Monday, April 28, 2014

இன்மை உணர்தல்

(வல்லமை இணைய இதழில், “அன்புள்ள மணிமொழிக்கு” என்ற தலைப்பில் கடித இலக்கியப் போட்டி வைத்திருந்தார்கள், அதற்கு நான் அனுப்பிய கற்பனைக் கடிதம் இது. சிறப்புப் பரிசுக்குத் தேர்வாகி இருக்கிறது. வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி ! http://www.vallamai.com/?p=43517).
******
அன்புள்ள மணிமொழி !
ஆகாயத்தை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் காரைக்கட்டிட அட்டைப்பெட்டி அலுவலகத்தின் புழுக்கத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து, தனித்து வியாபித்திருக்கும் பெரிய பூவரசமரத்தில், பறவைகள் அடையும் சத்தத்தினூடே இதனை எழுதத் துவங்குகிறேன் மணிமொழி ! உன் வீட்டு மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் உள்ள திண்டில் பறவைகள் வந்து நீர் அருந்தட்டுமென வைத்திருக்கும் வாய் அகலமான தண்ணீர்த் தொட்டியில் குறைந்திருக்கும் நீர் அளவைப் பார்த்து, உனக்கு மிகப்பிரியமான மிக்கி மௌஸ் படம் போட்ட ஊதா நிற பிளாஸ்டிக் குவளையை வலது கையால் பிடித்து நீர் கோரி தொட்டியை நிரப்பியபடி, காற்றில் படபடக்க விடாமல் லாவகமாய்  பிடித்த படி கண்களாலும், கழுத்தாலும் உன் பிரத்யேக செய்கையசைவில் வளைந்து வளைந்து, இடது கையில் பிடித்திருக்கும் இந்தக் கடிதத்தை வாசித்துக் கொண்டிருப்பதாய் கற்பனை செய்து பார்க்கிறேன். உன் வீட்டுக் கொல்லையில் இருக்கும் வேம்பு காய்க்கும் பருவமல்லவா இது. மொட்டை மாடியெங்கும் வேப்பம்பழங்கள் சிதறிக் கிடக்க, அவற்றை சேகரித்து வட்டவட்டமாய் உருவம் அமைத்து மொட்டைமாடியெங்கும் சிரிப்பான்களாய் பரப்பி வைத்திருப்பாயே, அது ஏனோ இன்று காலை எழும் போதே நினைவில் வந்தது. இல்லை, அப்படிக்கூட சொல்ல முடியாது. அந்த வேப்பம்பழ சிரிப்பான்கள் தாம் கனவில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பாகவே என்னை எழுப்பி விட்டன. அது முதலே, ஒரு இனம்புரியாத பரவசம் என் மனமெங்கும் சிறகடிக்கத் துவங்கி விட்டது. எழுந்து தேநீர்க்கடைக்குச் சென்றால், அங்கே அடுத்த ஆச்சர்யம் ! நூலகத்தின் நிசப்தத்தில், முல்லை நிலத்து வாழ்க்கை முறையை நாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த, மென்தூறல் விழுந்த இளமாலைப் பொழுதில் நீ உயிரைக் குழைத்து, என் கண்ணீர்க்குளங்களை தழும்பச் செய்து சன்னமான குரலில் எனக்காக மட்டும் பாடிய “கங்கைக்கரைத் தோட்டம்” ஒலித்துக் கொண்டிருந்தது.
உயிருடனான முழு விலங்கை வாய் கொள்ளாமல் முழுங்கும் மலைப்பாம்பைப்போன்று நீண்ட பாலங்களாலும், தங்க நாற்கரச்சாலைகளாலும் சுற்றியிருந்த கிராமங்களை எல்லாம் தனக்குள் இழுத்துச் செறித்து, மீந்ததைத் துப்பி விரிவாக்கப்பகுதிகளாக தள்ளி வைத்திருக்கும் இந்த பெருநகரத்தின் ஒரு மூலையில் சந்திப்புச்சாலையைத் தாண்டி ஒடுங்கிப்போயிருக்கும் இந்த சிறு தேநீர்க்கடைக்குள்ளும், உயிர் கசியும் ஒரு தேவநொடியை எங்கிருந்தோ மீட்டுக்கொண்டு வர முடிகிறது, இந்த இசையினால். ”கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை” என்று சுசீலாம்மாவின் குரலில் உன் விசும்பலை நினைத்த அந்த கணம், என்னையும் அறியாமல் கண்கள் கசிந்து அமர்ந்திருந்தேன். என்றோ நிகழ்ந்த ஒரு உன்னத நிகழ்வின் ஞாபகச்சரடு காலங்களுக்குள் எத்தனை முறை நம்மை மீண்டும் மீண்டும் பிணைத்துக் கொள்ளுமோ, மொழி ! அலைபேசி அலாரத்தை குறைந்தது ஒரு மணி நேரத்திற்காகவேணும் கண்ணயர்வு கொள்ளச் செய்து தினமும் கடிகாரத்துடன் சண்டையிட்டு அடித்துப்பிடித்து அலுவலகத்துக்கு விரைபவன் நான். இன்று உனது வேப்பம்பழ சிரிப்பான் அதிகாலையே என்னை எழுப்பி விட்டு, அதிசயமாய் தேநீர் கடைக்கும் செல்ல வைத்து, அங்கே ஒரு மகிழ்ச்சிப் பொட்டலத்தையும் இசையாய் விரித்து வைத்திருந்தது. அந்த மென்கீதத்தின் ரீங்காரத்தூடே அறைக்கு வந்து, நிதானமாக அதே சமயம் பரவசமாக இதழ்களுக்குள் மெல்லியதொரு புன்னகையை பரவ விட்ட படியே ஆயத்தமானேன்.
எவ்வளவு நிதானமாகக் கிளம்பி, தயாரான பின்னும் அலுவலக வாகனம் இந்தப் பகுதிக்கு வந்து சேர இன்னும் இரண்டு மணிநேரமிருந்தது. அதற்கு மேல் அறைக்குள் இருப்புக்கொள்ளவில்லை. மெதுவாக தெருமுனைக்கு வந்தேன். அந்தப்பகுதி அவ்வளவு அமைதியாக இருக்கமுடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. ஆறரை மணிக்கும் எட்டரை மணிக்கும் இடையில் உள்ள உவமிப்பு பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. தெருமுனையில் இன்னும் தண்ணீர் லாரி வந்திருக்கவில்லை. ஷேர் ஆட்டோக்களின் சாகசங்கள் இன்னும் தொடர்ந்திருக்கவில்லை. வழக்கமாக எட்டரை மணி சுமாருக்கு, தலை நிறைய எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து படிய சீவி விட்டு, எண்ணெய்க் கைகளில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டி குழந்தைகளின் முகங்களை வெள்ளையடித்து, பொதியேற்றி பள்ளி வாகனத்திற்குள் திணிக்கும் வழக்கமுள்ள புறநகரத்துப் பெண்மணிகள் அப்பொழுது தான் அன்றைய தினத்தின் முதல் வேலையாக வாசல் தெளிக்கத் துவங்கியிருந்தனர். வீட்டு வாசல்களில் படுத்திருந்த தெருநாய்கள் தண்ணீர் பட்டும் பதற்றம் காட்டாமல், மெதுவாக எழுந்து நெட்டி முறித்து ஓரமாய்ச் சென்று மறுபடியும் படுத்துக் கொண்டன. அந்தப்பகுதியின் அடையாளமாக, தங்கள் இருப்பை எப்போதும் சத்தமிட்டு பறைசாற்றி தங்களுக்குள் சத்த யுத்தம் நடத்தும் இரும்புப்பட்டறைகள் யாவும் இன்னும் துயில் எழுந்திருக்கவில்லை. மூடியிருக்கும் அந்த பட்டறைகளின் கனத்த கரந்தியல் சாத்திகளின் மீது தியானித்திருக்கும் கடவுளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. காலியான அதிகாலை நேரத்து தெருக்களைப் பார்க்கும் போது, அவை இரவில் அகலமடைந்து, பகல் செல்லச்செல்ல சுருங்கிக் கொள்கின்றனவோ என்று தோன்றியது.
நகரப்பேருந்துகள் காலியாகக் கூட செல்லும் என்று இன்றைக்குத் தான் தெரிந்தது, மொழி ! ஒரு ஜன்னலேர இருக்கையை தேர்ந்து சாலையை மௌனமாய் பார்த்தபடியே பயணம் செய்தேன். அடுக்கங்களின் சிறு முன்றில்களில் வளர்க்கப்படும் போன்சாய் மரங்களைப் பார்த்து நீ விசனம் கொண்ட நிகழ்வு, அன்னிச்சையாய் நினைவுக்கு வந்தது. பிராணிகளை வளர்க்கத் தடையுள்ள, வாரமொரு முறை  தாழ்வாரங்களை ஆள்வைத்து சுத்தம் செய்து, அங்கே கூடுகட்ட எத்தனிக்கும் புறாக்களை அதைரியம் கொள்ளச்செய்யும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் அறிக்கையொன்றில் நீ செய்து காண்பித்த கத்திக்கப்பல் மனதில் தோன்றியது. ஒரு மணிநேரப்பயணத்தின் முழுமைக்கும் என் அருகில் நீ அமர்ந்து வருவதாகவே எண்ணிக் கொண்டேன் மொழி ! நாம் வாசித்த கவிதைத் தொகுப்புகளை, புதினங்களை, சிறுகதைகளை நீ ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாய், பேருந்துக்கு வெளியே எதிர் திசையில் விரைந்து கொண்டிருக்கும் மிதமான குளிர்க்காற்றை, அவ்வப்பொழுது வலது கையால் தடுத்து உன் முகத்துக்கு நேராக திருப்பி விட்டுக் கொண்டே வந்தேன். காற்றிலாடும் முடியை காதிற்கு பின் தள்ளியபடியே நீ பேசிக்கொண்டே வந்தாய். அலுவலக நிறுத்தம நெருந்துவதை உணர்ந்து உன்னை அப்படியே விட்டுவிட மனமில்லாது தவித்தேன். பின், அலுவலகத்திற்கு முந்தைய நிறுத்ததிலேயே இறங்கி, அருகிலிருந்த மரங்களடர்ந்த பூங்காவிற்குச் சென்றேன். விடாமல் தொடர் கேள்வி கேட்டுக் கொண்டு, தம் அப்பாக்களை வழி நடத்திச் செல்லும் சிறு பெண் குழந்தைகளின் நடைப்பயிற்சியால் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது அந்த காலை நேரத்து பூங்கா. அந்த சிறுமிகளைப் பார்த்து புன்னகைத்தபடியே மூச்சுப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதியவர்களின் முகங்கள் பரிசுத்தமாய் காட்சியளித்தன. பூங்காவின் பெரும்பகுதி தெரிவது போன்ற இடத்தைத் தேர்ந்து, அங்கேயிருந்த இருக்கையில் அமர்ந்தேன். கண்களை மூடி ஆழ்மூச்சில் சுவாசிக்கத் துவங்கியவுடன், அருகில் மஞ்சளின் வாசமும், செம்பருத்தியின் மணமும் கலந்த உன் வாசனையை நுகர்ந்து அருகில் நீ அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். கண்கள் மூடிய படியே உன் அருகாமையை ரசித்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தேன் மொழி ! வெயில் மெல்ல ஏறத்துவங்கியவுடன், அங்கிருந்து நடந்தே அலுவலகம் செல்வதென முடிவெடுத்து மெதுவாக அலுவலகம் சென்றடைந்தேன். எனக்குத் தெரியும் மொழி, பூங்காவில் இருந்த நீ, அங்கே கண்ணிற்குத் தட்டுப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு செல்ல பெயர் வைத்திருப்பாய், மரங்களிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு மலரோடு ஏதேனும் ஒரு ரகசிய மொழி பேசியிருப்பாய். பகலா, இரவா, வெளியே மழையா, வெயிலா, என்ன நேரம் என்ன திசை என்று கூட அறிந்து கொள்ள முடியாத கருப்புக் கண்ணாடிகள் பதித்த அடுக்குமாடி அலுவலம் உனக்கு பிடிக்காது என எனக்குத் தெரியும். எனவே தான் உன்னை உனக்குப் பிடித்தமான பூங்காவிலேயே இருக்கும் படி நினைத்துக் கொண்டேன்.
இன்று முதல் ஆளாக அலுவலகம் வந்து இருந்தேன். மனம் முழுதும் நீயே நிறைந்து இருந்தாய். என் இன்றைய தினத்தின் பூரிப்பை, அகவெழுச்சியை, உள்ளே பொங்கும் மனவூற்றை எப்படி வெளிக்காட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அலைந்தேன். நாள் முழுமைக்கும் யாருடனும் பேசப்பிடிக்கவே இல்லை. நிமிடத்துக்கொரு முறையென கணினியிலும் , அலைபேசியிலும் ஆயிரக்கணக்கான சிரிப்பான்களை குறுந்தகவல்களாக, மின்னஞ்சல்களாக எனக்கு நானே அனுப்பிக் கொண்டேன். அதை நான் திறந்து பார்க்கும் போதும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் ஒவ்வொரும் சிரிப்பானிலும் வேப்பம்பழத்தின் வாசமும், உன் வெள்ளந்திச்சிரிப்பின் வாசமும் மாறி மாறி வீசிக் கொண்டே இருந்தது. இந்த நாளை முழுமையாக அனுபவிக்க வைத்தாய் மொழி, இன்று என்னை மீண்டும் நானாய் உணர வைத்திருக்கிறாய் மொழி. நமது இந்த பிரிவு  உன் காதலை, நட்பை, அருகாமையை, இருப்பை, தேவையை, உன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது மொழி !
உன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கும் இந்த சிறு விடுமுறைப்  பிரிவில், ஆழத்தில் புதைந்து கொண்டிருந்த நம் காதலை உன் சிரிப்புருவினால் மீட்டெடுத்திருக்கிறாய் மணிமொழி ! உன்னை உன் வெகுளித்தனங்களோடும், ரசனையோடும், குழந்தைமையோடும் காதலிக்கும் உன் உயிர்த்தோழனை, நம் திருமணமான இத்தனை நாளில் தினப்பாடுகளுக்கும், அலுவலக வேலைப்பளுவுக்கும், எரிச்சல்களுக்கும், பொறுமையின்மைக்கும், நோய்மைக்கும் ஒப்புக் கொடுத்து விட்டு, ஒரு சராசரி கணவனாய் மட்டும் இருந்திருக்கிறேன் என்பதை இந்தப்பிரிவினால் உணர்த்தியிருக்கிறாய் மணிமொழி ! உன்னை நீயாய் இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மனதாரச் செய்யும் உன் உற்ற தோழனாய் என்னை பழையபடி மாற்றியிருக்கிறாய் மணிமொழி ! போதும், நீ பாசமாய் வளர்த்த வேப்பமரத்துக்கும், மருதாணிச்செடிக்கும், உன் தாய்வீட்டுக்கும் அவசரமாய் ஒரு பிரியா விடை கொடுத்து விட்டு உடனே நம் வீட்டுக்கு வா என் அருமை மனைவியே !
இப்படிக்கு
உன் இன்மையில் உன்னை முழுவதுமாய் உணரும் உன் கணவன்.
******

Monday, April 7, 2014

"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி !


”சிவகார்த்திகேயன்” - இன்று தமிழகம் முழுதும் பேசப்படக்கூடிய ஒரு பெயராக மாறியிருக்கிறார். இது அவரது தொடர் உழைப்புக்கும், கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தும் சாமர்த்தியத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. அவரைப்பற்றி, ”நமது பக்கத்து வீட்டுப் பையன் போல, நாம் பார்க்கும் போதே விறுவிறுவென வெற்றிப்படிகளை கடந்து கொண்டிருக்கிறான்” என்று பெருமிதம் கொள்வோர் ஒரு புறமென்றால், “நம்ம மாதிரி சாதாரணமா சுத்திட்டு இருந்த பய, அவனுக்கு வந்த வாழ்வா” என பொறாமை கொள்வோரும் மறுபுறம் உண்டு. போதாக்குறைக்கு இந்த விஜய் டீவி செய்த / செய்யும் அலப்பறைகள், ஓவர்-பில்டப்புகள் வேறு. அதே ரூட்டில் விகடன் தொடங்கி பெரும்பாலான பத்திரிக்கைகள், டீவி, இணைய ஊடகங்கள் அனைத்தும் ஏகத்துக்கும் அவரை “அடுத்த சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருக்கின்றன. ”இதெல்லாம் மாய பிம்பங்கள். ஒரு படம் ஊத்திக்கொண்டால், இந்த காக்கா கூட்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்” என்று சிவகார்த்திகேயனுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ம்ம்ம்... நாம் விரும்பி என்ன செய்ய !

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வந்திருக்கும், சிவகார்த்திகேயன் நடித்த “மான் கராத்தே” படத்தை சென்ற வாரயிறுதியில் பார்த்தோம். ”இது அப்படி இருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம்” என்று சில பல குறைகள் தெரிந்தாலும் அதை நான் சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை என்ற கான்ஃபிடன்ஸ் ஹெவியாக இருப்பதால், ”படம் அவ்வளவு மோசமில்லை” என்ற ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். ஆனால் “உலகத்திரைப்பட வரலாற்றில் இல்லாத சில பல ஸ்பெஷல்கள் இந்தப்படத்தில் ஆங்காங்கே தென்பட்டன. அவை மட்டும் இங்கே...

வொய் “மான் கராத்தே” பிகம்ஸ் ய மஸ்ட் ஸீ மூவி, லெட்ஸ் ஸீ தீஸ் பாய்ண்ட்ஸ்....

ஹீரோ அறிமுக பாட்டில் சிவகார்த்திகேயன் வேகமா ஓடி வர்றதப்பார்த்து “ஆஹா அடுத்த தளபதி வந்துட்டாரா, போச்சுடா” என்று கிர்ர்ராகி உட்கார்ந்துட்டேன். நல்லவேளை பாட்டு முடிந்தவுடன் நம்ம கண்ணை குத்தி “பஞ்ச் டயலாக்” எல்லாம் பேசாமல், கொஞ்சம் பீட்டரோடு நிறுத்திக் கொண்டார்.

குத்து பாட்டில் அனிருத்துக்கு கொடுத்த இண்ட்ரோவிலே ஆடிப்போயிருக்கும் ஆடியன்ஸுக்கு மேலும் ஒரு இடியாய் ஏ.ஆர்.முருகதாஸைக் காட்டினாங்க. அவர் (”அவர்”னா நம்ம) குட் டைம், தலைவர் டான்ஸ் எதும் ஆடி மரண பீதி ஏற்படுத்தாம ஜெண்டிலா நடந்து கேமராவைத் தாண்டி சென்றுவிட்டார்

டைரக்டர் சிவகார்த்திகேயனுக்கு “புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டியோட கீரிப்புள்ள ஹேர்ஸ்டைல்” தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது “கரையான் புத்துக்குள்ள போன கரப்பான் பூச்சி” அளவுக்கு தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சிவா தான் மாஸ் ஹீரோ ஆகிட்டாப்ளேல, அதை வைத்தே சமாளித்து விட்டார்.

காலங்காலமாய் தமிழ் சினிமாவில் தோழிகள் கேரக்டர் என்றாலே “சுமார் மூஞ்சி குமாரி”களேயே பார்த்த வந்த ரசிகர்கள், இதில் “நச்” காஸ்டியூமில் ரெண்டு “ரிச்” கேர்ள்ஸை பார்த்து பரம திருப்தி அடைவதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன

சிவா அப்படியே வில்லன் கால்ல விழுந்து,  மண்ணுல புரள்றாப்புல ஒரு அழுகாச்சி சீன் வச்சா போதும், லேடீஸ் சைடு செம செண்டிமெண்ட் ஃபீலிங்கா இருக்கும்னு  ஐடியா கொடுத்த உதவி இயக்குநர் யாரா இருந்தாலும் அவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. “நீயெல்லாம் நல்ல வருவ, தம்பி !”

”குங்பூ பாண்டா” படத்தோட தழுவல் தான் இந்தப்படம்னு அரசல் புரசலா வதந்தி வந்ததே என்று நண்பரிடம் கேட்டேன். அவர் ”இந்தப் படத்துல பாக்ஸிங் தானே இருக்குது, குங்பூ இல்லேல, பிறகெப்படி இது அந்தப்படத்தோட காப்பி ஆகும்”னு விஞ்ஞானப்பூர்வமா பதில் சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகி ஆமாம்னு ஒதுங்கிட்டேன்

குமரன் S/o மகாலட்சுமி படத்துல ஐஸ்வர்யா செய்த கேரக்டரை இந்த படத்துல சிவாவோட நண்பரா வர்றவர் செய்திருக்கிறார் போல. சிவா வில்லனை அடிக்கும் போது அவர் காட்டும் ரியாக்‌ஷன் எல்லாம் “தாருமாறு, தக்காளி சோறு”

அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்துல பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டும் போதே தெரிஞ்சுருச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்னு. (இது சைடு கேப்புல சேவல் வெட்டுற சின்ன விளம்பரம், கண்டுக்காதீங்க!)

அவ்ளோதான்பா !!!

******

Tuesday, April 1, 2014

ஃபேஸ்புக் பிரபலத்தின் தலையாய பத்து குணங்கள்


  • ஒருவரை ப்ளாக் பண்ணிட்டா, அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வார் என்று உண்மையிலேயே நம்புவார்
  • ஐயோ யாரும் என்னை டேக் செய்யாதீங்க என்று வாரமொரு முறை செல்லமாய் சிணுங்குவார்
  • ஃபேக் ஐடி தான் மிகப்பெரிய சமூகப்பிரச்சனை
  • ஃப்ரொபைலில் ஃபோட்டோ வைக்காதவர்கள் எல்லாம் தன்னம்பிக்கை இல்லாத பயந்தாங்கொளிகள்
  • வாரக்கணக்கில் இன்-ஆக்டிவா இருக்கும் ஐ.டி.களை அன்-ஃபிரண்ட் செய்ததை ஏதோ தயவு தாட்சண்யம் பார்க்காமல் பராக்ரமம் செய்தது போல ஸ்டேடஸ் போட்டு பெருமை கொள்வார்
  • ஒரு லைக் = ஒரு சல்யூட், ஒரு கமெண்ட் = ஒரு செருப்படி வகையறா படங்களை வகைதொகை இல்லாமல் ஷேர் செய்வார்
  • ஃபேஸ்புக்கில் ஏதேனும் சண்டை நடக்கும் போது, இந்தப்பக்கம் ஒரு குத்து அந்தப்பக்கம் ஒரு குத்து என்று ரெண்டு பக்கமும் லைக் செய்து, சண்டை போடுபவர்களையே குழப்புவார்
  • உலகத்தில் எந்தப் பிரச்சனையும் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை உடையவர்
  • இரத்தம் தேவை என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகளை தேதி பார்க்காமல் ஃபார்வேர்ட் செய்துவிட்டு தன் கடமையை செவ்வனே செய்ததாக பெருமிதம் கொள்வார்
  • தன் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் / தொடர்பவர்கள் அனைவரும் தனக்காக உயிரையும் விடத் துணியும் பரம ரசிகர்கள் / அடிமைகள் என்று நினைத்து அவ்வப்பொழுது தனக்குத்தானே (?) சிரித்துக் கொள்வார்.

****************