Friday, February 28, 2014

”பழைய பன்னீர் செல்வம்” மொமெண்ட்


மூன்று வருடங்களுக்கு முன்பு, தொழில்நுட்பப் பிரிவில் இருந்து வர்த்தகப் பிரிவுக்கு மாற்றலாகி வந்த போது, இனி தொழில்நுட்ப நுணுக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும் என்ற வருத்தம் லேசாக இருந்தது. அது வரை பணியாற்றியது, டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் - DBA, மாறறலாகி வந்த இடம் - கஸ்டமர் ரிலேஷன் மேனேஜ்மெண்ட் - CRM. சரி, மாற்றத்தை மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம் (வேற வழி!!!) என்ற மனநிலைக்கு வந்த பிறகு, புது இடத்துக்கேற்றவாறு மேலாண்மை விஷயங்களில் கவனம் செலுத்த, இதுவும் பிடித்தமானதொரு வேலையாக மாறிவிட்டது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஒரு சத்திய சோதனை. 

மாலை அலுவலகம் முடியப்போகும் நேரத்தில், தூத்துக்குடி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. இயங்கிக் கொண்டிருந்த ஒரு டேட்டாபேஸ் படுத்து விட்டது போல. பழைய ஞாபகத்தில் என்னை அழைத்து விட்டார்கள். நானும் “இந்தமாதிரி இந்தமாதிரி.... நான் யூனிஃபார்ம்மை கழற்றி மூனு வருஷமாச்சு. இப்போ மறுபடி மாட்டுனா... அளவு சரியா இருக்காது, கரண்ட்ல யூனிஃபார்ம் போட்டு ட்யூட்டி பாக்குற ஆபீஸர் யாரையாவது கூப்பிடுங்க” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் விடாப்பிடியாக “தீவிரவாதிகளை அடக்கனும்னா நீங்க தான் துப்பாக்கியை எடுத்துட்டு எல்லைக்கு வந்தே ஆகனும், உங்களால மட்டும் தான் இந்த மிஸனை கம்ப்ளீட் பண்ண முடியும். (என்ற அளவுக்கு இல்லாட்டியும்) யூனிஃபார்ம் இல்லேன்னா பரவால்ல, மஃப்டிலயே சார்ஜ் எடுங்க” என்று ஒரே பிடிவாதம் பிடித்தார்கள். பிறகு... ”ஏத்தி விட்டால், ஏறாதார் யாருமுண்டோ...?” நானும் சிக்கிட்டேன். 

கடைசியாக எஸ்.க்யூ.எல் கமாண்ட் அடித்துப் பார்த்தே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போதெல்லாம், நமது மல்லுக்கட்டு எல்லாம் இயந்திரமயமான மனிதர்களோடு தான். செல்லமான செர்வர்களுடனும், பிரியமான டேட்டாபேஸ்களுடனும் பழக்கவழக்கம் சுத்தமாய் நின்று பலகாலம் ஆகிவிட்டது. அதுக்காக எடுத்துக் கொண்ட டாஸ்கை பார்த்து பயப்படவா முடியும். டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் கூகுள் டாட் காம் என்ற அதிநவீன ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு  “குதிச்சுற்றா கைப்புள்ள...” என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, களத்தில் இறங்கியாயிற்று. “நாலு மணி நேரம், திணறத் திணற... சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, ரிமோட் டெக்ஸ்டாப்க்கு உள்ளேயே மூழ்கி தூத்துக்குடிக்கே போய்விட்டேன். சுத்தமாக மறந்து விட்டது என்றே நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள், ஆட்டோ ரீவைண்ட் செய்து தானாக மனத்திரையில் ஓட ஆரம்பித்து விட்டது. மூளையும் விரல்களும் தானாக கூட்டு சேர்ந்து அதுவாக வேலை பார்க்க நான் சும்மா வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது போல இருந்தது. 

ஒரு வழியாக சுயநினைவுக்கு வரும் போது, எந்தவித சேதாரமும் இல்லாமல் டேட்டாபேஸ் மீண்டும் பழைய நிலையை அடைந்து ஓடிக் கொண்டிருந்தது. “சக்சஸ்” என்று கத்தலாம் என பார்த்தால், இங்கே அலுவலகத்தில் ஒரு காக்கா குருவியைக் கூட காணோம். சரியென மானிடருக்கும், சிபியூவுக்கும் டாட்டா சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்தாலும் “ஐயோ, இப்போ எதையாவது வாங்கனுமே!”னு துடிக்கிற கவுண்டமணி மனநிலை தான். இதற்கு முன்னர் இதை விட பலமடங்கு பெரிய வேலைகள் எல்லாம் செய்திருக்கிறோம் தான். ஆனால் குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, சடாரென களத்தில் குதித்தவுடன், பழைய அனுபவம் எல்லாம் லைன் கட்டி மனத்திரையில் வந்ததும், “குமாரு ஹேப்பி அண்ணாச்சி!”. சரி, அதைப் பகிர்ந்து கொள்ள இணையத்தை விட்டா வேறு வழி? அதான் உங்ககிட்ட கொட்டிட்டேன். இனி நார்மலாகி விடுவேன்.

ஆங், இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், “நமக்குள்ள இருக்க வித்தக்காரன் எத்தனை வருசமானாலும் உள்ளே தூங்கிட்டு தான் இருப்பான் போல, தேவைப்படும் போது தானா விழுச்சுக்குறான். நாம தான் அப்படி ஒருத்தன் இருக்கதையே மறந்துட்டு “பே”னு சுத்திட்டு இருக்கோம்”. :)

******

Monday, February 24, 2014

பெண்களின் உலகம்


ஆண்களும், பெண்களும் ஒரே உலகத்தில் தான் இருக்கிறார்க்ள். ஆனால் அவர்கள் இருவரின் உலகமும் வெவ்வேறாகவே இருக்கிறது. ஒரு ஆண், 89 என்பதை மிகச்சுலபமாக 90 என்று கற்பிதம் செய்து கொள்கிறான், ஆனால் பெண்ணோ தசம பின்ன கணக்கில் வாழ்பவள். அவளுக்கு எப்பொழுதும் 89.85258 என்பது போலத் தான் நினைவில் வைத்துக் கொள்ளத் தோன்றும். நிதர்சனம் என்னவென்றால் பெண் இவ்வாறு சிந்திக்கிறாள் என்பதே ஆணுக்குத் தெரிவதில்லை. அது தான் பிரச்சனை. நம் இந்திய சமூகத்தில், ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் ஏதேனுமொரு விவாதத்தில் கணவன் தன் சார்பாக பேசாமல் மௌனமாக இருந்தான் என்ற ஒரு நிகழ்வு, பெண்ணின் மனதில் ஒரு தழும்பாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடியதாக மாறி விடுகிறது. ஆணுக்கோ அப்படி ஒரு விவாதம் நடந்தது என்பதே வெகு விரைவில் நினைவில் இருந்து அழிந்து விடும். எந்தவொரு விஷயத்தையும் ஆணால் எளிதில் பொதுமைப் படுத்திவிட முடிகிறது. ஆணால் பெண்ணுக்கு அந்த விஷயத்தின் நுண்ணிய துளைகளை ஆராய்வது தான் இயல்பாக இருக்கிறது.

மலைகள் பதிப்பகம், ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் நான்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை “யானை காணாமலாகிறது”  என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது. அதிலுள்ள ஒரு கதை “தூக்கம்”. ச.ஆறுமுகம் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு நடுத்தரவர்க்கத்துப் பெண். எல்லோராலும் விரும்பப்படுகின்ற, அதிர்ந்து பேசாத, பெரிய அளவில் குறைகள் தென்படாத ஒரு “மாதிரி” கணவன், பள்ளிக்குச் செல்லும், தொந்தரவுகள் தராத ஒரே மகன் என்று சிறு குடும்பம். எந்தவித சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை. வேலைக்குச் செல்லாத இல்லத்தரசியாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு, இந்த சீரான சுழற்சி முறை வாழ்க்கை சலிப்படையத் தொடங்குகிறது. ஓர் இரவு தூக்கத்தில் கொடூரமான கனவொன்றினால் நிலைகுலைந்து எழும் அவளால் அதன் பின் தூங்க முடியவில்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு தூக்கம் என்பதே வருவதில்லை. தினமும் பகலில் அன்றாட வீட்டு வேலைகளை செய்து, இயல்பாக இருப்பவள் இரவானால் தூங்க முடியாமல் அவதியுறுகிறாள். ஆனால் மறுநாள் காலை எந்த வித அசதியோ உடற்சோர்வோ இன்றி எப்பொழுதும் போலவே இருக்கிறாள். 

ஒரு கட்டத்தில் தூக்கமின்மைக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாமல், இரவை முழுமையாக தனக்கான பிரத்யேக நேரமாக மாற்றிக் கொண்டு, தனக்குப் பிடித்தமான விஷயங்களை செய்யத் துவங்குகிறாள். அவளுக்கு சிறுவயதில், சாக்லேட் திண்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் பல் மருத்துவரான அவளது கணவனை மணந்த பின், சாக்லேட் தின்பதை விட்டு விட்டிருப்பாள். இரவு விழிக்கும் பழக்கம் வந்தவுடன், அவளுக்கு சிறு வயது நினைவுகள் எல்லாம் துளிர் விடத் துவங்குகிறது. இரவு முழுவதும் தனக்குப் பிடித்தமான நாவலை வாசித்தபடியே அவ்வப்பொழுது சாக்லேட்டை சுவைத்து உண்கிறாள். தூக்கத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் முழிப்புத்தட்டாத கணவனின் இயல்பு, அவளுக்கு வசதியாய் இருக்கவே, தனது சிறிய காரை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள துறைமுகத்திற்குச் சென்று வேடிக்கை பார்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்கிறாள். தனது இந்த இயல்பு மீறிய இந்த செயலைத் தன் கணவனால் கண்டுபிடிக்க முடியவில்லை என அறியும் போது மனப்புழுக்கம் கொள்கிறாள். அதன் பிறகு, தூக்கத்தில் உறங்கும் கணவனின் முகத்தைப் பார்க்கும் போது, அவளுக்கு அது கொடூரமான ஒன்றாகத் தோன்றுகிறது. தன் மகன் தூங்குவதைப் பார்க்கும் போதும், அவ்வாறே தோன்ற சிறிது பதட்டமாகிறாள். பின் மகனின் முகத்தில் தன் கணவனின் சாயல் இருப்பதால் தான் தனக்கு அவ்வாறு தோன்றுகிறது என்று நினைக்க, கணவன் மேலுள்ள வெறுப்பு இன்னும் அதிகமாகிறது. பகல் பொழுதில் தன் சுயத்தில் இருந்து விலகி அன்றாட வேலைகளை ஒரு இயந்திரம் போல செய்வதையும், அவள் அவ்வாறு மாறியிருப்பதை ஒருவரும் உணராமல் அவரவர் வேலையை செய்து கொண்டிருப்பதை நினைத்து மிகுந்த சலனம் அடைகிறாள். ஒரு நிலையில் தான் தன் உடலில் இருந்து வெளியேறி தூரத்திலிருந்து அந்த உடலின் அன்றாட சலிப்புமிக்க செயல்களை கவனிப்பதைப் போன்ற மாயவுணர்வினைப் பெறுகிறாள். அப்பொழுது முறைமைப்படுத்தப்பட்ட ஒரு இயந்திரம் போல, வெளியிலிருந்து செலுத்தும் விசைக்கேற்ப தன் உடல் செயல்படுவதாகவும், தன் ஆன்மா அழிந்து கொண்டிருப்பதாகவும் நம்புகிறாள். ஒரு நாள், பிரியமான தனது சின்ன காரினுள்ளே அவளது உடல் அமர்ந்திருக்க, வெளியிலிருந்து இரண்டு ஆண்கள் அந்தக்காரை அழுத்திக் குறுக்க, அவள் மூச்சு முட்டி நெரிபடுதை அருகில் இருந்து பார்க்கிறாள். அத்துடன் அந்த சிறுகதை முடிகிறது.

மனவொற்றுமை இல்லாமல், சண்டை சச்சரவுகளுடன் இருக்கும் மணவாழ்வில் தான் ஒரு பெண் துன்பமடைகிறாள் என்பதே பொதுப்பார்வை. ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லாத பொழுதும், கணவனது பிரத்யேக கவனிப்பு தன் மீது இருக்க வேண்டும், தனது சிறுசிறு அசைவுகளுக்கும், நுண்ணுணர்வுகளுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும் என்பதே ஒரு பெண்னின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த உணர்வானது, இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், வாழ்வுமுறை என்பதை எல்லாம் தாண்டி எல்லா பெண்களுக்குள்ளும் மையப்புள்ளியாக இருக்கிறது என்பதை எங்கோ கிழக்காசியாவில் ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு, பின்னர் ஆங்கிலத்தின் வழி தமிழுக்கு வந்திருக்கும் இந்த சிறுகதை மூலம் உணர முடிகிறது. அதே சமயம், எல்லா நாடுகளில் உள்ள ஆண்களும் கூட ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஒரு ஆணைப் பொருத்தவரை, மனைவிக்குத் தேவையான அல்லது அல்லது தேவையில்லை என்று அவனுக்குத் தோன்றினாலும் அவள் வேண்டுமென்று கேட்பதற்காக வாங்கிக் கொடுப்பது என்பதே பெருங்கருணையுடனும், காதலுடனும் செய்யும் பரிவு மிக்க சாதனை. ஆனால் பெண்ணைப் பொருத்தவரை, அந்தப் பொருளைப் பெற்றுக் கொண்டாலும் கூட, தன் குறிப்பறிந்து செயலாற்றாமல் தான் வாய்திறந்து கேட்பது வரை காக்க வைக்கிறான் என்ற பெருங்கவலையும் கோபமும் உள்ளூர இருந்து கொண்டே இருக்கிறது. இதே மனநிலை இருவருக்கும் நீடிக்கும் போது, மனவாழ்வில் கண்ணுத்தெரியாத விரிசல் விழுந்து, அது வாழ்நாள் முழுமைக்கும் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.

இந்தக் கட்டுரை, 23/02/2014 அன்று மதுரையில் நடந்த மலைகள் பதிப்பக நூல்கள் திறனாய்வுக் கூட்டத்தில் ஹாருகி முரகாமியின் “தூக்கம்” சிறுகதையை முன்வைத்து பேசுவதற்காக தயார் செய்திருந்த உரை. வேறு ஒரு நிகழ்விற்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், கூட்டத்திலிருந்து பாதியிலேயே செல்லும்படியாகிவிட்டது. ஆதலால் அங்கே இதனைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதெனாலென்ன, அங்கிருந்த நண்பர்களோடு சேர்த்து, இணைய நண்பர்கள் அனைவரிடமும் பகிர்கிறேன். வாசித்து விட்டு தங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

சொல்ல மறந்து விட்டேன், “யானை காணாமலாகிறது” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் நான் மொழிபெயர்த்த “மனிதனைத் தின்னும் பூனைகள்” சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. 

******