதிலேயே காஸ்ட்லியான கோட்-சூட் காஸ்ட்யூம் கொடுத்திருந்தாலும், தாலிகட்டும் நேரத்தில் நேக்காகக் கழற்றிவிடப்படும் தமிழ்சினிமாவின் அமெரிக்க மாப்பிள்ளை போல் இருந்த மொழிபெயர்ப்பாளர்களை, நான்கு ஹீரோக்களில் ஒருவராக்கி மேடையில் அமரவைத்ததற்கு நன்றி என்று எனது ஏற்புரையில் குறிப்பிட்டேன்.

எனது மொழிபெயர்ப்பின் துவக்கவிடமான ’வலசை’ மற்றும் இந்நூலில் உள்ள கதைகள் தேர்வின்போது  கவிஞர் நேசமித்ரன், மறைந்த எழுத்தாளர் அர்ஷியா, நண்பர் கார்த்திகைப்பாண்டியன் ஆகியோருடனான எனது தொடர் உரையாடல்கள் குறித்தும் சிறிது பேசினேன்.

இன்னும் நிறைய பேசக் குறிப்புகள் வைத்திருந்தேன். புத்தகங்கள் வெளியீடு, வாசகசாலை ஆண்டுவிழா, விருதுகள் வழங்குதல் என்று மூன்று நிகழ்வுகள் இருந்ததால், மிக நீண்ட மாலை போலத் தோன்றியது. அரங்கில் பொறுமையாக அமர்ந்திருந்தவர்களுக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என்பதால், சுருக்கமாக முடித்துக்கொண்டேன்.
நீண்ட தூரத்திலிருந்து க.ரா வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் பதிப்பாளர் ‘நூல்வனம்’ மணிகண்டனை தொலைபேசி பேச்சின் வழியாக அறிமுகப்படுத்தினார். எனது இரண்டு புத்தங்கள் ‘நூல்வனம்’ மூலமாக வெளிவந்துவிட்டன. இப்போது தான் மணிகண்டன் அவர்களை முதன்முறையாக நேரில் சந்தித்தேன்.

நிகழ்வு இடைவெளியில் அருணாச்சலம் சார் உடனும், எழுத்தாளர் கணேசகுமாரனோடும் பேசிக்கொண்டிருந்ததில் சிறுதானிய ஸ்நாக்ஸ் சாப்பிடவிட்டுப்போய்விட்டது. உமா மோகன் மேடம், ஜான்சி மேடம், கலையரசி மேடம் ஆகியோரை அருணாச்சலம் சார் அறிமுகப்படுத்திவைத்தார்.

விருது அறிவித்ததில் இருந்து, கார்த்திகேயன் தொடர்பில் இருந்தபடியே இருந்தார். குடும்பத்தோடு வருகிறேன் என்றதும், பயண ஏற்பாடு, தங்கும் வசதி போன்றவற்றை கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொண்டார். விழாவுக்குச் சென்றதும் அவரையும், அருணையும் பார்த்ததும் சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன்.

பி.கு.விடம் நீங்கள் மாரி செல்வம் தானே என்று கேட்டு பல்பு வாங்கியபின், மாரி செல்வம் தானாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டார். சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் சு.வெங்கடேசனிடமும், எழுத்தாளர் எஸ்.பாலபாரதியிடமும் அறிமுகம் செய்துகொண்டு இரண்டு வார்த்தைகள் பேசினேன்.

விக்னேஷ்வரன், விருதுக்குத் தேர்வான எனது “கடவுளின் பறவைகள்” புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தார். கணவனையும், மகனையும் கொன்றவனை சட்டத்திற்குமுன் நிறுத்தும் பெண்ணின் போராட்டம் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது, பிசிறில்லாத மொழிபெயர்ப்பு (’காட்டுமிராண்டிகள்’ சிறுகதை) என்று வாழ்த்தினார். மகிழ்வாக இருந்தது.

கார்த்திகைப்பாண்டியனின் ஃபிரண்ட் என்று ஓர் இளம்பெண் (செல்வராணியா, யோகநந்தினியா? ) அறிமுகம் செய்துகொண்டு பேசினார். நானும் அவர் ஃபிரண்ட்தாங்க! என்று பதில் அறிமுகம் செய்துகொண்டேன்.

ஃபெட்ரிக்கும், பிரவீண் குமாரும் சிரமம் பார்க்காமல், நாங்கள் தங்கியிருந்த அறைக்கே வந்து, வசதிகள் குறித்து சரிபார்த்துவிட்டுச் சென்றனர்.

திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டதுமுதல், விருந்தினர் உபசரிப்பு, மண்டப ஏற்பாடு, சமையல் மெணு, போக்குவரத்து, ஆடை ஆபரணங்கள் என்று ஒவ்வொன்றாய் பார்த்துப்பார்த்துத் திட்டமிட்டாலும், முகூர்த்ததின்போது தாலிசெயினை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடித்துலாவி, பின் சரி அதற்குபதில் சாமி கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறை எடுத்துக்கட்டுங்கள் என்பது போன்ற சுவாரஸ்யமான குளறுபிடிகள் நடந்தன.

சிறப்புரை ஆற்றவந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசுவதற்குமுன் இடைவேளை அறிவித்து, பாயாசம் சாப்பிட அழைப்புவிடுத்தது, புத்தக வெளியீட்டின் போது, வேறு புத்தகம் உள்ள பார்சலை வைத்தது, புத்தகம் பெற்றுக்கொள்பவர் என்று பெயர் அறிவிக்கப்பட்டபின் அவரைத்தேடி வாசலுக்கு ஓடி, அவரை அங்கே காணாமல், அவருக்கு மாற்றாக அருகில் நின்றுகொண்டிருந்த வேறு ஒரு நண்பரை புத்தகம் பெற்றுக்கொள்ள வைத்தது என்று இந்த சுவாரஸ்ய தருணங்களில், ஒருங்கிணைப்பாளர்களுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை, எதிரில் இருந்து வேடிக்கை பார்க்கையில் நமக்கு ரசிக்கும்படி ஜாலியாக இருந்தது.

சிறப்புரையில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எந்தவிஷயம் செய்வதானாலும், அதற்குரிய முக்கியத்துவத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினார்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள், ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொள்வது, அவர்கள் நிகழ்வுக்கு அவர்களே மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பது என்பதுபோன்ற மேம்போக்கான விஷயங்கள் மட்டுமே தெரிந்தாலும், உண்மையில் இத்தகைய நிகழ்வுகளை நடத்துவதற்கு இவர்களிடம் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகச்சிறப்பானவை. அதற்குண்டான நீண்டகால வெற்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்.

பொதுமக்களின் தளத்திற்கு இலக்கியம் சென்றடைய, நிச்சயம் பெண்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே முடியும். அவ்வகையில் வாசகசாலை பெண்களின் தொடர்பங்களிப்பு மிகவும் பாராட்டப்படவேண்டியது. முப்பெரும் விழா ஏற்பாட்டிலும், ஒருங்கிணைப்பிலும், விருதுக்குரிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதிலும், தொகுத்து வழங்கியதிலும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அடுத்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முகத்தை மாற்றியமைப்பதில், வாசகசாலையின் பங்கு நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். வாழ்த்துகள் நண்பர்களே, தொடர்ந்து பயணிப்போம்.

#வாசகசாலை
#முப்பெரும்விழா2018
******

Monday, April 10, 2017

சிறுகதைப் பயிலரங்கு – பிப்ரவரி 2017 குறித்த அனுபவங்கள்



உயிரோடை மற்றும் காலச்சுவடு இணைந்து நடத்திய, உண்டு உறைவிட வசதியுடன் கூடிய கட்டணமில்லா, மூன்று நாள் பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளயத்தில் உள்ள சக்தி திருமண மண்டபத்தில் பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெற்றது. அதில் பங்கேற்பாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் காணக்கிடைக்காத ஒழுங்கமைவுடனும், துறைசார் தகைமையுடனும் சிறப்பாக நிகழ்ந்தது இப்பயிலரங்கு. மூன்று நாட்களும் நம் மனதுக்குப் பிடித்த, மதிப்பிற்குரிய பேராசிரியர்களுடனும், பிரியமான நண்பர்களுடன் சுற்றுலா சென்று வந்த கல்லூரிக்காலங்களை மீட்டெடுத்தன.

மொத்தம் அனுமதிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் 15 பேர்களுக்குள் தான். பெரும்பாலும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். இவர்களுடன் கலந்துரையாடி, இவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்காக வந்த எழுத்துலக வல்லுநர்கள் எட்டு பேர். யோசித்துப் பாருங்கள், 15 பேருக்குப் பயிற்சியளிக்க 8 பேர், அதுவும் மூன்று நாட்கள். மிகச்சிறப்பான அரிய வாய்ப்பு. பங்கேற்பாளர்கள் இதனை முடிந்தமட்டும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  மூன்று நாட்களில் வெவ்வேறு அமர்வுகளில் ஆளுமைகள் ஒவ்வொருவருடனும் நேருக்கு நேர் விவாதித்து பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான களமாக அமைந்தது. மொத்த நிகழ்வுகளுக்கும் முதுகெலும்பாக நின்று செயலாற்றியவர் கவிஞர் சுகுமாரன் அவர்கள். அவரின் ஞாபகத்திறனும், அர்ப்பணிப்பும் மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு விவாதங்களின் போதும் மிகச்சரியான உதாரணங்களையும், விளக்கங்களையும் சொன்னது மட்டுமல்லாமல், பேச்சுகள் திசைமாற நேர்கையில், நேர்கோட்டிற்கு இழுத்து வந்து நிகழ்வினை செம்மையாக்கியவர் அவர் தான். ஒரு பேராசிரியருக்கே உரிய அக்கறையுடனும், கண்டிப்புடனும் பயிலரங்கை சிறப்பாக வழிநடத்தினார்.

எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், எளிமையின் மறு உருவம். பங்கேற்பாளர்கள் கேட்ட மிக சாதாரணமாக கேள்விக்களுக்கும் பொறுமையாகவும், விளக்கமாகவும் சிரித்த முகத்துடன் பதில் கூறியபடியே இருந்தார். தூரத்தில், உயரத்தில் வைத்து அண்ணாந்து பார்க்கும் எழுத்தாளுமை எழுத்தாளர் பெருமாள் முருகன். அவருடன் சமமாக அமர்ந்து விவாதிக்கின்ற வாய்ப்பை இப்பயிலரங்கன்றி வேறு எப்படி பெற்றிருப்போம் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும் போதும், கவிஞர் க.மோகனரங்கனின் விஷய ஞானம் பிரமிக்க வைத்தது. கவிஞர் சக்திஜோதி  மற்றும் எழுத்தாளர்கள் சீனிவாசன் நடராஜன், கே.என்.செந்தில், குமாரநந்தன், களந்தை பீர் முகமது, ஸ்டாலின் ராஜாங்கம், பழ.அதியமான் ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

அறிமுகப்படலத்திற்குப் பின்னான முதல் அமர்வில், பயிலரங்கிற்கான நோக்க உரையை எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்த்தினார். கிரியேடிவ் ரைட்டிங் என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை என்று தான் நம்புவதாகவும் ஆனால் எழுதும் ஆர்வமுள்ள இளையோருக்கு சில அடிப்படைகளை விளக்குவது பயனளிக்கும் என்றும் விளக்கினார். தமிழ் சிறுகதையின் வரலாறு மற்றும் துறை சார்ந்த முன்னோர்கள் பற்றிய அறிவு, புதிய தற்காலத்திற்குண்டான கருப்பொருட்களை எடுத்துக் கொள்ள வழிவகுக்கும் என்றும் கூறினார். ஐம்பது வருடங்களுக்கு முன் பூடகமாய் சொன்ன ஒரு விஷயத்தினை இன்று மிகச்சாதாரணமாய் வெளிப்படையாய் சொல்ல முடியும் எனும் போது, என்ன விஷயங்களை எழுத்தாளர்கள் எப்படி எழுத்தில் கொண்டு வரலாம் என்று சில உதாரணங்களுடன் விளக்கினார்.

கு.ப.ரா வின் “விடியுமா” சிறுகதையில், தன்னை கொடுமைப்படுத்தி வந்த கணவன் இறந்த தினத்தில் மனைவிக்கு மனதுக்குள் எழும் மகிழ்ச்சி, அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் அவள் படும் அவஸ்த்தை ஆகியவற்றை இன்றைய தினத்தின் சிறுகதையான வாமு.கோமு வின் ”மயிலாத்தா திருவிழாவிற்குப் போனாள்” கதையில் “ஒன்னும் சரிப்படாட்டா உனக்கு சோத்துல விஷம் வச்சிருவேன்” என்று வரும் உரையாடலோடு ஒப்பிட்டுப்  பேசினார். அகம் சார்ந்த உணர்வுகள் எழுத்தாளனுக்கு உள்ளிருந்து தான் தோன்றவேண்டும் ஆனால் புறம் சார்ந்து எப்படி வெளிப்படுத்துவது என்பதனை பயிற்சி மூலம் பெற முடியும் என்றும் கூறினார்.

இரண்டாம் அமர்வு, தமிழ் சிறுகதைகளின் வரலாறு பற்றி பேராசிரியர். மதிவாணன் பேசினார். மு. வரதராசனார் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வந்த தனக்கு ஏற்பட்ட போதாமை, பின்பு ஜெயகாந்தனிடம் ஈர்ப்பு, அது தனக்குள் இன்று வரை நீடித்து இருப்பது பற்றிய பிரமிப்பு ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மற்ற வடிவங்களுடன் ஒப்பிடும் போது, சிறுகதை வடிவம் தமிழுக்குப் புதிது என்றும், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் பற்றியும், முதல் உரைநடை நூலிலேயே வழக்குச் சொற்கள் வந்துவிட்டன என்றும் கூறினார். அச்சு இயந்திரத்தின் வருகை, நாட்டின் எழுத்தறிவு சதவீதமும் அதிகரிப்பு ஆகியவற்றிற்குப் பின், சமூக அரசியல் சார்ந்த படைப்புகள் வரத் துவங்கின. பண்டித மொழியிலிருந்து எளிய எழுத்துமுறை பரவலான வாசிப்புக்கும் வித்திட்டது. ”தமிழ் சிறுகதை வரலாறும் , வளர்ச்சியும்” என்ற புத்தகம் 1980 வரையிலான படைப்புகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. அதை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அனுபவம் கிடைக்குமென்றும் கூறினார்.

தமிழ்சிறுகதை உலகின் பிதாமகனாக வ.வே.சு அய்யரைக் குறிப்பிடலாம். சிறுகதையிலும் கவிதைச் சுவை இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர். சிறுகதை உலகின் பெரிய பாய்ச்சல் என்பது புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. அவர் எழுதிப்பார்க்காத வகைமைகளே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இன்றும் மேற்கோள் காட்டக் கூடிய அனைத்து வகைமைகளிலும் அவர் எழுதியிருக்கிறார். அது போல, சமூக சீர்திருத்தக் கதைகளை  எழுதிய அ.மாதவய்யர் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெறும் கேட்லாக் பத்திரிகை என்ற நிலையிலிருந்து எழுத்தையும் வியாபாரமாக்கலாம் என்று முதலில் நிரூபித்தவர் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் அதனைத் திறம்பட செயல்படுத்தியவர் சி.பா. ஆதித்தனார். 1929-30 வாக்கிலேயே வணிக எழுத்து, இலக்கிய நயம் உள்ள எழுத்து என்ற வகைகள் வந்துவிட்டன. கு. அழகிரிசாமியை கரிசல் இலக்கியத்துக்கான முன்னோடி எனலாம். தி.ஜானகிராமனின் “ரசிகனும் ரசிகையும்” முழுக்க உரையாடல்களாலேயே ஆன கதை.  பின் வந்தவர்களின் விளிம்பு நிலை மனிதர்களின் சித்திரத்தை எழுதிய ஜி. நாகராஜனும், ராஜேந்திர சோழனும், பூமணியும் முக்கியமானவர்கள். பின் தொன்னூறுகளுக்குப் பின்னால் வளர்ந்த தலித்திய மற்றும் பெண்/பெண்ணிய எழுத்துக்களும் கவனிக்கத்தக்கவை. இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களின் கதைகளை எழுதிய மீரான் மைதீனும், கரிசல் கதைகளை எழுதிய கி.ராவும் முக்கியமானவர்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள், தமிழின் முக்கியமானவர்களின் படைப்புகளை ஒரு சேர வாசிப்பதற்கான களமாக இருக்கும். அம்பை, திலீப் குமார், லா.ச.ரா, பா.ஜெயப்பிரகாசம், நகுலன், அசோக மித்ரன், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோரும் குறிப்பிடத்தக்கோரில் சிலர்.

எழுத்தின் மூலமாக நாம் காலத்தோடு உரையாடும் கலையைக் கற்கிறோம். அதனை செம்மையாகக் கையாள தொடர்ந்த பயிற்சி மட்டுமே சிறந்த வழி. மொழியை செறிவாக எழுத, ஒரு எழுத்தாளன் சங்க இலக்கியங்களைப் படித்தே ஆக வேண்டும். இவ்வாறு பேரா. மதிவாணன் கூறினார்.

முதல் நாளின் மூன்றாம் அமர்வில், காலச்சுவடு இணை ஆசிரியர் களக்காடு பீர் முகமது தனது கதைகள் தோன்றிய கதையை பகிர்ந்து கொண்டார். மிக வெள்ளந்தியாகவும், சுவாரஸ்யமாகவும், சம்பவங்கள் எவ்வாறு கதையாக ரசவாதமடைகின்றன என்று உதாரணங்களுடனும் விரிவாகப் பேசினார். அதே அமர்வில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தனது பரந்துபட்ட வாசிப்பனுபவத்தை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். சார்லி சாப்ளினி “தி சர்கஸ்” திரைப்படத்தை முன்வைத்தும், தி.ஜா வின் “சிலிர்ப்பு” சிறுகதையை முன்வைத்தும் அருமையாகப் பேசினார்.

இரண்டாம் நாள் அமர்வில் கவிஞர், விமர்சகர் க. மோகனரங்கன் பேசினார். எழுதும் முறைக்கான சூட்சமத்தை சொல்லிக் கொடுத்து விளக்க முடியும் என்றார். ஹெமிங்வேவுக்கும் ஃபார்டனருக்கும் இருந்த எழுத்துமுறை வித்தியாசங்கள், அதனால் அவர்களுக்குள் இருந்த பனிப்போர் ஆகியவை பற்றியும் கூறினார். எல்லா கலைப்படைப்புகளுமே அறிவு வளர்ச்சிக்காக அல்ல, அவை மனதால் உணர்ந்து கொள்வதற்கான என்ற எண்ணம் எழுதுபவர்களுக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். என்னென்ன வகைமைகளில் எழுதலாம் என்பதற்கு புதுமைப்பித்தனே நூலகம் என்றும் தீவிர தத்துவார்த்தம் சார்ந்த எழுத்துக்களுக்கும், வாசிப்பின்பம் சார்ந்த எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமையை ஒரு எழுத்தாளன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எந்த வகைமை கதையாக இருந்தாலும் அதில் உயிர் இருக்க வேண்டும். இலக்கிய வாசகர்களுக்கான உள்ளடக்கம் சார்ந்த மாற்றும் கலைநேர்த்தியான வாசிப்பின்பத்திற்கு அசோகமித்ரனை வாசிக்கலாம் என்றும் சொன்னார். நாம் பார்த்த, கேட்ட, உணர்ந்த சம்பவங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுதல், அவற்றை சிறுகதைகளாக வளர்க்க உதவும் என்றும் விளக்கினார். ஜெயமோகன் எழுதிய “நவீன இலக்கிய அறிமுகம்” எழுத நினைப்பவர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.

பின்நடந்த கலந்துரையாடலில், கதையின் கரு (Theme) மற்றும் களம் (Plot) பற்றியதொரு விவாதம், பங்கேற்பாளர்களையும், வந்திருந்த ஆளுமைகளையும் உள்ளடக்கி நடந்தது. அதன் பின், தொன்னூறுகளுக்குப் பின்னான எழுத்துலகம் பற்றிய தனது பார்வையை எழுத்தாளர் கே.என்.செந்தில் விவரித்தார். எண்பதுகளின் இறுதியில் யதார்த்தவாதங்கள் தீர்ந்து போய், இசங்களின் துவக்கம் நிகழ்ந்தது. அழகிய பெரியவன், ஜே.பி. சாணக்யா போன்றோர் அது வரை சொல்லப்படாத வாழ்க்கை முறையை பேசினர். அவர்கள் மொழியை ஜோடனையுடன் கையாளாமல், அதனை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினர். தனிப்பட்ட முறையில் தான் எழுத்தை கூடு விட்டும் கூடு பாயும் விஷயமாகவே பார்ப்பதாகவும், அதுவரி யோசிக்காத ஒரு விஷயம், எழுதும் போது தன்னியல்பாக வர வேண்டும் என்றும் கூறினார்.

அதன் பிறகு, காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. குருவம்மாள் அவர்கள் தனது மணிப்பிரவாக நடையில், சிறுகதைகள் பற்றியதொரு சிற்றுரையை ஆற்றினார். பின் பங்கேற்பாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, பெருமாள் முருகன், பாவண்ணன், க.மோகனரங்கன், களந்தை பீர் முகமது ஆகியோர் குழுவிற்கு ஒரு ஆலோசகர் என்ற முறையில் நியமிக்கப்பட்டார்கள். பங்கேற்பாளர்களின் சிறுகதைகளை, அவர்கள் வரிக்கு வரி வாசித்து, தங்களது உண்மையான கருத்துக்களையும், கதையை இன்னும் எவ்வாறு மெருகேற்றலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். வழக்கமான பயிலரங்குகள் ஒரு வழிப்பாதையாகவே சென்று கொண்டிருக்கும். இந்நிகழ்வு அவ்வாறின்றி பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கியதாக, அவர்கள் ஓவ்வொருவரின் எழுத்துக்களையும் தனிப்பட்ட முறையில் ஊன்றி கவனித்து ஆளுமைகள் கருத்து சொல்வதாக அமைக்கப்பட்டிருந்தது வெகு சிறப்பு. அதுவே இப்பயிலரங்கின் மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது.

அதன் பிறகான நிகழ்வில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய “பிரசாதம்” மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய “ஒரு மனுஷி” ஆகிய சிறுகதைகளை கவிஞர். எழிலரசி அவர்கள் வாசித்தார். பின் இயக்குநர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொடரில் இருந்து, இந்த இரண்டு கதைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் காட்சியிடப்பட்டன. பிறகு அவற்றைப் பற்றிய விவாதங்களும் நிகழ்ந்தன.

மூன்றாம் நாள் அமர்வில், எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள், தமிழ் எழுத்துலகில் பெண்களின் பங்கு குறித்து  விரிவாகப் பேசினார். 1900களுக்குப் பிறகு, முக்கியமான எழுத்தாளுமைகளான ஆவுடையக்காள், கோதை நாயகி, குமுதினி ஆகியோர் பற்றியும், அதன் பிறகு கிருத்திகா, ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, அம்பை, பிறகு வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, லக்‌ஷ்மி, சுகந்தி சுப்ரமணியன் ஆகியோர் பற்றியும் விளக்கமாக உரையாடினார். தொன்னூறுகளுக்குப் பின் வந்த பெண் எழுத்தாளர்களில் சு.தமிழ்செல்வி, உமா மகேஷ்வரி, சந்திரா, பாமா, சிவகாமி, சல்மா ஆகியோர் பற்றியும் அவர்களது படைப்புகள் பற்றியும் கூறினார். பின்பு எழுத்தாளர் குமாரநந்தன் தன் கதைகள் தோன்றிய அனுபவங்களையும், தான் கதை எழுதும் சூழ்நிலைகள் பற்றியும் கூறினார்.

பின்பு பங்கேற்பாளர்கள் அனுப்பி தேர்வாயிருந்த கதைகள் பற்றிய விவாதமும் நடந்தது. மூன்று நாள் நிகழ்களையும், கிருஷ்ண பிரபு சிறப்பாக நெறியாள்கை செய்தார். இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான லாவண்யா சுந்தர்ராஜன், இத்தகைய பயிலரங்குகளின் தேவை குறித்தும், தன் மனதில் தோன்றிய சிறு விதை எவ்வாறு ஒரு வெற்றிகரமான பயிலரங்காக உருமாறியது என்றும், அதற்கு உறுதுணையாக இருந்த காலச்சுவடு பதிப்பகத்தினர், ஒரு சிறந்த வழிகாட்டியாக ஒவ்வொரு அடியிலும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கவிஞர் சுகுமாரன், தகுந்த ஆலோசனைகள் வழங்கும் கவிஞர் மோகன ரங்கன், இணைந்து பணியாற்றிய கிருஷ்ண பிரபு, இந்த நிகழ்வுக்கு இடம் தந்து உதவிய கவிஞர் சக்தி ஜோதி, பயிலரங்கிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த எழுத்துலக ஆளுமைகள், நிதியளித்த புரவலர்கள் மற்றும் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மூன்று நாள் நிகழ்வுகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது கவிஞர் சுகுமாரன் அவர்களின் துணைவியாரின் இரண்டு நிமிடப்பேச்சு. நிகழ்வு முடிகையில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பயிலரங்கில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த திருமதி.சுகுமாரனையும் பேசி அழைத்தனர். மிகத் தயக்கத்துக்குப் பின் பேசிய அவர், “நீங்கள் அனைவரும் (சுகுமாரன்) சாரிடம் இருந்து இவ்வளவு கற்றுக் கொண்டதை சொல்கிறீர்கள். கூடவே இருக்கும் நான், இத்தனை நாளில் இவரிடம் இத்தகைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வருத்தமே வருகிறது. உண்மையில் இந்த பயிலரங்கிற்கு நான் வந்ததற்கான காரணம், இவரை இங்கே விட்டு விட்டு பக்கத்தில் பழனி போன்ற சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் என்னையறியாமலே இந்த நிகழ்ச்சியில் மூழ்கிப் போய்விட்டேன். மதிய நேரத்தில் அறைக்குச் சென்று சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் கூட, சொல்லிக் கொடுப்பதை ஏதாவது மிஸ் பண்ணிவிடுவோமோ என்று வேகமாக ஓடி வந்து அமர்ந்து கொள்வேன். அந்த அளவு எனக்கும் ஈடுபாடு வந்துவிட்டது. சார் எப்போது சொல்லிக் கொண்டிருப்பார், ஏதாவது எழுது என்று. அதெல்லாம் பெரியவர்களின் வேலை, நம்மால் ஆகாது என்று நினைத்துக் கொள்வேன். இந்தப் பயிலரங்கின் மூலம் நானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற உற்சாகத்தைப் பெற்றிருக்கிறேன். நிச்சயம் எழுதவும் செய்தேன்” என்றார்.

நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மீட்டெடுப்பது தானே இலக்கியத்தின் பணி. அதனைப் இப்பயிலரங்கு துல்லியமாகச் செய்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி !


******

நன்றி: மலைகள்.காம் http://malaigal.com/?p=9878

Wednesday, January 25, 2017

வணக்கம் தோழர் !



ஜல்லிக்கட்டுக்கான போராட்டக் களத்தில், இறுதி நாட்களில் இயக்கத்தவர்கள் புகுந்து விட்டார்கள். அவர்களால் தான் கலவரமும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று அதிகாரவர்க்கமும், காவல்துறையும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இயக்கத்தவர்கள் அருகில் உங்கள் பிள்ளைகளை நெருங்க விடாதீர்கள், அவர்கள் உங்கள் குழந்தைகளை மூளைச்சலவை செய்து அப்படியே அள்ளிக்கொண்டு சென்று விடுவார்கள், எனவே போராட்டம் கீராட்டம் என்று பிள்ளைகளை வீதிக்கு அனுப்பிவிடாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை போன்ற தொனியில் மிரட்டவும் செய்கின்றன. அதோடு இனி வரும் காலங்களில் வீதிக்கு வந்து போராட நினைக்கும் சாமான்யர்களுக்கு, என்ன மாதிரியான பரிசு காத்திருக்கும் என்பதனை ஒரு செய்முறை விளக்கமும் செய்து காண்பித்திருக்கின்றன.

காவல்துறை சொல்வது போல் கடைசி நாளில் இயக்கத்தவர்கள் புகவில்லை. தமுக்கத்தில் தினமும் சுற்றிப் பார்த்த வகையில், முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தான் இருந்தார்கள். அவுட்போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரையான சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பல்வேறு இயக்கத்தினரும், பல அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் கூட களத்தில் இருந்தனர். இவர்கள் யாரும் தங்கள் அரசியல் அடையாளத்தை வெளிக்காட்டாமல் “ஜல்லிக்கட்டு”, “முல்லைப்பெரியாறு”, “காவிரி”, “பணமதிப்பிழப்பு” என்று பொதுவான தமிழர் பிரச்சனைகளை முன் வைத்தே போராட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், சிலம்பம், நாட்டுப்புறப்பாட்டு, தப்பாட்டம் என்று கலைநிகழ்ச்சிகள் போன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. வந்திருந்த கூட்டம் மிரண்டு திரும்பிச் செல்கின்ற வகையில் தீவிரமான அரசியல் கோஷங்களின்றி, கேளிக்கையுடன் கூடிய கவனமீர்ப்பு செயல்பாடுகள் தான் அதிக அளவில் நடந்து கொண்டிருந்தன. அதனால் தான் தொடர்ந்து தினமும் பொதுமக்கள் குழந்தை குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆதரவினைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.  மைக் பிடித்து பேசுபவர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, வரம்பு மீறிப் பேசிய பொழுது, கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரே அதனை ஆட்சேபித்து, பொதுவான விஷயங்களை மட்டும் பேசுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

பொதுவாக அமைதியாகவும், சுவாரஸ்யம் குறையாமலும், ஒற்றை மையப்புள்ளியான ஜல்லிக்கட்டினை சுற்றி லேசாக மற்ற பொதுவான பிரச்சனைகளை தொட்டு மட்டுமே போராட்டக்களம் இயங்கிக் கொண்டிருந்தது. சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களே இதனை உணர்ந்து கொள்ளும் போது, இருபத்தி நான்கு மணிநேரமும் மூன்று ஷிப்ட் போட்டு மஃப்டியில் பணியாற்றிக் கொண்டிருந்த உளவுத்துறை நண்பர்களுக்கு, இலக்கை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்த போராட்டத்தின் வீச்சு, அரசியல் சாயம் எதையும் கலக்கவிடாமல் மாணவர்கள் போராட்டத்தினை கொண்டு சென்ற திசை, யார் கட்டுப்பாடும் இல்லாமல் தானாக நடந்து கொண்டிருந்த ஒழுங்கமைவு, மாணவர்களின் சலித்துக் கொள்ளாத உற்சாக மனோதிடம், போராட்டம் மெதுமெதுவாக பொது மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நேர்மறை தாக்கம், அதானால் நாளுக்கு நாள் பெருகிய ஆதரவு எல்லாம் தெரியாமலா இருக்கும்.

இதுவரை நாம் பார்த்த போராட்டங்கள் எல்லாம் இரண்டு வகை தான். ஒன்று நிறுவனமாக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் அடையாள எதிர்ப்பு. சாலை மறியல் என்றால் இன்று காலை ஒன்பது மணிக்கு சாலை மறியல் என்று தலைவர் அறிவித்து விட்டு ஒரு பொது இடத்தில் தொண்டர்களோடு கூடுவார். சரியாக, அங்கேயே சென்று காவல்துறை அவர்களை சாலை மறியல் செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறும். இவர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனங்களில் ஏறிக் கொள்வர். காவல்துறை அவர்கள் அனைவரையும் கைது செய்ததாய் அறிவித்து, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்து, மதிய உணவு வாங்கிக் கொடுத்து, மாலையில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடும்.  இன்னொரு வகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சாமனியர் பேசத் துணியாத தீவிரமான கோரிக்கைகள். இதற்காக போராடும் சிறு எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் நாள் முழுதும், தொண்டைத் தண்ணீர் வற்ற சாலையோரங்களில் கத்திக் கொண்டிருப்பார்கள். பொதுமக்கள் அவர்களை சட்டையே செய்ய மாட்டார்கள். காவல்துறை வந்து அவர்களை கதறக் கதற அடித்து இழுத்துச் செல்லும். தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல மக்கள் அதனை வேடிக்கை பார்ப்பர்கள்.

ஜல்லிக்கட்டை முன் வைத்து நடந்த இந்தப் போராட்டம், இந்த இரண்டு வகையிலும் மாறுபட்டு இருந்தது. இதில் முதன்மையானது மாணவர்களின் தன்னெழுச்சி. எந்த உள் ஆதாயமும் இல்லாமல், நேர்மையான நோக்கத்தோடு தமிழர் பண்பாடான “ஜல்லிக்கட்டை” நடத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை.  இதனை முன்னெடுத்த மாணவர்கள் எந்தவொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளோ, வேறு இயக்கங்களோ, நடிகர்களோ, தனி நபர் பிரபலங்களோ தங்களின் போராட்டத்தை திசை திருப்பி விட்டுவிடாதபடியும், அபகரித்துக் கொள்ள முடியாதபடியும், நீர்த்துப் போகச் செய்ய முடியாதபடியும், களங்கம் ஏற்படுத்திவிடாதபடியும் உணமையாகப் போராடினர். அதே சமயம் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக போக்குவரத்தினை சரிசெய்தல், போராட்டக் களத்தை தாங்களே சுத்தம் செய்தல், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் என்று போராட்டம் குறித்த நேர்மறைக் கருத்தினை பொதுத்தளத்தில் பரவலாக்கினர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவையாவும் திட்டமிடப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நல்ல பிம்பம் ஏற்படுத்த வேண்டும் என்று விளம்பர நிறுவனங்களை நியமித்து அரசியல் தலைவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இமேஜ் பூஸ்டிங் போன்று அல்லாமல், தன்னியல்பாய் ஒளிவிட்ட நற்பண்புகள்.

இன்னொரு மிக முக்கியமான அம்சம் சமூக ஊடங்கள். இது நாள் வரை கண்டதையும் கழியதையும் தாங்கி வந்த வாட்ஸப் ஃபார்வேர்டுகள் தான் பேர் பாதிக்கும் அதிகம்.  ஆனால் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பரவலாக்க இந்த சமூக ஊடகங்கள் தான் துணை நின்றன. போராட்டத்திற்கு இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்ட இரவு, ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை கலைப்பதாய் நினைத்துக் கொண்டு அந்தப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்த, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பேர்களும் தங்கள் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கையை உயர்த்திய காட்சி, அதனைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் மயிர்க்கூச்சரியும் தருணமாகவே அமைந்தது. அது போக தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம், பெருகும் ஆதரவு ஆகியவை வழக்கமான அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைக் காட்டிலும் மிக வேகமாகவும், உள்ளது உள்ளபடியும் மக்களின் உள்ளங்கைகளுக்குள் சென்று சேர்த்தன சமூக ஊடகங்கள். இப்போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் மூலமும், வாய்வார்த்தைகள் மூலமும் கிடைக்கப்பெற்ற நல்ல பிம்பத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாராத தன்னார்வ நிறுவனங்களும், அமைப்பு சாராத பொதுமக்களும், அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை தங்குதடையின்றி வழங்கத் துவங்கினர்.

எல்லாம் சரி, இவ்வளவு சிறப்பாக நடந்தேறிய, நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று நிகழ்வாக பதிவாக வேண்டிய இந்தப் போராட்டம் ஏன் வெற்றி முழக்கங்களோடும் கொண்டாட்டங்களோடும் நிறைவு பெற முடியவில்லை. அரசும் காவல்துறையும் சொல்வது போல கலகக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஏன் வெற்றிக் கோட்டை நெருங்கும் நாள் வரை காத்திருந்து, சட்டமியற்றப் போகும் இறுதி நாள் அதிகாலையில் வன்முறையைத் துவங்க வேண்டும்.  அத்தகைய தேவையோ கட்டாயமோ இல்லாத பட்சத்தில் அதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்று தான் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், காவல்துறையினர் மூலமாக அதிகாரவர்க்கத்தினரே, இந்த வன்முறை நாடகத்தை துவங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்க மனமில்லாதவர்கள் சொல்லும் காரணம், அரசு மாணவர்களை ஒடுக்க நினைத்தால் முதல் நாளிலேயே கூட்டத்தைக் கலைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே. ஏன் இறுதி நாள் வரை காத்திருந்து, அதுவும் ஒருபக்கம் மாணவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்று சட்டம் இயற்றிவிட்டு, இன்னொரு பக்கம் தடியடியை நடத்த வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடனேயே போராட்டத்தை முடித்திருந்தால் அரசின் மீதான நன்மதிப்பு கூடும் தானே.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அல்லது ஆளக் கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், அது எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் வீதிக்கு இறங்கிப் போராடும் அதிருப்தியாளர்களை முளையிலேயே கிள்ளி எறியவே எண்ணுவார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தைப் பொறுத்த வரை, தமிழகத்தில் நடக்கின்ற அசாதாரணமான அரசியல் நிகழ்வுகள், அவற்றின் மீது ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் இருக்கும் வெளிக்காட்ட முடியாத வெறுப்பு பூடகமாக அரசுக்கும் தெரிந்தே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உணர்வெழுச்சியில் திரண்டிருந்த மாணவர்களின் மீது கைவைக்க நேர்திருந்தால், அனைத்து தரப்பு மக்களிடமும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கும். மாணவர்கள் தானே, இரண்டு நாட்கள் கத்தி விட்டு கலைந்து சென்றுவிடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். விளைவு, கோரிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்குச் சென்றுவிட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நகர்வு எப்பொழுதும் தஙகளிடமிருந்து தான் வரவேண்டும் என்பது அதிகாரவர்க்கத்திற்குத் தெரியாதா என்ன? அதனால் தான் ஒரு வாரமாய் சூடிக் கொண்டிருந்த முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, தன் இயல்பான கோர முகத்தைக் காட்டி விட்டது. போராட்டக்களத்தில் இரவு பகலாய் இருந்துவிட்டு, இப்பொழுது மயிரிழையில் தடியடியிலிருந்து தப்பித்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கும் தான் சொல்ல வேண்டிய செய்தியை கச்சிதமாக ஒளிபரப்பிவிட்டது, அதிகாரவர்க்கம்.

தனது இந்த விளையாட்டுக்கு யாரைப் பணயமாக வைப்பது என்று திரைக்கதையை எழுதியவர்களுக்குத் தெரியாதா என்ன? யாருடைய பெயரைச் சொன்னால் பொதுமக்கள் சட்டை செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சொல்வார்களோ, யாரைக் கதறக் கதற அடித்து இழுத்துச் சென்றாலும், பொதுமக்கள் தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல வேடிக்கை பார்ப்பார்களோ, அவர்களையே பணயமாக வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அதிகாரம் நேரடியாகவே தன் பிரஜைகளுக்கு அறிவுரை வழங்குகிறது, “உங்களைத் ’தோழர்’ என்று அழைப்பவர்களின் தொடர்பினை துண்டியுங்கள் !”.


******

Tuesday, September 8, 2015

மதுரை புத்தகத் திருவிழா 2015

வழக்கமான உற்சாகத்துடன் நிறைவடைந்திருக்கிறது, இந்த வருட புத்தகத் திருவிழா. காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களின் தேர்வு எப்போதும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்த பின்பே நிகழும். கொடுக்கும் காசுக்கு பிரயோஜனமா என்ற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அப்படி வாங்கும் புத்தகங்கள் எப்படி இருந்தாலும்,  எப்பாடு பட்டாவது வாசித்து முடித்து விட்டால் தான் செய்த செலவுக்கு பிரயோஜனம் என்ற நினைப்பு சிறிது காலம் முன் வரை ஊறிப் போயிருந்தது. சமீப காலங்களில் தான், “காசையும் கொடுத்துட்டு இந்த கருமாந்திரத்தையும் ஏன் கட்டி அழ வேண்டும்” என்ற ஞானோதயம் பிறந்து, வாசிக்க சுகப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி அலமாரியின் கடைசி அடுக்குகளில் ஒளித்து வைத்து விட்டு, பின் காலம் வாய்க்கையில் வாசித்துக் கொள்ளலாம் என்ற பக்குவம் பிறந்திருக்கிறது.

வாசிப்பின் இத்தனை ஆண்டுகளில், தற்பொழுது புத்தகத் தேர்வுகளிலும் கூட மாறுதல் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. முன்னெல்லாம், சுவாரஸ்யம் என்ற ஒற்றை செயல்திட்டம் மட்டும் தான் குறிக்கோளாக இருக்கும். இப்பொழுது வாசிப்பின் தளம் விரிவடைந்திருப்பதை உணரமுடிகிறது. அது போல, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் என்றால் வேற்றுக்கிரக வாசிகள் என நினைத்து ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. சமீப காலங்களில் அந்தப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பார்த்து பேசுபொருள் போக மொழிபெயர்ப்பின் தரத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எல்லாம் இணையத்தால் கிடைக்கும் “யானைப்பால்”.

இருநூற்றி சொச்சம் அரங்குகளில் மலை மலையாய் புத்தகங்களை குவித்து வைத்திருக்கிறார்கள். எல்லா வகையான புத்தகங்களுக்கும் சந்தை இருக்கத்தான் செய்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து, சிலவற்றை வாங்கிச் செல்லவும் செய்கிறார்க்ள். பெரிதாய் பெயர் அறிமுகமில்லாத ஒரு அரங்கில், உள்நுழைந்து பத்து நிமிடம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே மக்கள் விசாரித்த தலைப்புகளில், வாங்கிச் சென்ற புத்தகங்களில் சத்தியமாய் ஒன்று கூட இதுவரை கேள்விப்பட்டதில்லை.

இத்தகைய சமுத்திரத்தில் நமக்கான புத்தகங்களை தேர்வு செய்வது என்பது, சும்மா இருபது நொடி வாசித்துப் பார்த்து விட்டு சட்டென வாங்கி விடுகிற காரியமில்லை. வாங்க வேண்டும் என்று ஏற்கனவே குறித்து வைத்திருக்கும் புத்தகங்கள் போக, அரங்கில் கண்ணில்படும் புத்தகங்களில் தெரிந்த எழுத்தாளர்கள், படித்த மதிப்புரைகள், ஏற்கனவே நண்பர்களுடனோ, வாசிப்பிலோ அடிபட்ட பெயர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்வேன். இன்னொரு முக்கியமான நிபந்தனை கட்டுபடியாகும் விலை. இப்படி எல்லாம் கலந்து கட்டி இந்த வருடக் கண்காட்சியில் வாங்கியிருக்கும் புத்தகங்கள்.

கொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மதினிமார்கள் கதை - கோணங்கி - பாரதி புத்தகாலயம்
மறநிறப்பட்டாம்பூச்சிகள் - கார்த்திகைப்பாண்டியன் - எதிர் வெளியீடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் - பா.திருச்செந்தாழை - காலச்சுவடு
கீதாரி - சு.தமிழ்ச்செல்வி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சந்துருவுக்கு என்னாச்சு ? - யெஸ்.பாலபாரதி - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
மாயி-சான் ஹிரோஷிமாவின் வானம்பாடி - தோசி மாருகி (தமிழில் கொ.மா.கோ.இளங்கோ) - பாரதி புத்தகாலயம் - புக் ஃபார் சில்ரன்
பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் – கட்டுரைகள் – மலைகள் பதிப்பகம் (அன்பளிப்பாகக் கிடைத்தது)


பக்க எண்ணிக்கையில் எல்லாம் சிறிய புத்தகங்கள் என்பதால் சீக்கிரம் வாசித்து விடுவேன். சோம்பேறித்தனத்தை ஒத்தி வைத்து விட்டு வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும்… பார்ப்போம் !
******

Saturday, March 7, 2015

விகடன் விருதுகள் புத்தகம்

நேற்று ”ஆனந்த விகடன் விருதுகள் 2014 புத்தகம்” வந்து சேர்ந்தது. நல்ல பளபளா காகிதத்தில் விருது வாங்குபவர்களின் அட்டகாசமான ஃபோட்டோக்களோடும், சின்ன இண்ட்ரோவோடும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முக்கியமா இலவசமா கொடுக்குறதால, விளம்பரமா போட்டுத் தாளிச்சிருப்போங்களோன்னு பார்த்தா, மருந்துக்குக் கூட ஒரு விளம்பரம் இல்ல. வாங்கிப் பார்த்ததும் ஒரு “எலைட் கிஃப்ட்” கிடைத்தது போல மகிழ்ச்சி. நன்றி விகடனுக்கு !

இதுல சுவாரஸ்யம், “Not for Sale" காப்பி வந்துருக்கேன்னு வீட்டம்மணிக்கு சந்தேகம் போல. ஆஃபிஸில் இருந்த எனக்கு உடனே ஃபோன்.

“என்னங்க, விகடன்ல இருந்து அவார்ட்ஸ் புக் வந்திருக்கு”
”ஓ, வந்துருச்சா, சரி எடுத்து வை !”
“இல்ல.... இதுல எதுவும் ஸ்பெஷல் இருக்கா?”
“தெரியலயே, ஏன்”
“இல்ல... நீங்க வேற தினம் நைட்டு பூரா லைட்டைப் போட்டுட்டு எதையாவது படிச்சுட்டும், எழுதிட்டு இருக்கீங்களா... அதுக்கு உங்களுக்குத் தான் எதும் அவார்டு தந்திருக்காங்க போலனு நெனச்சேன். அதுவுமில்லாம ஸ்பெஷலா ஒன்னுக்கு ரெண்டு ரெண்டு காப்பி வேற வந்திருக்கா... ஆர்வமா ஒவ்வொரு பக்கமா புரட்டிப் பார்த்தேன். ப்ச்ச்ச்... உங்க ஃபோட்டோ இல்ல  !” 
(அவ்வ்வ்வ்..... இவ நம்மள ஓட்டுறாளா, இல்ல அவ்வளவு நம்பிக்கையா தெரியலயே... ஆண்டவா !)
”இல்லம்மா, இப்ப தானே ஃபார்ம் ஆகிட்டு இருக்கோம், கூடிய சீக்கிரம் வாங்கிருவோம்”
”ம்ம்ம், ஆல் தி பெஸ்ட்”
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........)

வாசகரா நம்மையும் மதித்து, காம்பிளிமெண்ட் காப்பி அனுப்புனதுக்கே நாம் புல்லரிச்சுப் போய்ட்டு இருக்கோம். இங்க என்னடான்னா நம்ம மேல இவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் பேரில் அப்போதே ஒரு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேன். “வாங்குறேன்... உலகத்துல உள்ள எல்லா அவார்டையும் வாங்குறேன். இல்லாட்டி “நாச்சியப்பன் பாத்திரக் கடை” அட்ரஸையாவது மறக்காமல்ம கேட்டு வாங்குறேன், ஜெய்ஹிந்த்”

எனிஹவ்... இன்பாக்ஸில் முகவரி கேட்டு புத்தகம் அனுப்பிய நண்பருக்கு நமஸ்காரங்கள் :)

Monday, October 27, 2014

மதுரை வலைப்பதிவர் விழா அனுபவங்கள்


மதுரையில் நேற்று நடந்த வலைப்பதிவர் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய விழா, மாலை நான்கரை மணி வரை சிறப்பாகவே நடந்தது. காலை நிகழ்வில், அனைத்து பதிவர்களும் மேடையேறி தங்களைப் பற்றியும், தங்களது வலைப்பூவைப் பற்றியும் அறிமுகம் செய்தனர். சுமார் இருநூறு பேர் அளவிற்கு இருந்த கூட்டத்தில் பத்து இருபது பேர்களைத் தவிர யாரையும் தெரியவில்லை. “என்னடா மதுரைக்கு வந்த சோதனை, பத்து வருசமா இந்த இணையத்துல தான் வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்... ஒருத்தர் பேரும் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே” என்று லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இவர்கள் எல்லாம் நாம் தமிழ்மணத்தில் இருந்து ”வாலண்டரி ரிடயர்மெண்ட்” வாங்கி வந்த பிறகு அட்மிஷன் போட்டு இப்பொழுது கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் என்று. 

கலகக்காரர்கள் எல்லாம் பதிவுலகை காலி செய்து விட்டு சென்று விட்டதாலோ அல்லது நம்ம ஊர் மதுரையின் வீரத்திற்கு மரியாதை செய்யும் விதமாகவோ தெரியவில்லை, நிகழ்வு மிக நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடந்தது. ஒரு சண்டையில்ல, சச்சரவில்லை... ஒட்டு மொத்த மதுரை மாநகரமே நேற்று “அமைதிப்பூங்கா”வாக மாறிவிட்டது. நிகழ்ச்சி எந்த அளவுக்கு அமைதியாக சென்றதென்றால் வேடிக்கை பார்க்கும் நாம் கொஞ்சம் சத்தமாக சிரித்தால் கூட, நிகழ்ச்சியை ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் நம் பக்கம் திரும்பி “என்ன தம்பி பிரச்சனை... நிகழ்ச்சியை கவனிங்க!” என்று அறிவுறுத்துவது போலத் தோன்றும் அளவுக்கு.

புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் பொழுது, ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக வெளிவரும் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கையில் “இந்த புத்தகங்களை எல்லாம் எழுதுவது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்க்ள், எப்படி இத்தனை புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டே இருக்கிறார்கள், இவர்களுக்கான வாசகப் பரப்பு எங்கிருக்கிறது” என்று பெரும் மலைப்பாக இருக்கும். நேற்றைய விழாவில் இந்த சந்தேகங்களுக்கான விடை கிடைத்தது. வலைப்பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்யும் போது, சிலர் இருபது முப்பது புத்தகங்கள் வரை வெளியிட்டு தமிழுக்குத் தொண்டாற்றுவதாகக் கூறினர். எனக்குக் கொஞ்சம் “கேராகி” விட்டது. சுதாரித்துக் கொண்டு ”ஜிகிர்தண்டா” குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்

மதிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள். சும்மா சொல்லிக்கூடாது... சப்ஜெக்ட் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் சாலிடாக ஒரு மணி நேரம் பேசினார். வாட்ஸப்பில் பிட்டுப் படம் அனுப்புபவர்களும் வலைப்பதிவர்களும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டு விட்டார் போல, பார்வையாளர்களுக்கு சில பல அறிவுரைகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சென்றார்.

பின்பு வலைப்பதிவர்கள் இயக்கி, நடித்த “சில நொடி ஸ்நேகம்” என்ற குறும்படம் வெளியிடலும், திரையிடலும் நடந்தது. அதன் பின், வலைப்பதிவர்கள் எழுதிய நான்கு புத்தகங்களும் வெளியிடப்பட்டது. 

நண்பர்கள், தங்களது வீட்டுத் திருமண விழாவினைப் போல இந்த வலைப்பதிவர் திருவிழாவை அக்கறையோடும் பொறுப்புடனும் நடத்தினர். தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட விழாக்குழுவினருக்கு வாழ்த்துகள். இணையத்தின் வழி நிகழ்ச்சி நேரலையிலும் ஒளிபரப்பட்டது. நிகழ்ச்சியின் அரங்க அமைப்பும், அலங்காரமும் மிக நேர்த்தியாக இருந்தது. ”போடியம்” முதல் “ப்ரஜக்டெர் வைக்கும் ஸ்டூல்” வரை அனைத்து ஏற்பாடுகளிலும் இருந்த ப்ரஃபஸனிலிஸம் தனித்தன்மையாகத் தெரிந்தது.  சிறப்பாக அரங்க அமைப்பு செய்த நண்பர் சுப்புரமணி மற்றும் அவரது குழுவினரின் பணி பாராட்டத்தக்கது. அனைவருக்கும் காலையில் மதுரை ஸ்பெஷல் “ஜிகிர்தண்டா”வும், மதிய உணவாக மதுரை மண்ணின் சௌராஸ்ர மணத்திலான நிறைவான உணவும், மாலையில் சூடான டீயும், வடையும் வழங்கப்பட்டது. ”வடை’ கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெற்று வந்தேன். விழாவை சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

*******

Friday, October 24, 2014

நியாயமாரே !!!

கங்காணி, இந்த வருசம் உருப்படி எல்லாம் எப்படி?

ஐயா, சிங்கர் சூப்பர்ல ஒரு பத்து சின்ன உருப்படிங்கைய்யா. அப்புறம் மத்த ரியாலிட்டி ஷோ வகையறாவுல ஒரு பதினஞ்சு. அப்படி இப்படினு ஒரு இருபது முப்பது புது உருப்படிங்க தேறும். இதுகல, ஒரு ரெண்டு மூனு வருசம் களை புடுங்க விட்டுட்டு அடிச்சு பத்தி விட வேண்டியது தான். இந்தவாட்டி ஜோடில எல்லாம் பழைய டிக்கட்டுங்க தாய்யா, ஒன்னும் புதுசு இல்ல...

அந்த ஜட்ஜு?

ஐயோ, அது ரொம்ப பழசுங்கய்யா.

சரி, விடு... துரைமாருங்க திருவிழாவுக்கு வரும் போது பழைய ஆளுங்க எல்லாம் வந்து வரிசைல நிக்கும்ல?

பின்னே, கால்ல சங்கிலி கட்டி தானே வுட்டுருக்கு.. எங்க கூப்பிட்டாலும் வந்து ஒப்பாரி வச்சுட்டு போகுங்க. என்ன ஆளுக்கொரு அவார்டு கொடுக்கனும், அவ்ளோ தான்.

கழுத, காசா பணமா.. அடிச்சு விடு.  முன்ன, பின்னன்னு அதை வச்சு ஒரு வருசம் ஓட்டலாம். ஏங்கங்காணி, இந்த நீயா நானா உருப்படிங்க எல்லாம் கிழடு தட்டி போயிடுச்சேய்யா, பூராப்பேத்தையும் பத்தி உட்டுட்டு புது ஐட்டமா புடிக்க வேண்டியது தானே.

எங்க சாமி, ஒன்னும் செட்டை விட்டு நகர மாட்டுதுக... ராத்திரி பகலா அங்கனயே கெடயா கெடக்குதுக.  எல்லாத்துக்கு வருசக் கூலி பேசி செட் ப்ராப்ர்டியா தான் உக்கார வச்சிருக்கோம், ஒன்னும் பாதகமில்ல. ஆனா சீரியல் கோஷ்டிங்க தொல்லை தாய்யா கொஞ்சம் அதிகமா இருக்கு. சொல்லாம கொள்ளாம திடீர்னு கல்யாணங்கட்டிட்டு வந்துருதுக. அது கூட பரவால்லன்னு ஒரு நாப்பது நாப்பத்ஞ்சு வயசு வரைக்கும் தாவணி கட்டி சுத்த வுட்டு சமாளிக்கிறோம். அதுக வெக்கப்பட்டு நடிக்கிறேனு பூராப்பயலுகளுக்கும் வெசம் வச்சு சாகடிக்குதுக. ஆனா சினிமா ஆசை வந்து பாதில ஓடிப்போற பொடியனுகளை தான் தடுக்க முடியல.

ஓடுற பொடியனுக கால் நரம்பை வெட்டி விடனுமய்யா. மீறிப்போனா கால்ல சூடு வை, அப்படியும் தப்பிச்சு போய்ட்டானா, ஒன்னும் பிரச்சனையில்ல. அடுத்த திருவிழாவுக்கு அவனுகளையே கூப்பிட்டு “பிரைடு ஆஃப் பரதேசி” அவார்டு கொடுப்போம். கூத்தை தொடர “இவனுக்கு பதில அவன்”னு வெய்ட்டிங் லிஸ்ட்ல இருந்து ஒருத்தனை இறக்கிவிடு. ஆனா ஒன்னு, ரொமான்ஸ் பண்றேன்னு சினுங்குறவகளை மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லனும்ய்யா, கருமம் என்னாலயே தாங்க முடியல.

ஐயா, நாம போடுற படத்துக்கெல்லாம் இப்ப மவுசு குறைஞ்சு போச்சுங்கய்யா
என்னய்யா சொல்ற?

பின்ன என்னங்கய்யா,  கும்கில நடிச்ச மாணிக்கமே ரிடயர்ட் ஆகிருச்சு, அல்லியெல்லாம் ஆண்ட்டி பலவருசம் ஆகிருச்சு. நாம இன்னும் இதையே புதுப்படம்னு சொல்லி திருப்பி திருப்பி போட்டு ப்ளேயரை தேய்ச்சுட்டு இருக்கோம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வராட்டி வர்ற வருசத்துல என் கணக்கையும் முடிச்சு விடுங்க. ஊருப்பக்கம் போய் பொதிகைல வயலும் வாழ்வும் பார்த்துக்குறேன்.

அட பொறுமையா இருய்யா, ரொம்ப தான் கோச்சுக்குற.... வாராவாரம் நாம நடத்துற கோட்டு மேட்டர் தான் இண்டர்நெட் முழுக்க பெரிய பேச்சு தெரியும்ல
ஆமா, எல்லாம் யோக்கியனுக அங்க தான் துண்டைப் போட்டுட்டு உக்கார்ந்திருக்கானுக... பூராப்பயலுகளும் நம்ம நல்லா காறி காறி தான் துப்புறானுக, ஆனா ரெண்டு செகண்ட் மூஞ்சி தெரியும்டானு சொன்னா, நாலு ராத்திரி மூனு பகலுக்கும் மேல பல்லுல பச்சத்தண்ணி படாம பூட்டியிருக்க நம்ம ஸ்டுடியோ நிலைக்கதவை புடிச்சு தொங்குனமனியே தான் நிக்குறானுக. அதுல நம்மள யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா.

அப்போது அடுத்த சீசனுக்கான ஆடிஸன் முடிந்து, வெகு உற்சாகமாக புதியவர்கள் உள்ளே நுழைகிறார்கள். கங்காணி மெயின் கேட்டை இழுத்து மூடுகிறார்.

உள்ளேயிருந்து பரிதாபமான ஓலம் ஒலிக்கிறது.

“டிவில நடிக்கப்போறோம்ங்கிற ஆசைல இந்த நரகுழில வந்து விழுந்துட்டீங்களே, போச்சே, நியாமாரே....... உங்க மொத்த வாழ்க்கையையும் ரிபீட் டெலிகாஸ்ட் போட்டே சாகடிக்கப்போறானுகளே.....   நியாமாரேஏஏஏஏ..............”

******