Wednesday, September 26, 2012

செவியிடை மனிதர்கள் - 4


ஹலோ...

ஹலோ....

ஏய் பாலா, குமார் பேசுறேன்டா. எப்படிடா இருக்க?

டேய்... நல்லா இருக்கேன்டா. இப்ப எங்கடா இருக்க?

இங்க வந்து ஒரு வருசம் ஆச்சு. கேக்ரான் மேக்ரான்னு ஒரு கம்பெனி. அங்க தான் வேலை பார்க்குறேன்.

ஓ கேக்ரான் மேக்ரானா. அங்க என் ஃபிரண்டு ஒருத்தர் வொர்க் பண்றார் டா

அட, இங்க இருக்குறதே ஒரு இருபது பேர் தான். யாருடா அது ?

அவர் பெயர் ...................................................

ஓ அவனா, சரியான வெளங்காவெட்டிடா.. எப்பப்பாரு எதெயாவது தமிழ்ல டைப் பண்ணீட்டே கெடப்பான்டா

டேய், அவர் ஒரு பிரபல பதிவர் தெரியுமுல்ல

என்ன எழவோ, ஆமா ஒனக்கு எப்படிடா பழக்கம்

இல்ல நானும் பதிவெல்லாம் எழுதுவேன், அப்போ அறிமுகம்.

டேய், நீயும் வெளங்காவெட்டி கோஷ்ட்டியாடா, உங்களையெல்லாம் ^^@&^@#$@(&$@@)$@&@)_$@^@$%%@*@#_

ஹலோ, ஹலோ... டேய் இங்க சிக்னல் சரியா கெடைக்கல. நான் அப்புறமா கூப்பிட்றேன், பை.

******

#எத்தகையதொரு கொடுமையான சமூகச்சூழலில் எழுத்துப்பணியாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள் !!!

#புனைவுன்னு சொன்னா எதிர்கேள்வி கேட்கக்கூடாது.

Friday, September 7, 2012

மதுரை புத்தகச்சந்தை - 2012மதுரை தமுக்க மைதானத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு தனியார் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாய். ஆனாலும் விடுமுறை நாட்கள் மற்றுமின்றி வார நாட்களிலும் சரியான கூட்டம். உள்ளே சென்று வாங்ககூடிய விலையில் ஒரு பொருளுமில்லை. இருந்தும் கண்காட்சிக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் மக்களை சித்திரத்திருவிழாவுக்கு செல்வது போல் அழைத்து வந்து விட்டன. அதே மைதானத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். ஆனாலும் அவ்வளவு கூட்டமில்லை. காரணம் இப்பொழுது புத்தக் கண்காட்சி நடப்பதே பலருக்குத் தெரியவில்லை. புத்தகங்கள் மனிதர்களை மேன்மையாக்கும், எனவே அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும், புத்தகச்சந்தைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை. ஆனாலும் மீடியாக்களில் இன்னும் கொஞ்சம் விளம்பரம் செய்திருந்தால் சந்தைக்கான வரவேற்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

போகட்டும், இந்த முறை எந்த வித முன்முடிவுகளும், குறிப்புகளும் இல்லாமல் கண்ணில் “பளிச்” என்று படும் புத்தகங்களை மட்டும் வாங்குவது என்ற உறுதியுடன் சென்றிருந்தேன். தேர்ந்தது ஆறு புத்தகங்கள்.

தமழிச்செல்வன் சிறுகதைகள் / ச.தமிழ்ச்செல்வன்
ஏழிலைக் கிழங்கின் மாமிசம் / இரா.சின்னசாமி
வெட்டுப்புலி / தமிழ்மகன்
நித்யகன்னி / எம்.வி.வெங்கட்ராம்
யாக்கை / லக்‌ஷ்மி சரவணக்குமார்
காமத்திப்பூ / சுகிர்தராணி

ஒரு ஸ்டாலில் மட்டும் கூட்டம் அலை மோதியது. என்னவென்று எட்டிப்பார்த்தால், ”ஒரு புத்தகம் பத்து ரூபாய், மொத்தமாய் நூறு ரூபாய்க்கு வாங்கினால் மேலும் மூன்று புத்தகங்கள் இலவசம்” என்று செம ஆஃபரில் கல்லா கட்டிக் கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக எனது ரசனை சார்ந்த புத்தகங்கள் எதுவும் இல்லை. வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. பொதுவாக, நமது ஊர்களில் புத்தகங்களுக்கு ஒரு புனிதத் தன்மை கொடுத்து, சாமானியர்கள் வாங்க முடியாதபடி யானை விலை குதிரை விலை தான் விற்கிறார்கள். குறைந்த விலை நிறைய சர்குலேசன் ஃபார்முலா ஏன் இன்னும் சூடு பிடிக்கவில்லை என தெரியவில்லை. நான் இலக்கியவாதியாக இருந்தாலாவது ஏதாவது புரட்சி செய்யலாம், காமன் மேன் ஆகிவிட்ட படியால வெறும் கருத்து மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இணைய பரிச்சயம் வந்த பிறகு எல்லா படைப்பாளிகளும் ஏதோ நமக்குத் தெரிந்தவர்கள் போலத்தான். அவர்களது அன்றாட நிகழ்வுகள் எல்லாம் நம் விரல்நுனியில். இந்த முறை புத்தகச்சந்தையிலும் நிறைய பிரபல முகங்கள் காணக்கிடைத்தன. உடன் வந்த இல்லாளிடம் “இவர் ஃபேஸ்புக்குல இருக்கார், அவர் ப்ளாக்ல கலக்குறார், இந்த குரூப்புக்கும் அந்த குரூப்புக்கும் தான் பிரச்சனை” என்று எதையாவது அள்ளி விட்டுக் கொண்டே வந்தேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தவர் இறுதியாக வெளியேறும் போது கேட்டார். “இவ்வளவு பேரைத் தெரியுங்கிறீங்க, பிறகேன் ஒருத்தர் கூட உங்கட்ட பேசல?” அதற்கு நான் சொன்னேன். “எனக்குத் தான் அவுங்களைத் தெரியும், அவுங்களுக்கு நான் யாருண்ணே தெரியாதே!”. அதற்கு அவர் பதில் “ம்க்கூம்...”

இதுக்காகவாவது முதல்ல பிரபலம் ஆகனும்.

பிறகு முக்கியமான ஒரு பின்குறிப்பு: அறிவுசார் மக்கள் கூடும் புத்தகச்சந்தையிலும் ஒரு பிளேட் மிளகாய் பஜ்ஜி இருபது ரூபாய் என்று தான் கொள்ளையடிக்கிறார்கள், தண்ணீர் தருவதே இல்லை :(

******

Tuesday, September 4, 2012

முகமூடி - நாங்களும் இருக்கோம்


உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக என்று அவ்வப்போது சீன மொழிமாற்றப் படங்களை தமிழ் அலைவரிசைகளில் ஒளிபரப்புவார்கள். மிக சாதாரண வேலை செய்து கொண்டு ஒரு பெரியவர் இருப்பார். அவர் தான் உலகின் மிகச்சிறந்த தற்காப்புக்கலை நிபுணர். அவரிடம் வித்தை கற்ற சீடர்களில் ஒரு ’கெட்ட’ சீடர் தீயவழியில் சென்று, கற்ற தற்காப்புக் கலைகளை சமூகத்தை சீரழிப்பதற்காகவும், பொதுமக்களை கொல்வதற்காகவும், குறுக்கு வழியில் பெரும்பொருள் ஈட்டுவதற்காகவும் பயன்படுத்துவார். அதை தட்டிக்கேட்கும் குருவையும் கொன்று விடுவார். குரு இறப்பதற்கு முன்பாக தன்னிடம் உள்ள அரிய வித்தை ஒன்றை மற்றொரு ’நல்ல’ சீடருக்கு கற்றுக் கொடுத்து விட்டு இறந்து விடுவார். அந்த ’நல்ல’ சீடர் இறுதிக் காட்சியில் ‘கெட்ட’ சீடரை அந்த பிரத்யேக வித்தை மூலமாக வீழ்த்துவார். இடையில் நேர நிரப்பியாக சில கோமாளித்தனங்கள் செய்வார். நாயகியை கவர முயற்சிப்பார். அப்பாவுக்கு கெட்ட பிள்ளையாகவும், தாத்தாவுக்கு நல்ல பிள்ளையாகவும் நடந்து கொள்வார். முடிவில் நாயகியை கைகோர்ப்பார், சுபம்.

வழக்கமாக, நான் பார்க்க நினைக்கும் படங்களுக்கான விமர்சனங்களை முன்னரே படிப்பதில்லை. “முகமூடி”யை பார்க்க எந்த முன்முடிவும் இல்லாததால் இணையத்தில் கிழித்துத் தொங்க விட்டிருந்த அனைத்து தோரணங்களையும் கண்ணாரக் கண்டிருந்தேன். படம் வெளியாகிய முதல் வாரயிறுதியிலேயே பார்க்க வாய்க்கும் என நினைக்கவும் இல்லை. குடும்ப விழாவிற்கான முதல் நாள் இரவு, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் புதுப்படம் செலவது மரபு. கண்ணில் தெரிந்தது “முகமூடி” தான். 

பசங்களாக சேர்ந்து ஒரு பத்து பேர் சென்றோம். போகும் போதே “நான் அப்பவே சொன்னேன்ல” விருது பெறும் பொருட்டு படத்தின் சூப்பர் ஹீரோ தன்மையை லைட்டா சொல்லி மக்களை திடப்படுத்தப் பார்த்தேன். ”ப்ளாக்ன்னு ஒன்னு கிடக்கு, பொழுதன்னைக்கும் அதப் படிச்சிட்டு இப்படித்தான் அண்ணன் எதையாவது உளறும்” என்று தம்பிமார்கள் அண்ணனுக்கு மதிப்பளித்து விட்டு படம் பார்க்க ஆர்வமாகினர். நான் எங்கே என்ன குறியீடு இருக்கிறது என்று அலர்ட்டானேன். முதல் காட்சியிலேயே ஒரு பூனையைக் காட்டினார் தமிழகத்தின் ஒரே உலக இயக்குநர். அப்புறம் ஒரு நாய், பிறகு அந்த நாயின் குரைப்பு. பிறகு சிறிது நேரம் கழித்து, “பாருக்குள்” செல்வதற்கு முன் ஹிட்லராக இருந்தவர், வெளியே வரும் போது சாப்ளினாக மாறினார். அப்புறம் கொஞ்ச நேரத்தில் லேசா தலைவலி.  சரி, நிறுத்திக்குவோம், இதுக்குமேல் உற்றுப் பார்த்தால் உலக சினிமா தாங்காது என்று முடிவு செய்து உலகக் கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு சும்மா படம் பார்ககத் துவங்கினேன். படம் முடியும் போது மேலே சொன்ன சீன டப்பிங் மாதிரி ஒருவழியாக “சுபம்” சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கும் என்ன சந்தேகம்னா... சூப்பர் ஹீரோ, சூப்பர் ஹீரோ என்று பயங்கரமாக விளம்பரப்’படுத்தி எடுத்தார்களே, அந்த சூப்பர் ஹீரோவை கடைசி வரை கண்ணிலேயே காட்டவில்லையே. ஒரு வேளை இரண்டாம் பாகம் எதும் வருகிறதா என்று தெரியவில்லை. அப்புறம் அந்த ரோபோ செய்யும் தாத்தா கேரக்டரில் ரஜினியையும், குறுந்தாடி தாத்தா கேரக்டரில் கமலையும் ஏன் உலக இயக்குநர் கிண்டல் அடித்திருக்கிறார் என்று புரியவில்லை.

ஒருவேளை இவர்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் சும்மா இருந்திருந்தாலே, இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்காதோ என்று தோன்றுகிறது. தங்களை அறிவாளிகளாக கற்பிதம் செய்து கொள்ளும் சாமானியர்கள் பாவம், இந்தப்பக்கமும் செல்ல முடியாமல் அந்தப்பக்கமும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள் போலும்.

இணையத்தின் எதிர்மறை விமர்சனங்களை முழுதும் சுமந்து கொண்டு படம் பார்த்த எனக்கு, அவ்வளவு ஒன்றும் மோசமில்லை என்று தான் தோன்றியது. ஆனால் இணையம் சாராத பார்வையாளனுக்கு படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்திருக்கும். உலக இயக்குநரின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என தெரியவில்லை. 

சுபம் !
******