Tuesday, July 17, 2012

நட்பு!



நட்பைப் பற்றி ஆயிரமாயிரம் கவிதைகளும் தத்துவங்களும் ஏற்கனவே சொல்லி முடிக்கப்பட்டுவிட்டன. காதலா, நட்பா என ரெக்கார்டு தேயும் வரை பட்டிமன்றங்கள் எல்லாம் நடத்தப்பட்டுவிட்டன. இளமைக்கால நட்பு, பிறகு காதல் இவற்றைத் தாண்டி திருமணம், குடும்பம் என்று வந்த பிறகு நாம் போட்டு வைத்திருக்கும் முன்னுரிமைப் பட்டியல்களில் மாற்றங்களும் இருக்கலாம். ஆனால் பரஸ்பர சார்புகள் கொண்ட குடும்ப உறவுகள் தாண்டி சற்று விலகி நின்று, ஆனால் உளப்பூர்வமாக உணரக்கூடிய உறவு நண்பர்கள் தாம். எப்படியென்றால் இப்போது நம்மால் தவிர்க்க முடியாத உறவு யாரென்று கேட்டால், மனைவியையோ குழந்தைகளையோ, பெற்றோரையோ தான் முதலில் சொல்வோம். ஆனாலும் நம் நலனில் அக்கறையுள்ள, தூரத்திலிருந்தாலும் நம் வளர்ச்சியில் மகிழ்ந்திருக்கும், இன்னும் சொல்லப்போனால் தமது வரிசைமுறை  பற்றியெல்லாம் கூட அலட்டிக்கொள்ளாத நண்பர்கள் அனைவருக்குமே இருப்பார்கள் தானே.

கல்லூரி விடுதிகளில் நடக்கும் அரட்டைக்கச்சேரியில் இரவு முழுவதும் இன்னதென்று இல்லாமல் உலகத்திலுள்ள சகல நிகழ்வுகளையும் கிண்டலடித்துக் கொண்டிருப்போம். அதே நண்பர்கள் இன்று, எப்போதும் ஃபேஸ்புக்கில் பச்சை விளக்கில் தான் இருக்கிறார்கள். ஒரு “ஹாய்” சொல்லக் கூட தோன்றுவதில்லை. அதே நினைப்பு தான் அவர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவர்களின் அண்மை எப்போதும் உணரப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இது எல்லாம் சேர்த்து என்றாவது நேரில் சந்திக்க வாய்ப்பு வரும் போது பழைய நினைவுகளை அசைபோட்டு “பார்ட்டியாய்” பொங்கி வழிந்து விடுகிறது. :)

தன் வீட்டில் வீம்பு பிடிப்பவர்கள் கூட நண்பர்கள் வீட்டில் விழுந்து விழுந்து வேலை செய்வார்கள். நண்பனின் அக்கா, அண்ணன் திருமணங்களில் சாம்பார் வாளி தூக்காத ஒருவனாவது இருக்க முடியுமா என்ன?. அதே போல ஏதாவது அவசர உதவி என்றாலும் நம் நினைவிற்கு முதலில் வருபவர்கள் நண்பர்கள் தாம். சமீபத்தில் உறவினர் ஒருவருக்கு ஓ-நெகடிவ் வகை ரத்தம் தேவைப்பட்டது. சொந்தங்கள் சிலருக்கு அந்த வகை இரத்தம் இருந்தாலும் ஏதேதோ காரணம் சொல்லி, யாரும் தானம் தர முன்வரவில்லை. பிறகு நண்பர் ஒருவர் வந்து இரத்த தானம் செய்தார். அதே நாளன்று வேறு ஒரு நண்பருக்கு ஏ1-பாசிடிவ் இரத்தம் தேவைப்பட என் தம்பி சென்று இரத்த தானம் செய்து வந்தான். அவர்களின் சொந்தங்களிலும் யாருக்கேனும் அந்த வகை இருந்து தர மனமில்லாமல் இருந்திருக்கலாம். நான் பார்த்தவரையில் பெரும்பாலும், யாருக்கேனும் சிகிச்சை என இரத்தம் தேவைப்படும் பொழுதெல்லாம் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்களோ தான் வந்து உதவி இருக்கிறார்கள். சொந்தங்களுக்கு இல்லாத பிணைப்பு நண்பர்கள் எனும் போது தானாகவே வந்துவிடுவது தான் நிதர்சனம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு என் தம்பியின் நண்பன் வீட்டுக்கு அருகில் ஒரு சம்பவம். பதின்ம வயது பையன் ஒருவனை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று கடித்திருக்கின்றது. அவனும் சரியாக மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டான். எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் வாலிபம். வீட்டிலும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனது நடவடிக்கைகளில் மாற்றத்தை உணர்ந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். நாய் கடித்து மருத்துவம் எடுத்துக் கொள்ளாததால் “ரேபிஸ்” முற்றிவிட்டதாகவும், இனி பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட அவனது பக்கத்து வீட்டு நண்பன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறான். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தவர்கள். மருத்துவமனையில் தன் நண்பன் இருந்த கோலம் கண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இவனும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டான். இப்பொழுது இருவருக்கும் சிகிச்சை நடந்து வருகிறது.  ரேபிஸ் நோய் வந்த இளைஞனை நினைக்கும் போது மனம் பதறுகிறது. அதே நேரம் அவனுக்காக தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த அவனது நண்பனை நினைக்கும் போது வார்த்தைகள் எதுவும் வரவில்லை. இருவரும் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்ற முனுமுனுப்பு இரண்டு நாட்களாக தலைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

******

அன்பென்னும் சித்திரவதை!



என் பரிகாசம், துரோகம்
அலட்சியம், மறுதலிப்பு 
அனைத்தையும் புறந்தள்ளி
ஆத்மார்த்தமாய் ஏற்றுக் கொண்டாய் !

உன் கருணை மலர்கள் 
மொட்டவிழுக்கும் சிலிர்ப்புகள்
என்னைக் குற்றவாளியாக்கி
கூசச் செய்கின்றன.

எதிர்பார்ப்புகளற்ற உன் அரவணைப்பில்
புழுங்கித் தவிக்கிறேன்.
ஒரு சுடுசொல், சுளிப்பு, அழுகை, வெறுப்பு
ஏதேனும் செய்தாவது
என் ரணங்களைக் கீறி சுத்தப்படுத்து.
அறுவை சிகிச்சை தேவைப்படும்
புரையோடிப்போன புண்ணுக்கு
ஒத்தடங்கள் போதாது.

பொரித்து வெளிவருவேன் என்று
பொறுமையாய் அடைகாக்கிறாய்.
உள்ளே அழுகிப்போயிருக்கையில்,
நிபந்தனைகளற்ற உன் பேரன்பின் 
வெப்பம் தாளாமல்
வெடித்துச் சிதறிவிடுவேனோ என்ற
எனது பயம் உனக்குப் புரியவில்லையா? 

*************
படம்: இணையம்  http://www.mymodernmet.com/profiles/blogs/the-beauty-and-pain-of-love

Tuesday, July 10, 2012

செல்ல மகள் வருகை !


காய்க்கவில்லை என்று கல்லடி பட்டு
தூரதேசம் போனவர்கள் திரும்பி வந்தார்கள்
இளந்தளிரை சுமந்து கொண்டு.
பத்து மாத புதினத்தை
அத்தியாயங்களாக்கி அடுக்கினார்கள்
ஆசிரமம் ஆசிரமமாய் அலைந்த வலி மறைத்து.

குமட்டலை, தலைசுற்றலை
மேடிட்ட வயிற்றின் ஊரலை
சோகையில் வெளிறிய முகத்தை
நீர்வைத்து வீங்கிய காலை
இளக்கம் கொடுக்க இடுப்பில் ஊற்றிய சுடுநீரை
குடம் உடைந்து மருத்துவமனை விரைந்ததை
தலைதிருப்ப பட்ட பிரயத்தனத்தை
சுகப்பிரசவத்தில் பெண்மகவு பிறந்ததை என

கற்பனை செய்து வைத்த கதையனைத்தையும்
உண்மை போலவே கோர்த்துக் கோர்த்து 
புனைந்தார்கள் கணவனும் மனைவியும்.

சொன்ன பொய்களின் பாரம் தாங்காது
மூச்சழுத்த மார்பு விம்ம
மூர்ச்சையாகி கீழே சரிந்தாள் மனைவி.......

பாதுகாப்பின்மை உணர்ந்து
பரிதவிக்கிறது புதுவரவு.
மயங்கிய நிலையிலும்
குழந்தையின் அழுகைச்சத்தம்
கேட்கக் கேட்க புதிதாய்
பொங்கிக் கசிகிறது மார்பூறும் பால்.

காய்க்காமலே கனிந்து போகிறாள் தாயாக.

******

Thursday, July 5, 2012

செவியிடை மனிதர்கள் - 3


வணக்கம், மன்னார் அன் கம்பெனிங்களா?

ஆமா, நீங்க?

நான் கவிஞர் காத்துவாயன் பேசுறேன். நம்ம பதிப்பகத்திலிருந்து ஒரு கவிதைத்தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.

தாராளமா பண்ணலாமே

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்க்கு குறைஞ்சது 300 லைக்ஸ் விழும், டிவிட்டர்ல மட்டும் 3452 ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நான் ஒன்னும் எழுதாட்டியும் அதை ரீட்வீட் பண்ணீட்டே இருப்பாங்க. பதிவுன்னா 2587 ஹிட்ஸ் வரும், பின்னூட்டம் சராசரியா 432 வரும், அலெஸ்கா ரேட்டிங்கல........

சரி சார், இதெல்லாம் எதுக்கு சொல்றீங்க?

இல்லை நான் ஒரு ‘பிரபல பதிவர்’ன்னு சொல்ல வந்தேன். எனக்கு புத்தகம் போடனும்னெல்லாம் விருப்பம் இல்ல, என் வாசகர் வட்டத்துல தீர்மானம் எடுத்துட்டாங்க. என்னால மீற முடியல.

வாசகர்கள் கேட்டா கண்டிப்பா பண்ணித் தான் சார் ஆகனும்.

சந்தோசம், தொகுப்புக்கு தலைப்பு “அகவெளியெங்கும் அலைந்து திரியும் கொடுநடை கதகளி”. சரி தானே?

சார், ரொம்ப கிளாசிக்கலா இருக்கே. கொஞ்சம் கமர்சியலைஸ் பண்ண முடியுமா?

இல்ல நண்பரே, எல்லாக் கவிதையிலயும் உள்ளொளி பொங்கும் ஞான அலை இருக்கும். அதான் வைப்ரேடிங்கா தலைப்பு வச்சேன், இல்லாட்டியும் பரவால்ல. “உள்ளே வெளியே விளையாட்டும், அஞ்சு காசு கமர்கட்டும்” ஓகே வா?

சூப்பர் சார். 

அதிருக்கட்டும் கவிதைத் தொகுப்புன்னா எவ்ளோ வரும்?

பக்காவா பண்ணுவோம் சார். ஒரு முப்பதாயிரம் வரும்.

சரி, நீங்க என்ன பண்றீங்க, என் பிளாக்ல இருக்க கவிதையெல்லாம் எடுத்து புக்கா போடுங்க. நீங்க ஒரு பதினஞ்சாயிரம் எடுத்துக்கங்க. மீதி பதினஞ்சாயிரம் எனக்கு எப்ப அனுப்பி வைக்கிறீங்க?

என்னது, அனுப்பி வைக்கவா ? சார், முப்பதாயிரம் நீங்க தந்தா கவிதைத்தொகுப்பு வரும்.

இல்லாட்டி...

வாய்ல நல்லா கெட்ட வார்த்தையா வரும். மொத்ல்ல வைய்யா ஃபோனை.

டொக்.


******

Monday, July 2, 2012

நீரில் மூழ்கும் துரோகத்தீ - ஒரு வாசிப்பனுபவம்


நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



மதுரையில் பிறந்து வளர்ந்த எவருக்கும் சௌராஸ்ட்ரா சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு நிறையவே அமைந்திருக்கும். வீதியில், டீக்கடையில் என எங்கு பேசிக்கொண்டாலும் அவர்கள் சமூகத்தினர் ஒருவரைப் பார்த்து விட்டால் போதும், சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலையின்றி அவர்களுக்குள் சௌராஸ்ட்ரா மொழியில் பேசத்துவங்கிவிடுவார்கள். நாம் முழித்துக் கொண்டு நிற்க வேண்டியது தான். அவர்களுக்கென தனி வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி என மாநகர சந்தடியிலும் தனித்துத் தெரியும் இம்மக்கள் குஜராத் மாநிலத்திலிருந்து வந்து தெற்கில் குடிகொண்டனர். இயற்கையாகவே பயந்த சுபவாமுடைய இந்த மக்கள் நெசவுத் தொழிலையே பெரிதும் நம்பியிருந்தனர். என்பதுகளின் இறுதி வரை சிறப்பான கல்வியறிவு பெற்ற சமூகம் என்று சொல்ல முடியாத நிலையே இருந்தது. பிறகு காலமாற்றத்தில் இந்த சமுதாயத்திலுள்ள செல்வந்தர்கள் பற்பல கல்விநிலையங்கள் துவங்கியதன் விளைவாக இன்று அநேக மக்கள் கல்வியறிவு பெற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று சாதிக்கத் துவங்கியுள்ளனர். இவர்களின் குழுவுணர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியது. எங்கு சென்றாலும் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகள் செய்து கொள்வர்.

இந்த சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராம். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ”” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க”” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ””யில் உள்ள தீ.

இல்லற வாழ்வை துவங்கி, அதிலும் புரிந்து நடக்கும் நல்ல மனைவியும், அழகிய பெண் குழந்தையும் அமையப்பெற்ற, தொழிலில் ஏறுமுகம் கொண்டிருக்கும் ஒரு இளைஞன்... சொந்த வீடும், சொந்தத் தறியும் அடைந்த பிறகு தான் திருமணம் என்று வைராக்யத்துடன் இருந்து சாதித்த இளைஞன்... தொழில் நொடிக்கும் நிலையிலும் தன்னை ஆளாக்கிய, அங்கீகரித்த முதலாளியை விட்டுப்பிரியாது அவருக்கே மனதைரியம் அளித்த இளைஞன்... சங்கக்கூட்டங்களில் தலைவரின் நம்பிக்கைக்கும் உடனிருக்கும் தொழிலாளர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமான சொல்வன்மை நிறைந்த துடிப்புமிக்க இளைஞன்... தான் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மொய்த்து எடுக்கும் சொந்தபந்தகங்களின் சுயநலம் தெரிந்தும் “உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கு, எப்படியும் உழைத்து நிமிர்ந்து நிற்கலாம்” என பெருந்தன்மை கொண்ட இளைஞன்... உடன் தம்பி போல் பழகி வந்த உதவியாளன் துரோகம் இழைக்கிறான் எனத் தெரிந்தும் மனமுடையாமல், அவனை விலக்கி தன்முனைப்புடன் செயல்படும் இளைஞன்... இப்படி எத்தனையோ ஆதர்சன குணங்கள் கொண்ட ஒருவன் வேற்றுப் பெண்ணின் ஒரு குழைவுக்கு, ஒரு சிறு தனிமைக்கு பலியாகி அந்த சுவையை விட முடியாமல் அலைக்கழிக்கப்படுவது தான் கதை. அதற்கு அவனுக்குக் கிடைக்கும் தண்டனையின் ரணம் ஆறுவதற்குள் அடுத்த வாழ்வைத் துவங்குகிறான் என்று முடிகிறது. அதற்கு என்ன சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் புதினம் முடிந்தவுன் இருக்கும் படபடப்பும், மனவுலைச்சலும் நீங்க இன்னும் நெடுநாளாகும்.

பொதுவாக, புதினங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நம்மைப் பொருத்தி வாசிக்கும் போது வாசிப்பனுபவம் நெருக்கமாகவும், உளப்பூர்வமாகமும் அமையும் என்று சொல்வார்கள். “வேள்வித்தீ”யின் கண்ணன் ஒருமைத் தன்மையுடையவனாக, தனக்குக்கீழ் உள்ளவர்களுக்கு உதவுபவனாக, சமஅந்தஸ்து உடையவர்களின் உற்ற தோழனாக, வசதிபடைத்தவர்களிடம் ஒதுங்கியிருப்பவனாக, தன்மீது அதிக நம்பிக்கை கொண்டவனாக, இல்வாழ்வில் குறையேதுமின்றி நிறைவாழ்வும் நல்காமமும் தருகின்ற துணையைப் பெற்ற பின்பும் சபலத்திற்காட்படும் சாதரணனாக,  தன் தவறை உணராத, உணர்ந்தாலும் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் ”மனைவியை தன்னை முழுமையாக நம்ப வைக்க என்ன செய்யவேண்டும்” என்று மட்டுமே சிந்திக்கும், தன்முனைப்பு நிரம்பிக்கிடக்கும் ஒரு “மாதிரியுரு” மத்தியவர்க்க  இளைஞனாக” சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். புதினத்துடன் பயணம் செய்த ஒரு சக பயணியாக முடிவில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தான் என் மனம் விரும்பியது. ஆனால் சித்தரக்கப்பட்டிருக்கும் ”கண்ணனாக” இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் ஒரு ஆணாக “அவன் அழ ஒரு மடி இல்லையென்றால் இன்னொன்று. தன் மனைவியின் தற்கொலைக்குத் தானே காரணமாக இருந்தாலும் அடுத்தவள் அரவணைப்பும் அவனுக்கு வேண்டும்” என்ற நிலையில் தான் இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.

இன்னொருத்தி இருக்கிறாள். 1975ம் ஆண்டின் இளம்விதவை. பணம், வசதி, செல்வாக்கிற்குக் குறைவில்லாத, ஊர் உறவு பற்றிக் கவலைப்படாத, முகப்பூச்சு, அலங்காரத்திற்குக் குறைவில்லாத, வாசக ஆண்கள் அவள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்துப் படிப்பார்களோ அப்படியே இருக்கிறாள். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறாள் இல்லையென்றால் உருவாக்குகிறாள். துர்மரணம் நிகழும் போது, அது தன்னால் இல்லை என்று நம்புகிறாள். பாதிக்கப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அரவணைத்துக் கொள்கிறாள். இனி அவனுக்கு தான் தான் எல்லாம் என்று நம்ப வைக்கிறாள். வேற்றூருக்கு சென்று புதிய வாழ்வை துவங்கலாம் என்று அவனை குற்றவுணர்விலிருந்து வெளிக்கொண்ர்கிறார். அவளளவில் அவள் நியாயம் அவளுக்கு.

இவை அனைத்தையும் விட, புதினத்தில் நெஞ்சையறுக்கும் படிமத்தில் ஒரு ”பிஞ்சு” உயிர் இருக்கிறது, இல்லை.. இருந்தது. பசி எடுத்தால் மட்டும் உணர்ச்சிகளைக் காட்டும், மற்ற நேரங்களில் பிண்டமாகக் கிடக்கும் சின்ன உயிர். துயரமான நேரத்தில் அது “ம்... ம்...ம்மா”, “ப்... ப்... ப்பா” என்று முதல் மழலை பேசத் துவங்குகிறது. பிறகு தாயின் மார்போடு கட்டி அணைக்கப்பெற்று நீரில் மூழ்கி மூச்சு முட்ட முட்ட இறந்து போகின்றது. 

ஒரு கணவனாக, பெண் குழந்தையின் தந்தையாக என்னால் இந்த புதினத்தை ஜீரணிக்க முடியவில்லை.

நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
விலை: ரூ 125



--- வி.பாலகுமார்
http://solaiazhagupuram.blogspot.in/
******