Friday, September 7, 2012

மதுரை புத்தகச்சந்தை - 2012



மதுரை தமுக்க மைதானத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு தனியார் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாய். ஆனாலும் விடுமுறை நாட்கள் மற்றுமின்றி வார நாட்களிலும் சரியான கூட்டம். உள்ளே சென்று வாங்ககூடிய விலையில் ஒரு பொருளுமில்லை. இருந்தும் கண்காட்சிக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் மக்களை சித்திரத்திருவிழாவுக்கு செல்வது போல் அழைத்து வந்து விட்டன. அதே மைதானத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். ஆனாலும் அவ்வளவு கூட்டமில்லை. காரணம் இப்பொழுது புத்தக் கண்காட்சி நடப்பதே பலருக்குத் தெரியவில்லை. புத்தகங்கள் மனிதர்களை மேன்மையாக்கும், எனவே அனைவரும் புத்தகங்களைப் படிக்க வேண்டும், புத்தகச்சந்தைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கதாகாலட்சேபம் செய்யும் அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை. ஆனாலும் மீடியாக்களில் இன்னும் கொஞ்சம் விளம்பரம் செய்திருந்தால் சந்தைக்கான வரவேற்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

போகட்டும், இந்த முறை எந்த வித முன்முடிவுகளும், குறிப்புகளும் இல்லாமல் கண்ணில் “பளிச்” என்று படும் புத்தகங்களை மட்டும் வாங்குவது என்ற உறுதியுடன் சென்றிருந்தேன். தேர்ந்தது ஆறு புத்தகங்கள்.

தமழிச்செல்வன் சிறுகதைகள் / ச.தமிழ்ச்செல்வன்
ஏழிலைக் கிழங்கின் மாமிசம் / இரா.சின்னசாமி
வெட்டுப்புலி / தமிழ்மகன்
நித்யகன்னி / எம்.வி.வெங்கட்ராம்
யாக்கை / லக்‌ஷ்மி சரவணக்குமார்
காமத்திப்பூ / சுகிர்தராணி

ஒரு ஸ்டாலில் மட்டும் கூட்டம் அலை மோதியது. என்னவென்று எட்டிப்பார்த்தால், ”ஒரு புத்தகம் பத்து ரூபாய், மொத்தமாய் நூறு ரூபாய்க்கு வாங்கினால் மேலும் மூன்று புத்தகங்கள் இலவசம்” என்று செம ஆஃபரில் கல்லா கட்டிக் கொண்டிருந்தனர். துரதிஷ்டவசமாக எனது ரசனை சார்ந்த புத்தகங்கள் எதுவும் இல்லை. வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. பொதுவாக, நமது ஊர்களில் புத்தகங்களுக்கு ஒரு புனிதத் தன்மை கொடுத்து, சாமானியர்கள் வாங்க முடியாதபடி யானை விலை குதிரை விலை தான் விற்கிறார்கள். குறைந்த விலை நிறைய சர்குலேசன் ஃபார்முலா ஏன் இன்னும் சூடு பிடிக்கவில்லை என தெரியவில்லை. நான் இலக்கியவாதியாக இருந்தாலாவது ஏதாவது புரட்சி செய்யலாம், காமன் மேன் ஆகிவிட்ட படியால வெறும் கருத்து மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இணைய பரிச்சயம் வந்த பிறகு எல்லா படைப்பாளிகளும் ஏதோ நமக்குத் தெரிந்தவர்கள் போலத்தான். அவர்களது அன்றாட நிகழ்வுகள் எல்லாம் நம் விரல்நுனியில். இந்த முறை புத்தகச்சந்தையிலும் நிறைய பிரபல முகங்கள் காணக்கிடைத்தன. உடன் வந்த இல்லாளிடம் “இவர் ஃபேஸ்புக்குல இருக்கார், அவர் ப்ளாக்ல கலக்குறார், இந்த குரூப்புக்கும் அந்த குரூப்புக்கும் தான் பிரச்சனை” என்று எதையாவது அள்ளி விட்டுக் கொண்டே வந்தேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டே வந்தவர் இறுதியாக வெளியேறும் போது கேட்டார். “இவ்வளவு பேரைத் தெரியுங்கிறீங்க, பிறகேன் ஒருத்தர் கூட உங்கட்ட பேசல?” அதற்கு நான் சொன்னேன். “எனக்குத் தான் அவுங்களைத் தெரியும், அவுங்களுக்கு நான் யாருண்ணே தெரியாதே!”. அதற்கு அவர் பதில் “ம்க்கூம்...”

இதுக்காகவாவது முதல்ல பிரபலம் ஆகனும்.

பிறகு முக்கியமான ஒரு பின்குறிப்பு: அறிவுசார் மக்கள் கூடும் புத்தகச்சந்தையிலும் ஒரு பிளேட் மிளகாய் பஜ்ஜி இருபது ரூபாய் என்று தான் கொள்ளையடிக்கிறார்கள், தண்ணீர் தருவதே இல்லை :(

******

6 comments:

  1. சென்னையிலும் இதுபோலவே ஒன்றுமில்லா கண்காட்சிகளுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ட்ரேட் சென்டர் எனச்சொல்லி
    ஒவ்வொரு சனி, ஞாயிறு தோறும் உள் நுழைவு கட்டணம் ரூபாய் நாற்பது. உள்ளே சுண்டல், ஊறுகாய தவிர நமக்கு வேண்டியது
    என சொல்ல உருப்படியாக ஒன்றுமில்லை.

    ஆயினும் கூட்டம் ஏன் வருகிறது என்றால், ...
    அதை சொல்லவேண்டுமா என்ன?
    எல்லோருக்கும் தெரிந்தது தானே !!

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. தங்களின் ஆதங்கம்தான் என்னிடமும். நாம் வாங்க நினைக்கும் புத்தகம் பெரும்பாலும் முந்நூறைத்தொடும். சாமானியர்களும் வாங்கும் நோக்கில் விலையை நிர்ணயித்தால் புத்தக விற்பனை இன்னும் கூடும்.

    ReplyDelete
  3. புத்தகச் சந்தை
    சென்னை தாண்டி
    வெளியூர்களுக்கு வருவதே ஒரு நல்ல விஷயம்

    நன்கு எழுதி உள்ளீர்கள்

    ReplyDelete
  4. எங்க ஊர் பக்கம் வந்து விட்டது... பார்க்கலாம்... நன்றி...

    ReplyDelete
  5. நல்ல அனுபவம் தான் :-))

    விவேக் போல சோக்கடிச்சு இருக்கிங்க ,ம்க்கும் சொன்னதோட விட்டாங்கலே, ரெண்டு குத்து குமட்டில் விடாம :-))

    சந்தையில படம் எடுக்க விடலையா? ஒரு படமும் காணோம்?

    தண்ணீர் கொடுக்கலைனா சும்மா விடலாமா? "கேட்டால் கிடைக்குமாம்" , கேட்டிருந்தால் மினரல் வாட்டர் கொடுத்து இருப்பாங்க :-))

    புத்தக விலையை என்ன சொல்ல நான் எடுத்து விலையைப்பார்த்து வச்ச புத்தகங்கள் தான் அதிகம் இருக்கும் 100-150 பக்கம் இருக்க புத்தகம் எல்லாம் 200-300 விலை வைக்குறாங்க ,என்ன கொடுமை சார் இது!

    ReplyDelete
  6. பொருட்காட்சியின் தாத்பரியம் தெரியாதா சார், உங்களுக்கு. வெளியில் 50 ரூபாய்க்கு வாங்கும் பொருளை, 20 ரூபாய்க்கு அனுமதி சீட்டு வாங்கி உள்ளே சென்று 60 ரூபாய் கொடுத்து வாங்கும் இடம் தான் பொருட்காட்சி. தங்களுக்கும், தங்கள் இல்லாளுக்கும் நடை பெற்ற உரையாடலை படிக்கும் போது "கல்யானபரிசு" தங்கவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete